உலக சினிமா -கலை உழைக்கும் மக்களுக்கே

ஆந்திராய் தார்க்கோவஸ்கியின்
THE STREAMROLLER AND THE VIOLIN
குமுதம் தீராநதி நவம்பர் 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை....உலக சினிமா  
ஆந்திராய் தார்க்கோவஸ்கி யின் திரைப்படம்
STREAM ROLLER AND THE VIOLIN ( Russia)
கலை என்பது உழைக்கும் மக்களுக்காகவே...
செந்தூரம் ஜெகதீஷ்


கலை கலைக்காக என்றும் கலை மக்களுக்காக இரு அணிகளாக அறிவாளிகள் திரண்ட காலம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தது. சோவியத் புரட்சி நிகழ்ந்ததையடுத்து முதலாளித்துவ கலையை ஒழிப்பதில் கம்யூனிஸ்ட்டுகள் குறியாக இருந்தனர். மார்க்ஸ், ஏங்கெல்ஸ் பாதையை பின்பற்றிய லெனின் மக்கள் கவிஞனாக அறியப்பட்ட புரட்சிக் கவிஞன் மாயகோவஸ்கியை விடவும் புஷ்கின் கவிதைகள் தரமானவை என்று அபிப்ராயம் கொண்டிருந்தார். இது கம்யூனிஸ்ட்டுகளுக்கு அதிர்ச்சியளித்தது. காரணம் புஷ்கினை அவர்கள் பூர்ஷ்வா என கருதியிருந்தனர். 
கலையில் வர்க்க பேதத்தை புகுத்துவதில் லெனினுக்கு இருந்த தயக்கம் அவரது நெருங்கிய சகாக்களான ஸ்டாலினுக்கும் டிராட்ஸ்கிக்கும் இருக்கவில்லை. கலையை ஆடம்பரமான செல்வந்தர்களின் பொழுதுபோக்காகவே அவர்கள் கருதினார்கள். மாக்சிம் கார்க்கி போன்ற கலைஞர்களால் மக்களுக்காகவும் கலையை படைக்க முடியும் என்ற புதிய சிந்தனை ஊற்றெடுத்தது. தல்ஸ்தோய் போன்ற மகா கலைஞர்களையும் கூட கம்யூனிஸ்ட்டுகளின் ஒருசாரார் நிராகரித்தனர். அந்தோன் செக்காவ் , மைக்கேல் ஷோலக்கோவ் போன்ற கலைஞர்கள் மக்களின் பக்கம் நிற்பதாக மரியாதை செலுத்தினர். கவிதை, சிறுகதை, நாவல் போன்ற இலக்கியத் துறைகளுக்கே கம்யூனிஸ்ட்டுகளின் அங்கீகாரம் கிடைப்பதற்கு கடுமையான அக்னிப்பரீட்சை நிகழ்ந்த இக்காலத்தின் தொடக்கத்தில் சினிமா என்ற காட்சி ஊடகமும் ஐரோப்ப நாடுகளின் தாக்கத்தால் ரஷ்யாவில் புத்தெழுச்சி பெற்றது. செர்கய் ஐசன்ஸ்டினின் போர்க்கப்பல் போட்டம்கின், கார்க்கியின் தாய் போன்ற படைப்புகள் சினிமாவாக  வடிவமெடுத்து சோசலிச சோவியத் ரஷ்யாவின் சினிமாவை உலகத்தரத்துக்கு உயர்த்தின.
இத்தகைய சூழலில் தான் ஆந்திராய் தார்க்கோவஸ்கி சினிமா உலகில் அடியெடுத்து வைக்கிறார்.1917 ரஷ்ய புரட்சிக்குப் பிந்தைய சோசலிச ரஷ்யாவில் லெனினின் மறைவுக்குப் பின்னர் ஸ்டாலின் அதிகாரத்தை கைப்பற்றியிருந்தார். மக்களுக்காக இயங்காத, கம்யூனிஸ்ட் கட்சியில் சேராத கலைஞர்கள் மீது கடுமையான வன்முறை கட்டவிழ்க்கப்பட்டிருந்தது. மென்மையான கலைஞர்கள் தலைமறைவாகவும் நாடு கடத்தப்பட்டும் தனிமைப்படுத்தப்பட்டும் வாழ்ந்து வந்தனர். 1932ம் ஆண்டில் பிறந்த தார்க்கோவஸ்கியின் நிலைமை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். 


அவருடைய பால்ய காலத்தின் போது இரண்டாம் உலகப் போர் மூண்டது. இதில்அவர் தந்தை உடல் உறுப்புகளை இழந்தார். பின்னர் அவர் மறைந்தார். இந்த இரண்டு சமூக, தனிப்பட்ட நிகழ்வுகள் தார்க்கோவஸ்கியின் பால்ய காலத்தை வெகுவாக பாதித்ததை அவருடைய திரைப்படங்கள் பிரதிபலித்தன.
திரைப்படங்கள் குறித்த கல்வி வளர்ந்து வந்த நேரம் அது. பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு சினிமாவை பயிற்றுவித்த வந்த மைக்கேல் ரோம் என்பவருடன் தார்க்கோவஸ்கி சினிமா கலையை பயின்றார். மாஸ்கோவில் குடிபுகுந்ததால் நிறைய திரைப்படங்களையும் பல திரைப்பட மேதைகளையும் சந்தித்து பேசும் வாய்ப்பை தார்க்கோவஸ்கி பெற்றார். 
1953ம் ஆண்டில் ஸ்டாலின் மறைந்த பிறகு கலைஞர்கள் மீதான கெடுபிடிகள், இறுக்கங்கள் தளர்த்தப்பட்டன. முதலில் இலக்கியமும் பின்னர் சினிமாவும் சுதந்திரமான வெளிக்கு வந்தனர். ஆனால் அதற்குள் படங்களை இயக்கத் தொடங்கி விட்ட ஆந்திராய் தார்க்கோவஸ்கிக்கு அவமதிப்புகள் ,புறக்கணிப்புகள் நிகழ்ந்தன. 1990ம் ஆண்டு கோர்பசேவின் புதிய அரசியல் பாதைகளால் சோவியத் யூனியனின் இறுகிய கட்டுமானம் நொறுங்கத் தொடங்கியது. அப்போது ஐரோப்பாவிற்கு குடிபெயர்ந்துவிட்ட ஆந்திராய் தார்க்கோவஸ்கியின் திரைப்படங்கள் முதன் முதலாக ரஷ்யாவில் மக்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் அறிவாளிகள் மத்தியில் விவாதிக்கப்பட்டன. கோர்பசேவ் அரசும் தார்க்கோவஸ்க்கிக்கு லெனின் நினைவுப் பரிசை வழங்கி சினிமாவுக்கு அவர் அளித்த பங்களிப்புக்கு கௌரவம் அளித்தது. அதுவரை ஒரே ஒருமுறை மட்டுமே அவரை அவர் தாய்நாடு அங்கீகரித்தது. 
தமது வயதான காலத்தி்ல் நோய்வாய்ப்பட்ட நிலையில் தமது படங்களுக்கு ரஷ்யாவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருப்பதை அறிந்து அவர் நாடு திரும்ப வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதனை ஏற்க தார்க்கோவஸ்கி மறுத்து விட்டார்.
" உயிருடனோ பிணமாகவோ நான் என் தாய்நாட்டிற்கு திரும்ப விரும்பவில்லை, அத்தனை அவமானமும் புறக்கணிப்பும் வலியும் வேதனையும் அந்நாட்டு  மக்கள் எனக்கு அளித்திருக்கிறார்கள், நான் என்னை ரஷ்யன் என்று உலக அரங்கில் சொல்லிக் கொண்டாலும் சோவியத் யூனியனைச் சேர்ந்தவன் என்று ஒருபோதும் சொல்ல விரும்பவில்லை" என்று கூறினார் தார்க்கோவஸ்கி.
தார்க்கோவஸ்கியின் இவானின் குழந்தைப் பருவம் போன்ற புகழ் பெற்ற திரைப்படங்களுடன் மிகவும் அதிகமான கவனம் பெற்ற படம் ஸ்ட்ரீம் ரோலர் அண்ட் தி வயலின் என்ற குறும்படம். ஆம் இது ஒரு குறும்படம் தான். ஆனால் 47 நிமிடங்கள் ஓடக்கூடிய மிக நீளமான குறும்படம் அல்லது மினி திரைப்படம் என்று இதனை அழைக்கலாம்.1961ம் ஆண்டில் இதனை இயக்கினார் அவர்.
தார்க்கோவஸ்கியின் திரைப்படங்கள் கவித்துவ அழகும் காட்சியின் அழகும் பெற்றவை. கலை மரணத்திற்காக மனிதனை தயாரிக்க வேண்டும் என்று அவர் கருத்து கொண்டிருந்தாலும் வாழ்க்கையின் மீதும் அதன் அழகியல் மீதும் வெகுளியான மனிதர்கள் மீதும் உழைக்கும் வர்க்கம் மீதும் குழந்தைகள் மீதும் அவர் அலாதியான பிரியம் கொண்டிருந்தார். அதை தமது திரைப்படங்களில் பதிவு செய்ய அவர் தவறவில்லை. வாழ்க்கையை ஒரு கனவு போல் தமது படங்களில் சி்த்தரித்தார் ஆந்திராய் தார்க்கோவஸ்கி என்று மற்றொரு உலகப் புகழ் பெற்ற இயக்குனரான இங்மர் பெர்க்மென் பாராட்டியுள்ளார்.
குழந்தைகளுக்காக தார்க்கோவஸ்கி இயக்கிய படம் இது. சாலையில் தாரை போட்டு அதன் மீது ஸ்ட்ரீம் ரோலரை ஓட்டி சமன்படுத்தும் உழைப்பாளி ஒருவனுக்கும் வயலின் கற்றுக்கொள்ள இசைப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படும் ஏழு வயது சிறுவனுக்கும் ஏற்படும் நட்புதான் இதன் மையம்.
தந்தை இல்லாத அந்த சிறுவன் தாயால் வளர்க்கப்படுகிறான்.
வயலினுடன் இசைப்பள்ளிக்குச் செல்லும் சிறுவன் சாஷாவை டீசிங் செய்யும் பெரிய பையன்களிடமிருந்து சாஷாவை மீட்டு தோழமை கொள்கிறான் செர்கய். இவன் ஸ்ட்ரீம் ரோலர் ஓட்டுவதைப் பார்த்து தமக்கும் கற்றுக் கொடுக்குமாறு சிறுவன் கேட்க, செர்கய் அவனுக்கு ஸ்ட்ரீம் ரோலரின் தொழில்நுட்பங்களை கற்றுத் தருகிறான், பதிலுக்கு செர்கய் தன் உழைப்பின் களைப்பை மறக்க சாஷா அவனுக்காக வயலின் வாசிக்கிறான், 
கையில் கிரீஸ் கரையுடன் வீடு திரும்பும் சாஷாவை தாய் அதட்டுகிறாள். செர்கயுடன் தமது மகன் பழகுவதைஅவள் விரும்பவில்லை. முரட்டுத்தனமான தொழிலாளிகள் யாவரும் தீயவர்கள் என்பது அவள் எண்ணம். ஆனால் சாஷாவுக்கோ தந்தை இல்லாத தனது தனிமையைப் போக்க வந்தவன்தான் அந்த தொழிலாளி. தொழிலின் மீது சாஷாவுக்கு ஏற்படும் ஆர்வம் ஒரு மழைக்காலத்தில் படமாக்கப்படுகிறது. இடிந்த ஒரு கட்டடத்தை இரும்பு குண்டு கொக்கியில் வைத்து தாக்கி இடித்து நொறுக்கும் காட்சியை பரவசத்துடன் பார்க்கிறான் சாஷா. மனித உழைப்புதான் மாட மாளிகைகளை உருவாக்குகிறது. உலகை படைக்கிறது என்ற சிறுவயது முதலே உழைக்கும் வர்க்கத்தின் மீது சாஷாவுக்கு ஈர்ப்பு ஏற்பட இக்காட்சி உதவுகிறது. இக்காட்சியும் ஆந்திராய் தார்க்கோவஸ்கியின் கவித்துவமான கனவே போன்ற சினிமா மொழியில் மழை மழை ஈரம் படிந்த மணல், மணலில் தெரியும் சூரிய ஒளி, புறாக்களின் பறத்தல் , சிறுவனின் பிம்பம் என காட்சி வழியாக கவிதைகளைக் கொட்டிக் கொண்டே செல்கிறது.
தனது புதிய நண்பனுடன் சினிமா பார்க்க சாஷாவிரும்புகிறான். ஆனால் தாய் அவனை  செர்கயுடன் சினிமாவுக்கு செல்ல அனுமதிக்கவில்லை. சாஷாவுக்காக திரையரங்க வாசலில் காத்திருக்கும் செர்கய்க்கு குழந்தை வரவில்லை என்ற கவலை தோய்ந்திருக்க புதிதாக முளைத்த இளம் பெண் ஒருத்தி ஸ்நேகமாகிறாள். தனக்கும் அந்தப் படத்தைப் பார்க்க ஆர்வம் என அவள் அழைக்க அரை மனத்துடன் சாஷாவை தேடும் விழிகளுடன் செர்கய் தன் புதிய  தோழியுடன் படம் பார்க்க போகிறான். வீட்டில் தனியாக அடைபட்டிருக்கும் சாஷா கண்கலங்குகிறான், அவன் கண்ணீர் கண்ணாடி திரையில் நீர்பிம்பங்களாக காட்சிவடிவத்தை கலங்கடிக்கிறது. அப்போது கனவு போன்றதொரு காட்சியில் செர்கயின் ஸ்ட்ரீம் ரோலரை நோக்கி சாஷா ஓடிக் கொண்டிருக்க திரைப்படம் நிறைவு பெறுகிறது.


கலை கடைசியாக சேர வேண்டியது உழைக்கும் மக்களுக்குதான் என்ற குறியீட்டுத் தன்மையுடன் படம் முடிகிறது.
தந்தை இல்லாத குழந்தைக்கு தந்தை போல் பாசத்தையும் உழைப்பையும் கற்றுத் தந்த ஒரு இளைஞனுடனான நட்பைத் துண்டித்து அந்த குழந்தையின் இளம் பருவக் கனவுகளைக் கலைத்து விட்ட தாய் குழந்தையின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளவில்லை. அந்த ஏக்கம் சாஷாவின் கண்களில் இருந்து வயலின் இசை வரை நம்மை உறுத்துகிறது.
இந்தப் படத்துக்கு அமோகமான பாராட்டுகள் உலக அளவில் கிடைத்தன.தார்க்கோவஸ்கியின் கைவிரல் ரேகைகள் படம் முழுவதும் பதிவாகி இருப்பதாக விமர்சகர்கள் எழுதினார்கள். மனித சுபாவம் மற்றும் சூழலை மையமாகக் கொண்ட கவித்துவமான திரைப்படம் என்று பாராட்டினார்கள். தமது படங்களில் நாடகத்தன்மையான காட்சிகள்இருக்க வேண்டுமே தவிர இலக்கியப் படைப்பு போன்ற அடர்த்தியோ ஆழமோ தேவையில்லை என்று கருதியவர் தார்க்கோவஸ்கி. இலக்கியம் வேறு சினிமா வேறு என்று அவர் நினைத்திருக்கலாம். இப்படத்தின் காட்சிகள் நீண்ட டேக்குகளாக இருப்பதை சில புகழ் பெற்ற இயக்குனர்கள் விமர்சித்தனர். ஆனால் ஆந்திராய் தார்க்கோவஸ்கி அவர்களுக்கு கூறிய பதில் இது...
இயல்பான அளவு கொண்ட ஒரு காட்சியை சற்று நீட்டித்தால் போர் அடிக்கும் என்பது உண்மைதான். ஆனால் இன்னும் சிறிது நேரம் நீட்டித்தால் அதில் ஆர்வம் ஏற்படும். இன்னும் சற்று நேரம் நீட்டித்தால் அது புதிய பரிமாணத்தை எட்டி விடும். அனைவரின் கவனமும் அதன் மீது திரும்பி விடும் என்று அவர் கூறிய விளக்கம் ஷாட் ஷாட்டாக பட்டாசு போல் வெட்டி வெட்டி பாய்ந்தோடும் இன்றைய திரைப்படங்களுக்கு எதிரானது. இன்றைய இயக்குனர்கள் பாடல் காட்சிகளில் கூட ஒரு குளோசப்பையும் வைப்பதில்லை. சில நொடிகள் சஸ்டெய்ன் பண்ணக்கூடிய ஷாட்டுகளை வைப்பதி்ல்லை .மனித உணர்ச்சியை விடவும் தொழில்நுட்பம் ஆட்டிப்படைக்க வேண்டும் என்று இன்றைய இயக்குனர்கள் கருதுகிறார்கள். அதனால்தான் படத்தை விட்டு வெளியே வந்ததும் நடிகர்களின் முகம் கூட நமக்கு மறந்துப் போகிறது. ஆனால் சாஷா போன்ற ஒரு சிறுவனை பழைய படத்தில் நாம் சந்திக்க நேரும் போது அந்த முகமும் அவன் விழிகளும் அதில் தேக்கிய கண்ணீரும் கனவும் நம் நினைவை விட்டு அகலுவதே இல்லை.  UNSENTIMENTEL LYRICSM என்று இதனை ஆங்கிலத்தில் கூறுகிறார்கள். 
வாழ்க்கையும் பலநேரங்களில் இப்படித்தான் ஒரு உணர்ச்சியற்ற கவித்துவம் போல் காட்சிளிக்கிறது.

Comments

Popular posts from this blog

வாசிக்க வேண்டிய புத்தகங்கள்- டாப் டென் தமிழ்

எம்ஜிஆர்- மூன்றெழுத்து மந்திரம்

ஓஷோவும் ஜெயமோகனும்