Saturday 19 March 2016

அரிதினும் அரிது கேள் -27 எல்லோரும் நலம்வாழ நான் பாடுவேன்




காதல் தோல்வி பாடல்களில் என் உள்ளம் கவர்ந்த பாடல்களில் இது ஒன்று. இந்தியில் பிரம்மச்சாரி என்ற படத்தின் தமிழாக்கமான எங்க மாமா- வில் இடம் பெற்ற பாடல் இது. இந்தியில் ஷம்மி கபூர் கதாநாயகன் ராஜஸ்ரீ கதாநாயகி. இந்த ராஜஸ்ரீ தமிழில் குடியிருந்த கோவில், காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் நடித்த நடிகை ராஜஸ்ரீ அல்ல.இவர் இந்தி நடிகை. ராஜ்கபூரின் அரவுண்ட் தி வர்ல்ட் இன் 80 டேஸ், சாந்தாராமின் கீத் காயா பத்தரோன்மே போன்ற படங்களில் நடித்தவர்.மிக அழகான கண்கள் உடையவர். கொண்டையும் ஸ்லீவ் லெஸ் ரவிக்கையுமாக அந்தக்கால இந்தி நடிகைகளின் சாயலில் இருந்தபோதும் மிகவும் மனம் கவர்ந்த நடிகையாக இருந்தார். பிரம்மச்சாரி படம் அனாதை குழந்தைகளுக்காகவே வாழும் ஒருவர் தனது காதலியை துறக்க துணியும் போது இந்தப் பாடல் இடம் பெறும். இந்தியில் இசை சங்கர்- ஜெய்கிஷண். பாடியவர் முகமது ரபி. பாடலாசிரியர் ஹஸ்ரத் ஜெய்பூரி. 
இப்பாடலில் பியானோ இசை ஒரு அற்புதம். அந்தக்கால இந்திப்படங்களி்ல் பியானோ இசை இல்லாத படமே இல்லை. ஆனால் இந்தப் பாடலுக்காக போடப்பட்ட செட்டும், நடன நடிகர்களும் வித்தியாசமான கேமரா கோணங்களும் ஷம்மி கபூரின் இளமையான நடிப்பும் ராஜஸ்ரீயின் கண்ணீர் சிந்தும் விழிகளும் பாடலுக்கு முன்பு ஒலித்த நீண்ட பிஜிஎம் ஆர்க்கெஸ்ட்ராவும் பாடலை மறக்க முடியாத பாடலாக்கி விட்டன. தில் கே ஜரோக்கோன்சே என்ற அந்தப் பாடலின் தமிழ் வடிவம்தான் எங்க மாமாவில் இடம் பெற்ற இ்ந்தப் பாடல்




படம் எங்க மாமா
பாடலாசிரியர் கண்ணதாசன் இசை எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர் டி.எம்.எஸ். நடிப்பு சிவாஜி கணேசன் ஜெயலலிதா 

எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார் இனி
என்னோடு யார் ஆடுவார்.

பூப்போன்ற என் உள்ளம் யார் கண்டது-அது
பொல்லாத மனம் என்று பேர் வந்தது
வழியில்லாத ஏழை எது சொன்னாலும் பாவம் -என்
நெஞ்சும் என்னோடு பகையானது

கண்ணீரை நான் எங்கு கடன் வாங்குவேன்-அது
கடனாக வந்தாலும் தடை போடுவேன்
நியாயங்கள் தெளிவாக நாளாகலாம்- நான் 
யார் என்று அப்போது நீ காணலாம்

உன் பார்வை என் நெஞ்சில் விழுகின்றது
உன் உள்ளம் எதுவென்று தெரிகின்றது
நான் இப்போது ஊமை மொழியில்லாத பிள்ளை 
என்றேனும் ஓர்நாளில் நான் பேசலாம்
உன் பாதை நீ கண்டு நீ வாழலாம் - இனி
என்பாதை நான் கண்டு நான் போகலாம்
எங்கே நீ சென்றாலும் நலம் வாழலாம் 
நான் எப்போதும் நீ வாழ இசை பாடலாம்


ஷம்மிகபூரி்ன் நடிப்பை விழுங்கி விட்டார் சிவாஜி கணேசன். கண்கள் சிவக்க, கோபமும் ஆற்றாமையும் இயலாமையும் நிறைந்த துயரமான முகத்தை நடிகர் திலகம் கொட்டித் தீர்த்தார். ராஜஸ்ரீயைப் போல் நாசூக்காக அழத்தெரியாமல் ஜெயலலிதா தமிழ் நடிகைகளைப் போல் குமுறி குமுறி அழுதார். கண்ணதாசனின் ஆழமான வரிகளுக்கு இந்தியிலிருந்து வழுவாமல் தனது ஒரிஜினாலிட்டியை இழக்காமல் மெல்லிசை மன்னர் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் நான் தன்னந்தனி காட்டு ராஜா, சொர்க்கம் பக்கத்தில், செல்லக்கிளிகளாம் பள்ளியிலே செவ்வந்திப்பூக்களாம் தொட்டிலிலே போன்ற இனிமையான பாடல்கள் இடம் பெற்றிருந்தன.
எங்க மாமா படம் இப்போது மாடர்ன்சினிமா நிறுவனத்தால் டிவிடியாக நல்ல பிரிண்டில் கிடைக்கிறது. 40 ரூபாய்தான் விலை. பாடல்களுக்காகவாவது வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...