Tuesday 12 December 2017

அஞ்சலி -சசிகபூர்

அஞ்சலி
இரண்டாம் நாயகன் - சசிகபூர்
செந்தூரம் ஜெகதீஷ்

இளம் பள்ளிப்பருவத்தில் சினிமா ஆசைகள் துளிர்விட்ட காலம் அது. தர்மேந்திரா நடித்த அதிரடி சண்டைக்காட்சிகளுடன் மெல்லிய மீசை முளைத்த  பதின் பருவத்தில் காதல் காட்சிகளுடன் கூடிய இளமையான இந்திப்படங்களையும் ரசிக்கப் பழகியிருந்தேன். ஆனால் திருச்சியில் இருந்து சென்னை குடியேறி வந்து இந்திப்படங்களைப் பார்ப்பதே அரிதினும் அரிதாகி விட்டது. காரணம் தமிழ்ப்படங்களை குறைந்த கட்டணத்தில் ராக்சியிலோ புவனேசுவரியிலோ மேகலாவிலோ பார்த்துவிடலாம். ஆனால் இந்திப்படங்களைப் பார்க்க தேவி தியேட்டருக்குத்தான் போக வேண்டும். தேவி பாரடைசில் இந்திப்படங்கள் போடுவார்கள். ஆனால் பால்கனி டிக்கட் 2 ரூபாய் 90 காசுகள், பேருந்து வழிச்செலவு எல்லாம் சேர்த்தால் குறைந்தது ஆறு ஏழு ரூபாய் இருந்தால்தான் பார்க்க முடியும். எங்கள் பட்ஜெட் 40 காசுகள் தந்து சரஸ்வதியில் குறத்தி மகன் பார்ப்பதுடன் திருப்தி அடையும். எம்ஜிஆர் சிவாஜி படங்களுக்கு 50 நாட்கள் கழித்துதான் குறைந்த விலையில் டிக்கட் கிடைக்கும். அப்போது சவுகார்ப்பேட்டை வட இந்தியர்களை நம்பி சால்ட் குவார்ட்டர்ஸ் நடராஜாவிலும் தற்போது நேரு ஸ்டிடேயம் உள்ள இடத்திற்கு எதிரே முன்பு இருந்த அசோக் தியேட்டரிலும் (( பின்னர் சிவசக்தி என்று பெயர் மாறியது)) செகன்ட் ரன் எனப்படும் இரண்டாம் சுற்றுக்கு இந்திப் படங்களைத் திரையிடுவார்கள். அதைப் பார்க்க ஓடுவோம்.
அப்போது அறிமுகமான நடிகர்தான் சசிகபூர். கபி கபி,  தீவார் போன்ற அமிதாப் படங்களில் இரண்டாம் கதாநாயகனாக வந்து மனதைக் கவர்ந்த அந்த மென்மை மிக்க முகம் மறக்கமுடியாத வகையில் பதிந்து விட்டது. அவருடைய காந்தக் கண்கள், புன்னகைக்கும் உதடுகள், சிவந்த நிறம், கோட்டு சூட்டு அணியும் போது எந்தப் பெண்ணும் ஆசை கொள்ளச் செய்யும் பேரழகு என இந்திப்பட உலக எம்ஜிஆர் போலத்தான் இருந்தார் சசிகபூர். 
பல படங்களில் இரண்டாம் நாயகனாகவும் ஷர்மிளி, ஃபகீரா, ஜப் ஜப் ஃபூல் கிலே , சத்யம் சிவம் சுந்தரம், போன்ற படங்களில் அவர் முதல் நாயகனாகவும் நடித்திருந்தார். ஏற்ற வேடத்திற்கு வஞ்சகம் செய்யாமல் தமது முதிர்ந்த நடிப்பால் மனநிறைவை தந்த நடிகர் அவர்.
தீவார் படம் அவருக்கு மிகப்பெரிய அறிமுகம் தந்த படம். இயக்குனர் யஷ் சோப்ராவின் இந்தப் படத்தின் கதை வசனகர்த்தாக்கள் சலீம்-ஜாவேத். சலீம் நடிகர் சல்மான் கானின் அப்பா. ஜாவேத் இன்றும் முக்கியமான பாடலாசிரியர். அப்படத்தில் அமிதாப்பை சூப்பர் ஸ்டாராக்கிய வசனங்கள் ஏராளமாக இருந்தன. ஆனால் சசிகபூருக்காவும் ஒரு வசனம் எழுதப்பட்டது. அந்த வசனம் அமிதாப்பின் அத்தனை வசனங்களையும் தூக்கி சாப்பிட்டு விட்டது. அண்ணன், தம்பியாக நடித்த சசிகபூரும் அமிதாப்பும் பிரிந்துவிடுவார்கள். அமிதாப் கள்ளக் கடத்தல் கோஷ்டியுடன் சேர்ந்து நிறைய பணம் சம்பாதிப்பார். சசிகபூர் தனது ஏழைத்தாயுடன் நேர்மை தவறாத ஒரு போலீஸ் அதிகாரியாக வருவார். ஒரு கட்டத்தில் அமிதாப் தனது அண்ணன் மற்றும் தாயை அடையாளம் கண்டு தம்முடன் வந்து வாழும் படி அழைப்பார். அம்மா மறுத்துவிடுவார். கறை படிந்த உனது சொர்க்கம் வேண்டாம் எனது இந்த சின்ன வீடு எனக்கு சொர்க்கம் என்று அந்த அம்மா கூறுவார். அப்போது சசிகபூருக்கும் அமிதாப்புக்கும் கடும் வாக்குவாதம் நடைபெறும். என்னிடம் கார் இருக்கிறது, பங்களா இருக்கிறது. பணம் இருக்கிறது.சேவை செய்ய சேவகர்கள் இருக்கிறார்கள் உன்னிடம் என்ன இருக்கிறது என்று அமிதாப் வெடித்து எகிற அமைதியாக ஒற்றை வசனத்தில் சசிகபூர் அமிதாப்பை எதிர்கொள்வார் " என்னிடம் அம்மா இருக்காங்க"
சசிகபூரின் பண்பட்ட நடிப்புக்கு உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். கபி கபியில் தனது மனைவியின் முன்னாள் காதலை அறிந்த கணவனாக அதைக் காட்டிக் கொள்ளாமல் மனைவி மீது அளவற்ற பிரியம் செலுத்துபவராக நடிக்க சசிகபூரால் முடிந்தது. அந்த கதாபாத்திரத்தின் அற்புதம் சொல்லில் அடங்காதது. இதே போன்று மனோஜ் குமார் நடித்து இயக்கிய ரோட்டி கப்டா மக்கான் படத்திலும் சசிகபூர் மனோஜ்குமாரின் காதலியான ஜீனத் அமனை பணத்தால் கவர்ந்து நிச்சயம் செய்யும் காட்சியில் ஜீனத் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிக்கும் போது சசிகபூரி்ன் ஆளுமை இவர் கதாநாயகன்-நாயகி இடையே வந்த வில்லன் அல்ல இரண்டாம் நாயகன்தான் என்று எண்ண வைக்கும்.
இரண்டாம் இடத்தில் இருப்பதில் வலி உள்ளது .மகாபாரதத்தில் அந்த வலி பீமனுக்கு இருந்ததை எம்.டி.வாசுதேவன் நாயரின் நாவல் சித்தரித்தது. அரசியல் கட்சிகளில் இரண்டாம் இடங்களில் இருப்பவர்களை கேட்டால் சொல்வார்கள். எத்தனை அவமானங்களையும் வலிகளையும் அவர்கள் சுமந்துக் கொண்டிருக்கிறார்கள் என்று. ஆனால் சினிமாவில் பெரும்பாலான படங்களில் இரண்டாம் நாயகனாகவே நடித்த சசிகபூருக்கு அந்த வலி இல்லை. மாறாக அவருடைய பாத்திரங்கள்தாம் ரசிகர்களின் மனங்களில் தீராத இன்பத்தையும் வலியையும் ஒருசேர ஏற்படுத்தின.
சசி கபூருக்கு சினிமா மீது அதீத காதல் இருந்தது போலவே நாடகத்திலும் பெரும் ஈடுபாடு இருந்தது. ஒருபுறம் வணிக ரீதியான வெற்றிப் படங்களில் கனவானாக அவர் வந்தாலும் மறுபுறம் வித்தியாசமான பாத்திரங்களிலும் அவர் நடித்தார். ஷியாம் பெனகலின்  ஜூனூன், இஸ்மாயில் மெர்ச்சன்ட் இயக்கிய ஹீட் அண்ட் டஸ்ட், அபர்ணா சென் இயக்கிய 36 சவுரங்கி லேன் போன்ற படங்களில் வித்தியாசமான சசிகபூராக அவதாரம் எடுத்தார். ஹெர்மன் ஹெஸ்ஸேயின் புகழ் பெற்ற நாவலை படமாக எடுத்த அவர் தாமே இயக்கிய சித்தார்த்தா என்ற அந்தப் படத்தில் இந்திய சினிமாவின் முழு நிர்வாணக் காட்சியையும் படமாக்கினார்.
பலத்த கண்டனங்கள், விமர்சனங்களை மீறி கலைக்கு ஆபாசம் என்பதே காண்பவர் பார்வையில்தான் என்று வாதாடினார். நடிகை சிமி துணிச்சலுடன் அந்த நிர்வாணக்காட்சியில் முழு உடலில் ஒட்டுத் துணியில்லாமல் நடித்திருந்தார்.
சசிகபூர்  நடிகரும் இயக்குனருமான ராஜ்கபூரின் இளைய சகோதரர். தமது தந்தை பிருத்வி ராஜ் கபூருடன் பல நாடகங்களிலும் அவர் பணியாற்றினார். திரைப்பட பாரம்பரியம் மி்க்க கபூர் குடும்பத்தின் ஒளிவிளக்காக விளங்கினார் சசிகபூர் , ஷம்மி கபூருக்கு வயது அதிகமாகி உடல் பருக்க தொடங்கிய நிலையில் சசிகபூரே ரோமாண்டிக்கான பாத்திரங்களுக்கு வெகுவாகப் பொருந்தினாார். பின்னாளில் சசிகபூருக்கும் அதே போன்ற பிரச்சினைகள் உருவான போது பாபியில் அறிமுகமான ராஜ்கபூரின் மகன் ரிஷிகபூர் அந்த இடத்தைப் பூர்த்தி செய்தார். இன்று ரன்பீர் கபூர் வரை அந்த நடிப்பு பாரம்பரியம் தொடர்கிறது.
பத்மபூஷண், தாதாசாகேப் பால்கே விருது போன்ற உயரிய கௌரவங்களைப் பெற்றுள்ள சசிகபூர் பலமாதங்களாக நோய் காரணமாக சக்கர நாற்காலியில் தான் காட்சியளித்தார். வயது முதிர்ந்த நிலையிலும் அவரை யாராலும் ஒதுக்கி விட முடியவில்லை. வீடு தேடி அவருக்கு தேசிய விருதுகளை மத்திய அரசு வழங்கியது.

தமது 79வது வயதில் சசிகபூர்  டிசம்பர் 4ம் தேதி மாலை 5.50 மணியளவில் காலமாகி விட்டார். இவர் மறைவு திரையுலகின் மிகப்பெரிய வெற்றிடம் என்று இரங்கல் செய்திகள் குவிகின்றன. வழக்கமான சம்பிரதாயமான இரங்கல் சொற்கள்தாம். ஆனால் அவை சிலருக்கு மட்டுமே மிகப் பொருத்தமானவையாக மாறுகின்றன. சசிகபூர் அத்தகைய மேன்மை மிக்க மனிதர்.
சசி கபூர் இல்லாத சினிமா எப்படி இருக்கும் என்று இன்றைய தலைமுறைக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் சசிகபூர் இல்லாத சினிமா எப்படி இருந்திருக்கும் என்று அவரை ரசித்த என்போன்ற நடுத்தர வயது ரசிகர்கள் கற்பனை கூட செய்ய முடியாது. அழகான அந்த முகமும் புன்னகையும் நினைவில் என்றும் சிரித்துக் கொண்டே நிழலாடிக் கொண்டிருக்கும்.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...