Sunday 28 June 2020

ஜென் தேநீர் 21-25 ஓஷோவும் ஜென்னும்

ஜென் தேநீர்  21
ஓஷோவும் ஜென்னும்.
செந்தூரம் ஜெகதீஷ்



போதி சத்துவரின் கேள்வி பதில் பகுதியை நான்கு சீடர்கள் தொகுத்திருக்க அவற்றுக்கு ஓஷோ உரையாற்றிய புத்தகம் தான் வெண் தாமரை - THE WHITE CLOUDS.
இந்த நூலில் தியானம் பற்றி ஓஷோ கூறுகிறார்...." தியானமும் ஒருவகையான மரணம். விரும்பி ஏற்றுக் கொண்ட சாவு.மறைந்துவிடுதல், கரைந்து விடுதல்.
இதற்கு ஏசுநாதரின் கதை ஒன்றை கூறும் ஓஷோ ஏசு சிலுவையில் மரணம் அடைவதைத்தான் விரும்பினார் என்கிறார்.  தேவன் ஏசுவை சிலுவையில் இறக்க சம்மதித்தார். அப்போதுதான் ஏசு மீண்டும் புத்துயிர் பெற்று உயிர்க்க முடியும் என்பதால் தான் ஏசு சிலுவையில் இறந்தார்  என்கிறார் ஓஷோ.
தியானத்தைப் பயிலாமல் ஜென்னை பயில முடியாது. ஜென்னும் தியானமும் வெவ்வேறு அல்ல.
தியானம் செய்பவர் இயற்கையின் உள்ளுணர்வுடன் தனது உள்ளுணர்வை பொருத்தி விடுகிறார். இயற்கையுடன் இயற்கையாக ஒன்றி விடுகிறார். இயற்கைக்கும் அவருக்கும் வேறுபாடு இல்லை .பசிக்கும் போது உண்கிறேன். உறக்கம் வரும் போது உறங்குகிறேன் என்று ஜென் கூறுவது இதைத் தான்.
வின்சென்ட் வான்கோ என்ற மாபெரும் ஓவியக் கலைஞரின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றை ஓஷோ விளக்குகிறார்.
வான்கோ என்ற புகழ் மிக்க ஓவியரிடம் ஒருமுறை ஒரு ரசிகன் கேள்வி கேட்டான். உங்கள் ஓவியங்களில் மரங்கள் எல்லாம் வானத்தில் பறப்பது போல் உள்ளன. இவை கற்பனைகள். யதார்த்தம் அல்ல, மரங்கள் ஆழமாக வேரூன்றிக் கிடப்பவை. அவற்றால் எப்படி நட்சத்திரங்களைத் தாண்டி பறக்க முடியும் ?
வான்கோ கூறினார் .அவை மரத்தின் ஆசைகள். நான் மரங்களை நெருங்கிச் சென்று அவற்றுடன்  உரையாடியிருக்கிறேன். மரங்களுக்கு நட்சத்திரங்களைத் தாண்டி பறக்கிற ஆசை உள்ளது. அவை அதில் வெற்றி பெறுகின்றவா இல்லையா என்பது கேள்வியல்ல. ஆனால் ஒவ்வொரு மரமும் நட்சத்திரத்தைத் தாண்டி பறக்கத்தான் விரும்புகிறது.
மரங்களின் உள்ளுணர்வைத் தான் நான் பிரதிபலிக்கிறேன் என்கிறார் வான்கோ.
மெல்லிய தூறலாய் மழை பெய்து
என் சட்டையை நனைக்கும் போது
நான் புத்தரை காணாமல் கண்டுகொள்கிறேன்.
ஒரு பூவின் இதழ் மௌனமாக உதிரும்போது
நான் புத்தரின் குரலை கேட்காமல் கேட்கிறேன்
-என்கிறது ஒரு ஜென் கவிதை,
போதி சத்துவரின் பாடல் ஒன்று...
மனம் ஒரு மரக்கட்டை அல்லது கல்போன்றது.
இதில் மனிதன் ஒரு சிற்பத்தை வடிக்கிறான்.
ஒரு டிராகன் அல்லது ஒரு புலியை செதுக்குவான் எனில்
அதனைக் கண்டு அவன் அச்சம் கொள்கிறான்.
நரகத்தின் சித்திரத்தை அவனே வரைந்து அதற்கு
அவனே பயப்படுகின்ற மடத்தனம் இது.
அவன் அஞ்சாமல் இருந்தால் அனாவசியமான சிந்தனைகள்
மறைந்துவிடும்.
மனத்தின் ஒரு பகுதி காட்சியை படைக்கிறது. வாசனை, ஓசை, உணர்ச்சி போன்றவை  மனத்தால் பிறக்கின்றன.
இதனால் பேராசை , கோபம், அறியாமை எழுகிறது.
அது விதையாகி வேர் பிடித்து துன்பங்களாக வளர்கிறது.
தொடக்கத்தில் இருந்தே மனத்தின் சாரம் வெறுமையும் அமைதியும்தான்
என்பதை மனிதன் உணர்ந்திருந்தால்,
காலமும் இடமும் அவனுக்கு ஒரு பொருட்டல்ல.
ஆனால் அவன் மனத்தை புலியாகவும் சிங்கமாகவும்  டிராகனாகவும்
பேயாகவும் மாற்றிக் கொள்கிறான்.
அவற்றின் விருப்பத்திற்கும் வெறுப்புகளுக்கும் தன்னை ஆட்கொடுக்கிறான்.
இதனை அவன் உணரும்போது ஒரு நொடியில் விடுதலை பெற்றுவிடுவான்.
-------
முல்லா நசுருதீனுக்கும் அவர் மனைவிக்கும் கடுமையான சண்டை.
உன்னை திருமணம் செய்த தருணம் தான் என் வாழ்க்கையின் மிகவும் துரதிர்ஷ்ட்டமான தருணம் என்கிறார் முல்லா.
நான் ஒன்றும் உன் பின்னால் ஓடி வரவில்லையே...நீதானே என் பின்னால் ஓடி வந்தாய் என்கிறாள் மனைவி.
ஆம் என்கிறார் முல்லா. எலிக்கூண்டு எலியின் பின்னால் ஓடுவதில்லை. எலிதான் ஓடி வந்து கூண்டில் சிக்கிக் கொள்கிறது.
--------------------------
பிக்காசோ ஒரு மாபெரும் ஓவியக் கலைஞர். ஒருமுறை ஒரு பெண் அவரிடம் வந்தாள். தன்னை சித்திரமாக வரைந்து தரும்படி கேட்டாள். பிகாசோ பெரும் தொகையை கேட்க உடனடியாக பணமும் கொடுத்தாள்.
பிகாசோ பலமாதங்களாக அந்த சித்திரத்தை வரைந்துக் கொண்டிருந்தார். ஆறு மாதங்களுக்குப் பின் அந்தப் பெண் சித்திரத்தை வாங்க வந்தாள். அப்போது படத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தாள் .என் முகத்தில் மூக்கு இல்லை .அதை எங்கே போட்டு விட்டீர்கள்?
பிகாசோவும் குழப்பம் அடைந்தார் .மூக்கை எங்கே வைத்து தொலைத்தேன் என்று அவரும் யோசிக்கலானார்.
அவள் கணவரிடம் பிகாசோ கூறினார் .உன் மனைவிக்கு முலைகளும் இல்லை மூக்கும் இல்லை .சப்பையான ஒருத்தியை நீ மணமுடித்திருக்கிறாய்
------------------
மனிதனின் மனதுக்குள் டிராகனும் புலியும் இருப்பதாக போதி சத்துவர் கூறுகிறார். அந்த புலியும் டிராகனும் காமமும் அகந்தையும் என்றுஓஷோ விளக்குகிறார். காமம் தான் உலகை அதிகளவில் ஆட்டிப் படைக்கிறது. காமத்தால் தான் மனிதன் மிருகமாகிறான்.
ஆனால் காமத்தை காதலாக மாற்றவல்லது தியானம் என்கிறார் ஓஷோ. காதல் அனைத்தும் மீதானது. பாலின பேதம் அறியாது .அனைத்து மரங்களையும் விலங்குகளையும் பறவைகளையும் மனிதர்களையும் புழு பூச்சிகளையும் மீன்களையும் காற்றையும் கடலையும் மேகங்களையும் வானத்தையும் வானத்தின் கீழ் உள்ள அனைத்தையும் நேசிக்க கற்றுத் தருகிறது தியானம்.
ஸ்டெல்லா புரூஸ் ஐ லவ் எவ்ரிதிங் அன்டர் தி சன் என்று அருமையான சிறுகதை ஒன்றை எழுதியிருக்கிறார்.
காமம் காதலாகவும் காதல் பிரார்த்தனையாகவும் மாறக் கூடியது என்கிறார்  ஓஷோ. காமம் பிரார்த்தனையாக மாறிவிடும்போது நீ வீடுபேறு அடைந்துவிட்டாய் என்கிறார் ஓஷோ.
தியானம் தன்னுடன் மட்டும் வாழப் பழகிக் கொள்வது. தனியாய் இருப்பதின் ஆனந்தத்தைத் தவிர அது வேறு ஒன்றுமி்ல்லை. தியானத்தை அறிந்தவர் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் எந்த சஞ்சலமும் இன்றி ஆனந்தமாக வாழ்ந்துக் கொண்டிருப்பார். அவருக்கு தன் உள்ளார்ந்த பரவசமே போதுமானது.மற்றவர்களைப் பற்றி என்ன கவலை என்று விளக்கும் ஓஷோ அடுத்தவர் தான் நரகம் என்ற ஜீன் பால் சார்த்தரின் வரியையும் இதனுடன் பொருத்துகிறார்.
வாழ்க்கையில் இன்னொருவர் வருவது தேவையின் பொருட்டல்ல ஆடம்பரத்தின் பொருட்டு என்கிறார் ஓஷோ.
ஒரு தத்துவ அறிஞர் இன்னொரு தத்துவ அறிஞரை வழியில் சந்தித்தார். இருவரும் நலம் விசாரித்துக் கொண்டனர்.
நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் .நான் எப்படி இருக்கிறேன் சொல்லுங்கள்

--------------------------------------
ஜென் தேநீர்  22
ஓஷோவும் ஜென்னும்.
செந்தூரம் ஜெகதீஷ்
AH THIS என்ற ஓஷோவின் ஜென் கதைகள் மீதான உரை புத்தகமாக வந்துள்ளது. இந்த புத்தகத்தை வைத்து ஓஷோ ஜென் பற்றி கூறியதைப் பார்ப்போம்....
இந்த நூலில் சௌ சௌ என்ற ஜென் குருவின் கதைகள் உள்ளன. அவற்றுக்கு ஓஷோ விளக்கம் அளிக்கிறார். கதைகள் காப்பிரைட் உரிமை உடையவை. அனுமதியுடன் ஓஷோ அதனை மறுபடியும் பதிப்பித்துள்ளார். அவற்றை உரிய முறையில் அனுமதி பெற்றே கையாள முடியும் .எனவே கதைகளை விரிவாக கூற இயலாது .ஓஷோவின் எழுத்துகளை அவரது புத்தகங்களில் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். மற்றபடி ஜென் பற்றிய ஓஷோவின் பொதுவான புரிதல்களை நாம் தொகுத்துக் கொள்வோம்.
தியானம் ஒருவகையான பிரார்த்தனைதான். ஓஷோவும் பிரார்த்தனையை வழக்கமாக்கிக் கொள்ளும்படி கூறுகிறார். கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ பிரார்த்தனை பழகுங்கள் என்கிறார் அவர். இது முரண்பாடான வாசகமாகத் தெரியும். அதை நான் புரிந்துக் கொண்ட விதத்தில் விளக்குகிறேன்.
மனிதன் கருவில் தோன்றுகிறான். தாயின் வயிற்றில் பத்து மாதம் வளர்கிறான் .இந்த பத்துமாதங்களிலும் அவனுக்கு சுவாசம், உணவு யாவும் தாயின் மூலமாக கிடைக்கிறது. கைப்பட்டாலே கலைந்து போகும் சதைக்கோலம் மாதங்கள் கனிய கனிய சிசுவாக உருக்கொள்கிறது. பிறகு சிசு வயிற்றில் தங்கமுடியாத நிலை வரும் போது பிரசவ வலி எடுத்து தாயின் யோனி வழியாக ஜனனம் எடுக்கிறது. தாயுடன் இணைந்திருந்த அதன் தொப்புள் கொடி அறுபட்டு அது தனியாக சுவாசிக்கப் பழகுகிறது.  தனியாக அதற்கு பாலூட்டப்படுகிறது. இது மிகவும் முக்கியமான ஒரு பரிணாமம் .அதுவரை தாயின் ஒரு அங்கமாக இருந்த சிசு இப்போது வாயும் வயிறும் வேறு என்ற நிலையில் பிறவியை எடுக்கிறது.
இந்த டெக்னாலஜியை எண்ணிப்பாருங்கள். எத்தனை குழந்தைகள் இப்படி பிறக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு முகத்துடன். தனித்தனி கைரேகைகளுடன், தனித்தனி குணாதிசயங்களுடன், தனித்தனி திறமைகளுடன், தனித்துவம் மிக்கதாக ஒவ்வொரு குழந்தையும் பிறக்கின்றது.
இது எப்படி நிகழ்கிறது. யார் இதற்கு டிசைன் செய்தது ? யார் இதற்கு GFX செய்தது? எந்த கணினியில் எந்த போட்டோ ஷாப்பில் இதெல்லாம் செய்யப்பட்டது என்று யோசியுங்கள்.
நம்மை மீறிய மகத்தான சக்தி ஒன்று, பேராற்றல் ஒன்று , பேரறிவு ஒன்று யாருடையை கற்பனையாலும் எட்டமுடியாக பிரம்மம் ஒன்று இயங்கிக் கொண்டிருக்கிறது.
அதை கடவுள் என்று அழைத்தாலும் சரி, இயற்கை என்றாலும் சரி.
அது மட்டுமா....ஒரு மனிதனின் உடற்கூறுகளைப் பாருங்கள் .மூளை, மனம், சிந்தனை, பார்வை, செவித்திறன், சுவாசம், வாசம், கை கால்கள், விரல்கள் நகங்கள், உடலின் வடிவமைப்பு.....உண்பதற்கு வாய் ருசிப்பதற்கு நாக்கு மெல்வதற்கு பற்கள். சாப்பிடுவதற்கு நீளமான கைகள், கழிப்பதற்கு புட்டம் பின்புறம் .அது வாய் அருகில் இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துப் பாருங்கள் . கழிவு, சிறுநீருக்கு தனித் தனிப்பகுதிகள், காமத்தைத் துய்ப்பதற்கு ஆண் என்றும் பெண் என்றும் தனிப்பிறப்புகள். தனி குறிகளுடன்.
உடலின் உள்ளே பாருங்கள். எத்தனை எலும்புகள். எத்தனை நரம்புகள். இதயத்தில் இருந்து பாயும் ரத்தத்தால் இயக்கம், ஒரு சிறுவலி ஒரு சிறு கீறலைத் தாங்க முடியுமா நம்மால். ஒரு எலும்பு வேண்டாம் என தூக்கியெறிய முடியுமா...
அத்தனை டிசைன் யார் செய்தார்கள்...? உடல் சிசுவாகப் பிறந்து குழந்தையாக வளரும் போது அதன் வெகுளித்தனத்தை யார் தந்தது. அதன் விளையாட்டை லீலையை யார் செய்தது. அதன் புன்னகையை கண்ணீரை அழுகையை யார் தந்தது. அதன் வளர்ச்சியை அறிவை யார் தந்தது .அதன் இளமையை அழகை இளமையைத் துய்ப்பதற்கான ஆர்வத்தை யார் அளித்தது. அது முதுமைப் பருவத்தை 60 ஆண்டுகளுக்குப் பின் எட்டும் என்ற கணக்கைப் போட்டது யார். முதுமையின் தளர்வை ஏற்படுத்தியது யார். அந்த உடல் கடைசியில் இறந்துவிடும் போது அதுவரை அதில் இயங்கிய உயிர், சிந்தனை, மனம், ஆசைகள், கனவுகள், பேச்சு எல்லாம் எங்கே போய் விடுகிறது.
இத்தனையும் எண்ணி ஒரு நாள் தியானம் செய்துப் பாருங்கள் . நாம் இந்த பெருங்கடலின் ஒரு துளி என்று புரியும். ஒரு துளியால் ஒருபோதும் பேரண்டத்தையும் பெருங்கடலையும் புரிந்துக் கொள்ள முடியாது. ஆனால் அதனுடன் தொடர்பு கொள்ள முடியும். தியானமும் பிரார்த்தனையும் தான் அந்த மகாசக்தியுடன் நம்மை இணைக்கும் கேபிள் . செல்போனை சார்ஜ் செய்வது போன்றதுதான் தியானமும். அது மனிதனுக்கான ரீ சார்ஜ்.
ஓஷோ பிரார்த்தனை பழகுங்கள் என்று கூறுவதும் அதனால்தான்.
பிரார்த்தனையை நோக்கி நகருங்கள். பிரார்த்தனை மட்டும்தான்  உண்மையான மன நிறைவைத் தரும்.பிரார்த்தனை மட்டும்தான் இறைவன் அல்லது நமக்கு அப்பால் உள்ள ஒரு ஆற்றலை குறித்த பிரக்ஞையைத் தரும். உனக்குப் பிரியமானவர்களின் இறைமையை கடவுள்தன்மையை பார்த்ததும் உனக்கும் அந்த தன்மை வாய்க்கும்.உனக்குள் இருக்கும் இறைமையை குறித்த பிரக்ஞை உனக்கு ஏற்படும் என்கிறார் ஓஷோ.
கடவுளை அடைவதற்கான பாதையே கடவுள் தான் என்கிறார் ஓஷோ. பாதையும் இலக்குமாக இறைவனே இருக்கின்றான்.
நீட்ஷே போன்ற அறிஞர்கள், தத்துவவாதிகள், எழுத்தாளர்கள், நடிகர் நடிகைகள் என பலரும் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது. அண்மையில் சபிதா என்ற பெண் கவிஞர் தற்கொலை செய்துக் கொண்டார். நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துக் கொண்டார். புகழின் உச்சத்தில் தான் சில்க் ஸ்மிதாவும் இறந்தார். அமிதாப்பச்சன் படங்களை இயக்கிய மன்மோகன் தேசாய், நடிகை ஷோபா, இயக்குனர் குருதத், பெண் கவிஞர் சில்வியா பிளாத், எழுத்தாளர் பிரான்ஸ் காப்கா என தற்கொலை செய்தவர்களின் பட்டியல் மிகவும் நீளம்.
பணம், புகழ், அழகான மனைவி, அன்பான குழந்தைகள், நல்ல நண்பர்கள், எல்லாம் இருந்தும் ஏன் ஒருவர் தற்கொலை செய்துக் கொள்கிறார்.? எல்லாம் இருந்தும் எதுவும் இல்லை. நிறைவுக்கு பதில் வெறுமைதான் மிஞ்சியுள்ளது என்கிறார் ஓஷோ.
ஒரு குட்டிக் கதை
ஒருவன் மன நல மருத்துவரிடம் சென்றான். நான் என்னை பலமுறை நாயாக கற்பனை செய்துக் கொள்கிறேன் .நாய் போல குரைக்கிறேன் .நாய் போல மூத்திரம் கழிக்கிறேன். நாய் போல வாலை ஆட்டுகிறேன். நாய் போல் தரையில் தூங்குகிறேன் என்று தனது பிரச்சினையை விளக்கினான்.
மருத்துவர் அவனை பரிசோதிப்பதற்காக அந்த படுக்கையில் போய் படுத்துக் கொள் என்றார்.
அதெப்படி முடியும் நாயை பின்புறமாகத்தானே உடலுறவு கொள்ள முடியும் என்றான் அவன்
-----------------------
ஜென் தேநீர்  23
ஓஷோவும் ஜென்னும்.
செந்தூரம் ஜெகதீஷ்
AH THIS என்ற ஓஷோவின் ஜென் கதைகள்  புத்தகத்தை முன்வைத்து....
ஜென் ஞானம் ஞானம் என்கிறதே அது என்ன...? ஓஷோவும் இதற்கு விளக்கம் கூறுகிறார்.
அறிவு வேறு ஞானம் வேறு என்று விளக்குகிறார் ஓஷோ.
"ஞானமடைதலுக்கும் அறிவுடைமைக்கும் சம்பந்தம் இல்லை .இன்னும் சொல்லப் போனால் அறிவிலிருந்து விடுதலை பெறுவதே ஞானமாகும். அறிவை முழுவதுமாக ரஸவாதம் செய்து மாற்றுவதே ஞானமாகும் " என்கிறார் ஓஷோ.
இதை இப்படி காணலாம்.....சிறுவயது குழந்தைகளுக்கு அறிவு வளராத பருவத்தில் ஞானம் உள்ளது.அந்த ஞான ஒளியால் அவர்கள் மிகவும் அழகானவர்களாக இருக்கிறார்கள். குழந்தைகளைப் பார்த்ததும் நமக்கு அன்பு சுரக்கிறது.அவர்கள் அத்தனை வெகுளிகளாக இருக்கிறார்கள் .அவர்களின் வெகுளித்தனம் தான் அழகு. அவர்களின் வெகுளித்தனம்தான் ஞானம். ஆனால் கல்வி குப்பைகள், பெற்றோரின் போதனை குப்பைகள், அறிஞர்களின் நடிகர்களின் அறிவுரை குப்பைகள் எல்லாம் குழந்தைகளின் மனங்களில் வெகுளித்தனத்தை மெதுவாகக் கொன்று விடுகின்றன. அவர்கள் ஆதாம் ஏவாளைப் போல் தேவனின் ஞானத் தோட்டத்தில் இருந்து வெளியேறுகிறார்கள். உலகின் அறிவு, தொழில்நுட்ப அறிவு போன்ற பல சுமைகளை அவர்கள் சுமக்கிறாா்கள். அவர்கள் அறிவுடையவர்களாக மாறுகிறார்கள். ஆனால் குழந்தைக்குள் இருக்கும் புன்னகை நிரம்பிய ஒரு ஞானி காணாமல் போய்விடுகிறார்.
மீண்டும் நம்மை குழந்தைகளைப் போல் ஆக்குவதே ஜென்னின் செயலாக உள்ளது.
ஓஷோ சொல்கிறார்  " வெகுளித்தனம் என்பது அதிசயமாகவே எல்லாவற்றையும் காண்பது. ஆகா இது....ஆகா ....என்ற வியப்புதான் அது. தொடர்ந்து வியக்கக்கூடியவர் தான் மறைபொருளை நோக்கி செல்கிறார்.எல்லாமே அவருக்கு மர்மமாக விளங்குகிறது.தெரிந்துவிட்ட பிறகு அவை மர்மத்தை இழந்துவிடுகின்றன.ஆகா இது என்பதே பரவச நிலை.அது இல்லாமல் பரவசம் அடைய முடியாது. அறிவு உள்ளவர்களுக்கு கடவுள் கிடையாது. அவர்கள் அறிவால் தர்க்கம் செய்வார்கள். ஆனால் ஆகா என அதிசயத்தில் உழல்பவர்களுக்கு எல்லாமே தரிசனம் தான்.கடவுள் தூரம் தூரமாக இருந்தால்தான் அதனைத் தேடிச்செல்ல முடியும். "
" சமயம் என்பது அறிவல்ல....சமயம் அறிவின் எதிர்நிலையாகும். அது கவிதைநிலையாகும். அது அன்பு நிலையாகும். அது அபத்த நிலையாகும். அறிவியல் அறிவு எனில் சமயம் அறிவின்மை.நான்சன்ஸ் ஆனால் அதுதன் அதன் அழகு "
தியானம் என்பதுதான் அதன் பாதையற்ற பாதை என்பார் ஓஷோ. ." தியானம் என்பது காணுதல்,தியானம் என்பது உணர்தல், அங்கு பயம் இல்லை. யாரும் உன்னை தண்டிக்கப் போவதில்லை என்ற நிம்மதி.
குருட்ஜிஃப் என்ற மேதையைப் பற்றி ஓஷோ இப்புத்தகத்தில்  சில விவரங்களை சொல்கிறார். குருட்ஜிஃப் ஞானம் அடைந்த தத்துவவாதி. அபூர்வமாகத்தான் சில தத்துவவாதிகள் ஞானம் அடைகிறார்கள். சாக்ரடீஸ் போன்றவர்கள். நீட்ஷே ஞானத்தைத் தவறவிட்டதால் மனப் பிறழ்வுக்கு ஆளானார். தஸ்தேயவஸ்கியின் நிலையும் அதுதான். ஆனால் மைக்கேல் நேமியும் கலீல் கிப்ரானும் ஞான நிலையைஅடைந்தனர். ஜலாலுதீன் ரூமி, கபீர், குருநானக் போன்றோர் ஞானத்தைஅடைந்தனர். ஜே.கிருஷ்ணமூர்த்தி அறிவாளியாகவே இருந்துவிட்டார். ஞானத்தை அவர் தொடவே இல்லை என்பார் ஓஷோ.
ஆனால் குருட்ஜிஃப் ஞானம் அடைந்தார். அவரது மாணவர் பி.டி.ஆஸ்பென்ஸ்கி தான் குருட்ஜிஃபின் போதனைகளைத் தொகுத்து புத்தகமாக்கி அவரை உலகப் புகழ் பெறச்செய்தார். ஆனால் ஆஸ்பென்ஸ்கி ஞானம் அடைந்தவர் அல்ல.
ஆஸ்பென்ஸ்கி ஒரு புத்தகத்தை எழுதினார். அது குருட்ஜிஃபின் போதனைகள் தொகுப்பு .ஆனால் முக்கியமான சில பகுதிகளை அவரால் உணர முடியவில்லை. அதை அவர் தவற விட்டார். குருவிடம் தனது புத்தகத்தைக் காட்டிய போது இவை பகுதிகள்தாம் முழுமை பெறவில்லை என்றார் குருட்ஜிஃப். ஞானத்தின் சிதறிய வடிவங்கள்....எனவேதான் அதற்குப் பெயர் வைக்கும் போது ஆஸ்பென்ஸ்கி FRAGMENTS OF AN UNKNOWN TEACHING என்று பெயரிட்டார். உண்மையை துண்டு துண்டாக விளக்க முடியாது என்கிறார் ஓஷோ.
அப்படியானால் நீங்கள் ஏன் அதைப் பற்றி பேசுகிறீர்கள் என்று கேட்டார் சீடர் ஒருவர்
கண்டுக்காதே என்றார் ஓஷோ.
----------
குருட்ஜிஃப் கடவுளைப் பற்றி கூறும் போது தாயையும் தந்தையையும் வணங்குபவனுக்கு கடவுள் தேவையில்லை என்கிறார். ஏன்என்றால் கடவுள் மிக்பபெரிய தாய் .கடவுள் உலகையே காக்கும் மிகப்பெரிய தந்தை. அவருக்கு முன்னால் நாம் குழந்தைகள். குழந்தைகள் தாய் தந்தையிடமிருந்து தான் வாழ்க்கையைக் கற்றுக் கொள்கின்றன.
ஒரு குட்டிக் கதை
ஒரு கடையில்நிறைய கூட்டம் இருந்தது. அமர்வதற்கான நாற்காலி எதுவும் கிடைக்காத இளம் பெண் ஒருத்தி நான் கர்ப்பிணிப் பெண் எனக்கு யாராவது அமர நாற்காலி தரமுடியுமா எனக் கேட்டாள். ஒருவர் எழுந்து இடம் கொடுக்க அந்தப் பெண் அமர்ந்தாள். பக்கத்தில் இருந்த பெண்மணிக்கு சந்தேகம். இளம் பெண்ணின் வயிறு வீங்கியிருக்கவில்லை. கர்ப்பிணி போலவே தெரியவில்லை. அவர் கேட்டார் எத்தனை  மாத கர்ப்பம் பெண்ணை ?
just now என்றாள் அந்தப் பெண் .ஒரு பதினைந்து நிமிடத்துக்கு முன்புதான் கர்ப்பம் ஆனேன்.
-----------------------
ஜென் தேநீர்  24
ஓஷோவும் ஜென்னும்.
செந்தூரம் ஜெகதீஷ்
ZEN -THE SOLITARY BIRD CUCKOO OF THE FOREST
ஓஷோவின் தனியாக கூவும் காட்டுக் குயில் என்ற புத்தகத்தில் இருந்து சில பகுதிகளைப் பார்க்கலாம். ஜென் கதைகள் குறித்து ஓஷோ ஆற்றிய உரைகள் இவை. இந்த புத்தகம் மிகப்பழைய பதிப்பு என்னிடம் இருந்தது. அதில் பகவான் ரஜ்னீஷ் என்றே இருக்கிறது. புதிய பதிப்புகளில் ஓஷோ என பெயர் மாற்றப்பட்டிருக்கலாம். தமிழில் இதுவரை வந்ததாக தெரியவில்லை. ஓஷோவின் முக்கியமில்லாத புத்தகங்கள் தாம் தமிழில் மிகச்சுமாரான மொழிபெயர்ப்புகளாக வந்துக் கொண்டிருக்கின்றன. அவற்றை படிக்காதீர்கள். அதைவிட ஆங்கிலத்தில் படிக்க முயலுங்கள். மனசு வைத்தால் 3 மாதத்தில் ஆங்கிலம் கற்பதும் சாத்தியமே.
ஏன் என்றால் ஜென் புதிரானது. மிகவும் பூடகமானது .நுட்பமானது. இதைப் புரிந்துக் கொள்ள  சராசரிவாசக மனத்துடன் படிக்கக்கூடாது. ஆழமாக உணர்தல் அவசியம். அதற்கு ஆங்கிலம் அல்லது சிறந்த தமிழாக்கம்இருந்தால் நல்லது .என்னுடைய மொழியாக்கம் சிறந்தது என உறுதியுடன் கூறுவேன், ஏனெனில் எனக்கு ஆங்கிலமும் தெரியும் தமிழும் நன்றாகத் தெரியும். ஓஷோவையும் ஜென்னையும் மிக நன்றாக உணர்ந்தவன் நான்.
பாஷோவின் ஹைகூ கவிதை ஒன்று...
உனது பாடல் என்னை முன்பு எப்போதை விடவும்
அழகானவனாக மாற்றுகிறது.
உன் பாடலைக் கேட்டு எல்லாப் பறவைகளும் பாடுகின்றன.
முன்பு எப்போதும் இல்லாத தனிமைக்கு என்னைத் தள்ளுகின்றன.
ஓ தனிமைப் பறவையே.
தனியாகக் கூவும் காட்டுக் குயிலே....
ஜென் கதைகளைப் பற்றிய இத்தொடருக்கு பாஷோவின் கவிதை வரியையே ஓஷோ தலைப்பாக வைத்துள்ளார்.
ஜென் உங்களை தாமரைகளாக மாற்றுகிறது என்கிறார் ஓஷோ. வானத்தையும் நட்சத்திரங்களையும் பார்த்து நீங்கள் மலர வேண்டும்.மலர்ச்சி தான் உங்கள் விடுதலை. மலர்ச்சி தான் உங்கள் கௌரவ அடையாளம். மலர்ச்சியில் தான் உங்களுக்கான நறுமணம் இருக்கிறது என்பார்.
கஸான் என்ற ஜென்குருவிடம் ஒரு புத்த பிக்கு வந்தார்.  பாதை என்பது எது என்று கேட்டார்.
குரு பதிலளித்தார் . சூரிய ஒளி பத்தாயிரம் ஆண்டுகளாக நமது கண்களில் மின்னுகிறது. ஆனால் ஒரு மேகத்தைக் கூட அது வானத்தில் தொங்க விடுவதில்லை
பிரபஞ்சத்தைப் புரிந்துக் கொள்ள சிறந்த வடிவம் எது என்று கேட்டார் புத்த பிக்கு.
குரு பதிலளித்தார்
 சுத்தமான ஆற்று நீரில் மீன்கள் நீந்திமகிழ்ந்து விளையாடுவது அவற்றின் தவறுகளாக இருக்கலாம்.
--------------
வானத்தில் பறக்கும் பறவை ஒரு தடயத்தையும் விட்டுச் செல்வதில்லை என்று விளக்குகிறார் ஓஷோ.இதைத்தான் பறவைகளின் பாதை அல்லது வழித்தடம் என்று கூறுகிறோம். வானத்தின் இன்மையில் மறைந்துவிடுதல்,ஒரு தடயமும் இல்லாமல் போய் விடுதல், ஜென்னும் உங்களை உலகில் அப்படி பட்டும் படாமலும் வாழச்சொல்கிறது.எதுவும்இல்லாதவராக யாரோவாக .
-----------
இன்னொரு ஜென் கதை
கியோசன் என்ற ஜென் துறவி வானத்தில் நிலவைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருடன் இருந்த இன்னொரு ஜென் துறவியான செக்கிஸ்ட்டு கேட்டார்  முழு நிலவு பிறையாக மாறும் போது அதன் வட்டம் எங்கே போய் விடுகிறது?
கியோசன் பதிலளித்தார் - அது பிறையாகவே தெரியும் போதும் அதன் வட்டம் அங்கேயே தான் இருக்கிறது.
ஞானமும் இப்படித்தான் .சிலருக்குப் பூரண பௌர்ணமி நிலவாக காட்சியளிக்கிறது. சிலருக்கு அமாவாசையாக இருக்கிறது. சிலருக்கோ அது தேய்பிறையாகவும் இன்னும் சிலருக்கோ அது வளர்பிறையாகவும் காட்சியளிக்கிறது. ஆனால் எப்படி காட்சியளித்தபோதும் அதன் வட்டம் மறைந்துவிடவில்லை. கண்ணுக்குத் தெரியாத போதும் அது அங்கேயே தான் இருக்கிறது. மனிதனின் ஞானமும் அவனுக்குள் அங்கேயேதான் உள்ளது .அதை அவன் தேய்பிறையாக வெளிப்படுத்துகிறானா வளர்பிறையாக வெளிப்படுத்துகிறானா அல்லது பூரண ஞானத்துடன் பௌர்ணமியாக பொழிகின்றானா என்பதுதான் வேறுபாடு. புத்தர் பூர்ணிமையில் தான் ஞானம் அடைந்ததாக கூறப்படுவதும் தற்செயல் அல்ல, ரம்ஜான் பண்டிகை பிறை தெரிந்ததும் கொண்டாடப்படுவதிலும் ஒரு அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது.
இந்த அர்த்தங்கள் அறிவியலுக்கு அப்பாற்பட்டவை. ஆன்மீக நிலை அறிவியலுக்கு எதிரானது. ஆன்மீகத்தால் விளக்கம் கூற முடியாது ஆனால் உணர முடியும்.
எத்தனை அழகான நிலா
திருட வந்தவன் அதை மறந்து
பாடத் தொடங்கி விட்டான் என்கிறது ஒரு ஜென் ஹைகூ.
----------------
சகய முனி என்றழைக்கப்படும் புத்தர் தமது சூத்திரங்களில் இவ்வாறு கூறுகிறார்
யாருக்கும் எந்த ஒரு தீங்கும் செய்யாதிருத்தல்
எல்லோருக்கும் முடிந்தவரை நன்மையைச் செய்தல்
இதுதான் தன்னை தூய்மைப்படுத்திக் கொள்ளுதல்
இதுதான் அனைத்து புத்தர்களின் போதனையாகும்.
---------
ஓஷோ செயல் செயலற்ற நிலை குறித்து இப்புத்தகத்தில் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். ஓய்வெடுத்தல் என்பது செயலற்ற நிலை .அனைத்து செயல்களையும் விடுத்த ஒரு நிலை. அனைத்து காரியங்களையும் விட்டு ஓய்வெடுக்கும் போது தான் நீங்கள் உங்கள் இயல்பு நிலையில் இருக்கிறீ்ர்கள். அந்த நிலைதான் உலகின் அனைத்து மர்மங்களையும் மூடிய கதவுகளையும் திறந்து விடுகிறது.இருத்தலின் அதிசயங்களைக் காண்கிறீர்கள்.
இந்த நிலை உங்களுக்குள் ஒரு நடனத்தை எழுப்புகிறது.நீங்கள் ஒரு வார்த்தை கூட பேசாமல் இதுவரை கேட்காத ஆனந்தமான இசை ஒன்றை கேட்கிறீர்கள். இதனை யாரிடமும் உங்களால் மொழிபெயர்க்க முடியாது. இதுவரை நீங்கள் காணாத வண்ணங்களில் மலர்கள் மலர்வதைக் காண்கிறீர்கள். உங்கள் முழு இருப்பும் சுகந்தம் மிக்க ஒரு சோலையாக மாறுகிறது. இதைப்பற்றி எதுவும் கூற வேண்டியதில்லை. அதுவாக இருங்கள். அமைதியின் ஒளிரேகைகள் உங்களைச் சுற்றி படரத் தொடங்கிவிடும் " என்கிறார் ஓஷோ. இதுதான் தியானம். தியானம்தான் ஞானம்.
எங்கேயோ தனிமையில் காட்டுக்குயில் ஒன்று கூவுவதைக் கேளுங்கள்.கேட்டுக் கொண்டே இருங்கள். அதில் கரைந்துவிடுங்கள் என்கிறது ஜென்.
-------------
ஓஷோவின் குட்டிக் கதை
டாக்டரிடம் வருகிறாள் ஒரு கர்ப்பிணிப்பெண். எத்தனை பிள்ளைகள் என்று கேட்கிறார் டாக்டர். 14வது கர்ப்பம் என்கிறாள் அவள்.
டாக்டருக்கு டென்ஷன். சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தார். எதற்காக இத்தனைக் குழந்தைகள் என்று கேட்டார்
அந்தப் பெண் சொன்னாள் " நான் என் கணவரை மிகவும் நேசிக்கிறேன். ஒரு கணம் கூட அவரை விட்டு என்னால் இருக்க முடியாது "
டாக்டர் சொன்னார் நானும்தான் செயின் ஸ்மோக்கர். ஆனால் அவ்வப்போது சிகரெட்டை வாயில் இருந்து எடுத்துவிடுவேன்.
----

ஜென் தேநீர்  25
ஓஷோவும் ஜென்னும்.
செந்தூரம் ஜெகதீஷ்
ZEN -THE SOLITARY BIRD CUCKOO OF THE FOREST
ஒரு ஜென் கதை
செகிட்டோ என்ற ஞானியிடம் அவருடைய சீடரான கோயி ஒரு முறை வந்து பலவிதமான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். குருவும் பதிலளித்தார்.
ஒரு முறை கோயி கேட்டார்...எனக்கு நீங்கள் ஒரு சொல் சொல்ல வேண்டும். இல்லையானால் நான் இங்கிருந்து போய் விடுவேன்.
குரு பதில் சொல்லவில்லை. எனவே கோயி புறப்பட்டார். அப்போது செகிட்டோ பின்னால் இருந்து அவரை ஜாரி ஜாரி என்று சத்தம் போட்டு அழைத்தார்.
கோயி லேசாக கழுத்தைத் திருப்பி தோள் வழியாக பின்னால் பார்த்தார்.
பிறப்பிலிருந்து இறப்பு வரைக்கும் இதுதான். முகத்தைத் திருப்புதல். மூளையைத் திருப்புதல் .இது எப்படி இருக்கிறது என்றார் குரு.
கோயி திடீரென ஞானம் அடைந்தார்.அதன் அடையாளமாக அவர் தனது கைத்தடியைப் போட்டு உடைத்தார்.
-----------
இதைப்பற்றி ஓஷோ விளக்குகிறார். ஒரு சீடன் குருவிடம் வரும்போது குரு அவனுக்கு ஒரு இருக்கையைக் கொடுப்பார். சீடன் அதில் அமர்வான். ஒருவேளை சீடன் குருவை நிராகரித்துவிட்டால் அந்த இருக்கையில் அமர மாட்டார். நான் இந்த இடத்தைச் சேர்ந்தவன் அல்ல என்று முதுகைத் திருப்பிக் கொண்டு போய் விடுவார்.
குருவை புறமுதுகு காட்டி புறக்கணித்துச் செல்லும் ஒரு சீடனை குரு திரும்பச் செய்து அவனுக்கு ஞானம் அடையச் செய்வதைத் தான் மேற்சொன்ன குட்டிக் கதை விளக்குகிறது. ஞானம் என்பது திடீரென ஏற்படுவது. பல ஆண்டுகளாக சீடன் தேடிக் கொண்டிருப்பான் ,கிடைக்காது. ஆனால் அவன் தேடாத ஒரு கணத்தில் அவனே எதிர்பாராத விதமாக அவன் ஞானம் அடைந்துவிடுவான் .அதன் அடையாளமாகத்தான் கோயி தனது கைத்தடியை உடைக்கிறார்.
ஜென் நேரடியாகப் பேசாது ஆனால் குறியீட்டுத் தன்மையுடையது. புதிரானது.
இன்னொரு கதை
ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார் உம்மோன் என்ற புகழ் பெற்ற ஜென் குரு.அவரிடம் ஒரு துறவி வந்தார். அப்போது உம்மோன் அவரிடம் கேட்டார். மரத்தில் பறவைகள் பாடிக் கொண்டிருப்பதை கேட்டாயா ? அவை ஜென் பிரச்சாரம் செய்துக் கொண்டிருக்கின்றன.
இல்லை நான் கேட்கவில்லை என்றார் துறவி.
உம்மோன் தனது கைத்தடியை உயர்த்தினார். ஜென் என்று கத்தினார்.
------------------------
செப்போ என்ற துறவி என்கன் என்பவரிடம் போய் சீடராக சேர்ந்தார். அவருக்குத் திருப்தியில்லை. பின்னர் இன்னொரு குருவிடம் போனார்.தோசு என்ற குருவிடமிருந்தும் அவர் திரும்பி வந்துவிட்டார். பின்னர் தோகுசன் என்ற குருவிடம் சென்ற அவர் குருவிடம் ஒரு கேள்வி கேட்டார். பெருந்தகையாளரே தங்களிடம் நான் கற்றுக் கொண்ட போதனைகளை பிறருக்கு போதிக்க அனுமதி உண்டா...
இதைக் கேட்டதும் குரு அவரை பிரம்பால் நையப் புடைத்தார்.
மறுநாள் குருவின் கோபம் தணிந்ததும் செப்போ தன்னை அடித்தற்கான காரணத்தை அறிய குருவிடம் சென்றார். தோகுசன் விளக்கம் தந்தார். எனது சமயம் சொற்கள் இல்லாதது. வாக்கியங்கள் இல்லாதது. அது யாருக்கும் எதுவும் தருவது இல்லை. எப்படி நீ இதனை போதிப்பாய் ?அதனால் தான் அடித்தேன்.
இதை கேட்டதும் செப்போ ஞானம் அடைந்துவிட்டார்.
--------------------
தோசனிடம் ஒருமுறை ஒருவர் கேட்டார். மர்மங்களின் மர்மம் என்பது என்னவோ ?
அது இறந்து போன ஒரு மனிதனின் நாவைப் போன்றது என்று பதில் அளித்தார் தோசன்.
------
ஒரு முறை ஜோஷூ என்ற ஜென் குருவிடம் ஒருவர் கேட்டார் ....பண்டைய காலங்களின் போதனை என்னவோ ?
ஜோஷூ கூறினார் - கவனமாக கேளுங்கள், கவனமாக கேளுங்கள்
----------
ஒஷோவும் ஜென் கதைகளை கவனமாக கேளுங்கள் என்கிறார். ஒவ்வொரு குட்டிக் கதையும் ஒரு வைரம். மிகப்பெரிய தரிசனத்தைத் தரக்கூடியவை. ஒரு திடீர் ஞானத்தை உசுப்பிவிடக் கூடியவை. அவற்றை மிகவும் கவனமாக கேளுங்கள் .மிகுந்த கவனம் என்பதே ஜென்.
-----------
ஓஷோவின் குட்டிக் கதை ஒன்று
ஒருவர் கடையில்  எழுதுவதற்கான பேப்பர் வாங்கப் போனார். கடைக்காரன் கேட்டான். என்ன பேப்பர்
ஏதாவது ஒரு பேப்பர்
கோடு போட்டதா வெற்று்ததாளா
ஏதாவது ஒன்று சரி கோடு போட்டது கொடுங்கள்
அதில் நீங்கள் மைப் பேனாவால் எழுதுவீர்களா, பால் பாயின்ட் பேனாவால் எழுதுவீர்களா
எது கையில் கிடைக்கிறதோ அதனால் எழுதுவேன்.
கனமான தாள் வேண்டுமா மெல்லிய தாள் வேண்டுமா
எது இருந்தாலும் பரவாயில்லை .எதையாவது கொடுங்கள் .எனக்கு நேரமாகிறது .எனது பஸ் வந்து விடும்.
அப்படியா.. என்ன கலரில் வேண்டும். சிவப்பு,நீலம் ,மஞ்சள் ,வெள்ளை என பல நிறங்கள் உள்ளன.
ஏதாவது ஒரு நிறம். சரி வெள்ளையே கொடுங்கள்
என்ன விலையில் வேண்டும். குறைந்த விலையிலா உயர்ந்த விலையிலா?
இப்படி வாடிக்கையாளரிடம் சேல்ஸ்மேன் தொடர்ந்து கேள்வி மேல் கேள்வியாய் கேட்டுக் கொண்டிருக்க புயல் வேகத்தில் அந்தக் கடையில் வேகமாக நுழைந்த ஒருவர் பணத்தை எடுத்து வீசி எந்தக் கேள்வியும் கேட்காமல் எனக்கு அந்த டாய்லெட் பேப்பரைக் கொடுங்கள் மிகமிக அவசரம் என்றார்.
---------------
இன்னொரு ஓஷோ கதை
ஒருவர் ஒரு பேக்கரிக்குப் போனார் .இரண்டு பன்பட்டர் ஜாம் ஒரு தேநீர் என ஆர்டர் கொடுத்தார்.
பன் தீர்ந்துவிட்டது தேநீர் மட்டும் உண்டு என்றார் கடைக்காரர்.
சரி அப்ப எனக்கு பன்னும் ஆம்லெட்டும் தாருங்கள்.
அய்யா ஆம்லட் இருக்கிறது ஆனால் பன் இல்லை .தீர்ந்துப் போய் விட்டது.
அடடா அப்படியானால் எனக்கு பன் பர்கர் தாருங்கள்
பன் பர்கர் தர இயலாது .பன் கையிருப்பு இல்லை.
அப்படியா எனக்கு பன் டோஸ்ட்டும் கிரீன் பீன்சும் கொடுங்கள்
கிரீன் பீன்ஸ் தரலாம் ஆனால் பன் இல்லையே
சரி எனக்கு கிரீம் பன் தாருங்கள்
கீரீம் பன் இல்லை.
அப்படியா சரி கிரீம் இல்லாத வெறும் பன் தாருங்கள் என்றார் வாடிக்கையாளர்
-----------

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...