Friday 5 February 2016

சென்னை சர்வதேச திரைப்பட விழா 2016












குமுதம் தீராநதி பிப்ரவரி 2016 ல் வெளியான எனது கட்டுரை








சென்னை சர்வதேச திரைப்பட விழா 2016

செந்தூரம் ஜெகதீஷ்

சென்னை 13 வது சர்வதேச திரைப்பட விழாவில் இந்த ஆண்டு,57 நாடுகளைச் சேர்ந்த 184 திரைப்படங்கள் ஏழு திரையரங்குகளில் திரையிடப்பட்டன. இதில் பாலசந்தர், ஆச்சி மனோரமாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், ஊமைப்பட காமெடியன் பஸ்டன் கியூட்டன் சினிமாவின் 120 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையிலும் படங்கள் திரையிடப்பட்டன. இதுமட்டுமின்றி பாஸ்பைன்டரின் வோவரிக்கா உள்ளிட்ட 5 திரைப்படங்களும் ரசிகர்கள் பெரிய திரையில் கண்டு களிக்க திரைப்பட விழா வழி வகுத்தது. இந்தியன் பனோரமாவில் மசான், கோர்ட் போன்ற அண்மையில் வெளியான 12 முக்கி்யத் திரைப்படங்களும் தமிழ்ப்பட வரிசையில் தனி ஒருவன், தாக்க தாக்க போன்ற புதிய படங்களும் எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் தயாரித்த 11 குறும்படங்களும் திரையிடப்பட்டன.வழக்கமாக ரஜினி படமானாலும் சரி அஜித் விஜய் படமானாலும் சரி மூன்று நாட்களுக்குப்பிறகு திரையரங்கமே காலியாக இருக்கும். பத்து இருபது பேர் மட்டும் படம் பார்ப்பார்கள். ஆனால் திரைப்பட விழாவைக் காண வந்த ரசிகர்களால் திரையிட்ட ஏழு திரையரங்குகளும் நிரம்பி வழிந்தன. பல நேரங்களில் ரசிகர்கள் தரையில் அமர்ந்தும் நின்றும் படம் பார்த்தார்கள். நல்ல சினிமாவுக்கான ஏக்கமும் ஆர்வமும் ததும்பும் முகங்களில், சுகாசினி, நடிகர் ராஜேஷ், இயக்குனர் சந்தானபாரதி, எழுத்தாளர்கள், குறும்பட இயக்குனர்கள், மாணவர்கள் என பலதரப்பட்ட மனிதர்களை காண நேர்ந்தது.  பரத்பாலா, நடிகை லிசி, பத்திரிகையாளர் உதாவ் நாயக் ஆகியோர் நடுவர்களாக இருந்து சிறந்த தமிழ்ப்படங்களைத் தேர்வு செய்தனர்.முதலமைச்சர் ஜெயலலிதா இந்த திரைப்பட விழா சிற்ப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு்ம் 50 லட்சம் ரூபாய் நிதியுதவியும் அளித்தார்.

நான்  பார்த்த சில முக்கியப் படங்கள்

MOUNTAINS MAY DEPART சீனப்படம்

இது 1999ம் ஆண்டிலிருந்து 2025 வரை காலகட்டத்தை மையமாகக் கொண்ட கதையமைப்பு. ஆரம்பத்தில் முக்கோணக் காதல் கதையாக தொடங்குகிறது. தாவோ என்ற இளம் பெண்ணை இரண்டு பால்ய கால ஸ்நேகிதர்கள் காதலிக்கிறார்கள். இருவருக்கும் இடையே மோதல் வெடிக்கிறது. நிலக்கரி சுரங்கத்தை விலைக்கு வாங்கிய வசதியான நண்பனுக்காக ஏழை காதலனை நிராகரிக்கிறாள் கதாநாயகி. அவன் மனம் வெறுத்து இனி ஊருக்கே வரமாட்டேன் என்று சென்றுவிடுகிறான். அவள் தனது திருமணத்தை நடத்தினாலும் அவனுடன் மகிழ்ச்சியாக வாழாமல், விவாகரத்து செய்துவிடுகிறாள். ஒரு கேஸ் நிரப்பும் நிலையத்தை நடத்தி வசதியாக இருக்கிறாள். ஆனால் மகனை தந்தையிடம் வளர்க்க நீதிமன்றம் உத்தரவிட்டதால் புத்திர பாசத்தால் பரிதவிக்கிறாள். மகன் ஷாங்காய் சென்று விடுகிறான்.
இதனிடையே இவளது பழைய காதலன் லாங்சி திரும்பி வருகிறான். அவனுக்கும் கல்யாணமாகி விட்டது .ஒரு சிறிய குழந்தையும் உண்டு. ஆனால் மிகவும் நோய்வாய்ப்பட்ட நிலையில் பணத்துக்காக பரிதவிககும் அவனுக்கு தாவோ பண உதவி செய்கிறாள். அவன் வீட்டிலிருந்து வரும் போது அவன் வீட்டை விட்டு போகும் போது தூககிப்போட்ட அவளது திருமணப் பத்திரிகை அங்கு கிடப்பதைக் கண்டு எடுத்து வருகிறாள். அவள் தந்தை காலமானதும் இறுதிச்சடங்கின் போது மகன் தன் தாயைக் காண வருகிறான். மா என்று தன்னை அழைக்க அவள் கோருகிறாள். ஆஸ்திரேலியாவில் வளரும் அவனோ மேற்கத்திய கலாச்சாரத் தாக்கத்தால் மம்மி என்கிறான்.
தாத்தாவுக்கு அஞ்சலி செலுத்த மகனைக் கட்டாயப்படுத்தும் தாய் பாசம் என்பதும் பந்தம் என்பதும் தொலைந்து போன உறவுகளுக்கு இல்லை என்பதை நிதர்சனமாக புரிந்துக் கொள்கிறாள். அவனுக்காக அவள் ஒரு வீட்டையும் ஒதுக்கி அதன் சாவிகளை அவனுக்கு தருகிறாள். அவனை கொண்டு போய் விடுவதற்கு ரயிலில் போகும் போது இந்த ரயில் ஏன் மெதுவாக செல்கிறது. வேகமாக செல்லும் ரயிலிலோ விமானத்திலோ நாம் சென்றால் என்ன என்று மகன் கேட்கிறான். உன்னுடன் அதிக நேரம் இருக்கவே இந்த ரயிலில் டிக்கட் எடுத்தேன் என்கிறாள் தாய். திரையரங்கில் கைத்தட்டல்கள் பறக்கின்றன. பல ஆண்டுகள் கழித்து தமது பேராசிரியையுடன் நட்பு பாராட்டும் மகன் டாலர் தாயை நினைத்து உருகுகிறான். தாயின் முகம் கூட நினைவில் இல்லாத போதும் அவள் தந்த சாவிக்கொத்து அவன் கழுத்தில் ஊஞ்சலாடுகிறது. தாயை காண தமது வயது மூத்த பேராசிரியர் தோழியுடன் அவன் பெய்ஜிங் நோக்கி வருகிறான்.
இதனிடையே உறவுகளின் பிடியிலிருந்து ஏகாந்தமாக வாழப்பழகிக் கொண்ட தாய் தாவோ தனது தனிமையைக் கொண்டாடும் விதத்தில் நடனமாடுவதுடன் படம் முடிவடைகிறது. சீனாவில் முதலாளித்துவம் மெல்ல மீண்டும் ஊடுருவுவதையும் மேற்கத்திய கலாச்சாரம் தாக்குவதையும் வசதிகளுக்காக சீன மக்கள் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்தலும் உறவுகளின் நிலையற்ற தன்மைகளும் அந்நியமாதல் உணர்வுகளையும் இந்தப் படம் சித்தரிப்பதில் மென்மையான அதி்ர்வை ஏற்படுத்துகிறது.
கண்ணை விரிய வைக்கும் மலைப்பிரதேசங்கள், நிலக்கரி சுரங்கங்கள், சீனா மற்றும் ஆஸ்திரேலியாவின் நாகரீக விஸ்வரூபங்களை காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் அதற்குரிய துயரம் ததும்பும் இசையை இனிய ரீங்காரமாக தந்த இசையமைப்பாளரும் நமது
பாராட்டுக்குரியவர்கள்.

THE SUMMER OF SANGALI (  இயக்குனர் அலாண்டே கேவட்டே) லித்துவானியா படம்

இப்படம் இரண்டு இளம் பெண்களைப் பற்றியது. இருவருமே அழகானவர்கள். இருவரும் ஒருவர் மற்றவரால் கவரப்படுகிறார்கள். ஒரு நாள் இருவரும் உடல் உறவு கொள்கிறார்கள்.ஒரே பாலின உறவு சகஜமாகி விட்ட வெளிநாட்டவருக்கு இதற்கு பிரச்சினை இல்லை. நமக்குத்தான் இத்தனை ஆண்கள் ஏங்கிக்கிடக்கும் போது ஏன் இப்படி இரண்டு பெண்கள் தங்கள் யோனியை இன்னொரு பெண்ணை சுவைக்க விடுகிறார்கள் என்ற கேள்வி எழாமல் இருக்காது. திரைப்பட விழாவில் திரையிட்ட பல படங்களில் இத்தகைய சென்சார் செய்யப்படாத முழு நீள நிர்வாணக்காட்சிகளுக்கும் உடலுறவுக்காட்சிகளுக்கும் பஞ்சமே இல்லை.ஆனால் இது லெஸ்பியன் படம் அல்ல பாதிப்படம் இப்படியே போனாலும் பிற்பாதியில் படம் உயரத்திற்கு பறக்கிறது. உயரத்தை கண்டு அச்சமடையும் நாயகி சங்காலியா விமானம் ஓட்டுவதற்கு அச்சம் கொள்கிறாள். கோடையில் நடைபெறும் ஏரோநாட்டிகல் சாகச கண்காட்சி விழாவில் பங்கேற்க விரும்புகிறாள். அவளுடைய கனவு நனவாக அவளுடைய காதல் தோழி ஆஸ்டே உதவுகிறாள், அவளுடைய ஊக்கத்தால் அவள் அச்சம் தவிர்த்து உயரத்தில் பறப்பது கிளைமேக்ஸ், வாங்கிய ஊதியம் என்னவோ நாயகியாக நடித்த ஜூலிஜா அற்புதமான நடிப்பையும் சாகசத்தையும் வெளி்ப்படுத்துகிறார். நிர்வாணக் காட்சிகளில் தனது உடலை ஒரு துளிகூட மறைக்காமல் திறக்கும் அவர் பிற்பகுதியில் தனது அச்சத்தைப் போக்க உயரமான செல்போன் கோபுரங்களிலும் கட்டடங்களும் ஏறி மெய்சிலிர்க்க வைக்கிறார். இறுதியில் அவள் விமானத்தில் ஏறி பறக்கும் போது அவளுடைய கனவு நனவாகிறது.

HOW HE FALL IN LOVE ( US ) இயக்குனர் மார்க் மேயர்ஸ்

திருமணமான நடுத்தர வயதுப் பெண்ணுடன் கள்ளக்காதலில் விழும் இளைஞனின் கதை இது. ஆரம்பததில் சாதாரண உடல் இச்சைக்காக தொடங்கும் உறவு இருவரின் நெருக்கத்தால் ஆழமான காதலாகிறது. தன்னை விட இரண்டு மடங்கு வயதான கணவருடன் அவள் மனம் ஒட்டவில்லை. தன் வயதுக்கேற்ற காதலனையும் வாழ்க்கையையும் அவள் நாடுகிறாள். கணவன் ஒரு அற்புதமான மனிதர். வாள் வீச்சு கற்றுக்கொடுப்பவர். தன் மனைவி இன்னொரு இளைஞனை சந்திப்பதை அறிந்து மனம் துன்புற்று அவனுடன் பேசும் காட்சியில் உனக்கு திருமணமாகி உன் மனைவி இன்னொருவனுடன் போனால் என் வலி என்ன என்று எனக்குப் புரியும் என்கிறார். அவனுடன் கைக்குலுக்க கைநீட்டி திடீரென அவன் முகத்தில் குத்து விடும் காட்சி ஒரு கவிதை. இறுதியில் அந்த இளைஞனும் அவளும் தங்கள் உறவை நிறுத்திக் கொள்ளும் காட்சியும் கவித்துமாக முடிகிறது.

PHEONIX  ஜெர்மனி ( இயக்குனர் கிறிஸ்டியன் பெட்சோல்ட்)
திரைப்பட விழாவின் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற அற்புதமான படம் இது. அபாரமான கதையமைப்பும் திரைக்கதையும் அற்புதமான கிளைமேக்சும் இப்படத்தைப் பார்த்தவர்களுக்கு பரவச அனுபவத்தை தந்தன. முதலில் இப்படம் ஐநாக்ஸ் திரையரங்கில் ஞாயிற்றுக்கிழமை 7.15 மணிக்குத் திரையிடப்பட்டது. 5.30 மணி முதலே ரசிகர்கள் நீண்ட கியூ வரிசையில் ஐநாக்ஸ் வளாகத்தில் காத்திருந்தனர். 7.20 வரை உள்ளே அனுப்பாத ஐநாக்ஸ் நிர்வாகம் வர்த்தக ரீதியான படங்களுக்கு பார்வையாளர்களை உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தது. திரைப்பட விழாவுக்கு வந்தவர்கள் ஏதோ ஓசியில் படம் பார்க்க வந்த பிச்சைக்காரர்கள் போல நடத்தி கடைசியில் 50 பேரை கூட உள்ளே அனுப்பாமல் 170 இடங்கள் (மட்டுமே) கொண்ட அரங்கம் நிறைந்துவிட்டதாக கூறி 2 மணி நேரமாக காத்திருந்த 200 பேரை திருப்பி அனுப்பியது.ரசிகர்கள் வெளியே போக மறுத்து தர்ணா செய்தனர். கடைசியில் திரைப்பட விழா இயக்குனர் திரு.தங்கராஜ் மீண்டும் இப்படம் திரையிடப்படும் என்று உறுதியளித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர். இரண்டுநாட்களுக்குப் பிறகு மீண்டும் இத்திரைப்படம் உட்லண்ட்சில் திரையிடப்பட்டது. இப்படத்தின் கதாநாயகி ஒரு யூதக்குடும்பத்தைச் சேர்ந்தவள். 1944ம் ஆண்டு நாஜிப்படைகளால் கைது செய்யப்பட்ட அவள் கணவன் ஜானி தன்னைக் காப்பாற்றிக்கொள்ள தனதுமனைவியையும் அவள்குடும்பத்தினரையும் காட்டிக் கொடுக்கிறான். அவர்கள் இருந்த வீடு குண்டு வெடித்து தரைமட்டமாகி எல்லோரும் இறந்துவிட கதாநாயகி நெல்லி மட்டும் உயிர்தப்புகிறாள். ஆனால் அவள் முகம் சிதிலமடைகிறது. முகமாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு புதிய முகம் கொண்டு வரும் அவள் கணவருடன் பழகுகிறாள். அவளை மனைவி நெல்லி போல நடிக்கச் சொல்லுகிறான் அவன். அவள் சொத்தை தன்மனைவி உயிருடன் இருப்பதாகக் காட்டி அபகரிப்பது அவன் தி்ட்டம். தன்னைக்காட்டிக் கொடுக்கும் முன்பு அவன் தன்னை விவாகரத்தும் செய்துவிட்டதை அவள் அறிகிறாள். துரோகியான கணவனை சுட்டுக்கொல்ல அவள் துப்பாக்கியும் வைத்திருக்கிறாள் .ஆனால் அவன் மீதுள்ள தன் அன்பினாலும் காதலினாலும் அவள் அவனைக் கொல்லவில்லை. அதை விட பெரிய தண்டனையை தான் யார் என வெளிப்படுத்தி தருகிறாள். அந்த தருணம் சினிமாவின் பொற்காலங்களில் பொறிக்கப்பட வேண்டும். ஸ்பீக் லோ வென் யூ ஸ்பீக் லவ் என்ற அற்புதமான பாடலுடன் கணவர் அதிர்ந்து நிற்க திரைப்படம் முடிகிறது.


No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...