Saturday 3 October 2015

உலக சினிமா - நயாகரா- காமத்தின் அலை புரளும் வீழ்ச்சி




அழகான பெண் கூரிய கத்தியைப் போன்றவள். அவளுடைய அழகு ஆபத்தானது. அவளுக்கும் அவளை நேசிப்பவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது. உலக அழகிகளின் காதலர்கள் அல்லது கணவர்களின் நிலைமை பரிதாபகரமானது. எப்போது வேண்டுமானாலும் அவள் அவனை விட்டுச் செல்லக் கூடும். அவனை விட வசதியான அல்லது அழகான இன்னொருவனுடன் படுக்கையைப் பகிர்ந்துக் கொள்ளக் கூடும். அவனுடன் சேர்ந்து கணவரை கொல்லவும் திட்டமிடக்கூடும். பரிசுத்தமான அழகுடன் கம்பன் படைத்த சீதையைப் போன்ற பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அழகு எந்த நேரமும் அவர்களது புனிதத்தை கலைத்து விடக்கூடியது.

நிஜவாழ்வில் அழகான பெண்ணை மணந்தவனுக்கு காண்பவன் மீது எல்லாம் சந்தேகம் வருகிறது. என் மனைவியை ஏன் வெறித்துப் பார்க்கிறாய் என முறைப்பதை பார்த்திருக்கிறோம். தன்னுடைமையாக்கிக் கொண்ட பேரழகியை இன்னொருவன் பார்க்கக் கூடாது என்பது தான் அவன் எண்ணம். முஸ்லீம் பெண்கள் இன்னும் ஒரு படி மேல். முழுவதும் புர்காவால் உடலை மட்டுமின்றி கூந்தலையும் மூடிக் கொண்டார்கள். அழகு ஆண்களைப் பித்தாக்கும். தவறிழைக்கத் தூண்டும் என்பதே இதன் அர்த்தம்
கண்களை மறைத்து விட்டால் எண்ணம் மறைந்து விடுமா என்பது தனிப் பிரச்சினை
அழகின் வஞ்சகங்கள் குறித்து ஆயிரம் பேர் எழுதி விட்டார்கள். ஆயிரக்கணக்கான திரைப்படங்களும் வந்து விட்டன. அதில் ஒரு அற்புதமான திரில்லர் படம் தான் நயாகரா.
1953ம் ஆண்டு டெக்னி கலரில் இப்படம் வெளியானது. டெக்னி கலர் என்பது சினிமாஸ்கோப் வருவதற்கு முன்பாக வண்ணப்படங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம். ஈஸ்ட்மேன் கலரை விட கூடுதலாக பளிச்சென காட்சியளிக்கும் .இந்தியில் ஆன் என்ற படமும் தமிழில் வீரபாண்டிய கட்டபொம்மனும் டெக்னி கலரில் எடுக்கப்பட்டவை.

நயாகரா படத்தில் இரண்டு கதாநாயகிகள் .ஒருவர் உலகப் புகழ் பெற்றவரான பேரழகி மர்லின் மன்றோ. இன்னொருவர் மன்றோவைப் போல் அழகாக காட்சியளிக்க முயன்ற ஜீன் பீட்டர்ஸ்.இப்படத்தில் இரண்டு ஜோடிகள் கதாநாயகனாக நடித்தவர் மிகச்சிறந்த நடிகரான ஜோசப் காட்டன், ரோஸ் என்ற அவருடைய மனைவியாக நடித்தார் மர்லின் மன்றோ
மற்றொரு ஜோடி ஜீன் பீட்டர்ஸ் மற்றும் அவர் கணவராக நடித்த ஷோ வால்டர். மர்லினின் கள்ளக்காதலன் பாட்ரிக்காக நடித்தவர் ரிச்சர்ட் ஆலன்.

இப்படத்தின் இயக்குனர் ஹென்றி ஹாத்தவே. திரைக்கதை எழுதியவர்கள் சார்லஸ் பிரெக்கெட், ரிச்சர் பிரீன் மற்றும் வால்டர் ரெய்ஸ்ச் ஆகியோர். இசையமைத்தவர் சோல் காப்ளன். ஒளிப்பதிவாளர் ஜோ மெக் டோனால்ட்
மர்லின் மன்றோ முதல் சிலுக்கு ஸ்மிதா வரை பேரழகிகளின் வாழ்க்கை தடுமாற்றம் மிக்கது. அந்தரங்கமும் மர்மமும் நிறைந்தது. அவர்களின் அழகை ஆயிரமாயிரம் கண்கள் பருகி பசியைத் தூண்டிக் கொண்டிருப்பினும் ஓரிரு ஜோடிக் கண்கள் அவர்களை கொல்லவும் தற்கொலைக்குத் தூண்டவும் திட்டமிட்டு வந்தன.

மர்லின் மன்றோவின் மர்ம மரணத்தில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி வரை பலரின் பெயர் நாறியது.தூக்கமாத்திரை விழுங்கி அவரது வாழ்க்கை முடிந்து விட்டது. பல்லாயிரக்கணக்கானோரை தூங்க விடாமல் செய்த அந்தப் பேரழகு யாருக்கும் சொந்தமாகாமல் சிதறிப்போனது.

இப்படத்திலும் மர்லின் மன்றோ கொல்லப்படுகிறார். ஆனால் அதற்கு முன்னும் பின்னும் பின்னப்பட்ட திரைக்கதை நம்மை வசியம் செய்கிறது. ஒரு கிரைம் திரில்லருக்கான அடித்தளமாக காமமும் காமத்தின் கரை புரண்டோடும் உணர்ச்சி வெள்ளமும் சித்தரிக்கப்படுகிறது.

கனடா நாட்டின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான நயாகராவில் புரண்டோடி பாயும் பெருக்கை காட்டியபடி ஓடும் நீரில் மின்னும் வானவில்லின் ஏழு நிறங்களுடன் படத்தின் டைட்டில் கார்டுகள் ஓடும் போதே நாம் நிமிர்ந்து உட்கார்ந்து விடுகிறோம்.

தாமதமாகி விட்ட தேனிலவுக்காக நயாகரா வரும் ஜோடியான பாலியும் அவள் கணவர் ரேயும் அருவியை பார்க்கும் வகையில் ஓட்டல் அறையை முன்பதிவு செய்திருந்தார்கள். ஆனால் அன்று காலை அறையை காலி செய்ய வேண்டிய ரோசும் (மர்லின் மன்றோ) அவள் கணவரும் அறையை காலி செய்யவே இல்லை. தன் கணவர் மன நலம் சரியில்லாதவர் சிகிச்சை எடுத்து வருகிறார். அதிகாலை 3 அல்லது 4 மணிக்கு அருவிக்குப் போய் அலைந்து திரிந்து இப்போதுதான் வந்து படுத்து தூங்குகிறார் என்பார் மர்லின். முன்னதாக அவள் கணவர் அதிகாலை 5 மணி்க்கு அருவி அருகே நடந்து வந்து அறையில் நிர்வாணக் கோலத்தில் தூங்கும் தன் அழகான மனைவியைப் பார்த்து பெருமூச்சு விடுவார்.

இதனால் வேறு அறைக்கு கட்லர் தம்பதிகள் மாற்றப்படுகிறார்கள். அங்கேயிருந்தும் அருவி தெரியுமா எனக் கேட்கிறாள் பாலி, தெரியும் ஆனால் சூரிய வெளிச்சம் அறைக்குள் அதிகமாக இருக்கும் என்பார் ஓட்டல் சிப்பந்தி.

மர்லின் ஷாப்பிங் செல்வதாக புறப்பட தன் கணவரின் பார்வையை அவளிடமிருந்து திருப்பி அழைத்துச் செல்வார் பாலியாக நடித்த ஜீன்.

இந்த தம்பதிகள் அருவி அருகே படமெடுக்க செல்வார்கள். மனைவியை பின்னகர்ந்து போகச் சொல்லி படமெடுப்பார் கணவர் . பின்னகரும் போது தெரியும் மர்லின் இன்னொருவரை முத்தமிட்டுக் கொண்டிருப்பது. ஷாப்பிங் போன மர்லின் நிறைய பொருட்களுடன் வருவார் என நக்கலடிப்பார் ஜீன்.

ஓட்டலில் நடைபெறும் விருந்தில் தம்பதியின் அருகே மர்லின் வந்து அமர்வார். அவர் மார்பு பிளவுகள் தெரியும் லோகட் ஆடை அணிந்திருப்பார். முழங்கால்களும் தெரியும் வகையில் தொடை விளிம்பில் நிற்கும் அந்த ரோஸ் மிடியில் ஒரு தேவதை போல் வருவார் மர்லின் மன்றோ, வந்து அமருவதற்கு முன்பாக அங்கு ஓடிக் கொண்டிருக்கும் ரிகார்ட் பிளேயரில் கிஸ் ஆப் லைப் என்ற அழகான காம இச்சையைத் தூண்டிவிடும் பாடலை அவர் விரும்பிக் கேட்பார். அந்தப்பாடலின் வரிகளை முணுமுணுத்தபடி ஹம்மிங் செய்வார். இந்தப்பாட்டு உங்களுக்கு மிகவும் பிடிக்குமா என ஜீன் கேட்க பாட்டு என்றால் இதுதான் என்பார் மர்லின். இதை பார்க்கும் மர்லினின் கணவர் ஜோசப்புக்கு ஆத்திரம் வரும். தன் மனைவியின் ரகசியங்களில் ஒன்றாக விளங்கும் இந்தப்பாடலை அவர் வெறுக்கிறார். அவர் வேகமாக வந்து பாடிக்கொண்டிருக்கும் ரிக்கார்டை எடுத்து துண்டு துண்டாக உடைத்து எறிவார். அதை மர்லின் அதிர்ச்சியடையாமல் வழக்கமானது என்பது போல் ஒரு பார்வையை வீசுவார்
ரிகார்ட்டை உடைக்கும் போது ஜோசப்பின் கையை அது கீறி ரத்தம் வரும். முதலுதவி செய்ய ஜீன் ஜோசப்பின் அறைக்கு வருவார். இருவருக்கும் இடையே நட்பான ஒரு உரையாடல் தொடங்கும். தன் மீது அக்கறை கொண்ட ஒரு பெண்ணை மர்லினின் கணவர் நட்புடன் அணுகுவார். அப்போது அவர் நயாகராவை பல வண்ணங்களில் இரவு எட்டு முப்பது மணிக்கு வண்ணவிளக்குகள் ஒளிர ஜீனுக்கு காட்டுவார். அப்போது நடைபெறும் உரையாடலில் அவர் கூறுவார்

நயாகரா அழகானது மிகவும் அழகானதுதான். அருவிக்கு மேல் உள்ள நதியின் ஓட்டத்தைப் பார்த்திருக்கிறாயா....அது அமைதியானது. ஆரவாரம் செய்யாதது. ஒரு மரத்துண்டை தூக்கிப் போட்டால் அதுபாட்டுக்கு மிதந்து செல்லும். அலைகள் அதை தாலாட்டிக் கொண்டே அழைத்துச் செல்லும். ஆனால் வழியில் ஒரு பாறை மோதிவிட்டால் அது அலையின் ஓட்டத்தை விட்டு ஆர்ப்பரிக்கும் அலைகளின் மேற்பரப்பிலிருந்து உள்பரப்புக்குள் மூழ்கி, உள்ளே தடம் புரண்டு ஓடும் நீரின் ஓட்டத்தில் சிக்கிக் கொள்ளும் .நீ்ர் விழக்கூடிய பகுதியை நோக்கி போகும். அப்போது கடவுளே நினைத்தால் கூட அதன் வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியாது.

நயாகராவின் நீரோட்டமே நமக்கு மர்லினின் கதையை சொல்லி விடுகிறது. மர்லின் தனது காதலன் பாட்ரிக்குக்கு போன் செய்து அழைக்கிறாள். நாளை கதையை முடித்து விட வேண்டும்.இன்று ரிக்கார்டை உடைத்து எல்லோர் முன்னாலும் அசிங்கப்படுத்தி விட்டார் எனக் கூறுவார். நாளை அவரை ரெயின்போ குகைக்கு அழைத்து வா. அங்கே நான் கவனித்துக் கொள்கிறேன் என்பான் பாட்ரிக். சொல்லி போனை வைத்து அவன் படுக்கைக்கு போகும் போது கேமரா அவன் அணிந்துள்ள வெள்ளயும் கருப்பும் கலந்த ஷூக்களைக் காட்டுகிறது.

ரெயின்போ கோபுரம் என்றழைக்கப்படும் குகையும் அதன் மரப்படிகளுடனான கோபுரமும் 165 அடி உயரமானது.அதில் கரோலின் எனப்படும் இசைக்கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும்.அதற்கான கீ போர்டும் இருக்கும். விரும்பிய பாடலை அதில் ஒலிக்கச் செய்தால் நகரம் முழுவதும் அந்த இன்னிசை ஒலிக்கும்.55 மணிகள் மர பேட்டன்களுடன் ஒலிக்கும் வகையில் கீ போர்டு அமைக்கப்பட்டது.30 கால் பெடல்களும் உண்டு. மொத்தம் 43 டன் எடை கொண்ட இவை எழுப்பும் இசை நாதம் தேனானது.

மறுநாள் காதலனை சந்திக்கும் போதும் அவள் அந்த பாடலின் ஹம்மிங் மூலம் அவன் இருப்பதை அறிகிறாள். அந்த இசை அவளை மயக்குகிறது. மர்லினுக்கு அவன் ஒரு துண்டுச்சீட்டை தருகிறான். அதில் கதையை முடித்ததும் நமக்குப் பிடித்தமான கிஸ் ஆப் லவ் பாடலை ரெயின்போ குகைக்குள் ஒலிக்கும் மணிகளில் ஒலிக்க செய்கிறேன் . புரிந்துக் கொள் என்று அதில் எழுதியிருப்பான்.

ஆனால் கதை மாறுவது இங்கேதான். காதலனை கணவர் கொலை செய்து விடுகிறார். மனைவியை ஏமாற்ற அந்த மணியில் அவளுக்குப் பிடித்த பாட்டையும் ஒலிக்க செய்கிறார். இறந்தது தான்தான் என நம்ப வைக்க காதலனின் ஷீவை இவர் அணிந்து தனது ஷீவை அவனுக்கு அணிவிக்கிறார்.

மணியில் ஒலிக்கும் தனக்கு பிடித்த பாட்டை முணுமுணுக்கும் மர்லின் காரியம் காதலனால் கச்சிதமாக முடித்து விட்டதாக புன்னகை புரிவார். ஆனால் கணவரின் உடலை அடையாளம் காண அழைத்துச் செல்லப்படும் அவர் இறந்தது கணவரல்ல காதலன்தான் என அறிந்து அதிர்ச்சியில் மயங்கி விழுவார். அவர் நினைவுகளில் அந்த மணிகளும் அந்தப் பாடலும் ஒலித்துக் கொண்டே அவரை வாட்டி வதைக்கும்.

இதனிடையே ஜீன் மர்லினின் கணவரை பார்த்து ஓடுவார். அவரை மடக்கிப் பிடித்து தான் இறந்தவனாக இருக்க விரும்புவதாக கூறுவார் ஜோசப். போலீசில் காட்டிக் கொடுக்காதே என கெஞ்சுவார். ஆனால் ஜீன் போலீசுக்குத் தகவல் சொல்லி விடுகிறாள்.

சுயநினைவு திரும்பும் மர்லின் மன்றோ தனது கணவர் தன்னைப் பின்தொடர்வதை அறிந்து தப்பி ஓடும் போது மீண்டும் ரெயின்போ குகைக்குள் மாடிப் படிகளில் ஏறிச் செல்வார் .ஜோசப்பும் அவரைக் கொல்லும் வெறியுடன் பின்தொடர்வார். ரெயின்போவின் காவலாளி கதவைப் பூட்டிச் சென்று விடுவார். தனியாக சிக்கிக்கொள்ளும் மர்லினை அவள் கணவர் கழுத்தை நெறித்துக் கொல்கிறார்.அப்போது அந்த மணிகளில் எந்தப் பாடலும் ஒலிக்காமல் அவை மௌனமாக இருக்கும்.
மர்லினின் உடல் சாய வெளியே செல்ல முயற்சிக்கும் அவர் கதவு பூட்டப்பட்டிருப்பதால் மீண்டும் தன் அழகான மனைவியின் உடலருகே வந்து தான் அவளை அளவு கடந்து நேசித்ததை வெளிப்படுத்துவார். அப்போது அவள் லிப்ஸ்டிக் ஒன்று அவள் அழகின் விஷத்தன்மையை விவரிக்கும் வகையில் அவர் கையில் கிடைக்கும்.

காலையில் கதவு திறந்ததும் தப்பிச் செல்லும் ஜோசப் ஒரு படகைக் களவாடி நயாகராவில் பயணிக்க திட்டமிடும் போது தற்செயலாக அந்தப் படகில் ஜீன் வந்து அமர்கிறாள். தற்கொலை உணர்வுடன் படகை உடைத்து வெள்ளத்தில் அதை மூழ்கடிக்கத் திட்டமிடும் ஜோசப் கடைசி கட்டத்தில் ஜீனை ஒரு பாறையில் தள்ளிவிட்டு விடுவார். பாறையில் தொற்றிக் கொள்ளும் ஜீன் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட கடவுளால் கூட தடுத்து நிறுத்த முடியாத வெள்ளப்பெருக்கில் ஜோசப்பின் படகு தடம் புரண்டு அருவியில் விழுந்து காணாமல் போகும்.

நயாகராவும் மர்லின் மன்றோவும் இப்படத்தின் இருபெரும் அழகுச்சித்திரங்களாக நம் கண் முன்னே தவழுகின்றனர்.அழகும் ஆபத்தும் ஒருசேர இருக்கும் அஃறிணையாக நயாகரா நம் முன்னே கொட்டிக் கொண்டே இருக்கிறது. படம் முழுக்க பாத்திரங்களுடன் இதனைப் பொருத்தி பொருத்தி அவர்களின் உணர்ச்சி வெள்ளத்திற்கேற்ப இது தணிந்தும் ஆர்ப்பரித்தும் நமக்கு ஒரு குறியீடாக காட்சியளிக்கிறது.

இப்படத்தில் ஜீனுடன் மர்லினின் கணவர் பேசும் காட்சியில் தன் மனைவி ஆடை அணியும் விதத்தை அவர் குறை கூறுவார். அழகை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறாள் என்பார். அவர் அழகானவர்தானே வெளிப்படுத்தட்டுமே என்பார் ஜீன். முழங்கால் தெரியும் அந்த ஆடையை நீ அணிவாயா என்று கேட்பார் ஜோசப். நான் அந்தளவுக்கு அழகியும் இல்லை நாகரீகமானவளும் இல்லை என்று பதிலளிப்பார் ஜீன். அவள் ஒரு தறுதலை என ஆத்திரத்துடன் ஜோசப் கூற அதை ரசிக்காமல் ஜீன் அவனுடைய ஆணாதிக்க மனோபாவத்தை கோபத்துடன் காண்பாள்.

இந்த ஒரு காட்சிதான் படத்தை சாதாரண கிரைம் கதையிலிருந்து இலக்கியத்தரமான படமாக மாற்றுகிறது. ஹிட்ச்காக்கின் திகில் படங்களும் அகிரா குருசோவாவின் படங்களும் எப்படி சாதாரண மாத நாவல் தரத்திலான கிரைம் கதைகளாக கூறப்பட முடியாதவையோ எப்படி தாஸ்தேயவஸ்கியின் குற்றமும் தண்டனையும் போன்ற கதைகள் குற்றத்தின் தன்மையை அலசுகின்றனவோ அதைப் போல் இந்தப் படமும் கொலைக் குற்றம் புரியும் ஒரு அழகியின் கணவரது நிச்சயமற்ற தன்மை கொண்ட மனநிலையை பிரதிபலிக்கின்றன. ஒவ்வொரு குற்றத்தின் பின்னணியிலும் ஒரு புறக்கணிப்பு ஒரு காயம் ஒரு துன்பம் ஒரு வலி மறைந்திருக்கிறது. அழகிய பெண்களின் கணவன்மார்களுக்கு துரோகத்தின் வலியாகவும் இது இருக்கக் கூடும்.
குமுதம் தீராநதி அக்டோபர் 2015 ல் அச்சான கட்டுரை இது.


No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...