Saturday, 11 January 2020

book fair 2020

இரண்டாவது நாளாக புத்தகக் காட்சிக்குப் போனேன். ஜான்சி ராணியின் கவிதைத் தொகுப்பு வாங்கினேன். படித்துவிட்டு பதிவிடுகிறேன். அருமையான பெண் கவிகள் தோன்றும் காலம் இது. வீட்டின் சமையலறைகளில் இருந்து வெளியேறி சமூக பொதுவெளிகளில் பெண்கள் பங்கேற்கிறார்கள். கவிதை எழுதுவதும் அவர்களுக்கு அற்புதமாக வாய்த்துள்ளது. இன்னும் நிறைய பெண் படைப்பாளிகளை அடையாளம் காண வேண்டியிருக்கிறது.
புத்தகக் காட்சியில் எனது இரண்டு சினிமா புத்தகங்களை அம்ருதா பதிப்பகம். விருட்சம், தமிழினி, நியு புக் லேண்ட்ஸ் , பியூர் சினிமா , கருப்புப் பிரதிகள் உள்ளிட்ட அரங்குகளில் வாங்கிக் கொள்ளலாம். இரண்டு புத்தகங்களும் 225க்கு கிடைக்கும். மூன்றாவது புத்தகம் தமிழ் சினிமா இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகிறது.
சினிமா பற்றிய நிறைய நூல்களையும் பார்த்தேன். என்னைப் போல் இந்தி சினிமாக்களையும் ரசித்து சிலர் எழுதுகிறார்கள். காலச்சுவடுகண்ணன் இந்தி சினிமா பற்றி யாரும் எழுதுவதில்லை என்று கூறியதை புத்தகக் காட்சி பொய்யாக்கிவிடும் போல் தோன்றுகிறது.
இது ஒருபுறமிருக்க எனது கிடங்குத் தெரு நாவலை கேட்டு இரண்டு நண்பர்கள் என்னை அணுகினார்கள். தமிழினியில் பிரதிகள் இல்லையாம். என்னிடமும் நான்கைந்து பிரதிகள் மட்டுமே மிச்சமுள்ளன. அவற்றை இழந்துவிட விரும்பவில்லை. ஆனாலும் அவர்களுக்கு ஒரு பிரதி தர ஒப்புக் கொண்டேன். என்னை மதித்து வருபவர்களை நான் நிராகரிக்க முடியாது. என் புதிய புத்தகங்களை அந்த புதிய நண்பர்கள் பணம் கொடுத்து வாங்கிக் கொண்டனர். கிடங்குத்தெரு நாவல் ஒரு கிளாசிக் அந்தஸ்து பெற்று விட்டது. அதுவும் அதை விட மிகமிக பிரமாதமாகவும் நான்எழுதி வரும் பிருந்தாவனமும் நந்தகுமாரனும் நாவலையும் அடுத்த ஆண்டு புத்தகக் காட்சியில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறேன். யாரும் அழாமல் என் புதிய நாவலை படிக்க முடியாது .எழுதும்போது நானே பலமுறை அழுகிறேன். அத்தனை அற்புதம் அது.
நண்பர்கள் சூர்யராஜன், நிமோஷினி, வண்ணை வளவன் இன்று புத்தகக் காட்சிக்கு வருவதாக கூறினர். நண்பர் பா.உதயகண்ணன் எனது புத்தகங்கள் குறித்து சிறிய அறிமுக கூட்டம் ஒன்றை நடத்தலாம் என்றார்.


Thursday, 9 January 2020

புத்தகக் காட்சி 2020

முதல் நாளில் புத்தகக் காட்சியில் பார்க்க அதிகம் கிடைக்காது என்பது அனுபவம். ஆனால் எனது நூல்களை விநியோகிக்க வேண்டியிருந்ததால் சென்றேன். நண்பர் கவிஞர் நிமோஷினி இணைந்து கொண்டார். கவிதை நூல்களை ஆர்வமாக தேடினார். சிலவற்றை வாங்கினார். காலச்சுவடு கண்ணனை சந்தித்தோம். தொடர்ந்து சுற்றியதில் நண்பர் பா.உதயகண்ணனை அன்னை ராஜேஸ்வரி பதிப்பகத்திலும் நண்பர்கள் அழகிய சிங்கர், கிருபாகரனை விருட்சம் அரங்கிலும் சந்தித்ததில் மகிழ்ச்சி.
சீரோ டிகிரி அரங்கில் காயத்ரி மற்றும் ராம்ஜியுடன் சில நிமிடங்கள் உரையாடல். சாரு நிவேதிதா தினம் தனது நூல்களில் கையெழுத்திட இந்த அரங்கிற்கு மாலை 5.30 மணிக்கு வருவதாக குறிப்பிட்டிருந்தார்.
வந்ததற்காக சில புத்தகங்களை வாங்கிக் கொண்டேன். அடுத்த ஆண்டு முதல் புத்தகங்கள் வாங்குவதை 50 சதவீதம் குறைக்க முடிவெடுத்துவிட்டேன். என்னை மதிக்காத எழுத்தாளர்களை இனி ஒதுக்கவும் முடிவு. ஷாஜிக்கு பலமாதங்களுக்கு முன்பு முகநூலில் நட்பு விண்ணப்பம் தந்து இதுவரை ஏற்பு வரவில்லை. ஆனாலும் இந்த ஆண்டு அவருடைய புதிய புத்தகத்தை வாங்கி வந்தேன். அவர் எழுத்து பிடிக்கும் என்பதால், நான் யார் என் பலம் என்ன எனத்தெரியாமல் அஞ்ஞானத்தில் அவர் தொடர்ந்து இருப்பாரேயானால் அடுத்த ஆண்டு முதல் அவரையும் ஜெயமோகனைப் போல புறக்கணி்ப்பேன். எப்போதும் புறக்கணிக்க முடியாதவர்கள் பெண்களும் முதல் நூல் போட்டு ஆர்வமாக பேசும் படைப்பாளிகளும்தான். சில இலக்கிய ஆளுமைகள் எப்போதும் பிடித்தவர்கள். திலீப்குமார், சா.கந்தசாமி, நாஞ்சில் நாடன், தேவதேவன், அம்பை, மனுஷ்யபுத்திரன் , சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன் , கல்யாண்ஜி போன்றவர்கள்.....அவர்களை மதிக்கிறேன். அதே போல் எழுத்தாள நண்பர்கள் பாவண்ணன், க.மோகனரங்கன், எம்.கோபாலகிருஷ்ணன், வாமு கோமு, மகுடேசுவரன் போன்றோரின் மீதும் பிரியம் உண்டு. அவர்கள் நூல்களையும் வாங்கத்தான் செய்கிறேன்.

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...