Monday 12 October 2015

புலி விஜய் -விக்கியுடன்







விக்கியுடன் புலி படம் பார்க்க சாந்தி தியேட்டருக்குப் போயிருந்தேன், விக்கி விஜய் ரசிகன் என்று ஏற்கனவே இந்தப் பகுதியில் பதிவு செய்திருக்கிறேன். ( காண்க இளைய தளபதி விஜய் ரசிகன் )
விக்கிக்கு இது இரண்டாவது தடவை. எனக்கு முதல் முறை. அவன் விஜய் படத்தை குறைந்தது மூன்று முறை பார்ப்பான். அவனுக்காக நான் ஒருமுறை பார்ப்பேன்.
புலி படம்  ஆடியோ ரிலீசுக்கு அழைத்துப் போக விக்கி என்னை நச்சரித்தான். எனக்கு சினிமாக்காரங்க யாரையும் தெரியாது. யார் பாஸ் தருவாங்கன்னு புரிய வைக்க முடியலே. அதுவும் விழா நடப்பது மகாபலிபுரத்தில். ஆட்டோ பஸ்சுக்கும் சாப்பாட்டுக்கும் சேர்த்து 500 ரூபாயாவது செலவு செய்ய வேண்டும். நான் மறுத்து விட்டேன். அவன் முகத்தை தூக்கிக் கொண்டு சரியாகப் பேசவில்லை. விஜயுடன் ஒரு செல்பி எடுப்பது அவன் ஆசை. ஜெயமோகனின் புத்தக வெளியீட்டு விழாவில் கமல்ஹாசனும்இளையராஜாவும் பேசியதை அருகில் இருந்து கவனித்துக் கொண்டே இருந்தான் விக்கி. விழா முடிந்ததும் நான் ஜெயமோகனிடம் அழைத்துச் சென்று கமலுடன் ஒரு செல்பி எடுக்க வைப்பேன் என்ற ஆதங்கம் அவனுக்கு .அதுவும் நிறைவேறவில்லை. கூட்டத்தில் பின்தள்ளப்பட்டோம். கமல் எப்படியோ இறங்கி போய் விட்டார். இளையராஜாவும் இல்லை. கடைசியில் ஜெயமோகனுடன் செல்பி எடுத்து வந்தான். வீட்டுக்கு வந்ததும் அதை டிலெட் செய்யவும் சொல்லி விட்டான்.
சரி விழாவுக்குத் தான் அழைத்துப் போக முடியவி்ல்லை. படத்திற்காவது அழைத்துப் போகலாம் என அவனை இரண்டாம் முறையாக புலி படம் பார்க்க அழைத்துப் போனேன். சாந்தி தியேட்டருக்குப் போனதில் ஒரு காரணம் இருந்தது. விரைவில் அந்த திரையரங்கை இடிக்கப் போகிறார்கள் என்று ஒரு செய்தி. மேலும் எனது பால்ய காலத்துடன் அந்தப் படம் பின்னிப் பிணைந்திருக்கிறது. தங்கப்பதக்கம், மன்னவன் வந்தானடி, ரிஷிமூலம் போன்ற படங்கள் எல்லாம் அப்போது சாந்தி, கிரவுன், புவனேஸ்வரி ஆகிய திரையரங்குகளில் வெளியாகி புவனேசுவரியில் மூன்று நான்கு வாரமும் கிரௌனில் 50 நாட்களும் சாந்தியில் வெள்ளிவிழாவும் கொண்டாடுவது வழக்கம். மன்னவன் வந்தானடி புவனேசுவரியில் 100 நாள் கொண்டாடியது. தங்கப்பதக்கம் வெள்ளி விழா.
இப்போதைய படங்கள் 3 நாள் வசூலை நம்பி ஏராளமான திரையரங்குகளில் வெளியாகின்றன. எந்த தியேட்டரில் எந்தப் படம் எந்தக் காட்சி என்று யாருக்கும் தெரியாது. பேப்பர் பார்த்தால் தெரியும். போஸ்டர்கள் இல்லை.
ஆனால் ஆச்சரியமாக புலி பத்தாவது நாளிலும் ஹவுஸ்புல்லாக இருந்தது. சாந்தி திரையரங்கு மோசமாக இருந்தது. 80 ரூபாய் டிக்கட்டே அந்தக் காலத்தில் நான் பார்த்த 2 ரூபாய் டிக்கட் பெஞ்சு போலத்தான் இருந்தது. உள்ளே ஒருவர் போக வேண்டுமானால் கால்களை முட்டி மிதித்துதான் போகவேண்டும். அழகான பெண்கள் தொடைகள் உரசப் போனாலும் சிலிர்ப்பு உண்டாகும். பாடாவதி தடியன்கள் குடிபோதையில் மிதித்துவிட்டுப் போனார்கள்


படம் காமிக்ஸ் கதைதான் பேசும் பறவை, 180 வயது ஆமை , யவனராணி கோட்டை என குழந்தைகளுக்குப் பிடித்தமாதிரி ஜாலியாகப் போகிறது. அவ்வப்போது ஸ்ருதி ஹாசனும் ஹன்சிகாவும் என்னைப் போன்ற காய்ந்துப் போன ஜென்மங்களுக்காக இடுப்பையும் தொடையையும் காட்டி அரேபியன் பெல்லி டான்ஸ் ஆடிவிட்டுப் போகிறார்கள்.


ஒருவகையில் எனது பால்ய பருவத்துடன் விக்கியின் பால்ய பருவத்தையும் இணைத்து விட்ட திருப்தி எனக்கு சாந்தி திரையரங்கின் பால்ய நினைவுகள் போல அவனுக்கும் இருக்கும் அல்லவா


புலி படம் பத்திய விமர்சனம்இல்லை. படம் போரடிக்கவில்லை. அவ்வளவுதான். ஆனால் எனது அபிமான நாயகியான ஸ்ரீதேவிதான் அநியாயத்திற்காக வீணடிக்கப்பட்டு விட்டார். பிரபுவும் டெல்லி கணேஷ் போல முக்கியத்துவம் இல்லாத பாத்திரத்தில் வந்து போகிறார். விஜய் விஜய் விஜய் தான் வேறு எதுவும் இல்லை படத்தில் . ஸ்ரீதர் பிரசாத் இசையில் ஜிங்கிலா ஜிங்கிலா என்று ஒரு பாட்டை விக்கி முணுமுணுத்தபடி என்னுடன் பைக்கில் வந்தான். எனக்கும் அந்தப் பாட்டு பிடித்தது. பாடினேன்.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...