Wednesday 3 June 2015

அரிதினும் அரிதுகேள் 5 காதலின் பொன் வீதியில்.....





காதலின் பொன் வீதியில்......
1973 ல் வெளியான பூக்காரி படத்தில் வரும் பாடல்தான் இது. மு.க.முத்து மஞ்சுளா, வெண்ணிற ஆடை நிர்மலா நடித்தது. கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய படம். பாடல் பஞ்சு அருணாச்சலம் இசை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். டி.எம்.எஸ், எஸ்.ஜானகி ஆகியோர் பாடியது.
காதலின் பொன் வீதியில் காதலன் பண் பாடினான்
பண்ணோடு அருகில் வந்தேன் நான்
கண்ணோடு உறவு கொண்டேன்
காதலின் பொன் வீதியில் நானொரு பண் பாடினேன்
பண்ணோடு ஒருத்தி வந்தாள்-என்
கண்ணோடு ஒருத்தி வந்தாள்.
திருப்பாற்கடலில் பொன் மேடையிட்டு நான் காத்திருப்பேன் உனக்காக
இனி தனிமை இல்லை பகல் இரவுமில்லை .நாம் வாழ்ந்திருப்போம் இனிதாக
இரு பொன் மலரில் ஒன்று என் மனதாம் தேன் கொள்ள வந்தேன் மனம் போல
என் மனதினிலே உன் நினைவுகளே, அதை அள்ளி வந்தேன் உனக்காக...
விழியோரங்களில் சில நேரங்களில் வரும் பாவங்களில் பிறப்பதுதான் கவியாகும்.
அந்தக் கவிதைகளில் உள்ள பொருள் அறிந்து அதை சுவைப்பதுதான் கலையாகும்
அந்தக் கலைகளிலும் பல புதுமையுண்டு அதைப் பழகுவதே பேரின்பம்
இந்த வாசலில் ஒரு காவலில்லை இனி காலம் எல்லாம் உன் சொந்தம்....
நடனத்தில் தேர்ச்சி பெற்ற நடிகைகளில் ஒருவரான வெண்ணிற ஆடை நிர்மலாவின் முக பாவங்களும் கை விரல் அசைவுகளும் உடல் மொழியும் பாடலை ரசிக்க வைக்கின்றன. மு.க.முத்து எம்ஜிஆரைப் போல நடை உடை பாவனைகளுடன் இருப்பார். ஆனாலும் நகல் நகல்தானே.
மு,க.முத்து நல்ல குரல் வளம் உள்ளவர்தான். நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா என்று அணையா விளக்கில் அவர் பாடிய பாடல் மிகவும் பிடித்தமான பாட்டுதான். சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க என்றும் பாடியிருப்பார். ஆனால் இந்தப்பாடலில் டி.எம்.எஸ் குரலில் மு.க.முத்து பாடியிருக்கிறார்.
டிஎம்.எஸ் எம்ஜிஆர், சிவாஜி என இருவருக்கும் மாறி மாறி குரல் கொடுத்துக் கொண்டிருந்த காலம் அது....மு.க.முத்துவுக்காக அவர் அதிகமாக குரலை மாற்றிக்கொள்ளவில்லை. எம்ஜிஆர் பாணியிலேயே பாடியிருக்கிறார். பாடலாசிரியரும் எம்ஜிஆர் பாட்டு மாதிரியே எழுதியிருப்பார். எம்.எஸ்.வியும் எம்ஜிஆர் படம் டூயட் பாடல்போலத்தான் இசையமைத்திருப்பார். மஞ்சுளா எம்ஜிஆரின் ரிக்சாக்காரன் படத்தில் அறிமுகமானவர்தான்.
இப்படத்தில் முகமுத்துவை மஞ்சுளா காதலிப்பார் ஆனால் வெண்ணிற ஆடை நிர்மலாதான் முகமுத்துவின் காதலி, இப்பாடல் மஞ்சுளா பின்னகர்ந்து போக வெண்ணிற ஆடை நிர்மலா முன்னோக்கி வர தொடங்கும்.
காதலின் பொன் வீதியில் காதலன் பண்பாடினான் என்ற இனிமையான பல்லவியை பஞ்சு அருணாச்சலம் தந்திருக்கிறார். இன்றைய சினிமா பாடலாசிரியர்களுக்கு பாடலின் முதல்வரியையே படைக்கத் தெரியவில்லை. அதனால்தான் பாடல்களும் நிலைப்பதில்லை. பாடலின் முதல் வரியை அமைப்பது தனிக்கலை. கண்ணதாசனும் வாலியும் வைரமுத்துவும் அதில் தங்கள் திறமையை காட்டியுள்ளனர். மனதில் முதலில் பதிவது இந்த முதல் வரிதான். இதை ரசிகன் முணுமுணுத்தால்தான் பாடல் ஹிட்
இனி தனிமையில்லை பகல் இரவுமில்லை என்ற வரியும் பொருள் பொதிந்தது. இது போன்ற வரிகளை புதுக்கவிதையின் தன்மையுடன் படைத்திருப்பார்.,
இழந்த காதலின் துயரத்துடன் ( மஞ்சுளா) அடைந்த காலத்தின் மகிழ்ச்சியை(வெண்ணிற ஆடை நிர்மலா) ஒருசேர தரும் இந்தப்பாடல் துயரமான டூயட் பாடலா அல்லது மகிழ்ச்சியான டூயட் பாடலா என யோசித்துக் கொண்டிருக்கிறேன். எஸ்.ஜானகியின் ஹம்மிங்கை கேட்டுப் பார்த்து சொல்லுங்க











No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...