Monday 5 August 2019

ரசனை புத்தகம் 2

ரசனை என்ற பெயரில் பேஸ்புக்கில் நான் எழுதும் தொடரின் இரண்டாம் பாகம்

கு. அ.தமிழ் மொழியின் ஹைகூ கவிதைகள்
சிறகின் கீழ் வானம்
புதுச்சேரி தந்த பெண் கவிகளில் ஒருவர் கு.அ.தமிழ்மொழி .தமிழில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் முக்கியப் படைப்பாளி. இத்தொகுப்பு அவருடைய பதின் பருவத்தில் வெளியானதாக இருக்கலாம் என்பதை பின் அட்டையி்ல் உள்ள  புகைப்படம் விளக்குகிறது. தச்சன் இதழுக்கு அவர் அளி்த்த பேட்டி, அவருடைய புகைப்படங்கள், பரிசுகள், விருதுகள் பட்டியல், முன்னுரைகள், அணிந்துரைகள் என இத்தொகுப்பு ஒரு களஞ்சியமாக விளங்குகிறது.
சரி கவிதைகள்....?
ஹைகூ வடிவம் எழுத சுலபமானது. ஆனால் அதை கவிதையாக்குவதுதான் கடிதனமானது. தெறிப்புகள் போல் சிந்தையில் உதிப்பதையெல்லாம் பதிவு செய்வதல்ல கவிதை. பாஷோவும் பூஷணும் ஷிகியும் ஜப்பானில் ஹைகூ எழுதிய போது இயற்கையை பாடுவதை ஒரு நிபந்தனையாக ஏற்றார்கள். நீண்ட மோனத்தில் தவமிருக்கும் ஓணான், சிறகிசைக்கும் பட்டாம்பூச்சிகள், அரிசி இல்லாத தட்டில் பிரதிபலித்த நிலவின் காட்சி, வெட்டுக்கிளியின் பாடல் , தானாக வளரும் புற்கள், குளத்தில் குதிக்கும் தவளை என அவர்கள் கண்டவற்றையெல்லாம் கவிதையாக்கினார்கள். ஏழு அசைகளில் எழுதிவிட்டால் அதுஹைகூ ஆகி விடாது. அது கவிதையாக பரிணமிக்கும் தருணங்கள் அபூர்வமானது.
தமிழ் மொழியின் பல ஹைகூக்கள் தெறிப்புகள்தாம். நிறைய பெரியாரிய சிந்தனைகள், அரசியல் கேலிகள், விமர்சனங்கள், கருத்தியல்கள் அதில் தெறிக்கின்றன. ஒரு பெண்ணின் சிந்தனைப் பரப்பில் நகையையும் புடவையையும் தொலைக்காட்சி சீரியல்களையும் சமையலையும் கோவிலையும் தாண்டி இத்தகைய சிந்தனைகள் இடம்பெறுவது வரவேற்கத்தக்கவைதான்.
ஆனால் இத்தொகுப்பில் கவிதைகளாகவும் மலர்ந்திருக்கின்றன சில வரிகள்....
ஆறுமுகனே
பன்னிரு கைகள் வேண்டும்
வீட்டுப்பாடம்     என்ற ஹைகூ கவிதை ஒரு தெறிப்புதான். அப்துல்ரகுமான் போல் புத்தகங்களே எங்கள் குழந்தைகளை கிழித்துவிடாதீர்கள் என்ற அளவுக்குக் கூட இது பரிணமிக்கவில்லை. ஆனால் ஆறுமுகனிடம் பன்னிரு கைகள் கேட்கும் வரம் கவித்துவமானதே. அதை விட "கண்களைப் பார்க்கிறேன் கண்ணாடியில்" என்ற இன்னொரு சிறு கவிதை அட்டகாசமாக இருக்கிறது.
ஒற்றைப் பனையில்
கிளியின் பொந்து
பருந்திற்கு அஞ்சி
 என்ற கவிதை கிட்டதட்ட ஹைகூவின் முழுமைக்கு நெருங்கி வருகிறது. அதே போல்
எண்ண முடியா பொத்தல்கள்
கருப்புப் போர்வைக்குள்
விண்மீன்கள்
சிறப்பாக இயற்கையைத் தொட்டு கவிதையாக பூத்திருக்கிறது.
நான் வளர்கிறேன் சிறிதானது சட்டை என்றும் நேரம் தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கிறது கடிகாரம் என்றும் மேலும் சில வரிகளையும் இத்தொகுப்பில் ரசிக்கலாம்.
---------------------------------------------------------------------------------------------
கவிஞர் புவியரசு-வின் கவிதைகள்
1ஒருமுக்கிய அறிவிப்பு
2 கையொப்பம்
வானம்பாடி தந்த கவிகளில் முக்கியமானவர் புவியரசு. கோவையில் வசிக்கும் இவர் எழுதிய கவிதைகளை மிகுந்த ஈடுபாட்டுடன் வாசித்து வந்திருக்கிறேன். காரணம் ஒரு முக்கிய அறிவிப்பு என்ற தொகுப்பின் முதல் பதிப்பில் நண்பர் சூர்யராஜன் சுட்டிக் காட்டிய ஒரு நல்ல கவிதை.....அந்தக் கவிதையை வாசகர்களும் அனுபவிக்க முழுமையாக தருகிறேன்....
இருக்கும் வெளிச்சத்தை என்ன செய்வது ?
காசிக்குப் போய் கங்கையில் மூழுகி
கர்மத்தைத் தொலைக்கலாம்.
விழித்திருந்து விழித்திருந்து
பெற்று வளர்த்துப் போற்றிய
வெளிச்சத்தை எங்கே தொலைப்பது?
கொஞ்ச நாளாகவே
இதன் வெப்பம் தாங்காமல்
தலை பற்றி எரிகிறது.
உறக்கம் சாம்பலாய்ப் போயிற்று
கண்ணைத் திறந்தால்
அதுவே தெரிகிறது
வாயைத் திறந்தால்
அதுவே வருகிறது
கொஞ்ச நாளாய் எனக்குப் பயமாக இருக்கிறது.
என்னை எல்லோரும் ஒருமாதிரியாகப் பார்க்கிறார்கள்.
ஒரு தீர்த்தக்கரை இருந்தால் சொல்லுங்களேன்.
தலைமுழுகித் தொலைக்கிறேன்.
மற்ற வானம்பாடி கவிஞர்களிடமிருந்து புவியரசுவை தனித்துக் காட்டுவது இது போன்ற கவிதைகள் தாம். இவை புதுக்கவிதையின் அகநானூறு. ஆங்கிலத்தில் spiritual poems வரிசையில் கலீல் கிப்ரான், ஜலாலுதீன் ரூமி, ஹபீஸ், காலிப் போன்றவர்களின் கவிதைகளை மேற்கோள் காட்டுவார்கள். தமிழில் புவியரசுவிடமும் எப்போதாவது அப்துல் ரகுமானிடமும் இந்த சாயல்கள் இருக்கின்றன. எனது கவிதைகளையும் மேற்கத்திய பாதிப்புகளில் இருந்து விடுவித்து கிழக்கு தேச மகான்களின் சொற்களுடன் ஒப்பிடுவதில் பேரானந்தம் பெற்றிருக்கிறேன். தமிழில் ஓஷோவை மொழிபெயர்க்கும் போது ஒவ்வொரு வரியும் இத்தகைய கவிதையனுபவமாக விரிகிறது. புவியரசுவும் நிறைய ஓஷோ நூல்களை மொழிபெயர்த்தார். முதன் முதலாக செந்தூரம் இதழ் மூலம்தான் ஓஷோவை தெரிந்துக் கொண்டதாக ஒரு முறை திருப்பூரில் சந்தித்த போது கூறியிருந்தார்.
புவியரசுவின் இரண்டு கவிதைத் தொகுப்புகளையும் வாசிக்கிற போது பல வரிகள் கவர்கின்றன. சில கவிதைகள் காலாவதியாகி விட்டதையும் குறிப்பிடத்தான் வேண்டும்.
பிடித்த வரிகள் சில....
உள்ளில் நிழல் மூட்டிய நெருப்பு
உண்மையை நோக்கி நாக்கை நீட்டும் பசியோடு...
------------.
மருண்ட மான்களின் கனைப் பொலியும்
குளி்ர் நிழலும் குறிஞ்சிப்பூ மணமும்
இடையரின் புல்லாங் குழலிசையும்
பொய்யாய் பழங்கனவாய்ப் போயின
(ஒரு முக்கிய அறிவிப்பு -புவியரசு வெளியீடு விஜயா பதி்ப்பகம் கோவை)
----------
இது மண் சாலை அன்று
ஒரு காலத்தில்
நீரோடிக் கொண்டிருந்த உனது நதி
நீ அமெரிக்காவுக்கு
சம்பாதிக்கப் போயிருந்த போது
இதை விற்றுவிட்டார்கள்
----------
எருக்கஞ்செடிக்கும் பூப்பூக்கும்
உரிமை உள்ளது
--------
பூ
காமத்தின் கவித்துவப் படிமம்
காமத்தின் விகசிப்பு
காதல் அதன் நறுமணம்
-------
பலத்த காற்றுக்காகக் காத்திருக்கும்
பழுத்த இலைகளின்
பைத்தியக்காரத்தனம்
எனக்கு இல்லை
----------------------------------------------------------------------------------------
சோழமா தேவியின் கவிதைகள்
வானமே முதலடி
இவரைப் பற்றி அதிகம் தெரியாது. பழைய புத்தகக் கடையில் கிடைத்த இவருடைய முதல் கவிதைத் தொகுப்பை இவர் பெயரால் ஈர்க்கப்பட்டு வாங்கினேன். வெற்றிப்பேரொளி, சல்மா போன்றோர் வாழ்த்தியுள்ளனர். படித்தால் பெரும்பாலும் காதல் கவிதைகள். ஆரம்ப கால எழுத்தின் அத்தனை பலவீனங்களும் மிக்க தொகுப்புதான். இதுபோன்ற படைப்புகள், தொகுப்புகள் பெண் என்பதைத் தாண்டி விமர்சிக்கப்படும் போது பின்வரிசைக்கு தள்ளப்படலாம். ஆனால் இதனையும் ஒரு பொருட்டாக மதித்து இங்கு ரசனையில் குறிப்பிடுவதற்கு காரணம் சோழமா தேவி போன்ற பெண்கள் எழுத்தின் பக்கம் தீவிரம் கொள்ளவேண்டும் என்றுதான்.
கண்டது கனவாக இருந்தால்
மறுபடி காணப்பெற்றால்
அப்பொழுது அந்தப் பார்வையை அடையாளம் காண்பேனா?
அள்ளி அணைப்பேனா
அமைதியாய் போவேனா
என்ற காதல் உயிர்ப்பு கவிதையின் இறுதிப் பகுதியைப் படிக்கும்போது சோழமா தேவி எழுதலாம் என்றுதான் தோன்றுகிறது.
இதே போல் படையல் என்ற கவிதை கற்பு, பெண்ணின் கணவர் மீதான ஈர்ப்பு குறித்து சிலாகிக்கிறது. ஒரு பெண் குரலுடன் இதை பார்ப்பதே நல்லது.
எல்லாவற்றையும் விட சிறப்பான ஒரு பகுதி இந்த கவிதை நூலில் கிடைத்தது
பயம்
வெட்கம்
பண்பாடு
கலாச்சாரம்
ஒழுக்கம்
பற்றி வருத்தப்பட நேரமில்லாமல்
வசியப்பட்டு நிற்கிறேன்
அந்த இன்பம் தந்த இம்சையில்
கூச்சப்பட்ட மாலை
மறைந்தே போனது.
------------------------------------------------------------------------------
ஓவியம் -நன்றி லதா ரகுவின் முகநூல் பக்கத்தில் இருந்து....
-------------------------------
தி.பரமேசுவரியின் கவிதைகள்
தனியள்
ஒருசில இலக்கிய சந்திப்புகளில் பரமேசுவரியை சந்தித்து இருக்கிறேன். காஞ்சிபுரத்தில் ஆசிரியையாக இருக்கிறார். ஒரு முறை எனக்கு கிடங்குத் தெரு நாவல் குறித்து தொலைபேசியில் விமர்சனம் செய்தார்.
தமிழறிஞர் மா.பொ.சியின் பேத்தி என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். நண்பர்கள் சூர்யராஜனும் அண்மையில் மறைந்த மு. நந்தாவும் மா.பொ.சியின் பேச்சுக்கு ரசிகர்கள். நான் அவரை அதிகம் அறியவில்லை என்று வெட்கப்படுகிறேன்.
பரமேசுவரியின் கவிதைகள் மற்ற பெண் கவிகளின் எழுத்தை விடவும் தீவிரம் கொண்டவை. கருத்துகளிலும் சரி சொற்களிலும் சரி அவருடைய எழுத்து எளிதில் கவனத்தை கவரக்கூடியதாக இருக்கிறது.
மீன்களை மட்டுமே ஓவியம் தீட்டும் ஒருத்தி கடற்கன்னியாக மாறிவிடும் ரஸவாதத்தை ஒரு கவிதை பேசுகிறது.பாம்பு பிடாரனின் மகுடிக்கு மயங்கும் நாகத்தை ஒரு கவிதை சொற்சித்திரமாக்குகிறது. வீட்டுக்குள் புகுந்து ஸ்நேகமான ஒரு நாகம் பற்றிய கவிதையும் நுட்பமானது.
துரோகக் கத்திகள் அறுத்தெடுத்த சிரமேந்தி ஆடத் தொடங்குகிறேன்  ஊழிக்கூத்து என்று காளி அவதாரமும் எடுக்கிறார்.
அமர்ந்திருந்த பறவை பறந்துவிட்டது
அசைந்துக் கொண்டிருந்தது
கிளை
என்றும் கவிதை படைக்க முடிகிறது இவரால்,
இதே போல் பூட்டப்பட்டிருக்கும் ஒரு பெருங்கதவின் முன் நின்றுக் கொண்டிருக்கிறேன் என்ற படிமமும்,
கடவுளாய் உணர்ந்ததுண்டு சில கணங்களுக்கு என்று கூறிவிட்டு, கடவுளும் சாத்தானும் ஒன்றுதானோ என சந்தேகிக்கும் போதும்
பரமேசுவரியின் கவித்துவ சுவைக்கு சான்றுகளாக திகழ்கின்றன. ஆனால் இந்த அன்புத் தோழிக்கு அப்சல் குருவின்மேல் என்ன அக்கறை என்றுதான் புரியவில்லை.
பிரக்ஞை வெளியீடு
044-24342771
------------------------------------------------------------------------------

அகிலா ஜ்வாலாவின் கவிதைகள்
பெயர் தெரியாத பூவின் வாசம்
தலைப்பை பார்த்து சினிமா பாட்டு மாதிரி இருக்கிறது என்று கருதாதீர்கள். புத்தகத்திற்கு தலைப்பு வைத்தவர் அகிலாவின் மனம் கவர்ந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார்தான். முன்னுரையும் எழுதித் தந்தார். ஆங்கிலப் பேராசிரியை என்று அகிலா பற்றி தெரிகிறது. தினமலர் போன்ற இதழ்களில் ஜ்வாலா என்ற பெயரில் கவிதைகள் எழுதியிருக்கிறார். பேஸ் புக்கிலும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் அகிலா பெயரிலும் ஜ்வாலா பெயரிலும் தேடிப் பார்த்தேன் .கிடைக்கவில்லை .நண்பர்களுக்கு தெரிந்தால் அவருக்கும் எனக்கும் தெரியப்படுத்துங்கள்.

தொலைத்தது என்னில் எனில்
தேடிக் கொண்டிரு உன்னை
திமிங்கலமாய் விழுங்கி உன்னை
என்னுள் புதைத்துக் கொண்ட பெருங்டல் நான்
என்ற கவிதையை நா.முத்துக்குமாரும் சிறப்பானது என குறிப்பிட்டிருக்கிறார்.
எங்கே ஒளித்து வைக்க உன் அன்பை என்று கேட்கும் கவிஞர் நிலவை ஒளிக்கத் தெரியாத பௌர்ணமி வானத்தை தனது முகமாக பாவிக்கும் இடம் நயம்.
மழை பற்றி கவிதை எதற்கு
மழையே கவிதைதான் என்றும் நறுக் குகிறார்.
எனக்குப் பிடித்த ஒரு கவிதையை சொல்கிறேன். என்னைப் பற்றி நான் பலமுறை உணர்ந்த ஒருவிஷயம்தான்.
யாரேனும் வெறுத்தால் வருத்தமாயிருக்கிறது
இத்தனை நேசத்தை தொலைக்கிறார்களே என....
-------------------------------------------------------------------------------
சங்கர ராம சுப்பிரமணியன் கவிதைகள்
அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்க்குட்டிகள்
தமிழின் சமகால கவிஞர்களில் சங்கர ராம சுப்பிரமணியன் அதிகமாக கவனிக்கப்படும் இளம் படைப்பாளிகளில் ஒருவர். கவிதைகளில் இவரது தனித்துவம் தெரிகிறது. ஆனால் எந்த ஒரு கவிதையும் மகத்தான கவிதை என்று கூறமுடியாத குறைப்பிரசவங்களாகவே காட்சியளிக்கின்றன. சொற்களின் மீது மயக்கம் தெளிதலே நல்ல கவிதை. நவீன பிம்பங்களை சொற்களாக்கி கவிதைகளாக்க முயற்சித்து தோற்றவர்கள் ஏராளம். இத்தொகுப்பின் தலைப்பு முதற்கொண்டே நான் ரொம்ப நவீன கவியாக்கும் என்ற எகத்தாளத்துடன் உள்ளன கவிதைகள்.மிகச்சில கவிதைகளை மட்டும் ரசிக்க முடிந்தது.
ரயில் கடல் என்றொரு கவிதை....ரயிலை முதன் முறையாக பார்ககிற மகளுடன் பயணிக்கிற தந்தை பற்றிய கவிதை...
இணைபிரியாத தண்டவாளங்கள்
கடலுக்குள் உறைந்திருக்கும் கடல்களின் பேச்சை
கடல்-ரயில் தன் இருட்டில் தடதடத்து உரைப்பதை
முழுமையும் என் மகளிடம் சொல்ல முடியாது
என்று என்னவோ சொல்ல வருகிறார்...சொல்லவில்லை.
கிளி ஜோஸ்யம் என்ற கவிதை மட்டும் ஓரளவுக்கு கவிதையாக முயற்சிக்கிறது.
பின் மலர் 1, 2 என்ற இரண்டு கவிதைகள் மரணததைப் பற்றி பேசுபவையாக தலைப்புக்கு பொருந்தி வருகின்றன. இரண்டு கவிதைகளிலும் மரணம் ஒரு பூனையை போல் கூரை வழியாக வருவதும், தன்னை எரித்து அஸ்தியைக் கரைத்த பின் குருவியாவேன், குதிரையாவேன் என்று சொல்வதும் அழகானவை. இது போன்ற கவிதைகளை எழுதக்கூடிய ஒருநல்ல கவிஞனின் சுமாரான கவிதைத் தொகுப்பு இது.
--------------------------------------------------
ஸ்ரீவள்ளியின் கவிதைகள்
பொன்கொன்றை பூக்க வந்த பேய் மழை
ஏப்போதோ புத்தகக் காட்சியில் வாங்கிய புத்தகம். படிக்கவில்லை. எடுத்து படிக்க ஆரம்பித்த போது ஸ்ரீவள்ளியின் கவிதைகள் தவறவிடக் கூடாதவை என்ற எண்ணம் மேலோங்கியது. யார் இந்த ஸ்ரீவள்ளி எனத்தெரியாது. மனுஷ்யப்புத்திரன், பெருமாள்முருகன், அரவிந்தன் என அவரை அறிந்தவர்கள் தெரியப்படுத்தலாம்.
மன நல மருத்துவரின் ஆலோசனையைப் பெற போனதாக முன்னுரையில் சொல்கிறார். ஆனால் எழுதித்தான் கடக்கவேண்டும் என்று அசோகமித்திரன் கூறியதை நினைவில் இருத்தி தனது கவிதை புனையும் நிலைப்பாட்டை அடைந்ததாகவும் கூறுகிறார்.
என் நினைவுகள் என்னுடையவையாக இல்லாத போது
எதை நான் நினைவு கூர்வது என்று கேள்வி எழுப்புகிறார் ஸ்ரீவள்ளி
வெட்டி வீழ்த்தப்பட்டிருக்கிறது
பசிய கிளையோடு ஒரு மரம்
உலகமா முடிந்துவிட்டது என அதன் மேல் ஏறி விளையாடுகிறது ஒரு அணில்
என்ற வரிகள் துன்பத்தையும் வீழ்ச்சியையும் கடக்க விளையும் நம்பிக்கைகள்.
பிரிவின் உருவம் ஒரு சிறந்த காதல் கவிதையாக பரிணமிக்கிறது. எப்போதும் எதுவும் முதல்முறை அல்ல கவிதையும் மிகச்சிறந்த பதிவு.
உன் சுட்டுவிரலால் என்னைத் தொட்டாய்
அப்போது நான் ஒரு பிரபஞ்சம் ஆனேன்
பால்வீதியாக விரிந்தேன்.
கோளாக ஒரு பாதையில் ஒழுங்குபட்டேன்
என்னை நானே சுற்றிக் கொண்டு கிறுகிறுத்தேன்
எரிகல்லாகச் சஞ்சரித்தேன்
விண்மீனாக வெடித்துப் பற்றியெரிந்தேன்
என்ற வரிகள் கிளர்ச்சியூட்டுகின்றன. கவிதையின் பால் மனம் லயிக்க வைக்கின்றன. தேர்ந்த சொல்லழகும் கருத்தும் கைகோர்க்கின்றன.
மறு கல்லில் எத்தனை கடவுள்கள் ஏறினாலும்
எப்போதும் தாழ்ந்கே இருக்கிறது
பாவங்களின் தராசுத் தட்டு என்றும் ஸ்ரீவள்ளியின் கவிதை கவர்கிறது. தீர்த்தயாத்திரை ஒரு முழுமையான அனுபவத்தை தருகிறது.சந்திப்பு என்ற கவிதை மற்றொரு இனிய காதல் கவிதை.
என்னோடுதான் இருக்கிறாய், பிறகு போன்ற கவிதைகளும் குறிப்பிடத்தக்கவை. தமிழுக்கு ஒரு நல்வரவு ஸ்ரீவள்ளி. அவர் நிறைய எழுத வேண்டும்.
வெளியீடு சஹானா sahanapublication@gmail.com
---------------------------------------------
யாழன் ஆதி கவிதைகள்
யாருமற்ற சொல்
தமிழின் அழுத்தமான பதிவுகளைக் கொண்ட கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் யாழன் ஆதி.2012ம் ஆண்டு வெளியான இத்தொகுப்பு மட்டும் கையில் இருக்கிறது. மற்ற தொகுப்புகளை படிப்பதிலும் ஆர்வமுடையவனாக இருக்கிறேன்.
இத்தொகுப்பில்  உள்ள கவிதைகளைப் பின் தொடர்ந்தால் ஆதியின் கவிமனத்தின் கதவுகள் திறக்கின்றன. சில கவிதைகளில் அவை பிரம்ம ராட்சசனாக அச்சுறுத்துகின்றன.
வானத்து சந்திரனின் நீலத்தை கூற வந்து.கவிஞா் எங்கே போகிறார் பாருங்கள்.
சிறுபிராயத்தில் என் வகுப்புத் தோழி அணிந்திருந்த பாவாடையின் அதே நீலம்.
எனது ஊரும் ஆறும் மிகச்சிறந்த கவிதை. அவர் வாழும் ஆம்பூர் நகரை மையமாகக் கொண்டது.கடைசி கொருக்கையையும் சாகடிக்கும் தோல் வியாபாரம் வீட்டில் தண்ணீரை மாசுபடுத்தியதை கூறுகிறார்.
கால்கழுவ ஒரு தண்ணீரையும் சோறாக்க ஒரு தண்ணீரையும்
குளிக்க ஒரு தண்ணீரையும் வேதியியல் ஆய்வகத்தன்மையில்
வைத்திருக்கிறது வீடு.
மெல்ல நிறம் மாறும் எங்கள் தோட்டத்து மலர்கள்
மணமற்ற அவற்றில் கசிகிறது
தோல் வாசம்.
சில மென்மையான காதல் கவிதைகளும் இத்தொகுப்பில் உண்டு.
வெப்பத்தை தடவி வருகின்ற கண்களின் வெண்படத்தில்
ஒரு சுவரொட்டியைப் போல ஒட்டிச் செல்கிற மனம் கொண்டவராய் தம்மை அடையாளம் காட்டுகிறார் யாழன் ஆதி.
மழைப் பயணம். அப்படியே ஆகக் கடவது , ஆகிய இரண்டுகவிதைகளையும் தமிழ்இலக்கிய உலகம் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.
பின்னுரையில் கவிஞர் கூறுவது போல் எல்லாவற்றையும் விட முக்கியமானது வாழ்க்கை.
--------------------------------வெளியீடு நீர்க்கண்ணாடி ஆம்பூர்  9597908481
வண்ணை சிவா கவிதைகள் -நதியின் பயணம்
எப்போதோ பத்து ரூபாய்க்கு போட்ட ஒரு ஹைகூ புத்தகத்தை விமர்சித்து இப்ப என் மானத்தை ஏன் வாங்கனும் என சிவா முணுமுணுப்பது தெரிகிறது. கையில் கிடைத்ததை விடுவேனா... ஹைகூ என்ற பெயரில் சகட்டு மேனிக்கு எழுதித் தள்ளுகிறார். சில கவிதைகள் புன்னகைக்க வைப்பதுடன் சரி. எப்படி இது போன்ற தொகுப்புகளை மதிப்பீடு செய்வது என்றே தெரியவில்லை .எனக்கு இந்த தொகுப்பை விட சிவா முக்கியமானவராக இருக்கிறார். இலக்கியத்தின்பால் அவருக்கு இருக்கும் தொடர்ந்த ஈடுபாடு, பங்கேற்பு தற்போது அவர் எழுதும் கவிதைகளில் காணப்படும் வளர்ச்சி என சேர்த்தே தான் இந்த தொகுப்பை மதிப்பிட வேண்டும் அல்லவா....
என் கைகளை குறுக்கே போட்டு சிவாவை தடுத்துவிட விரும்பவில்லை. அவரே சொல்வது போல்
கைகளை குறுக்கே நீட்டினால்
நின்று போகுமோ நதியின் பயணம்?
இத்தொகுப்பில் எனக்குப் பிடித்த இன்னொரு சிறுகவிதை
இருட்டில்  தொலைத்துவிட்டு
தேடிக் கொண்டிருக்கிறேன் தீப்பெட்டியை
--------------------------------------------------------------
சஷ்டி பிரியா கவிதைகள்
கனவு தேவதையே
கவிஞர் மீராவின்  கனவுகள் கற்பனைகள் காகிதங்கள் பாணியில் சிறிய காதல் கவிதைகள். அந்த அளவுக்கு இல்லை.
திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த மாணவியாக இருந்த ம.சஷ்டி பிரியா திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர். 2014ம் ஆண்டு போட்ட முதல் தொகுப்பு இது.தொடர்ந்து அவர் எழுதுகிறாரா....ஓய்ந்துவிட்டாரா எனத் தெரியவில்லை. பெரும்பாலானவை காதல் கவிதைகள். படிக்கிறவயதில் இளம் மனதுக்குள் எழும் சலனங்கள். இவற்றை கவிதையாக்குவதற்கான இலக்கியப் பயிற்சியோ அனுபவமோ சொல்வளமோ இல்லாத நிலையிலும் பலர் இப்படித்தான் கவிதைகளை வெளியிட்டு வருகிறார்கள். தன் பெண் மன ஆசைகளை கூறாமல் தன்னை ஆணாக பாவித்துக் கொண்டு எழுதுவதால் இரவல் உணர்ச்சிகளுடன் கவிதைகள் ஒட்டாமல் நிற்கின்றன. என்றைக்குஉணர்வு பூர்வமான கவிதையை சஷ்டி பிரியா எழுதுகிறாரோ அதுவரை காத்திருப்போம். இத்தொகுப்பி்ல் சில சிறிய தெறிப்புகள் உள்ளன. இதில் ஒன்று...
காற்று என்னுடன் பேசும் மொழிகளை
என்னால் அறிய முடிகிறது
நீ என்னுடன் இருக்கும் போது
-மலர்க்கண்ணன் பதிப்பகம் moneyezhilan@gmail.com
----------------------------------------------------------

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...