Friday 15 May 2015

அரிதினும் அரிது கேள் 2 - இளம் பனித்துளி விழும் நேரம்

சில பாடல்களுக்கு கேட்டவுடன் தீயைப் போல் பற்றிக் கொள்ளும் தன்மை உண்டு. இந்தப்பாட்டும் அப்படிப்பட்டது. ராஜ் வீடியோ விஷனின் மேடை நிகழ்ச்சி டிவிடி போட்டு பார்த்துக் கொண்டிருந்த போது மாற்றுத்திறனாளி் பெண் ஒருவர் மேடையில் இளம் பனித்துளி விழும் நேரம் பாட்டை பாடிய போது எனது நினைவுகள் பின்னோக்கிப் பாய்ந்துசென்றன. எனது இளம் பருவத்தில் கனவுகளுடன் திரிந்த காலங்கள் கண் முன்னே வந்தன.( இப்போதும் கனவுகளுடன்தான் திரிகிறேன். ஆனால் வேறுவிதமான கனவுகள்)
சுமலதா சுமன் நடித்த ஆராதனை என்ற படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலை தேட ஆரம்பித்தேன். அப்போதே என்னை அலைக்கழித்திருந்த அந்தப்பாடலை நினைவுபடுத்திய அந்த பெண்ணுக்கு மானசீகமாக நன்றி தெரிவித்துக் கொண்டு அந்தப்பாடலை தேட ஆரம்பித்தேன். எங்கும் இல்லை. இளையராஜா ஹிட்ஸ் தொகுப்புகளில் மீண்டும் மீண்டும் 50 படங்களுக்குட்பட்ட பாடல்களே இடம் பெறுகின்றன. சின்னதம்பி, மௌனராகம், பொன்னுமணி, எஜமான்,குணா என எனக்குப் பிடித்த பாடல்களும் படங்களும் இருப்பினும் இதுபோன்ற அரிய பாடல்களை கேட்கவே முடிவதில்லை. வானொலியும் தொலைக்காட்சி சேனல்களும் போட்ட பாடல்களையே மறுமறுபடியும் போட்டு இவ்வளவு தான் தமிழ்ச்சினிமா பாடல்கள் என்ற மாயையை ஏற்படுத்துகின்றன. சொந்தமாக ஒருகலெக்சன் வைத்திருக்காவிட்டால் ஏமாறப் போவது திண்ணம் என்பதை பல ஆண்டுகளுக்கு முன்பே நான் தெரிந்துக் கொண்டு பாடல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறேன். ஆராதனை படத்தையும் பாட்டையும் தேடிக் கொண்டிருந்த போது எனக்காகவே அப்படத்தின் டிவிடி வெளியாகியது. அந்தப் பாடல் மெருகு குலையாமல் அப்படியே படத்தில் இருக்கிறது.
இளையராஜா இசையில் வைரமுத்து எழுதிய இளம் பனித்துளி விழும் நேரம் அத்தகைய அருமையான பாடல், ராதிகா என்பவர் பாடியது. அந்த ராதிகாவைப் பற்றிய விவரங்களை தேடுகிறேன்.கிடைத்ததும் இங்கு பதிவு செய்கிறேன்.







.
காதலனிடம் எண்ணத்தை சொல்லத்துடிக்கும் காதலி அதற்கான சந்தர்ப்பம் கிடைக்காமல் தனது ஆசையை பாட்டாக வடிக்கிறாள். படத்தில் சுமனும் சுமலதாவும்தான் அந்த காதலர்கள்.

இளம் பனித்துளி விழும் நேரம்
லலலல லலலல லாலா
இலைகளில் மகரந்தக் கோலம்
துணைக்கிளி ஒன்று தவித்தபடி
தனிக்கிளி ஒன்று துடித்தபடி
சுடச்சுட நனைகின்றதே….
லலலலலலாலா….
ஆ….ஆசை நதி மடை திறந்து
ஆ…வாசல் வந்து கதவடைக்கும்
காயாது மன ஈரங்கள்
தாளாது சுடுபாரங்கள்
காவிய காதலின் தேசங்களே
ஊமையின் காதலைப் பாடுங்களேன்
மலர்களும் நனைகின்றதே…
லலலா இளம் பனித்துளி விழும் நேரம்…..

ஆ…பாவை விழித்துளி விழுந்து
ஆ…பூவின் பனித்துளி நனையும்
தீயாகும் ஒரு தேன் சோலை
போராடும் ஒரு பூமாலை
சூரியகாந்திகள் ஆடியதோ
சூரியனை அவை மூடியதோ
முகில் வந்து முகம் தொட்டதோ….
லலலா லா…..

புதுக்கவிதையின் ஈரமும் வாசமும் கொண்டு எழுதப்பட்ட பாடல் இது…வழக்கமான மரபுக்கவிதைகளை மீறி இசைஞானியின் வயலின்களுடன் இழைந்து எழுதப்பட்ட சொற்கள்…
மனதுக்குள் ஒரு பனித்துளியைப் போல் இப்பாடல் மென்மையாக விழுகிறது.

பின்குறிப்பு

மலையாளப் பின்னணி பாடகியான ராதிகா திலக் என்பவர்தான் இந்தப்பாடலை பாடியவர். அவர் புற்றுநோயால் கடந்த 20-9-2015 அன்று கொச்சியில் காலமானார். ராதிகாவின் குரல் என் நினைவில் என்றும் பதிந்து கிடக்கும்






No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...