Tuesday, 10 May 2016

படித்தது- எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகள்

எஸ்.ராமகிருஷ்ணனை சில முறை கூட்டங்களில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். இணக்கமாக பழகக்கூடியவர். ஆனால் நடுவில் சில ஆண்டுகள் பெரிய எழுத்தாளர்களான ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா போன்றவர்கள் மீது கடுமையான கோபம் வந்தது. காரணம் என்னை யாரும் கண்டுகொள்வதில்லை. நானும் 30 வருஷமா எழுதுகிறேன், கிடங்குத்தெருவுக்கு பாஷா பாரதி எல்லாம் வாங்கிட்டேன். சென்னையில் 500 இலக்கியக்கூட்டங்கள் நடத்தியிருப்பேன். சிறுபத்திரிகை நடத்தியிருக்கிறேன்.தமிழ்நாடு முழுவதும் ஊர் ஊராப் போய் எழுத்தாளர்களை சந்தித்து நாள்கணக்கில் உரையாடியிருக்கிறேன்.
ஆனால் என் இருப்பையே கேள்விக்குறியாக்கும் வகையில் யாராலும் நான் கவனம் பெறமுடியாமல் போனது ஏன் என்று பலமுறை யோசி்த்த போது பறவை தனது சிறகு பறந்த சுவடுகளை காற்றில் பதிய விடுவதில்லை என்ற ஜென் கவிதைதான் நினைவுக்கு வருகிறது.
இதனால் யாமம் போன்ற ராமகிருஷ்ணனின் நாவல்களை புறக்கணிக்கத் தொடங்கினேன். கடந்த 5 ஆண்டுகளாக நிரந்தர வருமானம் இல்லாமல் புத்தகக் கண்காட்சிகளிலிருந்து வெறும்கையுடன் திரும்பி வந்த ரணங்கள் இந்த ஆண்டாவது தீருமா எனத் தெரியவில்லை.
ராமகிருஷ்ணன் அண்மைக்காலங்களில் நிறைய எழுதிய போதும் வாசிக்க இயலவில்லை. கோபமும் வறுமையும் தான் காரணம்.
பழைய புத்தகக் கடைகளில் தேடிக் கொண்டிருந்த போது எஸ்.ராமகிருஷ்ணனின் மலைகள் சத்தமிடுவதில்லை என்ற கட்டுரை தொகுப்பு கிடைத்தது. தலைப்பே எனது கோபத்திற்கான பதிலை கூறுவது போல் இருந்தது.
கட்டுரைகளில் ஒரு பகுதி எழுத்து ஆளுமைகள் பற்றியது. அதில் தஸ்தாயவஸ்கி, செக்காவ், கார்க்கி போன்ற பல வெளிநாட்டு ஆளுமைகள், பிலோ இருதயநாத் , ப.சிங்காரம் போன்ற தமிழக ஆளுமைகள் குறித்து தமது கட்டுரைகள் வாயிலாக ஒரு அற்புதமான மன உலகிற்கு கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். குறிப்பாக காமிக்ஸ் பற்றியும் இரும்புக்கை மாயாவி பற்றியும் அவர் எழுதிய சிறுவயது அனுபவங்கள் எனக்கு எனது பால்ய காலத்தை நினைவுபடுத்தியது. என்னைப்போலவே ராமகிருஷ்ணனும் காமிக்ஸ் ரசிகராக இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.
 கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் 2008ம் ஆண்டில் முத்து காமிக்ஸ் பற்றிய எனது அரைமணி நேர செய்தித்தொகுப்பையும் சிவகாசி பதிப்பாளர் எஸ்.விஜயனின் பேட்டியையும் ராமகிருஷ்ணன் பார்த்தாரா இல்லையா என தெரியவில்லை, ஆனால் ராமகிருஷ்ணன் கட்டுரையில் குறிப்பிடுவது போல சில ஆண்டுகளாகத்தான் அவருக்கு காமிக்ஸ் பற்றி எழுதத்தோன்றுகிறது.
அதற்கு அந்த நிகழ்ச்சி உந்துதல் தந்ததா எனத்தெரியவில்லை.

பல முன்னணி எழுத்தாளர்கள் கூறுவது போல கிடங்குத்தெருவா நான் படிக்கலேயே என்றும் செந்தூரம் ஜெகதீஷா அவர் யார் என்று கூறுவது போலவும் ராமகிருஷ்ணனும் கூறலாம். அய்யா உங்கள் எழுத்துகளை தேடித்தேடி படித்து தனது சொற்ப வருமானம் முழுவதையும் உங்களைப் போன்ற படைப்பாளிகளுக்காகவே செலவு செய்த ஒருமனிதனை நீங்கள் புறக்கணித்ததைப் போல உங்களை நான் புறக்கணிக்க மாட்டேன். அதனால்தான் இந்த பகுதியை இன்றும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.


Friday, 6 May 2016

சென்னை- பானிபூரியும் பட்டர் பிஸ்கட்களும்

தமிழ் இந்து சித்திரை மலரில் வெளியான எனது கட்டுரையின் மூல வடிவம் இது.....

சென்னை

பட்டர் பிஸ்கட் முதல் பானிபூரி வரை

செந்தூரம் ஜெகதீஷ்

சென்னைக்கு குடி வந்த போது எனக்கு பத்து வயது. திருச்சியின் காவேரி கரையில் கழிந்த பால்ய காலங்களிலிருந்து ஒரு பெருநகரத்தின் வாழ்வுடன் பொருந்திப் போவது அவ்வளவு சுலபமாக இல்லை. திருச்சியில் திருச்சி கபே, கிருஷ்ணா ஓட்டல் என போய் வடை சாம்பார் வாங்கும் போது அங்கு பணிபுரியும் ஊழியர்களுடன் வயது வித்தியாசம் பாராமல் வெகுளியாக யோவ் போய்யா வாய்யா எனப் பேசும் வழக்கமிருந்தது. இது சென்னையில் எனக்கு கடுமையான சிக்கலை உருவாக்கியது. இங்குள்ள ஒர் ஒட்டலில் யோவ் எனக்கூப்பிட ஊழியர் அடிக்க வந்துவிட்டார். சின்னப்பயலுக்கு மரியாதையே இல்லை என ஏச்சுடன் பிழைத்தேன்.

சென்னையின் மொழியைப் புரிந்துக் கொள்ளும் பக்குவம் காலப்போக்கில் ஏற்பட்டது. ஜெயகாந்தன் எழுதிய கஸ்மாலம் என்னம்மா கீது போன்ற சென்னை பாஷையை குறித்த விழி்ப்புணர்வையும் இலக்கியம் மூலம் தான் அடைந்தேன்.

ஆனால் நான் வாழும் பகுதிகளில் சென்னை பாஷை இல்லை. வேறு ஒரு இந்தி-தமிழ் கலந்த பாஷை இருந்தது. சென்னையில் சவுகார்ப்பேட்டை என்றொரு இடம் இருக்கு. அங்கு வடமாநிலத்தவர், ஆந்திர தெலுங்கு பேசுவோர் அதிகமாக வாழ்ந்திருந்தனர். அங்கு எங்கள் தாத்தாவுக்கு ஒரு சிறி்ய கடை இருந்தது. மிட்டாய் கடை. புதிதாக குலோப் ஜாமூன், பால் பேடா எல்லாம் செய்வார். சிறுவயதில் ஸ்வீட்டான வாழ்க்கை. ஒரு டப்பா நிறைய மலாய் எடுத்துக் கொண்டு பேக்கரியில் பன்களை வாங்கிக் கொண்டு இப்போது நேரு விளையாட்டரங்கம் உள்ள இடத்தில் இருந்த மிருகக் காட்சி சாலைக்கு அழைத்துச் செல்வார். அருகில் மூர்மார்க்கெட்டில் கீரி பாம்பு சண்டையை பார்க்கவும் பழைய புத்தகங்கள் வாங்கவும் செல்வது எனக்கு பொழுதுபோக்காகி விட்டது.

சென்னையில் முதலில் கவர்ந்த பலவிஷயங்களில் பட்டர் பிஸ்கட் முக்கியமானது. திருச்சியில் அப்போது நாங்கள் சாப்பிட்ட பிஸ்கட்டுகள் எல்லாம் பிஸ்கட்டுகளே அல்ல. அண்மையில் காலமான எனது தந்தையார் அங்குள்ள பிஸ்கட் மற்றும் சாக்லேட் தயாரிப்பு பேக்டரியில் பணிபுரிந்தார்.

பட்டர் பிஸ்கட்டுகள் உள்ளம் கவர்ந்துவிட்டன.கண்ணாடி கிளாசில் டீயை வாங்கி அதில் இரண்டு மூன்று பட்டர் பிஸ்கட்டுகளை பிட்டு பிட்டு தோய்த்து தோய்த்து சாப்பிடும் ருசி இருக்கே ஆகா.....இன்று வரை சென்னை தந்த அந்த ருசி மாறவே இல்லை. ஆனால் இப்ப கிடைக்கிற பட்டர் பிஸ்கட்டுகளில் பட்டரே இல்லை.

சென்னை கலாச்சார ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் பன்முகத்தன்மை கொண்ட நகரம். சவுகார்ப்பேட்டையில் மார்வாடிகள், குஜராத்திகள், நிரம்பியுள்ளனர். அவர்களின் திருமணங்கள் ஆடம்பரமானவை. குதிரை ரதம் மீது சவாரி செய்வார்கள். அவர்களுக்காகவே குதிரை வளர்ப்பவர்கள் சென்னை பூங்கா ரயில் நிலையம் அருகே வண்டியையும் குதிரைகளையும் வைத்து வாழ்ந்திருப்பார்கள். இப்போது அவர்கள் எங்கே போனார்களோ?

மார்வாடிகளுக்கும் குஜராத்திகளுக்கும் போட்டியாக தெலுங்குக்காரர்களும் இருந்தார்கள். அரிசி மண்டி, வெங்காய மண்டி, வெல்ல மண்டி, பருப்பு, நெய் வகைகளை விற்கக்கூடிய ஆந்திரவாசிகள் இன்றும் சவுகார்ப்பேட்டை பகுதியில் காணலாம். கோவிந்தப்பா நாயக்கன் தெருவில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நேஷனல் லாட்ஜ் என்ற ஆந்திர சாப்பாடு ஓட்டல் இயங்கி வருகிறது. இப்போதும் புல் மீல்ஸ் ரூபாய் 90 தான். முதலில் பருப்புப் பொடியும் காரமான கோங்குரா சட்னியும் நெய்யும் கலந்து சாதத்தில் பிசைந்து சாப்பிட வேண்டும். ஒரு வாய் சாப்பிட்டால் முழு சாப்பாட்டையும் இப்படியே சாப்பிட்டு விடலாமா என்ற பேராசை பிறக்கும். அத்தனை ருசியாக இருக்கும். ஆனால் அடுத்தடுத்து சாம்பாரும் காரக்குழம்பும், ரசமும் கீரை, பருப்பு கூட்டும் உருளைப் பொரியலும் தயிருடன் சர்க்கரையும் பக்காவான ஆந்திரா சாப்பாட்டின் திருப்தியை தந்து விடும். வீட்டுக்குப் போய் ஒரு குட்டித்தூக்கம் போட்டால்தான் சுகம். பல நண்பர்களை இங்கு அழைத்துச் சென்றிருக்கிறேன். ஒரு முறை ஜெயமோகன், அருண் மொழியுடன் இங்கு சாப்பிட்ட போது மனதார விருந்து பரிமாறுகிறார்கள் என்று பாராட்டினார்.

வடமாநிலத்தவரும் உணவு வகைகளில் போட்டியில் குறைந்தவர்கள் அல்ல, தெருவுக்கு நான்கு பானிபூரி கடைகள் முளைத்து விட்டன. ஆனால் சவுகார்ப்பேட்டையில் சாப்பிடும் பானிபூரிக்கும் தமிழ் மக்கள் மாலை நேர வருவாய்க்காக வைத்துள்ள பானி பூரிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. தென்னகமக்களின் பானிபூரியின் பானி ரசம் மாதிரி இருக்கும். ரசம் போல ருசியாகவும் இருக்காது. ஆனால் வடமாநிலத்தவர் பானிபூரியில் பானியை மட்டும் கப் கப்பாக குடித்துக் கொண்டே இருந்தால் அமிர்தமாக இருக்கும். வயிற்றுக்கும் ஜீரணமாகும். இதில் பெருமளவுக்கு பச்சை மிளகாய்,புதினா கீரை, கொத்தமல்லி கலப்பதுதான் ருசிக்கு காரணம். அவர்கள் சமோசா, கட்லெட்டுக்கு தரும் சட்னியும் பச்சைப் பசேல் என செம்மையான காரமாக இருக்கும். மறைந்த நண்பர் சுந்தர சுகனுக்கு இத்தகைய காரசாரமான வட இந்திய உணவு வகைகள் மீது ஒரு அபாரமான ஆர்வம் இருந்தது.

அது மட்டுமா எங்கள் சென்னையின் அடையாளம்? இன்னும் இருக்கு. பெரியமேட்டில் பல பிரியாணி கடைகள் உள்ளன. இப்போதைய விலை நிலவரப்படி 120 ரூபாய்க்கு அரை பிளேட் அருமையான சி்க்கன், மட்டன் பிரியாணி சுடச்சுட வெங்காய பச்சடியுடன் கிடைக்கும். ராயபுரம், பெரம்பூர், ஐஸ் ஹவுஸ் போன்ற இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் பகுதியில் பிரியாணி சாப்பிடவே தனித்தனி பயணங்களை வார விடுமுறை நாட்களில் மேற்கொள்வதும் வழக்கமாகி விட்டது சென்னை வாழ்க்கையில்.

கிறித்துவமக்கள் மட்டும் என்ன...சென்னையில் திடீர் திடீரென பல பேக்கரிகள் முளைக்கும். டவுட்டன் பகுதியில் கிறிஸ்துமஸ் விழா களை கட்டும்.பிறந்தநாள், புத்தாண்டு, கிறிஸ்துமசுக்காக கலர் கலரான ருசியான கேக்குகள் அணி வகுத்து கிடைக்கும்.

சென்னையில் இட்லி சாம்பார் இன்னொரு சொர்க்கம். முன்பு ரத்னா கேப்பில் சாம்பாரை பக்கெட் பக்கெட்டாக ஊற்றி இட்லியை உள்ளே மறைத்து தருவார்கள். இப்போது இட்லி இருக்கு. சாம்பாரும் இருக்கு. ஆனால் ருசி இல்லை. இரண்டு இட்லியும் ஒரு வடையும் சாப்பிட்ட காசில் ஒரு பிரியாணியே சாப்பிட்டு விடலாம். அத்தனை விலை. ஆனாலும் சங்கீதா, சரவண பவன், வெல்கம், வசந்த பவன் போன்ற பிரசித்தி பெற்ற ஓட்டல்களில் இட்லி சாம்பார் சாப்பிடவே ஒரு பெருங்கூட்டம் பசித்தவம் கொண்டிருக்கும்.

சென்னையில் நல்ல டீ எங்கே கிடைக்கும் என ஆராய்ச்சி எல்லாம் செய்திருக்கிறேன். திருவல்லிக்கேணி பாரதி மெஸ் அருகே உள்ள ஒரு தேநீர்க்கடையே இதில் மனம் கவர்ந்தது.

உணவு மட்டுமின்றி இதர விஷயங்களிலும் சென்னையின் வாழ்க்கை முறை ரசிக்கத்தக்கது. கன்னிமரா நூலகமும் அதையொட்டிய அருங்காட்சியகமும் பல நினைவுகளை உட்கொண்டிருக்கும். படிப்பதற்கும் பேசுவதற்கும் நண்பர்களை சந்திப்பதற்கும்இந்த இடங்களைத்தான் நாங்கள் தேர்வு செய்தோம்.

சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகள் நாவலைப் படித்து விட்டு திருநெல்வேலியிலிருந்து தந்தையுடன் மனஸ்தாபம் உருவாகி சென்னைக்கு ஓடி வந்து வாழத்தெரியாமல் தற்கொலை செய்ய இருந்த இளைஞன் ஒருவரை நானும் நண்பர் சூர்யராஜனும் ஆற்றுப்படுத்தி இலக்கியம் வாழ்க்கையை மேம்படுத்தத்தான் தற்கொலைக்குத் தூண்ட அல்ல என்று புரிய வைத்தோம். அந்த இளைஞன் தந்துவிட்டு சென்ற பிரதியை இன்னமும் பாதுகாத்து வருகிறேன். என்னைப் பொருத்தவரை ஜே ஜே சில குறிப்புகள் தமிழின் ஆகச்சிறந்த அறிவுசார் நாவல். ஜான் அப்டைக்கின் பெக் புக் நாவலின் தழுவல் என்ற விமர்சனங்களை நான் மதிப்பதில்லை. ஜான் அப்டைக் சு.ராவின் மேதைமைக்கு கால்தூசி பெயரமாட்டார். என்னுடைய கிடங்குத் தெரு நாவலின் மாதிரி வடிவமும் ஜே ஜேயை பின்பற்றி எழுதப்பட்டதுதான் என்பதை நுட்பமான வாசகர்கள் உணர முடியும்.

சென்னையின் மாவட்ட நூலகங்கள் சிறுநீர் கழிப்பிடங்களாக்கப்பட்டதற்கு அதிமுக, திமுக அரசுகளே காரணம். கட் அவுட்டுகளுக்கு செலவிடப்பட்ட தொகை நூலகங்களுக்கு தரப்படவில்லை. புத்தகங்களை வாங்காமலும் பதிப்பாளர்களையும் படைப்பாளிகளையும் பட்டினி போட்ட பாவக்கறை தமிழக அரசு மீது சாபமாக படிந்திருக்கிறது. இதற்கு சாப விமோசனம் தர ஜெயமோகனோ , எஸ்ராமகிருஷ்ணனோ சாரு நிவேதிதாவோ முதலமைச்சராகி விட்டால் நல்லது.

சென்னையின் இன்னொரு அற்புதம் மெரீனா கடற்கரை. அதன் மணல் பரப்பு பல கதைகளையும் காதலர்களின் கண்ணிரையும் தெரிவிக்கக்கூடியது. மனம் இருமை அடையும் போதெல்லாம் மாலையிலோ அதிகாலையிலோ கடற்கரையில் போய் நின்றால் இளைப்பாறுதல் கிடைக்கும். சுனாமி வந்த போது சன்டிவியில் பணியில் இருந்த நான் காலை ஷிப்டுக்காக இருசக்கர வாகனத்தில் சென்ற போது கிரீம்ஸ் சாலையின் கூவம் கரையில் செத்து மிதந்த பிணங்களின் காட்சி இன்றும் பேய் பிசாசு போல பீதியைக் கிளப்புகிறது.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும் சென்னையின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கி விட்டது. சென்னையில் நாம் பாதுகாப்பாகத்தான் இருக்கிறோமா என்றும் தெரியவில்லை. நிலநடுக்கம், கடல் கொந்தளிப்பு, சுனாமி, பெருவெள்ளத்திலிருந்து சென்னை மீண்டிருக்கிறது. இனியும் மீளும் என்ற நம்பிக்கைதான் காத்து வருகிறது.

சென்னையில் பல அற்புதமான கோவில்கள் உள்ளன. மகாகவி பாரதியார் யாதுமாகி நின்றாய் காளீ என்று விளித்த காளிகாம்பாள் கோவில் பிராட்வேயில் உள்ளது. அங்கு பிரகாரம் அருகே உள்ள சிறிய அனுமன் சிலையை கட்டாயம் தரிசித்து வாருங்கள்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் ,மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், சாய்பாபா கோவில், வடபழனி முருகன் கோவில் மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவில், பெரியமேடு மசூதி, ஐஸ் அவுஸ் மசூதி , பெரம்பூர் சர்ச், சாந்தோம் தேவாலயம் என சுற்றிலும் வழிபாட்டுத் தலங்கள் நிரம்பிய நகரம் இது. முன்பெல்லாம் விநாயகர் ஊர்வலம் திருவல்லிக்கேணி பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இப்போது சட்டம் ஒழுங்கு பராமரிப்பால் நிலைமை தேவலை.

சென்னையின் இலக்கிய உலகமும் அற்புதம்தான். அசோகமித்திரன், ஜெயகாந்தன், சுஜாதா, லா..ராமாமிர்தம், நா.பார்த்தசாரதி, பிரபஞ்சன், திலீப்குமார் போன்ற ஜாம்பவான்களின் புகலிடம் இது. தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளன் மதுரைக்கு தெற்கே பிறந்திருக்க வேண்டுமா என்று சுஜாதா ஒரு முறை மனம் வெதும்பியது நினைவில் உள்ளது. மிகச்சிறந்த படைப்பாளி யாரும் சென்னை போன்ற நகரங்களில் இருந்து தோன்றுவது சாத்தியமே இல்லை என்று ஒரு முறை ஜெயமோகன் கூறியதற்கு பதிலளித்து மேற்கண்ட எழுத்தாளர்களையே உதாரணம் காட்டியிருக்கிறேன்.

சென்னையில் சிறுபத்திரிகை வட்டங்களும் இலக்கியக்கூட்டங்களும் ஏராளம். இப்போதும் வந்துக் கொண்டிருக்கும் கல்வெட்டு பேசுகிறது இதழை நண்பர் சொர்ணபாரதி தன்னந்தனியாக சுமந்து வருகிறார். செந்தூரம் இலக்கிய வட்டம் சார்பில் நானே ஆயிரம் இலக்கியக்கூட்டங்களை நடத்தியிருக்கிறேன். அசோகமி்த்திரன், சாரு நிவேதிதா எல்லாம் பார்வையாளர்களாக வந்தனர். ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலை சென்னையில் நாங்கள்தான் வெளியிட்டோம். நண்பர் பிரபஞ்சன் எங்கள் நிரந்தர வழிகாட்டி.

சென்னையின் கோடம்பாக்கம் ஸ்டூடியோக்களும் திரையரங்குகளும் சென்னையை ரசிப்பதற்கான இன்னொரு காரணம் . இளமைப் பருவத்தில் விஜயா கார்டனில் சென்று அம்பிகா, சீதா, அனுராதா, சிம்ரன், என நடிகைகளை நேரில் ரசித்த காலமும் உண்டு. சித்ரா,கெயிட்டி, புவனேஸ்வரி, ராக்சி, உமா, மினர்வா, மிட்லண்ட், ஜெயப்பிரதா,எல்பின்ஸ்ட்ன், சிவசக்தி, வெலிங்டன், பிரபாத், போன்ற பல திரையரங்குகள் இன்று இல்லை. மல்டிபிளக்குகளும் மேற்கத்திய கலாச்சாரமும் ஊடுருவிய மால்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன. ஆனால் இன்று படம் பார்க்கும் அனுபம் மிகப்பெரிய பெருமூச்சுதான்.

காலவெள்ளம் பலவற்றை அடித்துச் செல்கிறது. சில நினைவுகளைத் தக்க வைக்கிறது. சென்னையைப் பெருத்த வரை புதியன புகுதலும் பழையன கழிதலும் மாறாத வாழ்வின் நியதியைப் போல் என்றும் நிரந்தரமாக சுழன்றுக் கொண்டிருக்கிறது. மாற்றம் ஒன்றே மாறாதது என்று கணித்த மாமேதை காரல் மார்க்ஸ் தான் நினைவில் நிற்கிறார்.


-------------------------------
 

உலக சினிமா -புத்தகங்களைத் திருடுபவள்

 

குமுதம் தீராநதியின் மே மாத இதழில் பிரசுரமான எனது கட்டுரை இது....

உலக சினிமா


புத்தகங்களைத் திருடுபவள்

செந்தூரம் ஜெகதீஷ்




THE BOOK THIEF
 
 
தியிலே சொல் இருந்ததாக கூறுகிறது பைபிள். சொல்லால் அமைந்தது உலகு. சொல்லால் அமைந்தது சிந்தனை. சொல்லால் அமைந்தது வாழ்வு. சொல்லின்றி எதுவுமில்லை. மௌனங்களுக்கும் சொற்கள் உண்டு.

பிறப்பின் போது கருவறையிலும் தாய் குழந்தையுடன் பேசிக் கொண்டிருக்கிறாள். கல்லறையில் புதையுண்டு போன உறவுகளுடனும் நாம் மானசீகமாகப் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். ஒவ்வொரு இலையும் ஒவ்வொரு பறவையும் ரகசியமான ஒரு சொல்லுடன் பேசுகிறது.

இப்படத்தின் ஆரம்பமும் சொற்கள் மூலம்தான். ஆனால் நம்முடன் தடித்த ஆண்குரலில் பேசுவது மரணம்.

மரணம் ஒரு கதைசொல்லியாக படத்தைத் தொடங்குகிறது.....

எல்லோரும் ஒருநாள் சாகத்தான் போகிறார்கள். யாரும் தப்ப முடியாது. நேரம் வரும் போது நான் அழைத்துச் செல்வேன். பதற்றம் கொள்ளாதே..எதுவும் உனக்கு உதவாது.

மார்க்குஸ் சூசாக்கின் நாவலைத் தழுவி திரைக்ககதை எழுதப்பட்டிருக்கிறது. திரைக்கதையை மைக்கேல் பெட்ரோனி எழுதியுள்ளார். படத்தை பிரெய்ன் பெய்சிவல் இயக்கியுள்ளார்.

இப்படம் நாஜிக்கள் படை உலகையே வெல்லத் துடிக்கும் காலகட்டமான 1936 முதல் ஹிட்லரின் காலம் முடிவுக்கு வந்த அடுத்த சில ஆண்டுகள் வரை படத்தின் கதை தொடர்கிறது.
பனிப்பிரதேசம் - வெள்ளைப் பனியை கிழித்துக் கொண்டு கரும்புகை கக்கியபடி வேகமாக செல்கிறது ரயில் ஒன்று. ரயிலில் 13 வயதுசிறுமி லெஸ்லீ ( சோஃபி நெலீஸ் ) தனது உறவுப் பெண்ணுடன் பயணிக்கிறாள். அருகில் உறங்கும் அவள் தம்பியின் மூக்கிலிருந்து திடீரென ரத்தம் வடிகிறது. லெஸ்லீ அலறுகிறாள். ரயில் நிற்கிறது. இறந்த தம்பியை பனியில் பள்ளம் தோண்டி புதைக்கிறார்கள். அப்போது அவன் சட்டைப்பையிலிருந்து ஒரு புத்தகம் கீழே விழுகிறது. அதனை லெஸ்லீ எடுத்து வைத்துக் கொள்கிறாள். லெஸ்லீயை அவள் உறவுப் பெண் ஒரு நடுத்தர வயது தம்பதியிடம் தத்துக் கொடுத்து சென்று விடுகிறாள். லெஸ்லீயின் தாய் ஒரு கம்யூனிஸ்ட் என்று அவளை ஹிட்லரின் ராணுவத்தினர் இழுத்துச் சென்று சூறையாடி விட்டதை கதையின் பிற்பகுதியில் அறிகிறோம். குழந்தைகளாவது நிம்மதியாக வாழட்டும் என்றுதான் தாய் அந்த குழந்தைகளை தத்து கொடுத்துவிடுகிறாள். ஆனால் தம்பி இறந்துவிட லெஸ்லீ மட்டும் புதிய பெற்றோரிடம் வருகிறாள்.

கம்யூனி்ஸ்ட்டுகள் என்றால் அழுக்கும் துர்வாடையுமாக இருப்பார்களா என்ற ஏச்சுடன் தனது மகளை அழைக்கிறாள் புதிய தாய் ரோசா ( எமிலி வாட்சன்) பதிலே பேசாத சிறுமியைப் பார்த்து ஊமையை கொடுத்து விட்டார்கள் என்று நொந்துக் கொள்கிறாள்.

இரவு வேளையில் புதிய தந்தையான ஹான்ஸ் ( ஜியோஃபரி ரஷ் ) லெஸ்லியுடன் சிநேகமாகிறார். அவர் வைத்துள்ள அக்கார்டியன் கருவியில் இசையை வாசிக்க ரசிக்கிறாள் லெஸ்லீ. பப்பா என்று அவரை அழைக்க அது ஒரு சோம்பேறி பன்றி. பரவாயில்லை அப்பா என்றே கூப்பிடு என்கிறாள்

லெஸ்லீயை பள்ளிக்கு அழைத்துப் போக வருகிறான் பக்கத்து வீட்டு பையன் ரூடி. அவனுக்கு வயது 12. என்னை ஓட்டப்பந்தயத்தில் ஒருவரும் ஜெயித்தது கிடையாது என்று பெருமை பேசுகிறான். பள்ளிக்கு ஓடலாம் என்கிறான். நான் ஜெயித்தால் எனக்கொரு முத்தம் கொடுப்பாயா என்று கேட்கிறான். தோற்றால் வாழ்நாள் முழுவதும் முத்தம் கேட்க மாட்டாயா என்று அவள் திருப்பிக் கேட்க அவனால் பதில் கூற முடியவில்லை. எப்படியோ ஏமாற்றி வி்ட்டு லெஸ்லீயே ஓடி வந்து ஜெயித்துக் காட்டுகிறாள். மோசடி என கூறுகிறான் ரூடி.

நீ எனக்கு நண்பனாக முயற்சிக்காதே என்கிறாள் லெஸ்லீ. நான் இங்கிருந்து ஓடி விடுவேன். என் புதிய அம்மாவைப் பிடிக்கவில்லை என்கிறாள். உண்மையான தாயை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதும் அவள் கவலை. கையில் இருக்கும் புத்தகத்தை ரூடி வாங்கிப் பார்க்கிறான். தம்பியின் கையில் இருந்த புத்தகம். பீட்டர் ஸ்ட்ராஸ் என்பவர் எழுதிய கல்லறை தோண்டுபவனின் குறிப்புகள் என்பது புத்தகத்தின் தலைப்பு.

அப்பா ஹான்சுடன் மகள் பேசுகிறாள். அவர் பெயின்டர் ஆனால் இப்போதெல்லாம் பெயின்ட் அடிக்க வாய்ப்புகள் வருவதில்லை. பெயின்ட்டை சுரண்டியெடுக்கும் வேவை கிடைக்கிறது. நீ ஒரு அக்கவுண்டன்ட் என்றுநினைத்தேன் என்கிறாள் லெஸ்லீ. அக்கவுண்ட்டன்டா....அவர் நம் வீட்டுப் பொருளாதாரத்திற்கு தேவையில்லாத ஒரு நபர் என்கிறார் ஹான்ஸ். நான் இறந்து விட்டால் என்னை சரியாக புதைப்பாயா என்று கேட்கிறார்.

இரவில் லெஸ்லீ புத்தகம் படிக்கும் பழக்கத்திற்கு ஆளாகிறாள். புத்தகம் அவளுக்கு தனிமையின் போது தோழனாகிறது.தாய்க்கு ஒரு கடிதம் எழுதி தன்னை அழைத்து வந்த பெண்ணிடம் கொடுக்கச் சொல்கிறாள். ஆனால் அந்த கடிதம் போய் தாயிடம் போய் சேரவே முடியாது என்று அறியும் போது அவள் முகம் வாடுகிறது.

புத்தகங்கள் சிந்தனைகளைத் தூண்டுபவை. ராணுவத்திற்கு சிந்தனை தேவையில்லை. செய் அல்லது செத்துமடி என்பது அவர்கள் சித்தாந்தம். சுய சிந்தனையுள்ளவர்கள் ராணுவத்தில் பணியாற்ற முடியாது. அதுவும் சர்வாதிகாரியான ஹிட்லரிடம் படையில் பணியாற்றுவோருக்கு புத்தகங்கள் மீது கடும் வெறுப்பு. ஆள்வோருக்கு அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை புத்தகங்கள் தான் ஆகாத பொருட்கள். புத்தகங்களைப் படிப்பவர்கள் புத்திசாலிகளாக மாறுவார்கள் என்பதால் அதனை எந்த அரசும் ஊக்குவிப்பதே இல்லை. நவீன காலங்களில் நூலகங்கள் கழிவறைகளாகின்றன. யாழ்ப்பாணத்தில் நூலகத்தில் லட்சம் புத்தகங்களை எரித்தார்கள். அதுபோலத்தான் அந்த ஊரிலும் நடுத்தெருவில் நூற்றுக்கணக்கான புத்தகங்களை குவியல் குவியலாக ஹிட்லரின் படையினர் எரிக்கின்றனர். ஒவ்வொரு நபரும் ஒரு புத்தகத்தை கொண்டு வந்து எரிக்க வேண்டும். எரிக்காதவர் யூதர் அல்லது கம்யூனிஸ்ட் அல்லது ஹிட்லருக்கு எதிரி.

எல்லோரும் புத்தகங்கள் எரியும் தீயில் ஆளுக்கொரு புத்தகத்தை எரிக்கிறார்கள். லெஸ்லீக்கோ புத்தகம் என்றால் உயிர். அவள் தயங்கி நிற்கிறாள். புத்தகம் எரிப்பதா என்ற கவலை அவளுக்கு. புத்தகத்தை எரிக்காமல் விடமாட்டார்கள் என்று ரூடி அவளிடம் தடித்த ஒரு புத்தகத்தைத் தருகிறான். அவளும் சட்டென அதைத் தீயில் எறிந்து விடுகிறாள்.

கூட்டம் கலைகிறது. எல்லோரும் போய்விட லெஸ்லீ மட்டும் எரிந்த புத்தகங்களைப் பார்த்தபடி நிற்கிறாள். யாருமில்லை என அவள் தாம் வீசிய புத்தகத்தைதீயில் இருந்து மீட்டு எடுக்கிறாள். வேசாக எரியும் படிதான் அவள் வீசியிருக்கிறாள். அந்த புத்தகம் ஹெச்.ஜி.வெல்சின் - தி இன்விசபிள் மேன் ( கண்ணுக்குத் தெரியாத மனிதன் ) அப்போது ஒரு கார் அவளைக் கடந்து செல்கிறது. அதில் மேயரும் அவள்மனைவியும் அவள் கையில் புத்தகத்துடன் நிற்பதைப் பார்க்கின்றனர்.

மறுநாள் ரூடியிடம் தாம் ஹிட்லரை வெறுப்பதாக கூறுகிறாள் லெஸ்லீ. தப்பித் தவறி அப்படி சொல்லி விடாதே என்று எச்சரிக்கிறான். ஆனால் இருவரும் யாரும் இல்லாத அத்துவான வயல் வெளியில் நின்று ஹேட் ஹிட்லர் என்று உரக்க கத்துகிறார்கள். சிரிக்கிறார்கள். புத்தகத் திருடி என்று ரூடி லெஸ்லீயை அழைக்கிறான்.

ஹான்சின் வீட்டுக்கு காயத்துடன் மேக்ஸ் என்றநபர் வருகிறான். அவன் ஒரு கம்யூனிஸ்ட். ஒரு யூதன். ஹான்சின் கையில் உள்ள அக்கார்டின் இசைக்கருவிக்கு சொந்தக்காரன் அவன்தான். அவனுடைய தந்தைக்குநன்றிக் கடன் பட்ட ஹான்ஸ் அவனை வீட்டின் அடிவாரப் பகுதியில் உள்ள ரகசிய அறையில் தங்க வைக்கிறார். யாருக்கும் இவன் இங்கிருப்பது பற்றி பேசக்கூடாது என்று மகளுக்கு எச்சரிக்கை செய்கிறார்.

மேக்சுக்கும் புத்தகம் படிப்பதில் ஆர்வம். இருவரும் தோழமை கொள்கிறார்கள். மேக்சுக்கு புத்தகம் வாசிப்பதும் படித்த விஷயங்களைப் பகிர்ந்துக் கொள்வதும் லெஸ்லீயின் இரவு நேரப்பணியாகிறது.

வருமானம் இல்லாததாலும் கூடுதலாக ஒருநபருக்கு உணவு தேவை என்பதாலும் லெஸ்லீயின் தாய் ரோசா துணிகளை இஸ்திரி செய்கிறாள். மேயர் வீட்டுத் துணிகளை லெஸ்லீயிடம் கொடுத்து காசு வாங்கி வர அனுப்புகிறாள். அப்போது மேயரின் மனைவி இல்சா ஹெர்மன் உனக்கு புத்தகம் படிப்பதில் ஆர்வம் இருப்பது எனக்குத் தெரியும் என்று கூறி தன் வீட்டு அலமாரி முழுவதும் நிரம்பியுள்ள புத்தகங்களைக் காட்டுகிறாள். இதை எப்போது வேண்டுமானாலும் இங்கு வந்து நீ படித்து விட்டுச் செல்லலாம் என்கிறாள் இல்சா.

மேக்ஸ் புத்தகம் படிப்பதுடன் எழுதும் படி லெஸ்லீயை தூண்டுகிறான். ஒரு எழுத்தாளராக உருவாக கற்பனை தேவை என்கிறான். அவன் வீட்டின் அடிவாரத்தில் இருட்டறையில் அடைந்து கிடப்பதால் வெளியுலக வானிலையை தமக்கு விவரிக்கும்படி லெஸ்லீயிடம் கூறுகிறான். சொற்களுடன் சினேகம் கொள்ளும்படி எதையும் சொல்லப் பழகும்படி அவளுக்கு ஊக்கம் அளிக்கிறான் மேக்ஸ். தினமும் அவனுக்கு தனது அழகழகான சொற்களால் வானிலையை அவள் விவரிக்கிறாள். சூரிய ஒளி வைரத்தை ஏந்திய ஒரு வெள்ளி நத்தையப் போல் இருப்பதாக அவள் சொல்ல சொல்ல அதை நான் பார்த்து விட்டேன் என்று அவன் மகிழ்கிறான்.

இந்நிலையில் லெஸ்லீ புத்தகம் படிப்பதை விரும்பாத மேயர் லாண்டரியை நிறுத்தி விடுகிறார். லெஸ்லீ இரவில் ரூடியின் உதவியுடன் போய் அந்த வீட்டில் புத்தகங்களைத் திருடுகிறாள்.

அப்போது இங்கிலாந்து ஜெர்மனி மீது போர் தொடுக்கிறது.வானத்தில் போர் விமானங்கள் குண்டுகளை வீசும் என்ற அச்சத்தால் அனைவரும் பயந்துக்கிடக்கின்றனர். சைரன் ஒலித்ததும் அனைவரும் வீட்டை விட்டு பதுங்குக் குழிகளில் பதுங்கிக் கிடக்கின்றனர். அப்போதும் அவர்களிடம் புத்தகம் வாசித்து பயத்தை போக்குகிறாள் லெஸ்லீ. மேக்சை பற்றி அவள் கவலைப்படுகிறாள், வீட்டை விட்டு வரமுடியாத போதும் தாம் அடிவாரத்தில் இருப்பதால் குண்டு வீ்ச்சிலிருந்து தப்பிவிட முடியும் என்று அவன் கூறுகிறான்.

கிறிஸ்துமஸ் வருகிறது. பனி மூடிக்கிடக்கிறது. இதை அவனுக்கு வானிலை அறிக்கையாக வாசிக்காமல் லெஸ்லீ ஒரு பனிமனிதனை செய்துக் காட்டுகிறாள். பனித்துகள்களை வைத்து அவள் வடிவமைத்த பனி பொம்மை மேக்சை மிகவும் கவர்கிறது.நீ ஆச்சரியங்கள் மிக்கவள் என்று லெஸ்லீயைப் பாராட்டுகிறான்.

மேக்ஸ் கையில் உள்ள புத்தகத்தில் பக்கங்கள் காலியாக இருக்கின்றன. அதை அவன் லெஸ்லீக்கு தருகிறான், சொற்கள் தாம் வாழ்க்கை. சொற்களை இதில் நிரப்பு, என்று மேக்ஸ் கூறுகிறான்.

பனியால் மேக்ஸ் உடல் நலம் பாதிக்கப்படுகிறான்.லெஸ்லீக்கு பள்ளியில் மனம் ஒட்டவே இல்லை. ஆனால் மேக்ஸ் குணமாகி விட்ட மகிழ்ச்சியான செய்தியுடன் பள்ளிக்கு வரும் ரோசா எல்லோர் எதிரிலும் லெஸ்லீயை எதற்கோ திட்டுவது போல் திட்டி மேக்ஸ் குணமாகிவிட்டதை கூறும் போது லெஸ்லீக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. மேக்ஸ் குணமானதும் தனது புதிய தாயும் தன் மீது காட்டிய பாசம் கண்டும் நெகிழ்கிறாள்.

ரூடி லெஸ்லீயின் கையில் உள்ள புத்தகத்தைப் பார்த்து விடுகிறான். அதில் மேக்ஸ் என்ற கையெழுத்து பொறாமைப்பட வைக்கிறது. மேக்ஸ் யார் உன் பாய்பிரண்டா என்றுலெஸ்லீயிடம் கேட்கிறான். மீண்டும் அவளிடம் முத்தம் கேட்கிறான். ஒரு வழியாக மேக்ஸ் என்பவரை லெஸ்லீயின் குடும்பத்தினர் வீட்டில் மறைத்து வைத்திருப்பதை ரூடி புரிந்துக் கொள்கிறான். ஆனால் லெஸ்லீ சொல்லவில்லை. அவன் கேள்விகளுக்கு மௌனம் மூலமே அவள் பேசுகிறாள். இந்நிலையில் ரூடியில் சக மாணவன் பிரான்ஸ் லெஸ்லீயின் கையில் உள்ள புத்தகத்தைப் பறிக்க முயலும் போது அவன் ரகசியத்தைத் தெரிந்துக் கொள்ளக்கூடாது என்று பதறும் லெஸ்லீ அதை டயரி என்று ஏமாற்ற பிரான்சுக்கும் ரூடிக்குமான சண்டையி்ல் பிரான்ஸ் புத்தகத்தை ஏரியில் வீசியெறிகிறான்.

பிரான்சை விரட்டிவிட்ட ரூடி ஓடோடிப் போய் புத்தகம் விழுந்த இடம் எனக்குத் தெரியும் என்று கூறி பனி மூடிய ஏரியில் குதிக்கிறான். புத்தகத்துடன் அவன் நீந்தி வந்தபின்னர்தான் லெஸ்லீ நிம்மதிப் பெருமூச்சு விடுகிறாள். உயிரைப்பணயம் வைத்து அவள் புத்தகத்தை மீட்ட ரூடி இப்போதாவது என்னை நம்பு என்கிறான்.

வீடு வீடாக ஹிட்லரின் ஆட்கள் சோதனை நடத்துவதால் தம்மால் ஹான்ஸ் குடும்பத்தினருக்கு தொல்லை நேரலாம் என்பதை அறிந்த மேக்ஸ் அங்கிருந்து இரவோடு இரவாக வெளியேறுகிறான். தன் புத்தக நண்பனுக்குப் பிரியாவிடை தருகிறாள் லெஸ்லீ.

சில காலம் நாஜிப்படைக்கு அழைத்துச் செல்லப்படும் ஹான்ஸ் குண்டு காயம் பட்டதால் திரும்பி வருகிறார். ஆனால் அந்த குடும்பத்தின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. சைரன் ஒலி கேட்காத ஒரு இரவில் குண்டுமழை பொழிய அந்த கிராமத்தில் பல உயிர்கள் பலியாகின்றன. ரகசிய அறையில் புத்தகம் படித்தபடி தூங்கிவிட்ட லெஸ்லீ இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்கப்படுகிறாள். தந்தை, தாய் சடலங்களுடன் ரூடியின் சடலத்தையும் கண்டு கதறுகிறாள் நீ கேட்ட முத்தத்தை தருகிறேன் எழுந்திரு என்று அழுகிறாள். அவன் உயிரற்ற உடலை ஆரத்தழுவி இறுக்கி முத்தமிடுகிறாள்.

மரணம் மீண்டும் குறுக்கிட்டு பேசுகிறது.

வாழ்க்கை எந்த உத்தரவாதமும் அற்றது. ஹான்சை தூக்கத்தில் கொண்டு செல்லும் போது அவர் தமது அக்கார்டினில் ஒரு ராகத்தை வாசிக்க கடைசியாக விரும்பியதை அவர் நினைவைப் படித்து தாம் தெரிந்துக் கொண்டதாக கூறுகிறது மரணம்.

ஹான்சின் மனைவி ரோசா மரணத்தைத் தேவடியா பையா என திட்டிக் கொண்டே இறந்ததாக மரணம் தெரிவிக்கிறது.

ரூடியைக் கொன்றதற்காக மரணமும் வேதனைப்படுகிறது. ஆனால் ரூடியின் ஆயுள் அவ்வளவுதான்.

2 ஆண்டுகள் கழித்து அமெரிக்கப் படைகள் ஜெர்மனியை முற்றுகையிட்டு ஹிட்லரின் பிடியில் இருந்து அங்குள் மக்களை விடுவிக்கின்றனர். இதனிடையே ஒருமுறை அவள் மேக்சை சில ராணுவ வீரர்கள் இழுத்துச் செல்வதைக் கண்டு அவர்களை விரட்டிச் செல்லும் போது தள்ளி விடப்படுகிறாள். அப்போது அவளை தடுத்தாட்கொள்கிறாள் மேயரின் மனைவி இல்சா

காலம் மாறிவிட்டது. ஒரு டெய்லரிங் கடையில் வேலை பார்க்கும் லெஸ்லீ மேக்சை சந்திக்கிறாள். இருவரும் இணைகிறார்கள். அதன் பிறகு லெஸ்லீயும் மேக்சும் காலம் முழுவதும் நண்பர்களாக இருந்தார்கள் என்று மரணம் விவரிக்கிறது. லெஸ்லீ 90 வயது வரை வாழ்ந்து பேரன் பேத்திகளுடன்இருந்ததாகவும் மிகப்பெரிய எழுத்தாளராக மாறியதாகவும் மரணம் தெரிவி்க்கிறது. அவள் யாரை மணந்துக் கொண்டாள் என்பது கதையின்முடிவில் தெரிவிக்கப்படவில்லை. மேக்ஸ்தான் அவள் கணவனா. அவன் சகோதர உறவா நண்பனா என்ற கேள்விகளுடன் நாம் விடப்படுகிறோம்.

மரணம் பேசுகிறது.

யாரும் நிரந்தரமாக வாழ்வதில்லை. லெஸ்லீ 90 வயது வரை வாழ்ந்தாள். அவள் சொற்கள் பல உள்ளங்களைத் தொட்டன. பலரது காயங்களை ஆற்றின. வாழ்க்கை என்றால் என்ன என்றும் வாழ்வது என்பது எது என்றும் என்னை வியக்க வைத்த மிகச்சிலரில் லெஸ்லீயும் ஒருத்தி என்கிறது மரணம். இறுதியில் சொற்களும் முடிந்துப் போகின்றன. ஒரு சொல்லும் இல்லாத அமைதி வருகிறது.

மரணம் எல்லோரையும் ஏதோ ஒரு காலத்தில் கொண்டு சென்று விடுகிறது. ஆனால் மனித வாழ்க்கை லெஸ்லீயைப் போல் சிலரால் தம்மை ஒரு பேய் போல் விரட்டுகிறது என்று மரணம் கூறுகிறது.

சொற்களால் வாழ்கிறவர்கள்,மரணத்தையும் வெல்கிறார்கள்.
 

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...