Sunday 28 January 2018

பயணம் -புனே

புனே நகருக்கு சிலமுறை ஏற்கனவே சென்றிருக்கிறேன். இம்முறை கடந்த 2017 டிசம்பர்மாதம் இறுதியில் போன போது 14 ஆண்டுகள் இடைவெளி ஆகி விட்டது.புனே நிறைய மாறிவிட்டது. ரயில் நிலையம் அருகே நான் எதிர்பாராமல் ஒரு பாலம் முளைத்திருந்தது. 20 ரூபாய்க்கு போவா எனப்படும் அவல் உப்புமா அன்று ருசித்த  அதே ருசியில் கிடைத்தது. மலாய் போட்ட அற்புதமான டீயும் ரயில் நிலையம் எதிரே இருந்த ஒரு கடையில் கிடைத்தது.
அங்குள்ள உறவினர் ஒருவரின் இல்லத்திற்கு போனோம். புனேயைஏரியல் வியூவில் பார்க்கும்படி 11 வது மாடியில் குடியிருப்பு. சில ஷாப்பிங் மால்கள் அழைத்துப் போனார்கள். பீனிக்ஸ், சீசன்ஸ் போன்ற மால்களில் நான் தேடிய இந்திய டிவிடிக்கள் கிடைக்கவில்லை. பழைய பாடல்கள் ஆடியோ சிடிக்கள் மூன்று 100 ரூபாய்க்கு கிடைத்தன.
பின்னர் காரில் சதாராவுக்குப் பயணம். சதாரா புனே-கோவா நெடுஞ்சாலையில் வருகிறது. மலையைக் கடந்து போக வேண்டும். சுமார் ஒன்றரை மணி நேரம் பிறகு சதாராவை அடையலாம். வழியில் உள்ள உணவத்தில் அசைவ உணவு ஓரளவு தரமாக இருந்தது.
சதாரா அருகே தான் அன்னா ஹசாரே வசிக்கிறார். அவரை சந்திக்கும் ஆவல் இருந்த போதும் நேரம் இருக்கவில்லை. மராத்தி தொலைக்காட்சித் தயாரிப்பாளர் ஒருவரின் படப்பிடிப்பை சிறிது நேரம் பார்த்து விட்டு திரும்பி விட்டேன்.
மறு நாள் ஓஷோ கம்யூனுக்கு போக வேண்டும் என்று திட்டமிட்டு காலை 9 மணிக்குள் அங்கு ஆட்டோ பிடித்து போய் சேர்ந்துவிட்டேன். மூங்கில் காடுகளுடன் மணம் வீசும் பிரதேசமாக இருந்தது.
ஆனால் ஓஷோவின் ஆசிரமத்தில் உள்ளே நுழைய அனுமதி இல்லை. தியான குழுவில் சேர கிட்டதட்ட  2 ஆயிரம் ரூபாய்வரை கட்டணம் என்றார்கள் சுத்திப் பார்க்க முடியாத இரும்புக்கோட்டையாகிவிட்டது அந்த இடம். நான் ஓஷோவின் 5 நூல்களை மொழிபெயர்த்தவன் என்று கூறியது எதுவும் பலன் தரவில்லை.மீண்டும் ஆட்டோவுக்கு செலவழித்து திரும்பியதுதான் மிச்சம். இனி ஓஷோ கம்யூன் செல்லமாட்டேன், அவர் புத்தகங்களையும் படித்து கழித்துக் கொண்டிருக்கிறேன் .சேமிக்கும் எண்ணமில்லை. ஓஷோவே சொன்னது போல் கடந்து செல்லும் மனநிலைக்கு வந்துவிட்டேன். நிறுவனமயாக்கப்பட்ட எதன் மீதும் எதன் பொருட்டும் நம்பிக்கை வைப்பது சிறுவயதில் இருந்தே எனக்குப் பிடிக்காதது.காவி உடை அணிந்து தியானம் செய்தால்தான் நான் ஓஷோவைப் புரிந்துக் கொண்டதாக  அர்த்தமில்லை. இதெல்லாம் ஒரு ஜோக்குதான் என்று அவரே கூறியிருக்கிறார்.
பின்னர் புனேயின் மூர்மார்க்கெட் போன்ற ஜூனா பஜார் பக்கம் போனேன்.அங்கு ஞாயிறு மற்றும் புதன்கிழமையன்று சந்தை கூடுமாம். எல்லாப் பொருட்களும் மலிவாகக் கிடைக்கும் என்றார்கள். நான் போனதோ திங்கட்கிழமை. அங்கு இருந்த சில கடைகளில் சுற்றிய போது கிராமப்போன்களும் பழைய இசைத்தட்டுகளும் லதா மங்கேஷ்வர், முகமது ரபி, முகேஷ் போன்றோரின் பிரேம் போட்ட கருப்பு வெள்ளை புகைப்படங்களும் கண்டேன்.வாங்க ஆர்வம் இருந்தாலும் வீட்டில் இடம் நெருக்கடியாக உள்ளதால் தவிர்த்துவிட்டேன்.
பின்னர் புதுவார்ப்பேட்டை பஜாரில் சுற்றி ரயில் நிலையம்செல்ல ஆட்டோ பிடித்த போது ஒரு சிறிய பகுதிக்குள் நுழைந்தது. சுக்கரவார்ப்பேட்டை என்று நினைக்கிறேன் .அங்கு வழிநெடுக பெண்கள்  அரைகுறையாக நின்று பாலியல் தொழிலுக்கு ஆள் பிடித்துக் கொண்டிருந்தனர். ஒரு தமிழ்ப்பெண்ணையும் கண்டேன். அப்பட்டமாக அவர்முகத்தில் தமிழ ச்சி சாயல் இருந்தது. பரிதாபம், அச்சம், காமம் என பல்வேறு உணர்சசிகளுடன் அல்லாடியபடியே ரயிலேறி சென்னைக்குத் திரும்பும் வரை அந்தப் பெண்களின் உடல்களும் முகங்களும் மிகவும் சலனப்படுத்திக் கொண்டே இருந்தன.




No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...