Wednesday 14 January 2015

பெருமாள் முருகன் மாதொருபாகன் சர்ச்சை

எழுத்தாளர் பெருமாள் முருகனை ஓரிரு முறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். ஒரு நண்பரைப் போல் அவரை எப்போதும் கருதியிருக்கிறேன். அவரது ஏறு வெயிலை கோவை விஜயா பதிப்பகத்தில் வாங்கி வாசித்த காலம் இன்னும் பசுமையாக நினைவுக்கு வருகிறது. நண்பர்களுடன் வடசென்னையில் இருந்த ஓடியன்மணி திரையரங்கு சென்று ஷகிலாவுக்கு முந்தைய காலக்கட்டத்தின் காலைக்காட்சி மலையாளப்படங்களைப் பார்த்த போது, ஓடியன்மணி போன்ற திரையரங்குகளை சித்தரித்த பெருமாள் முருகனின் நிழல் முற்றம் படித்து வியந்திருக்கிறேன். தொடர்ந்து அவர் எழுதிய விமர்சனங்கள், சிறுகதைகளையும் வாசித்து வருகிறேன். அவர் ஏழு நூல்கள் எழுதியது கவனத்தில் தவறிவிட்டது. மாதொரு பாகனும் தவற விட்ட நூல்தான். கடந்த சில ஆண்டுகளாக போதிய வருமானமும் சேமிப்பும் இல்லாமல் பல நூல்களை வாங்க இயலவில்லை. இலவசமாக நூல்களை கேட்பதில் நான் நிறைய கூச்சப்படுகிறவன். நூலகங்களுக்கு செல்லவும் வாசிக்கவும் செய்தாலும் பல புத்தகங்கள் கை நழுவிப் போய் விட்டன.
அண்மையில் மாதொரு பாகன் நாவலில் திருச்செங்கோட்டில் ஒரு வழக்கத்தை கற்பனையாக அவர் எழுதியது சர்ச்சைக்குள்ளானது. அது முழு கற்பனையும் அல்ல என்ற போதும்.
பெண்கள் கற்பு, தமிழ் உணர்வு, சாதி அரசியல், போன்றவை மின்சாரத்தை விட ஆபத்தானவை. அதில்தான் மாட்டிக் கொண்டிருக்கிறார் பெருமாள் முருகன் என்று நம்புகிறேன்.ஒரு எழுத்தாளர் இவற்றை கையாளும்போது சமூகப் பொறுப்புணர்வும் அவசியம்தான். ஒரு படைப்பால் சமூகத்தில் அமைதி உருவாக வேண்டுமே தவிர வன்முறையோ பதற்றமோ அல்ல.
ஆனால் சமுதாயம் படைப்பாளிக்கும் படைப்புகளுக்கும் ஆற்றும் எதிர்வினை வன்முறைதான். அல்லது என் போன்ற நுட்பமான படைப்பாளிகளுக்கு நேரும் புறக்கணிப்பு. இந்த பாவக்கறை பெருமாள் முருகன் மீதும் இருக்கிறது.அவர் எத்தனை நுட்பமான படைப்பாளிகளின் திறன்களை மதித்தார் என்பது இப்போது பிரச்சினையல்ல
இப்போது பிரச்சினை பெருமாள் முருகன் என்ற எழுத்தாளர் இறந்து விட்டார். இனி நான் பி.முருகன். என்னைை அமைதியாக வாழ விடுங்கள் என்று தமது முகநூல் பக்கத்தில் பெருமாள் முருகன் விடுத்த செய்திதான் தேசிய செய்தித் தொலைக்காட்சிகள் வரை தலைப்புச் செய்தியாகியிருக்கிறது.
THE AUTHOR IS DEAD என்று போஸ்ட் மாடர்னிச கொள்கையில் ஒரு கருத்தியல் உண்டு. அது தவறாக தமிழ்ச்சூழலால் புரிந்துக் கொள்ளப்பட்டதால் தான் பெருமாள் முருகன் போன்றவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். மறைந்த மணிக்கொடி எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராமன் இன்று என்ற பத்திரிகைக்கு அளித்திருந்த பேட்டியில் தமிழில் எழுத்தாளனாக பிறக்கவே கூடாது அது மிகப்பெரிய பாவத்திற்கான தண்டனை எனக் கூறியிருந்தார். இது பெருமாள் முருகன் வரை தொடர்கிறது. இதுவே ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தால் அருந்ததி ராய் மாதிரி கொண்டாடியிருப்பார்கள்.
ஆனால் பெருமாள் முருகன் ஒரு விஷயத்தில் சந்தோஷப்படலாம். அவர் இஸ்லாமைப் பற்றி எழுதவில்லை. மாதொருபாகனான சிவபெருமானைப் பற்றியல்லவா எழுதினார். அதனால் பிரச்சினை இத்துடன் விட்டது என ஆசிரியரை அவரே கொன்று விட்டு சாதாரண  பேராசிரியராக மற்ற நூற்றுக்கணக்கான மந்தைகளில் ஒருவராக வாழ்வது சுலபம்- ஈகோவை வி்டடுவிட்டால். இஸ்லாம் பற்றி எழுதியிருந்தால் சல்மான் ருஷ்டியைப் போலவோ, தஸ்லீமா நஸ் ரீனைப் போலவோ பத் துவா விதிக்கப்பட்டு மரண தண்டனைக்கு பயந்து நாடு நாடாக தப்பியோடிக் கொண்டிருக்க நேரிடும். சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தில் நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதலை எண்ணிப் பாருங்கள்.

பெருமாள் முருகனை நண்பர் என்றழைத்தேன். நட்புடன் ஒருவார்த்தை. தன்முனைப்பு, அகங்காரம், தான் ஒரு பெரிய படைப்பாளி என்ற பட்டங்களை இழக்க வேதனைப்படாதீர்கள். மகிழ்ச்சியுடன் LET GO சில ஆண்டுகள் குடும்பத்துடன் நிம்மதியாக வாழுங்கள். பின்னர் விரும்பினால் இன்னொரு புத்தகம் எழுதுங்கள்.வேறு பெயரிலும் எழுதலாம். அதற்கு சாகித்ய அகடமியும் கிடைக்கலாம். நாடே பாராட்டலாம்..வாழ்த்துகள்

ஒரேயொரு வேண்டுகோள்- தற்கொலை போன்ற பலவீனமான முடிவுக்குத் தள்ளப்படாமல் மனதின் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள். பல தடவை மனநலம் பாதிக்கப்பட்ட சூழ்நிலைகளில் ரயில் தண்டவாளங்களில் நின்று பெற்ற அனுபவ ஞானத்தையே உபதேசமாக அளிக்கிறேன்.












No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...