Wednesday 22 July 2020

முகேஷ் -துயரமும் துள்ளலும்

முகேஷ் -துயரமும் துள்ளலும் முகமது ரஃபியைத் தவிர இன்னொரு பாடகரைத் தேர்வு செய்ய சொன்னால் அது நிச்சயம் முகேஷ்தான். அவரளவுக்கு யாரும் இத்தனை அடர்த்தியாக பாடியதில்லை. சில சமயங்களில் அவர் முகமது ரஃபியையும் மிஞ்சி விடுகிறார். 1923ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி பஞ்சாப் மாநிலம் லுதியானாவில் பிறந்தார் முகேஷ். பத்து குழந்தைகளுடைய பெற்றோரின் ஆறாவது பிள்ளை அவர். அவருடைய தந்தை ஒரு பொறியியல் நிபுணர். தாய் இசை ஆசிரியை .பத்தாவது வரை படித்து அரசுப் பணியில் சேர்ந்த முகேஷ் 1946ல் சரளா என்ற பெண்ணை மணந்தார். பணமில்லாமல் அவதிப்பட்டு மனைவியுடன் குடும்ப சுமையை சுமக்க முடியாமல் அல்லாடி அவர் ,5 குழந்தைகளையும் பெற்றார். மோதிலால் என்ற உறவினர் அழைப்பின் பேரில் மும்பைக்கு சென்றார். அங்கு சினிமாவில் வாய்ப்பு தேடிய போது நிர்தோஷ் என்ற படத்தில் பாட அழைக்கப்பட்டார். தாயிடமிருந்து இசையை கற்றதால் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அக்காலத்தில் புகழின் உச்சத்தில் இருந்த பாடகரான சைகலை பின்பற்றி அவரைப் போலவே சில பாடல்களை முகேஷ் பாடினார். தில் ஜல்தா ஹை என்ற ஒரு பாடல் சைகலையும் மிஞ்சி விட்டது. அந்தப் பாடலுக்கு படத்தில் நடித்தவர் அவர் உறவினர் மோதிலால்தான். பின்னர் ராஜ்கபூருடன் ஏற்பட்ட நட்பு முகேஷின் வாழ்க்கையை மாற்றியது. ஆவாரா, ஆக், ஆஹ, அனாரி, ஸ்ரீ 420 , போன்ற படங்களில் ராஜ்கபூருக்கு முகேஷின் குரல் நிரந்தரமாக பொருந்திப் போனது. பாந்தினி என்ற படத்தில் முகேஷ் பாடிய ஜானே வாலே என்ற பாடல் எழுத்தாளர் நகுலனுக்கு மிகவும் பிடித்த பாடல் .தமது படைப்புகளில் ஜானே வாலேயே நகுலன் அவ்வப்போது குறிப்பிடுவார். 1976ம் ஆண்டில் முகேஷ் காலமாகிவிட்டார் .அப்போது கண்ணீருடன் ராஜ்கபூர் நான் என் குரலை இழந்துவிட்டேன் என்றார். முகேஷின் உதட்டில் இருந்து உதிர்ந்த ஒவ்வொரு சொல்லும் மிகச்சரியான உச்சரிப்புடன் இருந்தது. இதைப் போல் வேறு யாராலும் பாட முடியாது என்று புகழாரம் சூட்டினார் இசை மேதை சலீல் சௌத்ரி. சல் அகேலா என்ற முகேஷின் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும், எனது கிடங்குத் தெரு நாவலின் இறுதிப் பக்கங்களுக்கு இந்த பாடலே அடித்தளம். இதனைக் கேட்க விரும்பிய தமினினி வசந்தகுமார் என் வீட்டுக்கே வந்து பாடலை கேட்டுவிட்டு சென்றார். அதே போல் தால் மிலே நதிகே ஜல் மே என்ற பாடலைக் கேட்டுவிட்டால் உங்களால் முகேஷை மறக்கவே முடியாது. ஓ மேரே ஆக்கோன் கே பெஹ்லே சப்னே என்று லதா மங்கேஷ்கருடன் இணைந்து பாடிய தாலாட்டுப் பாடல் ஒரு அற்புதம். லதா மங்கேஷ்கருடன் அவர் பாடிய பல டூயட் பாடல்களும் ஹிட்டாகின. ஆனால் நிஜ வாழ்க்கையில் தமது சொந்த சகோதரனாகவே முகேஷ் மீது பாசம் கொண்டிருந்தார் லதா மங்கேஷ்கர். முகேஷ் அண்ணா என்றுதான் அவரை அழைப்பார். முகேஷின் பாடல்களை இருவகையாகப் பிரிக்கலாம். ஒன்று துள்ளல் .இன்னொன்று துயரம். மேரா ஜூத்தா ஹை ஜப்பானி என்ற பாடலில் துள்ளலை காணலாம். டம் டம் டிகா டிகா பாடலும் அதுபோலத்தான். டூயட் பாடல்களிலும் துள்ளி குதித்தோடும் துல்லியமான நீரோடையைப் போல் அவர் குரல் இசையின் மீது வழுக்கிச் சென்றது. ஆனாலும் மனம் முழுவதும் நிறைந்திருப்பவை முகேஷின் துயரப்பாடல்கள்தாம். அத்தனை அடர்த்தியும் ஆழமும் வாழ்வை அதன் மரண விளிம்பு வரை கொண்டு போய் விடுகின்றன. இந்த குரலில் இத்தனை பெரிய துயரம் எப்படி வந்தது என்று வியக்கிறேன். தற்கொலையைக் கூட தூண்டிவிடுமோ என அஞ்சுகிறேன்.வாழ்வின் வெறுமையையும் அபத்தத்தையும் தனிமையையும் துயரையும் முகேஷின் குரல் அபாரமாக பதிவு செய்திருக்கிறது. இந்தி எதிர்ப்பு மனநிலையால் தமிழ் மக்கள் பல ஆயிரம் அற்புதமான இந்திப் பாடல்களை இழந்துவிட்டனர். . கலையே அரசியலுக்கு மிகச்சரியான மாற்று . சினிமா பாடல்களுக்காகவாவது மீண்டும் இந்தி திணிப்பு வந்தால் நல்லது என்றுதான் தோன்றுகிறது. ---------------

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...