Monday 7 March 2016

தந்தை காலமானார்

எனது அருமை மிகு தந்தையார் கூப்சந்த் மார்ச் 4ம் தேதி பிற்பகல் 2.10 மணிக்கு  காலமானார். அவருக்கு வயது 83. அவருடைய பெயரை உச்சரிக்கும் போது பலரது கேலிக்கும் வியப்புக்கும் ஆளாகியிருக்கிறேன். ரேசன் கார்டு, தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை. பான்கார்டு, என அனைத்தி்லும் தப்புத்தப்பாகத்தான் அவர் பெயரை குறிப்பிடுவார்கள்.
எனது தந்தையின் அப்பா பெயர் சீத்தல்தாஸ். பாகிஸ்தானின் பிரிவினைக்கு முந்தைய சிந்து நதிக்கரையில் பிறந்தவர். சிந்தி இனத்தவர். குருநானக்கின் தீவிர பக்தர். துறவி போல் வாழ்ந்தவர், ஆயினும் வள்ளுவர் வழியில் இல்லறத்தை நல்லறமாக நாடியவர்.3 வயதில் மஞ்சள்காமாலையால் நான் இறக்கும் நிலையில் இருந்த போது மறுபிறவி எடுப்பேன் என அவர் கூறினாராம். அதை நிரூபிக்கும் வகையில் உயிர் பிழைத்த நான் பேசுவதும் தவழ்வதும் மீண்டும் புதிதாக நடந்ததாக எங்கள் குடும்பத்தில் பேசுவார்கள். எனக்கு கலையின் மீதும் அறிவின் மீதும் தாகம் எழுந்ததற்கு அவர் போட்ட விதையும் இந்த மறுபிறவியும் ஒரு காரணமாக இருக்கலாம்.

பிரிவினையின் போது ரயிலில் சீக்கியர்கள் பாகிஸ்தான் முஸ்லீம்களால் கோரமாக கொலை செய்யப்பட்ட காலத்தில் ரயிலின் கூரை மீது ஏறி உயிர்தப்பி இந்தியாவில்- திருச்சியில் அகதியாக தமது குடும்பத்துடன் வந்தவர் சீத்தல்தாஸ். அவரது தோளைத் தொற்றி சிறு பிள்ளையாக வந்தவர் எனது தந்தை. பாகிஸ்தானில் அவர்கள் விட்டு வந்த சொத்துகள் இன்று பல  கோடிகளை தாண்டும். திருச்சியில் உப்பு வியாபாரம் செய்தார்கள். பின்னர் துணி வியாபாரம். அப்பா கணக்கு எழுத ஆரம்பித்து  6 பிள்ளைகளை வளர்த்தார்.
அப்பாவிடமிருந்து நான் பெற்ற சொத்து இந்தி சினிமா பாடல்கள். முகமது ரபி, முகேஷ், மன்னாடே, லதா மங்கேஷ்ர்,மகேந்திர கபூர், கிஷோர் குமார் பாடல்களை அப்பா விரும்பிக் கேட்பார். அநத பழக்கம் எனக்கும் தொற்றிக் கொண்டது. ஏக்ஃபூல் தோ மாலி படத்தில் மன்னாடே பாடிய துஜே சூரஜ் கஹூ யா சந்தா என்ற பாடல் இதில் மறக்க முடியாதது. அந்தப் பாட்டில் நான் இறந்த பின்னும் உன் ரூபத்தில் நான் வாழ்வேன் என்று ஒரு தந்தை மகனுக்குக் கூறுவார். இந்தப் பாடலை எனக்காக அப்பா பாடுவதைக் கேட்டிருக்கிறேன். இப்போது இந்த பாடலை நானும் விக்கிக்காக பாடி வருகிறேன், விக்கிக்கும் இந்தப் பா்டல் மிகவும் பிடித்தது. என் செ்ல்போனின் ரிங்டோனும் இந்தப்பாட்டுத்தான்.

அப்பாவைப் பற்றி தனி புத்தகமே எழுதலாம்.

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு அகதிகளாக புகலிடம் தேடி வந்தவர்களைப் பற்றி நாம் பலமுறை பேசுகிறோம். ஆனால் எங்களைப் போன்ற பரிதாபத்துக்குரியவர்கள் பற்றி என்னைப் போன்ற ஓரிருவர்தான் பதிவு செய்ய முடியும். கிடங்குத்தெரு நாவலில் அதை ஓரளவுக்கு செய்தேன்.

அப்பாவுக்கு சிறுவயது முதலே ஹின்டு இதழ் படிப்பது வழக்கம். எனக்கும் இன்று வரை அந்தப் பழக்கம் இருக்கிறது. அந்த பத்திரிகையிலேயே அவருக்கு இரங்கல் செய்தி வெளியிட்டோம்.

அவரை கொண்டு போய் மயான சிதையில் வைத்து கொள்ளி வைத்த போது அழுகை பீறிட்டது. நெருப்பே எனது தந்தையை சுடாமல் வெண்சாமரம் வீசு என்று கதறிக் கொண்டே வந்தேன். இறந்த பின்னர் உடல் உணர்ச்சியற்றுப் போனாலும் உள்ளம் அதை ஒப்புக் கொள்ள மறுக்கிறது. நாம் எரிப்பது சதைப்பிண்டத்தையல்ல ரத்தமும் சதையுமாக நம்முடன் கலந்து விட்ட ஒரு உயிரோவியத்தை.
அப்பா இப்போது எங்கே இருப்பாரோ?

2 comments:

  1. அப்பா எங்கிருந்தாலும் உங்கள்மீது அக்கறையோடு இருப்பார்.
    நெகிழ்சியான பதிவு.

    ReplyDelete
  2. அப்பா எங்கிருந்தாலும் உங்கள்மீது அக்கறையோடு இருப்பார்.
    நெகிழ்சியான பதிவு.

    ReplyDelete

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...