Saturday 30 May 2015

பயணம் 3 மும்பை



     





மும்பைக்கு முதலில் போனது 27 அல்லது 28 வது வயதில் .தென் ஆப்ரிக்காவில் ராஜூ என்று எம்ஜிஆர் உலகம் சுற்றும் வாலிபனுக்கு அடுத்து எடுக்க நினைத்த படத்திற்கு தலைப்பு வைத்திருந்தார். அந்த தலைப்பு என் தம்பி ராஜூ தென் ஆப்ரிக்கா சென்றதுடன் சரியாகிவிட்டது. அவனை மும்பை விமான நிலையத்தில் வழியனுப்பவே நானும் அம்மாவும் சென்றிருந்தோம். உறவினர் வீட்டில் தங்கினோம். அந்தப் பகுதிக்கு குர்லா என பெயர்.
குர்லாவில் நிறைய சினிமா தியேட்டர்கள் இருந்தன. நான் சிறுவயது முதலே சினிமா பைத்தியம்தான். அப்போது குர்லா ரயில் நிலையத்தில் ஒட்டப்பட்டிருந்த ஒரு சுவரொட்டி கவனத்தை ஈர்த்தது. லட்சுமிகாந்த் பியாரேலால் கச்சேரி விளம்பரம் அது. கிஷோர் குமார், மகேந்திர கபூர், லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே, முகமது அசீஸ், ஷபீர் குமார், அனுராதா போட்வால் என பிரபல பாடகர்கள் நடிகர்-நடிகைகள் பங்கேற்பதாக விளம்பரம் .குறைந்தபட்ச டிக்கட் ரூ 100 தான்.(( அப்போது என் அபிமான பாடகர் முகமது ரபி மறைந்துவிட்டார் ))
இரவு 10 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும். வழிகேட்டு குர்லாவிலிருந்து சர்ச் கேட் ரயில் நிலையம் சென்று அங்குள்ள பிரசித்தி பெற்ற அரங்கில் போய் இசை நிகழ்ச்சியை ரசித்தேன். அப்போது பிரபலமாக இருந்த நடிகைகள் டிம்பிள் கபாடியா  உள்ளிட்டோர் கலந்துக் கொண்ட நிகழ்ச்சி அது.
இரவு 12.30 மணி்க்கு நிகழ்ச்சி முடிந்தது. மனம் மணக்கும் இசையுடன் ரயிலேறி குர்லா வந்து இறங்கும் வரை கவலையே இல்லை. ஆனால் குர்லா ரயில் நிலையத்திலிருந்து வீடு வரை செல்லும் போது இருட்டில் வழியும் புரியவில்லை.வழி கேட்கவும் ஆளில்லை. கால் போன பாதைகளில் நடந்த போது நாய்கள் குரைத்தன. ஒரு கோவில் அருகே பெரிய ஆலமரத்தின் அடியில் பத்து இருபது ரவுடிகள் பயங்கர ஆயுதங்களுடன் சீட்டாடிக் கொண்டிருந்தனர். அவ்வளவுதான் குலை நடுங்கிவிட்டேன் ஒருவன் அதட்டி வா என இந்தியில் அழைத்தான். நல்லவேளை இந்தி தெரியும் என்பதால் சரளமாக பேசினேன். புது ஆள் என்றால் மிரட்டுவார்கள் என மும்பைக்காரன் போல சரளமாக இந்தியில் பேசினேன். சினிமா பார்த்துவிட்டு வருவதாக கூறினேன் .இரவில் தனியாக இப்படி வராதே எனக்கூறி அனுப்பிவிட்டனர்.

மீண்டும் பாதை தெரியாமல் தடுமாறி ஒருவழியாக ஒரு குறுக்குப் பாதையில் புகுந்து நான் செல்ல வேண்டிய இடத்தை கண்டுபிடித்துவிட்டேன். அது மும்பையில் என் முதல் இரவு, 18 நாட்கள் அங்கு தங்கியிருந்ததில் அனைத்து பாதைகளும் அந்தப் பகுதியில் அத்துப்படியாகிவிட்டன. அருகிலேயே சாந்தா குரூஸ் விமான நிலையம் இருந்தது. சியான், தாதர், அந்தேரி பகுதிகளும் பரிச்சயமாகிவிட்டன.
கார் ஏற்பாடு செய்து மும்பையின் சித்தி விநாயகர் ஆலயம், மெரீன் டிரைவ்ஸ், கேட்வே ஆப் இந்தியா, தாஜ் ஓட்டல், மகாலட்சுமி கோவில் , பாலி ஹில்ஸ், பான்த்ரா, லிங்கிங் ரோடு , சவுபாட்டி கடற்கரை என அனைத்து இடங்களுக்கும் என்னையும் அம்மாவையும் உறவினர்கள் சுற்றிக்காண்பி்த்து விட்டனர். மீனாட்சி சேஷாத்திரியின் தீவிர ரசிகனாக இருந்த நான் அவர் நடித்த இனாம் தஸ் ஹசார் படத்தை வீட்டுக்கு அருகே இருந்த ஒரு தியேட்டரில் பார்த்து ரசித்தேன்.டிக்கட் அப்போது 20 ரூபாய்
தொடர்ந்து மும்பை ராயல் தியேட்டரில் மேரா சாயா என்ற பழைய படத்தை பார்த்தேன். சுனில் தத், சாதனா நடித்தது.இசை மதன் மோகன்
1 தூ ஜஹான் ஜஹான் சலேகா மேரா சாயா சாத் ஹோகா
2 நைனோ மே பத்ரா சாயே
போன்ற இனிமையான லதா மங்கேஷ்கரின் பாடல்கள் இன்றும் நினைவில்  இருக்கின்றன.

2
மும்பைக்கு இரண்டாவது முறை போனது எனது நிறுவனத்தின் உரிமையாளருடன் சுடிதார் கொள்முதல் செய்ய....அதுவும் 1993ம் ஆண்டு.அன்று ஆகஸ்ட் 15 சுதந்திர தினம்.மும்பையில் இறங்கிய போது தாதர் ரயில் நிலையத்தின் வெளியே வெள்ளக்காடு சூழ்ந்திருந்தது. அடை மழை. முழங்கால் வெள்ளத்தில் தலையில் சூட்கேசை வைத்து ஹிந்துமாதா திரையரங்கம் வரை நடந்து சென்றேன். முதலாளி டாக்சி பிடித்துப் போய்விட்டார். நான் தங்குவதற்கு ஹிந்துமாதா திரையரங்கு அருகே உள்ள சிந்திக்களின் தர்மசாலாவில் சிறிய லாக்கர் வசதி இருந்தது. ஹாலில் படுக்கை. ஆனால் அங்கே போவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. மழை, வெள்ளம், பசி என கிட்டதட்ட மூன்று மணியளவில் சாப்பிட்டு ஒரு குட்டித்தூக்கம் போட்டால் இரவாகி விட்டது. மாலையில் ஹிந்துமாதாவில் ஒருபடம் பார்த்தேன். படத்தின் பெயர் நினைவில்லை. அனேகமாக அது ஒரு பி கிரேட் இந்திப்படம். நிறைய சண்டைகள்,கற்பழிப்புகள்
அடுத்த சில நாட்களிலேயே மும்பையில் மழைக்காலம் என்றால் எப்படி என்று தெரிந்துவிட்டது. பின்னர் ஒரு முறை அமிதாப்பச்சன் மவுசமி சட்டர்ஜி நடித்த மன்ஜில் என்ற படத்தின் பாடல் காட்சியில் மும்பை மழையை படமாக்கியதைக் கண்டு எனது மழை அனுபவங்களை நினைத்துக் கொள்கிறேன்.
ரிம் ஜிம் கிரே சாவன்
சுலக் சுலக் ஜாயே மன்
என்று கிஷோர் குமார் பாடிய குல்சாரின் பாடல்.
இசை ஆர்.டி.பர்மன்
கிஷோர் குமார் ஒரு நிகழ்ச்சியில் மழையை்ப் பற்றி அறைக்குள் பாடுவதாக அமைந்த இதே பாடல் லதா மங்கேஷ்கர் குரலில் மீண்டும் ஒருமுறை மும்பை மழையில் படமாக்கப்பட்டது.
இப்பாடல் எனக்கு ஏன் மிகவும் பிடித்திருக்கிறது எனப்புரியவில்லை. அமிதாப்பின் கவித்துவமான நடிப்பா,மவுசமி சட்டர்ஜியின் முந்தானை காற்றில் பறக்க ஈர ரவிக்கையுடன் தெரியும் அவர் மார்பழகா, இதமான இசையா. மழையில் நனைய வைத்த ஒளிப்பதிவா அல்லது இவை எல்லாமுமா எனத் தெரியவில்லை. கிஷோர் குமார், லதா மங்கேஷ்கர் ஆகியோரின் குரலைப் பற்றி தனியாக சொல்லத்தேவையில்லை அப்பாடலுக்கு அவர் களின் தனித்தனித் குரல்-தனித்தனி பாவனைகள், உச்சரிப்புகளுடன் படமானது ஒரு வரப்பிரசாதம்.

பின்னர் நானே சொந்தமாக தொழில் தொடங்கி நண்பர்கள் தேவராஜன், சூர்யராஜனுடன் மும்பை போயிருக்கிறேன். பலமுறை மும்பை பயணங்கள். மாடி பஸ்ஸில் ஏறும் போது எனது பர்சை பிக்பாக்கெட் அடித்தவன் பர்சை கீழே தவறவிட்டான், அடுத்த பயணி சுட்டிக்காட்ட நான் பர்சை எடுத்து நிமிர்வதற்குள் அவன் தப்பி ஓடிவிட்டான்.
மற்றொரு முறை உல்லாஸ் நகரில் உள்ள 5ம் எண் சந்தையில் பெப்பர் போட்ட அப்பளம் வாங்க பிரபலமான கடை எது எனக்கேட்ட போது ஒருவர் கூப்சந்த் பசாரி கடைக்குப் போகச் சொன்னார்.வழி கேட்ட போது முன்னால் போய்க் கொண்டிருந்த ஒரு பாட்டியைக் காட்டி அவரைப் பின்தொடர்ந்து போகச் சொன்னார். அந்தப் பாட்டி சந்து பொந்து இடுக்குகளில் எல்லாம் புகுந்து மற்றொரு பிரதான சாலையை அடைந்த போது அந்தக் கடை அங்கு இருந்தது.

மற்றொரு முறை மும்பையின் பிரசித்தி பெற்ற சிவப்பு விளக்கு பகுதியான காமாதிபுராவுக்குள் போனேன். எந்த கெட்ட எண்ணமும் இல்லை பணமும் இல்லை. சும்மா பார்க்கத்தான். ஏராளமான அலிகள் மாமா வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். 100 ரூபாய்க்கு கூட பெண்கள் கிடைத்தனர். வீட்டு வாசலில் தலை நிறைய பூவும் உதட்டு நிறைய லிப்ஸ்டிக்கும் தொப்புள் தெரிய சேலையும் அணிந்து பலர் நின்றிருந்தனர் .சிலர் வெறும் உள்பாடி பாவாடையுடன் காட்சியளித்தனர். வீட்டினுள் சிறிய பாய் விரிக்கப்பட்டிருந்தது. குழந்தை அழும் குரல் கேட்டது. திண்ணையில் வயதான பெரியவர் ஒருவர் இருமிக் கொண்டிருந்தார். என்னை அழைத்த ஒரு இளம் பெண்ணின் முகத்தில் சோகம் பவுடரை விட அதிகமாக அப்பியிருந்தது.
ஜெயகாந்தன் எழுதிய இதயராணிகளும் இஸ்பேடு ராஜாக்களும் கதைதான் ஞாபகம் வந்தது. இதில் டால்ஸ்டாய் எழுதிய ஒரு வாசகத்தை ஜே.கே.மேற்கோள் காட்டியிருப்பார்
விபச்சார விடுதிகளுக்கு செல்லும் போது உங்கள் காதலிகளைத் தேடாதீர்கள், உங்கள் சகோதரிகளைத் தேடுங்கள்.....
இதை ஒரு முறை ஜே.கே.சபையில் கூறிய போது ஆச்சரியத்துடன்  என்னைப் பார்த்து புன்னகைத்தார். அது எந்த கதையில் எழுதினேன் என அவரால் நினைவுகூர முடியவில்லை.என்ன கதை எனக்கேட்டார். சொன்னேன். மேகலா வெளியீடாக வெளியான மாதநாவலான இதயராணிகளும் இஸ்பேடு ராஜாக்களும் கதை என்று கூறிய போது எவ்வளவு கூர்ந்து வாசிக்கிறான் பாருங்கள் என்று நண்பர்களிடம் பெருமை பொங்க சொன்னார். அன்று முதல் ஜே.கேவுக்கு என் மீது தனிப்பிரியமே இருந்தது.

காமாதிபுராவிலிருந்து வெளியே வந்த போது பாலியல் இச்சையை விட துயரம்தான் மேலோங்கியிருந்தது. எங்கேயாவது உட்கார்ந்து அழவேண்டும் போல இருந்தது. ஆண்களின் காமவெறி பெண்களின் உடல்தேவை மற்றும் பணத்தேவை பற்றிய சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தன.என் வாழ்நாளில் ஒருபோதும் பணம் கொடுத்து ஒரு பெண்ணிடம் சுகம் கேட்கமாட்டேன் என்று தோன்றியது.
3
மும்பைக்கு பல பயணங்கள், பல நினைவுகள். ராஜீவ் காந்தி ஸ்ரீபெரம்புத்தூரில்  கொல்லப்பட்ட மே 21ம் தேதி நானும் நண்பர் தேவராஜூம் மும்பை உல்லாஸ்நகரில் தங்கியிருந்தோம். கடைகள் யாவும் அடைக்கப்பட்டிருந்தன. தெருவெங்கும் காங்கிரஸ் கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்தன. தேவராஜூக்கு தமிழ் தவிர வேறு மொழி தெரியாது. அவருடன் தமிழில் பேசவே பயமாக இருந்தது. இந்திரா காந்தி கொல்லப்பட்ட போது அப்பாவி சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல்கள் போல், ராஜீவ் கொலைக்கு தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று நாங்கள் பயந்தோம். குறைவாக பேசி அறைக்குள்ளேயே அதிக நேரம் இரண்டு நாட்களுக்கு பதுங்கியிருந்தோம்.சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. ஆபுஸ் மாம்பழங்களை வாங்கி வந்து மூன்று வேளையும் பிரெட்டும் மாம்பழமும் டீயும் சாப்பிட்டு பொழுதைக் கழித்தோம். இரண்டு நாட்களுக்குப் பிறகு இயல்பு நிலை திரும்பியதும் முதல் வேளையாக ரயில் பிடித்து சென்னை திரும்பிவிட்டோம்.
மற்றொரு முறை ரயிலில் சென்னை திரும்பும் போது சரியான திட்டமிடல் இல்லாமல் கையில் இருந்த பணம் எல்லாம் செலவாகி விட்டது. மதியம் குண்டக்கல்லை நெருங்கும்போது பசி வாட்டியது. காலையும் ஏதும் சாப்பிடவில்லை. முன்பின் தெரியாத ஒரு பயணி எங்கள் நிலைமையைப் புரிந்துக் கொண்டு கையில் 200 ரூபாயை திணித்து குண்டக்கல்லில் இறங்கி சென்றுவிட்டார்.அவர் பெயர் கூட சொல்லவில்லை. ரயில்வேயில் பணிபுரிவதாக மட்டும் சொன்னார்.
2008ம் ஆண்டில் தீவிரவாதிகள் மும்பையைத் தாக்கிய செய்திகளை இராப்பகலாக தொலைக்காட்சி செய்திகளில் வடித்த போது மனதுக்குள் ரத்தம் வடிந்தது. நண்பர் தேவராஜனும் எங்க அம்மாவையே சுட்டது போல இருக்கு என வேதனையை வெளியிட்டார்.
என் விக்கியிடம் மும்பைத்தாக்குதல் பற்றி கதை கதையாக சொல்லியிருக்கிறேன். நானா பட்டேகர் நடித்து ராம்கோபால் வர்மா இயக்கிய 26-11 டெரரிஸ்ட் அட்டாக் படத்தையும் டிவிடியில் போட்டு காட்டியிருக்கிறேன் விழிகள் விரிய விரிய அந்த பயங்கரத்தை அவன் புரிந்துக் கொண்டான்.
பல கேள்விகள் கேட்டான். விளக்கம் சொன்னேன். கசாப்பை தூக்கிலிட்டதையும் சொன்னேன்.
கடைசியாக மும்பை சென்றது என் விக்கியுடன். அவனுக்கு இத்தனை பெரிய நகரம் எத்தனையோ ஆச்சரியங்களை வைத்திருந்தது. காரிலேயே அதிகமாக சுற்றினோம். மகாலட்சுமி கோவில், ஹாஜி அலி தர்காவுக்கு போனோம். அவன் தலையில் குல்லாய் அணிந்து செல்பியும் புகைப்படமும் எடுத்து வந்தான்.
கேட் வே ஆப் இந்தியாவில் புறாக்களுடன் அவன் ஓடி விளையாடியதும் தாஜ் ஓட்டலை கோவிலைப் போல் சுற்றி சுற்றி வந்ததையும் குறிப்பிடலாம்.

மும்பையில் பானி பூரி, குல்பி, லஸ்ஸி, பிரியாணி உட்பட எல்லாம் சாப்பிட்டது அவனுக்கு மிகவும் ருசியாக இருந்தது.ஆனால் எல்லாவற்றையும் விட அவன் விரும்பி சாப்பிட்டது பௌவா எனப்படும் அவல் உப்புமாதான்.
உல்லாஸ் நகரிலிருந்து கல்யாணுக்கும் கல்யாணிலிருந்து தாதருக்கும் ரயில் பிடித்து சென்னை திரும்பும் போது கூட்டத்தில் சிக்கினோம். மும்பை மின்சார ரயில்களில் உள்ள கூட்டம் முதல்வகுப்பிலும் குறையவில்லை.
ஒருவழியாக ரயிலைப் பிடித்து சென்னை திரும்பும் போது கடந்து செல்லும் வீடுகளையும் கட்டடங்களையும் ரயில்பாதைகளையும் பார்த்து மும்பைக்கு பை சொல்லிக் கொண்டேன்.
மீண்டும் வருவேன் மும்பை. உன்னுடன் உறவு ஒரு தொடர்கதைதான். அது என்றும் முடிவதில்லை.












No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...