Monday 7 March 2016

சர்வதேச திரைப்பட விழா 2

குமுதம் தீராநதி மார்ச் 2016 இதழில் வெளியானது .

சர்வதேச திரைப்பட விழா கட்டுரையின் தொடர்ச்சியாக.....



லென்ஸ்
தமிழ்-மலையாளம்-ஆங்கிலம் என மும்மொழிப்படமாக எடுக்கப்பட்ட இப்படம் இணையத்தில் பதிவேற்றப்படும் அந்தரங்கமான காட்சிகளைப் பார்ப்பவர்களை கூனிக்குறுகச் செய்கிறது. அடுத்தவர்களின் அந்தரங்கங்களை பார்க்கக்கூடிய வ்க்கிரம் ஒரு சமூக பழக்கமாகவே வளர்ந்துவிட்டது .நண்பனின் மனைவியே ஆனாலும் அவளது தொப்புளை செல்போனில் படம் எடுத்து இணையத்தில் பதிவிடுவது இன்றைய தலைமுறையின் அபத்தமான பாலியல் வக்கிரத்தை உணர்த்துகிறது.
அரவிந்தன் என்ற இளைஞனுக்கு சமூக ஊடகத்தில் உருவாகும் புதிய நட்பு பிரச்சினையாக உருவெடுக்கிறது. அவன் நண்பனாக அறிமுகமாகி எதிரியாக மாறும் நிக்கி என்ற யோவன் தனது தற்கொலையை லைவ் ஆக நிகழ்த்த விரும்புவதாகவும் அதை அரவிந்தன்தான் முதன்முதலாக பார்க்க வேண்டும் என்கிறான்.
யோவன் ஏன் தற்கொலை செய்ய விரும்புகிறான்?
மூணாறு பகுதியில் தனது அழகான புதுமனைவியுடன் வாழ்க்கையைத் தொடங்கும் ஒரு சாதாரண மனிதன் அவன். மனைவியின் விருப்பப்படி ஒரு வீட்டில் விளக்குகளை முழுவதும் எரிய விட்டு முதலிரவு கொண்டாடுகிறான். அந்தவீட்டில் பிளம்பர் ஒருவன் கேமராவை மறைத்து இந்த அந்தரங்க உறவை வீடியோ எடுத்து பென் டிரைவரில் போட்டு அதை தொலைத்து விட வருகிறது விபரீதம். அதை கண்டெடுக்கும் அரவிந்தன் இணையத்தில் பதிவிடுகிறான். இதனால் யோவனின் மனைவி கையை பிளேடால் வெட்டிக் கொண்டு தற்கொலை செய்துக் கொள்கிறாள். இதனால் அரவிந்தனை பழிவாங்க எண்ணி அவன் மனைவியை அவன் கண்ணெதிரே வீடியோ கான்பிரன்சிங்கில் துகிலுரிவது போல பல கொடுமைகளை செய்கிறான் யோவன். ஜூலி என்ற பெண்ணுடன் அவன் இருந்த அந்தரங்க காட்சியையும் பதிவு செய்து விடுவதாக மிரட்டுகிறான். இந்த மிரட்டல்களால் பதறும் அரவிந்தன் தனது தவறை உணர்கிறான்.இறுதியில் யோவன் துகிலுரித்தது அரவிந்தனின் மனைவியை அல்ல, கால் கேர்ளான ஜூலியைத்தான் என்கிறது கிளைமேக்ஸ். வக்கிரத்துக்கு எதிரான படமா அல்லது வக்கிரமான படமா என பல முறை யோசிக்க வைக்கிறது. சில இடங்கள் கைத்தட்டல் பெறுகின்றன. இப்படத்தை இயக்கியவர்  ஜெயபிரகாஷ். தமிழில் என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் நண்பராக நடித்தவர். அவர்தான் இப்படத்தின் அரவிந்தன் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். யோவனாக நடித்த ஆனந்த்சாமியும் யோவனின் மனைவியாக வரும் அஸ்வதி லாலும் மனதில் நிற்கிறார்கள். அஸ்வதி லாலின் திமிறும் இளம் உடல் பல நேரங்களில் பார்வையை இன்னொரு வக்கிரத்துக்கு தூண்டுகிறது.

AN  ஜப்பான் இயக்குனர் - நவோமி காவாசி

செனடாரோ நடத்தும் சிறிய பேக்கரியில் மாணவிகள் நம்மூர் ஊத்தப்பம் போன்ற பான்கேக்குகளை சா்ப்பிட வருகிறார்கள். ஆனால் தொட்டுக் கொள்ள அவர் தரும் பீன் பேஸ்ட் ருசிப்பதே இல்லை. சென்னையில் இருக்கும் பெரும்பாலான மெஸ்களில் பொடிதோசை, ராகி தோசை ,கோதுமை தோசை ஆனியன் ஊத்தப்பம் என பிரமாதமாக தருவார்கள் ஆனால் சட்னி சாம்பார் மட்டமாக இருக்கும்.அதுபோல்தான் செனடாரோவின் கடையும். இங்கு வேலை கேட்டு 76 வயது பாட்டி ஒருத்தி வருகிறாள். அவளை விரட்டி விடும் அவர் பின்னர் அவள் தந்த பீன் பேஸ்ட்டை சாப்பிட்டு ருசியில் மெய் மயங்கி வேலைபோட்டுக் கொடுக்கிறார்.அப்புறம் அதிகாலையில் எழுந்து அந்தப் பெண்மணி பீன் பேஸ்ட் தயாரிக்கும் காட்சிகள் அபாரமான சமையல் கலையின் தன்மையை விவரிக்கின்றன. தி.ஜானகிராமனின் நளபாகத்தை நினைவுபடுத்தும் காட்சிகள் இவை. சமையல் என்பது வர்த்தகத்திற்காக செய்வது அல்ல....பசியாற்றவும் ருசியை தரவும் உள்ளத்திலிருந்து ஈடுபாட்டுடன் செய்வது அதில் நிறைய அன்பைக் கலப்பது என்கிறாள் கிழவி.
 கடையும் நல்ல பிக் அப் ஆகும் நேரத்தில் கடையின் உரிமையாளர் பெண்மணி வந்து தொழுநோயாளியாக உள்ள பெண்ணை பணியமர்துதவதா என கேட்கிறாள்.காலப்போக்கில் தோக்கு என்ற அந்த வயதான பெண்மணியும் செனடாரோவும் தங்கள் வாழ்க்கையின் இருண்ட பக்கங்களைப் பகிர்ந்துக் கொள்ளும் இணக்கமான சூழல் உருவாகிறது.மிகவும் மெதுவாக செல்லும் இப்படம் சுவாரஸ்யமான உரையாடல்கள் மற்றும் இயல்பான நடிப்பால் மனதில் இடம் பிடிக்கிறது.


டோக்கியோ பியான்சி - ஜப்பான் - இயக்குனர் ஷெபான் லிபர்ஸ்க்கி


அமிலி என்ற இளம் பெண் ஜப்பானை நேசிக்கும் பிரெஞ்ச் பெண். ஜப்பானைப் பற்றிய கனவுடன் டோக்கியோ வரும் அவள் ஜப்பானியரான ஒரு காதலனையும் தேடிப்பிடிக்கிறாள். அவனுக்கு பிரெஞ்ச் டீச்சராகி காதலியாக மாறும் காட்சிகள் படத்தை நகர்த்துகின்றன ,நிர்வாணக் குளியல்கள், உடல் உறவு முனகல்களுடன் படம் பல இடங்களில் பிட்டு படம் போலத்தான் நகர்கிறது. ஆனால் ஜப்பான் காதலன் பிரான்சை நேசிப்பவனாக இருப்பது படததின் திருப்பம். டோரண்டோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்தப் படம் சின்ன சின்ன புரிதல்கள், புரியாத உணர்வுகளுக்கு இடையே பார்வையா ளர்களை கவர்ந்தது. மாற்று கலாச்சார மோதல்களால் ஏற்படும் குழப்பங்களை காதலுடன் சொன்ன படம் இது.

இன் ஹர் பிளேஸ் -கொரியா - இயக்குனர் ஆல்பர்ட் ஷின்

ஒரு வயதான பெண்ணும் அவள் பதின்பருவ இளம் மகளும் குளிர் பிரதேசத்தில் வசிக்கிறார்கள். பண்ணை வீட்டில் உள்ள அவர்களை சந்திக்க வருகிறாள் மற்றொரு இளம் பெண். அந்த சிறுமி இப்போது கர்ப்பமாக இருக்கிறாள். அவள் பெற்றெடுக்க உள்ள தனது கணவரின் செயற்கை முறை கருத்தரிப்பு குழந்தையை கொண்டு செல்ல வந்திருக்கிறாள் இந்தப் பெண்.மூன்று பெண்களுக்கும் இடையில் ஏற்படும் உணர்ச்சிகரமான மாற்றங்களும் தடுமாற்றங்களும் தான் படம். சிறந்த திரைக்கதையைக் கொண்ட படம் இது.

பனாமா -செர்பியா  ( இயக்குனர் பாவலே விக்கோவிக் )
மாஜா என்ற இளம் பெண்ணுடன் பழகுகிறான் ஜோவன். இருவரும் எந்தக் கட்டுப்பாடும் இன்றி உடலுறவு கொள்கிறார்கள், எந்த நிபந்தனையும் இன்றி காதலிக்கிறார்கள். ஆனால் மாஜாவின் மர்மமான செயல்பாடுகள், ரகசியமாக அவள் செல்போனில் பேசுவது, திடீரென மாயமாவது போன்றவை அவனுக்குள் சந்தேகத்தீயை வளர்க்கின்றன. நிபந்தனையற்ற பாலியல் உறவு பொசசிவ்னஸ் கொண்ட காதலாக மாறுகிறது. அவள் செல்போனை அவன் வேவு பார்ப்பதும், ரகசியமாக பனாமா தீவு வரை பின் தொடர்ந்து செல்வதும் படத்தின் இதர பகுதிகள். பொய்களும் பொறாமையும் உணர்ச்சிகரமான உடல் உறவுகளுமாக ஜோவன் காதலில் தன்னை இழக்கிறான். கடைசியில் அவன் மாஜா யார் என கண்டுபிடிக்கிறான். தற்போதைய இளம் தலைமுறையினரின்  ஜஸ்ட் லைக் தட் உறவுகளையும் உறவுகளின் போலித்தன்மைகளையும் காதலின் வலியையும் பொறாமையால் காதலர்கள் இடையே எரியும் பிரிவுத்தீயையும் விவரிக்கிறது. மிகச்சிறந்த படமாக இது மனதுக்குள் நிலைக்கிறது. அழகான அந்த கதாநாயகிக்காக படத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது.


DORA AND SEXUAL NEUROSIS OF OUR PARENTS
மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருத்தி பாலியல் உணர்வுகளை பெறுவதால் ஏற்படும் விளைவுகளை சொல்லும் படம். பிடித்தவர்களுடன் உறவு வைப்பது பற்றிய தந்தை-தாயின் விளக்கத்தை தப்பாக புரிந்துக் கொள்ளும் அவள் தந்தையிடம் உனக்கு என்னைப் பிடிக்குமா எனக்கேட்டு அவரையே முத்தமிட முயற்சிக்கும் போது மனம் அதிர்கிறது. .பின்னர் தந்தை தாயின் உடலுறவை நேரில் பார்த்து தமக்கும் அதுபோல உறவு வேண்டும் என்று அவள் ஓர் ஆணைத் தேடுகிறாள். எவனோ தெருவில் போறவன் பின்னால் போய் அவனால் பலாத்காரம் செய்யப்படுகிறாள். மீண்டும் மீண்டும் அவனை நாடிப்போய் கர்ப்பம் அடைகிறாள். அவனோ அவளை திருமணம் செய்ய மறுக்கிறான். உன்மகளை நான் அனுபவிக்கிறேன் அவ்வளவுதான் என்று அவள் தந்தையை விரட்டியடிக்கிறான். மிகவும் சிக்கலான பிரச்சினையை மிகுந்த கவனத்துடனும் மாற்றுத்திறனாளிகளின் பரிதாபகரமான உலகத்தையும் சித்தரிப்பதில் இப்படம் ஒரு முக்கிய இடம் பெறுகிறது.



சென்னை சர்வதேச திரைப்பட விழா நிறைவு

 


சென்னை 13 வது சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 6ம் தேதி தொடங்கி 13ம் தேதி நிறைவு பெற்றது. இதில் சிறந்த தமிழ்ப்படத்திற்காக போட்டியிட்ட 12 படங்களில் நடுவர் பரிசை ரேடியோ பெட்டி என்ற படத்திற்காக அதன் இயக்குனர் ஹரி விஸ்வநாத்தும் அந்தப் படத்தில் வயதான பாட்டு ரசிகராக வந்த டி.வி,வி. ராமானுஜமும் விருது பெற்றனர்.

சிறந்த தமிழ்ப்படமாக கிருமி தேர்வு செய்யப்பட்டது. படத்தின் இயக்குனர் அனுசரண் விருதைப் பெற்றுக்கொண்டு பேசும் போது போலீஸ்காரர்களும் சில நேரங்களில் கிரிமினலாக மாறுவதை விவரித்து குற்றவாளிகளும் காவலர்களும் சந்திக்கும் ஒரு மையப்புள்ளியை படம் விவரிப்பதாக தெரிவித்தார்

சிறந்த நடிகராக தனி ஒருவன் படத்தில் தனித்து தெரிந்த நடிகர் அரவிந்த்சாமி விருது பெற்றார். சிறந்த நடிகை நயனதாரா விருதைப் பெற வந்தபோது கேமராக்கள் அவருக்குள்ள நட்சத்திர அந்தஸ்த்தை படம் எடுத்துக்காட்டின.

நடிகைகள் சுகாசினி, பூர்ணிமா பாக்யராஜ், நடுவராக பணியாற்றிய லிசி நடிகரான இயக்குனர்கள் மனோாலா, சித்ரா லட்சுமணன், மன்சூர் அலிகான் போன்ற ஏராளமானோர் நிறைவு விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர். மிகச்சிறப்பாக சர்வதேச திரைப்பட விழாவை ஏற்பாடு செய்து சென்னை மக்களின் வெள்ளத்துயரை கலையின்பால் ஆற்றுப்படுத்திய அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்

செந்தூரம் ஜெகதீஷ்

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...