Sunday 7 August 2016

கமல்ஹாசன் - கலைஞன் பாதி கடவுள் பாதி

கலைஞன் பாதி நாயகன் பாதி -கமல்ஹாசன்
செந்தூரம் ஜெகதீஷ்
கமலின் அழகான சுருள் முடியும் மீசையும் பளிச்சிடும் தோற்றமும் நடிப்பாற்றலும் அறிவார்ந்த பேச்சும் என் பால்ய காலம் தொட்டு என் கண்முன்னே நிறுத்திவிட்ட பிம்பங்கள் கலைக்க முடியாதவை. அவர் நடித்துள்ள பாத்திரங்கள் அகலாதவை.
ஆனந்த ஜோதியில் எம்ஜிஆருடன் சின்னஞ்சிறுவனாக தோன்றி தேவிகாவின் மடியில் தாலாட்டுப் பாட்டு கேட்ட அந்த சிறுவன் கமல், களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகமாகும் போதே அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற உருக்கமான சுந்தரபாகவதரின் பாட்டால் பல லட்சம் ரசிகர்கள் மனங்களில் இடம்பிடித்துவிட்டார்.
கமலுக்குள் ஒரு மகத்தான கலைஞர்  இருப்பதை கண்ட இயக்குனர் கே.பாலசந்தர் அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், நான் அவனில்லை, அவள் ஒரு தொடர்கதை  போன்ற படங்களின் மூலம் கமல்ஹாசனை ரசிகர்களுக்குப் பிடித்தமானவராக மாற்றினார். அது தவிர பருவகாலம், குமார விஜயம், தங்கத்தில் வைரம், பட்டிக்காட்டு ராஜா, கன்னிபூஜை ,மேல்நாட்டு மருமகள் , உணர்ச்சிகள்,  போன்ற பல தமிழ் மலையாளப் படங்களில் கமல்ஹாசன் புகழ் பெறத் தொடங்கினார். ஒல்லியான உடலுடன் அரும்பு மீசை முகத்துடன் கமல் நடித்த அந்தக்காலப் படங்களில் உருவத்தை மீறி தனது நடனத்தாலும் நடிப்பாலும் கமல் கதாநாயகனாக நடித்தவர்களை ஓரம் கட்ட தொடங்கினார்.
எனக்கு கமல் என்ற நடிகரை பிடித்ததே பட்டிக்காட்டு ராஜாவில்தான். சிவகுமார் அந்தப் படத்தின் கதாநாயகனாக படம் முழுவதும் வந்தாலும் பத்து அல்லது இருபது நிமிடங்களே வந்த கமல் மனதுக்குள் நிறைந்தார். உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில் என்ற சங்கர் கணேஷ் இசையில் வாலியின் பாடலுக்கு கமல் ஆடிய போது திரையரங்கமே கொண்டாடியது.







தொடர்ந்து கே.பாலசந்தரின் படங்களின் நாயகனாக கமல் வளர்ச்சி பெற்றார். அவர்கள், நிழல் நிஜமாகிறது, மூன்று முடிச்சு, மரோசரித்திரா, நினைத்தாலே இனிக்கும், வறுமையின் நிறம் சிவப்பு, உன்னால் முடியும் தம்பி போன்ற படங்களும் நீயா , குரு, மீண்டும் கோகிலா, ஆடுபுலி ஆட்டம், ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது, லலிதா, கல்யாணராமன், சட்டம் என் கையில், இளமை ஊஞ்சலாடுகிறது போன்ற படங்கள் கமல்ஹாசனை முழுமையான கதாநாயகனாக மாற்றியமைத்தன. பாத்திரங்களின் தன்மையறிந்து அதற்கு புதிய பரிமாணம் தந்து நடிப்பால் அதை மெருகேற்றிய கமலின் ஆர்வமும் ஈடுபாடும் தேயாமல் வளர்ந்தது. சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, உயர்ந்தவர்கள், ராஜபார்வை, அழியாத கோலங்கள் போன்ற படங்களில் அவர் கலைஞராக வளர்ந்தாலும் இன்னொரு புறம் சகலகலா வல்லவன், விக்ரம், சட்டம் என் கையில், காக்கி சட்டை, காதல் பரிசு, தூங்காதே தம்பி தூங்காதே, சட்டம், சவால், உயர்ந்த உள்ளம் போன்ற படங்களில் வணிகத் தேவைக்காக அவர் மாஸ் நாயகனாகவும் வளர்ந்து வந்தார்.
மூன்றாம் பிறை, அபூர்வ சகோதரர்கள், புன்னகை மன்னன்,நாயகன் போன்ற படங்கள் கமலுக்கு உச்சத்தைத் தொட உதவின. தமக்கு போட்டியாகவும் சூப்பர் ஸ்டாராகவும் வளர்ந்து விட்ட ரஜினியின் வெள்ளிவிழா படங்களுக்கு ஈடு கொடுக்கக்கூடிய ஒரு நடிகராக கமல் மட்டுமே நீடித்து நின்றார். அவர் காலத்தில் நடித்த சிவகுமார், முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ஜெமினி கணேசன் போன்ற மூத்த நடிகர்கள் திரைத்துறையில் இருந்தாலும் வயதாகி ஓய்வு பெறும் நிலைக்குபோனார்கள். கதாநாயகனாக அறிமுகமான விஜயகுமார், ஜெய்கணேஷ், ராஜேஷ் போன்ற பல நடிகர்கள் கூடிய சீக்கிரமே குணச்சித்திரப் பாத்திரங்களுக்கு மாற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது கமல் மற்றும் ரஜினியின் வளர்ச்சியால்தான்.
அதே காலகட்டத்தில்தான் அவர் இந்தியில் ஏக் தூஜே கே லியே, சனம் தேரி கசம், சாகர், ராஜ்திலக், யாத்கார், கிரப்தார் , சத்மா, ஏக் நயீ பஹேலி உள்ளிட்ட இந்திப்படங்களிலும் நடித்துவந்தார். மலையாளத்தில் ஈட்டா, சாணக்கியா , மதனோற்சவம் போன்ற படங்களிலும் தெலுங்கில் சில படங்களிலும் கன்னடத்தில் கோகிலா போன்ற படங்களிலும் நடித்தார்.
குள்ளனாக நடித்த அப்பு கதாபாத்திரமும் தெற்றுப்பல்லுடன் கூடிய கல்யாணராமன் பாத்திரமும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றதன் விளைவாக தமது ஒவ்வொரு படத்திலும் தோற்றத்தை மாற்றி நடிக்கலானார் கமல். தசாவதாரம் படத்தில் பல மணி நேரம் மேக்கப் போட்டு பத்து அவதாரங்களை காட்டி விட்டார் .ஆனால் இந்த மேக்கப் வியாதி பிடித்துப் போக கதாபாத்திரங்களின் அழுத்தமான உணர்வுகளை விட மேக்கப் சாதனங்களையே கமல் நம்பத்தொடங்கியதன் விளைவாக அவரது பல படங்கள் தோல்வியைத் தழுவின. அவர் மிகவும் எதிர்பார்த்திருந்த ஹேராம், குணா, ஆளவந்தான் போன்ற படங்கள் மண்ணைக் கவ்வின. அழகான தோற்றத்தில் நடித்த கலைஞன், சிங்காரவேலன் போன்ற படங்களும் கமல் நடிக்கவேண்டிய படங்களே அல்ல.





மும்பை எக்ஸ்பிரஸ், மன்மதன் அம்பு போன்ற படங்கள் வந்த சுவடே இல்லாமல் போய்விட்டன. இந்தியன், சதிலீலாவதி, அவ்வை சண்முகி, அன்பே சிவம் போன்ற படங்கள் கமல் என்ற கலைஞனை நம்மிடமிருந்து பறித்துவிடாமல் பாதுகாத்தன.
சோதனைகள் சூழ்ந்த போதும் சோதனை முயற்சிகள் சோர்வுறாமல் அவர் விருமாண்டி, தசாவதாரம், விஸ்வரூபம் போன்ற படங்களின் மூலம் கமல் தனது மாஸ் ஹீரோ ஸ்தானத்தை தக்க வைத்துக் கொண்டார். அரசியல் மற்றும் மதரீதியான எதிர்ப்புகளை சந்திக்க நேர்ந்த அவர் நாட்டைவிட்டு வெளியேறுவதாக பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஒருவழியாக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலையீட்டால் இந்தப் பிரச்சினை தணிந்தது.
50 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய மிகச்சிறந்த கலைஞர்தான் கமல். சந்தேகமே இல்லை.நடிப்புடன், திரைக்கதை, வசனம், பாடல், கவிதை, இயக்கம் போன்ற பன்முக ஆற்றலை வளர்த்துக் கொண்டார். கே.பாலசந்தரின் குருகுலத்தில் பயின்றதனால் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், எஸ்.பி.பாலசுப்பிரமணியன், கே.ஜே.ஜேசுதாஸ், கண்ணதாசன் போன்றவர்களுடன் தமது படங்களை மெருகேற்றிக் கொண்ட கமல் பிற்காலத்தில் இளையராஜா, வாலி, வைரமுத்து என தமது படங்களின் தேவைக்கேற்ற கலைஞர்களை நாடினார். தற்போது அவர் கிப்ரான் போன்ற சாதாரண இசையமைப்பாளர்களைக் கூட பெரிதாக நினைக்கத்தொடங்கிவிட்டார்.
தேசிய விருதுகள். பிலிம்பேர் விருதுகள், பத்மஸ்ரீ ,மேஸ்ட்ரோ போன்ற பல விருதுகளையும் காதல் இளவரசன், கலைஞானி, உலகநாயகன் ,ஆஸ்கர் நாயகன் என பல பட்டங்களையும் பெற்றவர் கமல்ஹாசன் . அண்மையில் ஜெயமோகன் மகாபாரத நூல் வெளியீட்டுவிழாவில் ரசிகர்களின் கைத்தட்டல் மாறாமல் தனது இலக்கிய ஈடுபாட்டை தக்க வைத்துக் கொண்ட கமல்ஹாசனை காண முடிந்தது.
சொந்த வாழ்க்கையில் வாணி கணிபதி, சரிகா, கௌதமி என பலருடன் உறவுகளை வளர்த்து சிலவற்றை துண்டித்துக் கொண்டார். நடிகை ஸ்ரீதேவியுடன் ஜோடி சேர்ந்த காலங்களில் அவருடன் சேர்ந்து கிசுகிசுக்கப்பட்டார். ஸ்ரீப்பிரியா, ஜெயப்பிரதா, அம்பிகா போன்ற சில நடிகைகளுடன் அவர் பேர் அடிபட்டது. ஆனால் அதையெல்லாம் கடந்துவிட்டார் கமல்.
இப்போது அவர் மகள்கள் ஸ்ருதியும் அக்சராவும் திரையுலகில் கால்பதித்துவிட்டனர். ஸ்ருதி முன்னனிநடிகையாகி விட்டார். கமல்இன்றும் ஒய்வுபெறாத முன்னணி நடிகராகவே நீடிக்கிறார். விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்கள் ஏராளமான ரசிகர்களை தங்கள் வசம் வைத்திருந்தாலும் ரஜினியின் கபாலிக்கும் கமலின் சபாஷ் நாயுடுவுக்கும் எதிர்பார்ப்புகள் சிறிதும் குறைந்துவிடவில்லை.
ஒரு பக்குவமான நடுத்தர வயதைக் கடந்து செல்லும் கமல்ஹாசனை எனக்கு இப்போதும் பிடிக்கிறது. அவர் நடித்த பாபநாசத்தைவிடவும் உத்தமவில்லன் நல்லபடம் என்பேன். ஆளவந்தான் படப்பிடிப்பின் போது நடிகை ரவீணா டாண்டனுடன் மொட்டைத் தலை பளபளக்க சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள என்.டி.டி.வி அலுவலகத்திற்கு வந்த கமல்ஹாசனை தனி ஆளாக வரவேற்று அமர வைத்து சில மணித்துளிகள் பேசிக்கொண்டிருந்த நினைவுகள் மறையாதவை.அந்தப் படத்தின் ஆரம்பக்காட்சிக்கு ஒன்றிரண்டு வசனங்களை எழுதிக் கொடுத்ததும் நான்தான்.
யாரைப் பார்த்து பிரமித்து நாம் வளர்ந்தோமோ யாருடைய நடிப்பால் நாம் சினிமா பைத்தியமாகவே ஆகிப்போனோமோ யாரால் நமது உள்ளுணர்வையும் ரசனையையும் செதுக்கிக் கொண்டோமோ அவரை நேரி்ல் பார்க்கும் போது ஒரு எளிய ரசிகனாக நான் வாயடைத்துப் போயிருக்கிறேன்.கடவுளை நேரில் பார்த்து எந்த வரமும் கேட்காமல் வந்துவிட்ட ஒரு மனிதனை ஆத்மாநாம் என்ற கவிஞர் காட்டியிருப்பார். அனேகமாக அந்த கடவுள் கமலாகவும் அந்த பக்தன் நானாகவும் இருக்கக்கூடும்.
சினிமாவை கமல் நேசிக்கிறார். அதே போன்று சினிமாவுடன் கமலை நேசிக்கக்கூடியவன் நான். அவரது மருதநாயகம், பொன்னியின் செல்வன் கனவுகள் நனவாகுமோ இல்லையோ ...பட்டை விபூதியைப் பூசிக் கொண்டு கையில் ஒரு சிங்கப்பூர் பொம்மையுடன் ஜூனியர் ஜூனியர் என்று பாடுவாரே ஒரு துயரம் கலந்த சிரிப்புடன்...... அந்த கமல் போதும் என் போன்றவர்களுக்கு.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...