Friday 5 February 2016

உலக சினி்மா -தனிமையில் ஆயிரம் மைல்கள் பயணம்







குமுதம் தீராநதி பிப்ரவரி 2016 இதழில் வெளியான எனது கட்டுரை இது....

உலக சினிமா
தனிமையில் ஆயிரம் மைல்கள் பயணம

செந்தூரம் ஜெகதீஷ


riding alone for thousand miles -china/japan
இயக்குனர் சியாங்-யிமோ ( XIANG YIMOU)

அன்பினால் தழைக்கும் இவ்வையகம். அன்பிலே முதன்மையானது தாய் அன்பு என்பார்கள்.ஆனால் சில குழந்தைகளுக்கு தாய் என்பவள் வெறும் பிறவி கொடுத்தவள் மட்டுமே. பாசத்துடன் தன் கண்ணில் வைத்து வளர்ப்பதென்னவோ தந்தைதான். இத்தகைய தந்தை உள்ளத்தை தாயுமானவன் என்பார்கள். ஆலயமணியில் சிவாஜி கணேசன் சரோஜாதேவியைப் பார்த்து பாடும் ஒரு பாடல் இது பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே ....இந்தப் பாட்டில் கவியரசு கண்ணதாசன் ஒரு வரி எழுதினார்.

தாய்மை எனக்கே தந்தவள் நீயே,,,தங்க கோபுரம் போல வந்தாயே என்பது அந்த வரி. ஒரு மனைவி கணவனுக்கு தாய்மை உணர்வைத் தருவது மகத்தான பரிமாற்றம். கணவனுக்கு மனைவியும் மனைவிக்கு கணவனும் முதல் பிள்ளை எனக்கூறுவதும் இதனால்தான்.

பாசத்துடன் பெற்ற உயிரை கண்ணும் கருத்துமாக வளர்ப்பதில் தந்தையி்ன் பங்கு எழுதப்படாதது. அறியப்படாதது. அனுபூதியாக அதன் ஆழம் புரிந்தவர்களுக்கு மட்டுமே தரிசனமாக ஒளி்ர்வது. இது தொடர்பான திரைப்படங்கள் அதிகமாக வந்ததில்லை. தமிழில் அபியும் நானும், தங்க மீன்கள், வெற்றித்திருமகள் போன்ற சில அண்மைக்காலப் படங்களில் தந்தையின் பாசம் பேசப்பட்டது.

குழந்தைகளையும் அவர்களின் உணர்வுகளையும் மையமாக வைத்து உலக அளவில் ஏராளமான திரைப்படங்கள் வந்துள்ளன. இதிலும் தந்தையின் பாசத்தை பிரதிபலிக்கும் படங்கள் அதிகமில்லை.

தனிமையில் ஆயிரம் மைல்கள் பயணம் என்ற இந்தப்படமும் குழந்தைகளின் உலகையும் அத்துடன் தந்தையின் பாசத்தையும் விவரிக்கிறது.

கதை இதுதான்.

தகாதா என்ற பெரியவர் தன் மகன் கென்ச்சிக்கு உடல்நலம் சரியில்லை என்ற மருமகளின் தொலைபேசி அழைப்பை அடுத்து, அவனைக்காண மருத்துவமனைக்கு செல்கிறார். ஆனால் மகன் தந்தையைப் பார்க்க விரும்பவில்லை. தன் தாயின் மரணத்திற்கு தனது தந்தைதான் காரணம் என்று மகன் தந்தையை வெறுக்கிறான். தன் மீது தவறு இல்லை என்ற தந்தையின் விளக்கத்தை அவன் ஏற்றுக்கொள்ள சிறிதும் தயார் இல்லை. இந்நிலையில் கென்ச்சிக்கு புற்றுநோய் என்றும் அதிக நாட்கள் வாழ மாட்டான் என்றும் மருத்துவர்கள் கூறிய தகவலை கூறி அழுகிறாள் மருமகள் ரியா. தனது கணவர் தொடர்பான ஒரு வீடியோ கேசட்டை அவள் மாமனாரிடம் தருகிறாள். உங்கள் மகனைப் பற்றி புரிந்துக் கொள்ள இது உதவும் என்று கூறும் அவள் தன் கணவர் தகாதாவை புறக்கணித்ததற்காக மன்னிப்பு கோருகிறாள். குடும்பத்துடன் நாம் அனைவரும் உணவருந்தும் நாளுக்காக தாம் காத்திருந்ததாகவும் அந்த நாள் இனி வரவே வராதோ என்றும் ரியா அழுகின்றாள்.

அந்த வீடியோ கேசட்டை போட்டுப் பார்க்கிறார் தகாதா.அது ஒரு கூத்துக் கலைஞனை தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக அவர் மகன் கென்ச்சி பேட்டி எடுத்த வீடியோ காட்சி. படிப்பை விட்டு சீன நாட்டுப்புறக் கலைகள் மீது நாட்டம் கொண்ட ஜப்பானிய இளைஞனான கென்ச்சி அந்த கூத்துக் கலைஞனின் தனிமையில் ஆயிரம் மைல்கள் நெடும்பயணம் என்ற கூத்துக்கலையை நிகழ்த்துவதற்கு கோருகிறான். அப்போது திருவிழா முடிந்து விட்டதால் அடுத்த ஆண்டு திருவிழாக்காலம் வந்தால் தாம் இந்த கூத்தை நிகழ்த்திக் காட்டுவதாக அந்தக் கலைஞன் கென் தகாகாரா கூறுகிறான்.

இந்த ஆண்டு திருவி|ழாக் காலம் என்பதை அறிந்த தகாதா தனதுமகனின் விருப்பத்தை நிறைவேற்ற அந்தக் நடனத்தைப் படம்பிடிக்க முடிவு செய்கிறார்.இதற்காக ஒரு டிராவல் ஏஜன்சி மூலம் மொழிபெயர்ப்பாளரையும் ரயில், வாடகைக்கார் போன்றவற்றையும் ஏற்பாடு செய்து சீனாவுக்கு செல்கிறார்.இதன் மூலம் தன் பாசத்தை தனது மகனுக்கு உணர்த்த முடியும் என்று அவர் நம்பியது வீண் போகவில்லை. தனது தந்தை தனக்காக சீனா சென்றதை அறிந்த மகன் நெகிழ்ச்சியடைகிறான்.இனி தனது தந்தை அதைப் படம் பிடிக்காமல் திரும்பி வந்தால்கூட அது முக்கியமில்லை என்றும் தனது தந்தையை தாம் மன்னித்துவிட்டதாகவும் கூறுகிறான். ஆனால் கென்ச்சிக்காக அந்த நடனத்தைப் படம்பிடித்து திரும்புவது என்று தகாதா முடிவு செய்கிறார்.

சீனாவில் அவர் தேடிச் செல்லும் நடனக் கலைஞன் கென் இப்போது சிறைக்கைதியாக மூன்றாண்டு தண்டனை பெற்று இருப்பதைஅவர் அறிகிறார். வெளிநாட்டவரான அவரை சிறைக்குள் அனுமதிப்பதும் கைதியை படம் பிடிக்க அனுமதிப்பதும் சாத்தியமே இல்லை என்று வெளியுறவு அதிகாரிகள் மறுக்கின்றனர். அப்போது தமது மகன் மரணப்படுக்கையில் இருப்பதைக் கூறி ஒரு கைதியின் நடனத்தை மட்டும் படமெடுக்க மனிதாபிமான அடிப்பைடையில் அனுமதிக்கும்படி மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் தகாதா விடுக்கும் உருக்கமான வேண்டுகோள் அதிகாரிகளின் மனதை மாற்றுகிறது. படம் எடுக்க அனுமதி கிடைக்கிறது.

ஆனால் நடனக்கலைஞனான கென் நடனத்திற்கான வேடம் அணிந்து வந்தும் அவனால் இசைக்கேற்ப ஆட முடியவில்லை. தனதுமகனை எண்ணி அவன் அழுகின்றான். உணர்ச்சி வசப்பட்டு அவன் அழுவதால் அவன் மகனை தேடி அழைத்து வர முடிவு செய்கிறார் தகாதா. மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் கென் இருப்பதால் இன்னொரு நாளில் நடனத்தைப் படம் பிடிக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

தகாதா அந்த கலைஞனின் எட்டு வயது மகனைத் தேடி ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள ஸ்டோன் வில்லேஜ் என்ற ஒருமலைக்கிராமத்திற்கு மொழிபெயர்ப்பாளனை அழைத்துக் கொண்டு பயணிக்கிறார்.

ஊர்ப்பெரியவர்களுடன் பேசி ஒரு வழியாக அந்த எட்டு வயது சிறுவனை தன்னுடன் அழைத்துச் செல்ல அனுமதி பெறுகிறார் தகாதா.மிகப்பெரிய விருந்தோம்பலுடன் அந்த கிராம மக்கள் சிறுவனை தகாதாவுடன் அனுப்பி வைக்கின்றனர்.

யாங் எட்டு வயதேயானாலும் சுறுசுறுப்பான சிறுவன். சோகமும் தனிமையும் குழந்தைப்பருவத்திலேயே கண்டவன். பாசம் அறியாத அவனது பால்ய காலத்தில் தந்தை என்பது அவனுக்கு ஒரு வெற்றுச்சொல்தான். அவரைப் பார்பபதில் அவனுக்கு ஒருவித அலுப்புதான் உண்டே தவிர ஆர்வமில்லை. வழியில் கார் பழுதாக இடைப்பட்டநேரத்தில் சிறுவன் தப்பி ஓடுகிறான். அவனைவிரட்டிச் செல்கிறார் தகாதா.அப்புறம் பார்த்தால் அவன் ஓரிடத்தில் மலம் கழிக்கிறான். அவனை அக்கோலத்திலும் இதர பல புன்னகைக் கோலங்களிலும் படம் பிடிக்கிறார் தகாதா. மலம் நாறுகிறது என்றுமொழி தெரியாமல் அவர் மூக்கைப் பிடித்துக்காட்ட சிறுவன் சிரிக்கிறான். பார்ககாதே போ என விரட்டுகிறான். இருவருக்கும் இடையில் இருந்த அந்நியத்தன்மை விலகி ஒரு வித அந்நியோன்னியம் உருவாகிறது இக்காட்சியில். ஆனால் வழி தவறி விட்டதை உணர்கிறார் தகாதா. இருவரும் ஒருவரை ஒருவர் பாசத்துடன் அணைத்த நிலையில் உறங்குகின்றனர். கென்ச்சியை இப்படி ஒரு நாளாவது மடியில் வைத்து உறங்கச்செய்தேனா என்று அவர் கண்கலங்குகிறார். சிறுவயதில் தூக்கி வளர்க்காமல் போன கென்ச்சியை இந்தக்குழந்தையின் ரூப்த்தில் காண்கிறார் தகாதா.விடிகிறது. அவருடன் வந்த கைடு ஊர் ஆட்களுடனும் போலீசாருடனும் வழிதவறிப்போன தகாதாவையும் தேடி வருகிறான், ஆள் நடமாட்டத்தை அறிந்த தகாதா தன்னிடம் மீனவர்கள் படகில் பயன்படுத்தும் விசில் இருந்ததை அறிந்து அதை எடுத்து ஊதுகிறார். நான் ஊதுகிறேன் என்று அந்தச்சிறுவன் வாங்கி பீப்பீ என விசிலை ஊதுகிறான், கைடு அவர்களைக்கண்டுபிடித்து மீண்டும் கிராமத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள்.

சிறுவன் தந்தையைப் பார்க்க விரும்பவில்லை என்பதால்தான் ஓடிப்போனான் என்று கைடு மூலமாக ஊர்மக்களுக்கு உணர்த்துகிறார் தகாதா...பயலுக இப்படித்தான் காரணமே இல்லாமே ஓடிக்கொண்டே இருப்பார்கள் என்று ஊரார் கூறுகின்றனர். ஆயினும் குழந்தையின் உணர்வுக்கு மதிப்பளித்து அவனை அழைத்துச் செல்லும் முடிவைக் கைவிடுகிறார் தகாதா.தந்தை தானாக வரும் போது வரட்டும் என்று சிறுவன் கூறியதை அடுத்து அவனை மீண்டும் ஊர்மக்களிடம் விட்டு விட்டு திரும்பிச் செல்லும் தகாதாவை புதிய பாச உணர்வுடன் பார்த்து அந்தச்சிறுவன் கண்கலங்குகிறான். மகனின் ரூபத்தில் அவனை அவர் பார்த்தது போலவே தந்தையின் ரூபத்தில் அவரைஅவன் உணர்கிறான். அவர் காரில் ஏறும் போது கையசைத்து இறங்கச் சொல்லும் சிறுவன் ஓடி வந்து அவரைக் கட்டிப்பிடித்து அழுகின்றான். அவரும் கண்கலங்குகிறார்.

ரத்த உறவோ எந்த விதமான பழக்கமோ இல்லாத குழந்தைக்கும் தமக்குமான பாச பந்தம் இது என்பதை உணர்கிறார் தகாதா. சிறுவன் யாங்கை மார்புடன் தழுவும் போது அவரது கண்களும் கலங்குகின்றன. பின்னர் பிரியா விடை கொடுத்து அவர் காரில் செல்ல விசிலை ஊதியபடியே அந்த சிறுவன் வெகுதூரத்திற்கு காரைத்துரத்தி ஓடி வருகிறான். தூரத்திலிருந்து கையசைத்து விடைகொடுக்கிறான்.

மருமகளிடமிருந்து அழைப்பு வருகிறது. கென்ச்சி இறந்துவிட்டதாக அவள் அழுதுக் கொண்டே கூறுகிறாள். இரவு கென்ச்சி தம்முடன் வெகு நேரம் பேசியதையும் தந்தையை எண்ணி உருகியதையும் அவள் விவரிக்கிறாள். இனி எதுவும் வேண்டாம் திரும்பி வாங்க அப்பா என்று கூறுகிறாள் மருமகள்.தனது தந்தைக்கு மகன் எழுதிய கடைசி கடிதத்தையும் அவள் போனில் வாசித்துக்காட்டுகிறாள்.

முகமூடி அணிந்து நடனமாடும் கூ்த்துக்கலையின் மூலம்தான் வாழ்க்கையில் நமது பாச உறவுகளுக்கு நாம் அணிவிக்கும் முகமூடிகள் குறிதது தாம் புரிந்துக் கொண்டதாக கென்ச்சி அந்தக் கடிதத்தில் குறிப்பிடுகிறான். தானும் ஒரு முகமூடியுடன் தந்தையை நெருங்க விடவில்லை என்று அவன் கூறுகிறான். முகமூடியைக் கழற்றி தனது உண்மையான முகத்துடனும் பாசத்துடனும் தனது தந்தையுடன் பேச வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் அவன் விருப்பம் பதிவாகியுள்ளது.

மகனுக்காக கண்ணீர் விடுகிறார் தகாதா என்ற அந்த தந்தை. மீண்டும் சிறைக்குச் சென்று கென் என்ற அந்தக் கூத்துக் கலைஞனை சந்திக்கிறார். மகன் கென்ச்சி இறந்துவிட்ட செய்தியை சொன்னால் கூத்துக்கலைஞன் உணர்சசி வசப்பட்டு மீண்டும் நடனமாடுவதை நிறுத்துவான் என்று கருதி அவர் கூறவில்லை. தமது மகனுக்காக படம் பிடிப்பதாக பொய் சொல்கிறார்.

மீண்டும் நடனமாடத் தயாராகிறான் கென். அவனிடம் சிறுவன் யாங்கின் மலம் கழிக்கும் படம் உள்ளிட்ட தாம் எடுத்த படங்களை காட்டுகிறார் தகாதா. யாங்கின் படங்கள் கென்னை மட்டுமல்ல, சிறையில் உள்ள அத்தனைக் கைதிகளையும் தங்கள் பிள்ளைக்குட்டிகளை எண்ணி கண்கலங்க வைக்கிறது. மிகுந்த நன்றியுடன் தகாதாவை வணங்குகிறான் கென்.

முகமூடி அணிந்து கென் ஆடும் அந்த நடனக்கூத்து நிகழ்ச்சியில் வாழ்க்கையில் உள்ள முகமூடிகளை கழற்றி அன்பில் நேர்மையாக இருங்கள் என்ற சீனப் பெருங்கடவுள் யுவானின் கொள்கையை நடனத்தில் விவரிக்கிறான் கூத்துக் கலைஞன்.

நடனத்தைப் படம் பிடித்த பின் எங்கே செல்வது என்று தெரியாமல் தனிமையில் அவர் நிற்கிறார். அவர் கண்களில் வழியும் கண்ணீருடன் படம் முடிவடைகிறது.

இந்த அற்புதமான தகாதா கதாபாத்திரத்திற்கு அபாரமான நடிப்பால் உயிரூட்டியுள்ளார் கௌச்சி என்ற ஜப்பானிய நடிகர். வாழ்நாள் முழுவதும் உறவுகளைப் பிரிந்து தனிமையில் கழித்துவிட்டு முதுமைக்காலத்தில் தனக்கு முன்பே தனது மகன் இறந்துவிட்ட துயருடன் குடும்ப பந்தத்தை அன்புக்கு அடைக்கும் தாழ்களாக உள்ள முகமூடிகளை நினைத்து அழுகிறார் தகாதா.ஈடு செய்ய முடியாத இந்த இழப்பும் தனிமையும் அவரை துயரத்தில் மூழ்கடிக்கச் செய்கிறது. பாசத்தையும் அன்பையும் வெளிப்படுத்த வேண்டியவர்களிடம் அதை செலுத்தாமல், முகமூடிகளுடன் வாழும் மனிதர்கள் காலம் கடந்து விட்டப்பிறகு அந்த அன்பைப் பகிர நினைப்பதால் என்ன பயன்? காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. மரணம் ஒருவரையும் விட்டு வைப்பதில்லை. யாரோ ஒரு அந்நியச்சிறுவனுடன் தந்தைப்பாசத்தை அறிந்த தமக்கு தமது சொந்தமகனுடன் ஏன் காலம் தோறும் பாசத்துடன் வாழ முடியவில்லை?

உலகிலேயே மிகவும் அற்புதமானது அன்புமட்டும்தான். ஒரு மனிதன் இன்னொரு மனிதன்மீது எந்த வித சுயநலமும் இன்றி செலுத்தும் அன்பு தெய்வீகமானது. அன்புதான் உலகைப் பிணைக்கிறது. சீனாவும் ஜப்பானும் பின்பற்றும் பௌத்த சமயமும் அன்பையே போதிக்கிறது. ஒரே நாளில் அந்த எட்டுவயது சிறுவனை ஆரத்தழுவி அழச்செய்தது அநத் அன்புதான்.

மகனுக்காக கென் என்ற அந்தக்கூத்துக் கலைஞனும் அவனைப் போன்ற இதர கைதிகளும் கண்ணீர் விடும் காட்சியும் அன்பினால் ஏற்படும் காயங்களையும் வலிகளையும் விவரிக்கிறது. அன்பினால் வளர்கின்றன உறவுகள், உறவுகளால் வளர்கிறது வாழ்க்கை. அன்பும் உறவும் கிடைக்காத மனிதனுக்கு தனிமையில் ஆயிரமாயிரம் மைல்கள் துயரமான பயணம்தான் வாய்க்கிறது,அவன் தேடிச்செல்வது அவனுக்குக்கிடைப்பதில்லை. அவன் எதையாவது தேடுகின்றானா என்பதும் தெரியவில்லை.

முகமூடிகளுக்குப் பின்னால் அழுகின்ற முகத்துடன் உள்ள ஆயிரமாயிரம் மனிதர்களை புரிந்துக் கொள்ளவும் அன்பைப் பகிரவும் நாம் தயாராக இல்லை. நாமும் முகமூடிகளுடன் அவர்களை அணுகி வாழ்கின்றோம்.

துயரமும் தனிமையும் நோயும் மரணமும் வாழ்க்கையை முடித்து விடும் முன்பாக அன்பை நாம் அடைந்துவிடமாட்டோமா என்ற ஏக்கத்தைப் பிரதிபலிக்கிறது இந்த அற்புதமான படம்.

அன்பினால் செழிக்கும் இவ்வையகம்.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...