Friday 24 March 2017

asokamithran -அசோகமித்திரன் காலமானார்

அஞ்சலி
அசோகமித்திரன்  காலமானார்
செந்தூரம் ஜெகதீஷ்







அசோகமித்திரனுடன் 20 ஆண்டுகளுக்கு மேலாக நட்பு உண்டு. ஒரு மானசீகமான தந்தையுடன் பேசுவது போல் மரியாதை கலந்த அன்புடன்தான் அவருடன் பழகியிருக்கிறேன்.
90 களின் மத்தியில் கோவை களம் கூட்டத்தில் கோவை ஞானியுடன் வ.உ.சி பூங்காவில் அசோகமித்திரனை முதன் முதலாக சந்தித்தேன். அவருடைய சில சிறுகதைகளையும் தண்ணீர், கரைந்த நிழல்கள் போன்ற நாவல்களையும் படித்திருந்தேன். பார்த்தவுடன் பிடித்துப் போன முகமும் புன்னகையும் கொண்டிருந்தார்.
மீண்டும் மீண்டும் சென்னையில் பல முறை அவரை சந்திக்கும் போதெல்லாம் நீங்க கோயமுத்தூர் தானே என்று கேட்டு வைப்பார். சென்னைதான் என்றால் நம்ப மாட்டார்.
ஒருமுறை சென்னை போன்ற பெருநகரங்களில் இருந்து ஒரு மகத்தான எழுத்தாளர் உருவாக முடியாது என்று ஜெயமோகன் ஒரு வறட்டுத்தனமான வாதத்தை முன்வைத்த போது உடனடியாக ஜெயகாந்தனையும் அசோகமித்திரனையும் சுட்டிக்காட்டினேன். மழுப்பினார். பின்னர் அதே ஜெயமோகன்தான் அசோகமித்திரன் மலரை கனவு இதழுக்காக தொகுத்து எனது கட்டுரையும் வாங்கிப் போட்டார்.18வது அட்சக்கோடு பற்றி நான் எழுதினேன்.
காலப்போக்கில் ஜெயகாந்தனையும் மிஞ்சி அசோகமித்திரனின் பெயர் எனது பட்டியலில் முதலிடம் பிடிக்கத் தொடங்கியது. அவர் நான் விரும்பிப் படிக்கும் எழுத்தாளரானார். முகநூலில் பழைய இந்திப் பாடல்கள் குறித்த விவரம் கேட்டு எனக்கு குறுஞ்செய்தி அனுப்புவார். பதில் அனுப்புவேன்.
அசோகமித்திரன் காலமானார் என்று 2017 மார்ச் 23ம் தேதி தொலைக்காட்சிகளில் பிளாஷ் நியூஸ் பார்த்து லேசாக மனம் அதி்ர்ந்தது. அவர் வயது, முதுமை, அண்மையில் அவரை விருட்சம் கூட்டத்தில் சந்தித்த போது தென்பட்ட தளர்ச்சி அவருடைய வெற்றிடம் நிகழ இருப்பதை உணர்த்தியதால் பெரிய அதிர்ச்சியில்லை.அவர் மறைவதற்குள் அவருடைய முழுமையான வாசிப்பை மீண்டும் செய்ய வேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன்.
24ம் தேதி காலையில் ஏழரை மணிக்கே வேளச்சேரியில் உள்ள அவருடைய இல்லத்தில் அவர் உடலுக்கு ஒரு ரோஜா மாலையை சாத்தி விட்டு வணங்கினேன். இரவு உணவு அருந்தி எட்டு மணி வாக்கில் ஐஸ்கிரீம் சாப்பிட்டார் என்றும் ஆஸ்துமா மூச்சுத்திணறல் இருந்த காரணத்தால் அவர் ஐஸ்கிரீம் சாப்பிட்ட சில நிமிடங்களில் அமைதியாகிவிட்டார் என்றும் அவர் குடும்பத்தினர் கூறினர். மருத்துவர்கள் அவர் மரணம் அடைந்ததாக உறுதி செய்தனர்
காலையிலேயே ஏராளமான மீடியா கேமராக்களும் செய்தியாளர்களும் அவர் வீட்டின் முன் திரண்டு விட்டனர். பின்னர் ஒவ்வொருவராக பலர் வரத் தொடங்கினர்.
இந்திரா பார்த்தசாரதி,  ந.முத்துசாமி, கவிஞர் வைரமுத்து, அம்ஷன் குமார், திருப்பூர் கிருஷ்ணன், பாவை சந்திரன், வண்ணதாசன், வண்ண நிலவன், ஆ.இரா.வேங்கடாசலபதி, அரவிந்தன், யுவன் சந்திரசேகர், வெங்கடேஷ் சக்கரவர்த்தி, பாக்கியம் ராமசாமி, நரசய்யா என அந்த வளாகம் எழுத்தாளர்களால் நிரம்பியது.
பத்து மணி வரை இருந்து வீட்டுக்குத் திரும்பி விட்டேன். அசோகமித்திரனின் மறைவும் வெற்றிடமும் தமிழ் இலக்கியச்சூழலில் மட்டுமல்ல எனது மன உலகிலும் நீண்ட காலம் நினைவில் இருக்கும்.



அசோகமித்திரனின் உள்மனப் பயணங்கள்
(என் பயணம்...அசோகமித்திரன் )
செந்தூரம் ஜெகதீஷ்
அசோகமித்திரனின் நாவல்களைப் போலும் சிறுகதைகளைப் போலும் அவருடைய கட்டுரைகளுக்கும் இலக்கிய அந்தஸ்து உண்டு. அவர் எழுதிய கட்டுரைகள் அவர் எழுத்தின் நுட்பங்களுடன் கூடியவைதான். தன்னைப் பற்றியும் தனது செகந்திராபாத் வாழ்க்கையைப் பற்றியும் அவர் பலமுறை எழுதியிருக்கிறார். அதில் ஒன்றுதான் இந்த கட்டுரைத் தொகுப்பு.
பத்திரிகைகளுக்கு கதைகள் அனுப்பி திரும்பி வராத எழுத்தாளர்களே இல்லை எனலாம். ஆனால் அசோகமித்திரன் அதையும் நகைச்சுவை கலந்த பதிவாக்குகிறார். "என்னுடைய கையெழுத்துப் பிரதிகளின் முதல் பக்கத்தில் பல கட்டங்கள் வரைந்து வைத்திருப்பேன். அவற்றில் வெவ்வேறு பத்திரிகைகளுக்கான ரப்பர் ஸ்டாம்பின் சுற்றுவடிவத்தை வரைந்து இந்த இடம் இந்தப் பத்திரிகைக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிடவும் செய்திருப்பேன். அப்படியிருந்தும் பத்திரிகைக்காரர்கள் கண்ட கண்ட  இடங்களில் முத்திரையடித்துத் திருப்பி அனுப்பி விடுவார்கள்.ஒரே ஒருமுறை மட்டும் குமுதம் பத்திரிகை ஒழுங்காக நான்  வரைந்திருந்த எல்லைக்குள் முத்திரையடித்துத் திருப்பி அனுப்பியது" என்கிறார்.
தனது கதைகளை உருவ அமைதியுடன் அமைப்பதில் அசோகமித்திரனுக்கு அலாதியான பிரியம் உண்டு. அவரே கூறுவது போல நிறைய கதாபாத்திரங்களும் அதனால்தான் அவர் கதைகளில் இடம் பெறுகின்றனர். உத்திக்காக கதை எழுதுவதில் அசோகமித்திரனுக்கு நம்பிக்கையில்லை. இன்று கோணங்கி போன்ற எழுத்தாளர்கள் கதையை பின்னுக்குத் தள்ளி உத்தியையே கதையாக்கி விடுகிறார்கள். பிரதியின் கட்டுடைத்தல் என்றும் இதனை கூறுகிறார்கள். அதனால்தான் கோணங்கியின் ஆரம்பக்கால எழுத்துகளைப் படித்து வியந்த என் போன்ற வாசகர்கள் இன்று அவரிடமிருந்து விலகி அந்நியமாகி நிற்கிறோம்.
" உத்தி மட்டுமே இலக்கியமாகி விடும் என்று நான் எண்ணவில்லை. ஓர் உத்தி கையாளப்பட்டிருக்கிறது என்ற நினைப்பே எழச் செய்யாத உத்திதான் மிகச்சிறந்ததாக நினைக்கிறேன்." என்கிறார் அசோகமித்திரன். இதற்கு எனக்கு உடனே புதுமைப்பித்தனின் எழுத்துகள்தான் நினைவுக்கு வருகின்றன. புதுமைப்பித்தனே அதிக உத்திகளை தமிழுக்குப் பயன்படுத்திய எழுத்தாளர். அவருடைய காஞ்சனையும் செல்லம்மாளும் சிற்பியின் நரகமும் பொன்னகரமும் கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் ஒரே உத்திதான் என யாராவது கூற முடியுமா?
அதே போல் கதைகள் ஒருவரின் சொந்த அனுபவம் சார்ந்தவை என்ற நம்பி்க்கையும் அசோகமித்திரனுக்கு உள்ளது. மணிக்கொடி எழுத்தாளர்கள் பி.எஸ்.ராமையா, கு.ப.ரா, சி.சு.செல்லப்பா போன்றவர்கள் ஒரே கதைக்கருவை எடுத்துக் கொண்டு தனித்தனியாக கதை எழுதுவார்களாம். ஆனால் சரஸாவின் பொம்மை கதையை பி.எஸ்.ராமையாதான் வடிவம் முழுமை பெறச் செய்து அதன் இறுதிப்பகுதியை எழுதிக் கொடுத்ததாக செல்லப்பா கூறியுள்ளார். இருப்பினும் சரஸாவின் பொம்மையை ராமையா எழுதியிருக்க முடியுமா என்பதும் கேள்விக்குறியது. அது செல்லப்பாவால்தான் எழுத முடியம். ஒரு நல்ல எடிட்டரின் வேலையைத்தான் ராமையா செய்திருக்கிறார் எனக் கொள்ளலாம். மேலை நாடுகளின் புகழ் பெற்ற நாவலாசிரியர்கள் ஊதியம் தந்து எடிட்டர்களை பணியமர்த்திக் கொள்கிறார்கள். தமிழில் அது நண்பர்களுக்கு இடையே தற்செயலாக நிகழ்ந்துள்ளது.
அசோகமித்திரனைப் பொருத்தவரை " என் வரையில் என் அனுபவம் எனக்கே சொந்தம். ஆனால் நான் எழுத நினைத்திருக்கும் கதைகளை வேறு யாராவது எழுதிவிடுவார்களோ என்ற பயம் இல்லை" என்கிறார்.
அசோகமித்திரனின் நகைச்சுவை ததும்பும் வரிகளும் இக்கட்டுரைகளின் ஊடாக விரவிக்கிடக்கின்றன....தமிழ் வாத்தியார் என்றாலே மீனாட்சி சுந்தரமாகத்தான் இருக்க வேண்டும் போல் இருக்கிறது என்றும் பாரதியார் சுருக்கமாகவே பள்ளுப் பாடியிருக்கலாம் என்றும் , ஹைதராபாதில் அன்று கொலைக்குற்றத்துக்கு அடுத்தபடியான பெரிய குற்றம் சைக்கிளுக்கு விளக்கு இல்லாமல் ஓட்டிப் போவதுதான் என்றும் அசோகமித்திரன் போகிற போக்கில் எழுதிச் செல்லும் வரிகள் வாசகனை நின்று நகைக்கச் செய்து சிந்திக்கவும் செய்கின்றன.
ஹெல்மட் அணிவது பற்றியும் அவர் தமது கருத்தை பலப்பல ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்துள்ளார். ஹெல்மட் அணிய சட்டம் கட்டாயப்படுத்துகிறது. தலையை காக்கவும் உயிரைப்பாதுகாக்கவும் தான் என்று கூறப்படுகிறது. இதில் உடன்பாடு இல்லாத போதும் சட்டத்திற்கு பயந்தும் அபராதத்தை வெறுத்தும் ஹெல்மட் அணிய கட்டாயப்படுத்தப்படுகிறோம்.
" இந்த கவசங்கள் ஏதோ விண்வெளிப் பயணத்திற்கு செய்யப்பட்டதுபோல் இருக்கிறது.ஒரு மாட்டு வண்டியின் வேகத்திற்குப் போகும் இருசக்கர வண்டியில் போகிறவர் விண்வெளிவீரர்கள் அணிவது போன்றதொரு கவசத்தை அணிந்துக் கொண்டு போவது அந்த இருசக்கர வண்டியையே கேலி செய்வது போல் இருக்கிறது "என்கிறார்.
ஜூன் 6 அல்லது 7ம் தேதி செகந்திராபாதில் மழை பெய்யும் என்றும் அந்தக்காலத்து ரேடியோவை ஆன் செய்தால் வால்வு சூடேற சில நிமிடங்கள் ஆகும் என்றும் தகவல்களும் அவருடைய எழுத்துகளில் குவிந்துக் கிடக்கின்றன.
கரைந்த நிழல்கள் அசோகமித்திரனின் முக்கியமான நாவல் . அதை சினிமா பற்றிய முக்கியமான நாவல் என்று பலரும் கூறுவதுண்டு. ஆனால் அப்படி அழைத்தால் அந்த நாவலின் தோல்வியைத்தான் குறிக்கும் என்று அசோகமித்திரன் கூறுகிறார். அதை தமிழின் சிறந்த நாவல் என்று மட்டுமே கூறவேண்டும்.
நான் கிடங்குத் தெருவை முடித்த பிறகு மீண்டும் விரிவாக எழுத வேண்டும் என்று ஏராளமானோர் கூறிவருகின்றனர். சரியென்று ஒப்புக் கொண்டாலும் பத்து ஆண்டுகளாக அதை முடிக்க முடியாமல் இழுத்துக் கொண்டு போனது. இந்த நிலை  முன்னர் அசோகமித்திரனின் கரைந்த நிழல்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
" சிலரின் இயல்பு ஒரு காரியம் ஒருதடவை முடிந்தது என்று ஏற்பட்டால் மீண்டும் அதனை அணுகமாட்டார்கள். என் இயல்பு அப்படித்தான். எழுதும் போது ஏராளமான அவகாசம் எடுத்துக் கொண்டு பலமுறை படித்து மாற்றங்கள் செய்தாலும் , ஒரு முறை எழுதி முடித்தாகி விட்டது என்று கீழே வைத்த பிறகு உறவே துண்டிக்கப்பட்டு விடுகிறது "என்கிறார்.
அமெரிக்காவில் இருந்த போது அவர் பத்திரிகைகளுக்கு எழுதிய கட்டுரைகளும், சில பேட்டிகளும் இந்த தொகுப்பில்இடம் பெற்றுள்ளன.
சென்னை தி நகர் தாமோதரன் தெரு, செகந்திரபாத், அமெரிக்கா என வாழ்க்கைச் சூழலுக்கேற்ப எங்கெங்கோ வாழ்ந்த தனது வாழ்வையும் அதன் தாக்கத்தால் உருவான எழுத்தையும் பற்றிய அசோகமித்திரனின் பதிவுகள் அந்தந்த காலத்தின் இலக்கிய சாட்சியங்களாக கிடைக்கின்றன. அவருடைய மறைவுக்குப் பின்னர் இவை மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

என் பயணங்கள் - அசோகமித்திரன்
நற்றிணை பதிப்பகம் வெளியீடு

நன்றி கல்வெட்டுபேசுகிறது மாத இதழ்

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...