Thursday 27 March 2014

கோமல் ஸ்வாமிநாதனின் பறந்து போன பக்கங்கள்

கோமல் சுவாமிநாதனை அதிகமாக அறிந்ததில்லை. அவர் நடத்திய ஓர் இந்திய கனவு நாடகத்தைக் காண தி.நகர் வாணி மகாலுக்கு நண்பர் இளையபாரதியுடன் போயிருக்கிறேன். அங்கு சிகரம் செந்தில்நாதன் ஆட்களுக்கும் இளையபாரதிக்கும்  நடந்த அடிதடியில்,தப்பியது தலைபுண்ணியம். அடுத்து கோமல் ஸ்வாமிநாதன் நடத்திய கூட்டத்திற்கு ஜெயமோகனுடன் போனேன். அங்கும் அறிவுமதி அண்ட் கோ நாற்காலிகளை எடுத்து ஜெயமோகன் மேல் வீச கையைப் பிடித்து அவரை இழுத்து வந்த போது ஒரு கார் எங்களை ஏற்றிக் கொண்டது. அக்காரில் வந்தவர் இயக்குனர் பாலு மகேந்திரா.
இன்னொரு முறை கோமல்சுவாமிநாதனை நான் பார்த்த போது விஷம் சாப்பிட்டிருந்தேன்.
கோவையில் நடைபெற்ற சுபமங்களா நாடகவிழா- 94 ம் ஆண்டு. அப்போது அங்கு இருந்த கோமல் ஸ்வாமிநாதனை சந்திக்க நேர்ந்தது. ஆனால் குடும்பத்தில் நிலவிய கடுமையான சிக்கல்கள், மன உளைச்சல்களால் அருகில் இருந்த கடையில் எலி விஷம் 10 பாக்கெட் வாங்கி ஒன்று சாப்பிட்டு மீதி வைத்திருந்த போதுதான் கோமலை சந்தித்தேன். அப்போது எம்.வி.வெங்கட்ராமனின் காதுகள் நாவலுக்கு சாகித்ய அகதமி கிடைத்திருந்தது. அதற்கு சுபமங்களாவில் காதுகள் பற்றியும் எம்.விவியை சந்தித்தது பற்றியும் நான் எழுதிய கட்டுரையும் சிறிய அணில்பங்காற்றியது.
(( நீங்கதான் எனக்கு சாகித்ய அகடமி கிடைக்க காரணம் என்று எம்.விவியே நேரில் என்னிடம் உருக்கத்துடன் கூறினார் )) எம்விவிக்கு சாகித்ய அகடமி கிடைக்க சுபமங்களா கட்டுரை காரணமானது பற்றி கோமலுடன் பேசினேன். தரையில் சப்பணமிட்டு சாதாரண மனிதராக அமர்ந்திருந்தார். மிகவும் மகிழ்ச்சியுடன் பேசினார். நான் எழுத நினைத்ததை நீங்க எழுதிட்டீங்க என்று கையைப் பிடித்துக் கொண்டார். அப்புறம் அந்த எலி விஷத்தை நண்பர்கள் பிடுங்கி எறிந்தது எல்லாம் தனிக்கதை
கடைசியாக அவர் மரணப் படுக்கையில் இருந்த போது மேற்குமாம்பலத்தில் உள்ள அவர் வீட்டுக்கு ஜெயமோகனுடன் போய் பார்த்தேன். அடையாளம் தெரிந்துக் கொண்டாலும் அவரால் பேச இயலவில்லை. சில நாட்களில் அவர் இறந்ததாக அறிந்து வேதனைப்பட்டேன்.

----------------
பழைய புத்தகக் கடையில் கோமல் சுவாமிநாதனின் பறந்துப் போன பக்கங்கள் கிடைத்தது. நாடக, திரையுலக பத்திரிகையுலக அனுபவங்களை அதில் அவர் பதிவு செய்துள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முதல் மரியாதையில் நடித்ததற்கு தேசிய விருதுக்காக நடுவராக இருந்த கோமல் பரிந்துரை செய்த போதும் ஜெயாபச்சனால் அந்த பரிசு சசிகபூருக்கு போனதை கோமல் பதிவு செய்துள்ளார். இதே போன்று வைரமுத்துவுக்கு தேசிய விருது கிடைக்க தாம் பாரதிக்கு அடுத்த பெரிய கவிஞரே இவர்தான் என 20 நிமிடம் அடித்துப் பேசவேண்டியிருந்தது என்றும் கோமல் கூறினாராம். வைரமுத்துவுக்கு கிடைத்தது , சிவாஜிக்கு கிடைக்கவி்ல்லை.
வீடு ஜப்தி செய்யப்படுவதா தண்டோரா போடப்பட்டுக் கொண்டிருக்கும் போதும் நடிப்புப் பயிற்சியளிப்பதில் குறியாக இருந்த பழம்பெரும் நடிகர் சகரஸ்நாமம், கோமல் என்ற பெயரை கோல்மால் என உச்சரித்து சிரித்த நடிகை நூதன், தாஜ்மகால், டெல்லி, வாரணாசி பயணங்கள், தாஜ்மகாலில் நீரி்ல் விழுந்த குழந்தையை காப்பாற்ற வீரதீரமாக குதித்த நடிகரை அந்தக் குழந்தை கைகொட்டி சிரித்து கேலி செய்தது, நடிகர் முத்துராமன் கிண்டலடித்தது  போன்ற ஏராளமான தகவல்களை இந்நூல் அள்ளித் தருகிறது. சுபமங்களாவில் நான் ஓரே ஒரு கட்டுரையும் சில கடிதங்களும் மட்டும்தான் எழுதியிருக்கிறேன். கோமலுடன் பழகியதும் இவ்வளவுதான். ஆனால் மனதுக்குள் பெரிய தாக்கம் பாதிப்பை அவரால் ஏற்படுத்த முடிந்தது. மற்ற கம்யூனி்ஸ்ட் தோழர்களைப் போல அவர் இறுகிய மனிதராக இல்லை. ஆனாலும் திருவனந்தபுரம் திரைப்பட விழாவில் நடுவராக அழைக்கப்பட்டது, பல்வேறு திரைப்பட விழாக்களுக்கு யார் செலவிவோ அரசு செலவிவோ அவர் பயணம் போனது போன்றவற்றை படிக்கும் போது ஒரு ஜோல்னா பையும் குர்தாவும் அணிந்தால் நல்ல இன்டலக்சுவல் லுக் வந்துவிடும் என்று தோன்றுகிறது. வாழ்க்கையை இத்தனை சுமையாக கழிக்காமல் கோமல் போல சுகமாக கழித்திருக்கலாம் என்று தோன்றாமல் இல்லை
---------------------------------


No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...