Wednesday 11 May 2016

எம்ஜிஆர்- மூன்றெழுத்து மந்திரம்







 எம்ஜிஆரின் படங்களில்  டாப் டென் பட்டியலிட சொன்னால் எனது தேர்வு இதுதான்
1. அன்பே வா
2 குடியிருந்த கோவில்
3 உலகம் சுற்றும் வாலிபன்
4. நம்நாடு
5. நான் ஏன் பிறந்தேன்
6.எங்க வீட்டுப் பிள்ளை
7 இதயக்கனி
8.பணம் படைத்தவன்
9. படகோட்டி
10.ஆயிரத்தில் ஒருவன்
இதில் முதல் படத்தைத் தவிர மற்ற படங்களை விருப்பம் போல நம்பர்களை மாற்றிக் கொள்ளலாம்.
எல்லா படங்களிலும் வசனம், காட்சி, பாடல்கள் மூலம் கருத்துகளை சொன்னவர் எம்ஜிஆர்.
தவறு செய்தால் தட்டிக் கேட்பதும், குழந்தைகள், பெண்களை நேசிப்பதும் எம்ஜிஆரின் பார்முலா.இன்றுவரை ரஜினி, கமல், விஜய் வரை இந்த பார்முலாதான் நீடிக்கிறது. எவ்வளவு நாளைக்கு நல்லவனாவே இருப்பது போரடிக்குது என்று அஜித் பேசும் வசனமும் இதன் நீட்சிதான்.
மனிதன் தவறுகளை செய்பவன்தான் .ஆனால் திருத்திக் கொள்ள வேண்டும் என்பது எம்ஜிஆரின் அவதானிப்பு. திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் வருந்தாத உள்ளங்கள் பிறந்தென்ன லாபம் இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும் இவர்போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்ற எம்ஜிஆரின் பணம் படைத்தவன் படத்துக்காக வாலி எழுதிய பாடல் வரிகள் பசுமரத்தாணி போல சிறுவயதில் என் மனதுக்குள் பதிந்து விட்டன. இன்று வரை அதன் தடயம் அழியவே இல்லை.

எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம் தமிழக மக்களின் மனசாட்சியின் குரலாக ஒலிக்கிறது.


-----------------------------------------------------------------------------------------------------------------------




 
MGR – மூன்றெழுத்து மந்திரம்

செந்தூரம் ஜெகதீஷ்
மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்றால் யார் என்று யோசிக்க வைக்கும் பெயரை எம்.ஜி.ஆர் என்று சொன்னால் சின்னக் குழந்தை கூட அடையாளம் தெரிந்துக் கொள்ளும். இந்த மூன்றெழுத்து மந்திரம் மறைந்து 28ஆண்டுகளாகியும் இன்றும் தமிழக அரசியலின் முக்கிய சக்தியாக விளங்குகிறது.

நாடகத்துறையிலிருந்து சினிமாவுக்கு வந்த எம்.ஜி.ஆர். திமுகவில் இணைந்து தமது அரசியல் வாழ்க்கைக்கான பாதையமைத்துக் கொண்டார். அவருடைய திரைப்படப் புகழால் கட்சியும் வளர்ந்தது. அண்ணாதுரையின் இதயக்கனியாக இடம் பிடித்தார்.

அன்பே வா போன்ற படங்களில் அந்தக்காலத்து இந்திப்பட நாயகர்கள் போல ரொமாண்டிக்காக தோன்றினார் எம்.ஜி.ஆர்.நடனம், நடிப்பு , சண்டை காட்சிகளால் அவரது திரைப்படங்களை ரசிகர்கள் விரும்பிப் பார்த்தனர்.அன்பு, அறம், நேர்மை, உழைப்பு ஆகிய குணங்களை போற்றியே அவரது பாத்திரங்கள் உருவாகின.தாய்ப்பாசம், குழந்தைகளுடன் நேசம் ஆகிய குணங்களையும் ரசிகர்கள் ஆர்வமாக ஏற்றுக் கொண்டார்கள். தமிழக மீனவர்களின் துயர வாழ்க்கையை அன்றே படகோட்டி படம் மூலம் பதிவு செய்தவர் எம்.ஜி.ஆர்.விவசாயி, தொழிலாளி, ரிக் ஷாக்காரன், மீனவர், நரிக்குறவர் என அடித்தட்டு மக்களின் பிரதிநிதியாக சினிமாவில் முத்திரை பதித்து தன்னிகரில்லாத நடிகராக திகழ்ந்தார் எம்.ஜி.ஆர்.

எங்க வீட்டுப் பிள்ளையில் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது வாங்கியவர் எம்ஜிஆர். அப்படத்தில் அவர் பாடிய நான் ஆணையிட்டால் பாடல் அவரது கொள்கை விளக்கப் பாடலாகவே அமைந்துவிட்டது.

நடிகராக மட்டுமின்றி மிகச்சிறந்த இயக்குனராகவும் எம்ஜிஆர் நாடோடி மன்னன், அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்களில் பெயரெடுத்தார்.

திமுகவில் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த இயக்கத்திற்கு எதிராக அதிமுகவை தொடங்கிய எம்ஜிஆருக்கு கடுமையான எதிர்ப்புகளை திமுக ஏற்படுத்தியது. அவரது நேற்று இன்று நாளை படத்தின் அரசியல் வசனங்கள், பாடலுக்காக அந்தப் படத்தை திரையிட விடாமல் திமுகவினர் ஏவிய ரவுடிகள் வன்முறையில் ஈடுபட்டனர். சென்னை அயனாவரம் திரையரங்கில் இப்படம் வெளியான போது இருக்கைகளின் கீழே ஏராளமான சாராய பாட்டில்கள் உடைந்து கிடந்த்தைப் பார்த்திருக்கிறேன்.திண்டுக்கல் இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற்றதை தெரிவித்து, ஒரு மாறுதலை சொல்வதற்கு தேர்தல்உண்டு என அப்படத்தில் தம்பி நான் படிச்சேன் காஞ்சியிலே நேற்று பாடலில் பாடுவார் எம்ஜிஆர். இரட்டை இலையும் அதிமுக கொடியும் அதில் காட்டப்படும். அதுமட்டுமின்றி மக்கள் நலம் மக்கள் நலம் என்றே கூறுவார் தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனத்தில் கொள்ளுவார் என்ற வரிகளும் வாலியின் தீர்க்கதரிசனம்தான்.

எம்ஜிஆர் மூன்று முறை முதலமைச்சராக மாறியதும் அவர் ஆணையிட்டதெல்லாம் நடந்ததும் ஏழைகள் வேதனைப்பட்டதும் தொடரத்தான் செய்தது. எம்.ஜி.ஆருக்கு இந்தப் பாடல்களை எழுதிய வாலியே எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வந்ததும் அவருக்கு அடித்த ஜால்ரா சத்தம் அறிவாலயத்தையே அதிர வைத்தது தனிக்கதை.

உடல்நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்க புரூக்ளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எம்ஜிஆர், முதலமைச்சராக வெற்றிவாகை சூடினாலும் 1987ம் ஆண்டில் டிசம்பர் மாதம் காலமானார். எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு இரண்டாக பிளந்த அதிமுகவை மீண்டும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இன்று வரை அதன் தலைவியாக திகழ்கிறார் ஜெயலலிதா.

எம்ஜிஆர் என்ற திரைப்பட ஆளுமையையும் அரசியல் சக்தியையும் அழிக்கும் ஆற்றல் எழுதிச் செல்லும் விதியின் கைகளுக்குக் கூட இல்லை.


------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நினைத்ததை முடிப்பவன்

இந்தியில் இருந்து தமிழுக்கு எம்ஜிஆர் ரீமேக் செய்யப்பட்ட எம்ஜிஆர் படங்கள் எவை...? திடீரென இந்த ஆராய்ச்சியில் இறங்கியதற்கு காரணம் நான் சந்தித்த ஒரு மனிதர். அதிமுகவைச் சேர்ந்த தபா கான் என்பவரை ஒருமுறை ஆழ்வார்ப்பேட்டை சரஸ்வதி ஸ்டோர்ஸ் சிடி கடையில் சந்தித்தேன். திரைப்படங்களைப் பற்றி நுட்பமான அறிவு கொண்ட விற்பனையாளர் கருணாகரன் அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். தம்பி எம்ஜிஆர் நடித்த படங்களில் இந்தியிலிருந்து தமிழுக்கு வந்த படங்கள் எவை என அவர் மிகுந்த அன்புடன் கேட்டார். நாளைக்கே விமானத்தில் டெல்லிக்குப் போய் பாலிகா பஜாரில் உள்ள நண்பர் கடையிலிருந்து அத்தனை படங்களையும் வாங்கி வருகிறேன் என கூறிய அவர் ஆர்வம் மலைக்க வைத்த்து..திண்டிவனத்தில் உள்ள தமது திரையரங்கில் இந்திப் படங்களையும் எம்ஜிஆர் நடித்த தமிழ்ப் படங்களையும் திரையிட வேண்டும் என்பது அவருடைய ஆசை. உடனடியாக நினைவைக் கூர் தீட்டி படங்களை நான் பட்டியலிட்டேன்.

தோ ஆங்கே பாரா ஹாத் என்ற இந்திப்படம் இயக்குனர் பீமல்ராயின் மகத்தான படைப்பு அதை தமிழில் எம்ஜிஆர் பல்லாண்டு வாழ்க என மாற்றினார்.
சச்சா ஜூட்டா இந்தியில் ரொமான்டிக் ஹூரோவாக இருந்த ராஜேஷ் கன்னா முதன்முறையாக ஆக்சன் படத்தில் நடித்தார்.இரட்டை வேடம் கொண்ட இப்படத்தை எம்ஜிஆர் நினைத்ததை முடிப்பவன் என்று தமிழில் மாற்றினார். பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த பாடலில் ராஜேஷ்கன்னாவின் உருக்கமான நடிப்பை எம்ஜிஆர் தமிழில் மெருகேற்றியிருந்தார். உருக்கத்தை முழுவதுமாக ஊர்வசி பட்டம் பெற்ற நடிகை சாரதாவிடம் தந்துவிட்டார் எம்ஜிஆர்.
ராம் அவுர் ஷ்யாம் இந்தப் படத்தில் இந்தியில் நடித்தவர் திலீப்குமார். நடிப்புலக ஜாம்பவான் எனப் பெயர் பெற்ற அவரே தமிழில் எடுக்கப்பட்ட எங்க வீட்டுப்பிள்ளையில் எம்ஜிஆரின் நடிப்பைப் பார்த்து வியந்து அவரைப் போல தம்மால் நடிக்க முடியாது என பெருந்தன்மையுடன் பாராட்டினார்.
ஜன்ஜீர்- அமிதாப்பச்சனுக்கு இந்தியில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை தந்த படம். சல்மான் கானின் தந்தை சலீம் மற்றும் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் ஆகியோர் இணைந்து சலீம்-ஜாவேத் என்ற இரட்டையராக கதைவசனம் எழுதிய படம் இது. பின்னர் இதே ஜோடிதான் ஷோலே, தீவார் போன்ற வெற்றிப்படங்களை அளித்தது. தமிழில் இப்படத்தை எம்ஜிஆர் சிரித்து வாழ வேண்டும் என எடுத்தார். கதாநாயகனுக்கு இணையான மற்றொரு பாத்திரத்தில் இந்தியில் பிரான் நடித்தார். அந்த வேடத்தையும் எம்ஜிஆர் ஏற்று முஸ்லீம் பத்தானாக நடித்து மேரா நாம் அப்துல் ரகுமான் எனப்பாடி இஸ்லாமிய ரசிகர்களை திருப்திப்படுத்தினார்.
ஜிக்ரி தோஸ்த்- இந்தியில் ஜித்தேந்திரா நடித்த இந்தப் படத்திலும் இரட்டை வேடம் ஏற்று தமிழில் தேவர் பிலிம்ஸ் நிறுவனத்திற்காக மாட்டுக்கார வேலனாக நடித்தவர் எம்ஜிஆர். ஒரு பக்கம் பார்க்குறா என்ற நயமான பாடல்காட்சியில் எம்ஜிஆரின் நளினமான நடிப்பு இன்றும் ரசிக்கத்தக்கது.
ஃபூல் அவுர் பத்தர் என்ற படம் இந்தியில் தர்மேந்திராவும் அவரால் காதலிக்கப்பட்டு கைவிடப்பட்ட மீனாகுமாரியும் நடித்தது. தமிழில் மீனாகுமாரியின் வேடத்தில் சவுகார் ஜானகி நடித்தார். ஒளிவிளக்கு என பெயர் மாறிய இப்படத்தில்தான் முதல்முறையாக எம்ஜிஆர் குடிகாரனாக நடித்தார். அந்தப் படம் இரட்டை வேடம் இல்லை என்பதால் அவரே தைரியமாக சொல் நீ மனிதன்தானா என்று பாடி குடி குடியை கெடுக்கும் என்ற தனது கொள்கையையும் பிரச்சாரம் செய்தார்.
இந்தப்படத்தில்தான் இறைவா உன் காலடியில் எத்தனையோ மணி விளக்கு என்ற பாடலில் உயிருக்குப் போராடும் எம்ஜிஆருக்காக சவுகார் பாடுவார். புரூக்ளின் மருத்துவமனையில் எம்ஜிஆர் சிகிச்சை பெறும் போதும் தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் இந்தப்பாடல் ஒலித்தது.
ரக்வாலா- இதுவும் தர்மேந்திரா நடித்த படம்தான். காவல்காரன் என்ற பெயரில் தமிழில் உருவாக்கினார் எம்ஜிஆர். இப்படத்தில் இடம் பெறும் பாக்சிங் காட்சிகளும் ரகசிய போலீஸ்காரராக எம்ஜிஆர் ஏற்ற கதாபாத்திரமும் ரசிகர்களை கவர்ந்தன.
ரிக்சாவாலா- தமிழில் இதுதான் ரிக்சாக்காரன். இந்தியில் ரந்தீர் கபூரும் இளமை துள்ளும் பெரிய மார்பகங்களுடைய நீத்து சிங்கும் நடித்தனர்.தமிழில் நீத்துவுக்கு இணையான இளமையுடன் ஒரு கதாநாயகியைத் தேடிய எம்ஜிஆர் மஞ்சுளாவை கண்டெடுத்தார்.
ஜீனே கீ ராஹா இந்தப் படத்தை தமிழில் எம்ஜிஆர் நான் ஏன் பிறந்தேன் என மாற்றினார். இரு பெண்களுக்கு இடையில் பாசத்தால் பிணைக்கப்பட்ட ஒரு ஆண் என்ற கத்தி மேல் நடக்கும் கதாபாத்திரம். எம்ஜிஆரின் அரசியலுக்கும் கொள்கைகளுக்கும் இடமில்லாத குடும்பக்கதை ஆயினும் நான் ஏன் பிறந்தேன், சித்திரச் சோலைகளே, தம்பிக்கு ஒரு பாட்டு போன்ற பாடல்களில் எம்ஜிஆர் தனது கொள்கைகளை பதிவு செய்துவிட்டார். இந்தியில் ஜித்தேந்திரா நடித்த மென்மையான காதலனின் அப்பாவித்தனமான தோற்றம் எம்ஜிஆருக்கும் அழகாகப் பொருந்தி விட்டது. இப்படத்தில் இசையமைத்த சங்கர்-கணேஷ் தனிப்புகழ் பெற்றனர்
சைனா டவுண்- இதுதான் தமிழில் குடியிருந்த கோவில். இந்தியில் ஷம்மி கபூர் நடித்தது. தமிழின் முதல் பெண் பாடலாசிரியரா ரோஷனரா பேகம் அறிமுகம் ஆனது இப்படத்தில்தான். பின்னர் இதே கதையை தமிழிலிருந்து இந்திக்கு உல்டா செய்த இயக்குனர் மகேஷ் பட் இதனை இந்தியில் ஷாருக்கானை வைத்து இயக்கினார்.
யாதோங்கி பாரத் தர்மேந்திரா நடித்த இந்திப்படத்தின் ஆக்சன் காட்சிகளுக்காக இதை எடுத்த எம்ஜிஆர் முற்பகுதியில் மற்றொரு கதாநாயகனான விஜய் அரோராவே பாதிக்கதையை ஆக்ரமித்ததால் அந்தப்பாத்திரத்தையும் தானே நடித்து இரட்டை வேடம் ஏற்றார். லதாவின் தூக்கலான கவர்ச்சியுடன் இனிமையான பாடல்களுடன் உருவான இப்படத்தில் மூன்றாவது தம்பியாக தெலுங்கு நடிகர் சந்திரமோகன் நடித்தார்.
உல்ஜன்- இதயக்கனியாக மாறிய இந்தப்படம் இந்தியில் சஞ்சீவ்குமார், சுலக்சனா பண்டிட்டின் பக்குவமான நடிப்பாலும் கிஷோர்- லதா பாடல்களாலும் மெருகேற்றப்பட்டது. இதனை தமிழில் மிக அழகாக மாற்றம் செய்தார் இயக்குனர் .ஜகன்னாதன். தோ ரஹா படத்தில் கற்பழிப்புக் காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய ராதா சலூஜாவை கதாநாயகியாக நடிக்க வைத்தார் எம்ஜிஆர். ராதா சலூஜா எம்ஜிஆருடன் இன்றுபோல் என்றும் வாழ்க படத்திலும் நடித்து எம்ஜிஆருடன் நடித்த ஒரே இந்தி நடிகை எனும் மதிப்பை பெற்று அதற்குபின்னர் காணாமல் போனார்.
ஹாத்தி மேரே சாத்தி தேவர் பிலிம்சின் இந்தப் படம் தமிழில் நல்லநேரமாக எடுக்கப்பட்டது. இந்தியில் ராஜேஷ் கன்னா ஹீரோ. தமிழுக்கும் இந்திக்கும் பெரிதாக மாற்றமில்லை என்றாலும் முகமது ரபி குரலில் யானையின் மரணத்திற்காக ஒலிக்கும் பின்னணி பாடல் தமிழில் இல்லை.
அப்னா தேஷ்- இதுவும் ராஜேஷ் கன்னா நடித்த படம். தமிழில் நம் நாடு என மாற்றினார் எம்ஜிஆர். இந்தியில் கவர்ச்சிப் புயல் மும்தாஜின் நடிப்பு ராஜேஷ்கன்னாவையே சில இடங்களில் ஓரம் கட்டியது. தமிழில் ஜெயலலிதா தமிழ்ப்பண்பாட்டை மனத்தில் கொண்டு உடலை மறைத்து நடித்தார்.
கோரா அவுர் காலா- ராஜேந்திரகுமார் நடித்த இந்தப்படமும் இரட்டைவேடம் கதைதான். இந்தியில் இந்தப் படம் பெற்ற வெற்றியை தமிழில் பெறவில்லை, கரி பூசிய எம்ஜிஆரை ரசிகர்கள் ஏற்கவில்லை. உருவத்திலும் பொன்மனச்செம்மலாகவே பார்த்துப்பழகி விட்டார்கள்.
ராஜா ஜானி தர்மேந்திரா-ஹேமாமாலினி ஜோடியாக நடித்த இப்படத்தை தமிழில் ராமன்தேடிய சீதையாக ஜெயலலிதா எம்ஜிஆருடன் ஜோடி சேர்ந்தார். மிகச்சிறந்த திரைக்கதை கொண்ட படம் இது.
இதே போன்று சிவாஜிகணேசனும் ரஜினி கமல்ஹாசன் போன்றவர்களும் பல இந்திப்படங்களை தமிழாக்கியுள்ளனர். இதில் அமரகாவியம் இந்தியில் முகந்தர் கா சிக்கந்தராகவும் சந்திப்பு நசீப் என்றும் வெளியாகின. ரஜினியின் பில்லா இந்தியில் டான். கமலின் சட்டம் இந்தியில் தோஸ்தானா.
நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே......
எம்ஜிஆர் மீது மயக்கம் கொண்ட கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். அவர் போடும் டைட்டான சட்டையை இன்றும் விரும்பி அணிகிறேன். நேர்மை, நியாயத்திற்காக வாதாடும் குணம், ஏழைகள் மீது கருணை, முதியோர் மற்றும் உழைப்பாளிகளுடன் தோழமை, குழந்தைகள் மீதான பிரியம், அழகான பெண்களுடன் காதல் லீலைகள், தத்துவம், போன்ற எம்ஜிஆரின் முத்திரைகள் தெரிந்தோ தெரியாமலோ என்னைப் போன்ற லட்சக்கணக்கான ஆண்களின் அடையாளமாகி விட்டுள்ளது.
இறைவன் இருப்பதை நானறிவேன் என்னை அவனே தானறிவான்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்
உன் கண்ணில் ஒருதுளி நீர்வழிந்தாலும் உலகம் அழவேண்டும்
மாபெரும் சபையில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்
கற்றவர் சபையில் உனக்காக தனி இடமும் தரவேண்டும்
என்ற வரிகள் யாவும் எனக்காக எழுதப்பட்டது போல் தோன்றுகின்றன. இருள் வந்த போது ஒளி ஒன்று உண்டு என்ற நம்பிக்கையை எம்ஜிஆரின் பாடல்கள் ஏற்படுத்துகின்றன.
கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், ஆலங்குடி சோமு, நா.காமராசன், முத்துலிங்கம், பூவை செங்குட்டவன், உள்ளிட்ட பல பாடலாசிரியர்கள் எம்ஜிஆருக்காக எழுதினாலும் அவை அத்தனையும் எம்ஜிஆரின் ஒற்றைக்குரலாகவே ரசிகர்களுக்கு ஒலித்தது.
எம்ஜிஆரை நான் ஒருமுறைதான் நேரில் பார்த்திருக்கிறேன். அப்போது எனக்கு பதின்பருவம். மக்கள் குரல் மாலை நாளிதழில் டி.ஆர்.ஆர். கட்டுரைகளை விரும்பிப் படிப்பேன். எனது அரசியல் அரிச்சுவடி அதுதான்.
அண்ணா நினைவு நாளில் அவரது நினைவிடத்திற்கு எம்ஜிஆர் மலர் வளையம் வைக்க வருகிறார் என அறிந்து காலை 6 மணிக்கே கடற்கரைக்கு போய்விட்டேன். கையில் மாலை வாங்கிய மக்கள் குரல் இருந்தது. 8 மணிக்கு செக்க செவேல் என சூரியனை விட பிரகாசமாக ஜொலித்தபடி வந்தார் எம்ஜிஆர். ஒளியே ரூபமெடுத்து நடந்துவருவது போல் இருந்த்து. வெள்ளை கரை வேட்டி சட்டையுடன் வழக்கமான தொப்பியும் கண்ணாடியும் அணிந்திருந்த எம்ஜிஆர் தொண்டர்களிடம் வணக்கம் கூறியபடியும் கைகளை உயர்த்தி ஆட்டியபடியும் சென்றுக்கொண்டிருந்தார். ஆரவாரமும் கரவொலிகளும் அடங்கவே இல்லை.இத்தனை ஆர்ப்பாட்டத்திலும் என்கையில் இருந்த மக்கள் குரலை பார்த்துவிட்டார் எம்ஜிஆர். நான் அதனை கையில் பிடித்து அவரை நோக்கி அசைத்துக் கொண்டிருந்தேன். என் அருகில் வந்த அவர் என் கன்னத்தைத் தொட்டு தடவி சிரித்தபடி சென்றுவிட்டார். எனக்கு சொர்க்கத்தில் மிதக்கிற நினைப்பு
எங்கவீட்டுப் பிள்ளையில் நான் ஆணையிட்டால் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றுதான். எம்ஜிஆரின் சுறுசுறுப்பும் நடன அசைவுகளும் டிஎம்எஸ் சின் கம்பீரமான குரலும் வாலியின் வைர வரிகளும் கொண்ட பாடல் அது. இந்தப் பாட்டு எனக்கு மட்டுமின்றி என்னை விட 40 வயது குறைந்த விக்கிக்கும் பிடித்த பாட்டாக இருப்பதுதான் ஆச்சரியமளிக்கிறது.
எம்ஜிஆரின் புகழ் தலைமுறைகளைக் கடந்து தொடர்வதற்கான சாட்சி எனக்கு என் வீட்டிலேயே இருக்கிறது.
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி.தானுங்க.....
தமிழ்த்திரையுலகம் கண்ட ஜோடிப் பொருத்தங்களில் முதன்மையானது எம்ஜிஆர் ஜெயலலிதா ஜோடிதான். எம்.ஜிஆரும் ஜெயல லிதாவும் சேர்ந்து நடித்த படங்களின் பட்டியல் நீளமானது. இதில் முக்கியமாக ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண், குடியிருந்த கோவில், ராமன் தேடிய சீதை, அன்னமிட்டகை, ஒருதாய் மக்கள், தாயைக் காத்த தனயன், ரகசிய போலீஸ்115, காவல்காரன், மாட்டுக்கார வேலன்,தேடி வந்த மாப்பிள்ளை, முகராசி, புதிய பூமி. முகராசி ஆகிய படங்கள் உடனடியாக நினைவுக்கு வருகின்றன. குமரிக்கோட்டம் படத்தில் ஜெயலலிதாவை எம்ஜிஆர் ஆணவக்காரியாக சித்தரித்து பாடுவார் என்பதால் அப்படமும் பாடலும் கலைஞர் டிவியில் அடிக்கடி இடம் பெறுவதுண்டு.
அரசியலை விட சினிமாவில்தான் ஜெயலலிதா மனம் கவர்கிறார். அதுவும் எம்ஜிஆர் படங்களில் அவரது திறமை மிக அற்புதமாக வெளிப்படுகிறது. சிவாஜியுடன் நடித்த சில படங்களும் அருமை.
ரகசிய போலீஸ் 115ல் கணவன்-மனைவியாக எம்ஜிஆர்-ஜெயல லிதா சண்டை போடும் காட்சியும் குடியிருந்த கோவிலில் நீயேதான் என் மணவாட்டி என ஊஞ்சலில் ஆடிப்பாடுவதும் எனக்கு மிகவும் பிடித்த திரைக்காட்சிகள்.
அதெல்லாம் விடுங்கள் .ஆறுகுணங்கள் கொண்டவளாம் ஒரு பாவை என்று ராமன் தேடிய சீதையில் எம்ஜிஆரும் எனது மடியில் வா ராமா என எம்ஜி ராமச்சந்திரனை ஜெயலலிதா அழைப்பதும் பரவசமான காதல் காட்சிகளில் ஒன்று
திரைவாழ்வைப் போல எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் நிஜவாழ்விலும் ஜோடி சேர வேண்டும் என விரும்பிய ரசிகர்களில் நானும் ஒருவன்தான்.நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க என்று ஒளிவிளக்கில் அவர்கள் ஆடிப்பாடினார்கள். ராமன் தேடிய சீதையில்தான் எம்ஜிஆரும் ஜெயல லிதாவும் மணக்கோலத்தில் வரும் காட்சி வரும். அது வரலாற்றால் பதிவு செய்யப்பட்ட அற்புதக் காட்சியாகும்.
----------------------------------------------------------------------------------------------------
 
 
 
 
 

1 comment:

  1. மாட்டுகாரவேலன் தேவர் தயாரிப்பில்லை அது மதுரை கனகசபையினது - ஜெயலலிதாவே கவர்ச்சியாக நடித்தார் பல படங்களில் அப்படி இந்தி நடிகைகளே காட்டியதில்லை என்றார்கள் அந்தக்கால திரை இரசிகர்கள். "தர்மம் எங்கே" என்ற சிவாஜி படத்தில் ஜெயலலிதா மோசமான அசிங்கமான அசைவுகளை அசைத்து ஆடியிருக்கிறாராம் என்று அந்த படத்தை பார்த்தவர்கள் கூறினார்கள் . உங்களது 10 படங்களில் எம்ஜிஆரின் தயாரிப்புகளான வெள்ளிவிழா கண்ட படங்கள் நாடோடி மன்னன் , அடிமைப்பெண் படங்களில்லையே ..

    ReplyDelete

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...