Saturday 23 February 2013

பாப்புலர் அப்பளங்களும் ஊசிப் பட்டாசுகளும்

விக்கிக்கு சோறு ஊட்ட வேண்டுமானால் அப்பளம் வேண்டும். அதுவும் பாப்புலர் அப்பளம. எந்த அப்பளமானால் என்ன என்று ஒரு முறை பேச்சு வந்தப்ப பாமா அக்கா சாப்பிட்டுப் பார்த்திட்டு பாப்புலர் அப்பளம் வேறமாதிரி ருசியாத்தான் இருக்குன்னாங்க. எனக்கென்னவோ அதன் பெயர்தான் அதனை பாப்புலராக்கியது போல தோன்றும்.
இலக்கியத்திலும் பாப்புலர் அப்பளங்கள் உண்டு. அப்பளத்துக்காவது தான் ஒரு சைடு டிஷ் மட்டும்தான் என்று தெரியும்.அதனால் லேசாக அழுத்தினாலும் உடைந்து நொறுங்கிப் போகும். ஆனால் இலக்கிய அப்பளங்கள் தங்களைத்தான் மெயின் டிஷ்ஷாக நினைத்து மமதையில் மிதந்துக் கொண்டிருக்கின்றன.
இலக்கியத்தின் தகுதியும் அதன் உண்மையான மதிப்பீடும் சமகாலத்தில் தீர்மானிக்கப்படுவதில்லை. சமகாலத்தில் புகழின் உச்சம் தொடும் பாப்புலரிசங்கள் இலக்கியத் தகுதியற்றவை. காலத்தை வென்று வாழும் தகுதியை அவை இழந்துவிடுகின்றன. சூப்பர் ஸ்டார் இலக்கியவாதிகள்தான் கடைந்தெடுத்த, தூக்கிப் போட வேண்டிய கழிசல்கள். புதுவெள்ளம் பாயும் போது முதலில் கழிசல்களைத்தான் வெளியே தள்ளும். சுத்தமான தண்ணீர் பின்னால் மெதுவாக வந்துக் கொண்டிருக்கும்.

இலக்கியச் சூழலில் வாசகர்கள் பிரபலமான பெயர்களைப் பார்த்து புத்தகங்களை வாங்குவது இயல்புதான். நான் கவனமாக அவற்றை தவிர்ப்பதை வழக்கமாகிக் கொண்டிருக்கிறேன்.ஒரு படைப்பாளியின் முதல் புத்தகத்தை வாங்கி, தொடர்ந்து அவரது வளர்ச்சியை கவனித்து, அவர் பெரிய ஆளானதும் கைகழுவி ஒழித்துக் கட்டுவதும் என் வழக்கம்தான். அதையும் மீறி சில புத்தகங்கள் என்னிடம் தங்கிவிடுகின்றன. மீண்டும் அவற்றைப் படிப்பதற்கான உந்துததலோ பரவசமோ சாத்தியமே இல்லை என்ற போதும் அவற்றை என்னால் தூக்கிப் போட முடியவில்லை. காரணம் அவை என்னை சில நேரங்களில் செதுக்கியிருப்பதுதான்.

ஜெயகாந்தன், அசோகமித்திரன், லா.ச.ராமாமிர்தம், ஆதவன், தி.ஜானகிராமன், பிரபஞ்சன், பாலகுமாரன், எஸ் ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா , நாஞ்சில் நாடன், அம்பை போன்றோரின் எழுத்துகள்  மீண்டும் படிக்க ஆர்வமூட்டுபவை .இந்தப் படைப்பாளிகள் மீதுள்ள தனிப்பட்ட மரியாதையும் ஒரு காரணம் எனலாம்.


எனது கவனம் அதிகம் சத்தம் போடாத ஊசிப்பட்டாசுகள் மீதுதான். எப்போதோ ஒரு புத்தகம் எழுதி அமைதியாக இருக்கும் திலீப்குமாரும், வண்ணநிலவனும், ஆ.மாதவனும் மட்டுமல்ல மறைந்தும் உயிர்ப்புடன் இருக்கும் புதுமைப்பித்தன், கு.ப.ரா, மௌனி, பிச்சமூர்த்தி, சம்பத், சி.சு.செல்லப்பா, எம்.வி.வெங்கட்ராம், சுந்தர ராமசாமி  போன்ற மேதைகள்தாம் என் சிந்தனையிலும் செயலிலும் வாசிப்பிலும் வாழ்விலும் நிறைந்திருக்கிறார்கள்.

புதிதாக எழுதுபவர்களில் பிரான்சிஸ் கிருபாவும், குமார செல்வாவும், சு.வேணுகோபாலும் , வாமு கோமுவும்,  ஷாராஜூம், தமிழ்நதியும்  ,ஆண்டிப்பட்டி உமா மகேஸ்வரியும் கவிஞர் நிமோஷினியும் சூர்யராஜனும் இதுபோன்ற இன்னும் 100 பேராவது எனது கவனத்தில் இருக்கிறார்கள். இவர்களைத்தான் என்னால் தமிழின் ஆகச்சிறந்த படைப்பாளிகளாக மதிப்பீடு செய்ய முடியும். அவர்களைத்தான் மீண்டும் மீண்டும் வாசிக்க முடியும். பரவசப்பட முடியும். பகிர்வதற்கு ஆள் தேடமுடியும்.

திரைப்படப் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் சினிமாவுக்கு வருமுன் அவருடைய கவிதைகளை தகுதியற்றவையாக நிராகரித்து, அவரை உச்சி முகர்ந்த அறிவுமதி போன்றவர்களிடம் இதற்காக சண்டை போட்டிருக்கிறேன்.
கவிதையை விசிட்டிங் கார்டு போல மாற்றி சினிமா சான்ஸ் தேடிய அவரது போக்கு எரிச்சலூட்டியது. ஆனால் எனது எதிர்ப்பும் விமர்சனமும் அவரை தடுத்து நிறுத்த முடியவில்லை. அவர் நானே வியக்குமளவுக்கு முன்னணி பாடலாசிரியராகி விட்டார் .அற்ப ஆயுளில் மறைந்தும் விட்டார்.

உறவுகள் நட்புகளின் நிலையற்றத் தன்மை என்னை எப்போதும் வாட்டும் பிரச்சினையாக இருக்கிறது .நிலையில்லாத மனிதர்கள் அவர்க்கும் என்ன உறவுகள் என்ற பாடல்தான் மனதுக்குள் ஒலிக்கிறது.

இப்படி எழுதுவதால் அந்த உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ளும் எண்ணமோ எதிர்பார்ப்போ துளிக்கூட இல்லை என்பதை உணரலாம். உறவுமில்லை பகையுமில்லை என்ற நிலைமை நீடித்தால் போதும். பகைத்தாலும் அருள்வேன்.

ஆழ்ந்த வாசிப்பு, ரசனை, கையளவு திறமை, கடலளவு தேடல், அன்பு, அர்ப்பணிப்பு, தோழமை, தெளிவு போன்ற என்னுடைய எத்தனையோ தகுதிகளை பாப்புலரிசங்கள் நொறுக்கிவிடுகின்றன. ஒரு சைடு டிஷ்ஷாக கூட தகுதியற்றவனாக புறக்கணிக்கப்படுகிறேன். தாஸ்தயவஸ்கியை, பாரதியை புதுமைப்பித்தனை, காஃப்காவை நிராகரித்த அதே அரைவேக்காட்டுத்தனமான சமகாலம்தான் என்னையும் நிராகரிக்கிறது. இதுவே எனது மிகப்பெரிய இலக்கிய அங்கீகாரம் என்று நான் என்னையே ஆறுதல்படுத்திக் கொள்கிறேன்.

ஆனால் வாழ்வின் தோல்விகளும், சோர்வுகளும் மன உளைச்சல்களும் பலமுறை என்னை ரயில் தண்டவாளங்களை நோக்கியும் கடல் அலைகளை நோக்கியும் நகர்த்திக் கொண்டிருக்கிறது. பிரியங்கள் இல்லாத மனிதர்களுடன் மீண்டும் மீண்டும் எனது அன்பும் காதலும் மோதி மோதி நொறுங்கிக் கொண்டிருக்கிறது. பணம் என்ற மகாலட்சுமி வடிவிலான மாயப்பிசாசின் கருணைக்காகவும் , அவ்வப்போது அது வீசியெறியும் சில்லறைக்காகவும் ஓடிக்கொண்டே இருக்கிறேன்.

செந்நிறை ஒளியாகத் தோன்றிய எதிர்காலம், முதுமையின் இருளாக மாறி பயமுறுத்துகிறது. இந்த இருட்டுக்குள் துழாவித் துழாவி எனக்கான பாதையையும் சின்ன சின்ன சந்தோஷங்களையும் நான் தேடிக் கொண்டேயிருக்கிறேன்.
எனது வாழ்க்கையிலும் தவறுகள் உண்டு. சமரசங்கள் உண்டு. பெண்களின் உறவு,  பணம் போன்றவற்றை பாதுகாக்க தெரியாதவன் நான். அவற்றை உடைமைகளாக நினைப்பவர்கள் எக்கச்சக்கமாக பாதுகாக்கிறார்கள்.அதன் சுகங்களை அனுபவிக்கிறார்கள். என் மீது யாராவது குற்றம்சாட்டினால் அதில் பாதியாவது உண்மை இருக்கும் என நானே நம்புகிறேன். அப்படி இருந்தால் அதனை ஏற்றுக் கொள்ளும் மனத்தூய்மையும் நேர்மையும் என்னிடம் இருக்கிறது.

என் வாழ்க்கை இன்னதென்று என்னால் வரையறுக்கப்பட்டு விட்டது. இன்னும் சொல்லப்போனால் விதிக்கப்பட்டு விட்டது. இனி இந்த இலட்சுமணக் கோட்டை நானே நினைத்தாலும் கூட மீற முடியாது.


வெற்றியைத் தேடும் வெறியும் அது வந்தால் அதனுடன் ஏற்படக் கூடிய சுயமழிதலும் பற்றி நான் நன்கு புரிந்துக் கொண்டுவிட்டேன். புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை என்ற சித்தாந்தம் என்னளவில் சரி. புத்திக்கு மேல் மனசை வைத்திருக்கும் மனிதர்களுக்கு இதுதான் கதி. முகேஷ் பாடிய இந்திப்பாடல் ஒன்றில் dil pe marne wale marenge bikhari என்பார். அதாவது, இதயப் பூர்வமான அன்புக்காக  உயிரைக் கொடுப்பவன், பிச்சைக்காரனாகத்தான் சாவான்.

வெற்றி என்பது ஒரு சூட்சுமம். அதை ச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று நான் கசப்புணர்வில் பார்க்கவில்லை. வெற்றியின் சூட்சுமம் தெரிந்தாலும் அதை விட்டு ஒதுங்கிப் போகும், சில சமயங்களில் ஓடி ஒளியும் மனப்போக்கையே வளர்த்துக் கொண்டிருக்கிறேன்.

என்னுள் இருக்கும் உணர்வு, ஆசைகள், நான் பெற்ற அவமானங்கள், நிராகரிப்புகள், எல்லாம் எனது அன்பின் பெயரால் அல்லது அறிவின் பெயரால்தான் எனக்குக் கிடைத்திருக்கின்றன.இவை என்னை வெறிப்பிடித்தவன் போல இயக்கிக் கொண்டிருக்கின்றன.

என்னுள் ஒரு சுடர் மட்டும்  அணையாமல் எரிந்துக் கொண்டே இருக்கிறது. அது தமிழ்ச்சமூகத்திற்கு எதையோ சொல்லத் துடிக்கிறது. எனது குரல் சமகாலத்தில் ஒலிக்காது என்பது எனக்குத் தெரிந்தாலும் கூவுகிறேன்.
எனது எழுத்து, வாழ்வு நான் பணியாற்றும் ஊடகம் என எல்லாவற்றிலும் இந்த ஒளியின் தெறிப்புகளைப் பார்த்து பலர் வியப்படைகிறார்கள். எனது இருளுக்குள் போய் பதுங்கிக் கொள்கிறேன்.

எனக்கு என்னைத் தவிர யாரிடமும் எந்தவிதப் பாதுகாப்புணர்வும் ஏற்படவில்லை.

ரோட்டி கப்டா மக்கான் என்றொரு படம் எழுபதுகளில் வந்தது. அதில் நடித்த மனோஜ்குமார்தான் படத்தின் இயக்குனரும், கதை வசனகர்த்தாவும் ஆவார். அந்தப் படத்தில் ஒரு பாடல்- மகேந்திர கபூர் பாடி லட்சுமிகாந்த் பியாரேலால் இசையமைத்தது எனக்குப் பிடித்த பாடலாக உள்ளது. அது என்னையே பிரதிபலிக்கிறது.

இனி உனக்கு கனவுகள் இல்லை, சொந்தங்கள் இல்லை.
உண்மைக்கு விலை ஒன்றுமில்லை.
எதுவும் பேசாதே வாயை மூடி மௌனமாயிரு.
அன்பு காதல் பாசம் என்றெல்லாம் நீ அடித்தொண்டையிலிருந்து குரல் எழுப்பிக் கத்தினால், குரல்வளையை நெறித்துவிடுவார்கள்.
தலைக்கு மேலே கல்லைப் போட்டு மூடு. வாழ வேண்டும் என சபதம் எடு.

எத்தனை முறை இன்னும் நான் காலத்தைப் படிப்பவனாகவே இருக்க வேண்டும்.
எத்தனை முறை காலத்தின் கணக்குகளை நான் கூட்டிக் கழித்துப்பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.

யார் இங்கே துன்பங்களைத் தேர்வு செய்கிறார்கள்.
யார் இங்கே குற்றங்களை கணக்குப் பார்க்கிறார்கள்.

கருணை என்பது நொறுங்கிப் போன ஒரு கண்ணாடிதான்.
காதலிகள் விலை போகிறார்கள். பணத்தின் பின்னால் ஓடுகிறார்கள்.
வெட்கம், மானம் என்பது பற்றி அவர்களுக்கு கவலை இல்லை.
கல்லறையைத் திறந்து போய் படுத்துக் கொள்ள வேண்டும் போல இருக்கிறது. இந்த உலகத்தையே அழித்துவிட வேண்டும் போல இருக்கிறது

----------- என்று முடியும் இந்தப் பாட்டு என்னை அழவும் வைத்திருக்கிறது, ஆறுதலும் தந்திருக்கிறது.

பியாசாவில் குருதத்தும் இதையே தான் சொன்னார். எரித்து விடுங்கள் இந்த உலகை. என் கண்களுக்கு அப்பால் கொண்டு செல்லுங்கள் இந்த உலகத்தை. இது உங்கள் உலகம் .....நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் இந்த உலகை.

சிலசமயங்களில் வெற்றியைப் போல ஒரு தோல்வி வேறு எதுவும் இல்லை. வெற்றியால் சிலர் வாழ்க்கையை நன்றாக வாழ்ந்து, அனுபவித்து, இன்பங்களையும் சொத்துகளையும் குவித்தாலும் அந்த வெற்றி என்பது ஒரு தோல்விதான்.

அதைவிட வலியும் கண்ணீரும் நிறைந்த என்னைப் போன்றவர்களின் தோல்விகூட உன்னதமானதுதான்.

நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெடப் புழுதியில் எரிவதுண்டோ, சொல்லடி சிவசக்தி என்று பாரதி கேட்ட அதே கேள்வியுடன் முடிக்கிறேன்.


-----------------------------------------------------------------------------------------------------------------------


இக்கட்டுரையின் பெரும்பகுதி- சில சிறிய பிழைகளுடன் சௌந்தர சுகன் சிற்றிதழின் பிப்ரவரி 2013 இதழில் பிரசுரமானது. இது திருத்தப்பட்ட வடிவம்.

















No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...