Saturday 4 June 2016

உலக சினிமா - பாப் டைலான் "எதிர்ப்பே எனது பாடல் "

குமுதம் தீராநதி ஜூன் மாத இதழில் வந்த எனது கட்டுரை


லக சினிமா
எதிர்ப்பே எனது பாடல்
செந்தூரம் ஜெகதீஷ்






I AM NOT THERE -BOB DYLAN
(பாப் டைலானின் வாழ்க்கையை சித்தரி்க்கும் திரைப்படம்)


யாரும் சுதந்திரமாக இல்லை.
பறவைகளும் வானத்துடன் பிணைக்கப்பட்டுள்ளன.
பாப் டைலான்.

80களின் தொடக்கத்தில் பாப்டைலானின் பாடல் ஒன்றை கேட்க நேரி்ட்டது. கேட்டதுமே அப்பாடல் மனதுக்குள் ஒரு மழைச்சாரல் போல பொழிந்து வசந்தமாக பரவசமூட்டியது. இத்தனைக்கும் இது ஒரு புரட்சிப்பாடல். எதிர்ப்பிசையில் எழுதப்பட்டது.
பொதுவாக மேற்கத்திய இசையில் அதிக ஆர்வமி்ல்லாதவன் நான். கண்ணதாசனும் வாலியும், எம்.எஸ்.வியும் இளையராஜாவும், கொஞ்சம் பாரதியும் ஆழ்வார்களும் இருந்தால் போதும் எனக்கு. இந்தி பாடல்களில் பறி கொடுத்த மனதை இன்னும் மீட்டெடுக்கவில்லை .ஆனால் எப்போதாவது எல்வீஸ், பீ்ட்டல்ஸ், பாப் மார்லி, மைக்கேல் ஜாக்சன், மடோனா, பிரிட்னி ஸ்பியர்ஸ் என்று பல மேற்கத்திய பெயர்களை கேள்விப்படும்போதெல்லாம் அவர்களைப் பற்றி தெரிந்துக் கொள்ள இசை ஆல்பங்களை தேடிப்பிடித்து வாங்கி வருவேன். பாப் டைலானின் பாடல் தற்செயலாக கிடைத்த ஒரு வைரக்கல்.
பலத்த மழை பெய்யப் போகிறது என்ற அந்த பாடலை நான் கவிதையாக மொழிபெயர்த்து செந்தூரம் இதழில் பிரசுரம் செய்திருந்தேன். அதன் பிறகு பாப் டைலானின் பாடல்களுடன் நெருக்கமான உறவு ஏற்பட்டு விட்டது.
பாப் டைலான் வாழும் கலைஞர். இந்த ஆண்டும் இசை ஆல்பங்களை வெளியிட்டு வருகிறார். இப்போது அவருக்கு வயது 75. இன்று அவரது இசை ஒரு சகாப்தமாகி விட்டது.
அவரது வாழ்க்கையை சித்தரிக்கும் ஒரு திரைப்படம்தான் எம்நாட் தேர். இந்தப் படத்தில் பாப் டைலானும் சில காட்சிகளில் நடித்திருக்கிறார். அவரது பாத்திரத்தில் ஒரு பெண் ( கேட் பிளான்செட் ) உட்பட ஆறு நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தைப் பார்த்து பாப் டைலான் பாராட்டியிருக்கிறார். மிகவும் உண்மைக்கு நெருக்கமாக இந்தப்படம் மிகச்சிறப்பாக எடுக்கப்பட்டிருப்பதாக பாப் டைலான் தெரிவித்துள்ளார்.
படம் ஆறு குறும்படங்களின் தொகுப்பு போல உள்ளது. பாப் டைலானின் பல்வேறு வாழ்க்கைகளை ஒரு கவியாக, ஒரு துறவியாக, சட்டத்தை மதிக்காத தறுதலையாக, போலி கலைஞனாக அவரது வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களை தொகுத்துள்ளது இத்திரைப்படம்.
இப்படத்தின் இயக்குனர் டாட் ஹெய்ன்ஸ்.
ஒரு பாடல் தானாகவே தன் பாதையில் நடந்து செல்லும் என்று பாப் டைலானின் வரிகளுடன் 19 வயதில் போலீசாரால் விசாரிக்கப்படும் இளைஞனாக பாப் டைலான் அறிமுகமாகிறார்.
அவர் சாகாத போதும் அவர் செத்துவிட்டதாக படத்தில் முதல் காட்சியில் சித்தரிக்கப்படுகிறது. இதோ இங்கே பாப் டைலான் உறங்குகிறார். அவரது தொலைபேசி எண்கள் செயலற்று விட்டன என்றெல்லாம் பீடிகையுடன் தொடங்குகிறது படம். இதைப்பற்றி படத்தின் விமர்சகர்கள் பலர் கேள்வி எழுப்பியிருந்தனர். பாப் டைலான் உயிருடன் இருக்கும் போதே அவருடைய மரணத்தை காட்ட வேண்டிய அவசியம் என்ன என்றும் அவரது பாத்திரத்தில் ஆறுவெவ்வேறு பெயர்களி்ல் வெவ்வேறு நடிகர்கள் நடிக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் பாப் டைலான் இதனை தாம் புரிந்துக் கொள்வதாக கூறினார். 1966ம் ஆண்டில் ஒரு மோசமான மோட்டார் சைக்கிள் விபத்தில் பாப் டைலான் சிக்கினார். அப்போதே அவர் இறந்திருக்க வேண்டும் . இறந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்றுதான் அக்காட்சி அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இன்னொரு சம்பவம் மிகச்சிறிய வயதிலும் ஒரு முறை மரணத்தை சந்தித்து மீண்டவர் பாப் டைலான். இரண்டு சம்பவங்களிலும் ஏதேனும் ஒரு சம்பவத்தில் அவர் இறந்திருக்கலாம். தப்பினார்.





பொது வாழ்க்கையில் 6 விதமான தோற்றங்களில் தனது வாழ்க்கையையும் இசையையும் பாப் டைலான் கடந்து வந்துள்ளார். இதை சித்தரிக்கவே பல்வேறு தோற்றமுடைய பல்வேறு வயதுகளில் பாப் டைலான் இந்தப் படத்தில் வெவ்வேறு நடிகர்கள் வழியாக தம்மை வெளிப்படுத்தியுள்ளார். இன்டர் கட்டிங் திரைக்கதை உத்தியுடன் முன்னும் பின்னுமாக காட்சிகள் பின்னப்பட்டு நான் லீனியர் பாணியில் கதை நகர்கிறது.
1959ம் ஆண்டில் 11 வதுவயதில் தமது அபிமான இசையமைப்பாளர் வூடி குத்ரீ என்பவரைப் போல் ஆக ஆசைப்பட்டு அதே பெயரில் நியுயார்க்கிற்கு திருட்டு ரயில் ஏறிச் செல்லும் சிறுவனாக பாப் டைலான் அறிமுகம். அவர் கையில் கிட்டார் கருவி ஒன்று உள்ளது. அதில் பாசிஸ்ட்டுகளுக்கு மரணம் என எழுதப்பட்டிருக்கிறது.
தொழிற்சங்க பாடல்களைப் பாடக் கூடிய பாடகராக இருக்கும் வூடியைப் போல பாப் டைலானும் சிறுவயதில் தொழிலாளர்களுக்காகவும் கறுப்பர்களுக்காகவும் பாடிக் கொண்டிருக்கிறார். அவர் சிறுவனாக இருந்த போது அவரை தாக்கிய சில சமூக விரோதிகள் ஓடும் ரயில் இருந்து ஆற்றில் வீசியெறிகின்றனர். ஒரு வெள்ளையர் தம்பதி அந்த சிறுவனை மீட்டு அவன் இசைக்கும் பாட்டில் மயங்குகிறது. ஆனால் அதற்குள் அவன் தப்பி வந்த அகதி என்ற தகவல் வருகிறது. அங்கிருந்து அந்த சிறுவன் தப்பி்ச் செல்கிறான். பிறகு மற்றொரு வீட்டில் அவனுக்கு உணவு அளிக்கும் இல்லத்தரிசி ஒருவர் உன் பாடல்கள் நன்றாக இருக்கின்றன. ஆனால் ஏன் நீ தொழிற்சங்கங்கள் பற்றியே பாடுகிறார். உனக்கு தொழிற்சங்கம் பற்றி எந்த அனுபவமும் இல்லை. நீ உன் காலத்தைப் பாடு. நிகழ்காலத்தைப் பாடு. நிகழ்பவற்றைப் பாடு என்று கூறுகிறார். இதனை வேதவாக்காக வரித்துக் கொள்கிறான் சிறுவன் வூடி.
பின்னர் 22 வயதுஇளம் நடிகனாக நாம் பாப் டைலானை ராபி கிளார்க் என்ற பாத்திரத்தில் சந்திக்கிறோம். பிளோயிங் இன் தி விண்ட் போன்ற அவரது பாப் இசைப்பாடல்கள் ரசிகர்களால் பேசப்படுகின்றன. இந்தப் பெண்மை கலந்த இளைஞன் பாத்திரத்தில் கேட் பிளான்செட் என்ற பிரபல ஹாலிவுட் நடிகை நடித்திருக்கிறார். அவரிடம் பிபிசியின் செய்தியாளர் கீனு ஜோன்ஸ் என்பவர் பேட்டியெடுக்கிறார்.
உலகின் பிரச்சினைகள் பற்றி பாடுவதை நிறுத்தி விட்டாயா உனக்கு அதில் அக்கறையில்லையா என்ற கேள்வி வருகிறது. யாராவது உலக பிரச்சினைகள் பற்றி அக்கறை இருப்பவராக கூறிக் கொண்டால் அவர் கண்ணை உற்றுப்பார். அடுத்த முறை அப்படி பேசுவதை நிறுத்திக் கொள்வார் என்று கூறுகிறார் ராபி கிளார்க்.
ஆனால் உனக்கு சமூக அக்கறை இல்லையா என்ற கேள்வியை அவர் திரும்ப திரும்ப வலியுறுத்தி பதிலை எதிர்பார்க்கிறார். அதற்கு பாப் டைலான் கோபப்படுகிறார். இதனால் அவர் பேட்டியில் அவரை எதிர்மறையாக சித்தரிக்கிறார்கள். ஊடகங்கள் அவருக்கு எதிராக மாறுகின்றன.
அடுத்து நாம் சந்திப்பது ஜாக் ரோலின்ஸ் என்ற நடிகரையும் பாப் இசைக்கலைஞனையும் .இது பாப் டைலானின் இன்னொரு அவதாரம்.1965ம் ஆண்டில் கிரைன் ஆப் சாண்ட் என்ற படத்தில் அவர் நடிக்கிறார். சிறந்த சிவிலியன் விருதை அவர் பெறுகிறார். வியட்நாம் போர் வெடித்திருக்கிறது. குண்டுகள் பொழிகின்றன. 9 ஆண்டுகளாக தொலைக்காட்சிகளில் போர் பற்றிய செய்திகளே முதலிடம் பிடிக்கின்றன. கடந்தகாலத்தைப் பற்றி வேதனையும் அவநம்பி்க்கைகளுமே எதிர்காலத்தை நோக்கி அமெரிக்காவை நகர்த்திக் கொண்டிருக்கிறது. ஜான் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார். கென்னடிக்காக நடத்தப்பட்ட இரங்கல் கூட்டத்தில் பேச அழைக்கப்படும் ஜாக் ரோலின்ஸ் கென்னடியை கொன்றவரிடத்தில் உள்ள ஏதோ ஒரு அம்சம் தம்மிடமும் இருப்பதாக கூற அங்கிருக்கும் அமெரிக்க கனவான்கள் அதிர்ச்சியடைகின்றனர். அவரை நோக்கி கேலியும் எள்ளலும் கண்டனமும் வலுக்கிறது.
எரிமலைக் குழம்பு ஆறாக ஓட அதில் எதிர்நீச்சல் அடிப்பது போல் உணர்வதாக பாப் டைலான் கூறுகிறார். தாம் கிராமிய இசையை பாடவில்லை என்றும் தமதுஇசையை கிராமிய இசை என்று அழைப்பது பொருத்தமில்லை என்றும் கூறுகிறார். எலக்ட்ரிக் கிட்டார் மூலம் இசையை காது பிளக்கும்படி அதிர வைக்கும் பாணியை அவர்தான் தொடங்கி வைக்கிறார். அந்த சத்தத்தைக் கேட்டு அவருடைய ரசிகர்களும் ஏமாற்றம் அடைகிறார்கள். ஆனால் தமது காலத்தின் மிகப்பெரிய பாடலாசிரியராக அவர் திகழ்கிறார். அவரது பாடல்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி விட்டன. இசையும் எலக்ட்ரானிக் இசையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசும் ஜாக் ரோலின்சிடம் நீங்கள் இப்போதெல்லாம் எதிர்ப்பு பாடல்களைப்பாடுவதில்லையா என்று கேட்கப்படுகிறது. வசதியும் புகழும் அவரை மாற்றிவிட்டதோ என்று கேள்வி எழுகிறது. உலகில் சகிக்க முடியாத சம்பவங்கள் நடக்கும் போது பாடல் மூலம் எதிர்ப்பை தெரிவிப்பதை விட தமக்கு வேறு எதுவும் தெரியாது என்கிறார் அவர். உலகில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அநீதிகளிலிருந்து எனக்கும் என் ரசிகர்களுக்கும் தொடர்பை துண்டிக்கச் செய்வதே எனது பாடல்கள்தாம் என்கிறார் டைலான். ஆனால் பாடல்களால் ஒரு நபரைக்கூட திருத்தி விட முடியாது . ஒரு சமூக மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. இந்த அநியாயம் அக்கிரமத்துக்கு எனக்கு உடன்பாடில்லை என்று மட்டும்தான் கூற முடியும் என்கிறார் பாப் டைலான். அதன் பிறகு ஒரு தலைமறைவு வாழ்க்கையை தேர்வு செய்கிறார் ஜாக் ரோலின்ஸ்
இடையில் மற்றொரு பாத்திரமாக போலீசாரால்விசாரிக்கப்படும் ஆர்தர் ரெமோய்ட் என்ற பாத்திரத்தில் பாப் டைலானை பார்க்கிறோம். வாழ்க்கையை நன்றாக வாழ ஏழு விதிகளை அவர் கூறுகிறார். இதில் ஒன்று
எதையும் புதிதாகப் படைத்து விடாதே. படைத்ததை யாரோ இடைச்செருகல் செய்வார்கள். அதை திசை திருப்புவார்கள். அதை திருடுவார்கள். அது உன்னையே சிறைப்படுத்தி விடும். அதிலிருந்து நீ விடுபட முடியாமல் தவிப்பாய். அது மனதில் இருக்கும் தொல்லையை எதுவும் மாற்றிவிடப் போவதில்லை.
தலைமறைவு வாழ்க்கையில் அவரை நாம் பில்லி மிக் கார்ட்டி என்ற பாத்திரத்தில் நடுத்தர வயதில் சந்திக்கிறோம். அவர் தமது சொந்த ஊரான ரிட்லீஸ் என்ற கிராமத்தில் இருக்கிறார். அங்கு நெடுஞ்சாலையை அமைக்க ஊரில் உள்ள வீடுகளை இடிக்கிறார்கள், நிலங்களை வலுக்கட்டாயமாகப் பறிமுதல் செய்கிறார்கள். இதனால் மனம் உடைந்த ஊர் மக்களில் பலர் தற்கொலை செய்துக் கொள்கிறார்கள். இதனால் தமது பொறுமையை இழக்கும் பில்லி தட்டிக் கேட்கிறான். அவன் முன்னாள் பாடகன் என்பதைக் கண்டுபிடித்து அவனை கிளர்ச்சியாளராக முத்திரை குத்தி கைது செய்கிறார்கள். ஆனால் அங்கிருந்து தப்பி ஓடி விடும் பில்லி மீண்டும் நியுயார்க் செல்லும் ரயிலில் ஏறிவிடுகிறார். அப்போது அந்த ரயிலில் சிறுவயதில் தொலைத்த பாசிஸ்ட்டுகள் அழிந்துவிடுவார்கள் என்று எழுதப்பட்ட கிட்டார் கிடைக்கிறது. இது ஒருசிம்பாலிக்கான காட்சி. மீண்டும் தனது இசையைக் கண்டடைவதாக படம் முடிகிறது.
கொலாஜ் சித்திர வடிவில் பாப் டைலானின் காதல், குடும்பம், மனைவிக்கு செய்த துரோகம், பின் மீண்டும் அவளை நாடி வருவது போன்ற காட்சிகளும் இதில் இடம் பெற்றுள்ளன. யாருடைய கதையையோ நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் எல்லா கதைகளும் காட்சிகளும் பாப் டைலானின் வாழ்க்கையை குறித்தும் அவரது இசையைக் குறித்தும் தான் பேசுகின்றன. வயதாகி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தனது ஆதர்ச இசைப்பாடகரான வூடியை பாப் டைலான்மருத்துவமனையில் சந்திக்கும் காட்சியும் உள்ளது. இந்த வூடியின் பெயரை தனக்கு சூடிக் கொண்ட சிறுவனாக போலி கலைஞனாக பாப் டைலானை காண்கிறோம். - fake
இதே போல் சட்டத்தை மதிக்காத 19 வயதில் போலீசாரிடம் பிடிபட்டு விசாரிக்கப்படும் இளைஞனாக காண்கிறோம் - outlaw
இசையாலும் தமது ஆழமான பாடல்களாலும் சமூகப் பிரச்சினைகளைப் பேசி நாகரீகமான மேற்கத்திய சமூகத்தில் சலசலப்பை ஏற்படுத்தி அவர்களின் நாகரீகத்தையும் கனவான் தோற்றத்திற்குப் பின்னால் இருக்கும் பேராசையையும் அதிகார வெறியையும் கேள்விகேட்கும் போது அநீதிக்கு எதிராக கிளர்ந்தெழும் கவிஞனாகவும் ( poet) பிறகு 1974ம் ஆண்டு பைபிளில் ஈடுபாடு கொண்ட ஆன்மீக வாதியாகவும் ( saint ) பாப்டைலானை இத்திரைப்படத்தில் காண்கிறோம்.
பயோபிக் வகை திரைப்படங்களில் வாழும் கலைஞர் ஒருவரைப் பற்றிய இந்தத் திரைப்படம் அவருடைய ஒப்புதலைப் பெற்று அவரே சில காட்சிகளில் நடித்து ஒரு நடிகையும் பாப் டைலானாக நடித்து உலகெங்கும் திரைப்பட ரசிகர்களுக்கு அறுசுவை விருந்தாக அமைந்துவிட்டது. கூடவே அவ்வப்போது ஒலிக்கும் பாப் டைலானின் பாடல்களைக் கேட்பதற்கே இன்னும் பல முறை படத்தைப் பார்க்கத் தோன்றுகிறது.
மே 24ம் தேதி பாப் டைலானின் பிறந்தநாள்.
பாப் டைலானின் பாடல் வரிகள்......
பிளோயிங் இன் தி விண்ட் பாடலில் இருந்து.....
எத்தனை சாலைகளில் ஒருவர் பயணித்தால் ஒரு மனிதரை நாம் மனிதர் என்று அழைப்போம்?
எத்தனை கடல்களை ஒரு வெண்புறா கடந்து சென்றால் அது மணலில் ஓய்வெடுக்க முடியும் ?
எத்தனை முறை பீரங்கிகளிலிருந்து குண்டுகள் பறக்க வேண்டும் அவை முழுவதுமாக தடை செய்யப்படுவதற்கு ?
எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு மலை நீடித்திருக்க வேண்டும் கடல்களால் அது அடித்துச் செல்லப்படுவதற்கு ?
எத்தனை காலங்களுக்கு சில மனிதர்கள் நிலைத்திருக்க வேண்டும் அவர்கள்
முழுமையாக விடுதலையைப் பெறுவதற்கு ?
எத்தனை காலத்திற்கு மனிதன் முகத்தைத் திருப்பிக் கொண்டு தாம் எதையும் பார்க்கவில்லை என்றுநாடகமாட வேண்டும் ?
வானத்தை நேராகப் பார்ப்பதற்கு முன் எத்தனைமுறை ஒருவன் தனது தலையை உயர்த்த வேண்டும் ?
மனிதகுலத்தின் அழுகுரலைக் கேட்க ஒருவனுக்கு எத்தனை காதுகள் வேண்டும்?
எத்தனை முறை சாக வேண்டும் எத்தனையோ பேர் செத்துப் போனதை அறிந்துக் கொள்ள ?
இதற்கான பதில் காற்றில் வீசிக் கொண்டிருக்கிறது நண்பனே அது உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிறது.



------------------
பாப் டைலானின் பலத்த மழை பெய்யப் போகிறது கவிதையின் சில வரிகள்......

நீ என்ன கேட்டாய் என் நீலவண்ணக் கண்ணா ....என் மகனே
நான் எச்சரிக்கையாய் முழங்கிய ஒரு இடியோசையைக் கேட்டேன்.
இந்த உலகையே மூழ்கடிக்கக் கூடிய ஆழிப்பேரலையின் கர்ஜனையை நான் கேட்டேன்.
கைகளில் தீப்பிடித்து எரிந்தபடி நூறு பேர் முரசறைவதை நான் கேட்டேன்.
பத்தாயிரம் பேர் கிசுகிசுப்பாக பேசுவதையும் ஆனால் ஒருவரும் அதைக் கேட்காமல் இருப்பதையும் நான் கேட்டேன்.
ஒரு மனிதன் பட்டினி கிடப்பதையும் ஆயிரக்கணக்கானோர் சிரித்துக் கொண்டிருப்பதையும் நான் கேட்டேன்.
கோமாளி ஒருவன் பாடியபடியே சாக்கடையில் விழுந்து சாகும்போது அவன் பாடலை நான் கேட்டேன்.
பலத்த மழை பெய்யப்போகிறது. மிக பலத்த மழை பெய்யப்போகிறது.




 

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...