Saturday 3 December 2016

உலகசினிமா -கண்ணீரில் எழுதிய காதல் கடிதங்கள்

குமுதம் தீராநதி -டிசம்பர் 2016 இதழில் வெளியான எனது கட்டுரை இது....

உலக சினிமா -
கண்ணீரில் எழுதிய காதல் கடிதங்கள்......
செந்தூரம் ஜெகதீஷ்
Letters to Juliet








அவன் தனதுஇருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தான். அந்தப் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பெண்ணின் முகம் பரிச்சயமானதாக தெரிந்தது. வண்டியின் வேகத்தை குறைத்து அவளை நெருங்கிச் சென்று வண்டியை நிறுத்தினான். அவள் முகத்தில் புன்னகை. ஆம் அது அவளே தான் சுமார் 25 ஆண்டுகள் கழித்து அவன் சந்திக்கும் பெண் அவள். இள வயதில் நான்கு ஆண்டுகள் அவள் கையைப் பிடித்து சென்னை நகரம் முழுவதையும் அவன் பேருந்திலும் கால் நடையாகவும் சுற்றியிருக்கிறான். வள்ளுவர் கோட்டத்திலும் மியூசியத்திலும் யாருமில்லாத இடங்களில் முத்தமிட்டிருக்கிறார்கள். சினிமாவுக்குப் போயிருக்கிறார்கள். இலக்கே இல்லாமல் எங்கேயோ எங்கேயோ கால் வலிக்க வலிக்க நடந்து போயிருக்கிறார்கள். அவளுக்குத் திருமணமாகி விட்ட பிறகு கண்ணீருடன் அவளை ஒருமுறை சந்தித்து அவள் எழுதிய காதல் கடிதங்களை ஒரு பையில் போட்டு அவளிடம் கொடுத்து விட்டான். அவளுக்குத் தெரியாமல் ஒரே ஒரு கடிதத்தை அவள் நினைவுக்காக அவன் எடுத்து வைத்துக் கொண்டான். அது கடிதம் கூட அல்ல. அவன் பெயரையும் அவள் பெயரையும் ஒவ்வொரு எழுத்தாக கோர்த்து அவள் வடித்த ஒரு மலர் மாலையின் சித்திரம். அவளுக்கு அரசு ஊழியருடன் நடைபெற்ற திருமணத்திற்குப் பிறகு ஒழுக்கம் கருதி அந்த உறவு துண்டிக்கப்பட்டது.வேலையில்லாமல் திரிந்த இவன் அவளை அதன் பிறகு சந்திக்கவே இல்லை. ஒரு ஊரில் இருந்தாலும் அரை மணி நேரத்தில் பார்த்து விடக்கூடிய தூரத்தில் இருந்தாலும் அவர்கள் சந்திக்கவில்லை. இப்போது இத்தனை ஆண்டுகள் கழித்து ஒரு பேருந்து நிறுத்தத்தில் தற்செயலாக நிகழ்கிறது சந்திப்பு . எங்கே போக வேண்டும் வா என்றழைக்க தயக்கத்துடன் அவள் அவன் வண்டியில் ஏறுகிறாள். அவள் பட்டுப்புடவையின் சலசலப்பும் பல ஆண்டுகள் கழித்து பட்ட அவள் ஸ்பரிசமும் சாலையில் அவனுடைய வாகனத்தை பறக்கச் செய்கின்றன. ஓரிரு வார்த்தைகள் நலம் விசாரிப்பதற்குள் அவள் செல்ல வேண்டிய இடம் வந்து விடுகிறது. இறங்கிப் போகிறாள். அவள் கையைப் பிடிக்க மனம் அலைபாய்கிறது. நாளை புத்தாண்டு என நினைவு வர புத்தாண்டு வாழ்த்துகள் என அவன் கையை நீட்டுகிறான். அவள் கைகுலுக்குகிறாள். ஆனால் அந்த கையில் பழைய மென்மை இல்லை. பழைய அன்பு இல்லை. பழைய சலனங்கள் இல்லை. மரத்துப் போன ஒரு இரும்புக் கரத்தை அவன் பற்றி குலுக்குவது போல் உணர்கிறான். அவன் தொட்டுத் தழுவிய பெண் அவள்அல்ல என்பது போல் தோன்றுகிறது.முதுமையும் காலமும் அவளை மாற்றி விட்டது. அவன் மனம் தான் மாறவே இல்லை. அப்படியே அந்தக் காலத்தில் நிலைத்து நின்று விட்டது.அவள் நடந்து செல்வதை அவன் கண்ணீருடன் பார்த்துக் கொண்டே நின்று விட்டான்.

இது ஒரு நிஜவாழ்க்கை அனுபவம், இந்த காதலை என்னவென்று சொல்வது. இது உடல் கவர்ச்சியா, உள்ளத்தின் பரிதவிப்பா இரண்டும் கலந்ததுதானா....வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும் ஆனாலும் அன்பு மாறாதது என்கிறார் வாலி.....அன்பு மட்டும்தான் மாறுவதில்லை. மற்றதெல்லாம் மாறி விடுகிறது.
உலகின் மிகவும் புகழ் பெற்ற காதல் கதைகளான ரோமியோ ஜூலியட், லைலா மஜ்னு போன்றவைகளில் காதலர்கள் சேராமல் மடிந்துப் போனார்கள். மொகலே ஆசம் படத்தில் பியார் கியா தோ டர்னா கியா என்று லதா மங்கேஷ்கரின் எதிரொலி கண்ணாடிகளால் பதிக்கப்பட்ட மாளிகை முழுவதும் எதிரொலிக்க மதுபாலா ஆடிக் கொண்டிருக்கிறாள். இந்த காதல் காவியங்களில் கண்ணீர் ததும்பிக் கிடக்கிறது.
இந்த படமும் கண்ணீர் நிரம்பிய காதலர்களின் கதைதான். 15 வயதில் ஒருவனை காதலிக்கும் ஒருத்திக்கு அந்த காதல் முதிராமல் உதிர்ந்துப் போகிறது. ரோமியோவை ஜூலியட் காதலித்த போது அவளுக்கு வயது 14 தான். என்ன செய்வது மிகமிக இள வயதில்தானே பால்யம் காலாவதியாகி காதல் மலர்கிறது. இருவரும் வயல்வெளி, ஆற்றங்கரை என எங்கெங்கோ கையைப் பிடித்தும் முத்தமிட்டும் திரிகிறார்கள். புல்தரையில் படுத்து வானத்து நட்சத்திரங்களுடன் உரையாடுகிறார்கள். காலமெல்லாம் இணைந்து வாழ வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். ஆசையுடன் ஒருவருக்கு ஒருவர் கடிதங்களை எழுதிக் கொள்கிறார்கள்.
காதலுக்கு எதிர்ப்பு எழுந்த போது வீட்டை விட்டு ஓடிப்போகலாம் என்று காதலன் அழைக்கிறான். காதலியோ வரவில்லை. இளவயதின் அச்சங்கள் அவளைத் தடுத்து நிறுத்தி விடுகின்றன. தன் தாயையும் தந்தையையும் துடிக்க விட அவள் மனம் விரும்பவில்லை. காதலனை ஏமாற்றுவது தான் அவளுக்கு முடிகிறது. அவள் வீட்டுக்குப் பயந்து தன் குடும்பத்தினருடன் லண்டன் சென்றுவிடுகிறாள். அங்கு வேறொரு செல்வந்தனுடன் அவளுக்குத் திருமணம் ஆகிறது. 50 ஆண்டுகள் வாழ்ந்து பேரன் பேத்தி எல்லாம் எடுத்த பிறகு திடீரென அவள் தனது முதுமைப்பருவத்தில் காதலனைத் தேடி செல்கிறாள். 50 வருடம் கழித்து தன்னைத் தேடி வந்த வயது முதிர்ந்த காதலியை காதலன் ஏற்றுக் கொண்டானா..... லெட்டர்ஸ் டூ ஜூலியட் என்ற இந்த திரைப்படம் இக்கதையை மிகுந்த கலாரசனையுடன் காட்சிகளாக்கியுள்ளது.2010ம் ஆண்டில் இப்படம் வெளியான போது முதல் வாரத்தில் வசூலில் சக்கை போடு போட்டது. ஆனால் இரண்டாவது வாரத்தில் ஐயன் மேன், ராபின் ஹூட் போன்ற படங்கள் ரிலீசானதால் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
லெட்டர்ஸ் டூ ஜூலியட் படத்தில் ஆரம்பத்தில் நாம் அழகான ஒரு இளம் பெண்ணை சந்திக்கிறோம். படத்தில் அவள் பெயர் சோஃபி. அமெரிக்காவின் நியுயார்க்கர் இதழில் வரும் தகவல்களை சரிபார்ப்பதே அவள் பணி .ஒரு டிடெக்டிவ் போல் ஆராய்ச்சி செய்து உண்மை எது பொய் எது என்பதை புட்டு புட்டு வைக்கிறாள். அதற்காக அவளுக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது. ஆனால் அவளுக்கோ எழுத்தாளராக வேண்டும் என்று ஆசை. தன் காதலனுடன் அவள் விடுமுறை நாட்களைக் கழிக்க இத்தாலியின் வெரனோவா செல்லத் திட்டமிடுகிறாள். காதலன் நியுயார்க்கில் ஒரு உணவகம் நடத்துகிறான். உணவைத் தவிர அவனுக்கு வேறு சிந்தனையே இல்லை. அருகில் இருக்கும் காதலியை விடவும் அவனுக்கு சமையலில் உப்பு மணம் எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதில்தான் அக்கறை....இத்தகைய காதலனுடன் விடுமுறையை கழிக்க அவள் வெரோனா நகருக்கு செல்கிறாள். வெரோனா ரொமாண்டிக்கான நகரம், ஷேக்ஸ்பியர் படைத்த மகத்தான காதலர்களான ரோமியோவும் ஜூலியட்டும் வாழ்ந்த இடம். திருமணத்திற்கு முன்பே காதலனுடன் ஹனிமூனா என்று அலுவலகத் தோழியர் கிண்டலடிக்கிறார்கள்.ஆனால் அந்த தேனிலவில் அவள் தனியாகத்தான் இருக்கிறாள். காதலனோ தன் சமையல் உலகில் நிலைக்கிறான். ஒரு மஷ்ரூம் விளைவதைப் பார்க்க 120 கிலோ மீட்டர் பயணம் செல்கிறான். திராட்சைத் தோட்டத்தை காண ஒரு நாளை வீணாக்குகிறான். ஒயின் ஏலத்தில் பங்கேற்க பல நாள் காணாமல் போகிறான்....
சோஃபி தன் தனிமையில் வெரோனை வலம் வருகிறாள். அப்போதுதான் அவள் ரோமியோ ஜூலியட்டைக் காண செடி கொடிகளை பிடித்து பால்கனியில் ஏறிச் சென்ற பழைய காலத்து வீடு ஒன்றை காண்கிறாள். ஆம் அதுதான் ஜூலியட் வாழ்ந்த வீடு. ஒரு காவிய காதல் நாயகியின் துயரம் தோய்ந்த அந்த வரலாற்றை ஷேக்ஸ்பியர் ஒரு கண்ணீர் நிரம்பிய காதல் கதையாக வடித்திருந்தார். அந்த வீட்டின் பழைய செங்கல் இடுக்குகளில் பல காதல் கடிதங்கள் அன்பு முத்தங்களுடன் வைக்கப்படுகின்றன. பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, இங்கிலாந்து என பல நாடுகளில் இருந்து வந்த இளம் பெண்கள் தங்கள் காதலரை நினைத்து கண்ணீருடன் கடிதங்களை எழுதி அந்த செங்கல்களின் இடுக்குகளில் செருகி செல்கின்றனர். மாலை நேரத்தில் ஒரு பெண் கூடையுடன் வருகிறாள்.அந்த சுவர்களில் செருகப்பட்ட கடிதங்களை கூடையில் சேகரித்து எடுத்துச் செல்கிறாள். அந்த பெண்ணை ஆர்வத்துடன் பின்தொடர்கிறாள் சோஃபி. அந்த கடிதங்கள் என்னவாகின்றன என்பதை கண்டுபிடிக்க அவள் முயற்சிக்கிறாள்.
ஒரு வீட்டிற்குள் அந்தப் பெண் நுழைகிறாள். அங்கு ஒரு வரவேற்பறையில் மேலும் சில பெண்கள் இருக்கிறார்கள். பெரும்பாலோர் வயதானவர்கள். தங்கள் திருமண வாழ்க்கையை சபிக்கிறவர்கள். தங்கள் கணவரை நாயை விடக் கேவலமாக மதிப்பவர்கள். தங்களுக்காக உயிரைக் கொடுக்கவும் காதலிக்கவும் யாரும் இல்லையே என்று ஏங்குபவர்கள்....
அவர்கள் அந்த காதல் கடிதங்களுக்கு கவிதை நடையில் பதில் எழுதுகிறார்கள். ஒருவகையில் அவர்கள் குட்டி எழுத்தாளர்கள். காதலின் கண்ணீரைத் துடைத்து ஆறுதல் கூறுவதுதான் அவர்களின் வேலை. ஜூலியட் எழுதும் பதில்களாக அந்த கடிதங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. நீங்கள் என்ன ஜூலியட்டா அவள் பெயரில் கடிதம் எழுதுவதற்கு என சோஃபி கோபப்படுகிறாள். இல்லை நாங்கள் ஜூலியட்டின் காரியதரிசிகள் என்பது அவர்களின் பதில். சோஃபிக்கு இத்தொழிலில் ஆர்வம் எழுகிறது. அவர்களுடன் சேர்கிறாள். மறுநாள் கூடையில் கடிதங்களை சேகரிக்கும் பெண்ணுடன் அவளும் சென்று செங்கல் இடுக்குகளில் வைக்கப்பட்டுள்ள விதவிதமான வண்ணவண்ண கடிதங்களை அவள் கூடையில் அள்ளிப் போடுகிறாள். அப்போது தற்செயலாக ஒரு கல் தகர்ந்து விழுகிறது. அந்தக் கல் விழுந்த இடத்தில் ஒரு பொந்து இருக்கிறது. அந்த இடுக்கில் ஒரு பழைய தூசுபடிந்த காதல் கடிதத்தை சோஃபி கண்டெடுக்கிறாள்.
அக்கடிதம் 50 ஆண்டுகளுக்கு முந்தைய கடிதம். தன் காதலனுக்காக அந்த 15 வயது பெண் மன்னிப்பு கோரி எழுதிய கடிதம். லண்டன் சென்று செல்வந்தனை மணந்துக் கொண்டதற்கு மன்னிப்பு கேட்டு அவள் கண்ணீருடன் எழுதி வைத்த கடிதம் 50 ஆண்டுகள் கழித்து சோஃபியின் கைகளில் சிக்கியுள்ளது. இப்போது அவள் என்னவாக இருப்பாள்.....இந்த கடிதத்திற்கு பதில் எழுதினால் என்ன என்று எண்ணுகிறாள் சோஃபி. 50 ஆண்டுகள் கழித்தா ஒரு கடிதத்திற்கு பதி்ல் போடுவது என்று சக தோழிகள் வியக்கிறார்கள். எழுதினால் என்ன என்று எழுத ஆரம்பிக்கிறாள் சோஃபி. எல்லோரும் இயந்திரத்தனமாக இதர கடிதங்களுக்கு இனிக்க இனிக்க ஜூலியட்டின் பெயரால் கடிதங்களை எழுதி வைக்க இவளோ ஒரே கடிதத்திற்கு பதில் எழுதுவதில் ஆழ்ந்துவிடுகிறாள். அவள் மனதில் எழுத்தாளராக வேண்டும் என்ற ஆசை விழித்துக் கொள்கிறது. அந்த கடிதம் தான் அவளுடைய முதல் எழுத்து அனுபவமாகவும் மலர்கிறது.
சில நாட்கள் கழித்து சார்லி என்ற இளைஞன் ஒருவன் அந்தப் பெண்களைத் தேடி வருகிறான். நீங்கள் தான் ஜூலியட்டின் செயலாளர்களா என விசாரிக்கிறான்.கிளேர் என்பவருக்கு கடிதம் எழுதியது யார் என விசாரிக்கிறான். சோஃபி ஆர்வத்துடன் நான்தான் என முனஅவருகிறாள். இதுபோன்ற அபத்தத்தை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள் என கோபமாக சொல்லி அவன் வெளியேறுகிறான். சோஃபி அவனைப் பின் தொடர்ந்து ஓடுகிறாள். இதைச் சொல்லவா லண்டனில் இருந்து வெரோனாவா வரை இத்தனை தூரம் வந்தாய் என்று சார்லியை கேட்கிறாள் சோஃபி. நான் ஏன் இங்கே வருகிறேன். என் பாட்டி கிளேர் தான் அழைத்து வந்தார் என்று கூறுகிறான் சார்லி.
என்னது கிளேர் இங்கே வந்திருக்காங்களா.....சோஃபியால் நம்பவே முடியவில்லை. ஆமாம் எனக் கூற எதிரே அந்த 65 வயது பாட்டி கிளேர் நாகரீக ஆடைகளில் நிற்பதைக் காண்கிறாள் சோஃபி. அவளுக்கு ஒரே ஆச்சரியம். தன் கண்களையே அவளால் நம்ப முடியவில்லை. 50 ஆண்டு கழித்து காதல் கடிதத்திற்கு பதில் எழுதியது யார் என காண அந்தப் பெண் தேடி வந்திருக்கிறார்.15 வயதில் தன் வீட்டை விட்டு ஓடிப்போக முடியாமல் அச்சத்துடன் பின்வாங்கி லண்டன் சென்ற பெண்ணாக அவள் வரவில்லை. மாறாக வெரோனா அருகில் உள்ள துஸ்சான் டவனுக்கு தன் காதலனைத் தேடி ஒரு மூதாட்டியாக திரும்பி வந்திருக்கிறார். லாரன்சோ என்ற அந்த காதலரை தேடும் பணியில் தன்னையும் இணைத்துக் கொள்கிறாள் சோஃபி.
இத்தனை ஆண்டுகள் கழித்து அவரை கண்டுபிடிக்க முடியுமா எனக் கேட்கிறாள் சோஃபி .முடியும் என்பது கிளேரின் நம்பிக்கை. ஏனென்றால் லோரன்சோ தனது நிலத்தை மிகவும் நேசித்தவர் .தன் நிலத்தை விட்டு எங்கேயும் போயிருக்க மாட்டார் என்கிறார் கிளேர் .
பல லோரன்சோக்களை சந்திக்கிறார்கள். சிலர் பெண் பித்தர்களாக இருக்கிறார்கள். சிலர் பெண்களையே வெறுப்பவர்களாக இருக்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு என்னைவிட்டு ஓடிப்போன சண்டாளியை நினைவுபடுத்த வந்தீர்களா என கத்தும் ஒரு லோரன்சோவைக் கண்டு அவர்கள் மூவரும் வயிறு குலுங்க சிரிக்கிறார்கள். இந்த பயணங்களின் போது சார்லிக்கும் சோஃபிக்கும் இடையே ஒரு அந்நியோன்னியம் பிறக்கிறது. ஒரு மெல்லிய காதல் அங்கு மலர்கிறது.
கடைசியில் ஒரு லோரன்சோவின் கல்லறையில் சார்வி வெடித்தெழுகிறான் .இந்தப் பைத்தியக்காரத்தனத்துக்கு ஒரு முடிவே இல்லையா....இதுதான் முடிவு. இந்த கல்லறைதான் கடைசி .இன்னொரு லோரன்சோவை தேடி நான் செல்ல விரும்பவில்லை. எனது விடுமுறை நாட்கள் முழுவதையும் ஒரு அபத்தமான தேடலுக்காக இழந்துவிட்டேன் என அவன் குமுறுகிறான். தனது பாட்டி ஒவ்வொரு முறையும் லோரன்சோவை சந்திக்க பரபக்கும் போதும் அந்த லோரன்சோ அவர் அல்ல என ஏமாற்றத்துடன் திரும்பும் போதும் அவர் மனம் தவிப்பதை தன்னால் காண முடியவில்லை என்கிறான் சார்லி
ஆனாலும் ஏனோ அவன் பிறகு தன் செயலுக்கு வருந்துகிறான். சோஃபியிடம் மன்னிப்பு கேட்கிறான் ,இன்னும் எத்தனை லோரன்சோக்கள் இந்தப் பகுதியில் இருந்தாலும் தேடிப்பார்த்து விடலாம் என்கிறான்.
இரவில் புல்தரையில் வானத்து நட்சத்திரங்களைப் பார்த்தபடி சார்லி படுத்திருக்க சோஃபியும் அருகில் வந்து படுக்கிறாள்.பேசிக் கொண்டே இருவரும் திடீரென முத்தமிட்டுக் கொள்வதை தனது அறை ஜன்னல் வழியாகப் பார்க்கிறார் கிளேர். அவர் முகத்தில் ஒரு புன்னகை மலர்கிறது.
நீ வேறொருவனுக்கு நிச்சயித்த பெண். உன்னை முத்தமிட்டது தப்பு .அது உணர்ச்சிவசப்பட்ட தவறு வேண்டாம். இனி நாம் பழக வேண்டாம் என்று தடை போடுகிறான் சார்லி. சரி என அவள் கூறினாலும் அவள் கண்களில் கண்ணீர் ததும்புகிறது. உணவகத்தின் தேவைகளுக்காக தன்னைத் தனியாக விட்ட காதலனையும் தன் பயணத்துணையாக வந்து பிரிய முடியாத தோழனாகிவிட்ட சார்லியையும் அவள் எடை போடத்தொடங்குகிறாள். அவள் எழுதிய கதையை சார்லி ரசித்துப் படிக்கிறான் . நீ அற்புதமான எழுத்தாளர். மிக நன்றாக எழுதுகிறாய் என ஊக்கபப்டுத்துகிறான். அவள் ஒரு எழுத்தாளராக மலர்ந்துக் கொண்டிருப்பதை குறித்து எந்த ஒரு அக்கறையும் இல்லாத பொருட்படுத்தாத காதலனை நினைத்து அவள் பெருமூச்சு விடுகிறாள்.
கடைசியாக அவர்கள் ஒரு வயல்பகுதிக்கு செல்லும் போது வயலில் வேலை செய்யும் ஒரு இளைஞனை கையைக் காட்டி இவர்தான் லோரன்சோ என்கிறார் கிளேர். ஆம் அவன் லோரன்சோவின் இள வயது தோற்றத்தில் இருந்த அவர் பேரன்.அவனிடம் விசாரி்க்கிறார்கள் .தன் தாத்தா குதிரை சவாரிக்கு போயிருப்பதாகவும் சில நிமிடங்களில் வந்துவிடுவார் என்றும் கூறுகிறான் அந்த இளைஞன். அதுவரை தன் காதலரை சந்திக்க துடித்த கிளேருக்கு உள்ளம் பதறுகிறது. கைகள் நடுங்குகின்றன. அவர் என்னை நினைவில் வைத்திருக்காவிட்டால் என்ன செய்வது. நீ யார் என கேட்டுவிட்டால் என்ன செய்வது ....அந்த நினைவை அவரால் தாங்க முடியவில்லை. வோரன்சோ வருவதற்குள் போய் விடலாம் என்று சார்லியையும் சோஃபியையும் அழைக்கும் போதே லோரன்சோ குதிரை மீது சவாரி செய்தபடி வந்து இறங்குகிறார். தன்னைப் பற்றி யாரோ விசாரிக்கிறார்கள் என்பதையறிந்து அவர்கள் பக்கம் திரும்புகிறார். ஒரே கணத்தில் அவரால் கிளேரை அடையாளம் காண முடிகிறது. 15 வயதில் பருவம் கனியாத ஒரு பருவத்தில் பார்த்த அதே பெண்ணை 65 வயது முதிர்ந்த கோலத்திலும் அவரால் மறக்க முடியவில்லை. அதே முகம் .அதே புன்னகை.அதே கண்கள்.....அதே அன்பு
லோரன்சோ அளிக்கும் உபசரிப்பு விருந்தில் அவருடைய பேரன் பேத்திகள் உட்பட குடும்பத்தினர் அனைவரும் கலந்துக் கொள்கிறார்கள். அப்போது அந்த கூட்டத்தின் மத்தியில் சோஃபி தனக்கு ஜூலியட்டின் பெயரால் எழுதிய கடிதம்தான் தன் வாழ்க்கையின் திருப்புமுனையாக இந்த பயணத்தை மேற்கொள்ள வைத்ததாக கூறுகிறார் கிளேர். கடிதத்தின் சில வாக்கியங்களை அவர் மேற்கோள் காட்டுகிறார்.
WHAT - IF  என்று ஆங்கிலத்தில் இரண்டு வார்த்தைகள் உள்ளன. இவை தனித்தனியாக இருக்கும் போது தனி அர்த்தங்கள் தோன்றலாம். ஆனால் இந்த இரண்டு வார்த்தைகளும் சேர்ந்துவிட்டால் அதன் அர்த்தமே மாறி விடும். அப்படி நடந்தால்தான் என்ன என்று கேள்வி எழும். அந்த கேள்விக்கு விடை காணச் சென்றால் அது வாழ்க்கையின் பாதையையே மாற்றிவிடும்.
அப்படியொரு மாற்றம் இங்கே நிகழ்ந்திருக்கிறது என்று கூறுகிறார் கிளேர். வயதான பிறகு தடைகள் ஏதுமில்லை. காதலர்கள் இணைகிறார்கள். இன்னொரு புறம் மலரத் தொடங்கிய காதலை மொட்டிலேயே நசுக்கி சார்லியும் சோஃபியும் பிரிகிறார்கள்.
அப்போது பேரனின் வாடிய முகத்தைப் பார்த்து கூறுகிறார் கிளேர் . உலகில் ஒரு சோஃபிதான் உண்டு. போ . என்னைப் போல் 50 ஆண்டுகள் காத்திருக்காமல் இப்போதே போய் உன் காதலை சொல்லி விடு....
சோஃபியைத் தேடி மீண்டும் வெரோனா செல்லும் சார்லி பால்கனியில் சோபியும் அவள் காதலன்  விக்டரை முத்தமிடுவதைப் பார்த்து திரும்புகிறான். முத்தமிட்ட அடுத்த கணமே காதலனை வெறுக்கத் தொடங்கி விடும் சோஃபியோ சார்லியை மறக்க முடியாமல் பால்கனியில் பார்க்கும் போது தொலை தூரத்தில் திரும்புகிறது சார்லியின் கார். அவளால் அதை பார்க்க முடியவில்லை.,
லோரன்சோவுக்கும் கிளேருக்கும் திருமணம் நடத்தப்படுகிறது. சோஃபிக்கு அழைப்பிதழ் வருகிறது. திருமணத்திற்கு செல்ல விரும்புவதாக கூறும் சோஃபி விக்டருடனான தனது உறவை முறித்துக் கொள்கிறாள். நிரந்தரமாக அவனுக்கு குட்பை சொல்லி விட்டு அவள் தன் அடக்க முடியாத மனத்துடன் வெரோனவா பயணிக்கிறாள். ஆனால் திருமண விருந்து நிகழ்ச்சியில் சார்லி பாட்ரிசியாவை அறிமுகம் செய்கிறான். பாட்ரிசியாவை தான் காதலித்து அவளை ஏற்க மறுத்துவிட்டதாக ஒருமுறை சார்லி கூறியது அவளுக்கு நினைவுக்கு வருகிறது.
இப்போது அவளால் மனம் திறக்க முடியவில்லை., அவள் அழுதுக் கொண்டே செல்லுவதைப் பார்த்து சார்லி தொடர்கிறான். பால்கனியில் நிற்கும் சோஃபியாவை கீழே இருந்தபடியே அழைக்கிறான் சார்லி
சார்லி நான் உன்னை காதலிப்பதை சொல்லத்தான் ஓடி வந்தேன். ஆனால் நீ மீண்டும் பாட்ரிசியாவுடன் இணைந்துவிட்டாய் .ஆனாலும் சொல்லி விடுகிறேன். ஐ லவ் யூ என கண்ணீருடன் கூறுகிறாள் சோஃபி
அடிப்பாவி அந்த பாட்ரிசியா வேறு இவள் என் சகோதர முறையிலான பெண் என சார்லி கூற இருவரும் சிரிக்கிறார்கள். சோஃபியை அடைய ரோமியாவாக மாறுகிறான் சார்லி, அங்குள்ள கொடியை பிடித்து பால்கனியில் ஏற அவன் முயற்சிக்கையில் கொடி அறுந்து கீழே விழுகிறான். ஆனால் புல்தரை என்பதால் அடிபடவில்லை.
சோஃபி அவனை நோக்கி ஓடிவருகிறாள். இருவரும் முத்தமிட்டுக் கொள்கிறார்கள் .அதைக் காண கிளேருடன் வோரன்சோவும் திருமணத்திற்கு வந்த அத்தனை விருந்தினர்களும் திரண்டுவிடுகிறார்கள்.
இப்படத்தில் சோஃபியாக தனது அழகா ன கண்களாலேயே நடித்திருப்பவர் அமன்டா செய்பிரீட் ,காரில் அவர் சார்லியுடன் பயணிக்கும் போது பின்சீட்டில் அமர்ந்திருக்கும் போது சார்லி அவளை பார்த்து ரசிப்பதையும் இன்னொரு காட்சியில் சார்லியின் முகத்தை கண்ணாடியில் அவள் பார்த்து ரசிப்பதையும் இயக்குனர் கேரி வினிக் அற்புதமான கவிதையாக படமாக்கியுள்ளார். அமன்டாவுக்கு சார்லியாக நடித்த கிறிஸ்டோபர் ஈகன் கிளைமாக்சில் கொடுக்கும் அழுத்தமான முத்தம் நம்மை கிளர்ச்சியுறச் செய்கிறது. காதலின் முத்தங்களுக்காக உதடுகள் ஏங்குகின்றன.
கிளேராக நடித்திருப்பவர் மூத்த ஹாலிவுட் நடிகை வானேசா . அவர் சிறுவயதில் தொலைத்து முதுமையில் மீட்ட காதலர் லோரன்சோ பாத்திரத்தில் நடித்திருப்பவர் ராபர்ட் நீரோ.  இவரை ஜாங்கோ கௌபாய் படங்களின் சண்டைக்காட்சிகளில் நாம் பார்த்திருக்கிறோம்.
14 வயதில் ரோமியோவை காதலித்து ரோமியோலை அடைய முடியாத குடும்ப பகையால் உயிரைத் துறந்த ஜூலியட் என்ற காதல் தேவதையின் சடலத்தைக் கண்டு கதறுகிறான் ரோமியோ. அவனும் தன்னை வாளால் வெட்டி மாய்த்துக் கொள்கிறான். காதலர்களின் கண்ணீருடனும் ரத்தத்துடனும் ஷேக்ஸ்பியரின் காதல் கதை துயரத்தில் முடிவடைந்தது. ஆனால் அந்த காதல் தேவதையான ஜூலியட்டின் பெயரால் எழுதப்பட்ட ஒரு கடிதம் 50 ஆண்டுகள் கழித்து ஒரு காதல் ஜோடியை இணைத்து வைக்கிறது. இன்னும் 50 ஆண்டுகள் ஒன்றாக வாழப்போகும் ஒரு காதல் ஜோடியையும் அது உருவாக்கியுள்ளது.
காதல் நிகழ்வது கணப்பொழுதில்தான். ஆனால் சில நேரங்களில் அந்தக் கணம் நித்தியத்துவமாகி நிரந்தரமாய் நிலைபெற்று விடுகிறது.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...