Sunday 7 June 2015

அஞ்சலி- சுந்தர சுகன்

சாதாரணமானவர்களின் சிற்றிதழ் ஆசிரியர் சுகன் 5.6.2015 அன்று தமது 50வது பிறந்தநாளின் அதிகாலை 4 மணிக்கு மறைந்தார்.
                                                                                                     
கிட்டதட்ட 20 ஆண்டுகளாக நீடித்த சுகனுடான நட்பில் பல நெகிழ்ச்சியான தருணங்களை இருவரும் கண்டிருக்கிறோம். இருவருக்குமே சிற்றிதழ் இயக்கத்தின் மீதான பற்று,திரைப்படத்தின் மீதான ஆர்வம், இலக்கிய ஆளுமைகள் மீதான மதிப்பு சம அளவில் இருந்தது. சுகன் இதழில் எனது 50க்கும் மேற்பட்ட படைப்புகளை அவர் பிரசுரித்தார். கட்டாயப்படுத்தி கொடுத்தால்தான் சந்தாவையே வாங்கிக் கொள்வார்.பணம் மீது அவருக்கு பற்று இருந்ததில்லை. கடந்த 2008ம் ஆண்டு கலைஞர் செய்திகள் சேனலில் சுகனின் வாழ்க்கை, இலக்கியம், சிற்றிதழ் ஆகியவற்றை புதையல் என்ற பெயரில் ஆவணப்படுத்தி அதன் வீடியோ பிரதியை அவரிடம் கொடுத்திருக்கிறேன்.
சுகன் எனக்கு எனது நாவலான கிடங்குத்தெருவுக்கு தஞ்சைப்ரகாஷ் இலக்கிய விருது கிடைக்க காரணமாக இருந்திருக்கிறார். 
பலமுறை என் வீட்டுக்கு வந்துள்ளார். அய்யா அய்யா என பழைமைத்தன்மை மாறாத பேச்சால் பல புதிய விஷயங்களை என்னோடு பேசுவார். இயக்குனர் கர்ணனின் கௌபாய் பாணி தமிழ்ப்படங்கள் பற்றி ஒரு பால்ய கால ஈடுபாடு அவரிடத்தில் இருந்தது எனக்கு ஆச்சரியத்தை தந்தது. எனக்கும் அது உண்டு.
சென்னை மெரீனாவில் பாரதி சிலை அருகே  7.6.2015ல் சுகனுக்கு அஞ்சலி செலுத்த சுமார் 40 நண்பர்கள் திரண்டனர். நானும் கலந்துக் கொண்டேன். தோழர் கலை மணிமுடி சுகனின் குடும்பம் அவர் சேமித்த 7 லட்சம் ரூபாயையும் கடைசியில் தமது மருத்துவ சிகிச்சைக்கு செலவழித்து குடும்பத்தை நிர்க்கதியாக விட்டுச் சென்ற தகவலை தெரிவித்தார். கடைசி காலத்தில் அவர் குடும்பம் அவருக்கு ஏற்பட்ட கட்டியை அறுவை சிகிச்சை செய்ய, அது செப்டிக் ஆகி நீரிழிவு நோய் உள்ள சுகனின் உயிரைப்பறித்த துன்பக்கதையை மு.முருகேஷ் விளக்கினார்.சிசுசல்லப்பா காலம்தொட்டே சிற்றிதழ் நடத்தியவர்களின் குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள துன்பத்தை எங்கேயாவது ஓரிடத்தில் உடைத்து தகர்க்க வேண்டும் என்று நண்பர்கள் ஆதங்கம் தெரிவித்தனர். சுகனின் மனைவி சகோதரி சௌந்தரவதனாவுக்கு அரசுப்பணி பெற்றுத் தருவது , சுகனின் மகன், மகள் ஆகியோரை படிக்க வைக்க கல்விச்செலவுக்கான நிதியை திரட்டுவது போன்ற திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டன. எடிட்டர் லெனின் சார் 50 ஆயிரம் ரூபாய் காசோலையை கொடுத்து இந்த திட்டத்தை தொடக்கி வைத்தார்.சுமார் ஒருலட்ச ரூபாய் நிதியை திரட்ட இலக்கு வைத்துள்ளதாக மணிமுடி கூறினார்.

ஒரு லட்சம் ரூபாயால் ஒரு குடும்பம் வாழ்ந்துவிடாது என்றாலும் இந்த முயற்சி நல்ல முயற்சிதான். யாருமில்லாமல் ஒரு சிற்றிதழாளர் மறைவதில்லை. அவரது வாசகர்களும் படைப்பாளர்களும்தான் அவரது குடும்பம் என்று சுகன் மூலம் ஒரு புதிய மரபு உருவாக வேண்டும். நாளை நான் இறந்தாலும் எனக்கும் இதே கதிதான் என்பதை நாம் ஒவ்வொருவரும் எண்ணிப்பார்த்தால் நல்லது

சுகனில் எழுதுவதை பெருமையாகவே நினைத்திருக்கிறேன். இது போன்ற பத்திரிகைகளில் எழுதினால் அரைடவுசர் போட்ட படைப்பாளி என பெயர் கிடைக்கும் என கிண்டலடித்த சில ஜாம்பவான்களை நான் நிராகரித்து இருக்கிறேன். அவர்களுக்கு ஒருபோதும் ஒரு சிற்றிதழாளரின் வலியும் வரலாறும் தெரியாது. அதுவும் சுகனுக்கு அவரது குடும்பமே துணை நின்று இதழ் நடத்த உதவியிருக்கிறது. அந்த குடும்பத்திற்கு உதவும் எண்ணம் நல்ல விஷயம்தான். இந்த குடும்ப நிதி தொடர்பாக எடிட்டர் லெனின், பாவெல் , கவிஞர் இளம்பிறை கொண்ட மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதே பகுதியில் அதன் தொடர்பு எண்ணைத் தெரிவிக்கிறேன்.நண்பர்கள் யாவரும் இயன்றவரை உதவும்படி கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...