Tuesday 23 June 2020

ஜென் தேநீர் -செந்தூரம் ஜெகதீஷ் பகுதிகள் 1-10



முகநூலில் நான் எழுதும் தொடரின் முதல் 10 பகுதிகள்.....

ஜென் தேநீர்
செந்தூரம் ஜெகதீஷ்



கோப்பை 1
ஜென் என்றால் என்ன ? இதனை புரிந்துக் கொள்ளாமல் எதையும் புரிந்துக் கொள்ள இயலாது.
காலையில் ஒரு ஜென் துறவி தேநீர் அருந்துகிறார்.
எங்கும் அமைதி
செவ்வந்தி்ப பூக்கள் கொத்துக் கொத்தாகப் பூக்கின்றன ....என்று பாஷோ ஒரு ஹைகூவில் கூறுகிறார்.
ஜென் என்பது சான் chan  என அழைக்கப்படுகிறது. நவீன மொழி அதனை zen  என்று தத்தெடுத்துக் கொண்டது. இதன் மூலச் சொல் தியானம் என்பதுதான். தியானம் என்பது பௌத்த மரபு. புத்தர் 6 ஆண்டு கடும் தவம் புரிந்து தியானத்தின் பயனால் ஞானம் அடைந்தார்.
தியானம் என்பது என்ன? சத்தமும் இடையூறும் மிகுந்த நமது அன்றாட வாழ்க்கையில் தியானத்துக்கு இடமுண்டா ?
காலையில் எழுந்ததும் புத்துணர்வுடன் இருக்கிறோம். நாள் பொழுதும் மனம் என்ற கண்ணாடி சேகரித்த தூசு உறக்கத்தால் துடைக்கப்படுகிறது. நமது வலிகள், சலனங்கள், ஏக்கங்கள், துன்பங்கள் அத்தனையும் கண்ணீரால் உதிர்த்துவிட்டு நம்மையறியாமல் உறங்கி விடுகிறோம். அந்த நேரத்தில் மனம் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது.எப்படி?
மனம் அப்போது மனமற்ற நிலைக்குச் செல்கிறது. அதென்ன மனமற்ற நிலை.? மனமற்றநிலை தான் தியானம். மனம் ஓசைகள் நிரம்பியது. சதா படபடக்கிறது.
ஒரு குட்டிக் கதை..
காற்றில் கொடி படபடக்கிறது என்கிறார் ஒரு ஜென் துறவி. கொடி என்பது மனித வாழ்க்கையாக எண்ணலாம். இல்லை காற்றுதான் படபடக்கிறது என்கிறார் இரண்டாவது துறவி. இதில் கருத்துமுதல் வாதமும் பொருள்முதல் வாதமும் உள்ளன. அகத்தால் புறம் படபடக்கிறது என்பது ஒரு கோணம். இல்லை புறத்தால் அகம் படபடக்கிறது என்று பொருள்முதல்வாதம் கூறுகிறது. மரம் சும்மா இருக்க விரும்பினாலும் காற்று விடுவதில்லை என்ற புகழ் பெற்ற மாசேதுங்கின் கவிதையை நினைவு கூரலாம். சரி ஆனால் கொடியும் படபடக்கவில்லை, காற்றும் படபடக்கவில்லை, மனம் தான் படபடக்கிறது என்கிறார் மூன்றாவது துறவி. இதுதான் ஜென் கோணம். ஜென் மனத்தையே இயங்கு விசையாகக் காண்கிறது. மனம் ஒரு குரங்கு என்பார்கள். அது தாவி ஓடி நம்மை துன்பத்தில் ஆழ்த்தி விடுகிறது. எனவே மனத்தை நிலைப்படுத்துவதே தியானம்.
மனம் நிலை கொள்ளுமா....அந்த கடலுக்கு ஏதடி சாந்தி என்ற தமிழ்ப்பாடல் நினைவுக்கு வருகிறது. கடல் கொந்தளிப்புடன் பேரலைகளை எழுப்புகிறது. கரையில் அதன் அலைகள் கிடைத்தவற்றையெல்லாம் சுருட்டி வாரிக்கொண்டு போகின்றன. கடல் அப்படித்தானா....இல்லை சற்று நிதானமாக கவனித்தால் தெரியும் கடல் அமைதியானதும் கூட .நடுக்கடலில் ஆழம் மிக்க பகுதிகளில் கடல் அமைதியாக தியானிக்கிறது. கடலின் தியானத்தை நாம் அறியவில்லை. அதன் அலைக்கழிப்பை மட்டுமே அறிந்திருக்கிறோம்.
மனக்கடலையும் அலைக்கழிப்பின்றி தியானத்தில் உறைய வைத்திருந்தால் தெரியும் கொடி அசைவதும் காற்று அசைவதும் ஒன்றுடன் ஒன்று உறவு என்று. இரவும் பகலும் ஒன்றுடன் ஒன்று உறவு என்று. இன்பமும் துன்பமும் ஒன்றுடன் ஒன்று உறவு என்பது.
இரவு உறக்கம் ஒரு தியான நிலைதான். ஆனால் பிரக்ஞையற்றது. நம் புலன்கள் மயக்க நிலையில் உறக்கத்தைத் தழுவிக் கொள்கின்றன.
காலையில் புத்துணர்வுடன் எழுகிறோம். மனம் துடைக்கப்பட்டு நிச்சலனமாகி விடுகிறது. ஒரு புதிய காலை நம்மை பறவைகளின் கூச்சலுடன் வரவேற்கிறது. செவ்வந்திப்பூக்கள் கொத்து கொத்து கொத்தாகப் பூக்கின்றன. ஒரு துறவி தேநீர் அருந்த அமர்கிறார். எங்கும் அமைதி என்பது வெளியில் மட்டுமல்ல. எங்கும் அமைதியேதான். அந்த அமைதியுடன் தேநீரைப் பருகுகிறார்.
ஜென் தேநீர் அருந்துவதை ஒரு குறியீடாகக் கொள்கிறது. தினசரி நாம் அருந்தும் தேநீரிலிருந்தே தியானத்தைப் பழகிக்கொள்ள முடியும். இன்னும் சொல்லப்போனால் இதைவிட எளிய உபாயம் இல்லை. தேநீர் வாங்கியதும் மடக்மடக்கென இரண்டு மிடறுகளில் குடித்து விட்டு அவசரமாக ஓடுபவர்கள் அதிகம். அவர்களுக்கு அது ஒரு ஊக்க பானம். சுடச்சுட கிடைக்கும் ஒரு பசிபோக்கி.
ஆனால் ஜென் தேநீர்  அருந்துவதை தியானமாக மாற்றுகிறது. தேநீரை சூடாகவும் இல்லாமல் ஆறாமலும் மிதமான சூட்டுடன் ஒவ்வொரு துளியையும் ருசித்து ருசித்து அதன் தேயிலை, சர்க்கரை, சூடு, புகை, நாவில் அது ஏற்படுத்தும் சுவை என அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு வேறு எதனையும் சிந்திக்காமல் அதுவாகவே மாறிவிட வேண்டும் .தேநீர் பருகுபவரும் தேநீரும் ஒரே நிலையில் சங்கமிக்க வேண்டும். அதுவே தியானம்.
ரஷ்யாவின் நடனக் கலைஞர் நிஜினிஸ்க்கி ஒருமுறை கூறினார் நான் நடனமாடும் போது நானே நடனமாகி விடுகிறேன்.
இன்னொரு ஜென் கவிதை தேநீர் பருகுவதை ஏழு முறை தேநீர் பருகும்படி கூறி ஏழு படிநிலைகளாக விளக்குகிறது.
முதல்  கோப்பை என் வறண்ட உதடுகளையும் தொண்டையையும் நனைக்கிறது.
இரண்டாவது கோப்பை என் தனிமையின் துயரமான சுவர்களைத் தகர்க்கிறது.
மூன்றாவது கோப்பை என் ஆன்மாவின் வறண்ட நீரோடைகளைத் தேடி ஐந்தாயிரம் கதைகளைத் தேடுகிறது.
நான்காவது கோப்பையால் கடந்த கால துயரங்கள் மறைந்துப் போகின்றன.
ஐந்தாவது கோப்பை என் எலும்புகளையும் நரம்புகளையும் புதுப்பிக்கின்றது.
ஆறாவது கோப்பை அருந்தும் போது நான் இறந்த ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்கிறேன்.
ஏழாவது இறுதிக் கோப்பை எனக்கு தாங்க முடியாத பேரின்பத்தை வழங்குகிறது.

தியானம் வலி மிகுந்தது அல்ல. அது யோகாவைப் போல் உடலை வருத்தி செய்வது அல்ல. அது பேரின்பமானது என்பதை ஏழாவது கோப்பையை பருகக்கூடிய ஜென் மாணவன் உணர்கிறான்.
ஜென்னை பழகுவதற்கு வேறென்ன செய்யலாம். எதுவும் செய்யாமல் இருங்கள். சற்றே செயலற. ஜென் நிகழும் தானாகவே. அது எப்போதும் போல் இன்றும் இப்போதும் நிகழ்கிறது. செவ்வந்திப் பூக்கள் பூக்கின்றன கொத்து கொத்து கொத்தாக .
------------------------------
ஜென் தேநீர்  - செந்தூரம் ஜெகதீஷ்
கோப்பை 2
ஜென் எப்படி பிறந்தது ?  இது பற்றி ஓஷோவின் குட்டிக் கதை ஒன்று உள்ளது. ஜென் பிறக்க காரணமாக இருந்தவர் போதி சத்துவர். ஆம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்தான். அவர் புத்தரின் போதனைகளைப் பரப்புவதற்காக சீனா சென்றார். துறவியான அவருக்கு 500க்கும் மேற்பட்ட சீடர்கள் சேர்ந்தனர். ஒரு முறை ஜென் பற்றி தனது சீடர்களுக்கு வகுப்பெடுக்க ஒரு மரத்தடியில் அமர்ந்தார் போதி சத்துவர்.
அவர் பேசத் தொடங்கியதும் ஒரு குயில் அந்த மரத்தில் வந்து அமர்ந்து இனிமையாகப் பாடத் தொடங்கியது. போதிசத்துவர் பேசுவதை நிறுத்திக் கொண்டார். குயில் ஓயாமல் பாடி விட்டு பறந்து சென்றது. இன்றைய வகுப்பு முடிந்துவிட்டது என்றார் போதி சத்துவர். அப்போதுதான ஜென் பிறந்தது .
இன்னொரு குட்டிக் கதை உள்ளது. கௌதம புத்தரின் பிரதான சீடரான ஆனந்தா மூலமாக ஜென் பிறந்ததை அக்கதை விளக்குகிறது.
எப்படியோ ஜென் பிறந்துவிட்டது. ஜப்பான், சீனா ,தாய்லாந்து ,தைவான் போன்ற பல நாடுகளில் ஜென் மரபு தழைத்தோங்கி விட்டது.
பொதுவாக ஜென் என்பது குரு -சிஷ்யன் பரம்பரையில் வாய்மொழியாக வளர்ந்தது. எனவே அதில் திரிபுகளும் இடைச்செருகல்களும் தவிர்க்கப்பட முடியாது.
அசலான ஜென் கலையை புத்தரின் போதனைகள் வழியாக மீட்டெடுக்கலாம். தம்ம பதம் தான் ஆதார சுருதி.
ஓஷோ ஒரு மகா ஞானி, பெரும் அறிவுக் கடல். அவரும் ஜென் பற்றி கணிசமாக பேசியிருக்கிறார். இவற்றை அடுத்தடுத்து வரும் அத்தியாயங்களில் விரிவாக காண்போம். டாக்டர் சுசுகி , ஆலன் வாட்ஸ் போன்ற அறிஞர்களும் ஜப்பானிய ஜென் மாஸ்டர்கள் எழுதிய நூல்களும் என் கைவசம் ஏராளமாக உள்ளன. அவற்றையும் ஆராயலாம்.
ஒரு குட்டிக் கதை
ஒருவன் ஜென் குருவிடம் சிஷ்யனாக சேர விரும்பி சென்றான், அவரிடம் தனது சந்தேகங்களைக் கொட்டிக் கொண்டே இருந்தான் .அவற்றுக்கு முடிவு இருப்பதாகத் தெரியவில்லை. ஒரே சமயத்தில் அத்தனை சந்தேகங்களுக்கும் இந்த குருவால் விடை தர முடியுமா என்ற கூடுதல் சந்தேகம் அவனுக்கு இருந்தது. குரு அவன் மனப்போக்கைப் படித்து விட்டார். அவர் ஒருவார்த்தை கூட பேசவில்லை. அவனுக்கும் தமக்கும் இரண்டு கோப்பை தேநீர் வைத்தார். தமது கோப்பையில் நிரம்ப தேநீரை நிரப்பி அடுத்து அவன் கோப்பையிலும் ஊற்றினார். சீடன் பேசிக் கொண்டேயிருந்தான். குருவும் தேநீரை ஊற்றிக் கொண்டே இருந்தார். அந்த கோப்பை நிரம்பி தேநீர் கீழே வழியத் தொடங்கியது. இதைக் கண்டு சீடன் அதிர்ச்சி அடைந்தான். சட்டென தன்னுணர்வு தோன்ற அவன் குருவை வணங்கினான்.
ஜென் ஒரு வட்டத்தைப் போல் தொடங்குகிறது. வட்டம் ஒரு புள்ளியில் இருந்து தொடங்கி கால் வட்டம், அரைவட்டமாக வளர்கிறது. பின்னர் முழு வட்டமாகி பூரணம் அடைகிறது. இந்த பூரண வட்ட நிலை முழு நிலவை பௌர்ணமியை குறிப்பதாகும். முழுப் பௌர் ணமி நாளில் தான் புத்தர் ஞானம் அடைந்தார் .அமாவாசை என்பது இருட்டு. இருட்டு என்பது துயரம். ஒளி என்பது ஞானம். துயரத்தில் இருந்து மனிதன் ஞானத்தை நோக்கிச் செல்கிறான்.அதற்கு ஜென் உதவுகிறது. வட்டத்தை கணந்தோறும் கடந்து செல்ல ஜென் உதவுகிறது.
ஒரு  ஜென் கவிதை
மனிதர்கள் அந்த பனிமலைக்குச் செல்ல பாதை எது எனக் கேட்கிறார்கள்.
ஆனால் எந்தவொரு பாதையும் பனிமலைக்கு கொண்டு போய் சேர்ப்பதில்லை
( அது பாதையற்ற பாதை )
கோடை வானம் கொளுத்துகிறது. ஆனாலும் பனி உருகவே இல்லை.
சூரியன் தினமும் வந்தாலும் மூடுபனி அதை வென்று விடுகிறது.
என்னை பின்பற்றி வரும் நீ எதை அடையப் போகிறாய்? உன்
மனமும் என் மனம் போல் ஆகும் போது இங்கே நீ வந்து சேர்வாய்.
- ஹான்சுன்
இன்னொரு ஜென் கவிதை
எந்த வழியாக நீ வந்தாய் ?
இரவின் கனவுப் பாதையை பின்பற்றி நீ இங்கு வந்தாயா ?
பனி இன்னும் அடர்த்தியாகவே இருக்கிறது.
அது எப்போது மலைகளை விட்டு பின்வாங்கும்?
- ரையோகன்

-பனி மலை பாதை யாவும் குறியீடுகள் .இவற்றை இன்றைக்கு தியானம் செய்யுங்கள் கனவுப்பாதைகளைப் பின்தொடருங்கள். மலையின் குளிர்ச்சி தெரிகிறதா பாருங்கள். எதையாவது அடைய முடியுமா என ஏங்குங்கள். ஜென் உங்களை அழைத்துச் செல்ல காத்திருக்கிறது.
----------------

ஜென் தேநீர்
செந்தூரம் ஜெகதீஷ்
கோப்பை 3
தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்
தன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம்
-கவியரசர் கண்ணதாசன்
ஜென் ஹைகூ கவிதை போல வரிதான் இது. ஒரு அம்சம் குறைகிறது.இயற்கையைப் பற்றிய ஒரு வரி இருந்தால் இதுவும் ஹைகூ தான். தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்.....இதுதான் ஜென்னின் போதனை.
ஜென்னின் அடிப்படை என்ன என்று கேட்பவர்கள் சற்று அமைதியுடன் இருங்கள் இந்த பாதை அதை நோக்கித் தான் பயணிக்கிறது. ஆங்கிலத்தில் பல நூல்கள் ஜென்னின் அடிப்படையை விலக்க முயற்சிக்கின்றன. அதில் ஒரு புத்தகம் ZEN ESSENTIALS இதனை தொகுத்து எழுதியவர்கள் Kazauki Tanahashi, Tensho David ஆகியோர்.
இந்த புத்தகத்தை எழுதிய ஆசிரியர்கள் ஏராளமான குட்டிக்கதைகள், கவிதைகள், கட்டுரைகள் மூலமாக ஜென்னை விளக்குகின்றனர். புத்தகத்தின் சில அம்சங்களை காண்போம்.
புத்தர் சித்தார்த்தனாகப் பிறந்தார். ஆனால் அவர் யாசகம் பெற்று வாழும் துறவு வாழ்க்கையை நாடிப்போனார்.
அவருக்கு முழு உலகமும் அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால்  அவர் மறுத்துவிட்டு ஓடிப்போனார்.
அவர் கவிதைகள் எழுதவில்லை.-ஆனால்
கவிதை பிறக்கும் முன்பே கவிதையைக வாழ்ந்தார்.
அவர் தத்துவங்களை போதிக்கவில்லை
அவர் தத்துவங்கள் கொட்டிய சாணியை சுத்தம் செய்தார்
அவருக்கு ஒரு முகவரி இல்லை.
அவர் ஒரு தூசுப் பந்துக்குள் வாழ்ந்தபடி உலகத்துடன் விளையாடிக் கொண்டிருந்தார்
என்கிறது  ஜங் குவாங் என்பவர் எழுதிய ஒரு கவிதை.
புத்தர் பற்றி ஓஷோ கூறிய ஒரு குட்டிக் கதை.....
புத்தர் தமது அரண்மனையை விட்டு ஞானத்தை நாடிப் போனார். மீண்டும் அவர் கிட்டதட்ட 12 ஆண்டுகள் கழித்து திரும்பி வந்தார். அப்போது அவர் மனைவி யசோதா கேட்டார் .நீங்கள் தேடிச் சென்றதை அடைந்து விட்டீர்களா...?
ஆம் என்றார் புத்தர்.
அப்படியானால் இங்கே இருந்திருந்தால் அதை உங்களால் அடைந்திருக்க முடியாதல்லவா..?
புத்தர் கூறினார்.  இங்கேயும் அதை நான் அடைந்திருக்க முடியும்
யசோதா திருப்பிக் கேட்டார். அப்படியானால் ஏன் ஓடிப் போனீர்கள்?
புத்தர் கூறினார் இங்கேயும் அதை அடைந்திருக்க முடியும் என்று நான் ஓடிப்போய் தட்டுத் தடுமாறி பல சோதனைகளையும் வேதனைகளையும் அனுபவித்து தான் தெரிந்துக் கொண்டேன்.
ஜென் என்பது தேடிப் போவதல்ல. தேடுதல் அகத்தால் ஆனது. அது புறம் சார்ந்தது அல்ல. புத்தருக்கு போதி மரத்தடியில் தான் ஞானம் விளையும் என்பதில்லை. வீட்டின் குழாயில் தண்ணீர் பிடிக்கும் போதும் ஞானம் பெறலாம். சில ஞானிகள் மனைவி அடித்த டம்ளரால் மண்டையில் ஞானம் பெற்றதாக கூறுவார்கள்.
ஞானம் எங்கும் உள்ளது. ஒரு பறவையின் பாடலில், ஒரு பட்டாம் பூச்சியின் சிறகசைப்பில் ,மழைத்துளியின் சிதறலில், காற்றின் வருடலில், சிறிய குழந்தையின் புன்னகையில் எதிலும் லயித்து ஞானத்தை அடைந்து விடலாம். தற்செயலாக பாத்ரூமில் வழுக்கி விழுந்து மண்டையில் அடிபட்டும் ஞானம் வரலாம் தானே...
சரி ஜோக்ஸ் apart.
இந்த புத்தகம் பல குட்டிக் கதைகள் வாயிலாக ஜென் ஞானம் எப்படி பிறக்கிறது என்பதை விளக்குகிறது. அதில் சிலவற்றை காண்போம்.
நான்குவான் என்ற குருவிடம் ஒரு சீடன் வந்து கேட்டான்.  அந்தப் பனிமலைக்குப் போக பாதை எது ?
குரு சொன்னார் இந்த கோடாரி நன்றாக மரம் வெட்டுகிறது. இதனை நான் சந்தையில் முப்பது சென்ட்டுக்கு வாங்கி வந்தேன்.
மீண்டும் அந்த சீடன் கேட்டான் ...நான் கோடாரியின் விலையைக் கேட்கவில்லை. அந்தப் பனிமலைக்குப் போகும் பாதை எது என்றுதான் கேட்டேன்.
குரு மறுபடியும் சொன்னார். நான் இந்த கோடாரியை சந்தையில் வாங்கி வந்தேன் .இதில் வெட்டும் போது நன்றாக இருக்கிறது.
சீடன் ஞானம் பெற்றான்.
இக்கதை புதிரானது. ஜென் கதைகள் பெரும்பாலும் புதிரானவையே .நேரடி அர்த்தங்கள் ஆகாது. மெய்யியல் வழி தரிசனங்கள் சாத்தியமே.
கோடாரி நன்றாக வெட்டுகிறது என்பது மரத்தை மட்டும் வெட்ட அல்ல உன்னைப் போன்ற மரமண்டைகளையும் வெட்ட என்ற ரீதியில் குரு கோபத்தை உள்ளடக்கி கூறுகிறார். மேலும் எப்போதும் சீடர்கள் கேட்கும் அபத்தமான கேள்விகளுக்கு  ஜென் குரு நேரடியாக பதில் கூற மாட்டார். அவர் ஒரு மறைமுக பதிலையே கூறுவார்.
கேள்விக்கு சம்பந்தமில்லாத ஒரு பதிலாகவும் இருக்கும். அது தர்க்கத்தை உடைப்பதற்காக குரு கையாளும் உத்தி .விளக்கங்கள் மேலும் சந்தேகங்களையும் மேலும் தர்க்கங்களையும் உருவாக்கும் . அதனை வெல்ல இதுபோன்ற மறைமுக பதில்களையே குரு கையாளுகிறார்.
ஒரு முறை குருவிடம் ஒருவன் கேட்டான் ஞானம் அடைவது எப்படி ?
குரு அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
மறுநாளும் அவன் அந்தக் கேள்வியைக் கேட்டான் .மீண்டும் அறைந்தார் குரு.
மூன்றாவதுநாள் அறைவாங்கத் தயாராக அவன் கன்னங்களைத் தேய்த்துக் கொண்டு குருவிடம் வந்து நின்றான். மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான்.
குரு அவனை அலாக்காக தூக்கி ஜன்னல்வழியா வீதியில் வீசியெறிந்தார்.
பலத்த அடிபட்டு வீடு திரும்பிய சீடன் தனது முயற்சியில் சற்றும் சளைக்காமல் அடிவாங்கத் தயாராகி மீண்டும் குருவிடம் வந்தான் .ஞானம் என்றால் என்ன என்று அவன் கேட்டான்.
குரு சட்டென சீடனின் காலில் விழுந்து வணங்கினார். அடி உதையை எதிர்பார்த்து வந்த சீடன் அதிர்ச்சியில் திடீரென ஞானம் அடைந்தான்.
இது போன்ற கேள்விகள்கேட்கும் சீடர்களை குரு பிரம்பால் அடிப்பதும் வழக்கம். ஜென் குருவின் கையில் பிரம்பு கட்டாயமிருக்கும்.
-----------
டோங்சான்  என்ற குருவிடம் வந்த சீடன் ஒருவன்  இன்று சபையில் எதைப் பற்றி பேசப்போகிறீர்கள் என்று கேட்டார்
புத்தரின் உடல் வழியாக ரிலாக்ஸ் செய்வது பற்றி பேசப் போகிறேன் என்றார் குரு. நான் பேசும் போது நீயும் கேட்பாய் என்றார்.
குரு சொன்னார் நான் பேசாதவரை காத்திரு. அதன் பின் நீ அதைக் கேட்பாய்
----------
ஒரு ஆசிரமத்தில் புத்தரின் சூத்திரங்களை ஒருதொழிலாளியை விட்டுப் படிக்கச் சொன்னார் குரு. அவன் புத்தகத்தைப்புரட்டி சூத்திரங்களைப் படிக்கலானான். குரு சொன்னார் என்ன செய்கிறாய் .நீ ஒழுங்காகப் படி...
உடனே அந்த தொழிலாளி ஒரு காலைத் தூக்கி ஒற்றைக் காலில் கட்டைவிரலில் நின்றபடி சூத்திரங்களைப் படிக்கலானான்.
----------
சாவ் சாவ் என்ற சீடன் ஒருவன் குருவின் ஆசிரமத்தின் வாசலில் நின்று சத்தம் போட்டு உள்ளே யாராவது இருக்கிறீர்களா எனக் கத்தினான், குருவோ பக்கத்தில் தான் இருந்தார். அவர் உடனடியாக கைமுட்டியை மடக்கி அவனைக் குத்துவது போல் சைகை காட்டினார்.
இங்கே படகை செலுத்த முடியாதபடி தண்ணீர் சேறாக கலங்கிக் கிடக்கிறது என்ற சாவ் சாவ் அவ்விடத்தை விட்டுச் சென்றார்.
வேறொரு ஆசிரமத்திற்கும் சென்று இதே போன்று உள்ளே யாராவது இருக்கிறீர்களா என்று சத்தம் போட்டு கேட்டார்.
அந்த ஆசிரமத்தில் இருந்த குருவும் அடிப்பது போல் கையை ஓங்கினார் .சாவ் சாவ் அவரை வணங்கிவிட்டு கூறினார்.
நீங்கள் விட்டுத் தொலைக்கலாம் .வாழ விடலாம். கையால் பிடித்து நெருக்கலாம். கொலையும் செய்யலாம்.
இதை கேட்ட அந்த குருவும் சாவ் சாவை வணங்கினார்.
இது தான் ஜென் குறியீட்டுக் கதைகள் .

இதில்  ஒரு கதையை இன்று தியானம் செய்யுங்கள் . ஜென் புரியக் கூடும்.
----------------------

ஜென் தேநீர்
செந்தூரம் ஜெகதீஷ்
கோப்பை 4
ஹகுயின் என்ற குருவிடம் பல சீடர்கள் இருந்தனர். அதில்  சத்சு என்ற 17 வயது இளம் பெண்ணும் ஒருத்தி. வெகு விரைவில் அவள் குருவின் ஆசியால் ஞானம் பெற்று விட்டாள். ஒரு முறை அவள் ஒரு பெட்டி மீது அமர்ந்திருந்த போது அவள் தந்தை கேட்டார். இந்த பெட்டியில் புத்தர் சிலை இருக்கிறது. அதன் மீதே அமரலாமா .....அவள் திருப்பிக் கேட்டாள். புத்தர் இல்லாத இடம் காட்டுங்கள் நான் அங்கே போய் அமர்கிறேன் .
இன்னொரு முறை இன்னொரு துறவி கேட்டார். குவிந்து கிடக்கும் குப்பையிலிருந்து வெள்ளை மண் -( white china clay கப் சாசர் தயாரிக்கப் பயன்படுவது) உடைப்பது என்ன பயன் தரும்? அவர் கூற விரும்பியது புத்தரின் சிலையை உடைப்பது பயன் தருமாஎன்பது. உடனடியாக சத்சு தன் கையில் இருந்த டீ கோப்பையையும் பீங்கான் ஜாடியையும் கீழே போட்டு உடைத்தாள். துறவி தலைவணங்கி சென்று விட்டார்.
ஜென் குருவுக்கும் சீடனுக்கும் இடைவிடாத ஓர் உரையாடல் இருக்கும். வார்த்தைகளின் வலையில் இருந்து தப்பி ஓடுவார்கள். புதிராகப் பேசுவார்கள். ஜென் கோன்  ( zen koan ) என்று இதனை அழைப்பார்கள். ஒரு கை ஓசை என்பதும் ஒரு ஜென் கோன்.
ஒரு சீடன் குருவிடம் கேட்டான். ஒரு கை ஓசை என்பது என்ன ...குரு அவனை ஓங்கி கன்னத்தில் அறைந்தார்.
இன்னொரு சீடனும் இதே கேள்வியை குருவிடம் கேட்டான். குரு அவனை வெளியே கொட்டிய மழையை பார்த்துவிட்டு வா என்றார். மழை பெய்த ஓசையைக் கேட்டதும் அவன் ஒருகை ஓசையை அறிந்தான்.
இப்படி பல ஜென் கதைகள் உள்ளன.
குருவும் சீடனும் கவிதைகள்அல்லது கோன்கள் வழியாக உரையாடுகிறார்கள். குருவை சீடன் அடிப்பதும் உண்டு. சீடன் அடிவாங்குவதும் சகஜம்.
புத்தரை வழியில் சந்தித்தால் அவரை எரித்து விடு என்பதும் ஒரு ஜென் கோன். புத்தரை சுமந்துக் கொண்டு திரியாதே என்பது இதன் அர்த்தம்.
ஒரு மழைநாளில் குருவும் சீடனும் புத்தர் கோவிலில் வழிபாடு செய்துக் கொண்டிருந்த போது மாட்டிக் கொண்டனர். அவர்கள் வீடு திரும்ப இயலவில்லை. குரு நீண்ட நேரமாக புத்தரை வழிபாடு செய்தார். ஊதுவத்தி ஏற்றினார், மலர்களால் அலங்கரித்தார். பலமுறை விழுந்து வணங்கினார்.
இரவு நீண்டது. மழையும் நின்றபாடில்லை. இரு துறவிகளும் ஓராடையை மட்டும் அணிந்திருந்ததால் உடலில் குளிரும் நடுக்கமும் அதிகரித்தது. குரு பக்குவப்பட்டவர். ஆனால் சீடனால் குளிர் தாங்க முடியவில்லை ,அவன் உடல் வெடவெடத்து நடுநடுங்கியது.
குரு சிறிதும் யோசிக்கவில்லை. தான் பல மணிநேரம் வழிபாடு செய்த புத்தர் சிலையை எடுத்தார். அது மரத்தால் ஆன சிலை. தனது கோடாரியால் அதனை இரண்டாகப் பிளந்தார். தீ மூட்டினார். சீடனும் அவரும் குளிர்காய்ந்தனர்.
சீடனுக்கு குழப்பம். சிறிது நேரம் முன்பு வரை இத்தனை வழிபாடு செய்த சிலையை பட்டென போட்டு பிளந்துவிட்டாரே என்று. கேட்டான் .
குரு சொன்னார் அப்போது அது புத்தர்.இப்போது இது மரம்.
------
ஜென் மரபு வழக்கமான ஆன்மீக மரபுகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இந்து மதம் சடங்குகளை அடிப்படையாக கொண்டது. சடங்குகள் இல்லாமல் இந்து மத வழிபாடு இல்லை. இஸ்லாமியர் 5 முறை தொழுகை நடத்த வேண்டியது கட்டாயம். தொழுகைக்கு முன்பு கைகால்களை சுத்தம் செய்வதும் அவசியம். சிறுவயதில் திருச்சியில் இருந்த போது ஒரு மசூதிக்கு அப்பா அழைத்துச் செல்வார். நாங்கள் சிந்தி குடும்பம். சிந்திக்கள் அடிப்படையில் சீக்கியர்களுக்கு நெருக்கமான இனத்தவர். குருநானக்கை வணங்குவோம், அதே சமயம் ராமர், கிருஷ்ணர், லட்சுமி , உமையவள், விநாயகர், அனுமன், முருகன் உள்ளிட்ட அனைத்து தெய்வ வழிபாடுகளிலும் கலந்துக் கொள்வோம்.அவ்வப்போது மசூதிக்கும் செல்வதுண்டு. நான் என் பிறந்த நாளில் சர்ச்சுக்குப் போவதும் வழக்கம்தான். இது ஒரு சூஃபி வழிபாட்டு முறையாகும்.
ஆனால் ஜென் அப்படியல்ல. அதிலும் சடங்குகள், வழிபாட்டு முறைகள் உண்டு. ஆனால் வீடு பேறு தேடும் இந்துவுக்கும் ஞானம் சித்திக்க காத்திருக்கும் ஜென் துறவி்க்கும் வேறுபாடு உண்டு.
ஜென் மரபு தனி மரபாகும். அதன் தொடக்கம் புத்தரிடமிருந்து வந்தது. புத்தர் உலகின் மிகப்பெரிய ஆன்மீக ஞானியாக வணங்கப்படுகிறார். அவர் மரபு அறிவு சார்ந்தது. மனிதனின் மனம் தான் அறிவு உற்பத்தியாகும் ஊற்று. மனம் தான் அத்தனை துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது. மனம் தான் கட்டுப்பட மறுக்கிறது. மனம் வெல்லும் கலையை ஜென் கலை.
குரு சீடன் என்ற இருவேறு தளங்களில் ஜென் வளர்கிறது . போதிப்பவரும் கற்பவரே. கற்பவனும் போதிப்பவனே. ஓஷோ இதனை அடிக்கடி குறிப்பிடுவார்.
ஒரு ஜென் குருவிடம் சீடனாக சேர ஒருவன் வந்தான். குரு அவனை சேர்த்துக் கொள்ள மறுத்தார். அவன் சொன்னான் நீங்கள் சொன்னால் எதை வேண்டுமானாலும் செய்கிறேன். அப்படியா அருகில் ஒரு மூங்கில் காடு இருக்கிறது. அங்கே போய்  மூங்கிலோடு மூங்கிலாக இருந்து தவம் செய் என்றார் குரு.
சீடன் போய் பல நாட்களாகி விட்டன. அவன் திரும்பி வரவே இல்லை. ஒன்று அவன் ஓடிப்போயிருக்க வேண்டும். அல்லது மூங்கில் காட்டில் பாம்பு கடித்து இறந்துவிட்டிருக்க வேண்டும். குருவுக்கு கவலை வந்து விட்டது. தள்ளாத உடலையும் தாங்கிக் கொண்டு தனது கைத்தடியை எடுத்துக் கொண்டு மெதுவாக அவர் மூங்கில் காட்டைநோக்கி நடந்தார்.
மூங்கில் காட்டில் ஆயிரக்கணக்கான மூங்கில் மரங்கள் இருந்தன. ஒவ்வொன்றாக உற்றுப் பார்த்தபடி குரு நகர்ந்தார். அப்போது அங்கே அந்த சீடன்  மூங்கில்களுக்கு மத்தியில் தானும் ஒரு மூங்கிலைப் போல் நின்றுக் கொண்டிருந்தான். காற்று வீசும் போது மூங்கில்கள் அசைந்தன. அவனும் மூங்கிலைப் போல் வளைந்து அசைந்தான். காற்று இல்லாத போது மூங்கில்கள் அசையாமல் நின்றன. அவனும் அசையாமல் நின்றான்.
குரு அவனைத் தட்டி எழுப்பினார். அவன் தவத்தில் இருந்து மீண்டான். என்ன  இது என்று கேட்டார் குரு. ஒரு மூங்கிலின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று வாழ்ந்துப் பார்த்தேன் என்றான் சீடன்.
குரு அவனை ஆசீர்வதித்தார். அவன் ஞானம் அடைந்தான்.
ESSENTIAL ZEN புத்தகத்தின் சில பகுதிகளை இப்போது பார்க்கலாம்......
ஜென் பற்றி ரிச்சர்ட் பேக்கர் என்ற அறிஞர் இவ்வாறு கூறுகிறார்.. ." ஜென் என்பது நமக்கு மத்தியில் அமைதியாக நம்மை நாம் அமர்த்துவது எப்படி என்று கற்பது. நமது மூச்சுக் காற்று, நமது இதயம், போன்றவற்றை அடுத்தவர்கள் வாழும் உலகின் மத்தியில்  அமர்த்துவது. மனம் வழியாக புற உலகம் முழுவதையும் கடந்து போகச் செய்தல் .இதன் மூலம் அகமும் புறமும் இன்றி ஆகிப்போவது.
நான்குவான் என்ற குருவிடம் சாவ்சாவ் என்ற சீடர் கேட்டார் . பாதை எனப்படுவது எது?
குரு சொன்னார் சாதாரணமான மனம் தான் பாதை.
அதை நான் முயற்சி பண்ணட்டுமா என்று கேட்டார் சாவ் சாவ்
முயற்சி செய்தால் நீ தவறவிட்டு விடுவாய் என்றார் குரு நான்குவான்
முயற்சியே பண்ணாமல் அதை நான் அறிந்துக் கொள்வது எப்படி என்று சீடர் திருப்பிக் கேட்டார்.
குரு நான்குவான் சொன்னார். அறிந்தது அறியாதது என்பதெல்லாம் ஒன்றுமில்லை. பாதைக்கும் அதற்கும் தொடர்பில்லை. அறிதல் ஒரு மாயை. அறியாமை ஒரு பேதைமை .முயற்சியே இல்லாத வழியை நீ நாடினால்  வாசல் கதவுகள் தானாக அகலத் திறக்கும் என்று குரு சொன்னதுடன் மேலும் கூறினார் .இதனை மறுப்பதற்கோ வாதாடுவதற்கோ ஏன் இத்தனை பிடிவாதம் பிடிக்கிறாய்
இதை கேட்டதும் சீடன் ஞானம் அடைந்தான்.
முன்பு கூறியது போல் தர்க்க நிலையில் இருந்து அ-தர்க்க நிலைக்கு நம்மை தள்ளுவதுதான் ஜென்னின் முயற்சியற்ற முயற்சி. பாதையற்ற பாதை.
தர்க்கம் செய்ய வாதாட என்ன இருக்கிறது. மறுப்பதற்கு என்ன இருக்கிறது.
ஒரு முறை ஓஷோவிடம் ஒருவர் கேட்டார். நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா..?
ஓஷோ கூறினார். வாழ்க்கையில் எதனையும் இல்லை என்ற மறுப்போடு தொடங்காதீர்கள். ஆம் இருக்கிறது என்று ஏற்கப் பழகுகங்கள். இன்மையை இருப்பால் வெல்லுங்கள். கடவுள் நம்பிக்கையும் அப்படித்தான்.
உண்டு என்றால் உண்டு.இல்லை என்றால் இல்லை.
மறுக்க என்ன இருக்கிறது.?
----------------------
ஜென் தேநீர்
செந்தூரம் ஜெகதீஷ்

கோப்பை 5
Essential zen
பிரான்ஸ் நாட்டு கிராமத்தில் விருந்தினர்களுக்கு தேநீர் பரிமாறிக் கொண்டிருந்தாள் ஓர் இளம் மங்கை. எல்லா கோப்பைகளும் ஒரே அளவில் இருந்தன. எல்லாவற்றிலும் தேநீர் ஒரே அளவு இருந்தது. இப்படி தேநீர் பரிமாற அவள் ஜப்பானில் உள்ள ஒரு ஜென் மையத்தில் இருந்து பயிற்சி பெற்று வந்திருந்தாள். அப்போது தேநீர் பருக அங்கு வந்த தட்ச் நத் ஹன் ( Thich Nhat Hanh)  என்ற ஜென் குரு அவள் செய்கையை பார்த்துக் கொண்டிருந்தார். அவளைப் பார்த்து புன்னகைத்த குரு ஒவ்வொரு கோப்பையிலும் தனது விரலை செலுத்தி தேநீரை நக்கிப் பார்த்தார். அவள் அவரை வணங்கினாள்.
இந்த கதை என்ன சொல்ல வருகிறது. ODD , ABSURD, NONSENSE  என எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். தேநீர் கோப்பைக்குள் விரலை விடும் ஜென் குரு ஒரு perfect master  ஆக காட்சியளிக்கிறார். வேண்டுமானால் அவர் அந்தக் கோப்பைகளை உடைத்திருக்க முடியும். ஒரு ஜென் குரு அப்படித்தான் செயல்படுவார்.
இது என்ன கிறுக்குத்தனம். இது என்ன பைத்தியக்காரத்தனம் என்று உங்கள் மனம் கேட்கும். மூளை பதறும். அது லாஜிக்கான உலகில் வாழப் பழகியது. லாஜிக்கை மீறும் எந்த ஒரு செயலும் பைத்தியக்காரத்தனம். கவிதை எழுதுவது பைத்தியக்காரத்தனம். ஜன்னலில் அமர்ந்த புறாவுடன் பேசுவது பைத்தியக்காரத்தனம். பணத்தை சேர்த்து வைக்காமல் பிறருக்கு வாரி வழங்குவது பைத்தியக்காரத்தனம். காக்கைக்கு திதி வைப்பது பைத்தியக்காரத்தனம். இப்படி பல்வேறு பைத்தியக்காரத்தனங்களை நாம் அன்றாட வாழ்வில் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அவற்றை விமர்சிக்கிறோம். கண்டிக்கிறோம். எள்ளி நகையாடுகிறோம்.
சிறு குழந்தைகளைப் பாருங்கள். எத்தனை துடிப்பு எத்தனை லாஜிக்கற்ற பைத்தியங்கள் அவை. எத்தனை அன்பு எத்தனை பாசம் .எத்தனை குதூகலம், எத்தனை ஆனந்தம். கவலையற்ற ஜீவன்கள் வேறு உண்டா....
குழந்தைகளுக்கு நினைவாற்றல் அதிகமில்லை. அதிகபட்சம் தினமும் தான் சந்திக்கும் மனிதர்களையும் அவர்களின் உறவால் சில சம்பவங்களையும் அவை நினைவில் கொள்ளும். ஆனால் நான்கு வயது வரைதான் அதுவும். அதன் பிறகு எல்லா கடந்த காலமும் அழிந்து புதிய நினைவை அவை தேக்கிக் கொள்ளப் பழகும். உங்களுக்கு ஒரு வயதிலோ இரண்டு வயதிலோ ஏதாவது ஒரு சம்பவம் நினைவில் வருகிறதா பாருங்கள். வராது. நான்கு ஐந்து வயது முதல் நினைவு வளரும். அது மனம் பிறக்கும் தருணம். அதற்கு முன் மனமற்ற நிலையில் குழந்தைகள் இருக்கின்றன. அதனால்தான் அவை குதூகலமாக இருக்கின்றன. கவலையற்று இருக்கின்றன. ஆதாமும் ஏவாளும் வசித்த தேவலோக தோட்டத்தில் வசிப்பவை குழந்தைகள் தாம். பதின் வயதுகளில் அவை காமப் பாம்பு கடித்த ஆப்பிளைக் கடித்து அந்த தோட்டத்தில் இருந்து வெளியேற்றப்படுகின்றன. அவை தங்கள் வெகுளித்தனத்தை இழந்து விடுகின்றன. நபக்கோவ் ( nabokov ) தனது நோபல் பரிசு பெற்ற லோலிதா நாவலில் 13 வயது வரைதான் பெண்கள் தேவதைகளாக இருக்கிறார்கள் என்று கூறுகிறார். அதனால்தான் சிறுமியைப் புணர அவர் கதாநாயகன் விரும்புகிறான். பெண்களுக்குத் தீட்டு வந்ததும் அவர்கள் புனிதமான நிலையை இழந்துவிடுகிறார்கள் என்பார் நபக்கோவ் . ஏவாள் தேவனின் ராஜ்ஜியத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு எத்தனை பேர் தொட்ட முலை எத்தனை பேர் நட்ட குழி என்ற நிலைக்கு மாறுகிறாள். யாரையும் காதலிக்க அவளால் முடியும். யாரையும் தன்னைத் தொட அனுமதிக்கும் வாய்ப்பு அவளுக்கு உண்டு. ஆண்களைப் போல் பெண்கள் அனுமதிக்காக ஏங்குவதில்லை. ஒரு புன்னகையும் ஒரு கண்ணசைவும் ஆயிரம் ஆண்களை வரிசையில் நிற்க வைத்துவிடும். பெண்கள் மீது யாரும் பாலியல் புகார் கூறமுடியாது .
மலரே மலரே நீ யாரோ ....உன்னை சூடி முடித்ததும் பெண்தானே இன்று தூக்கியெறிந்ததும் அவள்தானே என்று ஆண் உருகி பாடுகிறான். ( ஏஎம் ராஜாவின் பழைய தமிழ்ப்பாடல்)
அதனால்தான் குழந்தைகளின் உலகம் வெகுளி்த்தனமானது. மனமற்ற நிலையில் அவர்கள் தேவனின் சொர்க்க பூமியில் வசிக்கிறார்கள். அவர்களுக்கு நான்கு வயது முதல் தொடங்கும் நினைவு வளர்கிறது. கல்வி குவிக்கும் குப்பைகள்,தொலைக்காட்சிகள்,  வணிகத் திரைப்படங்கள், மாஸ் ஹீரோக்கள், கிரிக்கெட், வீடியோ கேம்ஸ், பப்ஜி போன்ற பல குப்பைகள் குழந்தைகளின் மனங்களில் தூசாகப் படிகின்றன. அவற்றுடன் அவை வளர்கின்றன. நவீன உலகின் நச்சுப்பாம்புகள் இவை. ஆப்பிளைக் கொடுத்து இவை விஷம் கக்குகின்றன. குழந்தைகள் தேவனி்ன் தோட்டத்தில் இருந்து வெளியேறுகிறார்கள்
ஓஷோ சொல்வார் மனிதனுக்கு இயற்கை பின்னோக்கிச் செல்லும் ஆற்றலைத் தந்துள்ளது. நான்கு வயது வரை நமது நினைவு பின்னோக்கி செல்லும். அதன் பிறகு அந்த கேசட் ஸ்ட்ரக் ஆகி விடும். ரீவைண்ட் லிமிட் அதுவரைதான். ஆனால் முன்னோக்கி போக முடியாது . no fast forward. அடுத்த கணம் என்ன என்று கூற முடியாது. எதுவும் நடக்கலாம். ஒரு கணத்தில் எத்தனையோ விபத்துகள் நிகழ்ந்து விடுகின்றன. ஒரு கணத்தில் கொலை நடந்து விடுகிறது. ஒரு கணக்கில் ஒருவரின் வாழ்க்கையே வீணாகிப் போகிறது. ஒரு கணத்தில் மரணம்வந்து விடுகிறது. kahani kismat ki  என்ற பழைய இந்திப் படத்தில் (தர்மேந்திரா நடித்தது ) முகேஷ் பாடிய ஒரு பாடலில் ஒரு வரிவருகிறது.உன் வாழ்நாளில் ஒரு நாள் கூட குறையப் போவதில்லை, கூடவும் போவதில்லை. ஒருநாள் என்பது கூட அதிகம். ஒரு கணம் கூட கூடாது குறையாது. எழுதியவன் எழுதிவிட்டான்.
வாழ்க்கையின் முன்னோக்கி காணும் ஆற்றல் மனிதனுக்கு இல்லை. ஜோதிடங்கள்  பொய்ப்பது இதனால்தான். கடந்த காலத்தைவைத்து எதிர்காலத்தை கணி்க்கமுடியாது. அந்த ஆற்றல் மனிதர்களுக்கு இயற்கை அளிக்கவில்லை .எனவே இக்கணம் தான் உண்மை. இக்கணமே உன் வாழ்க்கை என்கிறது ஜென்.
ஞானம் என்பது தண்ணீரில் பிரதிபலிக்கும் நிலவைப் போன்றது. நிலவு நீரில் நனைவதும் இல்லை. நிலவின் பிம்பத்தால் நீரும் உடையவில்லை. ஒரு அலைகூட எழுப்பவில்லை .அப்படியே சலனமற்று அது நிலவின் பிம்பத்தை உள்வாங்கிக் கொள்கிறது.
இன்னும் சொல்கிறது ஜென் .....முழுநிலவும் முழு வானமும் புல்லின்மீதான ஒரு பனித்துளியில் பிரதிபலிக்கிறது. பனித்துளியின் ஆழம்தான் நிலவின் உயரம் என்றும் ஜென் கணிக்கிறது.
இது நிலவுக்கு ராக்கெட் விடும் அறிவியலுக்கு எதிரான ஒரு வாக்கியம். ஆனால் கவித்துவமானது. லாஜிக் இல்லாததது. அதுதான் அதன் அழகு.
ஜென் பாதையில் நடப்பவர் லாஜிக்கான சிந்தனைகளை கைவிடவேண்டும் .கடந்த கால நினைவுகளைக் கைவிட வேண்டும். எதிர்கால கவலைகளை கைவிட வேண்டும். ரித்விக் கட்டக் என்ற வங்காள திரைப்பட மேதை ஒரு முறை கூறினார் ...நான் என் மூலத்தை அறிய மீண்டும் என் தாயின் கர்ப்பப் பைக்குள் போக வேண்டுமா ?
கர்ப்பத்துக்குள் வரும் முன்பு நாம் எங்கிருந்தோம். ...என்னவாக இருந்தோம். மரணத்திற்குப் பின் என்ன ஆகப்போகிறோம். எங்கே போகிறோம்?
மனித மனம் பூட்டப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் நினைவோட்டம் செல்லாது .மரணத்தின் கணத்திற்குப் பின் மனம் இயங்காது. எதுவும் தெரியாது.
மனம் போட்டுள்ள மூடுதிரைகளுக்கு நடுவே வாழ்க்கை நடனமாடுகிறது. திரை விலகும் போதுமம் தெரிவதில்லை. திரை விழும் போதும் தெரிவதில்லை. அதைத் தான் ஜென் உணர்கிறது உணர்த்துகிறது.
----------------------
ஜென் தேநீர்
செந்தூரம் ஜெகதீஷ்

கோப்பை   6
Essential zen - புத்தகத்தை பற்றிய பதிவுகள் ...
ஜென் குரு பாவோச்சி விசிறியால் தன்னை விசிறிக் கொண்டிருந்த போது அங்கு வந்த அவருடைய சீடன் " குருவே காற்றுதான் எங்கும் உள்ளதே..அது சென்றடையாத இடமே இல்லை. பிறகு ஏன் நீங்கள் விசிறிக் கொண்டிருக்கிறீர்கள்? "
காற்றின் இயல்பு நிரந்தரமாக எங்கும் வீசுவதை நீ புரிந்துக் கொண்டாலும் அது அனைத்து இடங்களிலும் சென்றடைவதை நீ புரிந்துக் கொள்ளவில்லை என்றார் குரு.
எங்கும் சென்றடைவதன் அர்த்தம்தான் என்ன என்று கேட்டான் சீடன்.
குரு பதில் கூறவில்லை. தன் விசிறியை எடுத்து மீண்டும் வேகமாக விசிறலானார். சீடன் புரிந்துக் கொண்டு தலை வணங்கினான்.
இன்னொரு ஜென் கதை....
ஹாகுயின் என்ற குரு தனது பெண் சீடர் ஒருவருக்கு  போதனை செய்தார். அவர் முடித்ததும் அந்தப் பெண் கேட்டாள் எனக்காக அதனை மீண்டும் கூற முடியுமா...அது ஒரு நீளமான பிரசங்கம். மீண்டுமா என்று குரு சோர்வானார். சரி என்று மீண்டும் பேச முற்பட்ட போது அந்தப் பெண் அவரை வணங்கிவிட்டு நன்றி கூறி சென்றுவிட்டாள். அவள் போன பிறகு குரு தனக்குள் கூறிக் கொண்டார்....இந்த சின்னஞ்சிறு பெண்ணால் நான் தூக்கியெறியப்பட்டு விட்டேன்.
இன்னொரு கதை...
நான்குயின், குயிசங், மாயோ ஆகிய மூன்று ஜென் துறவிகள் தங்கள் குருவை சந்திக்க நீண்ட பயணம் மேற்கொண்டனர் .வழியில் நான்குயின் மண்ணில் ஒரு வட்டம் போட்டார். இதை நீங்கள் இருவரும் புரிந்துக் கொண்டால் குருவிடம் அழைத்துச் செல்கிறேன் என்றார்.
குயிசங் ஓடிப் போய் வட்டத்தின் உள்ளே அமர்ந்துக் கொண்டார். மாயோ வட்டத்தை சுற்றி ஓடினார்.
அப்படியானால் நாம் குருவை காண வேண்டிய அவசியமில்லை என்றார் நான்குயின்.
குயிசங் திருப்பிக் கேட்டார் அப்படி உங்களை நினைக்க வைப்பது எது...?
இந்த மூன்று கதைகளும் ஜென் புதிர்களுடையவை. விசிறியை எடுத்து வீசும் குருவும் , குருவை மீண்டும் பிரசங்கம் செய்யக் கோரி கேட்காமல் சென்று விட்ட சிஷ்யையும் , மணலில் வட்டமிட்ட ஒருவரும், அதில் உள்ளே போய் அமர்ந்த ஒருவரும், அந்த வட்டத்தை சுற்றி வந்த ஒருவரும் அபாரமான ஜென் ஞானிகள். அவர்கள் குருவிடம் கற்க ஏதுமில்லை. சீடர்களுக்கு கற்றுக் கொடுக்கவும் ஏதுமில்லை.
ஜப்பானைச் சேர்ந்த ஜென் துறவி ரோஷி பிலிப் கப்லாவ் ( Roshie Philip Kapleau )  1912ம் ஆண்டு பிறந்து தமது 91 வது வயதில் காலமானார்,. அவர் ரின்ஜாய் என்ற பிரபலமான ஜென் குருவின் வழிவந்தவர். அவர் ஜென் பற்றி ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். அவருடைய பேட்டி ஒன்றை சொல் புதிது இதழுக்காக நான் மொழிபெயர்த்தேன். அந்தப் பேட்டியை பார்க்கலாம்....
ஜென் எங்கே தோன்றியது ? இந்தியாவிலா?  சீனாவிலா ? ஜப்பானிலா ? ரோச்சஸ்டர் பல்கலைக் கழக மாணவர்கள் ஆதியக் கல்வி பயில ஒரு ஜென் முகாமை அடைந்தனர். தியான மண்டபடம் உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பார்த்த பின்னர் கருத்து கூறும் படி பணிக்கப்பட்டனர்.
ஜப்பான் மாணவன் என் கடுமையைப் பொறுத்துக் கொள்ளுங்கள். சுவற்றில் வைக்கோல் பாய் மாட்டப்பட்டுள்ளதை கண்டேன். ஜப்பானியர் அப்படி செய்ய மாட்டார்கள். ஜப்பானில் உள்ள ஜென் ஆலயங்களிலும்  இப்படி இல்லை இது ஏன் எனநான் கேட்கலாமா என்று ரோஷியை நோக்கி கேட்டான்.
ரோஷி - அது சுவற்றின் வர்ணங்களை சிதறடிக்காத ஒரு மைய வண்ணத்தைத் தருகிறது.
அடுத்து சீன மாணவன் ஜப்பானிய மாணவரிடம் கேட்டான்.  ஜப்பானியர் செய்வதுதான் சரியான ஜென் முறை என்கிறாயா? ஜென் என்று நீங்கள் அழைக்கிறீர்களே...அது உண்மையில் சான் ( Chan )  சீனாவில் இருந்துதான் அது வந்தது.
இதைக் கேட்ட இந்திய மாணவன் இருவரையும் நோக்கி கூறினான். சாக்கிய முனி புத்தர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதை நீங்கள் இருவருமே மறந்துவிடுகிறீர்கள். பௌத்தம் தோன்றியது சீனாவிலோ ஜப்பானிலோ அல்ல இந்தியாவில் தான்.
அமெரி்க்கரான ஜென் துறவி ரோஷி பிலிப் கூறினார் .எங்கள் அமெரிக்க கலாசாரம் இந்த மூன்று கலாசாரங்களையும்  சுதந்திரமாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்பதை நீங்கள் மூவரும் ஏன் மறுக்க வேண்டும் ? பௌத்தம் என்ற கடலுக்குள் உங்கள் மூன்று நாடுகளும் நதிகளைப் பொழிந்துள்ளன. ஆனால் இந்த நீர் பலப்பல அமெரிக்கர்களின் ஆன்மீக தாகத்தைத் தணித்துக் கொண்டிருக்கிறது. புத்தரின் பாதை சர்வதேசியமானது. அனைத்துக் கலாசாரங்களையும் கடந்தது. புத்தரை இந்தியாவிலோ சீனாவிலோ ஜப்பானிலோ மட்டும் தேட முடியாது. எங்கெல்லாம்  புத்தரை வணங்கி பௌத்தத்தைப் பின்பற்றுகிறவர்கள் உள்ளனரோ அங்கெல்லாம் புத்தர் உள்ளார்
பர்மாவைச் சேர்ந்த மாணவர் கேட்டார் " அப்படியானால்  புத்தரை என் நாட்டிலும் காணலாம். அங்கு 50 ஆயிரம் பௌத்த துறவிகள் உள்ளனர்.மக்கள் அவர்கள் மீது மிகுந்த மரியாதை செலுத்துகின்றனர். புத்தரை நாங்கள் பகோடாக்களிலும் ( pagoda )  எங்கள் இல்லங்களிலும் வைத்து வழிபாடு செய்கிறோம். இந்நாள் வரை உலகில் வாழ்ந்தவர்களில் மகத்தான ஞானி என்று அவரை வணங்குகிறோம்.
ரோஷி - நீங்கள் தியானம் செய்வதுண்டா...?
பர்மா மாணவர் -இல்லை .பல்கலைக் கழகத்தில் அதற்கான கடுமையான முறைகள் உண்டு. எனினும் எனக்கு நேரமே கிடைப்பதில்லை.
ரோஷி பிலிப் - புத்தரை பர்மாவில் காண முடியும். ஆனாலும் நீ அவரைத் தேடி அடைய வேண்டும்.
சீன மாணவனிடம் திரும்பிய ரோஷி பிலிப் நீ என்ன கூறுகிறாய் என்றார்
சீன மாணவர் - தியானத்தில் ஈடுபாடு உண்டு. ஆனால் எனது அறை மிகச்சிறியது.என் அறைக்குள் இருப்போர் இரவும் பகலும் பெரும் சத்தத்துடன் இசையை ஒலிக்க விடுகின்றனர். என்னால் படிக்கவே முடியவில்லை . தியானம் எப்படி செய்வது?
ரோஷி பிலிப் - உனக்கும் புத்தர் ஒரு அந்நியரே.
பின்னர்  இந்திய மாணவரிடம் திரும்புகிறார்.
இந்திய மாணவர் -என் குடும்பம் இந்து குடும்பம்தான். ஆனால் புத்தரின் போதனைகளுக்கும் எங்களின் வழிபாடுகளுக்கும் பெரிய அளவில் வேறுபாடு இல்லை.
ரோஷி பிலிப் -இந்து மதத்தில் தியானம் உண்டா ?
இந்திய மாணவர் - உண்டு. ஆனால் எனக்கு நேரமில்லை .தியானத்தை விட அதிகமாக நான் யோகா பயிலுகிறேன்.
ரோஷி பிலிப் -சாக்கிய முனி யோகாவை போதித்தாரா ?
பின்னர் ஜப்பான் மாணவரிடம் கேட்டார் ...நீ தியானம் செய்வதுண்டா....?
ஜப்பான் மாணவர் கூறினார். இல்லை குருவே. நீங்கள் அதனை கற்றுத் தாருங்கள்.
ரோஷி பிலிப் கூறினார் உங்கள் அனைவருக்கும் முதல் பாடமே இதுதான்.
சாக்கிய முனி யோகாவை போதித்தாரா என்று ரோஷி கேட்ட போதும் அதன் பதிலையும் அவர் அறிந்திருந்தார். புத்தர் தியானத்தில் அமர்ந்தது யோகநிலையில்தான். ஒரு மிகச்சரியான தாமரைப் பூ மலர்வது போன்றது புத்தரின் யோக நிலை அமர்தல். அதுவும் யோகாதான். லோட்டஸ் என்பார்கள். ஒரு ஜென் துறவி மிகச்சரியான ஞான நிலையில் சரியான போஸில் அமர்ந்துவிட்டாலே அதுவே அவருக்கு ஞானத்தை அளிக்கும் என்பார்கள்.
------------------------
சாக்கிய முனி புத்தர் துறவிகளின் கூட்டத்தில் உரையாட அழைக்கப்பட்ட போது ஒரு பூவை உயர்த்திப் பிடித்தார். சீடர் மகா காசியபர் உடனே சத்தம் போட்டு கடகடவென சிரிக்கலானார். ஜென் மிகுந்த நறுமணத்துடன் மலர்ந்து விட்டது.

---------------------------------------------------------------------------------
((ரோஷியின் உரையாடல்கள் தொடரும்....அதன் பின் ஜென் ஹைகூவைப் பற்றிய மிகப்பெரிய தொகுப்பு --))-
-------------------------------------------

ஜென் தேநீர்
செந்தூரம் ஜெகதீஷ்

கோப்பை   7
1சில ஜென் கவிதைகளைப் பார்ப்போம்.....
பனிக்காலம்
காட்டின் மூடுபனி படர்தலில்
ஏழு நட்சத்திரங்கள் நடந்து செல்கின்றன
-   சீன் நாகாகவா
2  அமைதியான மனத்தின்  மையத்தில்
தவழ்கிறது நிலவு
மின்மினிகள் ஒளியாக மாறுகின்றன
- டோகன்
3 மிதமான மழை தூசியை எழுப்பிச் செல்கிறது
குளிர்ந்த தென்றல் காற்று சுத்தமாகிறது
மூச்சுக்குள் உறைந்த மூச்சுக்காற்று.
பண்டைக் கால மணல் கோட்டைகளை எங்கேயும் காணவில்லை.
-எட் பிரவுன்
4. கனவுகள் நிரம்பிய உலகில்
இன்னும் தூங்கிக் கொண்டிருப்பது....
பிறகு மீண்டும் பேசுவது
கனவுகளைப் பற்றியே கனவு காண்பது....
அப்படியே இருக்கட்டும்...
- ரைகோன்
5 என்ன வேடிக்கை சிரிப்பு வருகிறது...
அந்த நடிகன் தேநீர் பரிமாறிக் கொண்டிருக்கும்போது
தன்னை நானாக நினைத்துக் கொள்கிறான்...
- லவோ ஹார்ஸ்மன்
6. பிறப்பு, முதுமை, நோயுறுதல், மரணம்
ஆரம்பம் தொட்டே இதுதான் பாதை
இப்படித்தான் எப்போதும் நிகழ்கின்றன.
இந்த வாழ்க்கையில் இருந்து விடுபடும் எந்த ஒரு சிந்தனையும்
கூட்டுக்குள் கிடக்கும் நத்தையைப் போன்றது.
சஞ்சலப்படும் மனிதன் தியானத்தை நோக்கித் திரும்புகிறான்.
ஆனால் உணர்ந்தவனுக்கு தேட ஒன்றும் இல்லை.
சொல்வதற்கும் எதுவுமில்லை என்றும் அவன் அறிவான்.
தன் வாயை அதனால் பொத்திக் கொண்டு கிடப்பார்
- நிகிச் கியூ
7 . இலையுதிர்காலத்தில்  மீண்டும் இதனை
பார்க்கும் நம்பிக்கையுடன் இருக்கையில்
மாலையில் தெரியும் நிலவைப் பார்த்து என்னால் எப்படி தூங்க முடியும்?
- டோகன்
8. மரங்களின் கீழ், பாறைகளின் மத்தியில், ஒரு குடிசை வீடு
கவிதைகளும் புனித பிரதிகளும் அங்கு ஒன்றாக வசிக்கின்றன.
என் பையில் இருக்கும் புத்தகங்களை என்னால் எரித்து விட முடியும்.
ஆனால் என் இதயத்திற்குள் பதிந்த வரிகளை எப்படி அழிக்கமுடியும்?
- இக்யூ
9.மூங்கில் காட்டுக்குள் கேட்கிறது
புல்லாங்குழலின் இசை
மூங்கில், மூங்கில் காட்டுக்குத் திரும்பி வந்துவிட்டது.
-பால் ரெபி
10. உன் சாட்டையையும்  எருது பற்களைப் பிடிக்கும்
கவண் போன்றவற்றையு் உன்னால் தூக்கியெறிய முடியாது.
விட்டால் அந்த எருது தறிகெட்டுப் பாயும் என்று பயப்படுகிறாய்.
ஆனால் அமைதியாக இருக்கப் பழகி விட்டால், அந்த எருது
கயிறு இல்லாத போதும்  உன்னைப் பின்தொடர்ந்து சாதுவாக வருகிறது
11 .மிகவும் பிரயத்தனப்பட்டு அந்த எருதுவை நீ மடக்கிப் பிடித்துவிட்டாய்
ஆனால் அது இன்னும் மிகுந்த பலத்துடன் தான் இருக்கிறது.
அதன் உடல் வலிமையானது.
சில நேரங்களில் அது தரையை முட்டி பாய்ந்து ஓடுகிறது.
சில சமயங்களில் அது மூடுபனிக்குள் ஓடி மறைந்துவிடுகிறது.
-----------------
கடைசி இரு கவிதைகளையும் எழுதியவர்களின் பெயர்கள் தெரியவில்லை.
எருது என்பதும் காளைமாடு என்பதும் ஜென் அடையாளங்களில் ஒன்றாகும். மனதுதான் காளை. அதுதான் முரண்டு பிடிக்கும் மாடு. மனம் ஒரு குரங்கு என்பார்கள் அல்லவா,...ஜென் அதனை மாடு என்கிறது. முட்டி மோதும் மாடு, மூடுபனிக்குள் ஓடி ஒளியும் மாடு. வலிமை மிக்க மாடு, கயிறு இல்லாத போது சாதுவாக பின்தொடரும் மாடு என்று இதற்கு சூட்டப்பட்டுள்ள படிமங்களை கவனியுங்கள். இதுதான் ஜென்னின் சூட்சுமம்.
ஜென் கவிதைகள் பெரும்பாலும் சிறிய வைரக்கற்கள் போன்றவை. விலை மதிப்பு மிக்கவை. பூரணத்துவத்துடன் ஜொலிப்பவை. உடனே அர்த்தம் புரியாத வரிகள் அசை போட அசை போட ஆனந்தம் தருபவை.
ஜென் கவிதைகள் வழியாக தன்னை வாரிவழங்குகிறது. அதை தரிசிக்க ஒரு கவிஞனாகவோ கவிதையின் ரசிகனாகவோ இருக்க வேண்டியது அவசியம்.
-----------
இனி  சொல் புதிது இதழில் எனது மொழிபெயர்ப்பில் வெளியான  ஜப்பானிய ஜென் துறவி ரோஷி பிலிப்பின் மேலும் சில உரையாடல்களைக் காண்போம்....
--------------
நான் ஜென் பற்றி பேசுவதானால் ஜென் பற்றி பேசுவதாகாது....
கே. தயவுசெய்து எனக்கு ஜென் என்றால் என்னவென்று விளக்குங்கள்.
ரோஷியுடன் வந்த இரண்டு மாணவர்கள் தரையில் இரண்டு பாய்களை விரிக்கின்றனர். ஒன்றில் ரோஷி அமர இன்னொரு பாயில் சற்றுத் தள்ளி மற்றவர்கள் அமர்கின்றனர்
ஜென் என்றால் என்ன என்று கேட்கிறார்  ஒரு மாணவர்.
ரோஷி ஒரு வாழைப்பழத்தை உரித்து அதை உண்கிறார்...
மாணவர் -அவ்வளவுதானா...வேறேதும் விளக்கம் தர முடியுமா?
ரோஷி - அருகில் வா
மாணவர் வருகிறார். ரோஷி கூறுகிறார் நீயே ருசித்துப் பார்...
மாணவர் பழத்தை ஒரு கடி கடித்துவிட்டு வணங்கி நகர்கிறார்.
இரண்டாவது மாணவர்  பார்வையாளர்களை நோக்கி உங்களுக்கு இது புரிகிறதா எனக் கேட்டர்.
பதில்.. இல்லை...இல்லை...இல்லை...
மாணவர் -முதல் தரமான ஜென் விளக்கத்தை கண்டீர்கள். வேறு ஏதும் கேள்விகள் உண்டா..?
ஒரு நீண்ட மௌனம்
ஒருவர் கேட்கிறார் - ரோஷி எங்களுக்கு இந்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை. ஜென் என்றால் என்ன என்று சொல்லிக் காட்ட வேண்டும்
ரோஷி - சரி ,,,வானத்தில் மீன்கள் பறக்கின்றன. கடலில் பறவைகள் நீந்துகின்றன.
கேள்வி கேட்டவர் - எனக்குப் புரிவது போல் உள்ளது
அனைவரும் சிரிக்கிறார்கள்.
இரண்டாவது கேள்வியாளர் - ஜென் குறித்து மேலும் ஒரு விளக்கம் கூறுங்களேன்.
ரோஷி - நான் ஜென் பற்றி பேசுவதானால் அது ஜென் பற்றி பேசுவதாகாது.
------------------------------
ஜென் தேநீர்
செந்தூரம் ஜெகதீஷ்
கோப்பை   8
ஞானத்தைப் பற்றி படிப்பது என்பது ஷூவுக்குள் காலைச் சொறிந்து விடுவது போல்,,,,
ஜென் குரு ரோஷி பிலிப்புடன் உரையாடல்....
கே- ஞானத்தை குறித்து படித்த பிறகு அது என்னவென்று என்னால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. பல நேரங்களில் நிச்சயமாக வாழ்வின் ஒளியைப் புரிந்து கொள்கிறேன். ஆனால் இத்தகைய புரிந்து கொள்வதற்கும் ஜென் விழிப்புணர்வுக்கும் என்ன வேறுபாடு?
ரோஷி -  விழிப்புணர்வு குறித்து படிப்பது பசியெடுக்கும் போது ஆரோக்கியம் குறித்து படிப்பதற்குச் சமம்.அது வயிற்றை நிரப்புமா? நிச்சயமாக இல்லை. நீ மென்று ருசித்து உண்ணும் உணவுதான் திருப்தியளிக்கும். இதை விழிப்புணர்வுக்கும் ஞானத்திற்கும் ஒப்பிடலாம்.ஆனால் நீ உண்ணுகிற உணவு கூட ஆரோக்கியத்துக்கு இடம் தராது. அது செரிமானம் ஆக வேண்டும். அது போலத்தான் விழிப்புணர்வும். இறுதியாக சுழித்தல். நான் ஞானம் அடைந்தவன் என்ற எண்ணத்தையும் கூட நீ தவிர்க்கவேண்டும். பூமிக்கும் சொர்க்கத்திற்கும் இடையே சுதந்திரமாக நடமாட வேண்டும். உன் காலில் சொறி ஏற்பட்டால், அதை வெறும் காலில் சொறிந்து விடுவது நல்லதா ஷூவுக்குள் காலைச் சொறிந்துவிடுவது நல்லதா....?
கே - இயற்கையிலேயே வெறும் காலில் சொறிவதுதான் நல்லது.
ரோஷி - ஞானத்தைப் பற்றி படிப்பது கூட ஷூவுக்குள் காலை சொறிந்து விடுவதுதான். ஞானம் என்பது எழுதப்படாத புத்தகங்களையும் படிக்கக் கூடிய ஆற்றலைத் தருகிறது.நீட்ஷே தனது கடைசி காலத்தில் பார்வையை இழந்ததால் படிக்க முடியாத நிலை ஏற்பட்டபோது, நான் என்னையே படிக்கலானேன் என்றார்.
----------------------------------
ஜென் குட்டிக் கதைகள்.
1. ஒரு துறவி சவ்சவ் குருவிடம் வந்தார். நான் இப்போதுதான் புதிதாக இந்த ஆசிரமத்துக்கு வருகிறேன். எனக்கு சில உபதேசங்களைக் கூறுங்கள்... என்றார்.
குரு கேட்டார் - நீ முதலில் சாப்பிட்டாயா..?
துறவி - ஆம் வந்தவுடன் சாப்பாடு போட்டார்கள். இப்போதுதான் தட்டை வைத்து விட்டு வந்தேன்.
குரு- அப்படியானால் போய் உன் தட்டைக் கழுவி விட்டு வா.
2. ஒரு சீடர் குருவிடம் புத்தர் என்பது என்ன என்று கேள்வி கேட்டார். கேள்வி கேட்டவரின் மனதுக்குள் புத்தர் என்ற பிம்பம் வெறும் ஒற்றைச் சொல்லாக சுழலுவதைக் கண்ட குரு அதை சிதைக்கும் வண்ணம் பதிலளித்தார் " துடைப்பக்கட்டை "
3. பாய்சல் என்ற குரு அன்றைய உரைக்குப் பிறகு ஒரு முதியவர் மட்டும் நிற்பதைக் கண்டார். அந்த கிழவர் சொன்னார் " நான் ஒரு காட்டு ஓநாயின் ஆன்மா. நான் மனிதனல்ல. கடந்த பிறவியில் நான் இந்த ஆசிரமத்தில் தலைமை குருவாக இருந்தேன். நான் மறுபிறவி பெற்று 500 ஆண்டுகள் காட்டு ஓநாயாக திரிந்தேன். இதிலிருந்து விலக இயலவில்லை. எனக்கு உதவ முடியுமா..?
குரு அவர் பிறவிப் பிணியிலிருந்து முக்தியளித்தார். மறுநாள் ஓநாயின் சடலம் அங்கிருப்பதை கண்ட சீடர்களிடம் மிகுந்த மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் செய்ய குரு கட்டளையிட்டார்.
ஓநாய்க்கு மரியாதையுடன் இறுதிச் சடங்கா என சீடர்கள் குழப்பம் அடைந்தார்கள், குருவுக்கு என்னவோ ஆகி விட்டது. அல்லது இதுவும் ஒரு ஜென் பாடம் போலும் என்று எண்ணி விட்டார்கள்.
4 .சவ் சவ்விடம் ஒருவர் வந்தார். ஒருவரின் கையில் ஒன்றுமே இல்லை. அவர் அந்த வெறுமையை என்ன செய்வது என்று கேட்டார்
கீழே போட்டு உடைத்து விடு என்றார் குரு.
"நான் எதுவும் கொண்டு வராத போது எதை நான் கீழே போட்டு உடைப்பது என்று அவர் திருப்பிக் கேட்டார்.
அப்படியானால் அதை அள்ளி எடுத்துக் கொண்டு போ என்றார் சவ் சவ்,
5. டெசங் என்ற குரு நீண்ட தூரம் கால்நடையாகப் பயணித்து வழியில் ஒருநதியைக் கண்டார். ஒரு சிறிய படகில் சூழ்நிலைகளை அனுசரித்துப் பயணித்தார். நாளடைவில் அவர் படகை விட்டு இறங்காததால் படகுத் துறவி என்றே அழைக்கப்பட்டார்.
ஒருநாள் கரையோரம் படகை நிறுத்தி அவர் அமர்ந்திருந்த போது அந்தப் பக்கமாக வந்த அதிகாரி ஒருவர் " மகத்தான குரு என்ன செய்கிறார் ?" என்று விசாரித்தார்.
குரு தன் இருக்கையை எடுத்துக் காட்டினார் .இது உனக்குப் புரிகிறதா..புரியவில்லை  என்றார் அதிகாரி.
நான் துடுப்புப் போட்டு தூய நீரை சிதறடிக்கிறேன். ஆனாலும் தங்கமீன் அரிதாகவே கிடைக்கிறது என்றார் குரு.
6 . ஒரு முறை விருந்தினர்  ஒருவர் குருவிடம் கேட்டார்.
வெறுமையை எப்படி பிடிப்பது?
குரு என்னால் முடியும் என்றார். உன்னால் முடியுமா என்று விருந்தினரிடம் குரு திருப்பிக் கேட்டார்.
முடியும் என்று சவாலுடன்  கூறிய விருந்தினர்  குருவின் கையைப் பற்றி பாவனைகளை செய்து காட்டினார்.
குரு சொன்னார்  உண்மையிலேயே உனக்கு வெறுமையைப் பிடிக்கத் தெரியாது.
பின் வேறு எப்படி பிடிப்பதாம் என்று விருந்தினர் திருப்பி்க கேட்டார் .
அருகில் வா என்று அழைத்த ஜென் குரு அவன் மூக்கைப் பிடித்து அவன் அலற அலற பலம் கொண்ட மட்டும் திருகி இப்படித்தான் என்றார்.
7 மாட்சு என்ற மிகப் பெரிய ஞானியிடம் ஒரு தத்துவவாதி வந்தான். வந்தவுடன் எனக்குநேரமில்லை. ஞானம் அடைவது எப்படி என்று உடனே எனக்கு விளக்குங்கள் என்றான்.
புத்தரின் சிலை அருகில் அமர்ந்திருந்த மாட்சு, முதலில் புத்தரை வணங்கி விட்டு அப்புறம் இதுபோன்ற பெரிய விஷயங்களைப் பேசலாமே என்றார்.
சரி என்று கூறிய தத்துவவாதி, புத்தரின் சிலை முன்பு மண்டியிட்டான் .மாட்சு எழுந்து வந்து அவன் புட்டத்தில் ஓங்கி ஒரு உதை விட்டார். உடனே அந்த தத்துவவாதி தன் கேள்வியின் அபத்தம் உணர்ந்து சிரிக்கலானான்.
8 ஒரு ஜென் மாணவன் கேட்டான் - குருவே என் சந்தேகங்களைத தீர்த்து வையுங்கள் .ஆன்மா அமரத்துவம் உடையதா...உடல் சாகும் போது ஆன்மா மீண்டு விடுகிறதா ? மறுபிறவி எடுத்து நாம் உதிரியாகச் சிந்துகிறோமா அல்லது முழுவடிவம் கொள்கிறோமா...நமது நினைவுகள் எங்கே போகின்றன.
சீடன் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக குரு பதிலளித்தார்.
"உன் தேநீர் ஆறி்க் கொண்டிருக்கிறது. அதை முதலில் குடி."
---------------------
ஜென் தேநீர்
செந்தூரம் ஜெகதீஷ்
கோப்பை   9
ஜென் ஹைகூ கவிதைகள்
1 .தன்னிலிருந்து எழுகிறது
தன்னிலிருந்து விழுகிறது
இலையுதிர் கால பனித்துளி
கோடைக்காற்று எந்த இடையூறும் செய்வதில்லை.
- நி புட்சு
2. விலகியிரு
உலகம் உன்னுடையது
நீ மாமிசத்தில் கரைந்த புத்தன் .
- புனன்
3. மழைக்கு நடுவில் சூரியன் நீடிப்பது
நெருப்பின் ஆழத்திலிருந்து
தூய நீரை இறைக்கவா....
- டோகன்
4. மனம் -அதை என்னவென்று அழைப்பது
அது பைன் மரங்களிடையே ஓசை எழுப்பும்
காற்று
- டோகன்
5. கடலைக் கடக்க முயன்ற
பட்டாம்பூச்சிகளை
காணவில்லை
-டோகன்
6. நெல் வயல் உச்சியில் வைக்கோல் பொம்மை
எத்தனை கவனமற்று
எத்தனை பயனற்று
-  டோகன்
7 .முன் தோட்டத்து பைன் மரங்கள்
ஏன் கோணலாக வளர்கின்றன
என்று கேட்காதே
அவற்றின் ஒழுங்கு
அவற்றின் உள்ளே உள்ளது.
- சோசெகி
8. நிலவைப் பார்த்து ரசித்த பின்
என்னுடன் வீடு திரும்புகிறது
என் நிழல்.
- சோடொ
9. மாலையில் மழையடித்தால்
பாதுகாப்புத் தேட வேண்டும்.
ஆனால் வெறும் பனிதான் என்று எண்ணுவதால்
நனைந்து விடுகிறோம்.
- டாயோ
10 என் நித்திய சுயத்தின் முன் நிற்பவளே
முதல் பார்வையிலிருந்தே நீ என் காதலியானாய்
-டாயோ
11. வசந்த கால கடல்
பகலில் அது எழுகிறது விழுகிறது
ஆம் எழுகிறது விழுகிறது
- பூசன்
12.நீரில் நிலவின் பிம்பம்
மீண்டும் மீண்டும் உடைகிறது
ஆனால் அங்கேயே இருக்கிறது.
-சோசு
13 என் கால்கள் மெலிந்தவை
எனினும்
யோஷினோ மலைக்குப் போகிறேன்.
பூக்கள் மலர்கிற இடத்திற்கு..
- இஸா
14. மலைப்பாதை அறிய
அதில் ஏறி இறங்கி வரும்
மனிதனிடம் கேள்
-இஸா
15. அடுத்த தங்குமிடத்தில்
நம்மை வரவேற்கும் புன்னகை
நம்மை வழியனுப்பவும் செய்கிறது
- இஸா
16. பட்டாம்பூச்சிகள் நேயத்துடன்
பூக்கள் மீது அமர்ந்தன.
ஆனால் சவப்பெட்டி மீது
-மீ செட்சு
17 .என் பத்தடி குடிசைக்குள்
இருந்தது வசந்தம்
இங்கு எதுவுமே இல்லை
ஆனால் எல்லாம் இருக்கிறது
- சோ டொ
18 இவ்வுலகம் ஒரு பனித்துளி...
பனித்துளிதான் உலகம்
ஆனால்,...ஆனால்....
- இஸா
( இக்கவிதை  இஸா  தன் குழந்தையின் மரணத்தின் போது எழுதியது)
19  கடந்த காலம் , நிகழ் காலம், எதிர்காலம்
என்ன செய்து விட இயலும் ?
மெழுகுவர்த்தி அணைக்கப்பட்டுவிட்டது
வைரம் திரும்புகிறது சாம்பலுக்கு
-செங்காய்
20 இக்காலத்தில் மக்களுக்கு ஏன் அவசரம்?
புதர்களின் கனவுகள் பச்சை
நீர்  உயிர்ப்பானது
பூரணத்தின் ஓர்மை துல்லியமானது.
பூரணத்தின் ஓர்மைக்குள் நேராக ஊடுருவுகிறார்கள்
அரிதானவர்கள்.
- டாயோ
---------
இன்னும் ஏராளமான கவிதைகள் இருக்கின்றன. இக்கவிதைகளை சும்மா ஒரு மேலோட்டமான வாசிப்புக்குப் பின் கடந்து செல்லக்  கூடாது. ஒவ்வொரு கவிதையும் இயற்கையுடன் ஒரு உறவு கொண்டாடுகிறது.ஒவ்வொரு கவிதைக்குள்ளும் ஒரு ஜென் அனுபவம் உள்ளது. ஒவ்வொரு கவிதையிலும் வாழ்க்கையை குறித்த ஒரு தரிசனமும் விசாரணையும் இருக்கிறது.
முதல் கவிதை.. இலையுதிர் கால பனித்துளிக்கு கோடைக் காற்று எந்த இடையூறும் செய்வதில்லை என்ற வரியை கவனியுங்கள். பனித்துளி கனமானது அல்ல. தக்கையானது. ஒரு சிறு சலனத்தில் அது இலையுதிர்கால இலையைப் போலவே உதிரக்கூடியது. ஆனால் காற்று அதற்கு இடையூறு செய்வதில்லை என்கிறது ஜென். அதாவது காற்றும் பனித்துளி நின்றிருக்க உதவி செய்கிறது. பனித்துளி தான் எப்போது விழ வேண்டும் என்று நினைக்கிறதோ அப்போது மட்டும் விழுகிறது. இக்கவிதையை அசைபோட்டால் ஒரு பனித்துளிக்குள் உலகத்தையே தரிசிக்க முடியும்.
மாமிசத்தில் கரைந்த புத்தன் நீ என்கிறது இன்னொரு கவிதை. ஒவ்வொரு மனிதனும் புத்தன் தான். புத்தம் சரணம் கச்சாமி என்பது மாமிசத்திற்குள்  உடலின் இச்சைகளுக்குள் உடலின் கோப தாபங்களுக்குள் உடலின் மெழுகுக்குள் சுடராக மறைந்திருக்கிறது. சுடர் எரிய எரிய மெழுகு கரையும். ஆன்மா வளர வளர உடலின் தேவைகள் குறையும் என்கிறது ஜென்.
மனத்தை பைன் மரங்களுக்கு இடையில் ஓசை எழுப்பும் காற்று என்கிறது இன்னொரு கவிதை.
மனம் குரங்கு, மனம் காளை என்றெல்லாம் பார்த்தோம். இ்பபோது மனம் பைன் மரங்களுக்கு இடையே ஓசை எழுப்பும் காற்று என்கிறது ஜென். பைன் மரங்கள் யாவை .அதன் குணாதிசயம் என்ன என்று ஆழமாக யோசிக்க யோசிக்க கவிதை வேறு இடத்துக்கு நகர்கிறது.
பைன் மரங்கள் ஏன் கோணலாக வளர்கின்றன என்று கேட்காதே என்கிறது இன்னொரு கவிதை. கோணலாக இருப்பதுதான் பைன் மரங்களின் ஒழுங்கு. அது அதனுள்ளே இருக்கிறது. உன் ஒழுங்கு வேறு அதை வைத்து பைன் மரத்தை எடை போடாதே.
நெல் வயல் உச்சியில் உள்ள வைக்கோல் பொம்மை எத்தனை கவனமற்று எத்தனை பயனற்று வயல்களை பார்த்துக் கொண்டிருக்கிறது என்கிறது மற்றொரு கவிதை. அது ஒரு பார்வையாளன் மட்டும். பறவைகள் அதைக் கண்டு மனிதன் காவலுக்கு இருப்பதாக எண்ணி வயல்களை விட்டு விலகியிருக்கும். ஆனால் ஒரு வைக்கோல் பொம்மையால் ஒரு ஈயைக் கூட விரட்ட முடியாது .அது பயனற்றது. உலக வாழ்க்கையை ஒரு வைக்கோல் பொம்மை போல் பார்த்து பார்வையாளனாகவே வாழ்வது குறித்தும் இக்கவிதை உணர்த்துகிறது. தாமரை இலை நீர்த்துளி போல என்பார் கவிஞர் தாகூர்.
என் அருமை நண்பர் கவிஞர் மு.நந்தா பெரியாரியம் மார்க்சியம் எல்லாம் படித்தவர் என்றாலும் அவர் அடிப்பைடயில் ஒரு ஜென் துறவி போலத்தான் வாழ்ந்தார். ஒரு முறை நான் வேலைக்குப் போகவில்லை. மனம் நிறைய துன்பங்கள், ஆனால் என் சம்பளத்தை நம்பி 5 ஜீவன்கள் உண்டு. எனக்கு அது பெரும் கவலை. வேலையை விட்டு விட்டால் சோத்துக்கு வழியில்லை. அப்போது கவிஞர் நந்தாவை சந்தித்தேன். அவர் என் முக வாட்டத்தைப் புரிந்துக் கொண்டார். அவர் சொன்னார் ஜக்கி நீ வேலையை விடாதே ஆனால் வேலைக்குப் போய் சம்பாதித்து கொடுப்பாய் என்ற நம்பிக்கையை உன் குடும்பத்திடமிருந்து எடுத்து விடு. இது மிகப்பெரிய தரிசனமாக எனக்குத் தோன்றியது. நந்தா கூறினார் என் வீட்டில் நான் சம்பாதித்துத் தருவேன் என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை. எப்படியோ காசு வருகிறது .எப்படியோ குடித்தனம் நடக்கிறது.
இது பொறுப்பற்ற பதில் தான். ஆனால் ஜென் இதை வைக்கோல் பொம்மையுடன் ஒப்பிட்டு எத்தனை கவனமற்று ,எத்தனை பயனற்று என்கிறது.
பொதுவாக ஜென் துறவிகள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பயணிப்பார்கள். ஒரு வீட்டின் முன் வரவேற்கும் அதே புன்னகைதான் மறுநாள் காலையில் விடைபெறும் போதும் வழிஅனுப்பி வைக்கிறது என்கிறது ஜென். இவ்வுலகிலும் பயணிகள் தாமே நான் பிறக்கும் போது புன்னகைப்பவர்கள் இறக்கும் போது கண்ணீரிலும் புன்னகைக்கத்தானே செய்கிறார்கள். சிலருக்கு தொல்லை விட்டது. சிலருக்கு சொத்து கிடைக்கிறது. சிலருக்கு வேலை கிடைக்கிறது .இப்படி ஏதோ ஒன்று புன்னகையை வரவைக்கிறது.
என் தந்தை இறந்த போது எனக்குப் புன்னகை வரவில்லை அழுகைதான் வந்தது. ஆனால் அழுகையும் புன்னகையின் இன்னொரு பக்கம் தான் என்று புரிந்துக் கொள்ள நாளானது.
இன்னொரு ஜென் கவிதை மழையை வெறும் பனிதான் என்று எண்ணி வழியில் நனைந்து விட்டதை சொல்கிறது. மலைகளில் பயணிக்கும் துறவிகளுக்கு பனியும் மழையும் ஒன்றுதான் போலும்.
இவ்வுலகம் பனித்துளி என்கிறார் இஸா என்ற கவிஞர். பனித்துளிதான் ஆனால் ஆனால் என்ற முடியாத கேள்விகளுடன்
அவருடைய குழந்தை இறந்து விட்டது. அதன் துயரம் உலகை மாயையாக நினைக்க வைக்கிறது. அந்த மாயையிலும் ஒரு ஆனால் எழுகிறது.. .குழந்தையின் மரணத்தை பனித்துளி உலகமாகப் பார்க்க முடியவில்லை.
கடந்த காலம் நிகழ் காலம் எதிர்காலம் எதுவும் ஒன்றும் செய்ய முடியாது .ஏனெனின் வைரம் மீண்டும் சாம்பலாவது விதி.
ஆனால் பூரணம் பெற்றவர்கள் இறப்பதில்லை அவர்கள் பூரணத்துவத்தில் கலந்து விடுகிறார்கள் என்கிறது இன்னொரு கவிதை. பூரணத்தில் நேரடியாக ஊடுருவுகிறார்கள் அவர்கள். ஆனால் எதற்கு இவ்வளவு அவசரம்...?
------
பின் குறிப்பு
இக்கட்டுரைகளின் முழு தமிழ் காப்புரிமை இதன் ஆசிரியருக்கே ( செந்தூரம் ஜெகதீஷ்)  உரியது. குட்டிக் கதைகள், கவிதைகள் பல்வேறு நூல்களில் இருந்து பயன்படுத்தியது.
--------
ஜென் தேநீர்
செந்தூரம் ஜெகதீஷ்
கோப்பை   10
ஜென் ஹைகூ கவிதைகள்
1   குடத்துக்குள் நீரில்லை
நீருக்குள் நிலவில்லை
வானத்தில் வட்டமிடுகிறது வட்ட நிலா
- யாரோ
2. மழை பெய்தாலும் பெய்யா விட்டாலும்
நீ பயணம் செய்ய வேண்டும்
நனைந்த சட்டையுடன்
- இக்யு
3. இலைகள் உதிர்ந்து
ஒன்றின் மீது ஒன்று விழுகின்றன.
மழை
மழையை அடித்துத் துவைக்கிறது.
- யாரோ
4 .மாலையில் சேவல் கூவி
விடியலை அறிவிக்கிறது
நள்ளிரவில் சூரிய ஒளி தெரிகிறது
- யாரோ
5 இசைவு மிக்க நண்பனோடு
பேசப்படாத ஒரே வார்த்தை
சையனோரா
- யாரோ
6. அறிவிக்கப்படாத காதல் கசப்பானது
வெயில் காலத்தில் புதர்களிடையே
வளரும் லில்லியைப் போல்
- யாரோ
7 .வசந்த கால செர்ரி பூக்கள் தம்
மணமிழந்து விட்டன
நீ காற்று வீசுவதற்கு முன்பே
வந்திருக்க வேண்டும்
-இளவரசி சிக் ஷி
8 . வசந்த கால மழை
எல்லாமே வளர்கிறது
மேலும் அழகாக
- காகானோ சியோ
9 உன் அடங்கின குரல்
மலைகளில் அதிகமாக எதிரொலிக்கிறது.
குயிலே உன் பெயரைக் கூறு
 -அபுட்சு
10 . பூவின் மீது உள்ள பனிநீர்
சிந்தப்படும் போது
அது வெறும் நீர்
- காகானோ சியோ
11. இலையுதிர்காலத்தின் பிரகாசமான நிலவு
எத்தனை தொலைவு நான் நடந்தாலும்
மேலும் தொலைவுக்குள் செல்கிறது
அறியப்படாத ஆகாயத்தில்
-- காகானோ சியோ
12. பனிக்கால சீகல்
தன் வாழ்நாளில் அதற்கொரு வீடில்லை.
மரணத்தில் கல்லறையும் இல்லை.
- காடோ சூசன்
13. இன்னும் புத்தனாகவில்லை
இந்த பைன்மரம்
சோம்பலுடன் கனவு காண்கிறது
- இஸா
14. எங்கே போனார்கள் மனிதர்கள்?
இங்கே பூச்சிகளும்
புதர்களும்தான் உள்ளன
- இஸா
15. காட்டில் நுழையும் போது
நிலவு ஒரு  புல்லைக் கூட  அசைப்பது இல்லை.
நீரில் நுழையும் போது
ஓர் அசைவைக் கூட எழுப்பவில்லை.
- இஸா
16 .நான் என்ன அறிந்துக் கொண்டேன்?
சூனியத்தின் கடவுளுக்கு
முகம் கூட இருட்டு
- யாகூ சாய்
17 காதைச் செவிடாக்கும் அலறல்
ஒரு திருடன் என் உடலிலிருந்து
தப்பி விட்டான்
- யாகூ சாய்
18 சேகரித்தவை யாவும் குப்பை
இன்றைய போதனை இதுதான்
நிலம் , கடல்,
விழிப்பற்று நட தனியாக.
- செய்கென் சாய்
19 .அடித்தளம் இல்லாத மூங்கில் கூடையில்
நிலவை வைத்தேன்
மனமற்ற பாத்திரத்தில்
தூய காற்றை சேகரித்தேன்
- செய்கென் சாய்
20 தசாப்தமாக காட்டில் கனவு கண்டு
குளத்தின் கரை சிரி்க்கிறது
புத்தம் புதிய சிரிப்பு
- செய்கென் சாய்
21 பனி படர்ந்த வயல்களிடையே
ஒற்றைக் கோடாக
நதி
- செய்கென் சாய்
22 அழகிய புகைப்படத்தில் உள்ள
அழகான மேகம் போல
புத்தாண்டின் முதல் சூரியோதயம்
--ஷூ சாய்
-----------------------
இந்த ஜென் கவிதைகளை அலசுவோம். இவற்றிலும் அனேகமாக ஓர் இயற்கை காட்சி இருக்கிறது. ஒரு ஞானப் பாதை இருக்கிறது. ஒரு விட்டேத்தி மனம் இருக்கிறது. ஒரு கவியின் ஆன்ம விசாரம் இருக்கிறது.
மழை பெய்யாவிட்டாலும் நீ பயணம் போக வேண்டும் நனைந்த சட்டையுடன் என்றான் ஒரு கவிஞன்
பயணம் துறவிகள், ஞானிகளின் வாழ்க்கை. வாழ்க்கையை ஒரு பயணமாகவே கழித்தவர்கள் அவர்கள். ஓஷோ கூட ஆசைப்பட்டார் நான் ஒரு பயணத்தின் போது மரணம் அடைய வேண்டும் என்று.
பயணம் என்பது காடு மலை வயல் என போவது ஒரு வகை என்றால் இயற்கையுடன் இணைந்து அதனை தரிசித்து அதனை கவிதையாக்குவது ஒரு வகை. ஜென் துறவிகள் சுற்றுலாப் பயணிகள் அல்ல. அவர்கள் எப்போதும் நனைந்த சட்டையுடன் தான் பயணிக்கிறார்கள். நனைதல் பற்றிய பயம் இல்லாமல் போனால் தான் இந்த நிலை வரும்.
மழையை மழை அடிக்கிறது என்று காண்கிறார் இன்னொரு கவிஞர். மழையைப் பற்றிய ஒரு காட்சியாக மட்டும் இதை காண்பீர்களா என்ன...
நண்பனுடன் பேசப்படாத ஒரே வார்த்தை சையனோரா என்று கூறுகிறார் ஒரு ஜென் கவிஞர்.
சையனோரா என்பது ஜப்பானில் பிரிவைக் குறிக்கும். விடைபெறுதலாகும். எப்போதும் விடை பெற முடியாத ஒருவரே நண்பர்.
செர்ரிப் பூக்கள் வாசனை இழப்பதற்கு முன்பு நீ வந்திருக்க வேண்டும் என்கிறாள் தன் காதலனிடம் ஒரு காதலி, இழந்த காதலின் துன்பம் இதில் கரைந்தோடுகிறது.
குயிலின் பெயரை தெரிந்துக் கொள்ள ஒருவருக்கு ஆசை
காட்டில் எத்தனை நடந்தாலும் நிலவை எட்ட முடியவில்லை என்கிறார் இன்னொருவர். அது ஆகாயத்தில் மேலும் ஆழத்துக்குப் போய் விடுகிறது. நிலவு என்பதை இங்கே பூரணம் என்றும் ஞானம் என்றும் உருவகப்படுத்திக் கொள்ளலாம்.
புத்தனாகாத ஒரு பைன் மரம் சோம்பல் முறிப்பதைக் காண்கிறார் இன்னொரு ஜென் பயணி
சீகலுக்கு வீடும் இல்லை கல்லறையும் இல்லை என்று அவதானிக்கிறார் இன்னொரு கவி
சூனியத்தில் கடவுளின் முகமும் இருட்டு என்கிறார் இன்னொரு கவி
காட்டில் நடந்து செல்லும் நிலவு ஒரு இலையைக் கூட அசைப்பதில்லை ஒரு நீரலையைக் கூட எழுப்புவதில்லை ...எத்தனை அற்புதமான கவிதை இது. உலக வாழ்க்கையை இப்படி கடந்து செல்கிறார்கள் ஜென் துறவிகள் அவர்களுக்கு இது ஒரு பாதை ஒரு பயணம் மட்டும் தான் இலக்கு அல்ல.
-------------------------------------









No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...