Thursday 26 March 2015

பக்தி குறையும் காலம்

வயதாக வயதாக பக்தி அதிகமாகும் என்பார்கள். பெரியாருக்கு முதிர்ந்த வயது வரை பக்தி பழுக்கவே இல்லை.பல கம்யூனிஸ்ட் தோழர்கள் இளமையில் நாத்திகம் பேசி முதுமையில் கோவிலுக்குப் போவதைப் பார்த்திருக்கிறேன். கமல்ஹாசன் கூட நாத்திகர்தான். ஆனால் அவர் கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது. முகுந்தா முகுந்தா என தசாவதாரத்தில் பக்தி மழை பொழிந்தார். படத்தின் பெயரே தசாவதாரம்தான். கவிஞர் வைரமுத்துவும் நாத்திகம் பேசும் அடியவர்க்கெல்லாம் அன்பே சிவமாகும் என்று எழுதினார். அண்ணாதுரை ஒன்றே குலம் ஒருவனே தேவன் என பகுத்தறிவுக் கொள்கைக்கு புதிய விளக்கம் அளித்தார்.இதெல்லாம் போகட்டும் என்னுடைய அனுபவம் வேற மாதிரி.
35 வயது வரை நாத்திகமும் மார்க்சியமும் தான் எனது பாதை. எந்தக் கோவிலுக்கும் போனதி்ல்லை, கடவுளிடம் ஏதும் கேட்டதில்லை.எனக்குக் கிடைத்த நண்பர்கள் கூட நாத்திகர்கள்தாம். கோவையில் ஒரு தோழி, ராம்நகரில் உள்ள ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக கடவுளை கும்பிட வைத்து நெற்றியில் விபூதி வைத்துவிட்டாள். என்குடும்பத்தினர் அனைவருக்கும் பக்தி அதிகம். ஆனால் குடும்பத்துடன் தாமரை இலை நீர்போலவே வாழ்ந்ததால் கடவுளும் ஒட்டவே இல்லை. 35 வயதுக்குப் பின் ஓஷோ மூலம் மார்க்சியம் வெளிறத் தொடங்கிய போதுதான் கோவிலுக்குப் போகலானேன். தனியாகவும் .குடும்பத்துடனும்.
தனியாக கோவிலுக்குப் போன அனுபவங்களை வைத்து திருவேங்கடம் என்ற நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
திடீரென 50 வயதை கடந்த பின் ஒரு பின்-ஞானோதயமாக சமீபத்தில் கோவிலும் கடவுளும் எனக்கு அந்நியமாகிக் கொண்டிருக்கின்றன. எனக்கு அளிக்கப்பட்ட வாழ்க்கையை கடவுள் தந்தார் என்றால் அவருக்கு மிகக் கடுமையான தண்டனையை வழங்க வேண்டும்.ஆனால் இ்ப்படி நினைக்கும் போது விக்கி என் முன்னால் வந்து நிற்கிறான். இந்த அழகான குழந்தையை எனக்கு பரிசளித்த கடவுளுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் குறைவுதான் என்று எண்ணத் தோன்றுகிறது.
என் விக்கியை நல்லா வாழ வை என்று கேட்கவாவது கடவுளை வணங்கிக் கொண்டிருக்கிறேன்.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...