Thursday 22 October 2015

சந்திப்பு-10 வெங்கட் சுவாமிநாதன்


தமிழ் இலக்கிய உலகின் மாபெரும் விமர்சகர்களில் ஒருவரான வெ.சா.எனப்படும் வெங்கட் சுவாமிநாதன் கடந்த அக்டோபர் 21 2015 அன்று காலமானதாக சற்று தாமதமாகவே எனக்குத் தெரிய வந்தது. தாமதத்திற்கு காரணம் நானும் மினி மரணத்தில் இருந்ததுதான்.கடுமையான காய்ச்சலுடன் சுயநினைவே இன்றி படுத்த படுக்கையாகவே பேப்பரைக் கூட புரட்டாமல் கிடந்தேன். என் நலம் விசாரித்த நண்பர்களின் மிஸ்டு கால்களை தேடிப்பிடித்து ஒவ்வொருவராக போன் செய்து பேசும்போது தொலைக்காட்சியில் பணியாற்றும் ஒரு தோழி உங்க அபிமான எழுத்தாளர் வெ.சா இறந்துட்டாராமே என்று கேட்ட போது ஒரு கணம் உலகம் நின்று விட்டு இயங்கியது.நிஜம்தானா...நம்பவே முடியாமல் ஜெயமோகனின் வலைதளத்தைப் பார்த்த போது அஞ்சலி செய்திகள் இருந்தன.

வெங்கட்  சுவாமி நாதனை நான் முதன் முதலில் சந்தித்தது மயிலாப்பூர் அரங்கு ஒன்றில். அப்போது 80களின் தொடக்கம். நான் எழுதத் தொடங்கிய காலம். சிசு செல்லப்பா நிகழ்ச்சியில் பேச வாய்ப்பு தந்தார்.பேசிய பிறகு வெகுளியாக பாராட்டவும் செய்தார். அதன் பிறகு அதே கூட்டத்தில் வெ.சாவை சந்தித்து அறிமுகமானேன். எனது படைப்புகளை சிற்றிதழ்களில் படித்திருந்தார். கோவை ஞானி, திகசி , திலீப்குமார் ஆகியோருடன் நான் பழகி வந்த காலம் என்பதால் அவர்களும் என்னைப் பற்றி கூறியிருக்கலாம், ஓரிரு வார்த்தைப் பரிமாற்றத்துடன் நீண்ட நாள் நண்பர் போல் பேசத் தொடங்கிவிட்டார். நானும் அவரது நூல்களைப் படித்திருந்தேன். அதைப் பற்றி கூறியதும் அவர் முகம் மலர்ந்தது. விரிவாகவும் ஆழமாகவும் படிக்கிற ஒரு வாசகனை கண்டுபிடித்து விட்ட சந்தோஷம் அவர் முகத்தில்.அதே காலகட்டத்தில் கோவை சென்றிருந்த போது, மும்பையிலிருந்து கோவைக்கு மாற்றலாகி வந்திருந்த நாஞ்சில் நாடனை சந்தித்துப் பேசும் வாய்ப்பு விஜயா பதிப்பகத்தில் உருவானது. அவரது நாவல்களும் சிறுகதைகளும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன. சதுரங்க குதிரை அப்போது வெளியாகியிருந்தது. கோவை வஉசி பூங்காவில் அந்த நூல் பற்றி ஞானி நடத்திய நிகழ் கூட்டத்தில் பேசியிருக்கிறேன். விஜயா பதிப்பத்தில் நாஞ்சில் நாடனுடன் பேசும்போது வெ.சா.நீண்டகாலமாக மௌனமாக இருந்தது தமிழ்இலக்கியத்துக்கு பேரிழப்பு என நாஞ்சில் நாடன் கூறினார். அப்போது வெ.சா மீது படைப்பாளிகளுக்கு உள்ள மரியாதை மிகப்பெரியது என்பதை உணர்ந்தேன்.
  • தொடர்ந்து வெ.சாவை தொலைபேசி வாயிலாகவும் நிகழ்ச்சிகளிலும் சிலமுறை சந்திக்க நேர்ந்த போது பிரியத்துடன் பேசினார். ஒருமுறை ரஷ்ய கலாச்சார மையத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு வீடு திரும்பும் அவஸ்தையில் இருந்தார். செந்தூரம் இங்கே வாங்க....என்னை பஸ் ஸ்டாண்ட் வரை கொண்டு போய் விடுவீங்களா என உரிமையுடன் கேட்டார். அவருடன் கைப்பிடித்து டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியைக் கடந்து அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே இருந்த ஒரு சிறிய ஒற்றையடிப் பாதை வழியாக டிஎம்எஸ் பஸ் ஸடாண்ட் வரை அழைத்துப் போனார். அப்படியொரு பாதையை நான் அறிந்திருக்கவில்லை. நானாக இருந்தால் ஜெமினி பாலம் கீழ் சென்று காமராஜர் அரங்கு வழியாகவே போயிருப்பேன். இப்போது அந்தப் பாதை செம்மொழிப் பூங்காவுடன் சங்கமமாகி விட்டது போல் தோன்றுகிறது.
    டிஎம்.எஸ் பஸ் ஸ்டாண்ட் வரை ஒரு கையில் என்னைப் பிடித்துக் கொண்டும் ஒரு கையால் தடியை ஊன்றியபடியும் முதுமையிலும் துடிப்போடு தனது வீடு நோக்கி செல்லும் வெ.சாவைப் பார்த்து எனக்கொரு காரை கடவுள் தரவில்லையே என மனசுக்குள் அழுதேன். ஆட்டோவுக்காவது அவர் செலவழிக்க வசதி இருந்திருக்கலாம். அவருக்கும்இல்லை எனக்கும் இல்லை.
    ஆனால் பல தலைமுறைகளாக தமிழ் எழுத்துக்களுக்காக தம்மை அர்ப்பணித்தவர்கள் அப்படித்தான் இருந்தார்கள், இருக்கிறார்கள்
    2008ம் ஆண்டு கலைஞர் தொலைக்காட்சிக்கு வெ.சா.வை பேட்டி காண அவருடன் தொடர்பு கொண்ட போது, ஆயிரம் ரூபாய் பணம் தருவீயா என்றார். அய்யா எங்க தொலைக்காட்சியில் பணம் தரமாட்டாங்கய்யா என்றேன். அப்ப பேட்டி கிடையாது போ.....சி.எம் ( கலைஞர்) கோவிச்சுக்குவாரா பரவாயில்லை என்று சிரி்த்தபடி கூறினார்.
    என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பான இன்னும் மிச்சமிருப்பவைக்கு அவர் புதிய பார்வை இதழில் விமர்சனம் எழுதியிருந்தார். எவ்வளவு பெரிய ஜாம்பவான் எனக்கு விமர்சனம் எழுதியிருக்கிறார் என்று மகிழ்ச்சியில் தள்ளாடினேன்.
    ஜெயமோகன் போன்ற சில நண்பர்கள் வெ.சாவை சந்தித்த போதும் என்னைப் பற்றி பிரியத்துடன் விசாரித்ததாக கூறுவார்கள் .அவனை நான் அவன்இவன்னுதான் கூப்பிடுவேன், கோவிச்சுக்குவானா என்ன என்று அவர் கூறினாராம். என் பெயரை வெசா போன்றவர்கள் உச்சரிப்பதே எனக்கு பாக்கியம்தானே.
    வெ.சாவின்இலக்கியப் பணியைப் பற்றி பேசாமல் இப்படி கடவுள் துதி மாதிரி பாடுவதாக யாரும் கருத வேண்டாம். அறிந்தேதான் பேசுகிறேன். என்னை யாரும் மன்னிக்கத் தேவையில்லை. தமிழ் இலக்கிய விமர்சனத்தில் சிசுசெல்லப்பா, கநாசு, பிரமிள், வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி போன்ற இலக்கிய மேதைகள் தங்கள் படைப்பாளுமையை பின்னுக்குத் தள்ளியும் செயல்பட்டு வந்திருக்கிறார்கள். தற்போது சிலர் செய்யும் இலக்கிய விமர்சனங்கள் போன்று அவை குதிரை லாடம் கட்டியது போன்ற தடாலடி விமர்சனங்கள் அல்ல..ஆழப்படித்து தீர விவாதித்து எழுப்பிய இலக்கிய அஸ்திவாரங்கள், விமர்சனம் மூலம் நல்ல இலக்கியத்தைக் கட்டிக் காத்த தூண்கள் இவர்கள்.
    எம்.வி.வெங்கட்ராம் மறைந்த போது தினமணியில் மறுநாளே ஜெயமோகன் இரங்கல் கட்டுரை எழுதி விட்டார். அச்சும் ஆகி விட்டது. அப்போது ஜெயகாந்தனின் காரில் அவருடன் மைலாப்பூர் லஸ் கார்னர் அருகே நான் அமர்ந்திருந்தேன். அப்போது ஜேகே சொன்னார் மனிதர் செத்து அவர் சாவுக்கு பால்கூட ஊத்தறதுக்கும் முன்னே இந்த ஆளுக்கு ( ஜே கே பயன்படுத்திய சொல்லை பயன்படுத்தவில்லை) என்ன அவசரம் ? அதுவும் அவர் இரண்டு கதைகள்தான் நல்லா எழுதியிருக்காருன்னு....அதைச் சொல்ல நீ யாரு...உனக்கென்ன தகுதி?
  • இப்போதைய இலக்கிய விமர்சனம் இந்த லட்சணத்தில்தான் இருக்கிறது. நான் சிரித்துக் கொண்டே ஜேகேவிடம் சொன்னேன் . அய்யா நாளை உங்களுக்கும் இப்படித்தான் நடக்கும். 
  • ஜேகேவும் ரசித்தார். அதே போல் சமர்த்தாக நம்ம ஜெயமோவும் ஜே,கே,இறந்ததும் சுடச்சுட இரங்கல் கட்டுரை எழுதி பிரசுரம் செய்துவிட்டார். ஜே,கே, சொர்க்கத்தில் கூட வாய்விட்டு  சிரித்திருப்பார். அல்லது கெட்ட வார்த்தைகளால் ஜெமோவை திட்டித் தீர்த்திருப்பார்.

  • வெ.சா.வை மறுவாசிப்பு செய்து விரிவாக எழுதுவது என் கடமை. செய்வேன்.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...