Friday 23 August 2013

தமிழ்ச்சூழ் நல்லுலகு




இலக்கியக் கூட்டங்கள் செந்தூரம் ஜெகதீஷ்
ஒரு மீள் பதிவு
சாகித்ய அகடமி மொழிபெயர்ப்பு விருதுகள் 2012 அழைப்பிதழ் திடீரென தேடி வந்தது. என்னை மறந்துப் போகாத யாரோ ஒரு நண்பர் ஞாபகமாக அனுப்பி விட்டார்.போனேன். தி.நகர் பிட்டி தியாகராஜர் அரங்கம் ஏசியிலும் புழுங்குமளவு கூட்டம் நிரம்பியிருந்தது. எனது அபிமான எழுத்தாளர் அசோகமித்திரன் மட்டும் வெள்ளை வேட்டி குர்தா சகிதம் எழுத்தாளர் போல இருந்தார். அவருக்குப் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அவர் வீட்டில் பூத்தொட்டி வைத்திருப்பதாக எனக்கு நினைவில்லை.
மேடையில் இருந்த மற்ற எல்லோரும் கோட்டு சூட்டு டை, பட்டுப் புடவை, ஆடம்பர ஆடைகள் அணிந்து ஏதோ சிஎம் மாநாட்டுக்கு வந்த மினிஸ்டர்கள் மாதிரி பளபளப்பாக இருந்தார்கள். வடமாநில எழுத்தாளர்கள் வசதியானவர்கள்தாம் போலும்.
நானும் இப்படி ஒருமுறை ஒருமேடையி்ல் அமர்ந்தேன்.
மைசூரில் எனக்கு பாஷா பாரதி விருது எனது கிடங்குத் தெரு நாவலுக்காக வழங்கப்பட்டது. அப்போது நானும் சுமாரான ஆடைகளுடன் மேடையில் பளபளப்பாக அமர்ந்திருந்தேன். பெரிய ஷால் போர்த்தி, ஷீல்டும் 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையும் தந்தபோது மிகவும் சந்தோஷமாக இருந்தது.
ஆனால் மற்றபடி எனது இலக்கியக் கூட்ட அனுபவங்கள் மிகவும் சிரமமும் வேதனையும் தருபவை.
அதிகபட்சமான மாத வருமானம் பத்து ஆயிரத்தைக் கூட தாண்டாத போது, 150 இலக்கியக் கூட்டங்களை சொந்தக் காசில் நடத்தியிருக்கிறேன். அசோகமித்திரன் பார்வையாளராக வந்துள்ளார். ஜெயமோகன், பிரபஞ்சன், நாஞ்சில் நாடன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், பெரியார்தாசன், சா.கந்தசாமி, வ.ஐ.செ.ஜெயபாலன், மு.மேத்தா, புலவர் சங்கரலிங்கம், மாலன், வல்லிக்கண்ணன், ஞானக்கூத்தன், இன்குலாப், சு.வேணுகோபால், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, லதா ராமகிருஷ்ணன், லீனா மணிமேகலை, பாத்திமா பாபு ,இயக்குனர் வஸந்த், உட்பட எத்தனையோ படைப்பாளர்கள் வந்து பேசியுள்ளனர்
ஒவ்வொரு கூட்டமும் ஒரு போராட்டம்தான். கையில் ஹால் கட்டணம் கட்ட 40 ரூபாய் கூட இருக்காது. தேவநேய பாவாணர் நூலக அரங்கில் சிறிய அறைக்கு அப்ப இதுதான் கட்டணம். பெரிய அரங்கு அப்போது ஆயிரம் ரூபாய். அது நம்மால் முடியாதது.
வானதி மாதிரி பெரிய பதிப்பகங்கள் வேண்டுமானால் நடத்தலாம். பின்னர் எங்களுக்கும் சிலநூறு செலவு செய்ய முடிந்த போது வசதியான நல்ல அரங்குகள் கிடைத்தன
எல்.எல்.ஏ.வின் அந்த சிறிய ஹால் 40 பேர் அமர தோதானது. இலக்கியக் கூட்டத்திற்கு இதுபோதும். கூட்டம் நடத்த பிட்நோட்டீஸ் அச்சிட இருநூறு ரூபாயாவது ஆகும். தபாலில் அனுப்ப மேலும் 200, நிகழ்ச்சியில் பேச்சாளர்களுக்கு தர தண்ணீர், பிஸ்கட், காபிக்கும் நண்பர்கள் கூட்டம் முடிந்து தண்ணியடிக்கவும் காசு எடுத்து வைக்க வேண்டும். பிரபஞ்சன் போன்ற மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய முழு நேர எழுத்தாளர்களுக்கு ஆட்டோ கட்டணத்தையாவது தரவேண்டும். இப்படியாக எல்லாம் சேர்த்து ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆகி விடும். பசியுடன் வீடு திரும்பும் போது மணி இரவு பன்னிரண்டு ஆகி விடும். கையில் சல்லிக்காசு மிச்சமிருக்காது. வீட்டிலும் சாப்பாடு போடாமல் மனைவி சண்டை போட்டு முதுகைக்காட்டி படுத்திருப்பாள். இலக்கிய சேவை செய்த திருப்தியுடன் படுத்துத் தூங்கி மறுநாள் பஸ்சுக்காக பழைய பேப்பர் புத்தகங்களை கடையில் போட்டு சமாளிக்க வேண்டியிருக்கும்.
ஆனால் இப்பவெல்லாம் இலக்கியக் கூட்டங்கள் களை கட்டுகின்றன. தமிழ் அறிஞர்கள் காரில் வந்து இறங்குகின்றனர். ஜெயமோகன் , எஸ்.ராமகிருஷ்ணன் வரத்தயார் என்றால் விமான டிக்கட்டும், சொகுசு அறை வாடைகையும் அளிக்க தயாராக பலர் உள்ளனர். இதே ஜெயமோகனின் விஷ்ணுபுரம் வெளியீட்டு விழாவை தேவநேய பாவாணர் நூலக சிறிய அறையில் நடத்தியபோது, ஜெயமோகன் எனது விருந்தினராக எனது வீட்டின் ஒரே அறையில் தங்கியிருந்தார். விஷ்ணுபுரம் கூட்டத்திற்கு ஆயிரக்கணக்கில் வாசகர்கள் திரண்டனர். அப்போது ஜெயமோகன் பிரபலமானவர் இல்லை, வந்தவர்களில் பலர் எனது சொந்த அழைப்பின் பேரில் வந்தவர்கள்தாம். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான் விஷ்ணுபுரமும் பரவலாக தெரிய ஆரம்பித்து, ஜெயமோகனும் பெரிதாகப் பேசப்பட்டார்.
இப்போது எல்லோரும் வசதியாகி விட்டார்கள். எல்லோரும் மறந்துவிட்டனர். அதே தேவநேயப் பாவாணர் அரங்கில்( பெரிய ஹால்) இன்னொரு நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஜெயமோகன் பார்க்கிங்கில் ஓரிரு விநாடி நலம் விசாரித்து முகம் திருப்பிக் கொண்டு போய் விட்டார். அப்போது நான் பெட்ரோலுக்கும் காசில்லாமல் வேலை இல்லாமல் இருந்தேன்.
எல்லோரும் சொந்த வீடு கார் வசதிகளுடன் இருக்கின்றனர், நான் மட்டும் இப்போதும் இலக்கியக் கூட்டம் நடத்தவும் பத்திரிகை நடத்தவும் காசில்லாமல் உள்ளத்தில் உற்சாகமும் இல்லாமல், எனது புத்தகங்களை அச்சிட ஆள் கிடைக்காமலும் அப்படியே இருக்கிறேன்.
--------------------------------------
இலக்கியம் என்பதன் பொருள் ஏணிப்படி சிலருக்கு.
சிலருக்கு அது சினிமாவுக்கான விசிட்டிங் கார்டு
சிலருக்கு அது சீரியல்களில் எழுதுவதற்கான அடையாளம்...
ஒரு நண்பர் கிரைம் தொடருக்கு சிற்றிதழ் பின்னணி உள்ள ஒருவர் இருந்தால் சொல்லுங்கள்...ஒரு எபிசோட்டுக்கு 3 ஆயிரம் தருவார்கள் என்றார். கூச்சத்தை விட்டு எனக்காக கேட்டேன். நான் எழுதட்டுமா என்பதை அவரால் ஜீரணி்க்க முடியவில்லை. தயக்கமாக பார்த்தார்.சிரித்தபடி சமாளித்து பாப்புலரான ஆளாப் பார்க்கிறீங்களா....மனுஷ்யபுத்திரன் கிட்ட கேட்கட்டுமா என்றேன். இல்லை இல்லை....நீங்க எழுதலாம் என்றவர் கேட்டு சொல்கிறேன் என்று காணாமல் போய்விட்டார்.
இப்படி கேட்டும் கேட்காமலும் எத்தனை பேர் வந்துப் போய்விட்டனர் என்பதை அறியாதவனல்ல நான்.
சிற்றிதழ், இலக்கியக் கூட்டம், தீவிர வாசிப்பு, கையிலிருக்கும் கடைசி பைசா வரை புத்தகம் வாங்கும் பித்து போன்றவை என்னைப் போன்ற பைத்தியங்களுக்கு விதிக்கப்பட்டிருப்பின் நான்தான் என்ன செய்ய முடியும்...
எண்பதுகளில் தமிழ், தொண்ணூறுகளில் தமிழ் என்றெல்லாம் தலையணை சைசில் புத்தகம் வெளியிடும் ஆய்வாளர்களுக்கு இந்த நிகழ்கால வரலாறு கண்ணுக்குத் தெரிவதே இல்லை.
அண்மையில் பாரதி பதிப்பகம் வெளியிட்ட மிகப் பெரிய தொகுப்பு நூலில் கூட எனது புத்தகங்கள் இடம் பெறவில்லை. டி.செல்வராஜ், தனுஷ்கோடி ராமசாமி, தமிழ்ச்செல்வன் போல எனக்கு எழுதத் தெரியாமல் இருப்பதால்தான் நிராகரிக்கிறார்கள் என்று ஆறுதல் சொல்லிக் கொண்டேன். ஒரு ஆய்வு நூலை வெளியிடும்போதும் இப்படிப்பட்ட கண்மூடித்தனமான போக்குகள் நிலவி வருகின்றன. நண்பர்கள், பிரபலமானவர்கள், இசம் சார்ந்த இயக்கம் சார்ந்தவர்கள் மட்டுமே படைப்பாளிகள் என்றால் என்னதான் செய்வது..
இன்றைக்கும் எனது கிடங்குத் தெரு தமிழில் எழுதப்பட்ட நாவல்களில் மிகவும் முக்கியமான புத்தகம் என்று பேசப்படுகிறது. திலீப்குமார், நாஞ்சில் நாடன், பிரம்மராஜன், பிரபஞ்சன், க.மோகனரங்கன், தங்கமணி, ஜெயவேல், சுகுமாரன், வசந்தகுமார் போன்ற சிலர் நட்புமுறையில் கிடங்குத் தெருவை மனம்திறந்து பாராட்டி இருப்பினும் என்னால் அதை விட பெரிய அங்கீகாரமாக நினைக்கத் தோன்றுவது பாஷா பாரதிக்காக இது தேர்வு செய்யப்பட்டதுதான். எனக்குப் போட்டியாக இருந்தது கி.ராஜநாராயணன். தாய்மொழி தமிழ் அல்லாத படைப்பாளிக்கான விருது அது. எனது தாய்மொழி சிந்தி. கி.ரா தெலுங்கு.
ஆனால் இப்புத்தகம் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் கி.ரா.வை வென்றது.. அந்த ஒரு ஓட்டு அளித்தவர் மைசூர் மத்திய மொழிவளர்ச்சி நிறுவனத்தின் இயக்குனரான உதய நாராயணசிங் அளித்த ஓட்டுதான். அவர் என்னை முன்பின் அறிந்திருக்காதவர். முதன்முறை சந்திக்கிறார். அப்போது அவர் கூறிய வாசகம் மிகவும் ஆழமாக மனதுக்குள் பதிந்துவிட்டது. இரவில் இந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். விடியும் வரை தூக்கம் போய்விட்டது. மனதை மிகவும் அலைக்கழித்தது. பரிசு தருவதானால் இதற்குத்தான் தரவேண்டும் என்று முடிவு செய்தேன் என்றார்.
இதுதான் உண்மையான அங்கீகாரம். இதே போல் நண்பர் சௌந்தர சுகன் பரிந்துரையின்பேரில் தஞ்சை ப்ரகாஷ் இலக்கிய விருதும் எனது நாவலுக்கு கிடைத்துள்ளது.
ஆனால் படைப்பின் ஆளுமை, இலக்கிய நேர்மை, சொந்தக் காசில் கூட்டம் நடத்தும் பத்திரிகை நடத்தும் இயக்க மனநிலைகளுக்கு அப்பால் கனடா, யுஎஸ், இலங்கை போன்ற என் ஆர் ஐக்களின் பணமும் மீடியா வெளிச்சமும்தான், அதில் கரையேறியவர்கள்தான் புகழ்ப்பெற்ற இலக்கியவாதிகள் என்றால் நான் அப்படியல்ல.
அய்யா உங்கள் டெரிலீன் சட்டை அவன் அடிவயிற்றிலிருந்து திருடியதுதானே என்ற புதுமைப்பித்தனின் எதிரொலிதான் நான்.
இன்றும் கூட கையில் பணம் இல்லாமல் பட்டினி கிடக்கும் நாட்களை சந்திக்கிறேன். இன்றும் தேவைகள் பெருகிக் கிடக்கின்றன. கடன்கள் வாட்டுகின்றன. இன்றும் நான் கண்ணாடி வாங்கவும் பல் கட்டவும் பணம் கிடைக்காமல் அல்லாடுகிற போதும் மூர்மார்க்கெட் போய் ரூமியின் வாழ்க்கையை பற்றிய புத்தகம் 150 ரூபாய்க்கு வாங்கி வந்து படிக்கிறேன்.
இன்றும் நான் நானாகவே இருக்கிறேன். குழந்தையாகவும் ஞானியாகவும். எனது தவறுகளை ஆழமாக பரிசீலிப்பவனாக இருக்கிறேன். மற்றவர்களை மன்னிக்கும் மனம் கொண்டிருக்கிறேன்.
அன்புக்காக இன்றும் ஏங்கிக் கொண்டிருக்கிறேன். உங்கள் டாஸ்மாக்குகளிலும் இலக்கியக் கூட்டங்களிலும் இலக்கிய வியாக்கியானங்களிலும் எனக்கு கிடைக்காதது அந்த அன்புதான்.





1 comment:

  1. https://www.facebook.com/photo.php?fbid=540926745977073&set=a.540926599310421.1073742352.100001792565524&type=1&theater

    //நண்பருக்கு....
    உங்களது கட்டுரை வாசித்து
    மனம் நோக
    என் ஃபேஸ்புக்கில் பதிந்திருக்கிறேன்.
    நன்றி...//
    -தாஜ்

    ReplyDelete

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...