Sunday 7 August 2016

கு.ப.ராஜகோபாலன் கதைகள்

புதையல்

கு.ப.ராஜகோபாலன் கதைகள் 
செந்தூரம் ஜெகதீஷ்


மணிக்கொடி தந்த கும்பகோணம் எழுத்தாளர்களில் முக்கியமானவர் கு.ப.ரா.அவர் சிறப்பாசிரியராக இருந்து வெளியிட்ட கிராம ஊழியன், சாலிவாஹணன் நடத்திய கலாமோகினி ஆகிய இதழ்களிலும் அவர் கதைகள் எழுதினார். 
புதுமைப்பித்தனைப் போலவே அவரும் 42 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து மறைந்தார். முப்பது வயதுக்கு மேல் கதைகள் எழுத ஆரம்பித்த அவர் பத்தாண்டுகளில் பத்து தலைமுறைக்கும் மேலாக நீடிக்க கூடிய கதைகளை எழுதிவிட்டார்.
குடும்ப உறவுகளின் உளவியல் சிக்கல்களை கு.ப.ரா போல் சொன்னவர்கள் யாருமில்லை. 1902ம் ஆண்டு ஜனவரி மாதம் ஏதோ ஒரு தேதியில் பிறந்த கு.ப.ரா.வின் பெற்றோர் பட்டாபிராமய்யர், ஜானகி அம்மாள்.
1918ம் ஆண்டு மெட்ரிகுலேசன் படிப்பை முடித்துக் கொண்டு கல்லூரியில் சேரும் போது தந்தை காலமானார். குடும்பத்தின் பாரத்தை சுமக்க வேண்டிய பொறுப்பு. அந்த நிலையிலும் அவர் கல்லூரியில் படித்து வந்தார். திருச்சிக்கு வந்த கவி ரவீந்திரநாத் தாகூரின் கவிதைகளை நேரில் கேட்ட பாதிப்பி்ல் எழுத ஆரம்பித்தார் கு.ப.ரா. ஆர்வத்தால் அவர் வங்க மொழியையும் கற்றுக் கொண்டார்.
கு.ப.ராவுக்கு ந.பிச்சமூர்த்தியின் நட்பு கிடைத்ததும் இருவரும் இரட்டையர்கள் எனுமளவுக்கு எங்கும் ஒன்றாக காணப்பட்டனர். 24 வயதில் மணமுடித்த ராஜகோபாலனுக்கு அம்மணி மனைவியாக வாய்த்தார்.
தாலுகா அலுவலகத்தில்  ஏழாண்டுகள் பணியாற்றிய கு.ப.ராவுக்கு இக்காலத்தில் மூன்று ஆண்குழந்தைகள் பிறந்தன. கண் நோயால் பாதிக்கப்பட்ட அவர் தமது ரெவின்யு இன்ஸ்பெக்டர் பணியை இழந்து தமது சகோதரியும் எழுத்தாளருமான கு.ப.சேது அம்மாளுடன் சேர்ந்து கதைகளை எழுதத் தொடங்கினார். அப்போது சிகிச்சைக்குப் பிறகு அவர் பார்வையை திரும்பப் பெற்றார். ஆனால் வேலையை திரும்பப் பெற அவர் மேற்கொண்ட முயற்சி பலிக்கவி்ல்லை.
பின்னர் எழுத்தாளர் சிட்டி அவருக்காக வானொலியில் ஒரு வேலையை முயற்சித்த போதும் எழுத்தை நம்பி வாழும் முடிவுடன் சென்னைக்கு வந்தார் கு.ப.ராஜகோபாலன்.
அங்கு அவர் தனது நண்பர்களான ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா உள்ளிட்டோருடன் தமது எழுத்துப் பணியை மேற்கொண்டார். 
முழு நேர எழுத்தாளனாக வாழும் மனிதருக்கு அது ஒரு தற்கொலைக்கு சமமாக இருந்தது. துன்பமும் போராட்டமுமாக இருந்த வாழ்க்கையால் அவர் சோர்வடையவில்லை. மணிக்கொடி, கிராம ஊழியன், சிவாஜி, ஹனுமான், கலா மோகினி உள்ளிட்ட இலக்கிய இதழ்களி்ல் கதைகளை எழுதிக் கொண்டிருந்தார்.வானொலியில் சில சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.வீட்டின் திண்ணையில் புத்தகம் விற்று குடும்பத்திற்கு அன்னம் சம்பாதித்தார்.
பாரதி மகாகவியா என்று சர்ச்சை அப்போது இலக்கிய உலகில் பொங்கியது. புதுமைப்பித்தன், ந,பிச்சமூர்த்தி, கு.ப.ரா, வ.ரா ஆகியோர் தனித்தனியாக பாரதி மகாகவிதான் என வரிந்துக் கட்டிக் கொண்டு குரல் கொடுத்தார்கள். இதை சவாலாக ஏற்று கு.ப.ராவும் சிட்டியும் கண்ணன் என் கவி என்ற தலைப்பில் பாரதியின் கண்ணன் பாடல்களை வைத்து எழுதினார்கள். அது பின்னர் ஒரே புத்தகமாக வெளியானது. தொடர்ந்து பாரதி சங்கம் நிறுவிய மணிக்கொடி எழுத்தாளர்கள் பாரதி மகாகவிதான் என நிறுவினார்கள். இன்று நாம் மகாகவி பாரதி என்றழைக்க காரணம் இந்த மணிக்கொடி எழுத்தாளர்கள்தான்.
79 சிறுகதைகள், சில நாடகங்கள், இலக்கியக் கட்டுரைகள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள் என கு.ப.ராவின் படைப்புகள் தற்போது எட்டு தொகுப்பு நூல்களாக பதிப்பிக்கப்பட்டுள்ளன. அவை ஒரேமுழுத் தொகுப்பாகவும் வந்துள்ளன.
ஆயினும் சிறுகதைகளில்தான் கு.ப.ராவின் ஆளுமை பிரகாசி்க்கிறது. ராஜகோபாலனின் உற்ற தோழராக விளங்கிய கரிச்சான் குஞ்சு கு.ப.ராவின் கதைகள் பற்றி விரிவாக ரசித்து எழுதியுள்ளார். மிகவும் சாதாரண மனிதர்களைப் பற்றித்தான் கு.ப.ரா எழுதியிருக்கிறார். ஆனால் மிகவும் அசாதாரணமான மனநிலைகளை அவர் தமது கதைகளில் சித்தரித்துள்ளார். சமுத்திரத்தில் புயலை எழுப்பும் மனித உள்ளங்களை கு.ப.ரா சித்தரித்ததாக கூறும் கரிச்சான் குஞ்சு, கு.ப.ராவின் பாத்திரங்கள் தஞ்சை மாவட்டத்தின் காவிரிக் கரையோர மக்கள் என்பதை எடுத்துரைக்கிறார். அவரது கதாபாத்திரங்களின் கஷ்டங்கள், வாழ்வின் நெருடலில் அவர்கள் தவிக்கும் தவிப்பை,வடிக்கும் கண்ணீரை, புலம்பும் புலம்பல்களை தனது குரலை உயர்த்தாத வண்ணம் கு.ப.ரா தமது இலக்கியச்சிறப்பு வாய்ந்த பேரமைதியில் சித்தரித்தார் என்று கரிச்சான் குஞ்சு குறிப்பிடுகிறார்.
கு.ப.ரா.வின் கதைகள் உருவ அமைதியும் உளவியல் ரீதியான உள்ளடக்கமும் கொண்டவை. தமிழ்இலக்கிய மறுமலர்ச்சியின் காலம் என்று புதுமைப்பித்தன், கு.ப.ரா, ந.பிச்சமூர்த்தி, மௌனி ஆகியோர் எழுதிய காலத்தைத்தான் இலக்கிய விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். 
கு.ப.ராவின் கதைகளில் ஆற்றாமை, பன்னைச் செங்கான், சிறிது வெளிச்சம், கனகாம்பரம், நூருன்னிசா, விடியுமா, மோகினி போன்ற கதைகள் இன்றும் அதன் அழகோடு மிளிருகின்றன. பெண்களின் மன இயல்புகளை மையமாக வைத்து எழுதியவர் கு.ப.ரா. அவர் கதைகள் மூலம் நம் நாட்டு பெண்களுக்கு அநீதி இழைத்து விட்டார் என்று சக எழுத்தாளரான ந.சிதம்பர சுப்பிரமணியம் கடுமையாக விமர்சித்தார். இதற்கு பதில் அளித்த கு.ப.ரா. " நான் உடைந்த மனோரதங்கள், நிறைவேறாத ஆசைகள், தீய்ந்த காதல்கள் இவற்றைப்பற்றி்த் தான் எழுதுகிறேன்  என்பது தான் குற்றச்சாட்டு "என்று குறிப்பிடுகிறார்.
" நான் குற்றவாளிதான். நான் கவனித்த வரையிலும் என் அனுபவத்திலும் வாழ்க்கையிலும் எங்கே திரும்பினாலும் அவைதாம் கண்ணில் படுகின்றன"என்று கு.ப.ரா. கூறியதாக சிட்டி சிறிது வெளிச்சம் தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
சிறிது வெளிச்சம் கதையில் கு.ப.ரா கையாண்ட பிரச்சினை கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு. இதனால் மனைவியுடன் நெருங்கும் அண்டை வீட்டு இளைஞன். சாவித்திரிக்கும் அவள் கணவனுக்கும் இடையே நடைபெறும் சண்டையில்  பக்கத்து வீட்டு இளைஞன் துணிந்து தலையிடுகிறான். கோழைதான் பெண்டாட்டியை அடிப்பான் என்று கண்டிக்க கணவன் கோபத்துடன் சென்று விடுகிறான். அழகான அந்த மனைவி சாவித்திரி ஆறுதல் தேடி அவனிடமே அடைக்கலமாகிறாள். இந்த சிறிது வெளிச்சம் போதும் என் வாழ்க்கைக்கு என்று சாவித்திரி கூறுகிறாள். கடைசியில் அந்த வெளிச்சத்தாலும் அவளை காப்பாற்ற முடியவில்லை.
இதே போன்று ஆற்றாமை கதையிலும் பெண்ணின் மன உணர்வை சித்தரிப்பதில் கு.ப.ரா அபாரமாக வெற்றி பெறுகிறார். கணவனும் மனைவியும் ஒன்று கூடி மகிழ்வதை பொறுக்காத தனிமையில் துணை இல்லாத ஒரு பெண்ணின் ஆற்றாமையை இக்கதை சித்தரிக்கிறது. கடைசியில் வீட்டுக்கு வரும் ஒருவரை படுக்கையறை கதவைத் தட்ட வைத்து விடுகிறாள்.அதிலொரு குரூர திருப்தி அவளுக்கு. அந்நியன் முன் அரைகுறை ஆடையுடன் நின்ற மனைவியைக் கண்டு கணவன் கோபம் கொள்ள இருவருக்கும் இடையே சண்டை மூண்டு விடுகிறது. அன்றைய இன்ப இரவைஅவர்களிடமிருந்து தட்டிப் பறித்து விட்ட குரூர திருப்தியுடன்  திருப்திதானா பேயே என்று அந்த தனிமை மங்கை அழுவதுடன் கதை முடிகிறது.








மேலோட்டாமாக பார்த்தால் பாலியல் பிறழ்வு, ஏக்கத்தைக் கொண்ட கதைகளாக இருப்பினும்  கு.ப.ராவே கதையின் கதை என்ற கட்டுரையில் குறிப்பிட்டது போல் காந்தத் துண்டுதான் இழுக்கக் கூடிய  பல சிறிய இரும்புத்துண்டுகளைப் போலவே சில நிகழ்ச்சிகளை தமது கதைகள் ஆகர்ஷித்துக் கொள்வதாக கூறுகிறார்.
1944ம் ஆண்டில் ஏப்ரல் 27ம் தேதி நோயால் அவதியுற்ற கு.ப.ராஜகோபாலன் காலமானார். கடைசியாக தி.ஜானகிராமனிடம் ஒருவாய் தண்ணீர் கேட்டு குடித்த பி்ன் உயிர் துறந்தார். இது பற்றி தமது வழிகாட்டி என்ற கட்டுரையில் குறிப்பிடும் தி.ஜானகிராமன், கடைசி ஒரு வார காலம் தன் மனதுக்குள் இருள் சூழ்ந்து இருந்தது என்கிறார்.கு.ப.ராவின் உயிர் பற்றி ஒரு அச்சமும் ஏக்கமும் வயிற்றி்ல் நமநமவென்று கலக்கமும் சுமந்து அழுத்திக் கொண்டிருந்ததாக ஞாபகம்...என் தகப்பனார் என் மனைவி இருவரிடமும்தான் நான் அவரைப் பற்றி ஏதாவது சொல்லி புலம்பிக் கொண்டிருந்தேன் .கரிச்சான் குஞ்சுவும் என்னோடு சேர்ந்து அழுதுக் கொண்டிருந்தான் என்று தி.ஜானகிராமன் குறிப்பிடுகிறார். ராஜகோபாலன் கிடந்த கிடையும் பட்ட சித்ரவதையும் ஒரு அநிச்சயத்தையும் கலவரத்தையும் எங்கள் இருவர் மனதிலும் மூட்டியிருந்தன என்று தனது வேதனையைக் கூறுகிறார் தி.ஜானகிராமன்.
உள்ளடக்கம் தான் கதையின் உருவ அமைதியை தீர்மானிக்கிறது என்று நம்பிக்கை உடையவர் கு.ப.ரா. எழுதும்போது உரிய இடம் வந்ததும் பேனா நின்று விட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அவருடைய பேனா அப்படி ஒரு கணத்தில் எழுதுவதை நிறுத்திக் கொண்டது. 

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...