தமிழ் இந்து சித்திரை மலரில் வெளியான எனது கட்டுரையின் மூல வடிவம் இது.....
சென்னை
பட்டர் பிஸ்கட் முதல் பானிபூரி வரை
செந்தூரம் ஜெகதீஷ்
சென்னைக்கு குடி வந்த போது எனக்கு பத்து வயது. திருச்சியின் காவேரி கரையில் கழிந்த பால்ய காலங்களிலிருந்து ஒரு பெருநகரத்தின் வாழ்வுடன் பொருந்திப் போவது அவ்வளவு சுலபமாக இல்லை. திருச்சியில் திருச்சி கபே, கிருஷ்ணா ஓட்டல் என போய் வடை சாம்பார் வாங்கும் போது அங்கு பணிபுரியும் ஊழியர்களுடன் வயது வித்தியாசம் பாராமல் வெகுளியாக யோவ் போய்யா வாய்யா எனப் பேசும் வழக்கமிருந்தது. இது சென்னையில் எனக்கு கடுமையான சிக்கலை உருவாக்கியது. இங்குள்ள ஒர் ஒட்டலில் யோவ் எனக்கூப்பிட ஊழியர் அடிக்க வந்துவிட்டார். சின்னப்பயலுக்கு மரியாதையே இல்லை என ஏச்சுடன் பிழைத்தேன்.
சென்னையின் மொழியைப் புரிந்துக் கொள்ளும் பக்குவம் காலப்போக்கில் ஏற்பட்டது. ஜெயகாந்தன் எழுதிய கஸ்மாலம் என்னம்மா கீது போன்ற சென்னை பாஷையை குறித்த விழி்ப்புணர்வையும் இலக்கியம் மூலம் தான் அடைந்தேன்.
ஆனால் நான் வாழும் பகுதிகளில் சென்னை பாஷை இல்லை. வேறு ஒரு இந்தி-தமிழ் கலந்த பாஷை இருந்தது. சென்னையில் சவுகார்ப்பேட்டை என்றொரு இடம் இருக்கு. அங்கு வடமாநிலத்தவர், ஆந்திர தெலுங்கு பேசுவோர் அதிகமாக வாழ்ந்திருந்தனர். அங்கு எங்கள் தாத்தாவுக்கு ஒரு சிறி்ய கடை இருந்தது. மிட்டாய் கடை. புதிதாக குலோப் ஜாமூன், பால் பேடா எல்லாம் செய்வார். சிறுவயதில் ஸ்வீட்டான வாழ்க்கை. ஒரு டப்பா நிறைய மலாய் எடுத்துக் கொண்டு பேக்கரியில் பன்களை வாங்கிக் கொண்டு இப்போது நேரு விளையாட்டரங்கம் உள்ள இடத்தில் இருந்த மிருகக் காட்சி சாலைக்கு அழைத்துச் செல்வார். அருகில் மூர்மார்க்கெட்டில் கீரி பாம்பு சண்டையை பார்க்கவும் பழைய புத்தகங்கள் வாங்கவும் செல்வது எனக்கு பொழுதுபோக்காகி விட்டது.
சென்னையில் முதலில் கவர்ந்த பலவிஷயங்களில் பட்டர் பிஸ்கட் முக்கியமானது. திருச்சியில் அப்போது நாங்கள் சாப்பிட்ட பிஸ்கட்டுகள் எல்லாம் பிஸ்கட்டுகளே அல்ல. அண்மையில் காலமான எனது தந்தையார் அங்குள்ள பிஸ்கட் மற்றும் சாக்லேட் தயாரிப்பு பேக்டரியில் பணிபுரிந்தார்.
பட்டர் பிஸ்கட்டுகள் உள்ளம் கவர்ந்துவிட்டன.கண்ணாடி கிளாசில் டீயை வாங்கி அதில் இரண்டு மூன்று பட்டர் பிஸ்கட்டுகளை பிட்டு பிட்டு தோய்த்து தோய்த்து சாப்பிடும் ருசி இருக்கே ஆகா.....இன்று வரை சென்னை தந்த அந்த ருசி மாறவே இல்லை. ஆனால் இப்ப கிடைக்கிற பட்டர் பிஸ்கட்டுகளில் பட்டரே இல்லை.
சென்னை கலாச்சார ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் பன்முகத்தன்மை கொண்ட நகரம். சவுகார்ப்பேட்டையில் மார்வாடிகள், குஜராத்திகள், நிரம்பியுள்ளனர். அவர்களின் திருமணங்கள் ஆடம்பரமானவை. குதிரை ரதம் மீது சவாரி செய்வார்கள். அவர்களுக்காகவே குதிரை வளர்ப்பவர்கள் சென்னை பூங்கா ரயில் நிலையம் அருகே வண்டியையும் குதிரைகளையும் வைத்து வாழ்ந்திருப்பார்கள். இப்போது அவர்கள் எங்கே போனார்களோ?
மார்வாடிகளுக்கும் குஜராத்திகளுக்கும் போட்டியாக தெலுங்குக்காரர்களும் இருந்தார்கள். அரிசி மண்டி, வெங்காய மண்டி, வெல்ல மண்டி, பருப்பு, நெய் வகைகளை விற்கக்கூடிய ஆந்திரவாசிகள் இன்றும் சவுகார்ப்பேட்டை பகுதியில் காணலாம். கோவிந்தப்பா நாயக்கன் தெருவில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நேஷனல் லாட்ஜ் என்ற ஆந்திர சாப்பாடு ஓட்டல் இயங்கி வருகிறது. இப்போதும் புல் மீல்ஸ் ரூபாய் 90 தான். முதலில் பருப்புப் பொடியும் காரமான கோங்குரா சட்னியும் நெய்யும் கலந்து சாதத்தில் பிசைந்து சாப்பிட வேண்டும். ஒரு வாய் சாப்பிட்டால் முழு சாப்பாட்டையும் இப்படியே சாப்பிட்டு விடலாமா என்ற பேராசை பிறக்கும். அத்தனை ருசியாக இருக்கும். ஆனால் அடுத்தடுத்து சாம்பாரும் காரக்குழம்பும், ரசமும் கீரை, பருப்பு கூட்டும் உருளைப் பொரியலும் தயிருடன் சர்க்கரையும் பக்காவான ஆந்திரா சாப்பாட்டின் திருப்தியை தந்து விடும். வீட்டுக்குப் போய் ஒரு குட்டித்தூக்கம் போட்டால்தான் சுகம். பல நண்பர்களை இங்கு அழைத்துச் சென்றிருக்கிறேன். ஒரு முறை ஜெயமோகன், அருண் மொழியுடன் இங்கு சாப்பிட்ட போது மனதார விருந்து பரிமாறுகிறார்கள் என்று பாராட்டினார்.
வடமாநிலத்தவரும் உணவு வகைகளில் போட்டியில் குறைந்தவர்கள் அல்ல, தெருவுக்கு நான்கு பானிபூரி கடைகள் முளைத்து விட்டன. ஆனால் சவுகார்ப்பேட்டையில் சாப்பிடும் பானிபூரிக்கும் தமிழ் மக்கள் மாலை நேர வருவாய்க்காக வைத்துள்ள பானி பூரிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. தென்னகமக்களின் பானிபூரியின் பானி ரசம் மாதிரி இருக்கும். ரசம் போல ருசியாகவும் இருக்காது. ஆனால் வடமாநிலத்தவர் பானிபூரியில் பானியை மட்டும் கப் கப்பாக குடித்துக் கொண்டே இருந்தால் அமிர்தமாக இருக்கும். வயிற்றுக்கும் ஜீரணமாகும். இதில் பெருமளவுக்கு பச்சை மிளகாய்,புதினா கீரை, கொத்தமல்லி கலப்பதுதான் ருசிக்கு காரணம். அவர்கள் சமோசா, கட்லெட்டுக்கு தரும் சட்னியும் பச்சைப் பசேல் என செம்மையான காரமாக இருக்கும். மறைந்த நண்பர் சுந்தர சுகனுக்கு இத்தகைய காரசாரமான வட இந்திய உணவு வகைகள் மீது ஒரு அபாரமான ஆர்வம் இருந்தது.
அது மட்டுமா எங்கள் சென்னையின் அடையாளம்? இன்னும் இருக்கு. பெரியமேட்டில் பல பிரியாணி கடைகள் உள்ளன. இப்போதைய விலை நிலவரப்படி 120 ரூபாய்க்கு அரை பிளேட் அருமையான சி்க்கன், மட்டன் பிரியாணி சுடச்சுட வெங்காய பச்சடியுடன் கிடைக்கும். ராயபுரம், பெரம்பூர், ஐஸ் ஹவுஸ் போன்ற இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் பகுதியில் பிரியாணி சாப்பிடவே தனித்தனி பயணங்களை வார விடுமுறை நாட்களில் மேற்கொள்வதும் வழக்கமாகி விட்டது சென்னை வாழ்க்கையில்.
கிறித்துவமக்கள் மட்டும் என்ன...சென்னையில் திடீர் திடீரென பல பேக்கரிகள் முளைக்கும். டவுட்டன் பகுதியில் கிறிஸ்துமஸ் விழா களை கட்டும்.பிறந்தநாள், புத்தாண்டு, கிறிஸ்துமசுக்காக கலர் கலரான ருசியான கேக்குகள் அணி வகுத்து கிடைக்கும்.
சென்னையில் இட்லி சாம்பார் இன்னொரு சொர்க்கம். முன்பு ரத்னா கேப்பில் சாம்பாரை பக்கெட் பக்கெட்டாக ஊற்றி இட்லியை உள்ளே மறைத்து தருவார்கள். இப்போது இட்லி இருக்கு. சாம்பாரும் இருக்கு. ஆனால் ருசி இல்லை. இரண்டு இட்லியும் ஒரு வடையும் சாப்பிட்ட காசில் ஒரு பிரியாணியே சாப்பிட்டு விடலாம். அத்தனை விலை. ஆனாலும் சங்கீதா, சரவண பவன், வெல்கம், வசந்த பவன் போன்ற பிரசித்தி பெற்ற ஓட்டல்களில் இட்லி சாம்பார் சாப்பிடவே ஒரு பெருங்கூட்டம் பசித்தவம் கொண்டிருக்கும்.
சென்னையில் நல்ல டீ எங்கே கிடைக்கும் என ஆராய்ச்சி எல்லாம் செய்திருக்கிறேன். திருவல்லிக்கேணி பாரதி மெஸ் அருகே உள்ள ஒரு தேநீர்க்கடையே இதில் மனம் கவர்ந்தது.
உணவு மட்டுமின்றி இதர விஷயங்களிலும் சென்னையின் வாழ்க்கை முறை ரசிக்கத்தக்கது. கன்னிமரா நூலகமும் அதையொட்டிய அருங்காட்சியகமும் பல நினைவுகளை உட்கொண்டிருக்கும். படிப்பதற்கும் பேசுவதற்கும் நண்பர்களை சந்திப்பதற்கும்இந்த இடங்களைத்தான் நாங்கள் தேர்வு செய்தோம்.
சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகள் நாவலைப் படித்து விட்டு திருநெல்வேலியிலிருந்து தந்தையுடன் மனஸ்தாபம் உருவாகி சென்னைக்கு ஓடி வந்து வாழத்தெரியாமல் தற்கொலை செய்ய இருந்த இளைஞன் ஒருவரை நானும் நண்பர் சூர்யராஜனும் ஆற்றுப்படுத்தி இலக்கியம் வாழ்க்கையை மேம்படுத்தத்தான் தற்கொலைக்குத் தூண்ட அல்ல என்று புரிய வைத்தோம். அந்த இளைஞன் தந்துவிட்டு சென்ற பிரதியை இன்னமும் பாதுகாத்து வருகிறேன். என்னைப் பொருத்தவரை ஜே ஜே சில குறிப்புகள் தமிழின் ஆகச்சிறந்த அறிவுசார் நாவல். ஜான் அப்டைக்கின் பெக் எ புக் நாவலின் தழுவல் என்ற விமர்சனங்களை நான் மதிப்பதில்லை. ஜான் அப்டைக் சு.ராவின் மேதைமைக்கு கால்தூசி பெயரமாட்டார். என்னுடைய கிடங்குத் தெரு நாவலின் மாதிரி வடிவமும் ஜே ஜேயை பின்பற்றி எழுதப்பட்டதுதான் என்பதை நுட்பமான வாசகர்கள் உணர முடியும்.
சென்னையின் மாவட்ட நூலகங்கள் சிறுநீர் கழிப்பிடங்களாக்கப்பட்டதற்கு அதிமுக, திமுக அரசுகளே காரணம். கட் அவுட்டுகளுக்கு செலவிடப்பட்ட தொகை நூலகங்களுக்கு தரப்படவில்லை. புத்தகங்களை வாங்காமலும் பதிப்பாளர்களையும் படைப்பாளிகளையும் பட்டினி போட்ட பாவக்கறை தமிழக அரசு மீது சாபமாக படிந்திருக்கிறது. இதற்கு சாப விமோசனம் தர ஜெயமோகனோ , எஸ்ராமகிருஷ்ணனோ சாரு நிவேதிதாவோ முதலமைச்சராகி விட்டால் நல்லது.
சென்னையின் இன்னொரு அற்புதம் மெரீனா கடற்கரை. அதன் மணல் பரப்பு பல கதைகளையும் காதலர்களின் கண்ணிரையும் தெரிவிக்கக்கூடியது. மனம் இருமை அடையும் போதெல்லாம் மாலையிலோ அதிகாலையிலோ கடற்கரையில் போய் நின்றால் இளைப்பாறுதல் கிடைக்கும். சுனாமி வந்த போது சன்டிவியில் பணியில் இருந்த நான் காலை ஷிப்டுக்காக இருசக்கர வாகனத்தில் சென்ற போது கிரீம்ஸ் சாலையின் கூவம் கரையில் செத்து மிதந்த பிணங்களின் காட்சி இன்றும் பேய் பிசாசு போல பீதியைக் கிளப்புகிறது.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும் சென்னையின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கி விட்டது. சென்னையில் நாம் பாதுகாப்பாகத்தான் இருக்கிறோமா என்றும் தெரியவில்லை. நிலநடுக்கம், கடல் கொந்தளிப்பு, சுனாமி, பெருவெள்ளத்திலிருந்து சென்னை மீண்டிருக்கிறது. இனியும் மீளும் என்ற நம்பிக்கைதான் காத்து வருகிறது.
சென்னையில் பல அற்புதமான கோவில்கள் உள்ளன. மகாகவி பாரதியார் யாதுமாகி நின்றாய் காளீ என்று விளித்த காளிகாம்பாள் கோவில் பிராட்வேயில் உள்ளது. அங்கு பிரகாரம் அருகே உள்ள சிறிய அனுமன் சிலையை கட்டாயம் தரிசித்து வாருங்கள்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் ,மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், சாய்பாபா கோவில், வடபழனி முருகன் கோவில் மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவில், பெரியமேடு மசூதி, ஐஸ் அவுஸ் மசூதி , பெரம்பூர் சர்ச், சாந்தோம் தேவாலயம் என சுற்றிலும் வழிபாட்டுத் தலங்கள் நிரம்பிய நகரம் இது. முன்பெல்லாம் விநாயகர் ஊர்வலம் திருவல்லிக்கேணி பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இப்போது சட்டம் ஒழுங்கு பராமரிப்பால் நிலைமை தேவலை.
சென்னையின் இலக்கிய உலகமும் அற்புதம்தான். அசோகமித்திரன், ஜெயகாந்தன், சுஜாதா, லா.ச.ராமாமிர்தம், நா.பார்த்தசாரதி, பிரபஞ்சன், திலீப்குமார் போன்ற ஜாம்பவான்களின் புகலிடம் இது. தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளன் மதுரைக்கு தெற்கே பிறந்திருக்க வேண்டுமா என்று சுஜாதா ஒரு முறை மனம் வெதும்பியது நினைவில் உள்ளது. மிகச்சிறந்த படைப்பாளி யாரும் சென்னை போன்ற நகரங்களில் இருந்து தோன்றுவது சாத்தியமே இல்லை என்று ஒரு முறை ஜெயமோகன் கூறியதற்கு பதிலளித்து மேற்கண்ட எழுத்தாளர்களையே உதாரணம் காட்டியிருக்கிறேன்.
சென்னையில் சிறுபத்திரிகை வட்டங்களும் இலக்கியக்கூட்டங்களும் ஏராளம். இப்போதும் வந்துக் கொண்டிருக்கும் கல்வெட்டு பேசுகிறது இதழை நண்பர் சொர்ணபாரதி தன்னந்தனியாக சுமந்து வருகிறார். செந்தூரம் இலக்கிய வட்டம் சார்பில் நானே ஆயிரம் இலக்கியக்கூட்டங்களை நடத்தியிருக்கிறேன். அசோகமி்த்திரன், சாரு நிவேதிதா எல்லாம் பார்வையாளர்களாக வந்தனர். ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலை சென்னையில் நாங்கள்தான் வெளியிட்டோம். நண்பர் பிரபஞ்சன் எங்கள் நிரந்தர வழிகாட்டி.
சென்னையின் கோடம்பாக்கம் ஸ்டூடியோக்களும் திரையரங்குகளும் சென்னையை ரசிப்பதற்கான இன்னொரு காரணம் . இளமைப் பருவத்தில் விஜயா கார்டனில் சென்று அம்பிகா, சீதா, அனுராதா, சிம்ரன், என நடிகைகளை நேரில் ரசித்த காலமும் உண்டு. சித்ரா,கெயிட்டி, புவனேஸ்வரி, ராக்சி, உமா, மினர்வா, மிட்லண்ட், ஜெயப்பிரதா,எல்பின்ஸ்ட்ன், சிவசக்தி, வெலிங்டன், பிரபாத், போன்ற பல திரையரங்குகள் இன்று இல்லை. மல்டிபிளக்குகளும் மேற்கத்திய கலாச்சாரமும் ஊடுருவிய மால்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன. ஆனால் இன்று படம் பார்க்கும் அனுபம் மிகப்பெரிய பெருமூச்சுதான்.
காலவெள்ளம் பலவற்றை அடித்துச் செல்கிறது. சில நினைவுகளைத் தக்க வைக்கிறது. சென்னையைப் பெருத்த வரை புதியன புகுதலும் பழையன கழிதலும் மாறாத வாழ்வின் நியதியைப் போல் என்றும் நிரந்தரமாக சுழன்றுக் கொண்டிருக்கிறது. மாற்றம் ஒன்றே மாறாதது என்று கணித்த மாமேதை காரல் மார்க்ஸ் தான் நினைவில் நிற்கிறார்.
-------------------------------

No comments:
Post a Comment