Thursday 7 December 2023

சால் பெல்லோவின் ஹெர்சாக் -1

சால் பெல்லோவின் ஹெர்ஸாக் நாவல் –சில எண்ணங்கள் செந்தூரம் ஜெகதீஷ் மனப்பிறழ்வுக்கும் உலகின் மிகவும் உயர்ந்த இலக்கியத்துக்கும் ஓர் ஆழமான தொடர்பு உள்ளது. எந்த ஒரு மகத்தான கலைஞனும் முழு மன ஆரோக்கியம் உள்ளவனாக இருப்பதை காண முடிவதில்லை.. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பிகாசோவின் ஓவியங்களில் கைகால் உறுப்புகளை இழந்த மனிதர்களே பதிவானார்கள் என்பார் பிரபஞ்சன். சக மனிதர்கள் நண்பர்கள் காதலித்த பெண்கள் மணவாழ்க்கை முறிவுகள் சமூகத்தினர் போன்றவற்றால் கலைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அரசின் இரும்புச் சட்டம் தண்டிக்கப்படுவதற்கான அச்சம் திவாலாவதற்கான கவலைகள் கடன்கள் பாலியல் ஏக்கங்கள், ஒழுக்கவாதிகளின் புகார்கள் என்று பலவகைப் பிரச்சினைகளால் மகத்தான கலைஞர்கள் அலைக்கழிக்கப்படும் போது அவர்களின் நுண்ணுணர்வில் இருந்து தான் படைப்பாற்றல் கிளர்ந்து எழுகிறது. சாமான்ய மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதாக திருப்தி கொள்கிறார்கள். கலைஞர்களுக்கு அந்த திருப்தி எளிதில் கிடைப்பதில்லை. உரிய வயதில் திருமணம் ஆறேழு ஆண்டுகள் தீவிர காமம் பிள்ளைச் செல்வங்கள் பின்னர் சுற்றுலா ருசியான உணவு சேமிப்பு தொலைக்காட்சிகள் முன்பு முதுமை கழிதல் என்று பலரின் வாழ்க்கை எந்தவித சுவாரஸ்யமும் திகிலும் இல்லாமல் முடிந்து விடுகிறது. பெயர் பெற்று வாழ்ந்தவர்கள் பலரும் பெயர் நீங்கி பிணமென்று பேரிடப்பட்டு சுடுகாடு சென்று தீயில் கரைந்து காணாமல் போகிறார்கள். கலைஞன் ஒவ்வொரு கணமும் வாழ்கிறான். ஒவ்வொரு கணமும் இறக்கிறான். அவன் வாழ்வுக்கும் இறப்புக்கும் இடையில்தான் அவன் படைப்பாக்கம். பார்க்க நார்மலாகத்தான் இருக்கிறான். சிரிக்கிறான் ,குழந்தைகளுடன் விளையாடுகிறான், பெண்களை நேசிக்கிறான் மதிக்கிறான் பணிக்குப் போகிறான் வருகிறான் குடும்பத்தோடு இணக்கமாக இருக்கிறான். ஆனால் அவன் மனதுக்குள் ஒரு பேரலை பொங்கிப் பொங்கித் தணிகிறது. இவர் ஏன் இப்படிஇருக்கிறார் என்று சிலரைக் கேள்வி கேட்க வைக்கிறது. எப்போதும் உள்மனம் துயரத்தில தவிக்கிறது. தத்தளிக்கிறது. நிறைய ரகசியங்கள் ரணங்கள் உள்ளே கிடக்கின்றன. அவை எழுத்தாக மாறிவிட்டால் அதன் வலி குறையும் என்று அவன் நம்புகிறான். எழுத்து ஒன்றே நோயாகவும் மருந்தாகவும் உள்ள மனிதனுக்கு நீங்கள் எநத் லௌகீக மயக்கங்களாலும் வீழ்த்தி விட முடியாது. அப்படி மனைவி பிள்ளைகள் சொந்த வீடு வாசல் உற்றார் உறவினர் நண்பர்கள் பயணம் என்றுஇயல்பாக வாழ்கின்ற எந்த ஒரு சராசரியும் மாபெரும் கலைஞனாக மாற முடியாது.அத்தனையும் இருந்தாலும் இல்லாத ஒன்றுக்கான தேடல்தான் அவனை கலையின் பக்கம் திருப்பும். தன் வாழ்க்கையின் வெறுமையைப் பார்க்கத் திராணியற்றவன்தான் இந்தக் கூட்டத்திற்கிடையில் போய் ஒளிந்துக் கொள்கிறான். சால் பெல்லோ எழுதிய ஹெர்ஸாக் நாவலின் நாயகனும் மனப்பிறழ்வு கொண்டவன். அல்லது அப்படி குற்றம் சாட்டப்பட்டு மனநல விடுதியில் சிகிச்சை பெறுபவன். அவன் முதல் திருமண வாழ்க்கை தோல்வி. இரண்டாவது திருமணமும் விவாகரத்தில் முடிகிறது. இன்னொருவனை காதலித்து அந்த இரண்டாவது மனைவி இவனை விட்டுப் பிரிகிறாள்., அவள் துரோகத்தால் அவன் மனம் பேதலிக்கிறது. துரோகம் செய்பவர்கள் துன்பம் விளைவிப்பவர்கள் ஆரோக்கியமானவர்களாகக் கருதப்படும் சமூகம் அல்லவா இது. பாதிக்கப்பட்டவர்கள் தானே மனப்பிறழ்வு கொண்டு அலைகிறார்கள். தனது பத்து வயது மகள் மீது உயிரையே வைத்திருக்கும் ஹெர்சாக், குழந்தையைத் தன்னிடம் தரும்படி தாயிடம் கேட்டு தோல்வியடைகிறான். அவன் மனப்பிறழ்வு கொண்டவன் என்று தாய் கூறி சட்டத்தின் துணையால் அவனை மனநலவிடுதிக்கு அனுப்பி விடுகிறாளா். தனது மகளை சரியாக பராமரிக்க மாட்டாள் என்ற கோபத்தால் இரண்டாவது மனைவியைக் கொலை செய்யத்திட்டமிடுகிறான் ஹெர்ஸாக்.ஒரு கைத்துப்பாக்கியில் இரண்டே இரண்டு தோட்டாக்கள் போட்டு, தனது இரண்டாவது மனைவி அவள் காதலன் ஆகிய இருவரையும் சுட்டுக் கொன்று மகளை தூக்கிக் கொண்டு ஓடிவிட வேண்டும் என்பதுதான் அவன் திட்டம். ஆனால் அந்தப்பெண் மகளை அன்போடு குளிப்பாட்டி உணவூட்டி உபசரிக்கும் காட்சியைக் கண்டு குழப்பம் அடைகிறான். அவன் மனநோய் குணம் அடைகிறது.அதுவரை அவன் பலருக்குக் கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தான். அந்தோன் செக்காவின் வான்கா போல அந்தக் கடிதங்களை அவன் தபாலில் சேர்க்கவில்லை. வான்காவைப் போல அவனும் ஒரு ஆறுவயது சிறுவனின் மனநிலையில் தான் இருந்தான் ,முதல் மனைவிக்கு இரண்டாவது மனைவிக்கு மகளுக்கு ரமோனா என்ற தன் தோழிக்கு என்று அவன் பலருக்கும் அவன் தன் மனத்தைத் திறந்துபோட்டு கடிதங்கள் எழுதியிருக்கிறான். ஒரு கடிதமும் தபாலில் சேர்க்கப்படவில்லை .அது அவன் மனப்பிறழ்வுக்கான ஒரு சிகிச்சை ஒருதெராபி போலத்தான். மகள் நல்லபடியாக இருப்பதைக் கண்டு கொலை செய்யும் எண்ணத்தைக் கைவிடும் ஹெர்ஸாக் கடிதங்கள் எழுதுவதையும் நிறுத்தி விடுகிறான். இனி அதற்கு அவசியமில்லை. இந்த நாவலில் ஹெர்ஸாக்கின் வாழ்க்கை ஒருபாரபட்சமான பார்வையி்ல் அவனுடைய பார்வையில் மட்டுமே சொல்லப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் அது ஒரு கலைஞனின் பார்வை . என் பெயர் ஹெர்ஸாக். நான் தான் அந்தப் பெயரில் வாழும் மனிதன். என்னைத் தவிர வேறு யாரும் அப்படிஇருக்க முடியாது என்று ஹெர்ஸாக் கூறுகிறான். இந்த வரிகளுக்காகவே இந்த நாவலை பைத்தியம் போல நேசித்திருக்கிறேன். இன்னும் வரும்

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...