Sunday 9 March 2014

உலக சினிமா THE MAN WHO LOVED WOMEN

FRANCOIS TRUFFAUT இயக்கிய THE MAN WHO LOVED WOMEN

பெண்கள் மீதான ஈர்ப்பு அறுபது வயதிலும் குறைவதில்லை. வயதுக்கும் மனதுக்கும் சம்பந்தமிருப்பதில்லை. முதியவர் குழந்தையைப் போலும் நடந்துக் கொள்ள முடியும். எப்போ பார்த்தாலும் ஹைஸ்கூல் பையன் போல நடந்துக்கறே என்று காதலியால் திட்டு வாங்கிய அனுபவம் நம்மில் பலருக்கும் இருக்கும்.
ஆதமின் முதுகெலும்பிலிருந்து தேவனால் படைக்கப்பட்ட பெண் ஓர் அற்புதம். அவள் உடல் அழகு, கண்கள், கூந்தல்,மார்பகங்கள், யோனி, வாளிப்பு, நறுமணம், குரல், சிரிப்பு, இடை என ஆண்களை வீழ்த்தும் பல ஆயுதங்கள் அவளிடம் உண்டு. ஆண்களில் மட்டும்தான் தேவதாஸ்கள் தோன்றுவார்கள். ஆண்கள்தான் தாஜ்மகால்களை கட்டுவார்கள். ஆண்கள்தான் காதலுக்கு உயிரைத் துறப்பார்கள். பெண்கள் மிக குறைந்த அளவிலேயே காதலில் தீவிரமாக இருக்கிறார்கள். தாய்மையும் குடும்பநிர்வாகமும் தான் அவர்களின் தனிச்சாதனை.

பல பெண்களை நேசிக்கிற ஒரு நடுத்தர வயது மனிதனின் கதைதான் பிராங்கோ ட்ரூஃபாட்டின் இந்த திரைப்படம். கதாநாயகன் முதல்பார்வையில் ஒரு பொம்பளைப் பொறுக்கி போல தோன்றலாம். உமன் ஈட்டர் என்று ஓரிடத்தில் அவன் காதலி கூறும்போது, எனக்கு அத்தகைய ஆண்களைப் பிடிக்காது என்கிறான் சார்லஸ் டெனர்.
பெண்களின் கால் அழகுதான் அவனை ஈர்க்கும் முதல் விஷயம். மினி ஸ்கர்ட்டில் நடந்து செல்லும் கால்களை அவன் ரசிக்கிறான். மினி ஸ்கர்ட் மீண்டும் குறைய முடியாமல் வளர்ந்து மிடியாக மாறுவதையும் ஓரிடத்தில் குறிப்பிடுகிறான். பெண்களின் கால்கள் கம்பஸ் கருவியைப் போல ( compass) என்று கூறுகிறார் இயக்குனர் ட்ரூஃபாட்.ஒரு கால் மரபை மீறாமல் உறுதியாக ஊன்றியிருக்க மற்றொரு கால் உலகை சுற்றுவதாக கூறுகிறார்.
ஒரு அங்காடியில் பெண்ணின் கால்களைப் பார்த்து, அவள் முகவரியைப் பெற போலியாக ஒரு விபத்தை உருவாக்கி, அவள் கார் நம்பர் மூலம் அவள் முகவரியை கண்டுபிடித்து, தொலைபேசியில் அவளுடன் கொஞ்சி பேசி சிரிக்க வைத்து அவளை உணவுவிடுதிக்கு அழைத்து லெமன் சாம்பெயின் அருந்துவது வரை அவனுக்கு வெற்றிதான். ஆனால் அந்தப் பெண் நான் அல்ல என்கிறாள் அங்கு வந்தவள். அவள் கால்களை பார்க்க முடியாதபடி பேண்ட் போட்டு வந்திருக்கிறாள். அவள் தனது  ஒன்றுவிட்ட சகோதரி என்றும் தேவையானால் அவள் முகவரியைத் தருவதாகவும் அந்தப் பெண் கூறுகிறாள். இந்த முக்கியமான காட்சிதான் படத்தின் ஆரம்பம். ஆனால் அவன் வேண்டாம் என்று திரும்பிச் செல்கிறான். அவன் உமன் ஈட்டர் இல்லை என்பதற்கான ஒரு சிறிய உதாரணம் இக்காட்சி. அந்தப் பெண்ணையும் அவன் தொடவில்லை. முகவரி தேடி இன்னொரு பெண்ணையும் தேடிச் செல்லவில்லை. மாறாக இந்த பேண்ட் பெண்ணை கண்டுபிடிக்க தனக்கு உதவிய வாடகைக் கார் நிறுவன அழகியை படுக்கைக்கு அழைத்துச் செல்கிறான். முதல் பார்வையிலேயே அழைப்பு விடுக்கும் அந்தப் பெண்ணை அவன் எளிதாக சாய்க்க முடிகிறது.
இடையில் கதாநாயகனின் பால்ய காலம் காட்டப்படுகிறது. அவன் தாய் மினி ஸ்கர்ட்டில் வேகமாக நடப்பதை வழக்கமாக கொண்டிருந்தாள். தான் ஒரு விபச்சாரி என்பதை மறைத்து தன்னுடன் நேரடியாக யாரும் பேரம் பேசலாம் என்பதை மறைத்து, வேகமாக நடப்பதன் மூலம் பலரது கவனத்தை கவர்வது அவள் உத்தி. அவளைப் பின்தொடர்ந்து வந்து பைத்தியமாக ஆனவர்கள் பலர். அதனால்தானோ என்னவோ அவனுக்கு ஸ்கர்ட் அணிந்த கால்கள் மீது ஈர்ப்பு குறையவில்லை.

ஒவ்வொரு பெண்ணிடத்திலும் ஆண் தேடுவது தனது தாய் மடியை என்று உளவியல் அறிஞர்கள் கூறுவதை இங்கு நினைவுகூரலாம்.
ஏராளமான பெண்களுடன் பழகும் அவன் சிலரால் ஏமாற்றத்துக்கும் ஆளாகிறான். அவனைப் போல நடுத்தர வயதை அடைந்த உள்ளாடைக் கடை அழகி ஹெலினா ஒரு உதாரணம். அவனுடன் கொஞ்சி பேசுகிறாள். உடைமாற்றும் பெண்களின் மார்பகங்களைப் பற்றி கூச்சமில்லாமல் அவனிடம் பகிர்ந்துக் கொள்கிறாள். அவள் செம்மை ஈசியாக படிவாள் என்று சார்லஸ் டெனர் நினைக்கும் போது அவளோ எனக்கு உன்னைப் போல வயதான ஆண்களுடன் உறவு கொள்ள விருப்பமில்லை. எனக்கு சின்னப் பையன்கள் மீதுதான் ஆசை என்கிறாள்.
இதே போன்று அவனால் மிகவும் காதலிக்கப்பட்டு அவன் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளாமல் பிரிந்துப் போன மற்றொரு பெண் வேரா.
தான் சந்தித்த பெண்களைப் பற்றிய நினைவுகளை புத்தகமாக எழுத நினைக்கிறான் சார்லஸ். அவன் டைப் செய்த பிரதிகளை திருத்தி மீண்டும் தட்டச்சு செய்யும் பெண் அந்தப் பிரதியை திருப்பித் தந்துவிடுகிறாள். உன் புத்தகம் என்னை மிகவும் அலைக்கழிக்கிறது. அதன் உண்மை என்னை சுடுகிறது. ஆனால் அதை நான் ஏற்க முடியாது. நான் குடும்ப பெண். ஒழுக்கத்தை மதிப்பவள். என்று அவள் நல்ல விதமாக அவனை நிராகரிக்கிறாள். அவனை மட்டுமல்ல, அவனுக்குள் இருக்கும் படைப்பாளியையும் நிராகரிப்பது அவனுக்கு மிகவும் வலிக்கிறது.
ஆனால் அந்தப் புத்தகத்துக்காக வாதாடி, அதை பதிப்பிக்க முன்வரும் பெண் பிரிட்ஜட். அவள் மட்டும்தான் அவன் புத்தகம் மூலம் அவன் காதலித்த அத்தனைப் பெண்களையும் உணர்ந்தவள். அவளும் அவனது எண்ணற்ற காதலிகளில் ஒருத்தியாக மாறுகிறாள். ஆனாலும் ஒரு உண்மையை அவள் உணர்கிறாள். அவன் எந்தப் பெண்ணையும் கட்டாயப்படுத்தியதில்லை. வசப்படுத்தியிருக்கிறான். அவனிடம் வலிய வந்து விழுந்தவர்களை தொட்டிருக்கிறான். பதிப்பாளரான தன்னை கவர்ந்து தன்னை படுக்கையில் சாய்த்தவன், தன்னிலும் அழகான அச்சுக் கோர்க்கும் லே அவுட் ஆர்ட்டிஸ்ட் பெண்ணை தொடவே இல்லை என்பதுதான் அவனது குணாதிசயத்தின் ஆச்சரிய முரண் என்று அவள் உணர்கிறாள்.
பணம் கேட்டவர்களுக்கு பணத்தைக் கொடுத்தான். அன்புக்காக அழுதவர்களுக்கு அன்பை வாரியிறைத்தான். உடல் பசிக்காக வந்தவர்களுக்கு ஆண்மையின் இன்பத்தை அள்ளித் தந்தான். ஏமாற்றம் தந்தவர்களையும் எளிதாக மறக்கப் பழகிக் கொண்டான். அவன் யாரையும் ஏமாற்றவில்லை. அவன் பெண்களை வீழ்த்தவில்லை. பெண்களை அவன் நேசித்தான். பெண்கள்தான் அவனை வீழ்த்தியவர்கள். ஏமாற்றம் தந்தவர்கள். கடைசியில் பெண்ணின் கால்களைப் பார்த்து சாலையைக் கடக்கும்போதுதான் அவன் காரில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறான். அங்கும் நர்சின் கால் அழகை கண்டு படுக்கையிலிருந்து எழ முயன்று ரத்த பாட்டில் சிதற மரணமடைகிறான். அவன் கல்லறையில் ஒரு ஆண்கூட இல்லை. ஆனால் ஏராளமான பெண்கள்.

இந்தப் படத்தில் இன்னும் சில முக்கியமான காட்சிகள் உண்டு. ஸ்டோர்சில் ஒரு பெண் வேலை தேடி தனது போன் நம்பரை எம்பிளாய்மெண்ட் கவுண்ட்டரில் ஒட்டிச் செல்கிறாள். அந்த நம்பரை வைத்து குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் வேலைக்கு அவளை அவன் அழைக்கிறான். வீட்டுக்கு வரும் அவள் குழந்தையை காணவில்லை என்று தேடி படுக்கையில் இருந்து ஒரு பொம்மையை எடுத்து வந்து இதுதான் குழந்தையா என்று கோபமாக கேட்க, இல்லை நான்தான் அந்த பேபி என்கிறான் சார்லஸ்.
இவன் மேல் பைத்தியமாகிறாள் ஒருத்தி.நெல்லி என்ற அந்தப் பெண்ணின் கணவர் ஒரு டாக்டர். ஒரு ரெஸ்டாரண்டில் தன் மீதான அவள் பார்வையை அவன் கவனித்து விடுகிறான். ரெஸ்டாரண்ட்தான் பட்சிகளைப் பிடிக்க நல்ல இடம் என்பது அவன் அனுபவம். உணவுப் பரிமாற லேட்டாகும்போது கணவனால் மனைவியை ஜாலியாக வைத்துக் கொள்ள முடியாது என்பது அவன் அனுபவம். இருவரும் போரடித்து உட்கார்ந்திருப்பார்கள். அந்த பலவீனமான நேரத்தில் பெண்ணை ஈசியாக கவர முடியும் என்று அவன் முயற்சிப்பது வீண் போகவில்லை.
அவனுக்காக அவள் கணவரை சுட்டுவிட்டு ஜெயிலுக்குப் போகிறாள். அவன் அந்தக் குற்றத்தில் பங்குதாரனாகிவிட்டானா...இல்லை. அதற்கும் ட்ரூஃபாட் ஒரு விளக்கம் தருகிறார். அவள் ஏற்கனவே தனது கணவனுடன் வாழவே முடியாத எல்லைக்கு சென்றுவிட்டாள். கணவனைக் கொல்ல வேண்டும் என்று அவன் கூறவில்லை. அது அவளது உளவியல் பிரச்சினை.
அவனது சுயசரிதை நாவலில் அவன் எழுத மறந்துவிட்ட ஒருத்தியைப் பற்றி எழுத வேண்டும் என்று பதிப்பாளர் பிரிட்ஜட்டிடம் கூறும்போது அதை தனி புத்தகமாக எழுது என்று ஆலோசனை கூறுகிறாள். ஸ்கர்ட் சேசர் என்ற அவன் புத்தகத்தின் தலைப்பையும் அவள் தி மேன் ஹூ லவ்ட் உமன் என்று மாற்றியமைக்கிறாள். அவனை மிகவும் நுட்பமாகப் புரிந்துக் கொண்டவளும் அவள் மட்டும்தான். அதன் மூலம் தன்னையும் அவள்  தன் போன்ற இதரப் பெண்களையும் அவள் புரிந்துக் கொள்கிறாள்.
பிராங்கோ ட்ரூஃபாட்டின் இந்த திரைப்படம் 70 களின் பிரான்ஸ் வாழ்க்கையையும் இன்றைய இந்திய வாழ்க்கையையும் சித்தரிக்கிறது. அதனால்தான் படம் வெளியாகி 30 ஆண்டுகளாகி விட்ட போதும் இந்தப் படம் புத்தம் புதிதாக இருக்கிறது.

(( இக்கட்டுரை மே 2015 தீராநதியில் வெளியாகியுள்ளது ))

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...