Saturday 1 March 2014

ஓஷோவின் புத்தகம்





ஜப்புஜி சாகி்ப் பற்றி கேள்வி்ப்பட்டிருக்கிறீர்களா....அது சீக்கிய குருநானக்கின் புனித நூல், இதைப் பற்றி ஓஷோ எழுதினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது அமிர்தசரசி்ல் பொற்கோவிலைப் பார்க்கும் போது.
அண்மையில் டெல்லி சென்ற போது பொற்கோவில் சென்றேன். அப்போது குருநானக்கின் போதனைகளைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்தது. எங்கள் வீட்டிலேயே மிகப் பழைமையான குரு கிரந்த சாகிப் புனித நூலை பரமபரை பரம்பரையாக பாதுகாத்து வருகிறோம். அது குரு முகி எனப்படும் சீக்கிய மொழியில் எழுதப்பட்டது. அப்பாதான் அவ்வப்போது படித்து அதைப் பற்றி பேசுவார்.
எந்த ஒரு புனித நூலைப் படிக்கும்போதும் அதுபற்றி ஓஷோவின் கமெண்ட்டுகளையும் சேர்த்து நினைவு கூர்வது வழக்கமாகி விட்டது. ஓஷோ அக்குவேறாக ஆணி வேறாக பிரித்து அர்த்தம் சொல்வார் என்பதற்காக அல்ல. சில சமயம் அவர் சம்பந்தப்பட்ட புனித நூலுக்கு எதிராகவே பேசுவார். மிகவும் ஆபத்தானவர் ஓஷோ. ஆனால் பகவத் கீதை பற்றிய ஓஷோவின் கமெண்ட்ரி படித்து பிரமித்திருக்கிறேன். ஓஷோவின் ஊடுருவல்கள், இடைச் செருகல்கள் மிகவும் கவித்துவமாக அமைந்திருந்தன. பாரதப் போரின் இருபுறம் பாண்டவர்களும் கௌரவர்களும் அணிவகுத்து நிற்க சாரதியான கண்ணன் தேரை நடுவில் குறுக்கே ஓட்டி வந்து நிற்பதாக கூறும் ஓஷோ கடவுள் நன்மைக்கும் தீமைக்கும் இடையே நின்று பகவத் கீதையை உபதேசித்ததாக கூறுகிறார். இது பிரமிக்க வைக்கும் ஒரு அவதானிப்பு
இதனால் இயல்பாகவே ஓஷோ குருநானக் பற்றி எழுதியிருந்தால் அதைப் படிக்க வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டது. அந்த ஏக்கத்துடனே டெல்லியிருந்து சென்னை வந்தேன். ஆனால் மீண்டும் அடுத்த சில வாரங்களில் கோவை சென்றேன். அங்குள்ள பழைய புத்தகக் கடைக்கு போன போது எனக்காகவே அங்கு ஓஷோவின் ஜப்புஜி சாகிப் பற்றிய புத்தகம் காத்திருந்தது. அது எங்கேயாவது காத்திருக்கும் என்று எனக்கும் தெரிந்தே தான் இருந்தது.
முதல் வரி ஏக் ஓம்கார் சத்னாம் இதற்கு ஓஷோ விளக்கம் கூறுகிறார். ஓம் என்பதே முதல் மெய்மைப் பெயர் என்கிறார் நானக். சீக்கியரின் மொத்த போதனையும் இந்த ஒரு வரியில் அடங்கிவிடுகிறது என்று ஓஷோ கூறுகிறார்.
தமிழிலும் ஓம் என்று மந்திரம் முருகப் பெருமானுடன் ஒலிக்கிறது. நான் பாதி தமிழனாகவும் பாதி சீக்கியனாகவும் வாழ்வதற்கும் இந்த ஓம் என்ற மந்திரத்திற்கும் இப்போது பொருத்தத்தை தேடிக் கொண்டிருக்கிறேன்.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...