Sunday 10 July 2016

கிருஷ்ணன் நம்பி கதைகள்

கிருஷ்ணன் நம்பி கதைகள்

செந்தூரம் ஜெகதீஷ்

மரர் கிருஷ்ணன் நம்பி சராசரி மனிதர்களின் ஆசைகளையும் நிராசைகளையும்தான் பதிவு செய்திருக்கிறார். ஊசலாடும் மனித உறவுகளையும் இன்னும் மேலான வாழ்வுக்கு ஏங்கும் நடுத்தர வர்க்கத்தின் நைந்த கனவுகளையும் அவர் கலையாக சிருஷ்டி செய்தார் . மிகக்குறைவான கதைகள்தாம் என்றாலும் ஒரு தேர்ந்த படைப்பாளியின் முத்திரையை ஒவ்வொரு கதையும் பதிவு செய்தது.

"வாழ்க்கை இரண்டு மகத்தான சோகங்கள் கொண்டது. ஒன்றுநாம் விரும்பியது கிடைக்காமல் போவது இன்னொன்று விரும்பியதை அடைவது " என்றார் பெர்னாட் ஷா. கிருஷ்ணன் நம்பி கதைகள் இந்த முரண் நிலையை அடித்தளமாகக் கொண்டவை.மனிதன் ஒன்றை அடையாமல் போகும் ஏக்கத்தையும் அடைந்தாலும் அதன் பின்னே வரும் துயரையும் சரியாக கணித்த படைப்பாளி கிருஷ்ணன் நம்பி.

எக்ஸன்ட்ரிக் கதை நடுத்தர வர்க்கத்து ஆபீஸ் சிப்பந்தி ஒருவனின் கதைதான். எண்பது ஒரு ரூபாய் நோட்டுகள் சம்பளம் வாங்கிய கையோடு ஆயிரம் பேருக்கு பதில் சொல்லக் கூடிய நிலையிலுள்ள மனைவியையும் ஒரு சிகரெட்டை இரண்டாக உடைத்துப் பயன்படுத்துகிற தனது பற்றாக்குறையையும் எண்ணிப் பார்க்கிறான். தெருவில் நிற்கும் ஒரு பணக்காரனின் கார் அவனுக்குள் அடக்கி வைத்த ஆசைகளைக் கிளறிவிடுகிறது. வாழ்க்கையை ஒருநாளாவது அனுபவித்துவிட துடிக்கிறான் அவன்.

அந்த எண்பது ரூபாய் சம்பளப்பணம் அவன் ஆசையின் சிறகுகளானது. ஓட்டலில் ஸ்டராங்காக ஒரு காப்பியும் சர்வருக்கு டிப்சும் தருகிறது.ஏழைச்சிறுவனுக்கு எம்ஜிஆர் படம் பார்க்க காசு தருகிறான். டாக்சியில் ஊர் சுற்றுகிறான். பாலக்காட்டு வேசியிடம் போய் தனது செலவில் டாக்சி டிரைவருக்கும் இன்பத்தை வாங்கித் தருகிறான். கடைசியில் மிச்சமான பத்து ரூபாயை தொலைத்து விடுவதுமாக சகலமும் அந்த எண்பது ரூபாய் காசால் ஈடேறி விடுகிறது. அவன் ஒரு நாளாகினும் தனதுவிருப்பப்படி வாழ்ந்துவிட்டான். அடையாததை எண்ணி ஏங்கிய நிராசைகள் பூர்த்தியடைந்தன. என்றாலும் பிரச்சினைகள் தொடர்கதைதானே...பால்காரன், வாடகை, குழந்தைகள் படிப்பு, மளிகைக் கடை பாக்கி என்று நீண்ட பட்டியலுடனும் பற்றாக்குறையுடனும் காத்திருக்கும் அவன் மனைவிக்கு சம்பளம் நாளைக்கு என்ற பதில் தீர்வாகி விடாது. நாளை என்ற அந்தக் கொடூரமான பொழுது அவன் கழுத்தில் நுகத்தடியாக அழுத்துகிறது. முதுகில் சாட்டையாக விளாசுகிறது. ஒரு நாள் இன்பத்திற்காக அவன் ஒரு மாதம் நரகத்திலும் துன்பத்திலும் உழலப் போகிறான்.

காணாமல் போன அந்தோணியின் கதையும் அதுபோலத்தான். அந்தோணி ஒரு ஆடு. கொழு கொழுவென்று வளர்ந்த ஆடு. அதன் சொந்தக்கார கிழவி கிறிஸ்துமஸ் தினத்தன்று காலை சர்ச்சுக்குப் போகும்போது அவள் புருஷன் கிழவன் முதல் ஆட்டம் சினிமா பார்த்து நள்ளிரவில் வீட்டுக்கு வந்து தூங்கிக் கொண்டிருக்கிறான். அவன் நாற்பது வருடங்களாக ஒரு நிறுவனத்தில் குறைந்த ஊதியத்துடன் வறுமை நிலையில்தான் கிழவியுடன் இல்லறம் நடத்தி வந்திருக்கிறான். ஆனால் சம்பளம் முழுவதையும் கிழவியிடம் கொடுத்துவிடுவான். அன்று கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் கிழவிக்கு சில திட்டங்கள் இருந்தன. அந்த திட்டங்களில் மண் விழுந்தது போல் அவள் சர்ச்சிலிருந்து திரும்பி வரும் போது அந்தோணியை காணவில்லை. ஆட்டைத் தேடி கசாப்புக்கடை, வயல், வாய்க்கால் என்று தேடித்தேடி சலித்துப் போய் சோகத்துடன் உட்கார்ந்திருக்கிறாள் கிழவி.கிறிஸ்துமஸ் என்ற சுபதினம் அவளுக்கு சோக தினமானது.ஆனால் மாலையில் கொத்து வேலையாள் ஜார்ஜ் மூலம் ஆடு திரும்பக் கிடைத்து விடுகிறது. கிழவியின் திட்டங்கள் நிறைவேறி விடுகின்றன. ஆடு விலையாகப் போய் அவள் கிறிஸ்துமஸ் இரவு விருந்துக்கு வழி வகுக்கிறது. ஒரு நாள் காணாமல் போன அந்தோணி அவள் வாழ்விலிருந்து நிரந்தரமாக காணாமல் போய் விடுகிறது.

கிருஷ்ணன் நம்பி உயர்ந்த இலக்குகளையும் கற்பனைக்கெட்டாத லட்சியங்களையும் கொண்ட கதாபாத்திரங்களைப் படைக்கவில்லை. மிகவும் யதார்த்தமான , சகல பலங்களும் பலவீனங்களும் கொண்ட பாத்திரங்களே அவருடையவை. சராசரிகளும அதனினும் கீழான மனிதர்களுமே அவரது லட்சிய வார்ப்புகள்.

சிங்கப்பூர் பணம் கதை இரு நண்பர்கள் பற்றியது. ஒருவன் ஏழை குமாஸ்தாவின் மகன். இன்னொருவன் சிங்கப்பூர் சீமானின் புதல்வன். இருவருக்கும் நட்பு முளைக்க பணக்காரப் பையன் நிறைய செலவு செய்கிறான்.விலை உயர்ந்த பைனாகுலரை பரிசாகவும் தருகிறான். பதிலுக்கு இவனும் ஒரு தேர்ப் பொம்மையைப் பரிசு தர எண்ணி கிடைத்த ஒற்றை ரூபாயுடன் வருகிற போது அநத் ஒரு ரூபாய் காசும் செல்லாக்காசாகிப் போகிறது.

வாழ்க்கையில் அந்த செல்லாக்காசு போல இருப்பவர்கள்தாம் கிருஷ்ணன் நம்பியின் ஆதர்ச நாயகர்கள். அந்த செல்லாக்காசு போலவும் காணாமல் போன அந்தோணி போலவும் இருப்பவர்களின் கதையைத் தான் கிருஷ்ணன் நம்பி வெவ்வேறு வடிவங்களில் எழுதிப்பார்த்தார். நாணயம் கதையில் வரும் பிச்சாண்டி என்ற சங்கர நாராயணனுக்கு சினிமாவும் ஓட்டலும் பிடித்த விஷயங்கள். அதற்கான காசு அவன் மாமாவின் உண்டியலில் இருந்தே கிடைக்கிறது. நாணயமான குடும்பத்தை சேர்ந்த அவன், தன் களவுக்குப் பிராயச்சித்தமாக முதல் மாத சம்பளத்தை உண்டியலில் போடமுயற்சிக்கும் போது அவன் திருடியதாக பிடிபட்டு விடுகிறான்.

இருக்கிற வாழ்க்கையில் திருப்தியின்மையும் இன்னும் மேலான வாழ்க்கைக்கான ஏக்கமும் , சுகமான சௌகரியங்கள் மிக்க ஆசைகளை ஈடேற்றும் வாய்ப்புள்ள வாழ்நிலைக்கான துடிப்பும் கிருஷ்ணன் நம்பியின் ஒவ்வொரு பாத்திரப்படைப்பிலும் காணக்கிடைக்கிறது. அந்த மேலான நிலை பணத்தால் மட்டுமா?

கால் சங்கிலியால் கட்டப்பட்ட பைத்தியமான பெண் ஒருத்தி ஊமைப்பையன் ஒருவனால் விடுதலைப் பெறுகிறாள். அதுவே அந்த ஊமையிடம் அன்புச்சங்கிலியாய் அவளைப் பிணைக்கிறது. இந்த விசித்திர குணச்சித்திரத்தை மிகவும் தத்ரூபமான காட்சியாக நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் கிருஷ்ணன் நம்பி . கதையின் பெயர் சங்கிலி.

"உணர்ச்சிதான் அஸ்திவாரமாகிறது. மேதைமை அதன்ம மேற்கூரைக்கு வண்ணம் மட்டுமே தீட்டுகிறது " என்பார் லீ யு டாங் என்ற அறிஞர்.கிருஷ்ணன் நம்பி இதனை உணர்ந்திருக்கக் கூடும். இழை இழையாகப் பின்னியெடுத்து தன் உணர்வுகளை அடிப்படையாக வைத்து மேதைமையால் வண்ணமயமாக்கியுள்ளார்.

எல்லா இதயங்களிலும் ஆசைகள் இருக்கின்றன. எல்லா இதயங்களிலும் அந்தரங்கமாய்ப் போற்றும் கனவுகள் இருக்கின்றன. ரகசியமான நினைவுகள் இருக்கின்றன. ஆனால் பொருளாதார வசதியற்ற பெரும்பான்மை மனிதர்களின் ஆசைகள் ஆசைகளாகவே, கனவுகள் கனவுகளாகவே தங்கி விடுகின்றன. அவை வாழ்நாள் முழுவதிலும் நிறைவேறுவதே இல்லை. ஒன்றிரண்டு ஆசைகள் நிறைவேறினாலும் அதுவும் ஒரு வகை இழப்பில்தான் முடிவடைகின்றன. கிழவியின் அந்தோணியைப் போல.சிங்கப்பூர் நண்பனுக்காக நாணா கொண்டு வந்த செல்லாக்காசைப் போல.அல்லது திருடிய போது அகப்படாமல் திரும்ப வைக்கும் போது அகப்படுவதைப் போல.

காலில் சங்கிலியுடன் விடுதலை வேட்கையில் உழலும் பைத்தியத்தின் கதைதான் நம் எல்லோருடைய கதையும்.நம்மைப் பற்றிய ஒரு புரிதலை, வாழ்வைக் குறித்ததொரு கேள்வியை கிருஷ்ணன் நம்பி தன் கதைகளின் மூலம் வழங்குகிறார்.ஒருநாள் இன்பத்திற்காக மாதம் முழுவதும் கஷ்டப்படப் போகிற எஸன்ட்ரிக் நாயகனைப் போல் நாமும் தற்காலிகங்களில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.தற்காலிக லௌகீக சுகங்களுக்காக மனித குலத்தின் ஒரு நீண்ட வரலாற்றையே மானுட இருத்தலையே பறிகொடுத்து நிற்கிறோம். இன்றைய உலகத்தைப் பற்றி மதம், அரசியல், கலை, பண்பாடுகள் குறித்த நமது அலட்சியங்களும் இயலாமைகளும் மாதச் சம்பளத்தை ஒருநாளுக்காக இழக்கிற நிலையை விட எந்த வகையிலும் உயர்ந்ததல்ல. இதுவும் அதைப் போலவே ஆபத்தானதும் கூட.

(கிருஷ்ணன் நம்பி கதைகள் காலச்சுவடு பதிப்பகம் வெளியீடு )


மாலைக்கதிர் நாளிதழில் பிரசுரமான கட்டுரை
.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...