புதையல் -புதுமைப்பித்தன் கதைகள்

புதையல்
செந்தூரம் ஜெகதீஷ்
1. புதுமைப்பித்தன் கதைகள்


(( கல்வெட்டு அக்டோபர் 2016 இதழில் வெளியான எனது கட்டுரை ))காலத்தால் அழியாத படைப்புகள் மூலம் தமிழ் இலக்கியத்தை உலகத்தரத்துக்கு உயர்த்திய படைப்பாளி புதுமைப்பித்தன். 1906ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி சொக்கலிங்கம்-பர்வதம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்த சொ.விருதாசலம்  கூத்தன் ,நந்தன் போன்ற பல பெயர்களில் கதைகள், கட்டுரைகள் எழுதி வந்தாலும் அவரே கூறியது போல் அமெரிக்காவின் விளம்பரத்தன்மை வாய்ந்த புதுமைப்பித்தன் என்ற பெயரை சூடிக் கொண்ட பிறகுதான் கவனம் பெற்றார்.
பல ஊர்களுக்கு மாற்றலான புதுமைப்பித்தனின் பெற்றோர், கடலூருக்கு அருகில் இருந்த திருப்பாதிரிப்புலியூரில் இருந்தபோதுதான் புதுமைப்பித்தன் பிறந்தார்.தாய் காலமான போது பு.பிக்கு வயது எட்டுதான். தாயின் அன்பையும் அரவணைப்பையும் இழந்த அவர் பின்னாளில் தமது துணைவியாரைத்தான் தாய் வடிவில் கண்டார்.
1931ம் ஆண்டு கல்லூரிப் பட்டப் படிப்பை முடித்துக் கொண்டு புதுமைப்பித்தன் கமலாம்பாளை மணமுடித்தார். மணிக்கொடி பத்திரிகை அவருக்கு எழுதுவதற்கு வாசலைத் திறந்தது. ஒரு கதை பிரசுரமானால் இரண்டு ரூபாய் கிடைக்கும். இதை நம்பித்தான் அவர் தனது இல்லற வாழ்வைத் தொடங்கினார். புதுமைப்பித்தனின் முதல் சிறுகதை மணிக்கொடி இதழில் பிரசுரமானது.
"மணிக்கொடி பொருளாதார நிர்ப்பந்தம் என்ற நபரால் கிரஹத்தி செய்யப்பட்டு அசிரத்தை என்ற முனிசிபல் குப்பைத் தொட்டியில் எறியப்பட்டது. மூச்சுப்பேச்சற்றுக் கிடந்த அந்தக் குழந்தையை வளர்ப்பதற்காக நானும் பி.எஸ்.ராமையா என்ற நண்பரும் எங்களைப் போலவே உற்சாகத்தை மட்டும் மூலதனமாகக் கொண்ட இன்னும் சில எழுத்தாளர்களும் சேர்ந்து நடத்தி வந்தோம் " என்று மணிக்கொடி இதழ் பற்றி 1947ம் ஆண்டில் குறிப்பிடுகிறார் புதுமைப்பித்தன்.
"மணிக்கொடி இதழில் எழுதியவர்களில் மிகவும் கேலிக்கும் நூதனம் என்பதனால் திக்பிரமைக்கும் ஆளான ஒரே கதாசிரியன் நான் .கருத்தின் வேகத்தையே பிரதானமாகக் கொண்டு வார்த்தைகளை வெறும் தொடர்பு சாதனமாகக் கொண்டு தாவித்தாவிச் செல்லும் நடை ஒன்றை நான் அமைத்தேன். அது நானாக எனக்கு வகுத்துக் கொண்ட ஒரு பாதை.அது தமிழ்ப்பண்புக்கு முற்றிலும் புதிது. அதனைக் கையாண்ட நானும் கல்வி கற்றதன் விளைவாக பாஷைக்குப் புதிது...." என்று தமது கதைகளைப் பற்றி புதுமைப்பித்தன் கூறுகிறார்.
பொன்னகரம் என்ற கதையில்  விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை சித்தரிக்கிறார் புதுமைப்பித்தனர். முக்கால் ரூபாய் துட்டுக்காக சோரம் போகும் ஒரு பெண்ணைப் பற்றி எழுதுகையில் "என்னமோ கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே இதுதான் அய்யா பொன்னகரம்" என்ற அக்கதையின் இறுதி வரிகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தினார் புதுமைப்பித்தன். குழந்தைகளின் ரகசியமாய் சாக்கடையில் மிதந்து வரும் ஆப்பிளைப் பற்றியும் மிகவும் நுட்பான அவதானிப்புடன் குறிப்பிட்டார் புதுமைப்பித்தன். ( வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் நல்லதோர் வீணை படத்தில் சாக்கடையில் விழுந்து வரும் ஒரு ஆப்பிளுக்காக ஏராளமான பட்டதாரிகள் கமல் கையிலிருந்து அதை பிடுங்கும் காட்சி பொன்னகரத்தின் பாதிப்பாக இருக்கலாம்)
மிஷின் யுகம் மனிதன் இயந்திரமாக மாறிக் கொண்டிருப்பதையும் ஒரு கணத்தில் அவன் மனிதனாக மீள்வதையும் மிக அழகாக சொன்ன சிறிய கதை. சாபவிமோசனம் கதை புதுமைப்பித்தனை சர்ச்சையில் சிக்க வைத்தது. அகலிகைக்கு சாபவிமோசனம் அளித்த ஸ்ரீராமன் சீதையின் கற்பை பரிசோதிக்க அக்னிப்பிரவேசம் செய்ய சொன்னான் என்ற தகவலை அறிந்த அகலிகை , அவனா, ராமனா சொன்னான் என்று அதிர்ச்சியில் மீண்டும் கல்லாகிப் போனாள்  என எழுதியது அப்போதைய முதலமைச்சராக இருந்த ராஜாஜிக்கு முரணாக தோன்ற புதுமைப்பித்தன் கதைகளை அந்தக்கால  பத்திரிகைகள் வெளியிட மறுத்தன.இதனால் புதுமைப்பித்தன் பலநாட்கள் பட்டினி கிடக்க நேரிட்ட கதைகள் நம் கண்களை கசிய வைக்கின்றன.
செல்லம்மாள் கதை நோயுற்ற மனைவி மீது அளவு கடந்த பிரியம் வைத்துள்ள கணவனைப் பற்றிய கதை. ஆனால் மனைவி இறந்ததும் அவனுக்கு விட்டுவிடுதலையாகும் உணர்வு பிறப்பதாக உளவியல் ரீதியான ஒரு தர்க்கத்தை இக்கதை எழுப்பியது. சுந்தர ராமசாமி, வேதசகாயகுமார் போன்ற பலர் புதுமைப்பித்தனின் இக்கதையே அவரது மற்ற கதைகளை விடவும் சிறந்தது என்று மதிப்பிடுகின்றனர்.
கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த எள்ளல்( satire) கதைகளில் ஒன்று. அதுவரை எழுதப்பட்ட கதைகளில் இதுவே அந்த பாணியில் முதல் கதை.
மேலகரம் மே.ரா.கந்தசாமிப் பிள்ளை என்ற ஏழை கதாசிரியர் ஒருவர்  பிராட்வே எஸ்பிளனேட் பகுதியில் டிராமுக்காக காத்திருப்பதாக கதை தொடங்குகிறது. டிராமுக்கு காலணா தேவை என்ற யோசனை அவருக்கு.கையிருப்போ காலணா. அதை டிராமுக்கு கொடுத்துவிட்டால் வெற்றிலைக்கு என்ன செய்வது என்பது அவர் பிரச்சினை. பக்கத்து கடையில் வெற்றிலைப் பாக்கு போட்டுக் கொண்டு வீட்டுக்கு நடந்துவிடலாம். அல்லது பேருந்தில் ஏறி நடத்துனரை ஏமாற்றிக் கொண்டே சென்ட்ரலை கடந்துவிட்டு அப்புறம் டிக்கட் வாங்கி திருவல்லிக்கேணிக்குப் போனால் அரை கப் காபி குடித்து விட்டு வீட்டுக்குபோகலாம் ( மயக்கம் அடையாதீர்கள். இவை எல்லாமே காலணாவில்தான் ) ஆனால் வெற்றிலை கிடைக்காது.இதில் எதைத் தேர்வு செய்வது என்பதுதான் அவருடைய யோசனை. டிராம்ப் அல்லது வெற்றிலையுடன் நடைப்பயணம், அல்லது பேருந்தும் காபியும்.
இந்த இருத்தலியல் சி்க்கலுடன் நிற்கும் கந்தசாமிப் பிள்ளைக்கு கடவுள் மனித ரூபத்தில் பிரசன்னமாகி பேச்சுக் கொடுக்கிறார். கடவுளின் வயது 60 ஆயிரமாக இருக்கலாம்.ஆனால் அத்தனை வருஷமும் நன்றாக தின்றுக் கொழுத்து கொழு கொழு என்று மேனி வளப்பத்துடன் தோன்றும் கடவுளை புதுமைப்பித்தனின் பேனா சரியான எள்ளல் செய்கிறது. கடவுள் கந்தசாமியை சாப்பிட அழைக்கிறார். பில்லை நம் தலையில் கட்டிவிட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் பயந்துக் கொண்டே போகிறார் கந்தசாமி. ஹோட்டலின் சுகாதாரம் புதுமைப்பித்தனின் பேனாவிடம் சிக்கிக் கொள்கிறது. காபி பவுடர் கலப்படம், சில்லரைத் தட்டுப்பாடு. போன்ற லௌகீக பிரச்சினைகளுடன் கடவுளுக்கும் கந்தசாமிப் பிள்ளைக்கும் உரையாடல் நடைபெறுகிறது. ஆயுளைப் பற்றிய உரையாடலுக்குப் பிறகு தமது தீபிகை என்ற சிறுபத்திரிகைக்காக ஆயுள் சந்தா கேட்கிறார் கந்தசாமி. யாருடைய ஜீவியம் என்று கேட்கிறார் கடவுள். அப்போதும் கந்தசாமி கடவுளிடம் கூறுகிறார். " உங்கள் ஆயுள்தான்.பத்திரிகையின் ஆயுள் அழியாத வஸ்து" கடைசியில் ரிக்சாவில் ஏறி இருவரும் செல்கின்றனர். கடவுள் தான் யார் என்பதை கூறுகிறார். கடவுள் தந்த கூலி ஒரு ரூபாயை வாங்கிய ரிக்சாக்காரன் நீங்க நல்லா இருக்கணும் சாமி என்று கடவுளுக்கே ஆசி கூறுகிறான்.
கந்தசாமிக்க வரும் தர விரும்புகிறார் கடவுள். அந்த வித்தை எல்லாம் என்கிட்ட செல்லாது என்கிறார் கந்தசாமி. வரத்தை வாங்கிக் கொண்டு பிறகு தலைக்கு ஆபத்தைத் தேடிக் கொள்ளும் ஏமாந்த சோணகிரி நான் அல்ல என்று கூறுகிறார் அவர். அப்பா என்று உறவு கொண்டாட விழையும் கந்தசாமியை கடவுள் அப்பா என்று அழைக்காதே என்றும் பெரியப்பா என்று அழைக்கும்படியும் கடவுள் கூறுகிறார். தமது சொத்தை கந்தசாமி கேட்பாரோ என்ற பயம் கடவுளுக்கு. வரம்வேண்டாம். எங்கள் கூட இருந்து எங்கள் வாழ்க்கையை வாழ்ந்து பார் என்கிறார் கந்தசாமி.கடவுள் மனிதனின் முன்னால் தோல்வியை ஒப்புக் கொள்கிறார். உங்களிடமிருந்து எட்டி நின்று வரம் கொடுக்கலாம். உடன் இருந்து வாழ முடியாது என்கிறார் கடவுள். உங்கள் வர்க்கமே அதற்குத்தான் லாயக்கு என்று கந்தசாமி கடவுளை விரட்டி விடுகிறார்.
எழுத்தையே முழுநேர வாழ்வுக்கும் வருமானத்திற்கும் நம்பிய ஒரு தமிழ் எழுத்தாளனான புதுமைப்பித்தன், வறுமையுடனும்  வணிக இலக்கியத்துடனும் போராடித் தோற்றார்.
எழுத்தாளனின் வறுமையை சித்தரிக்க அவர் எழுதி மற்றொரு கதை ஒருநாள் கழிந்தது. இதுவே புதுமைப்பித்தனின் சிறந்த கதை என்று கூறுவோரும் உண்டு. ஆனால் சி.சு.செல்லப்பாவோ சிற்பியின்  நரகத்தையே புதுமைப்பித்தனின் சிறந்த கதையாக தேர்வு செய்கிறார். சி.சு.செல்லப்பா பற்றி அறியாமல் நானும் இக்கதையே புதுமைப்பித்தனின் மிகச்சிறந்த கதையாக முன்னிறுத்தினேன்.
சிற்பியின் நரகம் உண்மையான கலைஞனின் பசியைப் பற்றியது. உண்மையான கலையையும் கலைஞனையும் போலித்தனம் மிக்க உலகமும் நகல் கலைஞர்களும் அதிகாரம் செலுத்தும் கதை .
மலையத்த நடிகையின் முக சாந்தி, நீலமலைக் கொடுங் கோலன் சிரச்சேதம் செய்யப்பட்ட போது அவனது இடைத் துவளுதல் போன்ற பாவனைகளை இணைத்து வடிக்கிறான் ஓர் அபூர்வமான சிற்பத்தை.சிற்பம் அரசனிடம் அனுப்பி வைக்கப்படுகிறது.சிற்பி பயணம் போய் விடுகிறான். பல ஆண்டுகள் கழித்து அவன் திரும்பி வரும் போது சிற்பி தனது உன்னத கலைப்படைப்பு இருண்ட அறைக்குள் தூசு படர்ந்து கிடப்பதைக் கண்டு மனம் வாடுகிறான்.கோவில் பிரகாரத்தில் ஏதோ ஒரு சிற்பம் தெய்வமாக பூஜிக்கப்படுகிறது.உண்மையான கலை புறக்கணிக்கப்பட்டு போலியான நகல் கலை ஆராதிக்கப்படுகிறது.எனக்கு மோட்சம் மோட்சம் என்று அழுகின்றது இருட்டறையில் கிடந்த அவனது சிற்பம். சிலை மீது தலையை மோதி ரத்தம் பீறிட கலைஞன் தனது படைப்புக்காக தனது உயிரையே தியாகம் செய்கிறான்.
மொத்தம் 97 கதைகளை எழுதியிருக்கிறார் புதுமைப்பித்தன்.ஏராளமான கட்டுரைகள், கவிதைகளுடன் பல மொழிபெயர்ப்புகளையும் பணத்தேவையின் பொருட்டு அவர் செய்துள்ளார்.இறுதிக்காலத்தில் கடும் நெருக்கடியில் தவித்த புதுமைப்பித்தன் பணம் சம்பாதிக்க திரைப்படத் துறையை நாடி வந்தார். அவரது முழுமைப் பெறாத ஒரு நாடகம் பின்னர் ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடிக்க சரஸ்வதியின் சபதமாக வெளியானது.
ராசாத்தி மாதிரி தனது மனைவி கமலாம்மாவை வைத்திருக்க நினைத்த புதுமைப்பித்தன் வறுமையையே அவருக்குப் பரிசாக அளித்தார். தமது மனைவிக்கு அவர் எழுதிய கடிதங்களை நூலாக தொகுத்துள்ளார் கவிஞர் இளையபாரதி.
இரவில் நிம்மதியற்ற மனநிலையில் பயங்கர சொப்பனங்கள் கண்டு திடீர் திடீர் என விழித்துக் கொள்வதாக எழுதுகிறார் புதுமைப்பித்தன். தனது மனைவிக்கு ஸ்டாம்பு கூட வாங்கி அனுப்ப முடியாததால் கடிதம் எழுத முடியாத நிலையிலும் தனது குழந்தையின் நோய் குறித்து கவலைப்படுகிறார். தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று குமுறலை வெளியிடுகிறார். வறுமை, நோய் காரணமாக மிக இளம் வயதிலேயே தமது 42 வது வயதில், 1948ம் ஆண்டு புதுமைப்பித்தன் காலமானார். புதுமைப்பித்தனின் வாழ்க்கை தமிழ் எழுத்தாளர் ஒருவரின் சோக நாடகம். உயிருள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை என்று எழுதினார் அவருடைய நெருங்கிய நண்பரான தொ.மு.சி.ரகுநாதன்.
புதுமைப்பித்தன் மறைவுக்குப்பிறகு கமலா அம்மையார் தமது 3 வயது குழந்தையுடன் உறவினரிடம் அடைக்கலம் நாடி சென்னைக்கு ரயிலில் செல்லும் போது தாமிரபரணி பாலத்தில் ரயில் சென்றுக் கொண்டிருந்த போது குழந்தையுடன் குதித்து தற்கொலை செய்துக் கொள்ள எண்ணியிருக்கிறார். ஆனால் அப்போது புதுமைப்பித்தனின் வரி ஒன்று அவர் மனதுக்குள் ஓடியிருக்கிறது. ஒளிநிச்சயம் வரும். ஒளி வரும்போது நான் இல்லாவிட்டால் என்ன என்ற வரியின்மூலம் மீண்டும் நம்பிக்கையை மீட்டு கமலா அம்மையார் தினகரியுடன் சென்னை வந்தார். பிற்காலத்தில் அக்குடும்பம் லாட்டரி டிக்கட்டில் 2 லட்சம்ரூபாய் பரிசு கிடைக்க நிம்மதியாக வாழத் தொடங்கியது.
இத்தனைக்கும் மேலே
இனி ஒன்று
அய்யா நான்
செத்ததற்குப்பின்னால்
நிதிகள் திரட்டாதீர்
வானத்து அமரன் வந்தான் காண்
வந்தது போல் போனான் காண்
என்று புலம்பாதீர்.
அத்தனையும் வேண்டாம் .
அடியேனை விட்டு விடும்.
என்று புதுமைப்பித்தன் எழுதினாலும் தமிழ்ச்சூழ் உலகம் அவரை இன்று விடுவதாக இல்லை. வாழும் போது அசல் படைப்பாளிகளுக்கு ஒரு துரும்பைக் கூட தராத தமிழ்க்கூறு நல்லுலகம் மறைந்த பிறகு அவருக்கு அமரத்துவம் அளித்து விடுகிறது. இதுவும் புதுமைப்பித்தன் எழுத மறந்த ஒரு கதைதானோ.....


---------------------------------------------------------------


Comments

Popular posts from this blog

வாசிக்க வேண்டிய புத்தகங்கள்- டாப் டென் தமிழ்

எம்ஜிஆர்- மூன்றெழுத்து மந்திரம்

ஓஷோவும் ஜெயமோகனும்