Thursday 28 May 2015

பயணம் 2 பெங்களூரு





அண்மைக்காலங்களில் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக தமிழ்நாட்டின் கவனம் பெற்ற நகரமாகிவிட்டது பெங்களூரு.
காவிரிப் பிரச்சினை, கன்னடர் தமிழர் அக்கப்போர் என பல்வேறு பிரச்சினைகளும் சென்னைக்கும்-பெங்களூருக்கும் இடையே உள்ள 350 கி.மீ. தூரத்தில் புகைந்துக் கொண்டிருக்கின்றன.
முதன் முறையாக 25 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருக்கு நண்பர் சூர்யராஜனுடன் சுற்றுலா சென்றேன். அப்போது எழுத்தாளர் சுஜாதா பெங்களூரில் இருந்தார்.ஒகனேக்கல் பற்றியும், பெங்களூரில் காபரே பார்த்ததையும் பெங்களூரை பெண்களூர் என்றும் அவர் கட்டுரைகள் எழுதியிருந்தார். அதுவே பெங்களூரைப் பற்றிய ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியிருந்தது.
கபன்பார்க், விதான் சவுதா, மெஜஸ்டிக் சர்க்கிள் ,கெம்பே கவுடா பேருந்து நிலையம், சில திரையரங்குகள், பழைய புத்தகக் கடைகள் எனத் திரிந்து நாங்கள் திரும்பி வந்துவிட்டோம். உணவி்ல் தித்தி்ப்பு கலந்திருந்தது பிடிக்கவில்லை.அன்று அங்கு வாங்கிய வெள்ளரிப்பிஞ்சுகளை சாப்பிட்டு பார்த்துதான் இன்று வரை நான் வெள்ளரியை விரும்பி சாப்பிடுகிறேன்.
அதன் பிறகு பலமுறை பெங்களூரு செல்ல நேர்ந்தது. ஒரு சில காரணங்களுக்காக. தங்கைக்கு மாப்பிள்ளை பார்க்க ஒருமுறை, குடும்பத்துடன் ஒரு திருமணத்திற்கு சென்ற போது ஒருமுறை, சில உறவினர்களை அங்கு சந்திக்க சென்றபோது ஓரிரு முறை என ஆறேழு தடவை பெங்களூரு போயிருக்கிறேன்.


2007ம் வருடம் மைசூரில் எனக்கு கிடங்குத் தெரு நாவலுக்காக பாஷா பாரதி விருது அறிவிக்கப்பட்டதையடுத்து விருதைப் பெற மனைவியுடன் சென்றேன். விமானம் ரயில் நட்சத்திர ஓட்டலில் அறை உணவு கார் என எல்லா வசதிகளையும் மத்திய அரசின் மொழி ஆய்வு மையமான சி.ஐ.ஐ.எல்
செய்து கொடுத்தது.25 ஆயிரம் ரொக்கத்துடன் எளிமையாக நடந்த விழாவில் மலையாளக் கவிஞர் சச்சிதானந்தன், நீல.பத்மனாபன், கொல்கத்தா கிருஷ்ணமூர்த்தி , கரம் ஹவா என்ற இந்திப்படத்தின் இயக்குனர் உட்பட பலரை சந்திக்க வாய்ப்பு அமைந்தது. மைசூர் அரண்மனை, அம்மன் கோவில், பிருந்தாவனம் பூங்கா  உள்ளிட்ட இடங்களை பார்த்து காரிலேயே பெங்களூர் வந்து விமானம் மூலம் சென்னை திரும்பினோம்.விமான நிலைய சோதனையில் கையில் இருந்த அவார்டு ஷீல்டு என்ன என அதிகாரிகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டியிருந்தது.





அதன் பிறகு பல ஆண்டுகளுக்குப் பிறகு 2012ல் குங்குமம் இதழில் பணியாற்றிய போது பேராசிரியர் ஹரிகிருஷ்ணன் அவர்களை பேட்டியெடுக்க அரிச்சந்திர மயானம் அருகே உள்ள ராஜாஜி நகருக்கு அவர் வீடு தேடி மழையில் ஆட்டோவில் சென்றேன். அனுமன் பற்றி அவர் எழுதிய கம்பராமாயண பேருரைகளை கிழக்குப் பதிப்பகம் புத்தகமாக போட்டுள்ளது. அத்தனை அற்புதமான புத்தகம் மிகச்சிறந்த வாசிப்பனுவத்தை அது அளித்திருந்தது.
அந்தப் பேட்டியை ஏனோ குங்குமம் ஆசிரியர் நிராகரி்த்து விட்டார். அவர் எனது படைப்புகளை நிராகரிப்பதையே ஒரு வழக்கமாக வைத்திருந்தார். வைதேகி, வெ,நீலகண்டன் போன்றவர்களுக்காக மட்டுமே அவர் பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தார்.அவர்கள் எதை எழுதினாலும் பிரசுரம் செய்து விட்டார்.அவர்கள் திறமைமிக்கவர்கள் என்பதை நான் மறுக்க மாட்டேன்.

அண்மையி்ல் ஒரு திருமணத்திற்காக பெங்களூரு போன போது ஊரின் ஈர்ப்பும் கவர்ச்சியும் அப்படியே இருந்தது. பெண்கள் அழகழகாக ஆடைகள் அணிந்து நடமாடினார்கள். மல்லேஸ்வரம், மெஜஸ்டிக் சர்க்கிள் போன்ற இடங்களை சுற்றிப்பார்த்து டெம்ப்டேசன் , சப்னா புக் ஹவுசில் சில கன்னட திரைப்பட டிவிடிக்களை வாங்கிக் கொண்டேன்.
உணவு தித்திப்பாகத்தான் இருந்தது. மல்லேஸ்வரம் எட்டாவது கிராசில் ஜனதா ஓட்டலில் மசால்தோசை சாப்பிடும் அளவுக்கு பிடித்திருந்தது. சாம்பாரை விட்டு சட்னியுடன் சாப்பிட்டேன். இங்குதான் எங்கோ அபிநய சரஸ்வதி பழைய நடிகை சரோஜா தேவி இருப்பதாக ஞாபகம். அவரை சந்திக்க ஆவல் இருப்பினும் நேரம் இல்லை.அன்பே வா படத்தில் அவர் பாடிய லவ் பேர்ட்ஸ் பாடலை நினைத்துக் கொண்டே சென்னை திரும்பிவிட்டேன். திரும்பும் போது பேருந்து பயணம் .ஓசூர் மீனாட்சி பவனில் தோசை சாப்பிட்ட போதுதான் பெங்களூர் ஜனதா பவன் தோசையை மறக்கவே முடிந்தது. தித்திப்பில்லாத சாம்பாருடன் தமிழ்நாட்டு தோசை.
பின்னர் ஆம்பூரில் ஸ்டார் பிரியாணி கடையில் ருசியான பிரியாணி சாப்பிட்டு மாலையில் சென்னை வந்துவிட்டேன்.

பெங்களூருவில் திரு.ஹரிகிருஷ்ணன், நண்பர் பாவண்ணன், போன்றோரை சந்திக்க வேண்டும். அருகே தருமபுரி மொரப்பூரில் உள்ள நண்பர் தங்கமணி வீட்டுக்கு போக வேண்டும் என்றெல்லாம் நினைத்தாலும் அது நிறைவேறுவதில்லை

சென்னையைத் தொட்டு பூந்தமல்லியில் மீண்டும் தோசை சாப்பிட்ட போது பெங்களூர் தோசை குமட்டலாக இருந்தது.நினைவிலிருந்து அதை விரட்டி விட முயன்றேன்.

பெங்களூரு எனக்குப் பிடித்த நகரம் என சொல்ல மாட்டேன். கன்னடம் தெரியாமல் அங்கு இருக்க முடியாது. ஆனால் எனக்கு கன்னடம் கற்க ஆர்வம் இல்லை. அதைவிட மலையாளம் கற்று எங்கோ தலைசேரியில் சுற்றித்திரியும் ஆசைகள் உண்டு.

















No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...