Wednesday 13 January 2016

இந்திய சினிமா -Purab aur paschim









கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன

குமுதம் தீராநதி இதழில் ( ஜனவரி 2016) வெளியான எனது கட்டுரை

இந்திய சினிமா
கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன – PURAB AUR PASCHIM
செந்தூரம் ஜெதீஷ்
நமது சுதந்திர தினம் குடியரசு தினம் போன்றவற்றை நாம் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். நூற்றாண்டு காலம் வெள்ளையனுக்கு அடிமையாக இருந்த ரணங்களும் வலிகளும் நமது முன்னோர்கள் வழியே நமக்குத் தெரிய வந்துள்ளன.
நாட்டின் மூவர்ணக் கொடிக்கு தனி மரியாதை உண்டு . ஆனால் இந்தக் கொடியை ஏற்றுவதற்கு கனவு கண்ட மகாத்மா காந்தி முதல் மகாகவி பாரதி வரை பலரும் அந்தப் பொன்னாளுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர்.
சுதந்திர இந்தியாவில் நாம் நமது தியாகிகளை மறந்து விட்டோம். அவர்களை கேலியாக பார்க்கும் வகையில் குரூரமானவர்களாகவும் மாறிவிட்டோம். ஆனால் பாரத மாதாவின் பாதம் பணிந்து தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி வரும் படைப்பாளிகளையும் நாம் பெற்றுள்ளோம்.
அத்தகைய ஒரு படைப்பாளிதான் மனோஜ்குமார், நடிகர், பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், தயாரி்ப்பாளர், இயக்குனர் என்ற பன்முக ஆற்றல் கொண்டவரான மனோஜ்குமார் முதலில் நடிகராகத்தான் அறிமுகம் ஆனார்.
ஆலயமணி படத்தின் இந்திப் பதிப்பு ஆத்மி என தயாரிக்கப்பட்டது. அந்தப் படத்தில் மனோஜ்குமார் தமிழில் எஸ்.எஸ்.ஆர். ஏற்ற வேடத்தை எடுத்துக் கொண்டார். சிவாஜி வேடத்தில் நடித்தவர் திலீப் குமார். சரோஜாதேவி வேடத்திற்கு வகிதா ரஹ்மான்.
நீல்கமல் , வோ கோன் தீ( தமிழில் யார் நீ ) போன்ற பிரபலமான திரைப்படங்களில் நாயகனாக நடித்த மனோஜ்குமாருக்குள் ஆன்மீகச் சிந்தனையும் தேச பக்தியும் ஊறியிருந்தது. இதை அவர் இயக்கிய உப்கார் படம் மூலம் நாம் அறிந்தோம். அந்தப் படத்தில் விவசாயிகள் மற்றும் ராணுவ வீரர்களால் இந்த நாடு சுபிட்சமாக இருப்பதாக மனோஜ்குமார் தெரிவித்தார். கஸ்மே வாதே பியார் என்ற பாடலை மன்னாடே குரலில் பிரானை பாட வைத்தார். பிரான் அப்போது வில்லன் நடிகர். ஆனால் அவருக்கு குணச்சித்திரப் பாத்திரம் தந்து, பாடலையும் பாட வைத்து புதுமை செய்தார் மனோஜ்குமார். கல்யாண்ஜி ஆனந்த்ஜி இசையமைத்த இப்பாடல் தமிழில் இளையராஜா இசையில் பாலுமகேந்திராவின் நீங்கள் கேட்டவை படத்தில் ஜேசுதாஸ் குரலில் வைரமுத்துவின் வரிகளில் கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் மேகங்கள் என்று இடம் பெற்றது.
உப்கார் படத்தில் இடம் பெற்ற மற்றொரு பாடல் மேரி தேஷ் கி தர்த்தி இந்த பாடலுக்கு கோரஸ் உண்டு. இந்த கோரஸ்தான் பின்னர் மனோஜ்குமாரின் எல்லா தேசபக்தி படங்களுக்கும் தீம் மியூசிக்காக மாறியது. மனோஜ்குமாருக்கு முகமது ரபியும் முகேஷூம் பின்னணி பாடி வந்த நிலையில் புதிய பொருத்தமாக அவருக்கு மகேந்திர கபூரின் குரல் பொருந்தியது. பாரத் என்ற பெயரையும் தனது எல்லாப் படங்களிலும் தமக்கு அவர் சூட்டிக் கொண்டார்..
மனோஜ்குமார்-கல்யாண்ஜி ஆனந்த்ஜி-மகேந்திர கபூர் என்ற இந்தக் கூட்டணி அடுத்து வந்த பூரப் அவுர் பச்சிம் படத்தில் சக்கை போடு போட்டது.
இந்தப் படம் இந்தியாவை நேசிக்கிற ஒரு இளைஞனுடையது.படத்தின் தொடக்கம் கருப்பு வெள்ளையில் வெள்ளையர் ஆட்சியில் சில காட்சிகளை சித்தரிக்கிறது. சுதந்திரப் போராட்ட தியாகிகளை வேட்டையாடிய பிரிட்டிஷ் சிப்பாய்கள் மனோஜ்குமாரின் அப்பாவை தேடி வரும்போது சித்தப்பாவான பிரான் அண்ணனை காட்டிக் கொடுத்து தேச துரோகியாக மாறுகிறார். இதனால் அவருக்கு நிறைய பணம் கிடைக்க வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்கிறார். மனோஜின் தந்தை போலீசாரால் சுட்டுக் கொல்லப்படும் காட்சியுடன் ஒரு பக்தி பாடல் ஒலிக்கிறது. லதா மங்கேஷ்கர், மகேந்திர கபூரின் இனிய குரல்களில் ஒலிக்கும் இந்த பாடல் ஆரத்தி வகையை சேர்ந்தது. இன்றும் இந்தியாவில் உள்ள பல நூறு கோவில்களிலும் பல கோடி பக்தர்களின் இல்லங்களிலும் இந்த ஆரத்தியை இதன் இசையை பின்பற்றி திருப்பதி பாலாஜி முதல் சீரடி சாய்பாபா வரை பல ஆரத்தி பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
ஓம் ஜெய ஜெகதீஷ ஹரே சுவாமி ஓம் ஜெய ஜெகதீ் ஹரே
என்ற இந்த ஆரத்தி பாடலை இன்றும் ஏதேனும் ஒரு வடமாநில கோவிலில் ஒலிப்பதைக் கேட்க முடியும்.
இந்தப் பாடலுடன் சிறுவனாயிருந்த பாரத் பெரியவனாக மனோஜ்குமாராக காட்சியளிப்பான்.
இடைச்செருகலாக மற்றொரு காட்சி. பிரிட்டிஷ் கொடி கருப்பு வெள்ளையில் இறக்கப்பட்டு வண்ணத்தில் சுதந்திர இந்தியாவின் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டு ஆரத்தி தொடர்கிறது.
வெளிநாட்டில் அதாவது லண்டனில் படிக்கச் செல்லும் பாரத் அங்கு ஆங்கிலேய கதாபாத்திரத்தில் ஊறிய கதாநாயகி சாய்ரா பானுவை சந்திக்கிறான், சாய்ரா தொடை தெரிய குட்டை ஸ்கர்ட் அணிந்து நடனமாடுகிறார், பாய் பிரண்ட்சுடன் டேட்டிங் செல்கிறார். மது அருந்துகிறார். புகை பிடிக்கிறார். இந்தியாவை மனதார வெறுக்கிறார். இது அவரது தந்தையான மதன்புரிக்கு மிகவும் மனவேதனையளிக்கிறது. மகளை இந்தியப் பெண்ணாக பார்க்க அவர் ஆசைப்படுகிறார். அதற்கு பாரத் சரியான ஆளாக வந்து சேர்கிறான். அவன் லண்டன் தேம்ஸ் நதிமீதான பாலத்தின் அடியில் நின்று அங்குள்ள ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ஹிப்பிகளுக்கு ரகுபதி ராகவ ராஜாராம் பதித்த பாவன சீதாராம் என பாடல் சொல்லித் தருகிறார்.
பாரத்தின் இந்தியப் பற்றை அங்கு வாழும் தேச துரோகி பிரான் கிண்டலடிக்கிறார். இந்தியாவில் வறுமைதான் உள்ளது. வாழ்க்கை இல்லை என்கிறார் பிரான். இந்தியா இஸ் நத்திங் பட் சீரோ என்று பேச அதையே பாடலாக்குகிறார் பாரத்


இந்தியா உலகிற்கு சீரோவை தந்த பிறகுதான் உலகத்திற்கு எண்ணவே தெரிந்தது. ராக்கெட்டுகள் போகும் தூரத்தை கணிக்க முடிந்தது. என்று செல்லும் அப்பாடலில் இந்தியாவின் பெருமைகளைப் பட்டியலிடுகிறார் பாரத்
இன்றும் இந்தியாவில் ஆண்களில் ராமன் உண்டு பெண்களில் சீதை உண்டு என்று சொல்லும் போது மதன்புரி தமது மகளின் அலங்கோலத்தை கண்டு வெட்கி தலைகுனிவார்.
இந்தியாவில் அன்பு உண்டு .நாங்கள் நதிகளைக்கூட அம்மா என்றுதான் அழைக்கிறோம். கல்லைக் கூட பூஜை செய்து கடவுளாக்கி விடுகிறோம் என்று பாடும் அந்தப் பாடல் கதாநாயகியின் மனத்தையும் மாற்றுகிறது. அவர்  பாரத்தை காதலிக்க பாரத் அவரை திருமணம் செய்ய இந்தியா வர வேண்டும் என்று கோருகிறார். பாரத்தின் கோரிக்கையை ஒரு நிபந்தனையுடன் ஏற்கிறார் சாய்ரா. அதாவது ஒருமாதம் அவர் இந்தியாவில் இருப்பார் .இந்தியாவை பிடிக்காமல் போனால் பாரத் வீட்டோட மாப்பிள்ளையாக நிரந்தரமாக லண்டனுக்கு குடியேற வேண்டும். இந்தியா பிடித்துப் போனால் பாரத் சொன்னபடி அவருக்கு மனைவியாக இந்தியப் பெண்ணாக வாழ தயார் என்று கூறுகிறார். இந்த சவாலை பாரத் ஏற்கிறார். இந்தியாவை பிடிக்கவில்லை என்று யாருமே கூற முடியாது என்பது அவருடைய உறுதியான நம்பிக்கை
இந்தியா வரும் மீரா அங்கு பாரத்தை ஒருதலையாக காதலிக்கும் பாரதியை சந்திக்கிறார். பாரதி ஏழைப்பெண். ஆனால் மீராவைப் போல் தனது தூய்மையான காதலை வெளிநாட்டு பெண்ணுக்காக தியாகம் செய்கிறார்.
இந்தியாவில் குருநானக் ,அமிர்தசரஸ், காந்தி, நேரு, பகத்சிங், நேதாஜி, வாரணாசி, கங்கை நதி, இமய மலை போன்ற மகான்களையும் புனிதத் தலங்களையும் கண்டு சாய்ரா மனம் மாறுகிறார். டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார் பாடலில் மினி ஸ்கர்ட்டுடன் ஆடும் அவர் பின்னர் இந்தியப் பெண்ணாக வலம் வர புடவையுடன் தோன்றுகிறார்.

5
இறுதிக்காட்சியில் பிரானும் இந்தியா வர அவர்தான் அந்த தேசதுரோகி என தெரிய வர சினிமாத்தனமாக கிளைமாக்சுடன் ஆக்சன் காட்சிகளுடன் படம் முடிகிறது.
இப்படம் மனோஜ்குமாருக்கு மகத்தான வசூலையும் பாரத் என்ற பாத்திரத்திற்கு அபாரமான வரவேற்பையும் பெற்றுத் தந்தது. அடுத்தடுத்து அவர் இயக்கிய ரோட்டி கப்டா மக்கான் , கிராந்தி, ஷோர் போன்ற முக்கியமான அவருடைய படங்களிலும் பாரத் கதாபாத்திரம் பட்டிழைத்த பொன்னாக மின்னியது. ஆன்மீகத்திலும் நாட்டமுடைய மனோஜ்குமார் தமது படங்களில் ஓம் ஜெய் ஜெகதீஷ ஹரே ஆரத்தியை போல துர்க்கையம்மன் ஆரத்தி, விவேகானந்தரை சித்தரிக்கும் பாடல், இந்தியாவின் மகான்களை போற்றும் பாடல் என பலவகையான இனிய பாடல்களை திரையுலகிற்கு தந்தார். நேர்ததியான திரைக்கதையுடன் அவருடைய படங்கள் அபாரமான படைப்புகளாக வந்தன. பிற்காலத்தில் அவர் நடிகை மாதவியை வைத்து இயக்கிய கிளர்க் போன்ற சில படங்கள் தோல்வியைத் தழுவினாலும் பூரப் அவுர் பச்சிம், ரோட்டி கப்டா மக்கான், ஷோர் , கிராந்தி போன்ற படங்களுக்காக மனோஜ்குமாரின் பெயர் இந்திய சினிமாவின் சுதந்திரப் போராட்ட வரலாற்றுடன் சேர்ந்து பொன் எழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டும்.

பின்குறிப்பு இக்கட்டுரை தீராநதி இதழில் வெளியாகி இரண்டே மாதங்களில் மனோஜ் குமாருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருதை அறிவித்துள்ளது. 

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...