Wednesday 15 March 2023

கணவன் அமைவதெல்லாம் 1-5 செந்தூரம் ஜெகதீஷ்

( முன் எச்சரிக்கை. இதயம் பலவீனமானவர்கள் இத் தொடரைப் படிக்க வேண்டாம். பல அதிர்ச்சி கரமான திடீர் திருப்பங்கள் உள்ளன. ) 1 ##மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று கவியரசர் பாடியது உண்மைதான். எனக்கு என் மனைவி அமைந்தது தான் இன்று வரை நான் நலமாக வாழ காரணமாக உள்ளது. என் உறவுக்கார பெண் என்னை விட மூன்று வயது மூத்தவள்.19 வயதில் அவள் மீது தீராத காதல் கொண்டு விட்டேன். அவளுக்கும் அப்போது மிகவும் ஒல்லியாக இருந்த என்னைப் பிடித்திருந்தது. அவளும் ஒல்லி தான். இருவரும் காதலித்து வந்தோம். என் வீட்டில் எதிர்ப்பு இல்லை. நல்ல பெண் .ஆனால் நான் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடிந்தால் திருமணம் பேசலாம் என்று கூறினார்கள் என் பெற்றோர். அவள் தந்தைக்கும் சித்தப்பாவுக்கும் என்னைப் பிடிக்கவில்லை.வெட்டி விடுவதாக மிரட்டல் விடுத்தனர்.கட்டாயப்படுத்தி இனி அவள் உன் சகோதரி என்று கையில் ராக்கி கட்ட வைத்தனர். அவளுக்கு தமிழ் தெரியாது.நான் அவளுக்கு கடிதம் எழுதவே இந்தி கற்றுக் கொண்டேன். ஆனால் சகோதரி என்று பிரித்து விட்டதால் இரண்டு ஆண்டுகள் தொடர்பே இல்லை. கடிதங்கள் வரவில்லை. தபாலில் ராக்கி மட்டும் வந்தது. தனது அண்ணன் திருமணத்திற்கு அவள் கோவையில் இருந்து சென்னை வந்து இருந்தாள்.ஆனால் அவளை சந்திக்கவும் பேசவும் விடவில்லை. அப்போது நான் வேலை பார்த்த ஜவுளிக் கடையில் இலங்கைத் தமிழர் ஒருவர் இருந்தார்.வயதானவர்.மக்கா (மகனே )என்று அழைப்பார்.அவரிடம் எனது காதல் கதையை சொல்லி அழுவேன்.சாக வேண்டும் என்று கூற நிறைய புத்தி சொல்லி பார்த்து வேறு வழியின்றி அவர் எனக்காக தூக்க மாத்திரைகளை வாங்கி வந்து தந்தார். மனம் நோக 50 தூக்க மாத்திரைகளையும் சாப்பிட்டேன். அவள் அண்ணன் திருமணம் நடந்த மண்டபம் வாசலில் போய் மயங்கி விழுந்தேன். ஆட்டோவில் அள்ளிப் போய் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மூன்று நாளுக்கு பிறகு சுயநினைவு திரும்பியது.அவளைப் பார்க்க துடித்தேன். இரண்டு நிமிடங்கள் பார்க்க அனுமதி கிடைத்தது.நலமா என்று விசாரித்து ஓரிரு வார்த்தை பேசினேன். நான் உன்னை சகோதரியாக ( அக்கா) நினைக்க முடியாது என்று அழுதபடி கூறினேன். அழைத்துப் போய் விட்டார்கள். அதுவரைக்கும் கோவிலுக்குப் போகாமல் நாத்திகனாகவே இருந்தேன். கடவுளை நம்பு நல்லது நடக்கும் என்று அம்மா சொன்னதைக் கேட்டு காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் குளத்தில் நீராடி தரிசனம் செய்து வந்தேன். பிறகு ஒருமுறை திருச்சி போன போது நண்பன் ஒருவன் கரூர் அழைத்துப் போனான்.அமரவாதி ஆற்றில் நீராடும் போது கதறி அழுதேன். என் நண்பன் சொன்னான் எல்லா சம்பிரதாய தடைகளையும் உடைத்துப் போடு.நீ அவளை சகோதரியாக நினைக்காத போது உலகமே எதிராக நின்றாலும் கவலப்பட வேண்டாம். இப்போதே கோயம்புத்தூர் போய் அவளைப் பார்த்து பேசு என்று கூறி தன்னிடம் இருந்த அறுபது ரூபாயைக் கொடுத்தான்.கோவைக்கு அப்போது கரூரில் இருந்து 12 ரூபாய் தான் டிக்கெட். கோவையில் இருந்து சென்னை ரயிலுக்கு 28 ரூபாய். வேறு காசு இல்லை. துணிந்து கோயமுத்தூர் பஸ் ஏறி விட்டேன் 2 கோயமுத்தூருக்கு நான் கையில் 60 ரூபாயுடன் கரூரில் இருந்து பஸ் ஏறியது இரண்டாவது முறையாக அந்த ஊருக்கு நான் செல்லும் பயணம். முதல் முறை எங்கள் காதல் எங்கள் இருவருக்கும் மட்டும் தெரிந்து இருவரின் வீட்டுக்குத் தெரியாத போது நான் என் அப்பாவின் பகுதி நேர ஊதியமான 70 ரூபாயை திருடிக் கொண்டு வீட்டில் சொல்லாமல் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் ஏறினேன். இரவில் கோவையில் இறங்கி ஆட்டோ பிடித்து அவள் வீட்டில் இறங்கினேன். அவள் வீட்டார் ஆச்சரியம் அடைந்து என் வீட்டுக்கு போன் போட்டு விசாரித்த போது, வீட்டில் கோபித்துக் கொண்டு வந்து விட்டதாகவும் கோவையை சுற்றிப் பார்க்க ஆசை என்றும் கூறி சமாளித்து விட்டேன். இரண்டு மூன்று நாட்கள் அவள் வீட்டிலேயே தங்கியிருந்து மனம் விட்டு பேசவும் பழகவும் முடிந்தது. அவள் தம்பியை அழைத்துக் கொண்டு தப்புத் தாளங்கள் சினிமா பார்க்க போகவும் அவள் தந்தை அனுமதி கொடுத்திருந்தார். நாங்கள் சேர்ந்து பார்த்த முதல் படம் அதுதான். அதன் பிறகு பிரியா விடை பெற்று ஊர் திரும்பி வீட்டில் எல்லோரிடமும் செம்மையாக வாங்கிக் கட்டிக் கொண்ட போததுான் அவளைக் காதலிப்பதாகக் கூறினேன். இதெல்லாம் நடந்து விட்டபிறகு ராக்கி கட்ட வைக்கப்பட்டதும் தூக்கமாத்திரை சாப்பிட்டதும் பற்றி போன அத்தியாயத்தில் எழுதி இருந்தேன் அல்லவா....இந்த முறை அவள் வீட்டுக்குப் போக முடியாது .ஒரே நாளில் சென்னைக்குத் திரும்ப வேண்டும். கையில் பணம் இருக்காது .உணவுக்கே காசில்லை. அவள் வெளியே தண்ணீர் பிடிக்க வரும் வரை ஆறேழு மணி நேரமாக காந்திபுரத்தில் உள்ள அவள்வீட்டை சுற்றிச் சுற்றி வந்தேன். டீ சாப்பிட்டு சாப்பிட்டு பசியாற்றிக் கொண்டு இருந்தேன். அந்த இடம் போலீஸ் காலனி வேறு.யாராவது சந்தேகக் கேசில் பிடித்து விடக்கூடும் என்ற பயம்வேறு. ஒருவழியாக மாலையில் அவளை சந்திக்க முடிந்தது. கையில் குடத்துடன் வந்து சில நிமிடங்கள் பேசினாள். நான் மறக்காமல் அவளை சந்திக்க வந்ததில் அவளுக்கும் மகிழ்ச்சி .அவள் இரவில் மீண்டும் வந்து வேலிக்கு அருகில் நின்று மூன்று சப்பாத்திகளைக் கொடுத்துச் சென்றாள். சக்கரையுடன் அதனை சாப்பிட்டு ரயில் பிடித்து சென்னைக்குத் திரும்பினேன். காலையில் இருநது கிடைத்த உணவு அதுமட்டுமாதான். அதன் பிறகு அடிக்கடி கடிதங்கள் மூலமாக காதலை வளர்த்து வந்தோம். மூன்று நான்கு ஆண்டுகளாக சந்திக்கும் வாய்ப்பே அமையவில்லை.அவள் ஆறுமாதகாலம் உறவினர்கள் வீட்டுக்கு புனே போய் விட்டாள். புனே போகுமளவுக்கு என்னிடம் காசு இல்லை. தொடர்ந்து காதலிப்பதா மறந்து விடுவதா என்று தெரியாமல் காலம் இழுத்துக் கொண்டிருந்தது. மறக்கவும் முடியவில்லை. அப்போது சிறிது காலம் எனக்கு வேறு ஒரு பெண் மீது காதல் ஏற்பட்டது .அவள் ஒரு தமிழ்ப் பெண். பாவாடை தாவணி கட்டியிருப்பாள் அவளுக்கு நான் காதல் கடிதங்கள் எழுதித் தர வாங்கி பாவாடையில் ஒளித்துக் கொள்வாள். அவளும் ஓரிரு வரிகளில் நலம் விசாரித்து பதில்கள் எழுதுவாள். ஒரு முறை படிக்கட்டில் ஏறிச் சென்றுக் கொண்டிருந்த அவளை வழி மறித்து இடுப்பில் கை வைத்து இழுத்து அவள் பிளாஸ்டிக் வளையல்களை அணிந்த கையைப் பிடித்தேன். மறுக்காமல் சிரித்தாள். முத்தமிட முயன்ற போது விடுபட்டு வெட்கத்தில் ஓடி விட்டாள். ஆனால் அந்தக் காதலு்ம் நிலைக்கவில்லை. அவளுக்கு விரைவில் திருமண ஏற்பாடு ஆகி விட்டது. காதலை அவளுக்கு சொல்லாமலும் சொல்லியும் சொல்லாமலும் சொல்லியும் பயனில்லாமலும் அழுதுக் கொண்டே அவள் திருமணத்துக்குச் சென்று விருந்து சாப்பிட்டு விட்டு வந்தேன். இன்று வரை அவளை மீண்டும் சந்திக்கவில்லை. அதன் பிறகு இலக்கியக் கூட்டங்கள், கவியரங்கங்கள் என்று போகும்போது ஆறேழு பெண்கள் அழகாகக் கண்ணில் பட்டனர். ஆனால் யாரையும் காதலிக்கத் தோன்றவில்லை. மனம் முழுவதும் கோயமுத்தூரில்தான் இருந்தது. மீண்டும் ஒருமுறை என் காதலின் முடிவை அறிந்து கொள்ள கோவைக்குப் போய் வர முடிவு செய்தேன். 3 கோயமுத்தூருக்கு அடுத்து ஒருமுறை அல்ல நான்கு முறை போய் வந்தேன். ஒருமுறை அவளைப் பார்க்கவே முடியவில்லை. மற்ற மூன்று முறை திருடனைப் போல் ஒளிந்து ஒளிந்து பார்க்க முடிந்ததே தவிர பேச முடியவில்லை. அவள் அண்ணி அம்மா, தம்பி அண்ணன் என யாராவது அருகில் இருந்தனர். அவள் என்னைப் பார்க்கவில்லை. நான் வந்திருப்பதே அவளுக்குத் தெரியாது .இருவருக்கும் இடையே கடிதப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு விட்டது. இத்தகைய சூழ்நிலையில் தான் அவளை புனேவுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவள் உறவுமுறை பையன் ஒருவனுடன் திருமணப் பேச்சு நடப்பதாக தகவல் கிடைத்தது. மேலும் எனது உறவினர்கள் இருவரிடம் அவள் நெருங்கிப் பழகுவதாகவும் வதந்தியைப் பரப்பி விட்டு என்னை நம்ப வைத்தனர். நான் நம்பிக்கை இழக்கலானேன். அப்போது என் வீட்டிலும் எனக்குப் பெண் தேட ஆரம்பித்தார்கள். வெளிநாட்டில் இருந்து தம்பி திரும்பி வந்தான். அவன் திருமணம் செய்து குடும்பத்துடன் இந்தியாவில் தொழில் நடத்தி வாழ நினைத்தான். அதற்கு மூத்த மகனான என் திருமணம் தடையாக இருந்தது. எனக்கு முதலில் திருமணம் நடத்தினால்தான் அவனுக்குப் பெண் கிடைக்கும் என்பதால் என்னை எப்படியாவது திருமணம் செய்து வைக்க எனது குடும்பத்தினர் முயன்றனர். எனக்கும் அப்போது வயது 25 ஆகி விட்டது. வீட்டின் நிர்ப்பந்தத்தின் பேரில் இரண்டு முறை பெண் பார்த்தேன். அதில் கண்ணாடி போட்ட ஒரு பெண்ணை எனக்கும் பிடித்திருந்தது. இரண்டு முறையும் அந்தப் பெண்களின் வீட்டாரால் நான் நிராகரிக்கப்பட்டேன். காரணம் எனது சம்பளம் அப்போது 400 ரூபாய் மட்டுமே. சொந்த வீடு இல்லை. படிப்பு அதிகம் இல்லை. அழகாக இல்லை இப்படி நிறைய காரணங்களை அவர்கள் கூறினர். என் தம்பி யோசித்தான் பேசாமல் அண்ணன் விரும்புகிற பெண்ணையே திருமணம் முடித்து விட்டால் என்ன என்று யோசித்து எனக்காக பெண் கேட்டு அவன் கோவைக்குப் போனான். ஆடம்பரமான உடைகள், தங்கச்சங்கிலி, டிப்டாப் தோற்றம் கவரும் பேச்சு என்று தம்பி ஜெயித்துவிட்டான். அவள் தந்தை எனக்கு மகளைக் கட்டிக் கொடுக்க சம்மதம் தெரிவித்தார். அந்த ஏழு வருடங்களில் அவர்களும் எங்கெங்கோ மாப்பிள்ளைத் தேடி வரதட்சணை தர முடியாமல் மேலும் மேலும் வறுமையில் தள்ளப்பட்டதால் வேறு வழியின்றி ஒப்புக் கொண்டனர். திருமண ஏற்பாடுகளை நடத்தினர். அப்போது அம்மா அப்பா தம்பியோடு நான் மிகவும் அவமானகரமாக நடத்தப்பட்டேன். தம்பியின் செல்வாக்குவீட்டில் மேலோங்கியது. ஒரு புறம் ஏழு ஆண்டுகளாக காதலித்து அந்தக் காதல் நிறைய பிரச்சினைகளால் கிட்டதட்ட மரணப்படுக்கையில் கிடந்தது. மறுபுறம் பணம் தான் வாழ்க்கையில் பிரதானம் என்ற புதிய சவால் எனது தம்பி மூலமாக எனது குடும்பத்தில் மேலோங்கியது. நான் குறுக்கே இல்லை என்றால் எனக்குரிய பெண்ணை என் தம்பிக்கு மணம் முடிக்கவும் இருவீட்டாரும் திட்டமிட்டனர். ஆனால் இறைவன் அன்றே எழுதி வைத்தானே.....அவள் எனக்கு மனைவி என்றுமுடிவாகி விட்டது. தம்பிக்கு எளிதாக வேறு பெண் கிடைத்து விட்டாள். எனது திருமணத்துக்கு தம்பி பத்தாயிரம் ரூபாய் கொடுத்தான். அதில் துணி மணி எடுக்க நான் அப்பா வேலை செய்த ஜவுளிக்கடைக்குப் போனேன். முதல் முறையாக அப்பாவிடமிருந்து அன்பு பொழிந்தது. எந்த விலையானாலும் பரவாயில்லை நல்லதாக எடுத்துக்கோ என்று பாசத்தைக் கொட்டினார். எனக்கு தந்தையை ஏமாற்றி அவர் சம்பளப்பணத்தை எடுத்து என் காதலியைக் காண ஓடிப்போன நாள் நினைவுக்கு வந்து அழுதேன். பல நாட்களாக இந்தக் கல்யாணம் வேண்டாம் என்று தோன்றியது. என் கையில் பணம் இல்லை. நிறைய சம்பளம் இல்லை. தம்பியின் தயவில் திருமணம் செய்ய வேண்டும். வீட்டில் அவன் பக்கம்பேச்சு இருந்தது. ஒப்பிடல் இருந்தது. நான் மெல்ல மெல்ல எனது கவனத்தை இலக்கியத்தின் பக்கம் திருப்பியிருந்தேன். என் வீட்டில் எப்போதும் நண்பர்கள் சூழ்ந்தனர். ஆண்களுடன் நான்கைந்து பெண் கவிகளும் அடிக்கடி வீட்டுக்கு வந்தனர். பிற்காலத்தில் புலவர் புலமைப்பித்தன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தனி செயலாளராகப் பணி புரிந்த தமிழ் ஆசிரியர் புலவர் சங்கரலிங்கம் தலைமையில் நாங்கள் செந்தூரம் இலக்கிய வட்டம் என்ற அமைப்பை ஏற்படுத்தி மாதம் ஒரு கவியரங்கம் நூல் வெளியீடு இலக்கிய கருத்தரங்கம் நடத்திக் கொண்டு இருந்தோம். அப்போது சாரு நிவேதிதா விமலாதித்த மாமல்லன், குட்டி ரேவதி எல்லாம் வாசகர்களாக பார்வையாளர்களாக அமர்ந்திருப்பார்கள். அடிதடி எல்லாம் நடக்கும். திருமணத்தில் ஆர்வம் இழந்த நிலையில் எனக்குத் திருமணம் உறுதியானது. ஏழு வருடங்களாக ஆசைப்பட்டவளையே மணக்கக்கூடிய மகிழ்ச்சியும் கனவுகளும் எனக்கு இல்லை. கண்ணீரும் ஏமாற்றமும் கோபமும்தான் மிஞ்சியிருந்தது. நாளை திருமணம் என்ற நிலையில் திருமணம் வேண்டாம் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு மீண்டும் ஒரு முறை நான் வீட்டை விட்டு ஓடிப் போனேன். அன்று பலத்த மழை பொழிந்துக் கொண்டிருந்தது.எங்கே போவேன் என்று தெரியவில்லை. ஏன் நான் திருமணத்தை விரும்பவில்லைஎன்று தெரியவில்லை. ஒரு பெண்ணோடு வாழ முடியுமா கையில் பணம் இல்லாமல் என்ற பயம் ஆட்டிப்படைத்தது. அந்தப் பெண்ணை என் உறவினர்களோடு புனே மாப்பிள்ளையோடு என் தம்பியோடுஇணைத்து பேசப்பட்டதும் ராக்கி கட்டியதும் மனரீதியாக பாதித்து இருந்தது. மன நிலைப் பிறழ்ந்தவனைப் போல் ஆகிப்போனேன். திருமணம் செய்த பிறகும் அவளை அவள் விரும்பும் நபரோடு அனுப்பி விடவேண்டும் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் அவள் யாரையும் விரும்பவில்லை (இன்று வரை) அவளுக்கு ஒரேயொரு காதலன்தான் அது நான்தான் என்று மிகவும் தாமதமாகத்தான் தெரிந்தது. அன்று பலத்த மழை பெய்த நாளில் இரவு நேரத்தில் வீட்டை விட்டு ஓடிப்போனேன். இரவு காட்சி இந்தி சினிமாவுக்குப் போனேன் .அசோக் என்றொரு தியேட்டர் எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்தது. அந்தத் திரையரங்கில் பிளாக் மெயில் என்றொரு படம் ரிலீசாகியிருந்தது. தர்மேந்திரா ராக்கி நடித்தது. அதில் கிஷோர் குமார் பாடிய பல்பல் தில்கே சாத் பாடல் மிகவும் பிரபலம் .ஒவ்வொருகணமும் நீ என் இதயத்துடிப்பில் இருக்கிறாய் என்று கூறும் பாடல் .படத்தில் ராக்கியின் பெயரும் எனது நாளைய மனைவியின் பெயரும் ஒன்று. இரண்டுபட்ட மனநிலையுடன் படம் பார்த்து கொட்டும்மழையில் நனைந்தபடி நடந்து சென்று சென்ட்ரல் அருகில் பெரியமேட்டில் உள்ளஒரு டீக்கடையில் ஒதுங்கினேன். இரவு மூன்று மணிக்கு டீக்கடையை அடைத்த போது போக்கிடமற்றவனானேன். வேறு வழியின்றி மெல்ல நடந்து வீட்டுக்குத் திரும்பினேன். விடிந்தால் திருமணம். விடிந்தது. 4 விடிந்தால் கல்யாணம். விடிந்தது. கு.ப.ராஜகோபாலனின் விடியுமா என்ற கதையில் உயிருக்குப் போராடும் கணவரோடு பயணிக்கும் மனைவி விடிந்ததும் பயணத்தின் முடிவில் கணவரின் இறப்பு செய்தியைக் கேட்பது போலத் தான் எனக்கும் அன்றைய தினம் விடிந்தது. இறந்தது நான்தான். இது எனது கதை. காதல் கதை, குடும்பக் கதை சொந்த மனைவியைப் பற்றிய கதை. இதில் எவ்வளவு சொல்வது எதைச் சொல்வது எதை மறைப்பது எதை சொல்லக்கூடாது என்று என்னால் யோசிக்க முடியவில்லை. மனதில் பட்டதை எழுதுகிறேன். முடிந்தவரை யாரையும் காயப்படுத்தி விடக்கூடாது என்றுதான் யோசிக்கிறேன். ஆனால் சில கசப்பான உண்மைகளை எழுதும்போது சிலரை அது காயப்படுத்தினால் நான் என்ன செய்ய...முதலில் காயம் பட்டவன் நான்தானே. ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் ஒருமுறை தான் என்று சமுதாயம் நிர்ணயித்துவிட்டது. அதனால்தான் திருமணங்கள் ஆடம்பரமாக நடத்தப்படுகின்றன. மேள தாளம் ஆடல் பாடல் நகை துணிமணி விருந்து உறவினர்கள் நட்புகள் சூழ என்று அத்தனை மகிழ்ச்சியான தருணங்களும் கொண்டாடப்படுகின்றன. ஆனால் இந்த மகிழ்ச்சி எதையுமே எனது திருமணத்தில் நான் அடையவில்லை ,அதுவும் ஏழு ஆண்டுகளாகக் காதலித்து மணக்கப் போகும் பெண்ணுடன். காலையில் 11 மணிக்குத் திருமணம் .மதியம் வரை சடங்குகள். அய்யர் அக்னி வளர்த்து மாலை மாற்றச் செய்து மங்கல் சூத்திரம் ( தாலி ) கட்டவைத்து ஏழு சுற்று சுற்ற வைத்து இவளை நான் வாழ்நாள் முழுவதும் கண்கலங்காமல் பாதுகாப்பேன் என்று சத்தியப் பிரமாணம் வாங்கிக் கொண்டார். மதியம் பசி நேரம் திருமணச் சடங்குகள் முடிந்தன. ஒருவாய் சாப்பிட்டோம். தூங்கி விட்டோம். மாலையில் செம்மையாக மழை கொட்டியது. மழை என்றால் பேய் மழை .யாரும் திருமணத்துக்கு வரமாட்டார்கள் போல இருந்தது. என் நெருங்கிய நண்பர்கள் சூர்யராஜன், நந்தா, சுதா ,நரசிம்மமூர்த்தி உள்பட பலர் வந்துவிட்டனர். வண்ணை வளவன் எஸ்.அறிவுமணி வந்தார்களா என்று நினைவில் இல்லை. கோட்டு சூட்டுடன் நான் மாப்பிள்ளையாகக் காட்சியளி்த்தேன். என் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. ஏதோ ஒரு துன்பம் ஆட்டிப் படைத்தது. என்னை நம்பி வந்து விட்ட ஒருத்தியை கடைசி மூச்சு வரை காக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். அதற்கேற்ப அவள் தோழி ஒருவர் அண்ணா இது ரொம்பவும் கஷ்டத்தைப் பார்த்து வந்த பொண்ணு .கண் கலங்க வச்சுராதீங்க அண்ணா என்று கோவைத் தமிழில் கண்ணீர் மல்க கைகூப்பி வேண்டிக் கொண்ட போது எனக்கு அழுகை வந்தது. இல்லைம்மா என் உயிருக்கு உயிராக நேசிப்பேன் .பாதுகாப்பேன் என்று சத்தியம் செய்தேன். திருமண வரவேற்பு முடியவும் மழை நிற்கவும் நள்ளிரவு ஆகி விட்டது. தனி அறையில் விடப்பட்டோம். அதுவரை ஒரு பெண்ணைக் கூட நான் தொட்டது இல்லை. ஒரேயொரு முறை வேறு ஒரு பெண்ணின் இடுப்பைத் தொட்டு கையைப் பிடித்து இருப்பதை ஏற்கனவே எழுதி இருக்கிறேன். இவளை நான் இதுவரை தொட்டது இல்லை என்று அச்சம் பரவியது. படபடப்பு அதிகரித்தது.திருமண மேடையில் கையைப் பிடிக்கும் போதும் எனக்கு மகிழ்ச்சியை விட படபடப்பு அதிகமாக இருந்தது. அன்று இரவு எனக்கு திடீரென காய்ச்சல் பிடித்தது. ஆறேழு நாட்கள் காய்ச்சல் .அவள் படுக்கையில் அமர்ந்து கண்ணீர் விட்டதைக் கண்டேன். பணிவிடைகள் நிறைய செய்தாள். தூக்கம் மயக்கம் என்று ஏழு நாட்கள் கழிந்த பிறகுதான் கணவன் மனைவியாக ஆனோம். திருமணமான புதிதில் முதன் முதலாக அவளை ஒரு சினிமாவுக்கு அழைத்துப் போனேன். சுபாஷ் காய் இயக்கி ஜாக்கி ஷெராப், மீனாட்சி சேஷாத்திரி அறிமுகமாகி நடித்த ஹீரோ என்ற படம் தான் அது. அப்போது பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் இருந்த புவனேசுவரி திரையரங்கில் அந்தப் படம் ரீலீசாகியிருந்தது. படம் காதல் கதை பிரிவுக்குப் பிறகு மீண்டும் காதலர்கள் ஒன்று சேர்வார்கள். இனிய பாடல்கள் நிறைந்த படம். ஆனால் நாங்கள் பேசிக் கொண்டே இருந்தோம். படம் பார்க்கவில்லை. அதன் பிறகு நான் ஆறேழு முறை அந்தப் படத்தைப் பார்த்து விட்டேன். நாங்கள் பேசினோம் என்பதும் சரியல்லை. நான்தான் அதிகமாகப் பேசினேன். என் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்றும் எனது கவிதைகள் இலக்கியம் நண்பர்கள் லட்சியம் மார்க்சீய ஈடுபாடு, கடவுள் மறுப்பு பணத்துக்கு எதிரான என் மனநிலை, செல்வந்தர் ஆவது அடுத்தவரின் சுரண்டல் மூலம்தான் என்ற கம்யூனிசக் கருத்தியல் ஆகியவற்றை எல்லாம் ஒரே நாளில் அவளுக்குப் புரிய வைக்க முயற்சி செய்தேன். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. தலையை ஆட்டிக் கொண்டே துணை இருப்பேன் என்று மட்டும் கூறினாள். ஒரு புறம் என் தம்பி பணம் சம்பாதிக்கலானான். நான் இருக்கிற வேலையை எல்லாம் விட்டு விட்டு இலக்கியக் கூட்டங்களுக்கும் சினிமாக்களுக்கும் போகலானேன். தம்பிக்குத் திருமணம் நடந்தது. அவன் மனைவியை மகாராணி போலவும் என் மனைவியை வேலைக்காரி போலவும் நடத்தினார்கள். யாரும் அவளை பாவம் ஓர் ஏழைப்பெண் என்று நினைக்கவில்லை. மாறாக அவள் உழைக்கவே அழைத்து வரப்பட்டவள் போல அவள் மீது சமையல் முதல் துணி துவைப்பது வரைக்கும் எல்லா சுமைகளையும் திணித்தனர். அந்தக் கோபத்தை அவள் என் மீது கக்க ஆரம்பித்தாள் . ஆறு ஆண்டுகள் வரை சகித்துக் கொண்டிருந்தவள் அப்படி இனி சகிக்க முடியாத சூழலை என் குடும்பத்தினர் ஏற்படுத்தி விட்டிருந்தனர். அதே நேரத்தில் அவள் குடும்பத்தினரும் பெரும் பிரச்சினைகளில் சிக்கியிருந்தனர். நான்கு அண்ணன் தம்பிகள் இடையே ஒரே பெண். தந்தை சம்பாதித்து அழித்து விட்டார். இரண்டு அண்ணன்கள் குடி சூதாட்டம் என்று எல்லா கெட்டப் பழக்கங்களுக்கும் அடிமையாகி விட்டனர். இரண்டு தம்பிகள் படிக்க வழி இல்லை. அவள் அம்மா அப்பா பிரிந்து விட்டனர். கிடங்குத்தெருவில் என் மாமனார் ஒரு கதாபாத்திரமாக வருவார். என் மாமியார் இளம் வயதில் தன் பிறந்த வீடான புனேவிற்கு சென்ற போது பைத்தியம் பிடித்து விட்டது.அந்த சமயத்தில் கருத்தரித்துப் பிறந்தவள் என் மனைவி. ஆதலால் அந்த பாதிப்பு அவளுக்கும் மூளையில் இருப்பதை மிகவும் தாமதமாகவே நான் புரிந்துக் கொள்ளத் தொடங்கியிருந்தேன்.மிக அதிகமான கோபம் கொண்ட ஒரு பெண்ணாக இருந்தாள். எடுத்ததெற்கெல்லாம் எரிந்து விழுவாள். சுட்டெரிப்பாள். நான் சமாதானம் செய்து விடுவேன். ஆனால் அதற்குள் விதி பலமாக விளையாடி விட்டது. எங்கள் இருவருக்கும் இடையே தினமும் எப்போதும் சண்டை மூண்டது.வாக்குவாதம் வசைகள் அதிகரித்தது. ஒரு முரண்பட்ட கலவையாக அவள் ஒரு புதிய தோற்றம் கொண்டு என் முன் நின்றாள். அவளைத் தண்டிக்க முடியாத போது பல சந்தர்ப்பங்களில் நான் என்னையே தண்டிக்கத் தொடங்கிவிட்டேன். 5 எனது மாமியாருக்கு மனப்பிறழ்வு ஏற்பட்டதனால் அந்த பாதிப்பு அவர் குடும்பம் முழுவதிலும் இருந்தது. இப்படி எழுதுவதனால் எனது மனைவியை நான் மனநோயாளி என்று கூறுவதாக அர்த்தம் அல்ல, மனநல பாதிப்பு வேறு மனநோய் வேறு.மனநோயாளி என்று என்னை வேண்டுமானால் சொல்லலாம். அவளை சொல்ல முடியாது அத்தனை நல்ல குடும்ப நிர்வாகி. நிதி நிர்வாகம் வீட்டு பராமரிப்பு சுத்தம் பக்தி உழைப்பு அன்பு பாசம் அபாரமான சமையல் கலை எல்லாம் நிறைந்த ஒரு பெண்ணைத்தான் இறைவன் எனக்கு தந்திருக்கிறான். இப்படி மனைவி அமைவதெல்லாம் வரம் தான். ராஜேஷ் கன்னா ஸ்மிதா பட்டீல் நடித்த Aakhir Kyon படத்தில் ஒரு பாடல் வரும்...என் மனைவிக்கு இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும் .ஏன் படியுங்கள் புரியும். .கணவன் வேறு ஒரு பெண்ணுக்காக தன்னை விட்டுச் சென்றதை நினைத்து துரோகத்தின் வலியால் கதாநாயகி பாடுகிறாள். (லதா மங்கேஷ்கரும் அமித்குமாரும் பாடிய பாடல் இசை ராஜேஷ் ரோசன். பாடலாசிரியர் இன்டிவர்) எதிரிகள் கூட செய்யத் துணியாத ஒரு காரியத்தை என் நண்பன் செய்து விட்டான். உயிர் உள்ள வரை மறக்க முடியாத ஒரு துன்பத்தை பரிசாகத் தந்து விட்டான்.... சுயநினைவை இழக்கச் செய்து கொடுமைகளை திணித்தவன்தான் என்னை பைத்தியம் என்று கூறும் பழியை சுமத்தினான் என்று அவள் பாடுவாள். அவளுக்கு ஆறுதல் கூறும் வகையில் ராஜேஷ் கன்னாவும் பாடுவார்... சொந்த பந்தங்கள்தாம் எப்போதும் துன்பத்தைத் தருவார்கள். அந்தத் துன்பத்தை சில நல்ல அந்நியர்கள் வந்து தாங்கிக் கொள்வார்கள்..... இந்தப் பாடலில் ஸ்மிதா பட்டீல் பாடும் Diwaanagi kaa Diwaanagi kaa phir Hame ilzaam diyaa hain என்ற வரியை கேட்கும் போது என் மனைவி மீது பைத்தியம் மனநலம் பிறழ்ந்தவர் என்றெல்லாம் பழி சுமத்துவது எவ்வளவு பெரிய தப்பு என்று புரியும். அவள் மிகவும் புத்திசாலி. எனக்குக்கூட அவள் அறிவு கிடையாது.பைத்தியம் இங்கு நான்தான். இப்படித்தான் என்னை நான் தண்டித்துக் கொள்ள ஆரம்பித்தேன். எப்போதும் இறந்துவிடவே நினைத்தேன். தற்கொலைக்கான மனநிலையில் இருந்தேன். உடுமலை மஞ்சுளாதேவி ஒரு நல்ல மன நல மருத்துவரைப் பாருங்கள் என்று மருதமலை கோவில் வாசலில் நண்பர்களுடன் அமர்ந்திருந்த போது கூறினார். அப்போது தான் நான் கோவிலுக்குப்போக ஆரம்பித்திருந்தேன். ஆனால் வேகமாக நண்பர்களை குறிப்பாக தோழிகளை இழந்துவிட்டேன். எப்போதும் சாவு பற்றியே சிந்திக்கிற பேசுகிற ஒருவனை யார்தான் சகி்ததுக்கொள்ளமுடியும்? மஞ்சுளாதேவி போன்ற கொள்கையும் ஒழுக்கமும் நிறைந்த நட்புகள் நீடித்திருந்தால் என் வாழ்க்கை சரியான தடத்தில் போயிருக்கும். என் ஆறுதலுக்காகவும் தாம்பத்திய வாழ்வி்ன் போதாமைகளுக்காகவும் நான் வேறு சில பெண்களுடன் நட்பாகப் பழக ஆரம்பித்தேன். ஓரிரு பெண்கள் என்னைக் காதலிப்பதாகவும் கூறினார்கள் . அவர்களும் சில மாதங்கள் பழகியதும் விலகிப் போனார்கள். நீங்கள் ரொம்ப நல்லவராக இருக்கீங்க... ரொம்ப நல்லா பேசுறீங்க... நல்லா அன்பு செலுத்துகிறீங்க நல்லா பழகுறீங்க பின்னர் ஏன் யாரும் உங்களை விரும்பாமல் விலகிப் போறாங்க என்று கேட்ட ஒருத்தியும் உங்களை வாழ்நாள் முழுக்க சிரிக்க வைப்பதுதான் என் லட்சியம் என்று பேசிய ஒருத்தியும் கூட இரண்டு மற்றும் இரண்டு மாதங்களில் எந்தவிதக் காரணமும் கூறாமல் விலகிப்போனார்கள். அது என் ராசி அப்படி என்று எண்ணிக் கொண்டேன்.அதன் பிறகு பதினைந்து ஆண்டுகளுக்கு ஒரு பெண்ணை க் கூட என் வாழ்க்கையில் நான் அனுமதிக்கவில்லை.இரண்டு மாதங்கள் பழகி விலகிப் போன, என்னை சிரிக்க வைப்பதாக சத்தியம் செய்த ஒருத்தியின் நினைவில் நான் என் மனைவியோடு விலகியும் விலகாமலும் உடனிருந்தும் வாழ்ந்து வந்தேன். அந்தப் பெண் தான் பிறகு கிடங்குத் தெரு துளசியானாள். ஆனால் பல வருடங்களுக்கு முன்பு கோவை ஞானி ஒருமுறை பேசும்போது என் மனைவியைப் பற்றி அவள் குணாதிசயங்கள் பற்றி அவளுக்கும் எனக்குமான பிரச்சினைகள் பற்றி எல்லாம் மனம் விட்டு ப் பேசினேன். அப்போது ஞானி ஒரு அற்புதமான விஷயத்தை சொன்னைார். அய்யா நீங்க உங்கள் பார்வையிலே அவளைப்பார்க்கறீங்க... உங்கள் பிரச்சினைகள் உங்கள் எண்ணங்கள் உங்கள் துன்பங்களைக் கூறுகிறீர்கள் . உங்கள் கவிதைகள் முழுவதும் அது காணக்கிடக்கிறது. ( இன்னும் மி்ச்சமிருப்பவை தொகுப்புக்கு ஞானி அவர்கள் முன்னுரை அளித்தார் ) எல்லாக் கவிதைகளும் உங்கள் துன்பத்தைப் பேசும் விதமாக உள்ளன. எப்போதாவது உங்கள் மனைவியின் பார்வையில் உங்களைப் பார்த்து இருக்கிறீர்களா...?.அவள் எண்ணம் என்ன என்று கவிதையாக எழுதி இருக்கீங்களா...? அப்படி ஒரு கவிதை இல்லை என்றால் இந்தத் தொகுப்பை நிறைவாக எண்ண முடியாது .ஒரு கவிதை அப்படி எழுதி சேர்த்து வெளியிடுங்கள் என்று கூறினார் ஞானி. நெருப்பு போல ஒரு உண்மையை சுட்டெரிக்கும் விதமாக சொல்லி விட்டார் ஞானி. சார்லி சாப்ளின் நினைவுக்கு வந்தார். நம் காலை ஒருவர் மிதித்து விட்டால் அவர் தான் ஸாரி சொல்லனும்.அப்படித்தான் நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால் அவர் சொல்லும் முன்பு ஸாரி என்று நாம் கூறுவதே மேன்மை என்பார் சாப்ளின். நீங்கள் தெரிந்து என் காலை மிதிக்கவில்லை. தெரியாமல் மிதித்து விட்டீர்கள் .உங்கள் காலால் மிதிபடும் இடத்தில் நான் என் காலை வைத்து இருக்கக் கூடாது . அது என் தவறுதான். என் காலை நீங்கள் மிதிக்கும் விதமாக இருந்ததற்காக என்னை மன்னித்து விடுங்கள் என்பது போல பேரன்பு கொண்டு பேசும் சாப்ளின் போல வாழக் கற்றுக் கொண்டேன். தவறுகள் என் மனைவியுடையதாக இருந்த போதும் தண்டனையை நான் வாங்கிக் கொண்டேன். ஞானி கூறியது போல அவள் பார்வையில் அவள் உணர்வுகளுடன் ஒரு கவிதை எழுதினேன். என் முதல் நூலான இன்னும் மிச்சமிருப்பவை (1999 )தொகுப்பில் இடம் பெற்ற அந்தக் கவிதை.........

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...