Sunday 7 August 2016

மணிக்கொடி இதழ்







புதையல்

மணிக்கொடி இதழ்

செந்தூரம் ஜெகதீஷ்



தமிழ் இலக்கியத்தை வணிக எழுத்துகளின் பிடியிலிருந்து மீட்டு அதை இலக்கிய வடிவில் செப்பனிட்டு  உலகத் தரத்திற்கு தமிழில் சிறுகதைகளை எழுதிய ஏராளமான படைப்பாளிகளை அறிமுகப்படுத்தியதால் மணிக்கொடியின் வரலாறு தனித்து நிற்கிறது.
மகாத்மா காந்தி உப்பு எடுப்பதற்காக தண்டிக்குப் பயணம் மேற்கொண்ட போது இந்திய நாட்டு சுதந்திரப் போராட்டம் எழுச்சி பெற்றது. அந்த எழுச்சியின் போது 1933ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி தோன்றியது மணிக்கொடி. தினசரி பத்திரிகையாக தொடங்கிய இதழை சீனிவாசன், வ.ரா., டி.எஸ்.சொக்கலிங்கம் ஆகிய மூன்று பேர்  ஆங்கில பத்திரிகைகளுக்கு நிகரான நாளேடாக  நடத்த கனவு கண்டனர். அந்த இலட்சியம் பக்கம்தோறும் ஒளிவீசியது.
பாரதி பாடியது மணிக்கொடி, காந்தி ஏந்தியது மணிக்கொடி, சுதந்திரப்போராட்டத்தில் பல்லாயிரம் இளைஞர்களை ஈடுபடச் செய்து அவர்களுக்கு உற்சாகம் ஊட்டியது மணிக்கொடி என்று அதன் தலையங்கம் முழங்கியது.
எட்டு பக்கங்களுடன் முதல் இதழ் வெளியானது. அதன் விலை அப்போது ஓர் அணா. அடுத்த சில ஆண்டுகளில் அது சிறுகதைக்கான இதழாக பத்திரிகை வடிவில் மாறியது. பாரதிக்குப் பின்னர் இலக்கிய மறுமலர்ச்சியில் இருந்த தேக்கத்தை உடைத்து, மணிக்கொடியால் செறிவான படைப்புகளையும் பங்களிப்பையும் அளிக்க முடிந்தது. சிறுகதை, கட்டுரை, நவீன கவிதை மற்றும் இலக்கிய விமர்சனங்களுக்கான புதிய வாசலை அது திறந்தது. அந்த வாசல் வழியாக புதுமைப்பித்தன், மௌனி, கு.ப.ராஜகோபாலன், பி.எஸ்.ராமையா, ந.பிச்சமூர்த்தி, எம்.வி.வெங்கட்ராம்,சிட்டி உள்ளிட்ட பல முக்கியப் படைப்பாளிகள் தமிழில் அறிமுகமாயினர்.
1934ம் ஆண்டு முதல் மணிக்கொடி இதழ் அட்டையுடன்  வார இதழாக மாறியது. அதன் உள்ளடக்கமும் மாறியது. ஆனால் அந்த இதழும் நின்று, மூன்றாவது கட்டமாக 1935ம் ஆண்டில் பி.எஸ்.ராமையாவை ஆசிரியராக கொண்டு சிறுகதைகளுக்கான இதழாக மாறியது. அத்துடன் காந்தி என்றொரு இதழும் இலவச இணைப்பாக வழங்கப்பட்டது.அதன் விலை அப்போது இரண்டு அணா.
வார இதழாக இருந்த மணிக்கொடியை கதைப் பத்திரிகையாக மாற்றி தொடர்ந்து நடத்துவது என்ற கருத்து மின்வெட்டுப் போல் ஒரு நொடியில் தோன்றி மறைந்தது என்றும் அந்த கணங்கள்தான் வரலாற்றில் எத்தனை நூற்றாண்டுகள் வரை நிலைத்துநின்று எத்தனை நூறு பேர்களின் சிந்தனையைப் பாதிக்கப்போகிறது என்றும் பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் எனக்கே புரிந்தது என்கிறார் பி.எஸ்.ராமையா தமது மணிக்கொடி காலம் நூலி்ல்.
கல்கி, ஆனந்த விகடன் போன்ற வணிகப் பத்திரிகைகளுடன் கருத்தியல் ரீதியாக முரண்பட்ட மணிக்கொடியில் உலகத்தரத்திலான படைப்புகளை அதன் பஞ்சைப் பராரிகளான படைப்பாளிகள் எழுதிக் குவித்தனர். எந்த காலத்திலும்  எந்த எழுத்தாளரும் சாதிக்க முடியாத அளவுக்கு அந்த சாதனை அமைந்துவிட்டது.
பாவேந்தர் பாரதிதாசனும் மணி்க்கொடி எழுத்தாளர்தான்.அவர் மணிக்கொடியில்  கவிதைகள் எழுதியிருக்கிறார். பரிதி கண்டோம். பரிதி கண்டோம் என முழங்கிய தை என்ற கவிதையில்,
உயிரினில் உடலினில் ஒவ்வொரணுவிலும்
வெயிலைப் பாய்ச்சினான் விரிகதிர்த் தந்தை
பனிப்புகை பிணிவகை பயங்காட்டு சாக்காடு
இனியில்லை !பகைக்கினிமேல் உதை விழும் போன்ற எழுச்சி மிக்க வரிகளுடன் பாரதிதாசன் எழுதினார் என்பதை தமது ஆய்வு நூலி்ல்  எடுத்துரைக்கிறார் பேராசிரியர் க.உமா மகேஸ்வரி.
வணிக ரீதியான இலக்கியச் சூழலுக்கு மாற்றாக தீவிரமான இலக்கிய இயக்கத்தை மணிக்கொடி எழுத்தாளர்கள் உருவாக்கினர்.
"கதை எழுதியவர்களுக்கு மணிக்கொடி ஒரு ரூபாய் கூட சன்மானம் கொடுக்கும் நிலையில் இல்லை. ஆனாலும் அதில் எழுதியவர்கள் விகடனுக்கு எழுத விரும்ப மாட்டார்கள் என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும். இரண்டு பத்திரிகைகளும் இலக்கிய சிந்தனை, மதிப்பு, தரங்களில் வெவ்வேறு எல்லைகளில் இருந்தன " என்றும் பி.எஸ்.ராமையா குறிப்பிடுகிறார்.
லா.ச.ரா. , தி.ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு போன்ற எழுத்தாளர்களும் மணிக்கொடியில் எழுதியவர்கள்தாம். மணிக்கொடிக்காக நிதி திரட்ட நவயுகம் பிரசுராலயம் என்ற பதிப்பகத்தையும் மணிக்கொடி எழுத்தாளர்கள் தொடங்கினர். ஆனால் எத்தனையோ முயற்சிகளும் பலனளிக்காமல் எல்லோரும் வறுமையில் தள்ளாடினர். பாரதியைப் போலவே புதுமைப்பித்தனும் குபராவும் வறுமைக்கு மத்தியில் தமிழை மேன்மைப்படுத்திவிட்டு மறைந்தனர். அதற்கு முன்பாக 1938ம் ஆண்டிலேயே மணிக்கொடி  தனது ஆயுளை முடித்துக் கொண்டது.
இந்த சில வருடங்களில் அதன் சாதனை இன்று வரை நீடிக்கிறது. அம்மைக்காலம் வரை வணிக ரீதியான இதழ்களுக்கும் தீவிர இலக்கியத்தை நாடுவோருக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருந்துவந்தது. வணிக இதழ்களுக்கும் சிற்றிதழ்களுக்கும் இடையிலான முரண், இடைவெளி, கருத்தியல் வேறுபாடு யாவுமே மணிக்கொடி வளர்த்த மரபு தான் எனலாம்.
ஆனால் காலம் மாறிக்கொண்டிருக்கிறது. இன்று குமுதம் தீராநதியையும் விகடன் தடம் என்ற இதழையும் தீவிர இலக்கியத்திற்காக நடத்திக் கொண்டிருக்கின்றன. சிறுபத்திரிகைகளில் மட்டும் எழுதிய தீவிர எழுத்தாளர்கள் பலரும் பெரிய பத்திரிகைகளில் எழுதுகின்றனர்.  பயணம் தொடர்ந்தாலும் பாதையும் இலக்குகளும் மாறிக் கொண்டேயிருக்கின்றன. எனினும் அசலான படைப்பாளிகளின் மங்காத தோற்றத்துடன் மறையாத ஒரு நினைவாக நம் முன் நின்றுக் கொண்டிருக்கிறது மணிக்கொடி காலம்.
-------------------

1 comment:

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...