Sunday 7 February 2016

அரிதினும் அரிது கேள் 25 ஒருநாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்




 அவள் படிக்கும் கல்லூரிக்கு போனான்அவன். அவளுக்காக வகுப்புகள் முடிய ஆசிரியர்கள் அறையில் காத்திருந்தான். வகுப்பு ஒரு மணிக்கு முடிய அவள் தகவல் அறிந்து துள்ளி ஓடி வந்தாள். அவள் ஓடி வரும் காலடிச் சத்தம் மரப்பலகை படிகளில் எதிரொலித்து அவன் காதுகள் வரை வந்தது. அடுத்து அவளும் மூச்சிரைக்க வந்து நின்றாள். அவள் முகத்தில் சிரிப்பு மகிழ்ச்சி. சென்னையிலிருந்து வர்றீங்களா...நலம்தானே என விசாரிப்புகள், கைக்குலுக்கல்.
பின்னர் கேண்டீனுக்கு அழைத்துச் சென்றாள். மதிய நேரத்தில் பொங்கல் வாங்கி சாப்பிட்டார்கள். நாளை கோவிலில் சந்திப்பதாகவும் கூறி மீண்டும் வகுப்புகளுக்கு சென்றுவிட்டாள். வீட்டு விலாசம் தந்தாள்.
மறுநாள் கோவில் போய் திரும்பும் போது நடந்துக் கொண்டே அவன் கேட்டான். நீங்க என ஏன் பேசணும். நீன்னே கூப்பிடு என்றாள். அந்த உரிமை அவள் காதலை சொன்னது. அவன் அவள் கையைப் பிடித்தான். இருவரின் விரல்களும் கோர்த்துக் கொண்டன. நடந்தார்கள், காலம் இடம் வெளி இடைவெளி எல்லாம் மறந்து இரவு வரை கால் வலிக்க பேசிக் கொண்டே நடந்தார்கள். திடீரென ஒரு இருட்டான வீதிக்குள் வந்துவிட்டார்கள். அவள் அவனை இறுக்கிப் பிடித்து கன்னத்தில் அவனுக்கு ஒரு முத்தம் கொடுத்தாள். அவன் மூச்சுத்திணறினான். இத்தனை காதல் இத்தனை அன்பை அவன் இதுவரை அறிந்ததில்லை. வாழ்வில் அவனை யாரும் அதுவரை தானாக முத்தமிட்டதாக அவனுக்கு நினைவில்லை. அவளை தொட்டு அணைக்க அவன் ஆசைப்பட்டான். நாளை காலை பத்ரகாளி அம்மன் கோவிலுக்குப் போகலாம் என்று அழைத்தான். அவனுக்கு இந்த இடம் தெரியும். மேட்டுப்பாளையத்திலிருந்து சற்று தொலைவில் ஆற்றங்கரையில் அமைந்த இடம். அமைதியும் தனிமையும் இருக்கும். வைதேசி காத்திருந்தாள் படத்தில் இந்த இடம் படமாக்கப்பட்டுள்ளது.
அவள் வருவாளா என அவன் காத்திருந்தான்..அவள் நிச்சயமாக கூறவில்லை. பார்க்கலாம் என்று கூறி போய் விட்டாள்.
மறுநாள் காலை எட்டு மணி. அவள் வரும் நேரம். ஏழுமணியிலிருந்தே காத்திருந்தான். மழை தூறிக் கொண்டிருந்தது. வருவாளா வரமாட்டாளா எனப் புரியவில்லை. காத்திருந்தான். மணி 8.20 அதோ மலையாளப் பெண்கள் கட்டும் சந்தன நிறச் சேலையும் பச்சை ரவி்க்கையும் கட்டி அவள் கையில் வண்ணக்குடையுடன் சேலை நனையாமல் கையால் பிடித்து மெல்ல மெல்ல நடந்து வந்தாள். அவனைப் பார்த்து சிரித்தாள். ஒரு டீயும் கேக்கும் சாப்பிட்டு மேட்டுப்பாளையம் பேருந்தில் ஏறினார்கள். மழை பிடித்துக் கொண்டது. பேருந்து நடத்துனர் அனைத்து ஜன்னல்களையும் சாத்தி கதவுக்கும் திரை போட்டு விட்டார். சில பயணிகள் மட்டுமே இருந்தனர். பேருந்தின் கடைசி இருக்கையில் அவர்கள் அமர்ந்தனர். டிக்கட் வாங்கிய பின்னர் அவர்களின் பேச்சு குறைந்தது. கைகள் பின்னிக் கொண்டன. அவன் கைகள் அவள் இடுப்பிலும் தொடையிலும் உரசின.
அப்போது பேருந்துக்குள் ஒரு பாட்டு ஒலித்தது. அந்தப் பாடல் இதுதான்.



படம் : எஜமான்
இசை : இளையராஜா
பாடியவர்கள் : S.P. பாலசுப்ரமணியம், S. ஜானகி
பாடலாசிரியர்: R.V. உதயகுமார்

கங் கண கணவென கிங் கிணி மணிகளும் ஒலிக்க ஒலிக்க
எங்கெங்கிலும் மங்களம் மங்களம் எனும் ஒலி முழங்க முழங்க
ஒரு சுயம்வரம் நடக்கிறதே யே......
இது சுகம் தரும் சுயம்வரமே யே....
ஆ ஆ ஆ...... ஆ ஆ ஆ.....

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
எனை ஆளும் எஜமானே எனை ஆளும் எஜமானே
எனை ஆளும் எஜமானே எனை ஆளும் எஜமானே

ஆஆ... ஆ...   ஆஆ... ஆ ...
ஆஆ... ஆ...   ஆஆ...

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

தனனனன... தனனனன... தனனனன...
தனனனன... ன... ன... ன... ன...

சுட்டு விரல் நீ காட்டு சொன்னபடி ஆடுவேன்
உன் அடிமை நான் என்று கையெழுத்துப் போடுவேன்

உன் உதிரம் போலே நான் பொன்னுடலில் ஓடுவேன்
உன் உடலில் நான் ஓடி உள்ளழகை தேடுவேன்

தோகை கொண்டு நின்றாடும் தேங்கரும்பு தேகம்
முந்தி வரும் தேன் வாங்கி பந்தி வைக்கும் நேரம்

அம்புகள் பட்டு நரம்புகள் சுட்டு
வம்புகள் என்ன வரம்புகள் விட்டு

ஆஆ... ஆ...   ஆஆ... ஆ ...
ஆஆ... ஆ...   ஆஆ...

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
இணையான இளமானே துணையான இளமானே
இணையான இளமானே துணையான இளமானே

ஆஆ... ஆ...   ஆஆ... ஆ ...
ஆஆ... ஆ...   ஆஆ...

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

கட்டிலிடும் சுட்டோடு தொட்டில் கட்டு அன்னமே
முல்லைக்கொடி தரும் அந்த பிள்ளைக்கனி வேண்டுமே

உன்னை ஒரு சேய் போலே என் மடியில் தாங்கவா
என்னுடைய தாலாட்டில் கண் மயங்கி தூங்க வா

ஆரீராரோ நீ பாட ஆசை உண்டு மானே
ஆறு ஏழு கேட்டாலும் பெறெடுப்பேன் நானே

முத்தினம் வரும் முத்து தினம் என்று
சித்திரம் வரும் விசித்திரம் என்று

ஆஆ... ஆ...   ஆஆ... ஆ ...
ஆஆ... ஆ...   ஆஆ...

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
இணையான இளமானே துணையான இளமானே

ஓ... எனை ஆளும் எஜமானே எனை ஆளும் எஜமானே


பாடல் ஒலி்க்க ஒலிக்க  அவள் திடீரென அவன் மடியில் சரிந்தாள். தூங்குபவள் போல காலை நீட்டிக் கொண்டு தலையை அவன் மடியில் வைத்துக் கொண்டாள். முகத்தை அவன் மடியில் மூடி அழுகிறாளா ஆனந்தப்படுகிறாளா என்று தெரியாமல் அவன் குழம்பினான். பூக்கள் சூடிய அவள் கூந்தலையும் ரவிக்கையின் மறைக்காத பகுதிகளையும் அவள் முதுகையும் அவன் வருடிக் கொண்டிருந்தான். பாடல் தேவாரம் போல் இனித்து. வேறு சில பாடல்களும் ஒலித்தன. ஆனால் இந்தப்பாடலுடன் அன்று காலம் உறைந்து விட்டது. அவனும் அவளும் அரைத்தூக்கத்தில் ஆழ்ந்தனர். பயணம் எப்போது முடிந்தது என்பதை இருவருமே அறியவில்லை. மேட்டுப்பாளையம் வந்துவிட்டது. மழை இல்லை. நல்ல குளிர்காற்று வீசியது. பத்ரகாளி அம்மன் கோவிலுக்குப் போனால் தாமதமாகி விடும்என்று அந்தப் பேருந்து நிலையத்தில் ஒரு படிக்கட்டில் போய் அமர்ந்தார்கள். பேசினார்கள். பல மணி நேரம் கடந்தது. அவன் தன் மனம் திறந்து தனது ரணங்களைக் கொட்டினான் .அவள் அழுதாள். அவனுக்கு ஆறுதல் சொன்னாள்.ஒருநாளும் உனை விட்டுப் போகமாட்டேன், உன்னை மறக்க மாட்டேன் என்று சத்தியம் செய்தாள்.ஒருநாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும் என்று இருவரும் பாடினார்கள்....கோவை திரும்பிசென்னை திரும்பும் வரை அவனுக்குள் அந்தப் பாடல் மனதுக்குள் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. இன்றும் அதன் எதிரொலிகளை அவன் கேட்கிறான். அந்தப் பாடல் ஒலிக்கும்போது எல்லாம் அவன் மனதுக்குள் அழுகின்றான்.
 காலம் கொடியது. அவளும் ஒருநாள் அவனை விட்டுப் பிரிந்துவிட்டாள். அவன் பார்வையில் படாமல் எங்கேயோ ஒரு கிராமத்திற்குள் தன் பிள்ளை கணவர் என குடும்பத்தினருடன் தொலைந்தே போய் விட்டாள். பிரிவுகளுக்குப் பின் தகவலற்று போய்விடக்கூடாதா என்ற மகுடேஸ்வரனின் கவிதை மட்டும் இந்தப் பாடலுடன் அவனுக்காக மிச்சமிருந்தது. இன்று அந்த பேக்கரிக்கு அவன் போய் டீ சாப்பிடும் போது தூரத்தில் மழையில் நனைந்தபடி குடையுடன் அவள் நடந்து வரும் காட்சி அவன் கண்களுக்குத் தெரிகிறது. கண்களின் ஓரங்கள் நனைகின்றன. உன்னை நிறைய சிரிக்க வைக்கப்போகிறேன் என்று சொன்னவள் இந்த கண்ணீரையே தந்துவிட்டாள். வாழ்வின் அவன் சுமக்கும் எண்ணற்ற ரணங்களுடன் இந்த ரணத்தையும் ரகசியமாக சுமக்கின்றான்.


No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...