Thursday 28 May 2015

பயணம் 1 கோயமுத்தூர்







கோவைக்கு முதன் முதலில் எனது 19வது வயதில் சென்னையிலிருந்து வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரசில் மதியம் ரயில் ஏறினேன்.அப்போது டிக்கட் விலை 30 ரூபாய்தான். கையில் 80 ரூபாய் இருந்தது. ரயிலேறிய காரணம் வீட்டை விட்டு ஓடிப்போவது. அப்பாவின் பார்ட் டைம் சம்பளம்தான் எனது கையில் இருந்த பணம். அதற்காக என் அப்பா இன்று வரை என்னை வெறுப்புடன் பார்க்கிறார். அதுபோகட்டும். பயணத்தின் நோக்கம் எனக்குள் மலர்ந்திருந்த ஒரு காதல். அதன் பின்னர் கோவைக்கு இனி போவதில்லை எனுமளவுக்கு பல குழப்பங்கள், துயரங்கள்...ஆனால் காவிரியில் குளிக்கும் போது திருச்சி நண்பன் மதன் தூண்டுதலில் மீண்டும் திருச்சியிலிருந்து கரூர் செல்லும் பஸ் ஏறினேன்.டிக்கட் விலை 2 ரூபாய்தான். அங்கிருந்து தாராபுரம் பிறகு கோவை. இதுபோல் நாலைந்து பயணங்கள், வேலைக்கான தேடல்கள், வீட்டில் அந்நியமாதல் போன்ற பல்வேறு தகிப்புகளுடன் இளமைக்காலம் வெந்து வேக, ஆறேழு ஆண்டுகளுக்குப் பின் நான் காதலி்த்த அந்தப் பெண்ணை மணம் முடித்த போது எனக்கு வயது 25. அப்போது எனது ஊதியம் 250 ரூபாய்.
கோவை எனது மாமியார் வீடு அமைந்த நகரமாகி விட்டது. மாமனார் நல்ல மனம் படைத்தவர். ஆனால் அவரால் சம்பாதிக்க முடியவில்லை. சம்பாதித்ததையெல்லாம் குடும்பத்திற்காக செலவழித்து விட்டார் .சற்று ஊதாாிதான். மகளுடைய திருமணத்திற்கு பொட்டு தங்கத்தையும் அவரால் போட முடியவில்லை. அவ்வளவு ஏன் அவர் சாவுக்கே பணம் இல்லை. கிட்டதட்ட பத்தாயிரம் ரூபாய் செலவழித்து அவருக்கு நான் சாவு எடு்த்தபோது 4 ஆயிரம் சம்பாதிக்கும் நிலையை எட்டியிருந்தேன்.

கோவையை அடுத்த பரிணாமத்தில் நான் பார்த்தது தொழில் நிமித்தமாக அங்கு அனுப்பப்பட்ட போது. ஞானியுடன் ஏற்பட்ட நட்பு, விஜயா பதிப்பகம் திரு,வேலாயுதத்தின் வாங்க என்னும் குளிர்ச்சியான அழைப்பு எழுத்தாளர்கள் சி.ஆர்.ரவீந்திரன், ஷாராஜ், வாமு கோமு, நாஞ்சில் நாடன் போன்றவர்களுடன் உருவான நட்பு, பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய கவிஞர் சிற்பி அவருடைய மாணவர்கள் என நீடித்த அந்த நட்பு வட்டத்தால் அடிக்கடி கோவை போய்க்கொண்டிருந்தேன்.
அப்போது மற்றொரு காதல் மலர்ந்தது. எனக்கும் கல்லூரி மாணவி ஒருவருக்கும் உடல் ரீதியாக மலர்ந்த நெருக்கத்தை என்ன செய்வது எனத் தெரியாமல் நாங்கள் வடவள்ளி அருகே உள்ள ஒரு கோவிலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.
பிரபல மணிக்கொடி எழுத்தாளர் சிட்டியின் மகன் மூலமாக அங்கு குடியிருந்த சிட்டியை  சந்தித்து நாங்கள் பேசினோம்.
பிடி தனபால் நினைவு நூலகத்தில் அவள் புத்தகம் எடுக்கப் போகும்போது நானும் போவேன். கிருஷ்ணா ஸ்வீட்சில் எங்கள் முதல் முத்தத்தை கொண்டாட பால்கோவா வாங்கி பகிர்ந்துக் கொண்டோம்.ஒரு சில நாட்களில் அந்தக் காதல் பிரிந்தது. கண்ணீருடன் பிரித்துக் கொண்டோம். குடும்பம் இடையூறாக இருந்தது. குடும்பத்தை விட்டு பிரிய அவளுக்கும் மனம் இல்லை . காதலித்து மணந்தவளை கைவிட எனக்கும் விருப்பம் இல்லை
அவள் கட்டளையை ஏற்று கோவைப்பக்கம் போவதையே நிறுத்திக் கொண்டேன். எப்போதாவது போக நேர்ந்தாலும் ஓரிரு நாட்களில் சென்னைக்கே ஓடி வந்துவிடுவேன்.வை.கி.துறையன் என்ற அற்புதமான மனிதரை சந்தித்ததுதான் கோவையில் எனக்கு மகிழ்ச்சி தந்தது.அவர் இப்போது எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை.
கடந்த 20 ஆண்டுகளில் சென்னை வாழ்க்கை பல மாற்றங்களையும் ஏற்றங்களையும் தந்தது. கோவை மெல்ல தூரமாகி சென்று விட்டது.
இந்த பழைய நினைவுகளுடன் கடந்த வாரம் கோவைக்குப் போயிருந்தேன். நாங்கள் நடந்த பாதையெல்லாம் நானிருந்து வாடினேன். சாய்பாபா காலனியில் நண்பர் ராஜாவின் பழைய புத்தகக் கடைக்குப் போனேன். விஜயா பதிப்பகம் சென்று அங்கு வேலாயுதம் அய்யாவின் மகன் சிதம்பரத்தை சந்தித்தேன். தற்செயலாக அங்கு சி.ஆர். ரவீந்தரையும் சந்திக்க நேர்ந்தது.
கோவை பெருநகரமாக விஸ்வரூபம் எடுத்திருந்தது. நான் சினிமா பார்த்த பல தியேட்டர்களை காணவில்லை. புத்தகக் கடைகள் இருந்த போதும் எனக்குத் தேவையான புத்தகங்கள் கிடைக்கவில்லை. அல்லது புத்தகங்களுக்கான தேவை எனக்கு இல்லாமல் போய்விட்டது. ஜானி நீரோ சாகசம் புரியும் முத்துகாமிக்ஸ் மற்றும் சில மாத இதழ்களை மட்டும் விஜயா பதிப்பகத்தில் வாங்கிக் கொண்டேன்.
ரயில் நிலையம் எதிரே ஆர்.ஹெச்.ஆர் ஓட்டலில் சாப்பாடு அருமையாக இருந்தது. டூ வீலர் கிடைத்ததால் ஊரை ஒரு சுற்று சுற்றி விட்டேன். அன்று இரவே சென்னை புறப்பட்டு விட்டேன்.

ஏற்கனவே இதே போல் ஒரு அனுபவத்தை கோவைக்கு சென்று அனுபவித்ததை ஒரு கவிதையாக எழுதியிருக்கிறேன்

என்னைப் போல்
அவளும் வருவதுண்டா
அந்த இடங்களுக்கு
அந்த கணத்துக்கு?


2

கோயமுத்தூர் நகரம் எனக்கு ஏன் பிடிக்கிறது என்ற உளவியல் ரீதியான காரணங்கள் ஒருபுறமிருக்க அந்நகரில் மனிதர்களை மிகவும் பிடித்திருந்தது. அவர்கள் பேசும் தமிழ் அழகாக இருந்தது. பெண்கள் செழுமையாக இருந்தார்கள். பிச்சைக்காரர்கள் அதிகமில்லை. திருடர்கள் யாரையும் பார்க்கவில்லை. வீதிக்கு வீதி டாஸ்மார்க் குடிமகன்கள் இல்லை. சிலுசிலுவென குளிர்ந்த காற்று, கோடையிலும் வெக்கை இல்லை.புழுக்கம் இல்லை.உணவு ருசியாக இருந்தது. பேக்கரிகள் பளபளப்பாக இருந்தன. தேநீர் அமிர்தமாக இருந்தது. ஜவுளிக்கடைகள் பெருகியிருந்தன. ஒப்பணக்கார வீதியிலும் ஆர்.எஸ்.புரத்திலும் மக்கள் ஆயிரக்கணக்கான ரூபாய்களுக்கு உடைகளை வாங்கிச் சென்றனர். வீடுகள், குடியிருப்புகள், கடைகள்,அடுக்குமாடிகள்,வாகனங்கள் பல மடங்கு பெருகியிருந்தன. பேருந்தில் எளிதாக ஏறிச்செல்ல முடிந்தது. ரயில் நிலையம் ஊருக்குள் இருந்தது. ஆட்டோக்காரர்கள் அதிக ஆசை கொண்டவர்களாக இருப்பினும் உழைப்பாளியை மதிக்கும் மனம் காரணமாக பணம் அதிகமாக தருவது பொருட்டாக இல்லை.
கோவைக்கு போய் பத்து நாட்களாவது தங்க வேண்டும். அவளை ஒருமுறையாவது சந்தித்து பேச வேண்டும்.அருகில் உள்ள மேட்டுப்பாளையம் வனபத்திரகாளி கோவிலுக்கு செல்ல வேண்டும். ஊட்டியில் சுற்றித்திரிய வேண்டும், பழனி, உடுமலை, பொள்ளாச்சி,பாலக்காடு போன்ற ஊர்களுக்குப் போக வேண்டும். குருவாயூர் செல்ல வேண்டும், பொள்ளாச்சி நசன், ஷாராஜ் போன்ற நண்பர்களை சந்திக்க வேண்டும். ஞானி அய்யாவை ஒருமுறை சந்தித்து ஒருநாள்  முழுவதும் அவருடன் கழிக்க வேண்டும் என்றெல்லாம் பல ஆசைகள் மனதுக்குள் வட்டமடிக்கின்றன. அவை நிறைவேற விடாதபடி மனமும் பணமும் குறைவுபட்டு போக அடுத்த முறை பார்க்கலாம் என ஒத்திப் போட்டுக் கொண்டே சென்னை திரும்பிக் கொண்டிருக்கிறேன். அப்படித்தான் இம்முறையும் சென்னைக்குத் திரும்பினேன்.ஆனால் நினைவுகளில் ஈரம் இருந்தது. கண்ணீரின் ஈரமா காலத்தின் தூரமா எனப்புரியவில்லை












No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...