Thursday 3 April 2014

படித்ததும் பார்த்ததும்

பல புத்தகங்கள் படிக்கப்படாமல் உள்ளன. ஜனவரி தொடங்கி இன்று வரை 17 புத்தகங்கள் மட்டுமே படித்திருக்கிறேன். 36 படங்களைப் பார்த்திருக்கிறேன். படிக்க வேண்டியவை 500 பார்க்க வேண்டிய படங்கள் ஆயிரக்கணக்கில். கண்கள், பற்கள், உடல்திறன், ஊக்கம் யாவும் வயதின் காரணமாக தேய்ந்து வருகின்றன. அடுத்த சில ஆண்டுகளில் உடலைப் பற்றியே அதிகம் கவலைப்பட நேரிடும். படிப்பும் படம் பார்க்கும் ஆர்வமும் என்ன ஆகும் என்றே தெரியவில்லை. அது ஒருபுறமிருக்க எழுத வேண்டிய பக்கங்கள் பதிப்பிக்க வேண்டிய புத்தகங்கள் என மனதை அழுத்தும் சுமைகள்....

அதுமட்டுமின்றி அன்றாட வாழ்க்கையின் அழுத்தங்கள். கடன்கள், பற்றாக்குறைகள்
----------------------------------

சமீபத்தில் மீண்டும் படித்த இந்திரா பார்த்தசாரதியின் ஏசுவின் தோழர்கள் கருணையில் ஏசுவையும் மார்க்சையும் ஒரு நேர்க்கோட்டில் இணைக்க முயன்ற எழுத்து. ஆனால் சலிப்பூட்டும் நடை, கம்யூனிச வியாக்கியானங்கள், போலந்து வாழ்க்கை முறைகள் என அந்நியமாக நிற்கிறது. இ.பா.வின் இதர புத்தகங்களை பார்க்கலாம்.

------------------------

கலீல் கிப்ரான் தனது ரகசிய ஸ்நேகிதி மேரி ஹட்சனுக்கு எழுதிய ஏராளமான கடிதங்களை அவர் பாதுகாத்து வைத்திருந்தார். அதே போல மேரி எழுதிய கடிதங்களை கிப்ரான் ஒரு பெட்டி நிறைய சேர்த்து வைத்திருந்தார். கிப்ரான் மரணத்திற்குப் பிறகு கண்டெடுக்கப்பட்ட அந்த கடிதங்களை மேரியிடம் ஒப்படைத்தார் கிப்ரானின் உதவியாளர். தன்னைப் போல கிப்ரானும் கடிதங்களைப் பாதுகாத்ததை கண்டு மெய்சிலிர்த்த மேரி இருவரின் கடிதங்களையும் அச்சிட தந்து விட்டார். அப்படி அச்சான ஒரு புத்தகம்தான்
BELOVED PROPHET என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது. அதில் கிப்ரானின் வழக்கமான தெறிப்புகள் ஏராளம்....ஒரே நேரத்தில் ஒருவர் மலைச்சிகரத்தையும் அதன் பள்ளத்தாக்கையும் பார்க்க முடியுமா என்றொரு வரி....எனது உடலுறவின் ஆற்றலில் ஒரு பகுதியைத்தான் என் எழுத்தில் தருகிறேன் என்று கூறுகிறார்.தனது ஓவியங்களைப் பற்றியே அதிகமாகப் பேசுகிறார் கிப்ரான். அதுதான் அவருக்கு வருமானம் அளித்தது போலும். எழுத்தைப் பற்றி மிகச்சிறிய குறிப்புகள் உள்ளன.
மரணம் பற்றி சிந்திக்கிறார் . மரணித்துப் போனவர்கள் எங்கே போனார்கள்...நிச்சயமாக அவர்கள் எங்கேயோ இருந்துக் கொண்டுதான் இருப்பார்கள்.நம்மைப் போல அவர்கள் கடந்தகாலத்தை திரும்பிப் பார்க்க முடியுமா என கேட்கிறார்.நான் மறைந்த பிறகு எங்கே செல்வேன் என்றும் கேட்கிறார்.....
எங்கே போனாய் கிப்ரான்...?

எனக்கும் எழுந்துள்ளது இக்கேள்வி பல முறை...எங்கே போவேன்....எங்கே போனார்கள் எல்லோரும்......

இதைப்பற்றி நகுலன் எழுதியிருக்கிறார் நினைவுப்பாதையில். ஜானே வாலே லவுட்கே ஆஜா என்ற முகேஷ் பாடிய பாந்தினி படப்பாடலை வைத்து ஜானே வாலே என்ற சொல்லை மீண்டும் மீண்டும் பயன்படு்த்தினார் நகுலன்.

போகிறவர்கள் எங்கே போனார்கள்...என்ன ஆனார்கள்.....

கயிற்றரவு கதையில் புதுமைப்பித்தன் கேட்ட அதே கேள்விதான்.
----------------------------
பார்த்த திரைப்படங்களில் கிம் குக் டுக்கின் தி ஐசல் என ஒரு படம், ஜான் தாரா என்ற காமக்களியாட்ட படம் போன்ற படங்கள் பட்டியலிட்டு பேசலாம் என்றாலும் மனதுக்குள் நிற்பதென்னவோ பழைய ஆயிரத்தில் ஒருவன்தான். எம்ஜிஆரின் வாள்வீச்சு, ஜெயலலிதாவின் நடனம், பந்தலுவின் சலிப்பு தராத இயக்கம், நாகேஷின் மயக்கும் நகைச்சுவை, கண்ணதாசன் வாலியின் பாடல்கள் மெல்லிசை மன்னர்களின் இசை, ஆர்.கே.சண்முகத்தின் அற்புதமான வசனங்கள் என ஆயிரத்தில் ஒருவன் படத்தின் சிறப்புகள் ஏராளம்.
ஒரு வசனம்- உங்கள் அதிகாரம் என்ன சிலப்பதிகாரமா நிரந்தரமாக நீடிப்பதற்கு....இந்த வசனம் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் சரியான அடி.. ஜெயலலிதாவின் அகங்கார ஆட்சிக்கும் சேர்த்துதான்











1 comment:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...