Friday 6 May 2016

உலக சினிமா -புத்தகங்களைத் திருடுபவள்

 

குமுதம் தீராநதியின் மே மாத இதழில் பிரசுரமான எனது கட்டுரை இது....

உலக சினிமா


புத்தகங்களைத் திருடுபவள்

செந்தூரம் ஜெகதீஷ்




THE BOOK THIEF
 
 
தியிலே சொல் இருந்ததாக கூறுகிறது பைபிள். சொல்லால் அமைந்தது உலகு. சொல்லால் அமைந்தது சிந்தனை. சொல்லால் அமைந்தது வாழ்வு. சொல்லின்றி எதுவுமில்லை. மௌனங்களுக்கும் சொற்கள் உண்டு.

பிறப்பின் போது கருவறையிலும் தாய் குழந்தையுடன் பேசிக் கொண்டிருக்கிறாள். கல்லறையில் புதையுண்டு போன உறவுகளுடனும் நாம் மானசீகமாகப் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். ஒவ்வொரு இலையும் ஒவ்வொரு பறவையும் ரகசியமான ஒரு சொல்லுடன் பேசுகிறது.

இப்படத்தின் ஆரம்பமும் சொற்கள் மூலம்தான். ஆனால் நம்முடன் தடித்த ஆண்குரலில் பேசுவது மரணம்.

மரணம் ஒரு கதைசொல்லியாக படத்தைத் தொடங்குகிறது.....

எல்லோரும் ஒருநாள் சாகத்தான் போகிறார்கள். யாரும் தப்ப முடியாது. நேரம் வரும் போது நான் அழைத்துச் செல்வேன். பதற்றம் கொள்ளாதே..எதுவும் உனக்கு உதவாது.

மார்க்குஸ் சூசாக்கின் நாவலைத் தழுவி திரைக்ககதை எழுதப்பட்டிருக்கிறது. திரைக்கதையை மைக்கேல் பெட்ரோனி எழுதியுள்ளார். படத்தை பிரெய்ன் பெய்சிவல் இயக்கியுள்ளார்.

இப்படம் நாஜிக்கள் படை உலகையே வெல்லத் துடிக்கும் காலகட்டமான 1936 முதல் ஹிட்லரின் காலம் முடிவுக்கு வந்த அடுத்த சில ஆண்டுகள் வரை படத்தின் கதை தொடர்கிறது.
பனிப்பிரதேசம் - வெள்ளைப் பனியை கிழித்துக் கொண்டு கரும்புகை கக்கியபடி வேகமாக செல்கிறது ரயில் ஒன்று. ரயிலில் 13 வயதுசிறுமி லெஸ்லீ ( சோஃபி நெலீஸ் ) தனது உறவுப் பெண்ணுடன் பயணிக்கிறாள். அருகில் உறங்கும் அவள் தம்பியின் மூக்கிலிருந்து திடீரென ரத்தம் வடிகிறது. லெஸ்லீ அலறுகிறாள். ரயில் நிற்கிறது. இறந்த தம்பியை பனியில் பள்ளம் தோண்டி புதைக்கிறார்கள். அப்போது அவன் சட்டைப்பையிலிருந்து ஒரு புத்தகம் கீழே விழுகிறது. அதனை லெஸ்லீ எடுத்து வைத்துக் கொள்கிறாள். லெஸ்லீயை அவள் உறவுப் பெண் ஒரு நடுத்தர வயது தம்பதியிடம் தத்துக் கொடுத்து சென்று விடுகிறாள். லெஸ்லீயின் தாய் ஒரு கம்யூனிஸ்ட் என்று அவளை ஹிட்லரின் ராணுவத்தினர் இழுத்துச் சென்று சூறையாடி விட்டதை கதையின் பிற்பகுதியில் அறிகிறோம். குழந்தைகளாவது நிம்மதியாக வாழட்டும் என்றுதான் தாய் அந்த குழந்தைகளை தத்து கொடுத்துவிடுகிறாள். ஆனால் தம்பி இறந்துவிட லெஸ்லீ மட்டும் புதிய பெற்றோரிடம் வருகிறாள்.

கம்யூனி்ஸ்ட்டுகள் என்றால் அழுக்கும் துர்வாடையுமாக இருப்பார்களா என்ற ஏச்சுடன் தனது மகளை அழைக்கிறாள் புதிய தாய் ரோசா ( எமிலி வாட்சன்) பதிலே பேசாத சிறுமியைப் பார்த்து ஊமையை கொடுத்து விட்டார்கள் என்று நொந்துக் கொள்கிறாள்.

இரவு வேளையில் புதிய தந்தையான ஹான்ஸ் ( ஜியோஃபரி ரஷ் ) லெஸ்லியுடன் சிநேகமாகிறார். அவர் வைத்துள்ள அக்கார்டியன் கருவியில் இசையை வாசிக்க ரசிக்கிறாள் லெஸ்லீ. பப்பா என்று அவரை அழைக்க அது ஒரு சோம்பேறி பன்றி. பரவாயில்லை அப்பா என்றே கூப்பிடு என்கிறாள்

லெஸ்லீயை பள்ளிக்கு அழைத்துப் போக வருகிறான் பக்கத்து வீட்டு பையன் ரூடி. அவனுக்கு வயது 12. என்னை ஓட்டப்பந்தயத்தில் ஒருவரும் ஜெயித்தது கிடையாது என்று பெருமை பேசுகிறான். பள்ளிக்கு ஓடலாம் என்கிறான். நான் ஜெயித்தால் எனக்கொரு முத்தம் கொடுப்பாயா என்று கேட்கிறான். தோற்றால் வாழ்நாள் முழுவதும் முத்தம் கேட்க மாட்டாயா என்று அவள் திருப்பிக் கேட்க அவனால் பதில் கூற முடியவில்லை. எப்படியோ ஏமாற்றி வி்ட்டு லெஸ்லீயே ஓடி வந்து ஜெயித்துக் காட்டுகிறாள். மோசடி என கூறுகிறான் ரூடி.

நீ எனக்கு நண்பனாக முயற்சிக்காதே என்கிறாள் லெஸ்லீ. நான் இங்கிருந்து ஓடி விடுவேன். என் புதிய அம்மாவைப் பிடிக்கவில்லை என்கிறாள். உண்மையான தாயை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதும் அவள் கவலை. கையில் இருக்கும் புத்தகத்தை ரூடி வாங்கிப் பார்க்கிறான். தம்பியின் கையில் இருந்த புத்தகம். பீட்டர் ஸ்ட்ராஸ் என்பவர் எழுதிய கல்லறை தோண்டுபவனின் குறிப்புகள் என்பது புத்தகத்தின் தலைப்பு.

அப்பா ஹான்சுடன் மகள் பேசுகிறாள். அவர் பெயின்டர் ஆனால் இப்போதெல்லாம் பெயின்ட் அடிக்க வாய்ப்புகள் வருவதில்லை. பெயின்ட்டை சுரண்டியெடுக்கும் வேவை கிடைக்கிறது. நீ ஒரு அக்கவுண்டன்ட் என்றுநினைத்தேன் என்கிறாள் லெஸ்லீ. அக்கவுண்ட்டன்டா....அவர் நம் வீட்டுப் பொருளாதாரத்திற்கு தேவையில்லாத ஒரு நபர் என்கிறார் ஹான்ஸ். நான் இறந்து விட்டால் என்னை சரியாக புதைப்பாயா என்று கேட்கிறார்.

இரவில் லெஸ்லீ புத்தகம் படிக்கும் பழக்கத்திற்கு ஆளாகிறாள். புத்தகம் அவளுக்கு தனிமையின் போது தோழனாகிறது.தாய்க்கு ஒரு கடிதம் எழுதி தன்னை அழைத்து வந்த பெண்ணிடம் கொடுக்கச் சொல்கிறாள். ஆனால் அந்த கடிதம் போய் தாயிடம் போய் சேரவே முடியாது என்று அறியும் போது அவள் முகம் வாடுகிறது.

புத்தகங்கள் சிந்தனைகளைத் தூண்டுபவை. ராணுவத்திற்கு சிந்தனை தேவையில்லை. செய் அல்லது செத்துமடி என்பது அவர்கள் சித்தாந்தம். சுய சிந்தனையுள்ளவர்கள் ராணுவத்தில் பணியாற்ற முடியாது. அதுவும் சர்வாதிகாரியான ஹிட்லரிடம் படையில் பணியாற்றுவோருக்கு புத்தகங்கள் மீது கடும் வெறுப்பு. ஆள்வோருக்கு அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை புத்தகங்கள் தான் ஆகாத பொருட்கள். புத்தகங்களைப் படிப்பவர்கள் புத்திசாலிகளாக மாறுவார்கள் என்பதால் அதனை எந்த அரசும் ஊக்குவிப்பதே இல்லை. நவீன காலங்களில் நூலகங்கள் கழிவறைகளாகின்றன. யாழ்ப்பாணத்தில் நூலகத்தில் லட்சம் புத்தகங்களை எரித்தார்கள். அதுபோலத்தான் அந்த ஊரிலும் நடுத்தெருவில் நூற்றுக்கணக்கான புத்தகங்களை குவியல் குவியலாக ஹிட்லரின் படையினர் எரிக்கின்றனர். ஒவ்வொரு நபரும் ஒரு புத்தகத்தை கொண்டு வந்து எரிக்க வேண்டும். எரிக்காதவர் யூதர் அல்லது கம்யூனிஸ்ட் அல்லது ஹிட்லருக்கு எதிரி.

எல்லோரும் புத்தகங்கள் எரியும் தீயில் ஆளுக்கொரு புத்தகத்தை எரிக்கிறார்கள். லெஸ்லீக்கோ புத்தகம் என்றால் உயிர். அவள் தயங்கி நிற்கிறாள். புத்தகம் எரிப்பதா என்ற கவலை அவளுக்கு. புத்தகத்தை எரிக்காமல் விடமாட்டார்கள் என்று ரூடி அவளிடம் தடித்த ஒரு புத்தகத்தைத் தருகிறான். அவளும் சட்டென அதைத் தீயில் எறிந்து விடுகிறாள்.

கூட்டம் கலைகிறது. எல்லோரும் போய்விட லெஸ்லீ மட்டும் எரிந்த புத்தகங்களைப் பார்த்தபடி நிற்கிறாள். யாருமில்லை என அவள் தாம் வீசிய புத்தகத்தைதீயில் இருந்து மீட்டு எடுக்கிறாள். வேசாக எரியும் படிதான் அவள் வீசியிருக்கிறாள். அந்த புத்தகம் ஹெச்.ஜி.வெல்சின் - தி இன்விசபிள் மேன் ( கண்ணுக்குத் தெரியாத மனிதன் ) அப்போது ஒரு கார் அவளைக் கடந்து செல்கிறது. அதில் மேயரும் அவள்மனைவியும் அவள் கையில் புத்தகத்துடன் நிற்பதைப் பார்க்கின்றனர்.

மறுநாள் ரூடியிடம் தாம் ஹிட்லரை வெறுப்பதாக கூறுகிறாள் லெஸ்லீ. தப்பித் தவறி அப்படி சொல்லி விடாதே என்று எச்சரிக்கிறான். ஆனால் இருவரும் யாரும் இல்லாத அத்துவான வயல் வெளியில் நின்று ஹேட் ஹிட்லர் என்று உரக்க கத்துகிறார்கள். சிரிக்கிறார்கள். புத்தகத் திருடி என்று ரூடி லெஸ்லீயை அழைக்கிறான்.

ஹான்சின் வீட்டுக்கு காயத்துடன் மேக்ஸ் என்றநபர் வருகிறான். அவன் ஒரு கம்யூனிஸ்ட். ஒரு யூதன். ஹான்சின் கையில் உள்ள அக்கார்டின் இசைக்கருவிக்கு சொந்தக்காரன் அவன்தான். அவனுடைய தந்தைக்குநன்றிக் கடன் பட்ட ஹான்ஸ் அவனை வீட்டின் அடிவாரப் பகுதியில் உள்ள ரகசிய அறையில் தங்க வைக்கிறார். யாருக்கும் இவன் இங்கிருப்பது பற்றி பேசக்கூடாது என்று மகளுக்கு எச்சரிக்கை செய்கிறார்.

மேக்சுக்கும் புத்தகம் படிப்பதில் ஆர்வம். இருவரும் தோழமை கொள்கிறார்கள். மேக்சுக்கு புத்தகம் வாசிப்பதும் படித்த விஷயங்களைப் பகிர்ந்துக் கொள்வதும் லெஸ்லீயின் இரவு நேரப்பணியாகிறது.

வருமானம் இல்லாததாலும் கூடுதலாக ஒருநபருக்கு உணவு தேவை என்பதாலும் லெஸ்லீயின் தாய் ரோசா துணிகளை இஸ்திரி செய்கிறாள். மேயர் வீட்டுத் துணிகளை லெஸ்லீயிடம் கொடுத்து காசு வாங்கி வர அனுப்புகிறாள். அப்போது மேயரின் மனைவி இல்சா ஹெர்மன் உனக்கு புத்தகம் படிப்பதில் ஆர்வம் இருப்பது எனக்குத் தெரியும் என்று கூறி தன் வீட்டு அலமாரி முழுவதும் நிரம்பியுள்ள புத்தகங்களைக் காட்டுகிறாள். இதை எப்போது வேண்டுமானாலும் இங்கு வந்து நீ படித்து விட்டுச் செல்லலாம் என்கிறாள் இல்சா.

மேக்ஸ் புத்தகம் படிப்பதுடன் எழுதும் படி லெஸ்லீயை தூண்டுகிறான். ஒரு எழுத்தாளராக உருவாக கற்பனை தேவை என்கிறான். அவன் வீட்டின் அடிவாரத்தில் இருட்டறையில் அடைந்து கிடப்பதால் வெளியுலக வானிலையை தமக்கு விவரிக்கும்படி லெஸ்லீயிடம் கூறுகிறான். சொற்களுடன் சினேகம் கொள்ளும்படி எதையும் சொல்லப் பழகும்படி அவளுக்கு ஊக்கம் அளிக்கிறான் மேக்ஸ். தினமும் அவனுக்கு தனது அழகழகான சொற்களால் வானிலையை அவள் விவரிக்கிறாள். சூரிய ஒளி வைரத்தை ஏந்திய ஒரு வெள்ளி நத்தையப் போல் இருப்பதாக அவள் சொல்ல சொல்ல அதை நான் பார்த்து விட்டேன் என்று அவன் மகிழ்கிறான்.

இந்நிலையில் லெஸ்லீ புத்தகம் படிப்பதை விரும்பாத மேயர் லாண்டரியை நிறுத்தி விடுகிறார். லெஸ்லீ இரவில் ரூடியின் உதவியுடன் போய் அந்த வீட்டில் புத்தகங்களைத் திருடுகிறாள்.

அப்போது இங்கிலாந்து ஜெர்மனி மீது போர் தொடுக்கிறது.வானத்தில் போர் விமானங்கள் குண்டுகளை வீசும் என்ற அச்சத்தால் அனைவரும் பயந்துக்கிடக்கின்றனர். சைரன் ஒலித்ததும் அனைவரும் வீட்டை விட்டு பதுங்குக் குழிகளில் பதுங்கிக் கிடக்கின்றனர். அப்போதும் அவர்களிடம் புத்தகம் வாசித்து பயத்தை போக்குகிறாள் லெஸ்லீ. மேக்சை பற்றி அவள் கவலைப்படுகிறாள், வீட்டை விட்டு வரமுடியாத போதும் தாம் அடிவாரத்தில் இருப்பதால் குண்டு வீ்ச்சிலிருந்து தப்பிவிட முடியும் என்று அவன் கூறுகிறான்.

கிறிஸ்துமஸ் வருகிறது. பனி மூடிக்கிடக்கிறது. இதை அவனுக்கு வானிலை அறிக்கையாக வாசிக்காமல் லெஸ்லீ ஒரு பனிமனிதனை செய்துக் காட்டுகிறாள். பனித்துகள்களை வைத்து அவள் வடிவமைத்த பனி பொம்மை மேக்சை மிகவும் கவர்கிறது.நீ ஆச்சரியங்கள் மிக்கவள் என்று லெஸ்லீயைப் பாராட்டுகிறான்.

மேக்ஸ் கையில் உள்ள புத்தகத்தில் பக்கங்கள் காலியாக இருக்கின்றன. அதை அவன் லெஸ்லீக்கு தருகிறான், சொற்கள் தாம் வாழ்க்கை. சொற்களை இதில் நிரப்பு, என்று மேக்ஸ் கூறுகிறான்.

பனியால் மேக்ஸ் உடல் நலம் பாதிக்கப்படுகிறான்.லெஸ்லீக்கு பள்ளியில் மனம் ஒட்டவே இல்லை. ஆனால் மேக்ஸ் குணமாகி விட்ட மகிழ்ச்சியான செய்தியுடன் பள்ளிக்கு வரும் ரோசா எல்லோர் எதிரிலும் லெஸ்லீயை எதற்கோ திட்டுவது போல் திட்டி மேக்ஸ் குணமாகிவிட்டதை கூறும் போது லெஸ்லீக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. மேக்ஸ் குணமானதும் தனது புதிய தாயும் தன் மீது காட்டிய பாசம் கண்டும் நெகிழ்கிறாள்.

ரூடி லெஸ்லீயின் கையில் உள்ள புத்தகத்தைப் பார்த்து விடுகிறான். அதில் மேக்ஸ் என்ற கையெழுத்து பொறாமைப்பட வைக்கிறது. மேக்ஸ் யார் உன் பாய்பிரண்டா என்றுலெஸ்லீயிடம் கேட்கிறான். மீண்டும் அவளிடம் முத்தம் கேட்கிறான். ஒரு வழியாக மேக்ஸ் என்பவரை லெஸ்லீயின் குடும்பத்தினர் வீட்டில் மறைத்து வைத்திருப்பதை ரூடி புரிந்துக் கொள்கிறான். ஆனால் லெஸ்லீ சொல்லவில்லை. அவன் கேள்விகளுக்கு மௌனம் மூலமே அவள் பேசுகிறாள். இந்நிலையில் ரூடியில் சக மாணவன் பிரான்ஸ் லெஸ்லீயின் கையில் உள்ள புத்தகத்தைப் பறிக்க முயலும் போது அவன் ரகசியத்தைத் தெரிந்துக் கொள்ளக்கூடாது என்று பதறும் லெஸ்லீ அதை டயரி என்று ஏமாற்ற பிரான்சுக்கும் ரூடிக்குமான சண்டையி்ல் பிரான்ஸ் புத்தகத்தை ஏரியில் வீசியெறிகிறான்.

பிரான்சை விரட்டிவிட்ட ரூடி ஓடோடிப் போய் புத்தகம் விழுந்த இடம் எனக்குத் தெரியும் என்று கூறி பனி மூடிய ஏரியில் குதிக்கிறான். புத்தகத்துடன் அவன் நீந்தி வந்தபின்னர்தான் லெஸ்லீ நிம்மதிப் பெருமூச்சு விடுகிறாள். உயிரைப்பணயம் வைத்து அவள் புத்தகத்தை மீட்ட ரூடி இப்போதாவது என்னை நம்பு என்கிறான்.

வீடு வீடாக ஹிட்லரின் ஆட்கள் சோதனை நடத்துவதால் தம்மால் ஹான்ஸ் குடும்பத்தினருக்கு தொல்லை நேரலாம் என்பதை அறிந்த மேக்ஸ் அங்கிருந்து இரவோடு இரவாக வெளியேறுகிறான். தன் புத்தக நண்பனுக்குப் பிரியாவிடை தருகிறாள் லெஸ்லீ.

சில காலம் நாஜிப்படைக்கு அழைத்துச் செல்லப்படும் ஹான்ஸ் குண்டு காயம் பட்டதால் திரும்பி வருகிறார். ஆனால் அந்த குடும்பத்தின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. சைரன் ஒலி கேட்காத ஒரு இரவில் குண்டுமழை பொழிய அந்த கிராமத்தில் பல உயிர்கள் பலியாகின்றன. ரகசிய அறையில் புத்தகம் படித்தபடி தூங்கிவிட்ட லெஸ்லீ இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்கப்படுகிறாள். தந்தை, தாய் சடலங்களுடன் ரூடியின் சடலத்தையும் கண்டு கதறுகிறாள் நீ கேட்ட முத்தத்தை தருகிறேன் எழுந்திரு என்று அழுகிறாள். அவன் உயிரற்ற உடலை ஆரத்தழுவி இறுக்கி முத்தமிடுகிறாள்.

மரணம் மீண்டும் குறுக்கிட்டு பேசுகிறது.

வாழ்க்கை எந்த உத்தரவாதமும் அற்றது. ஹான்சை தூக்கத்தில் கொண்டு செல்லும் போது அவர் தமது அக்கார்டினில் ஒரு ராகத்தை வாசிக்க கடைசியாக விரும்பியதை அவர் நினைவைப் படித்து தாம் தெரிந்துக் கொண்டதாக கூறுகிறது மரணம்.

ஹான்சின் மனைவி ரோசா மரணத்தைத் தேவடியா பையா என திட்டிக் கொண்டே இறந்ததாக மரணம் தெரிவிக்கிறது.

ரூடியைக் கொன்றதற்காக மரணமும் வேதனைப்படுகிறது. ஆனால் ரூடியின் ஆயுள் அவ்வளவுதான்.

2 ஆண்டுகள் கழித்து அமெரிக்கப் படைகள் ஜெர்மனியை முற்றுகையிட்டு ஹிட்லரின் பிடியில் இருந்து அங்குள் மக்களை விடுவிக்கின்றனர். இதனிடையே ஒருமுறை அவள் மேக்சை சில ராணுவ வீரர்கள் இழுத்துச் செல்வதைக் கண்டு அவர்களை விரட்டிச் செல்லும் போது தள்ளி விடப்படுகிறாள். அப்போது அவளை தடுத்தாட்கொள்கிறாள் மேயரின் மனைவி இல்சா

காலம் மாறிவிட்டது. ஒரு டெய்லரிங் கடையில் வேலை பார்க்கும் லெஸ்லீ மேக்சை சந்திக்கிறாள். இருவரும் இணைகிறார்கள். அதன் பிறகு லெஸ்லீயும் மேக்சும் காலம் முழுவதும் நண்பர்களாக இருந்தார்கள் என்று மரணம் விவரிக்கிறது. லெஸ்லீ 90 வயது வரை வாழ்ந்து பேரன் பேத்திகளுடன்இருந்ததாகவும் மிகப்பெரிய எழுத்தாளராக மாறியதாகவும் மரணம் தெரிவி்க்கிறது. அவள் யாரை மணந்துக் கொண்டாள் என்பது கதையின்முடிவில் தெரிவிக்கப்படவில்லை. மேக்ஸ்தான் அவள் கணவனா. அவன் சகோதர உறவா நண்பனா என்ற கேள்விகளுடன் நாம் விடப்படுகிறோம்.

மரணம் பேசுகிறது.

யாரும் நிரந்தரமாக வாழ்வதில்லை. லெஸ்லீ 90 வயது வரை வாழ்ந்தாள். அவள் சொற்கள் பல உள்ளங்களைத் தொட்டன. பலரது காயங்களை ஆற்றின. வாழ்க்கை என்றால் என்ன என்றும் வாழ்வது என்பது எது என்றும் என்னை வியக்க வைத்த மிகச்சிலரில் லெஸ்லீயும் ஒருத்தி என்கிறது மரணம். இறுதியில் சொற்களும் முடிந்துப் போகின்றன. ஒரு சொல்லும் இல்லாத அமைதி வருகிறது.

மரணம் எல்லோரையும் ஏதோ ஒரு காலத்தில் கொண்டு சென்று விடுகிறது. ஆனால் மனித வாழ்க்கை லெஸ்லீயைப் போல் சிலரால் தம்மை ஒரு பேய் போல் விரட்டுகிறது என்று மரணம் கூறுகிறது.

சொற்களால் வாழ்கிறவர்கள்,மரணத்தையும் வெல்கிறார்கள்.
 

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...