Thursday, 1 August 2013

மரியோ வர்காஸ் லோசா- சிற்றன்னையின் புகழ் - In praise of the stepmother

மரியோ வர்காஸ் லோசா பெருநாட்டின் மகத்தான எழுத்தாளர். 2011ம் ஆண்டு அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதும் அவரைப் பற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக நண்பரும் எழுத்தாளருமான சாருநிவேதிதாவை தொலைபேசியில் அழைத்தேன். லோசா பற்றி அவர் ஏற்கனவே பலமுறை எழுதியிருப்பதை அறிவேன். வேறு எந்த எழுத்தாளரும் லோசாவை குறிப்பிட்டதாக நினைவில்லை, எனவே சாருவை கேட்டதும் மகிழ்ச்சியுடன் லோசா பற்றி பேச ஒப்புக் கொண்டார். மயிலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்காவில் லோசா பற்றி சாருவுடன் உரையாடிய அந்த ஒருமணி நேரத்திற்குப் பிறது லோசாவின் எழுத்துகளை தீவிரமாகத் தேடிப்பிடித்து படிக்கலானேன். ஓரிரு புத்தகங்கள் படித்தாலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தினார் என்று கூறமுடியவில்லை.ஓமன் பாரூக் உள்ளிட்ட எந்த நோபல் பரிசு எழுத்தாளரையும் பெரிதாக நினைக்கவில்லை. அதைவிட ஹென்றி மில்லரும். டாஸ்டய ஸ்கியும், காப்காவும் ,செக்காவும் மிகப் பெரிய எழுத்தாளர்களாக தெரிகிறார்கள். சாரு நிவேதிதா மிகைப்படுத்துகிறாரோ என்றுகூட எண்ணியிருக்கிறேன்.

ஆனால் அண்மையில் ஒரு புத்தகம் பழைய புத்தகக் கடையில் சிக்கியது. லோசாவின் இன் பிரெய்ஸ் ஆப் ஸ்டெப் மதர்ஸ் என்ற புத்தகம் தான் அது. 
வாங்கி வீடு வந்த இரண்டாவது நிமிடமே படிக்க ஆரம்பித்துவிட்டேன். கீழே வைக்கவே முடியவில்லை. காரணம் அதன் எரோடிகா தீம்  - சிறுவயது பையனுக்கும் அவன் மாற்றாந்தாய்க்கும் ஏற்படும் பாலியல் விபரீத உறவு சிறிய முத்தங்கள் தொடங்கி மார்பகத்தை கசக்கி படுத்து எழும் வரை அந்த உறவு வளர்வதையும் அப்பாவி சிறுவனை மாற்றாந்தாயே மயக்குகிறாளோ என்ற எண்ணத்தையும ஏற்படுத்தும் நுட்பமான கதையோட்டம்....ஆனால் வேலைக்காரப் பெண்ணை மடக்கவே மாற்றான்தாயை வீட்டைவிட்டு விரட்ட பையன் திட்டமிட்டதாக இறுதி அத்தியாயம் கூறுகிறது.


கதையை நம்மூர் பழைய சரோஜாதேவி புத்தகம் பாணியிலானது என்று குறைத்து மதிப்பிட வாய்ப்பு நிறையவே இருக்கிறது- இப்பத்தான் எல்லாம் சிடியில் அப்பட்டமாக வந்தாச்சே- ஆனால் கிரேக்க பண்டைய மன்னர்களின் அந்தரங்க கதைகளுடன், வீனஸ் தேவதையின் காம இச்சை பற்றிய பதிவுடன் நகரும் கதையின் இடைச்செருகல்கள் போர்னோ கதையையும் இலக்கியமாக்குவது எப்படி என்று கற்றுத்தருகின்றன. இப்பாணி நண்பர் சாருவுக்கும் உவப்பானது என்பதால் அவர் லோசா போன்ற படைப்பாளிகளிடம் மனதைப் பறிகொடுப்பதில் வியப்பேதுமில்லை.

என்னைப் பொருத்தவரை லோசாவை அத்தனை மகத்தான எழுத்தாளராகக் கூற முடியவில்லை, அவருடைய மேலும் சில புத்தகங்களைப் படித்தால் மதிப்பீட்டில் தெளிவு ஏற்படலாம். ஆனால் எரோடிக்கா எனப்படும் பாலியல் தொடர்பான படைப்புகளால் ஒரு இலக்கியவாதியை குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதை ஹென்றிமில்லரும் டால்ஸ்டாயும் எனக்கு ஏற்கனவே உணர்த்தியிருக்கிறார்கள். டால்ஸ்டாயின் நடனத்திற்கு முன் முழுக்க அடல்ட்ரி சம்பந்தமான கதை .ஆனால் இக்கதை பலநாட்களுக்கு என்னை அலைக்கழித்திருக்கிறது. இதே போல ஹென்றி மி்ல்லரின் டிராபிக் ஆப் கேன்சர், டிராபிக் ஆப் கேப்ரிகார்ன் .

லோசா சலனப்படுத்தினார் .ஆனால் பாதிக்கவில்லை. இருப்பினும் லோசா போன்றவர்கள் அறம் குற்ற உணர்வுகளுக்கு அப்பால் இன்பத்தை துய்ப்பதில் மனிதனுக்குத் தடை ஏதுமில்லை என்பதை துணிந்து கூறுகின்றனர். செக்ஸ் ஒரு பாவம் என்று பைபிளும் கிறித்துவமும் கூறலாம். ஆனால் இளம் பிஞ்சு உதடுகள் தன் உதடுகளில் ஒருகணம் பட்டு நகரும்போது, நடுத்தர வயதுப் பெண்ணுக்கு ஏற்படும் பாலியல் கிளர்ச்சி, கியூபிட்டாக அந்த சிறுவனைப் பார்க்கும் பார்வை, தன் மகன்போன்ற பையனுக்கு முன் முழு நிர்வாணமாக பாத்ரூமில் நீண்டநேரமாக அவன் மறைந்திருந்து பார்க்கிறான் என்று தெரிந்தே ஆடையணியாமல் நிற்கும் அவளது இச்சையும் உள்ளார்ந்த மகிழ்ச்சியும் அற்புதமாக எழுதப்பட்டுள்ளன.
நானோ சிறுவன் மனசாட்சியோ குற்ற உணர்ச்சியோ எனக்கில்லை என்று அச்சிறுவன் மிகவும் முதிர்ச்சியுடன் பேசுகிறான்.
இதே போல அந்தப் பெண் காமத்தின் உச்சக்கட்ட இன்பத்தை கணவனிடம் அனுபவிக்கும் இடத்தில் செபாஸ்டியன் என்ற புனிதர் ஏசுவுடன் சிலுவையில் அறையப்படும் காட்சி அவள் மனக்கண்  முன்பு காட்சியாக விரிவதைப் படிக்கையில் ஒருகணம் உடல் குப்பென வியர்த்து நடுநடுங்கிவிட்டது.

லோசாவை கவனித்தே ஆக வேண்டும்.


Monday, 8 July 2013

இளைய தளபதி விஜய் ரசிகன்



அண்மையில் பிரபல தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் தமது மகன் அஜிதன் தம்மைப் போலவே சிந்திப்பதாகவும், பல நேரங்களில் அஜிதன் பேசும்போது தமது குரலையே கேட்பது போலவும் எழுதியிருக்கிறார்,
எனக்கென்று பிள்ளை இல்லாத குறையைத் தீர்க்க வந்தவன் விக்கி. அவனை நான்தான் தாய் தகப்பனுக்கு மேலாக வளர்த்திருக்கிறேன். ஆனால் அவன் என்னைப் போல வளரவில்லை என்பதுதான் எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி. எனது தரித்திரம் என்னோடு தொலையட்டும். கோடீசுவரர்களும் புகழ் மிக்கவர்களும் தமது குழந்தை தம்மைப் போல இருக்க ஆசைப்படட்டும்.அத்தகுதி எனக்கு சிறிதும் இல்லை.

விக்கி விஜய் ரசிகன். எனக்கோ கமல் ரஜினிக்குப்  பிறகு எந்த ஹீரோவுடனும் மனம் ஒட்டவில்லை. கார்த்திக் கொஞ்சம் பிடிக்கிற மாதிரி வந்து காணாமல் போனார். பிரபுவின் துள்ளல் பிடிக்கும். அப்புறம் அஜித்தின் சிரிப்பு பிடிக்கும். விஜய் நடித்த சில படங்களும் பிடிக்கும் என்றாலும் ஒரு ஹீரோ வர்ஷிப் அளவுக்கு யாரையும் நிறுத்தவில்லை. எம்.ஜி.ஆர். சிவாஜி, ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், ஜெமினி கணேசன், முத்துராமன், கமல், ரஜினி அவ்வளவுதான் எனக்குப் பிடித்தவர்கள்.
ஆனால் விக்கியின் உலகம் புதிது. அவனுக்கு சைக்கிளில் விஜய் படம் ஒட்ட வேண்டும். கணினியில் அத்தனை விஜய் ஸ்டில்களையும் டவுன்லோடு பண்ண வேண்டும். விஜய் பிறந்த நாளில் அவனே கணினியில் டிசைன் செய்த போஸ்டரை பத்து இருபது பிரிண்ட் அவுட் எடுத்து தெரு முழுக்க வீடு வீடாக அவனே போய் ஒட்ட வேண்டும். வாழ்நாளில் ஒருமுறையாவது விஜய்யை சந்தித்து கைக்குலுக்கி போட்டோ எடுக்க வேண்டும். இதற்கு உதவாத என்னை காறித்துப்புகிறான். சீ....நீயெல்லாம் எழுத்தாளரா....மீடியாவில் இருக்கியா என்று கேட்கிறான். இவனுக்காகவாவது நா.முத்துக்குமாரிடம் மானம் மரியாதையை விட்டு தலைவா ஆடியோ ரிலீசுக்கு ஓசி பாஸ் கேட்கலாமா என பல முறை யோசித்து வழக்கம் போல கைவிட்டு விட்டேன். நா. முத்துக்குமாரை கடுமையாக நான் விமர்சித்தாலும் அதை துடைத்துப் போட்டுவிட்டு அவர் எங்கேயோ அடைய முடியாத உயரத்துக்குப் போய்விட்டார். எந்த முகத்தை வைத்து அவரிடம் பேசுவது?

எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான்......தனக்கொரு பாதை வகுக்காமல் என் தலைவன் வழியிலே நடப்பான் என்று பாடிய வாலியையும் எம்ஜியாரையும் நினைத்து சிரித்துக் கொள்கிறேன்.
எனக்குப் பிறக்காததாலோ என்னவோ விக்கி என்னைப் போல் இல்லை.
அவனை என் உலகமான இலக்கியத்திற்குள் கைப்பிடித்து கூட்டி வர முயற்சி செய்தேன், பல முறை சென்னை புத்தகக் கண்காட்சிகளுக்கு அழைத்துச் சென்றேன்.  ஒரு புத்தகம் கூட அவன் ஒருமுறை கூட வாங்கவில்லை. கலர் பென்சில், டிராயிங் கிட், கேம்ஸ் டிவிடி பாப்கார்ன், ஜூஸ், ஐஸ்கிரீம், பிட்சா சாப்பிட்டதுடன் அவன் புத்தகக் காட்சி அனுபவம் தீர்ந்துவிடும்.
இதுவரை அவன் ஒரு புத்தகம் கூட வாசித்ததில்லை, பள்ளியிலேயே ஒழுங்காகப் படிக்கவில்லை.
எனக்குப் பிடித்த சில விஷயங்கள்  விக்கிக்குப் பிடிக்கும். நான் ஆணையிட்டால் பாட்டையும் முகமது ரபி பாடிய ஒரு பாட்டையும் மன்னாடே பாடிய ஒரு பாட்டையும் அடிக்கடி கேட்பான். எல்லா பாடல்களிலும் முக்கியமான ஒற்றுமை அதில் குழந்தைகள் நடித்திருப்பதுதான்.

என்னைப் போல அவனும் உணவில் ருசி கண்டவன். அவன் சாப்பிடாத ஓட்டல் சென்னையில் இல்லை. எங்கே எந்தப் பண்டம் ருசியாயிருக்கும் என்று என்னை மாதிரியே கரெக்டாக சொல்லி விடுவான்.

புத்தியுள்ள மனிதன் எல்லாம் வெற்றி பெற்றதில்லை வெற்றி பெற்ற மனிதன் எல்லாம் புத்திசாலி இல்லை என்றால் முதல் வரி எனக்கும் அடுத்த வரி விக்கிக்கும் பொருந்தட்டும். அவன் என்னைப் போல இடியட்டான புத்திசாலியாக இருப்பதைவிட நார்மலான வெற்றியாளனாக வாழட்டும்.
வாழ்க்கையை விட பெரிது என்னதான் இருக்கு....முத்துக்குமாரும் ஜெயமோகனும் அடைந்த வெற்றிக்கு பல காரணங்கள் இருக்கலாம். அதுதான் எனது தோல்விக்கும் காரணம் என்று விக்கி என்றைக்காவது உணர்வான். அது போதும் எனக்கு.



Monday, 3 June 2013

மூர்மார்க்கெட்

சென்னை சென்ட்ரல் நிலையத்தை ஒட்டி மூர்மார்க்கெட் இருப்பது பலருக்கும் தெரியும். முன்பு  இருந்த மூர்மார்க்கெட் இப்போது ரயில்வே புக்கிங் கவுண்டரும் புறநகர் ரயில்கள் புறப்படும் இடமும் அமைந்த கட்டிடத்தில் இருந்ததும் நாம் அறிந்திருப்போம். அந்த பழைய மூர்மார்க்கெட் தீயில் கருகியதும் நாம் அறிந்த செய்திதான். ஆனால் அந்தப் பழைய மூர்மார்க்கெட்டுடன் எனது பால்ய காலத்திற்கு நெருக்கமான உறவு உண்டு.

திருச்சியில் படித்துக் கொண்டிருந்த நான் குடும்பத்தின் இடம் பெயர்தல் காரணமாக, சென்னை வந்து சேர்ந்தேன். இங்கு எட்டாம் வகுப்பு படிக்கும் போது, மாலையில் நானும் எனது நண்பன் சேகரும் விளையாடச் செல்லும் இடம் இந்த மூர்மார்க்கெட்தான்.

அப்போது அங்கே பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடுவதாக ஒருவர் மோடி வித்தை காட்டுவார். ஒரு நாளும் நாங்கள் அந்தச் சண்டையைப் பார்க்க முடியவில்லை. காரணம் கையில் காசு இல்லை. காசு இருப்பவர்கள் மட்டும் நிற்க வேண்டும் மற்றவர்கள் போய்விட வேண்டும் என்றும் பாம்பு-கீரி சண்டையில் காசு போட மறுப்பவர்கள் ரத்தம் கக்கி செத்து விடுவார்கள் என்றும் அந்த பாம்பாட்டி மிரட்டுவான். அதனால் நாங்கள் பயந்து ஓடியே போய் விடுவோம்.

கொஞ்சம் வளர்ந்த நிலையில் எனிட் பிளைட்டன் புத்தகங்களை வாங்க நான் மூர் மார்க்கெட் சென்றேன். பதின் பருவங்களில் அமர்சித்ர கதாவும் முத்துக் காமிக்சும் அணில் முயல் போன்ற இதழ்களும் படித்து வந்த எங்களுக்கு அட்வென்ச்சர் கதைகளில் நாட்டம் அதிகரித்தது. சங்கர்லால் துப்பறியும் கதைகள், மேதாவி சிரஞ்சீவி மர்ம நாவல்கள் மற்றும் எனிட் பிளைட்டன் நூல்கள் மீது ஆர்வம் ஏற்பட்டது. எனிட் பிளைட்டன் எனக்கு விரைவில் சலித்துப் போய்விட்டார். அதைவிட கனமான நூல்களில் நாட்டம் அதிகரித்து, விக்டர் ஹ்யூகோவையும் ஷேக்ஸ்பியரையும் ரஷ்யாவிலிருந்து மாஸ்கோ பதிப்பகம் வெளியிட்ட டால்ஸ்டாய், புஷ்கின். மாயகாவாஸ்கி, மாக்சிம் கார்க்கி, ஷோலக்கோவ் போன்ற நூல்கள் மீது ஆர்வம் அதிகரித்திருந்த்து.
ஆனால் மூர்மார்க்கெட் எங்கும் நிறைந்திருந்த புத்தகக் கடைகளைப் பார்க்கவே அடிக்கடி அங்கு செல்வது வழக்கமாகி விட்டது.
மூர்மார்க்கெட் எரிந்து சாம்பலாகிப் போன போது இரண்டு மூன்றுநாட்கள் சோறு தண்ணீ இல்லாமல் ஜூரமடித்துக் கிடந்தேன். இப்போது சற்று பின்னால் இருந்த அல்லிகுளத்தில் மற்றொரு மூர்மார்க்கெட் முளைத்திருக்கிறது. இங்கும் புத்தக கடைகள் இருக்கின்றன. வாரத்தில் ஒருமுறையாவது இங்கு போய்விடுகிறேன். அபூர்வமான புத்தகங்களுடன் அருகில் உள்ள பழைய பொருட்கள் சந்தையில் சில ஒரிஜினல் திரைப்பட டிவிடிக்களும் பத்து இருபது ரூபாய்க்கு கிடைக்கின்றன. பாம்புச் சண்டை நடைபெற்ற இடத்தில் இப்போது சர்க்கஸ் கூடாரம் அமைக்கிறார்கள். எத்தனையோ சினிமாப் பட டூயட்கள் படமாக்கப்பட்ட மைலேடீஸ் பூங்காவில் இப்போது காதலர்களும் தொப்பையைக் குறைக்க வரும் மார்வாடிகளும் சில ஏழைச்சிறுவர்களும்தான் காணப்படுகின்றனர்.
எனது நினைவுகளில் உள்ள மூர்மார்க்கெட்டும் இன்று நான் கண்ணெதிரில் காணும் மூர்மார்க்கெட்டும் வேறுதான். ஆனால் ஏதோ ஒரு பழைய புத்தகத்தின் வாசனையும் அதனுடனான எனது உறவும் நீங்காமல் இங்கு நிலைத்திருக்கிறது.



Sunday, 2 June 2013

செந்தூரம் ஜெகதீஷ் - senthooram jagdish


என்னைப் பற்றி நானே எழுதியுள்ள விக்கிபீடியாவாக இதனை எடுத்துக் கொள்ளலாம். பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம் வழக்கமான பயோடாட்டா சமாச்சாரங்கள். அதைத் தவிர்த்து சொல்ல எனக்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

நான் தெளிவான குழப்பவாதி. சோ கூட தோற்றுவிடுவார். சரி என நினைப்பது தவறாகவும் தவறு என நினைப்பது சரியாகவும் இருக்கும். மாத்தி யோசிப்போம் என்று நினைத்தால் அப்படியே தலைகீழாக மாறிப்போகும்.

விதிமீது நம்பிக்கை வலுப்பெற்றுவிட்டது. நான் வாழும் வாழ்க்கைக்கும் அதன் அத்தனை துயரங்களுக்கும் விதியைத் தவிர வேறு யாரையும் நான் குறை கூற மாட்டேன்.

சிறுவயது முதல் படிப்புதான். படிப்பு என்றால் பள்ளிக்கும் கல்லூரிக்கும் வெளியேதான். கன்னிமரா , அமெரிக்க, பிரிட்டிஷ் நூலகங்கள், மாவட்ட நூலகங்கள், பழைய புத்தகக் கடைகள். புதிய புத்தகக் கடைகள். புத்தகக் கண்காட்சிகள். பேருந்து நிலைய பத்திரிகைக் கடைகள் என எதையும் விடவில்லை.
ஜவுளிக் கடைகள் முதல் டிவி செய்தி சேனல்கள் வரை பல இடங்களில் பணியாற்றி விட்டேன். அங்காடித் தெரு வாழ்க்கையை கிடங்குத் தெரு
நாவலாக எழுதத் தெரிந்தாலும் சினிமாவாக்க தெரியவில்லை. சம்பாதிக்கவும் தெரியவில்லை,என்னுடன் பழகிய ஜெயமோகன்தான் அதை காசாக்கிக் கொண்டார். திருடினார் என நான் சொல்லமாட்டேன்.

காதல் ,நட்பு என எப்போது நான் முகம் மலர்ந்தாலும் அடுத்து அதற்கான விலையையோ வலியையோ நான் சுமக்க நேரிட்டு இருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை சினிமாவும் இலக்கியமும் இருகண்கள் போன்றவை எனக்கு. இவை இல்லாமல் வாழ முடியாது. இதே போல எனது குடும்பமும்  உறவுகளும் எனக்கு எத்தனை கசப்பை தந்திருந்தாலும் மனதுக்கு அவை  தேவைதான். இவையின்றி நான் வாழத் தெரியாதவன்.

ஓஷோவும் சாப்ளினும் தமிழ் எழுத்தாளர்கள் பலரும் எனது ஆதர்ச குருமார்கள். எம்.எஸ்.விஸ்வநாதனும் இளையராஜாவும் முகமது ரபியும் டிஎம்.எஸ்சும் இவர்களும் இவர்களைப் போல பலர் உருவாக்கிய இசை உலகமும் எனக்கு சுவாசக்காற்று.
ஹென்றி மில்லரும் காப்காவும், இந்திப்பட நடிகர் மற்றும் இயக்குனர் மனோஜ்குமாரும் எனது உணர்வுகளுக்கு நெருக்கமானவர்கள். காரல் மார்க்சுக்கும் எனது லால் சலாம்.
ஏசு. புத்தர், ராமர், முகமது நபிகள் என எல்லாப் பெயர்களும் என்னைப் பொருத்தவரை ஒரு தோட்டத்தின் பலவகை நறுமண மலர்கள்தான்.தாமரைக்கும் ரோஜாவுக்கும் லில்லிக்கும் பகையிருப்பதாக நான் நினைக்கவில்லை, பகையைத் தூண்டுவது அரசியல், மத அரசியல்.  நான் இறைவனின் அழகான இத்தோட்டத்தில் பாடித்திரியும் பறவைதான்.


என் ஒட்டு மொத்த வாழ்க்கைக்கும் இப்போது அர்த்தம் புரிந்து விட்டது. நான் அதில் மகிழ்ந்து நடமாடிக் கொண்டிருக்கிறேன். அதைப் பற்றி எனது அடுத்த நாவலில் படிக்கலாம்.சினிமா இயக்குனர்கள் என்னிடம் அட்வான்ஸ் புக்கிங் செய்துக் கொள்ளலாம்,.








சி.சு.செல்லப்பாவும் எழுத்தும்

                                                                 
c
மணிக்கொடி எழுத்தாளர்களில் ஒருவரான சி.சு.செல்லப்பா, எழுத்து என்ற தமது இதழ் மூலம் தனித்துவமான அடையாளத்தைப் பெற்றவர். நான் அவரை சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற ஒரு இலக்கிய விழாவில் சந்தித்து என் பேரைக் கூறி, அவர் கதைகளைப் படித்திருப்பதாகக் கூறியதும் குழந்தையைப் போல வெகுளியாக சிரித்து என் கையைப் பிடித்து தன் வாக்கிங் ஸ்டிக்குடன் நடந்து சென்றார். வாசல் வரை அவரை வழியனுப்பும் போது பிரமீள் வந்துவிட்டார்.இருவரும் பேசிக் கொள்வதில்லை என நண்பர்கள் கூறினார்கள்.அதற்கேற்றாற்போல செல்லாப்பாவும் விடுவிடுவென விலகி சென்று யாரோ அழைக்க அவருடன் போய்விட்டார். அதன் பிறகு மீண்டும் ஒரு முறை திருவல்லிக்கேணி-அமீர் மகால் அருகே இருந்த அவர் வீட்டுக்குப் போனபோது, வீட்டு வாசலில் நாற்காலியைப் போட்டு உட்கார்ந்திருந்தார். சில நிமிடங்கள் மட்டுமே பேச முடிந்தது. அழைத்து வந்த நண்பர் அவரது அவசரம் காரணமாக செல்லப்பாவுடன் என்னைப் பேச விடவில்லை. அவரும் பேச ஆர்வம் காட்டவில்லை. யாரோ வந்தாங்க போனாங்க என்று நினைத்திருப்பார். ஆனால் மானசீகமாக ஒரு சீடனைப் போல ஒரு ஏகலவனைப் போல நான் செல்லப்பாவை வாசித்திருக்கிறேன். அவருடைய வாடிவாசலைவிடவும் கள்ளர் மடத்தையும் சரஸாவின் பொம்மையையும் ராட்டினம் கதையையும் நேசித்திருக்கிறேன். கலைஞர் தொலைக்காட்சியில் என்னால் இயன்றவரை அவருக்கு மிகச்சிறந்த அஞ்சலி செலுத்தும் வகையில் ,எழுத்து பற்றியும் செல்லப்பாவைப் பற்றியும் ஆவணப் படமாகத் தயாரித்தேன். ஆனால் துரதிர்ஷ்ட்டவசமாக அதன் பிரதி இப்போது என்னிடம் இல்லை. நண்பர்கள் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியை அணுகி இதுபோன்ற அரிய ஆவணப்படங்களை மீட்க எனக்கு வழிகாட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். கனிமொழி மனது வைத்தால் நடக்கும்.

சிசு.செல்லப்பா பிராமணர் என அவரை எதிர்க்கும் குணம் எனக்கு இல்லை. பாரதிதான் பார்ப்பானை அய்யர் என்ற காலம் போச்சே என்று பாடினான். எந்த தலித்தும் பாடவில்லை. 

அண்மையில் நண்பர் தீபம் திருமலை எழுதிய நா.பா பற்றிய புத்தகம் வாசித்துக் கொண்டிருந்த போது அதில் செல்லப்பாவைப் பற்றி திருமலை எழுதிய சில பக்கங்கள் மனதை நெருடின. எத்தனை அபூர்வமான மனிதரை நமது வாழும் காலத்தில் நாம் தவறவிட்டிருக்கிறோம் என்ற வேதனையும் வலியும் அதிகமானது. எழுத்து தொகுப்பை வெளியிட கலைஞன் பதிப்பகம் முன்வந்த போதும் சி.சு.செல்லப்பாவின் மகன் தொடர்பற்றுப் போனதும், பணத்துக்கு ஆசைப்பட்ட செல்லப்பாவின் உறவினர் ஒருவர் அதை இழுத்தடித்ததும் அவரும் மறைந்த பிறகு அந்த முயற்சி பயனற்றுப் போனதையும் திருமலை தமது நூலில் பதிவு செய்திருக்கிறார்.  

எழுத்து இதழ்களின் தொகுப்பு ஒன்று கோவை ஞானியிடம் இருக்கிறது. அதை அவர் யாருக்கும் தரமாட்டார். ஆனால் ஞானிக்கே தெரியாமல் எப்படியோ அப்படியே அத்தொகுப்பை வேறொருவர் மூலம் லவட்டிக் கொண்டு பிரதி எடுத்து திருப்பிக் கொடுத்திருக்கிறேன். இப்போதும் அது ஞானியின் வீட்டில் இருக்கலாம். இல்லையென்றால் கூட என்னிடம் பிரதி இருக்கிறது- பத்திரமாக.

எழுத்து இதழ்களைப் போலவே மணிக்கொடி இதழ்களும் கிடைப்பதில்லை. ஒரிஜினலான மணிக்கொடி இதழ்கள் சில எனக்குக் கிடைத்திருந்தாலும் அவற்றை பொள்ளாச்சி நசனும் சில தோழியரும் பறிமுதல் செய்துவிட்டனர். பதிலுக்கு எனக்கு மசால்தோசையும் சில நூறு ரூபாய்களும் நசன் கொடுத்திருக்கலாம். அப்படித்தான் மணிக்கொடி கிடைத்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். எனக்கு நினைவில்லை.

சமீபத்தில் மூர்மார்க்கெட் போன போது செல்லப்பாவின் சுதந்திர தாகம் நாவலின் மூன்று பாகங்களும் எனக்குக் கிடைத்தன. சுமார் 200 ரூபாய் கொடுத்து வாங்கி வந்துவிட்டேன். செல்லப்பாவின் எழுத்துகள் அனைத்தையும் தேடித்தேடி சேகரித்திருக்கிறேன். அவரது அரிய நூல்கள் இன்னும் பல இருக்கலாம். அவற்றுக்கு ஜெயமோகன்,எஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா, சுஜாதா போன்றோரின் மார்க்கெட்டும் இணைய ரசிகர்களும் இல்லை என்பதுதான் துரதிர்ஷ்ட்டம்.  கல்லூரிகளுக்கும் இலக்கியக் கூட்டங்களுக்கும் தானே பதிப்பித்த தனது நூல்களை சுமந்து திரிந்த ஒரு அசடான தமிழ் எழுத்தாளனுக்கு நாம் திருப்பிக் கொடுப்பது இணையம் வழியாக பட்டுச் சட்டை போட்ட ஒரு பூர்ஷ்வா கூட்டத்தைத்தான். நீங்கள் போட்டுக் கொண்டிருக்கும் டெர்லின் சட்டை அவர்கள் அடிவயிற்றிலிருந்து திருடியதுதான் என்ற புதுமைப்பித்தனின் குரல்தான் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

Tuesday, 28 May 2013

சூஃபி தர் - சூபிக்களின் வாசல்

இஸ்லாமை கரைத்துக் குடித்தவன் அல்ல நான். ஆனால் குரான், நபிகள் வரலாறு போன்ற அதன் புனிதமான புத்தகங்களை மனச்சுத்தியோடு படித்திருக்கிறேன்.இஸ்லாமிலிருந்து கிளை பிரிந்த சூஃபிக்களுடன் எனக்கு அதிகமான நெருக்கம் இருந்திருக்கிறது. காரணம் எனது மூதாதையரும் பாகிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள்தான். இஸ்லாமிய ஆன்மீக நெறியுடன் எங்கள் குலத்திற்கும் குடும்பத்திற்கும் நெருங்கிய உறவு இருந்தது. ஆனால் முஸ்லீம்களால் பாகிஸ்தானிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர் எனது தாத்தாவும் அவரது குடும்பத்தினரும்.
உமர் கய்யாம், முல்லா நசுரூதீன், ஜலாலுதீன் ரூமி, ஹபீஸ், சா ஆதி, போன்ற சூபி அறிஞர்களுடனும் சூபி வாழ்வியலை ஏற்றுக்கொண்ட ஹஸ்ரத் இனாயத் கான், மிர்சா காலிப் போன்றோரின் படைப்புகளுடனும் எனக்கு அற்புதமான பிணைப்பு இருந்தது. சூபி இசையில் மஸ்த் கலந்தரும் குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்களிலும் நாகூர் அனிபாவின் இறைவனிடம் கையேந்துகள் பாட்டிலும், மெல்லிசை மன்னர் எம்.எஸ்வியின் அல்லா அல்லா பாடலிலும் எனக்குத் தீராத உறவு நீடிக்கிறது.
நாங்கள் சிந்தி இனத்தவர். எங்கள் குரு அமிர்தசரசில் அருள் புரியும் குருநானக்தான். ஆனாலும் சிந்தி மொழி உருதுவைப் போல பின்னாலிருந்து எழுதப்படுவது, சிந்திக்கள் பலர் இஸ்லாமியர் போல குல்லாய் போடுவார்கள். இப்போதும் கூட இப்படி பார்க்கலாம்.
இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காக தோன்றிய மதம்தான் சீக்கியமதம் என்பார்கள். சீக்கிய வேர்களில் கிளைத்த நாங்கள் இஸ்லாமின் ரோஜா மலர்களுடன் நட்புறவு கொண்டோம்.
சூபி கலாசாரம் இஸ்லாமுக்கு எதிரானது என்போரும் உண்டு. அது தவறான கருத்து. இஸ்லாம் உருவ வழிபாட்டை ஏற்பதில்லை. ஆனால் சூபிக்கள் இறைவனின் உருவத்தை இசை நடனம் கலை இலக்கியம் போன்றவற்றில் தரிசிப்பவர்கள், உருவ வழிபாடு செய்யும் இந்துக்களோடும் கிறித்துவரோடும் அவர்களுக்கு நல்ல இணக்கம் உண்டு. இது அடிப்படைவாத இஸ்லாமியரிடம் இல்லை என்பதுதான் முக்கியமான வேறுபாடு.

இதைப் பற்றி ஓஷோ எழுதுவதைப் படித்தால் சற்று தெளிவு பிறக்கலாம்.சூபிக்கள் பற்றிய ஓஷோவின் தனி நூல்களுடன் அவரது எல்லா நூல்களிலும் குறிப்புகள் உண்டு.

இந்துமதத்தின் புனித நூலான நான்கு வேதத்திலிருந்து முரண்பட்டு  வளர்ந்த முற்போக்கு கிளை தரிசனங்கள் உபநிஷத்துகளில் பதிவாகின.
இதே போலத்தான் இஸ்லாமின் அடிப்படையான இறைநம்பிக்கையை கைவிடாமல் அதன் மேலோட்டமான இறுக்கங்களைத் தளர்த்தி வளர ஆரம்பித்தது சூபியிசம்.

தஸ்தகீர் பாபா என்ற சூபி ஞானியைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா.....
அவரது நினைவிடம் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரிலும் வடமாநில நகரங்களிலும் அமைந்திருக்கிறது. ஆனால் சென்னையிலேயே தஸ்தகீர் பாபாவுக்காக ஒரு ஆலயம் அமைத்து அங்கு அவரது உருவத்திற்கு முன்பு இஸ்லாமிய தொழுகை நேரப்படி சரியாக ஒருமணியிலிருந்து ஒன்றே முக்கால் வரை துவா எனப்படும் தொழுகை நடத்தப்படுகிறது. இதற்கு அடித்தளமிட்டது தாதா ரத்தன் சந்த் என்பவர், பழுத்த ஆன்மீக வாதி. உலக நாடுகளில் பயணித்தவர். மிகவும் தீர்க்கதரிசி, பண்பட்ட மனிதர். அவர் அமைத்த ஆலயம் தான் .
ஷா இன் ஷா பாபா

                                         பாபாவை வணங்கும் தாதா ரத்தன் சந்த்

இதே ஆலயத்தில் ஜலாலுதீன் ரூமி உள்ளிட்ட சூபி அறிஞர்களின் நூற்றுக்கணக்கான அற்புதமான படங்கள், ஓவியங்களை காணலாம். ரம்ஜான் கொண்டாடும் ஆலயமும் இதுதான். மாதம்தோறும் ஏழைகளுக்கு மளிகை சாமான் வாங்கி காரில் அவர்கள் வீட்டிற்கே கொண்டுபோய் தரும் தர்ம தானங்களுடன் எத்தனையோ நல்ல காரியங்கள் இங்கு எந்த வித விளம்பரமும் இல்லாமல் நடக்கிறது.

ஷாஹென் ஷா பாபா என்ற தமது குருவின் நினைவால் இந்த ஆலயத்தை கட்டியிருக்கிறார் தாதா ரத்தன் சந்த்

சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில், சிட்டி சென்ட்டர் எதிரே உள்ள சிறிய வீதியில் வந்தால் இக்கோவிலை அடைந்துவிடலாம். ஒருமுறை பிற்பகல் ஒருமணிக்கு வந்து பாருங்கள். உங்கள் மதம். சாதி, இனம் எதுவாக இருப்பினும் இங்கே அனுமதி உண்டு. கோவிலுக்கு செல்லும்போது கடைப்பிடிக்கும் தூய்மையான உடலோடும் உள்ளத்துடனும் வந்தால் போதும். உண்டியலே இல்லாத கோவிலும் உலகில் இது ஒன்றுதான் என்று நினைக்கிறேன்.
ஆரம்பத்தில் எனக்கும் இக்கோவில் பணக்கார சிந்திக்களின்  பொழுதுபோக்குக்காகவும் ஆன்மீக உணர்வுக்காகவும் கட்டப்பட்ட 5 நட்சத்திர விடுதி என்ற கிண்டலான மனோபாவம்தான் இருந்தது. ஆனால் தொடர்ந்து அங்கு செல்லத் தொடங்கிய  பிறகு வாழ்க்கையின் பல கேள்விகளுக்கு விடையை கண்டறிந்திருக்கிறேன். வாழ்க்கையில் துன்பங்களே ஏற்படவில்லை என கூற முடியாவிட்டாலும் துன்பங்களை கையாளும் பக்குவத்தைப் பெற்றிருப்பது இறையருளால்தான்.
ஒருமுறை தாதா என்னைப் பார்க்க விரும்புவதாக தகவல் கிடைக்க அவரைப் போய் வணங்கி நின்றேன். உங்களுக்கு ஒரு வேலை தந்தால் செய்வீர்களா எனக் கேட்டார் தாதா.
சொல்லுங்கள் என்றேன்.
இங்கு சூபிக்களின் வரிகளை வெள்ளை போர்டில் அவ்வப்போது எழுதுங்கள் எனக்கட்டளையிட்டார். எனக்கும் அந்தக் கோவிலுக்கும் உறவு இதிலிருந்துதான் தொடங்கியது. ரூமி, ஹபீஸ், அத்தர், ஹஸ்ரத் இனாயத் கான், காலிப் போன்றோரின் அற்புதமான வரிகளை தேடிப் பிடித்து அங்கு எழுதி வருகிறேன். இதனால் எனக்கு அபரிதமான மரியாதை கிடைத்துள்ளது. பலர் தங்கள் டைரிகளில் அந்த வரிகளை எழுதிச் செல்வதைப் பார்க்கிறேன்.
இந்த ஆலயத்திற்கு இதை தர்கா என்றே தாதா அழைக்கிறார், இந்த தர்காவுக்கு வந்தவர்கள் அனைவருமே வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்குப் போய்விட்டார்கள். ஆனால் நான் மட்டும் எப்போதும் போல தவிக்கிறேன். ஒருமுறை போர்டில் சூபி வாசகத்தை எழுதும்போது என்னை மட்டும் ஏன் வெறுங்கையுடன் திருப்பி அனுப்புகிறீர்கள் குருவே என ஷாயின்ஷா பாபாவிடம் மனமுருகி கேட்டு அழுதிருக்கிறேன். இன்றுவரை எனது தேவைகள் தீரவில்லை. ஆனால் இந்த தர்காவுடனும் சூபிக்களுடனும் எனது உறவு முடியாது என்பதுதான் இப்போதும் என் நிலை.

பின்குறிப்பு - தாதா ரத்தன் சந்த் காலமாகி விட்டார். அவர் குடும்பத்தினர் இப்போது சூஃபி தரை நிர்வாகம் செய்கின்றனர்

பிரபல வார இதழ்களின் மறுபக்கம்

தமிழில் வெளியாகும் பிரபல வார இதழ்கள் அனைத்தும் சாதாரண வாசகனை நோக்கியே தங்கள் புத்தம் புதுக் கட்டுரைகளை வெளியிடுகின்றன. பாதிக்கும் மேலான பக்கங்களை  சினிமாவும்  சில பக்கங்களை  சினிமாவும் ஆக்ரமிக்கின்றன. அரசியலுக்காகவே வெளியாகும் ரிப்போர்ட்டர், ஜீ.வியிலும் கூட நடுப்பக்க அரைகுறை ஆடை அழகி அவசியமாகி விட்டது. 
மக்கள் அதிகமாக படிப்பது சினிமாவையும் அரசியலையும் அதை விட்டால் ஆன்மீகம், ஜோசியம் ஆகியவற்றையும்தான். 
பெண்கள் பத்திரிகை என்றால் கைத்தொழில்,வீட்டிலிருந்து சம்பாதிக்க தொழில், சமையல் குறிப்புகள், நாகரீகம், ஆடை அணிகலன்கள், அந்தரங்க பிரச்சினைகள்.
இதையெல்லாம் பத்திரிகை ஆசிரியர்கள் துல்லியமாக நாடி பிடித்து வைத்து விட்டனர். ஆனால் இந்த தேவைக்கு பரிமாற வேண்டிய கட்டுரைகளை எழுதுபவர்களை தேர்வு செய்வதில்தான் அவர்கள் தோற்றுப் போகின்றனர். ஒவ்வொரு இதழிலும் ஆசிரியருக்கு வேண்டிய சிலர் மட்டும் குறைந்தது பத்து பக்கம் அல்லது நான்கைந்து கட்டுரைகளை அவர்கள் எழுதி விடுவார்கள். அதற்கு தனியாக கவர்கூட வாங்குவார்களா என்று தெரியாது. இதே நபர்கள்தாம் அந்நிறுவனத்தின் அனைத்து இதழ்களிலும் வெள்ளி, ஞாயிறு இணைப்புகளிலும் எழுதித் தள்ளுவார்கள். தனி சன்மானமும் இதற்கு உண்டு. மற்ற உதவியாசிரியர்கள் பாவம் நாலு வாரத்தில் நாலு பக்கம் கூட எழுத விடமாட்டார்கள். அவர்கள் ஙே என விழித்தபடி கிடைக்கும் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்திற்காக வாசகர் கடிதம், கவிதை தேர்வு செய்வார்கள், பரிசுக் கூப்பன்களை பரிசீலித்து பிரித்து வைப்பார்கள். அல்லது கேன்டீனில் உட்கார்ந்து புலம்பித் தள்ளுவார்கள்.

ஒரு பெரிய பத்திரிகையும் அதன் துணை இதழ்களும் சகோதர இதழ்களும் நான்கைந்து பேர் கொட்டமடிக்கும்  கூடாரமாக இருப்பதற்குக் காரணம் ஆசிரியர்தான். பெரும்பாலும் ஆசிரியர் பெயர் வேறு ஆசிரியர் வேலை செய்பவர் வேறாக இருக்கும்.

பிரபல வார  இதழில்  பத்தி எழுத 2 அல்லது 3 பக்கம் தரும்படி அதன் ஆசிரியர் பொறுப்பில் இருந்தவரிடம் கேட்டேன். நீங்க பிரபலமானவரா எனக் கேட்டார். இப்போது மனுஷ்யப்புத்திரன் பத்தி எழுதுகிறார்.  மனுஷ்ய புத்திரனின் கால்கள் ஆல்பம் கவிதைதான் அவரை சுஜாதாவிடம் அறிமுகம் செய்து அவரை தமிழ்ச்சூழலில் பிரபலமாக்கியது. அந்தக் கவிதையை தேர்வு செய்து கோவை ஞானியின் நிகழ் இதழில் வெளியிட்டதில் முக்கிய காரணகர்த்தா நான்தான். ஆனால் நான் பிரபலமாகவில்லை.

ஒருவரின் தகுதியையோ அல்லது திறமையையோ கணிக்கும் அளவு பத்திரிகை ஆசிரியர்கள் அறிவுஜீவிகள் அல்ல, தனக்கு அடங்கிய தன்னை மிஞ்சி விடாத  மந்த நிலை பத்திரிகையாளர்கள் போதும் அவர்களுக்கு. பத்திரிகை  விற்க அவர்கள் முழுதாக நம்புவது நடிகைகள் மற்றும் அஜித்,விஜய்,சூர்யா போன்றோரின் ஸ்டில்களை மட்டும்தான்.

இந்த வம்பை இன்னும் வளர்க்கலாமா இத்துடன் விட்டுவிடலாமா  



Tuesday, 7 May 2013

குழந்தைகளுக்கு பள்ளிப் படிப்பு தேவைதானா ?

அண்மையில் எனது செல்லக் குழந்தை விக்னேஷ்- வயது 12,  ஏழாவது வகுப்பில் பெயிலானதாக தகவல் வந்தது.கூடவே அவனது குறும்புகளையும் விளையாட்டையும் சகித்துக் கொள்ள முடியாத பிரின்சி மேடம் டிசி கொடுத்து அனுப்பி விட்டார். எட்டாவது வரை குழந்தையை பெயிலாக்க முடியாது, 14 வயது வரை குழந்தைக்கு கல்வி கற்கும் உரிமை, பள்ளியை விட்டு வெளியேற்றப்படுதல் தடுக்க வேண்டும் என்பதுபோன்ற சட்டவிதிமுறைகளோ தார்மீக நெறிகளோ அந்தப் பள்ளிக்குப் புரியவே இல்லை. அத்தனைக் குழந்தைகளையும் பாஸ் செய்துவிட்டு இந்த ஒரு குழந்தையை மட்டும் வெளியேற்றிவிட்டது பள்ளி நிர்வாகம்.

விக்கி எனது வளர்ப்பு மகன்தான். ஆனால் அவன் தாய் தந்தையும் இந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் அழுதது ஒருபுறம் இருக்க, எனது செல்லத்தால்தான் குழந்தை இப்படியாகி விட்டதாக பழிவேறு சுமக்க நேரிட்டிருக்கிறது.
என் குழந்தையாக இருந்திருந்தால் இப்படியொரு கேடுகெட்ட பள்ளியில் எனது குழந்தை படிக்கத்தான் வேண்டுமா என்று யோசித்திருப்பேன். குழந்தையின் விளையாட்டை ரசிக்கத் தெரியாத கிழட்டு முண்டங்கள் நடத்தும் அந்தப் பள்ளியில் படித்து அவன் வாழ்வின் ஒரு உன்னதத்தையும் கற்றுவிட முடியாது. மாறாக மந்தையில் ஒரு ஆடாக மாறிவிடுவான். எனது குழந்தையின் அறிவுக்கூர்மையும் அப்பாவித்தனமான அவன் சேட்டைகளும் எனக்குத் தெரியும். அதற்கு இப்பள்ளியோ நமது அரைவேக்காட்டு கல்வித்திட்டமோ தரும் சான்றுகள் தேவைதானா என்று கேட்டிருப்பேன். ஆனால் அவன் பெற்றோருக்கு இந்த சிந்தனை எழவில்லை. அவர்கள் விக்கியை எப்படியாவது ஏதாவது ஒரு நல்ல பள்ளியில் சேர்த்து விட அலைந்துக் கொண்டிருக்கிறார்கள். யார் யார் காலிலோ விழுந்துக் கொண்டிருக்கிறார்கள்.
நான் பள்ளியில் படித்ததால்தான் இப்போது தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுத முடிகிறது. எனது ஆசிரியர்களை இன்று நன்றியோடு நினைத்துக் கொண்டேதான் இதனை எழுதுகிறேன். ஆனால் விக்கி போன்ற குழந்தைகளுக்கு, குறும்புத்தனமும் உயிர்ப்பும் ததும்பும் அவர்களின் பால்ய கால சேட்டைகளுக்கு எந்தக் கல்வியும் ஈடாகாது. அதனை இழந்து அவர்கள் எதையும் அடைந்துவிடமுடியாது.


Saturday, 23 February 2013

பாப்புலர் அப்பளங்களும் ஊசிப் பட்டாசுகளும்

விக்கிக்கு சோறு ஊட்ட வேண்டுமானால் அப்பளம் வேண்டும். அதுவும் பாப்புலர் அப்பளம. எந்த அப்பளமானால் என்ன என்று ஒரு முறை பேச்சு வந்தப்ப பாமா அக்கா சாப்பிட்டுப் பார்த்திட்டு பாப்புலர் அப்பளம் வேறமாதிரி ருசியாத்தான் இருக்குன்னாங்க. எனக்கென்னவோ அதன் பெயர்தான் அதனை பாப்புலராக்கியது போல தோன்றும்.
இலக்கியத்திலும் பாப்புலர் அப்பளங்கள் உண்டு. அப்பளத்துக்காவது தான் ஒரு சைடு டிஷ் மட்டும்தான் என்று தெரியும்.அதனால் லேசாக அழுத்தினாலும் உடைந்து நொறுங்கிப் போகும். ஆனால் இலக்கிய அப்பளங்கள் தங்களைத்தான் மெயின் டிஷ்ஷாக நினைத்து மமதையில் மிதந்துக் கொண்டிருக்கின்றன.
இலக்கியத்தின் தகுதியும் அதன் உண்மையான மதிப்பீடும் சமகாலத்தில் தீர்மானிக்கப்படுவதில்லை. சமகாலத்தில் புகழின் உச்சம் தொடும் பாப்புலரிசங்கள் இலக்கியத் தகுதியற்றவை. காலத்தை வென்று வாழும் தகுதியை அவை இழந்துவிடுகின்றன. சூப்பர் ஸ்டார் இலக்கியவாதிகள்தான் கடைந்தெடுத்த, தூக்கிப் போட வேண்டிய கழிசல்கள். புதுவெள்ளம் பாயும் போது முதலில் கழிசல்களைத்தான் வெளியே தள்ளும். சுத்தமான தண்ணீர் பின்னால் மெதுவாக வந்துக் கொண்டிருக்கும்.

இலக்கியச் சூழலில் வாசகர்கள் பிரபலமான பெயர்களைப் பார்த்து புத்தகங்களை வாங்குவது இயல்புதான். நான் கவனமாக அவற்றை தவிர்ப்பதை வழக்கமாகிக் கொண்டிருக்கிறேன்.ஒரு படைப்பாளியின் முதல் புத்தகத்தை வாங்கி, தொடர்ந்து அவரது வளர்ச்சியை கவனித்து, அவர் பெரிய ஆளானதும் கைகழுவி ஒழித்துக் கட்டுவதும் என் வழக்கம்தான். அதையும் மீறி சில புத்தகங்கள் என்னிடம் தங்கிவிடுகின்றன. மீண்டும் அவற்றைப் படிப்பதற்கான உந்துததலோ பரவசமோ சாத்தியமே இல்லை என்ற போதும் அவற்றை என்னால் தூக்கிப் போட முடியவில்லை. காரணம் அவை என்னை சில நேரங்களில் செதுக்கியிருப்பதுதான்.

ஜெயகாந்தன், அசோகமித்திரன், லா.ச.ராமாமிர்தம், ஆதவன், தி.ஜானகிராமன், பிரபஞ்சன், பாலகுமாரன், எஸ் ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா , நாஞ்சில் நாடன், அம்பை போன்றோரின் எழுத்துகள்  மீண்டும் படிக்க ஆர்வமூட்டுபவை .இந்தப் படைப்பாளிகள் மீதுள்ள தனிப்பட்ட மரியாதையும் ஒரு காரணம் எனலாம்.


எனது கவனம் அதிகம் சத்தம் போடாத ஊசிப்பட்டாசுகள் மீதுதான். எப்போதோ ஒரு புத்தகம் எழுதி அமைதியாக இருக்கும் திலீப்குமாரும், வண்ணநிலவனும், ஆ.மாதவனும் மட்டுமல்ல மறைந்தும் உயிர்ப்புடன் இருக்கும் புதுமைப்பித்தன், கு.ப.ரா, மௌனி, பிச்சமூர்த்தி, சம்பத், சி.சு.செல்லப்பா, எம்.வி.வெங்கட்ராம், சுந்தர ராமசாமி  போன்ற மேதைகள்தாம் என் சிந்தனையிலும் செயலிலும் வாசிப்பிலும் வாழ்விலும் நிறைந்திருக்கிறார்கள்.

புதிதாக எழுதுபவர்களில் பிரான்சிஸ் கிருபாவும், குமார செல்வாவும், சு.வேணுகோபாலும் , வாமு கோமுவும்,  ஷாராஜூம், தமிழ்நதியும்  ,ஆண்டிப்பட்டி உமா மகேஸ்வரியும் கவிஞர் நிமோஷினியும் சூர்யராஜனும் இதுபோன்ற இன்னும் 100 பேராவது எனது கவனத்தில் இருக்கிறார்கள். இவர்களைத்தான் என்னால் தமிழின் ஆகச்சிறந்த படைப்பாளிகளாக மதிப்பீடு செய்ய முடியும். அவர்களைத்தான் மீண்டும் மீண்டும் வாசிக்க முடியும். பரவசப்பட முடியும். பகிர்வதற்கு ஆள் தேடமுடியும்.

திரைப்படப் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் சினிமாவுக்கு வருமுன் அவருடைய கவிதைகளை தகுதியற்றவையாக நிராகரித்து, அவரை உச்சி முகர்ந்த அறிவுமதி போன்றவர்களிடம் இதற்காக சண்டை போட்டிருக்கிறேன்.
கவிதையை விசிட்டிங் கார்டு போல மாற்றி சினிமா சான்ஸ் தேடிய அவரது போக்கு எரிச்சலூட்டியது. ஆனால் எனது எதிர்ப்பும் விமர்சனமும் அவரை தடுத்து நிறுத்த முடியவில்லை. அவர் நானே வியக்குமளவுக்கு முன்னணி பாடலாசிரியராகி விட்டார் .அற்ப ஆயுளில் மறைந்தும் விட்டார்.

உறவுகள் நட்புகளின் நிலையற்றத் தன்மை என்னை எப்போதும் வாட்டும் பிரச்சினையாக இருக்கிறது .நிலையில்லாத மனிதர்கள் அவர்க்கும் என்ன உறவுகள் என்ற பாடல்தான் மனதுக்குள் ஒலிக்கிறது.

இப்படி எழுதுவதால் அந்த உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ளும் எண்ணமோ எதிர்பார்ப்போ துளிக்கூட இல்லை என்பதை உணரலாம். உறவுமில்லை பகையுமில்லை என்ற நிலைமை நீடித்தால் போதும். பகைத்தாலும் அருள்வேன்.

ஆழ்ந்த வாசிப்பு, ரசனை, கையளவு திறமை, கடலளவு தேடல், அன்பு, அர்ப்பணிப்பு, தோழமை, தெளிவு போன்ற என்னுடைய எத்தனையோ தகுதிகளை பாப்புலரிசங்கள் நொறுக்கிவிடுகின்றன. ஒரு சைடு டிஷ்ஷாக கூட தகுதியற்றவனாக புறக்கணிக்கப்படுகிறேன். தாஸ்தயவஸ்கியை, பாரதியை புதுமைப்பித்தனை, காஃப்காவை நிராகரித்த அதே அரைவேக்காட்டுத்தனமான சமகாலம்தான் என்னையும் நிராகரிக்கிறது. இதுவே எனது மிகப்பெரிய இலக்கிய அங்கீகாரம் என்று நான் என்னையே ஆறுதல்படுத்திக் கொள்கிறேன்.

ஆனால் வாழ்வின் தோல்விகளும், சோர்வுகளும் மன உளைச்சல்களும் பலமுறை என்னை ரயில் தண்டவாளங்களை நோக்கியும் கடல் அலைகளை நோக்கியும் நகர்த்திக் கொண்டிருக்கிறது. பிரியங்கள் இல்லாத மனிதர்களுடன் மீண்டும் மீண்டும் எனது அன்பும் காதலும் மோதி மோதி நொறுங்கிக் கொண்டிருக்கிறது. பணம் என்ற மகாலட்சுமி வடிவிலான மாயப்பிசாசின் கருணைக்காகவும் , அவ்வப்போது அது வீசியெறியும் சில்லறைக்காகவும் ஓடிக்கொண்டே இருக்கிறேன்.

செந்நிறை ஒளியாகத் தோன்றிய எதிர்காலம், முதுமையின் இருளாக மாறி பயமுறுத்துகிறது. இந்த இருட்டுக்குள் துழாவித் துழாவி எனக்கான பாதையையும் சின்ன சின்ன சந்தோஷங்களையும் நான் தேடிக் கொண்டேயிருக்கிறேன்.
எனது வாழ்க்கையிலும் தவறுகள் உண்டு. சமரசங்கள் உண்டு. பெண்களின் உறவு,  பணம் போன்றவற்றை பாதுகாக்க தெரியாதவன் நான். அவற்றை உடைமைகளாக நினைப்பவர்கள் எக்கச்சக்கமாக பாதுகாக்கிறார்கள்.அதன் சுகங்களை அனுபவிக்கிறார்கள். என் மீது யாராவது குற்றம்சாட்டினால் அதில் பாதியாவது உண்மை இருக்கும் என நானே நம்புகிறேன். அப்படி இருந்தால் அதனை ஏற்றுக் கொள்ளும் மனத்தூய்மையும் நேர்மையும் என்னிடம் இருக்கிறது.

என் வாழ்க்கை இன்னதென்று என்னால் வரையறுக்கப்பட்டு விட்டது. இன்னும் சொல்லப்போனால் விதிக்கப்பட்டு விட்டது. இனி இந்த இலட்சுமணக் கோட்டை நானே நினைத்தாலும் கூட மீற முடியாது.


வெற்றியைத் தேடும் வெறியும் அது வந்தால் அதனுடன் ஏற்படக் கூடிய சுயமழிதலும் பற்றி நான் நன்கு புரிந்துக் கொண்டுவிட்டேன். புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை என்ற சித்தாந்தம் என்னளவில் சரி. புத்திக்கு மேல் மனசை வைத்திருக்கும் மனிதர்களுக்கு இதுதான் கதி. முகேஷ் பாடிய இந்திப்பாடல் ஒன்றில் dil pe marne wale marenge bikhari என்பார். அதாவது, இதயப் பூர்வமான அன்புக்காக  உயிரைக் கொடுப்பவன், பிச்சைக்காரனாகத்தான் சாவான்.

வெற்றி என்பது ஒரு சூட்சுமம். அதை ச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று நான் கசப்புணர்வில் பார்க்கவில்லை. வெற்றியின் சூட்சுமம் தெரிந்தாலும் அதை விட்டு ஒதுங்கிப் போகும், சில சமயங்களில் ஓடி ஒளியும் மனப்போக்கையே வளர்த்துக் கொண்டிருக்கிறேன்.

என்னுள் இருக்கும் உணர்வு, ஆசைகள், நான் பெற்ற அவமானங்கள், நிராகரிப்புகள், எல்லாம் எனது அன்பின் பெயரால் அல்லது அறிவின் பெயரால்தான் எனக்குக் கிடைத்திருக்கின்றன.இவை என்னை வெறிப்பிடித்தவன் போல இயக்கிக் கொண்டிருக்கின்றன.

என்னுள் ஒரு சுடர் மட்டும்  அணையாமல் எரிந்துக் கொண்டே இருக்கிறது. அது தமிழ்ச்சமூகத்திற்கு எதையோ சொல்லத் துடிக்கிறது. எனது குரல் சமகாலத்தில் ஒலிக்காது என்பது எனக்குத் தெரிந்தாலும் கூவுகிறேன்.
எனது எழுத்து, வாழ்வு நான் பணியாற்றும் ஊடகம் என எல்லாவற்றிலும் இந்த ஒளியின் தெறிப்புகளைப் பார்த்து பலர் வியப்படைகிறார்கள். எனது இருளுக்குள் போய் பதுங்கிக் கொள்கிறேன்.

எனக்கு என்னைத் தவிர யாரிடமும் எந்தவிதப் பாதுகாப்புணர்வும் ஏற்படவில்லை.

ரோட்டி கப்டா மக்கான் என்றொரு படம் எழுபதுகளில் வந்தது. அதில் நடித்த மனோஜ்குமார்தான் படத்தின் இயக்குனரும், கதை வசனகர்த்தாவும் ஆவார். அந்தப் படத்தில் ஒரு பாடல்- மகேந்திர கபூர் பாடி லட்சுமிகாந்த் பியாரேலால் இசையமைத்தது எனக்குப் பிடித்த பாடலாக உள்ளது. அது என்னையே பிரதிபலிக்கிறது.

இனி உனக்கு கனவுகள் இல்லை, சொந்தங்கள் இல்லை.
உண்மைக்கு விலை ஒன்றுமில்லை.
எதுவும் பேசாதே வாயை மூடி மௌனமாயிரு.
அன்பு காதல் பாசம் என்றெல்லாம் நீ அடித்தொண்டையிலிருந்து குரல் எழுப்பிக் கத்தினால், குரல்வளையை நெறித்துவிடுவார்கள்.
தலைக்கு மேலே கல்லைப் போட்டு மூடு. வாழ வேண்டும் என சபதம் எடு.

எத்தனை முறை இன்னும் நான் காலத்தைப் படிப்பவனாகவே இருக்க வேண்டும்.
எத்தனை முறை காலத்தின் கணக்குகளை நான் கூட்டிக் கழித்துப்பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.

யார் இங்கே துன்பங்களைத் தேர்வு செய்கிறார்கள்.
யார் இங்கே குற்றங்களை கணக்குப் பார்க்கிறார்கள்.

கருணை என்பது நொறுங்கிப் போன ஒரு கண்ணாடிதான்.
காதலிகள் விலை போகிறார்கள். பணத்தின் பின்னால் ஓடுகிறார்கள்.
வெட்கம், மானம் என்பது பற்றி அவர்களுக்கு கவலை இல்லை.
கல்லறையைத் திறந்து போய் படுத்துக் கொள்ள வேண்டும் போல இருக்கிறது. இந்த உலகத்தையே அழித்துவிட வேண்டும் போல இருக்கிறது

----------- என்று முடியும் இந்தப் பாட்டு என்னை அழவும் வைத்திருக்கிறது, ஆறுதலும் தந்திருக்கிறது.

பியாசாவில் குருதத்தும் இதையே தான் சொன்னார். எரித்து விடுங்கள் இந்த உலகை. என் கண்களுக்கு அப்பால் கொண்டு செல்லுங்கள் இந்த உலகத்தை. இது உங்கள் உலகம் .....நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் இந்த உலகை.

சிலசமயங்களில் வெற்றியைப் போல ஒரு தோல்வி வேறு எதுவும் இல்லை. வெற்றியால் சிலர் வாழ்க்கையை நன்றாக வாழ்ந்து, அனுபவித்து, இன்பங்களையும் சொத்துகளையும் குவித்தாலும் அந்த வெற்றி என்பது ஒரு தோல்விதான்.

அதைவிட வலியும் கண்ணீரும் நிறைந்த என்னைப் போன்றவர்களின் தோல்விகூட உன்னதமானதுதான்.

நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெடப் புழுதியில் எரிவதுண்டோ, சொல்லடி சிவசக்தி என்று பாரதி கேட்ட அதே கேள்வியுடன் முடிக்கிறேன்.


-----------------------------------------------------------------------------------------------------------------------


இக்கட்டுரையின் பெரும்பகுதி- சில சிறிய பிழைகளுடன் சௌந்தர சுகன் சிற்றிதழின் பிப்ரவரி 2013 இதழில் பிரசுரமானது. இது திருத்தப்பட்ட வடிவம்.

















Wednesday, 6 February 2013

புத்தகக் கண்காட்சி 2013

வழக்கம் போலவே இந்த ஆண்டும் புத்தகக் கண்காட்சிக்கு சென்றேன், கையில் பணமில்லாமல். அதிகபட்சமாக 300 ரூபாய்க்கு மட்டுமே புத்தகம் வாங்கி வந்தேன். சம்பத் கதைகள், விட்டல்ராவின் நவீன கன்னட சினிமா, விகடன் பிரசுரம் வெளியிட்ட மௌனி பற்றிய நூல், பகவத் கீதை போன்றவை நான் இந்த ஆண்டு வாங்கி வந்த நூல்கள்.
பொதுவாக புத்தகக் கண்காட்சி வரும் நேரத்தில் நான் வேளையில்லாமல் இருப்பேன். அல்லது சம்பளம் கிடைக்காமல். இந்த ஆண்டு இரண்டாவது விதம்.
வீட்டில் குவிந்திருக்கும் புத்தகங்களிலும் பாதிக்குமேல் படிக்கப்படாமல், ஆர்வத்தை ஏற்படுத்தாமல் இருக்கின்றன. ஒரு நாள் வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கும் போது ஃபில்டர் பண்ணி தேவையற்ற புத்தகங்களை கழித்துவிட்டேன். ஜெயமோகன், ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, சுஜாதா, ஈழத் தமிழ் கவிதைகள், கதைகள் சில மொழிபெயர்ப்புகள், சில ஆன்மீக நூல்கள், சில கவிதை நூல்கள் என எதையெல்லாம் கழிக்க முடியுமோ கழித்துவிட்டேன். இவை இனி என் வாழ்வுக்குத் தேவைப்படாது.
பழைய புத்தகங்களை கழிப்பதிலும் பிரச்சினை. கடைக்கும் எடைக்கும் போட மனம் வராது. இலவசமாக நண்பர்களுக்கு அள்ளிக் கொடுத்தால் அவர்கள் பணம் கொடுத்து புத்தகத்தை வாங்க விருப்பமின்றி இலவசமாக கிடைக்குமா என எதிர்பார்க்கும் மனநிலைக்கு ஆளாகிறார்கள், குறைந்த விலைக்கு தந்தாலும் வாங்கிச் செல்லும் நண்பர்கள் பணம் தர மாட்டேன் என்கிறார்கள், கறாராகப் போய் கேட்கவும் தயக்கமாக இருக்கிறது.
என் செல்லக் குட்டிப் பயலை புத்தகக்கண்காட்சிக்கு அழைத்துப் போனேன். அவனுக்காக 500 ரூபாய் எடுத்துப் போனேன். படிக்கும் ஆர்வம் அவனுக்குச் சிறிதும் இல்லை. காமிக்ஸ் முதல் நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்ட சிறுவர் நூல்கள் வரை புரட்டிப் பார்த்து வேண்டாம் என்றான். 200 ரூபாய்க்கு டிராயிங் மேஜிக் பேனாவும் சாதனமும் வாங்கி வந்து இரண்டு நாள் விளையாடி ஓரமாக வீசியெறிந்துவிட்டான்.
புத்தகக் கண்காட்சியில் வழக்கம் போல நண்பர்களை சந்திக்க முடிந்தது. அது மட்டும்தான் உற்சாகமளிக்கும் விஷயமாக இருக்கிறது.
புத்தகக் கண்காட்சியில் கூட்டமும் அதிகமாகவே காணப்படுகிறது. சிடிக்கள், டிவி சேனல் விளம்பரங்கள், கணினி மென்பொருட்கள், பாடப்புத்தகங்கள், பாப்கார்ன், இமாச்சலப்பிரதேச ஆப்பிள் சாறு, ஊட்டி வர்க்கி என எத்தனையோ பொருட்கள் கிடைக்கின்றன. போகப் போக புத்தகக் கண்காட்சி சுற்றுலாப் பொருட்காட்சி போல ஆகி விடும்.
ஆனால் பழைய புத்தகங்களுக்கு இடம் இல்லையாம், அவை ஏதோ ஒரு ரகசிய பதுங்குக்குழியில்வைத்து விற்கப்பட்டு வந்தன. தேடிக் கண்டுபிடித்து அங்கும் சில புத்தகங்கள் வாங்கினேன்.
புத்தகக் கண்காட்சிக்கு என்று ஒரு திருவிழா கூட்டமும் தயாராக இருக்கிறது. வைகோ முதல் கூறு கெட்ட தமிழ்ப்புலவர்கள் வரை பலர் மேடையேறிப் பேசுகிறார்கள். வாழ்நாளில் ஒரு புத்தகத்தையாவது காசு கொடுத்து வாங்கிப் படிக்காதவர்கள் அந்த நிகழ்ச்சிகளில் இடம்பெறுகிறார்கள். சாப்பாட்டு அரங்கம் விலையை இருமடங்காக்கி வாசகர்களை பழிவாங்கியது. கழிவறையோ பேருந்து நிலையங்களே மேல் என எண்ண வைத்துவிட்டது.

வெளியே வந்து சுண்டல் சாப்பிட்டால் அதுவும் அரைவேக்காடு.
அரைவேக்காடுகளுக்காகவே புத்தகக்கண்காட்சி நடத்தப்படுகிறதா என்ற சந்தேகத்துடன்தான் வீடு திரும்ப வேண்டியிருக்கிறது.








Wednesday, 12 September 2012

இறைவனை அடைதல்



                                                               



வழிபாட்டுத் தலங்கள் திறப்பு - செந்தூரம் ஜெகதீஷ்


தமிழ்நாடு தவிர இந்தியா முழுவதும் 75 நாட்கள் அடைக்கப்பட்டிருந்த அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள் இன்று 8.6.2020 திறக்கப்பட்டன. அடையாத கதவுகள் கூட அடைபட்ட நிலையில் பக்தர்களின் உணர்வுகளை கூற வார்த்தையில்லை. நாத்திகம் பேசி நாறடிக்கும் கூட்டங்கள் மீது எனக்கு மரியாதை கிடையாது. நானும் 37 வயது வரை கோவில் வாசலை மிதிக்காதவன்தான். ஆனால் ஓஷோவும் மருதமலை முருகனும் என்னை ஆத்திகனாக மாற்றியது எனது அனுபவம். திருப்பதி ஏழுமலையான் நான் வணங்கும் தெய்வம். இந்நிலையில் ஒரு முறை நான் எழுதிய ஆன்மீகக் கட்டுரையை இங்கு பதிவு செய்கிறேன்.
கட்டுரை திருத்தி எழுதப்பட்டது.....

இறைவனை அடைய பல வழிகள் சொல்லப்பட்டிருக்கின்றன.சூரிய வழிபாடு முதல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரை இறைவழிபாடு இயற்கை சார்ந்த வழிபாடாகவே இருக்கிறது. ஆனால் ஸ்தூலமான உலகின் காட்சிமயமான இறைவழிபாட்டை கடந்து, இறைமையை உள்ளத்தாலும் உணர்வாலும் அறியும் சில முறைகளும் உள்ளன. அற்புதமான குளிர் மாருதம் வீசும்போது நான் இறைவனைத் தொட்ட பரவசத்தை அடைந்திருக்கிறேன். மழைத் துளியின் ஸ்பரிசத்திலும் அவனது சருமத்தை உரசியிருக்கிறேன். எதுவம் அற்ற ஒரு சூன்ய வெளியிலும் ஆழ்ந்த நித்திரையிலும்கூட இறைமையையும் அவன் கருணையையும் அறிந்திருக்கிறேன்.

அடிக்கடி திருப்பதி செல்லும் வழக்கம் எனக்கு உள்ளது. 4 மாதங்களில் மூன்று முறை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பயணம் மேற்கொண்டேன். இரண்டு முறை குடும்பத்துடனும் ஒருமுறை தனியாகவும்.

முதல் முறை சென்றது திட்டமிடாதது. எனவே ரயிலில் முன்பதிவு இல்லாமல் மூன்றரை மணி நேரமும் சிரமப்பட்டு பின்னர் களைப்புடனே மலையேறினோம். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் 50 ரூபாய், 300 ரூபாய் தரிசனம் எல்லாம் இல்லை என்று சுமார் 8 மணி நேரம் பொதுவரிசையில் நின்றிருந்தோம். சகோதரியின் குழந்தைகள் சோர்ந்து போயினர். சாப்பிட உப்புமாவும் பாலும் தேவஸ்தானம் அளித்தது. ஆனால் குழந்தைக்குத் தராமல் வரிசையில் வரச் சொல்லி விரட்டிய ஊழியருடன் சண்டை போட்டதில் அதுவும் கிடைக்கவில்லை. கிடைத்த கொஞ்ச உணவை பகிர்ந்துக் கொண்டு கூண்டுக்குள் அடைபட்டுக் கிடந்தோம். திடீரென பல மணி நேரம் தரிசனம் கிடையாது என்றார்கள். மறுநாள் இரவு 9 மணிக்குத்தான் தரிசனம் என்றும் கூண்டை பூட்டிய காவலாளி கூறினான். அப்போது மணி இரவு மணி 3. சரி என காலைவரை தரையில் தூங்கினோம். அதிகாலை 4 மணிக்கே சுத்தம் செய்யும் பணியாளர்கள் வந்து தரையெல்லாம் தண்ணீர் ஊற்றி விரட்டியடித்தனர். ஒடுங்குவதற்கு கூட இடமின்றி கூட்டத்தைக் கண்டாலே எரிச்சல் எரிச்சலாக இருந்தது. திடீரென முடிவெடுத்து திரும்பி விட்டோம். பல கூண்டுகள் கதவுகளைத் தாண்டி வெளியே வந்தோம். பிளாக் மார்க்கெட்டில் இரவிலும் கூட லட்டு கிடைத்தது. வாங்கி பஸ்ஸையும் ரயிலையும் பிடித்து மலையிலிருந்து கீழிறங்கி சென்னை திரும்பி விட்டோம். பெண்களுக்கு சங்கடம். தரிசனம் செய்ய முடியாதது குறித்து வீணான கற்பனைகள், பயங்களும் ஆட்டிப் படைத்தன. அப்போது அப்பா உயிருடன் இருந்தார். அப்பாவிடம் கேட்டேன். திரும்பி வரலாமா இப்படி என்று. பெருமாள் கோவில் வாசலை தொட்டு வந்ததே புண்ணியம்தான் கவலைப்பட வேண்டாம் என்றார்.

அடுத்த இரண்டு வாரங்களில் எனது பிறந்தநாள். கடந்த ஆண்டு எனது பிறந்த நாள் ஏழுமலையான் சன்னதியில் கழிந்தது. இப்போதும் அப்படியே ஆகட்டும் என்று தியாகராஜ நகரில் உள்ள தேவஸ்தானம் அலுவலகம் போய் 50 ரூபாய் டிக்கட்டில் பதிவு செய்து வந்தேன். எக்ஸ்பிரஸ் ரயில்களை எதிர்பாராமல் அரக்கோணம் வரை செல்லும் மெட்ரோ ரயிலில் போய் அங்கிருந்து பேருந்து மூலம் திருப்பதி சென்றடைந்தேன். கிட்டதட்ட 6 மணி நேரமாகிவிட்டது. இரவு பத்துமணிக்குத் தான் தரிசன நேரம் தரப்பட்டிருந்தது. திருப்பதியில் சல்மான் கான் நடித்த ஏக் தா டைகர் படம் பார்த்து ஊரையும் சுற்றி நன்றாக சாப்பிட்டு, இரவு சரியாக பத்து மணிக்கு வரிசையில் நின்றேன். நள்ளிரவு 12.30 மணிக்கு தரிசனம் கிடைத்தது. அதாவது என் பிறந்தநாள் முடிந்துவிட்டது. ஆனால் பத்து மணிக்கே வரிசைக்கு வந்துவிட்டதால் பிறந்தநாளில் பெருமாளை தரிசித்த கணக்கு வைத்து அரக்கோணம் வழியாகவே திரும்பி விட்டேன்.
மூன்றாவது முறை மீண்டும் குடும்பத்தினருடன் குழந்தைகளுடன் புறப்பட்டோம். இம்முறை எல்லோரும் 50 ரூபாய் கொடுத்து பதிவு செய்துவிட்டோம். இம்முறையும் இரவு பத்துமணி தரிசனம்தான். மாலை 4.30க்கு ரயிலில் டிக்கட்டும் எடுத்து விட்டோம். ஆனால் 7 டிக்கட்டில் 3 மட்டுமே சீட் ஒதுக்கப்பட்டன. எனவே மீண்டும் அன் ரிசர்வ் பெட்டியில் ஏறி புளிமூட்டை போல திணிக்கப்பட்ட மக்களுடன் சண்டை போட்டபடி திருப்பதி சென்றடைந்தோம். இரவு 8 மணிக்கு மலையேற பஸ்ஸில் ஏறினால், அப்போது குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜி சாமி தரிசனம் பண்ண திருப்பதி வந்ததாக கூறி பேருந்தை 2 மணி நேரம் கிடப்பில் போட்டுவிட்டனர். பிரணாப்பின் கார் கடந்து போன பிறகே பேருந்து மலைப்பாதைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இரவு 11 மணிக்கே போய் சேர்ந்தோம். பரவாயில்லை என வரிசையில் போய் நின்றால் ஆச்சரியம். சர சர வென வரிசை நகர்ந்து அடுத்த ஒருமணி நேரத்திலேயே அற்புதமான பெருமாள் தரிசனம் வாய்த்தது. லட்டு பிரசாதம் வாங்கி குளத்தில் தலையி்ல் தண்ணீர் தெளித்து, உடைமைகளை வாங்கிக் கொண்டு பன்னிரண்டரைக்கே திருமலை யாத்திரை பூரணம் அடைந்துவிட்டது. பிறகு விடிய விடிய பிரதான வாசல் அருகே வெட்டவெளியில் நடுநடுங்கும் குளிரில் படுத்துத் தூங்கி விடிந்ததும் ஊர் திரும்பி வந்தோம்.

இப்படி இறைவனை அடையும் பொருட்டு எத்தனையோ பேர் எத்தனை விதமான சிரமங்களை அடைகின்றனர். திருமலைக்கு கால்நடையாக வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் குறையவில்லை. இறை நம்பிக்கை என்ற ஒற்றை துடுப்பைக் கொண்டு எத்தனை லட்சம் தோணிகள் வாழ்க்கையின் சூறைக்காற்று மற்றும் புயலை சந்திக்கின்றன. எத்தனை லட்சம் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை சில கணங்கள் தரிசிப்பதற்காக நாள் கணக்கில் உடலையும் மனத்தையும் வருத்துகின்றனர். எத்தனை நாட்களாக திட்டமிடுகின்றனர். எத்தனை கோடி ரூபாய் வணிகமும் போக்குவரத்தும் வாழ்வாதாரமும் ஏழுமலையானின் புண்ணியத்தால் திருப்பதியில் வாய்த்திருக்கிறது. எத்தனை டூரிஸ்ட்டுகளால் லாட்ஜ், தியேட்டர், உணவகங்களுக்கும் இதர கோவில்களுக்கும் வருவாய் கிடைக்கிறது.

இப்படி பல்வேறு எண்ணங்களுடன் சென்னை திரும்பிய போது மனத்தில் இரண்டு எண்ணங்கள் மேலோங்கின. கூட்டத்தை கட்டுப்படுத்த தேவஸ்தானம் அமர்த்திய பணியாளர்கள் பெருமாளை தரிசிக்க வருவோரை பிடித்து பிடித்து தள்ளுகின்றனர். ஒரு அழகான இளம் பெண் போலீஸ்காரி என்னை கூச்சமின்றி தொட்டு கிட்டதட்ட அணைத்து இறுக்கிப் பிடித்து தள்ளி விட்டாள். அந்தப் பணியாளர்கள் பெருமாள் சன்னதியருகே பல மணி நேரம் நிற்கின்றனர். பெருமாளை தரிசிக்கும் சில கணங்களுக்காக நாள்கணக்கில் மாதக்கணக்கில் நாங்கள் பல நடைமுறைச் சிக்கல்கள், பொருளாதார பிரச்சினைகளுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருக்க இவர்களுக்கு எப்படி இப்படி ஒரு எளிதான தரிசனம், வாய்த்த்து. பிரணாப் முகர்ஜியைப் போன்ற மனிதர்களுக்கு 40 ஆண்டுகளாக மத்திய அமைச்சராகவும் எம்பியாகவும் இருந்து அத்தனை சுகபோக சொகுசுகளை அனுபவித்தவருக்கு கடைசிக் காலத்தில் குடியரசுத் தலைவர் பதவி வேறு.
எப்படி இத்தனை கொடுப்பினை.........இவர்களுக்கெல்லாம் எளிதாக பெருமாள் தரிசனம் தருகிறாரே என்று ஆற்றாமை எழுந்தது.
கோபம் பிரணாப் மீது அல்ல. இவ்வுலகைப் படைத்த கடவுள் மீதும் அல்ல. ஆனால் இடையில் நடந்துவிட்ட பல குழப்பங்கள் மீதும் அந்த குழப்பங்களுடன் மேலும்மேலும் குழப்பத்தைப் படைத்துக் கொண்டிருக்கும் எளிய மனிதர்கள் மீதும் என்மீதும்தான் எனக்கு கோபம்.

அல்லது எல்லோர் மீதும்.




Thursday, 30 August 2012

அறம்அழியும்காலம்

அறம் அழிந்து வரும் காலத்தில் வாழ்ந்து வருகிறோம். அறம் என்பதைப் பற்றி நமது குழந்தைகளுக்கு கல்வியுடன் சேர்ந்து போதிக்கத் தவறி விட்டோம். மாரல் சயன்ஸ் என்ற வகுப்பும்  ஆங்கிலோ இந்திய பள்ளிகளின் மதப்பிரச்சார மேடையாகவே மாறிவிட்டது.
ராவணன் அடுத்தவன் மனைவியை கவர்ந்து சென்றான். இது அறத்தை மீறிய செயல். அதனால்தான் ராமன் அவனைக் கொன்றான். அறம் என்பது தனக்குரியதையும் தனக்கு உரிமை இல்லாததையும் அறிவது.
அறத்தை அறியாத சமூகத்தில் தள்ளப்பட்டிருக்கிறோம். சென்னை அரசு மருத்துவமனையில் குழந்தையை எலி கடித்துவிட்டு இறந்ததாக பரபரப்பான செய்திகள் வந்ததும் அவசரம் அவசரமாக எலிகளையும் நாய்களையும் மாநகராட்சி அலுவலர்கள் வேட்டையாடத் தொடங்கிவிட்டார்கள்.
எங்கள் வீட்டருகில் ஜெனரல் காலின்ஸ் ரோடு என்று ஒன்று இருக்குது. பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் கொலை செய்யப்பட்ட வீதி இதுதான். இந்த வழக்கில்தான் தியாகராஜ பாகவதரும் கலைவாணரும் கைது செய்யப்பட்டு சிறை சென்றனர். இந்த வீதியில் நானும் ஜெயமோகனும் பல இரவுகள் கொசுக் கடியை பொருட்படுத்தாமல் பல மணி நேரம் நள்ளிரவு வரை இலக்கியம் பேசியிருக்கிறோம். அந்த பிரசித்தி பெற்ற வீதியில்தான் நான்கைந்து பள்ளிகள் இயங்குகின்றன. செங்கல்வராயன் பள்ளி, ஓக்ஸ் பள்ளி. பிரெசிடென்ட் ஸ்கூல். சற்றுத் தள்ளி செயின்ட் பால்ஸ் சுற்றி வந்தால் செயின்ட் ஜோசப், டவுட்டன் காரி, பெயின்ஸ் ஸ்கூல் என  கிட்டதட்ட 30 பள்ளிகள் சூழ்ந்த பகுதி இது. காலையிலும் பிற்பகலிலும் இங்கு மாணவ மாணவிகளை சீருடையில் அணி அணியாக பார்க்கலாம், போதாதற்கு வெட்னரி காலேஜ், ஜெயின் காலேஜ் என்றும் சில கல்லூரிகளும் இங்கு உண்டு.இந்த ஜெனரஸ் காலின்ஸ் வீதியின் முனையில் எப்போதும் குப்பைக் கொட்டிக் கிடக்கிறது. வார்டு எண் 58 என எழுதப்பட்ட குப்பைத் தொட்டிகள் நான்கைந்து காலியாக இருக்கிறது. வண்டி வண்டியாக அள்ளப்படாத குப்பைக் குவியல்கள் பள்ளி வாயிலருகே குவிக்கப்பட்டிருக்கிறது. எலிகள் ஏராளம். கிரிமினல்கள் நடமாட்டமும் அதிகம். சில ஆட்டோ டிரைவர்களும் வேன் ஓட்டுனர்களும் இளைப்பாறும் இடம். அதனாலேயே அங்கு குற்றவாளிகளும் வருகிறார்கள். மாலை இருட்டைப் பயன்படுத்தி செயின் பறிப்பு சம்பவங்களும் இங்கு அதிகமாக உண்டு. அவ்வப்போது போலீசார் நடமாட்டம் இருந்தாலும் டூவீலரில் வரும் இளசுகளை குறிவைத்து பணம் கறப்பதிலேயே குறியாக இருப்பார்கள்.
என் மனைவி 25 ஆயிரம் ரூபாய் பையை தொலைத்துவிட்டதும் இதே தெருவில் தான். அவளது கவனக்குறைவை பயன்படுத்தி எவனோ தட்டிச் சென்றுவிட்டான், வேப்பேரி போலீஸ் ஸ்டேஷன் போய் புகார் கொடுத்தால் யாரும் அதை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. வழக்கும் பதிவு செய்யவில்லை. மீடியா என்றெல்லாம் சொல்லியும் புண்ணியமில்லை. வாழ்க காவல்துறையின் சேவை.

போலீசை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பி விட்டாலே நகரம் குற்றவாளிகள் இல்லாமல் சுத்தமாகி விடும் என்று தோன்றுகிறது.

அது சரி அறம் பற்றி பேச வந்து இதையெல்லாம் ஏன் பேசுகிறேன் என்று கேட்கும் சந்தேகப் பிராணிகள் சற்றுப் பொறும். அறம் என்பதற்கு அரசு மருத்துவமனைகளின் அடித்தட்டு மக்களிடம் அர்த்தம் கேட்டுப் பாருங்கள். யார் கழுத்திலாவது செயின் இருந்தால் கழுத்துடன் அறுத்துவிட்டு வருவார்கள். கர்ப்பிணியாவது நோயாளியாவது எவன் செத்தால் என்ன எவ்வளவு புடுங்க முடியும் என்பதுதான் அவர்கள்  அறிந்த அறம்.ஏமாந்தால் பிறந்த குழந்தையை கடத்துவார்கள்.







Wednesday, 25 July 2012

நிலையில்லாத மனிதர்கள்

நிலையில்லாத மனிதர்கள்
செந்தூரம் ஜெகதீஷ்
சுயம் 1
நிலையில்லாத மனிதர்கள் அவர்க்கும் என்ன உறவுகள் என்ற எஸ்.ஜானகியின் குரலில் ஒலிக்கும் வசந்தகாலக் கோலங்கள் பாட்டு என் மனதுக்குள் இன்றும் ஒரு மெல்லிய சோகத்துடன் இசைத்துக் கொண்டிருக்கிறது.
இதுவரை வாழ்ந்த வாழ்க்கையில் உறவுகளை நாடுவதும் அவற்றை தக்க வைக்க பாடுபடுவதும் அவை சிதறிய கணங்களில் நொறுங்கிப் போவதும், பின் மீண்டெழுந்து இன்னொரு உறவை நாடுவதுமாகவே வாழ்க்கைப் போய்க் கொண்டிருக்கிறது. எந்த ஒரு உறவும்- நட்பு ,காதல் பாசம் என என்ன பெயரிட்டு அழைத்தாலும்- நீடிப்பதே இல்லை.
உறவு சிதைவுற நானும் ஒரு காரணமாக... இருக்கலாம். ஆனால் அதன் வினை அல்ல நான் எதிர்வினைதான். வினை எது என்றால் அது அடுத்தவரிடமிருந்து வருவதுதான். சார்த்தர் சொன்னது போல் அடுத்தவர் நரகம் என்பது என்னைப் பொருத்தவரை சரியே.
அம்மா, அப்பா, தம்பிகள், தங்கையர் ,மனைவி என பெரும் குடும்ப உறவுப் பிணைப்புகள் இருப்பினும் எல்லோரது மனங்களிலும் பாசம் இருப்பினும் நான் தனியாகவே வாழப் பழகியிருக்கிறேன். திருமணம், குடும்ப நிகழ்ச்சிகள், கூட்டமாக செல்லும் சுற்றுலாக்களில் தனித்திருக்கவே விரும்பியிருக்கிறேன். ஏன் இந்தத் தனிமை உணர்வு என புரிய பலகாலம் ஆகியிருக்கிறது. முதலாவது என் நுண்ணுணர்வு. அசட்டு ஜோக்குகளுக்கு என்னால் சிரிக்க முடியாது. அடுத்த மனிதரை காயப்படுத்த தெரியாது. பணம் பகட்டு அந்தஸ்து சாதி பெயர் சொல்லி யாரையும் புகழ்வதோ இகழ்வதோ பிடிக்காது. கணக்குப் பார்த்து உறவுப் பேண தெரியாது. பொய்யாக பாசம் செலுத்த முடியாது. பேச்சு ஒன்றும் செயல் ஒன்றுமாக இருக்க முடியாது. சட்டென உண்மையைப் பேசாமல் பதுக்க முடியாது. முக்கியமாக நிறைய நிறைய பணம் சம்பாதிக்கத் தெரியாது.
ஆனால் என்னைச் சுற்றியிருந்த எல்லா மனிதர்களிடமும் இந்த குணங்கள் தகுதிகளாக நிரம்பியிருந்தன. அவர்கள் என்னை ஏளனம் செய்யுமளவுக்கு அவர்களிடம் அந்த செல்வங்கள் பெருகிக் கொண்டே இருந்தன. நான் மேலும் மேலும் பிச்சைக்காரனைப் போல அவர்களின் கண்களிலிருந்து விலகிப் போய்க் கொண்டே இருந்தேன்.
இரண்டாவது பிரச்சினை அறிவு. கற்றதனால் ஆய பயன் என்ன என்று தெரியாமல் படிக்கப் படிக்க புதிய உலகங்களில் நான் பயணித்தேன். கலீல் கிப்ரானின் தீர்க்கதரிசியாகித் திரிந்தேன். உமர் கய்யாமின் போதையில் திளைத்தேன். இக்பாலின் தேசபக்தியில் புதைந்தேன். காரல்மார்க்சின் மனிதநேயத்தில் கசிந்தேன். பாலூறாத ஜென்னியின் மார்புக் காம்புகளில் கண்ணீரை சிந்தினேன். இறந்துவிட்ட அந்த குழந்தைக்கு சவப்பெட்டி வாங்கக் கூட காசில்லாத போது, பிறந்ததும் தொட்டிலே வாங்க முடியாத குழந்தைக்கு செத்தப் பிறகு சவப்பெட்டி வாங்கினால் என்ன வாங்காவிட்டால் என்ன என்ற அந்த மேதையின் விச்ராந்தி மனநிலையில் நான் சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதனை தரிசனம் செய்தேன். பாரதியின் கண்ணம்மாவை காதலிக்கத் தொடங்கி, ஆண்டாளின் மணமாலைக்காக பாமாலை பாட ஆரம்பித்துவிட்டேன். சித்தர்களின் வேதாந்தத்தில் திளைத்து ஓஷோவின் மெய்ஞானத்தில் முளைத்தேன். கண்ணதாசனின் திரைப்பாடல்களில் மயங்கி, புதுமைப்பித்தனின் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடத்தும் கந்தசாமியிடத்திலும் கதறி அழுதேன். புத்தகங்கள் எனது வாழ்க்கையின் பிரிக்க முடியாத சுமையாகி விட்டது. புவியரசு சொன்ன மாதிரி தலைமூழ்கித் தொலைக்க ஒரு தீர்த்தக் கரை இல்லாமல் தலைச்சுமையாக இன்றுவரை சுமக்கிறேன்.
அடுத்தது அன்பு. இந்த வார்த்தையை எல்லோரும் சகட்டுமேனிக்குப் பயன்படுத்துகிறார்கள். சாப்ளின் சொன்னதுமாதிரி நாம் அதிகமாக சிந்திக்கிறோம்.மிகக் குறைவாகவே உணர்கிறோம். அன்பு என்ற சொல்லும் உணர்தலுக்குப் பதிலாக சிந்திப்பதற்காகவே மாறியிருக்கிறது.
கிடங்குத் தெரு நாவலில் ஓரிடத்தில் மனிதர்களை நான் வெறுத்துவிடுவேனா என்று பயமாக இருப்பதாக எழுதியிருப்பேன். அப்படி வெறுக்கும் அளவுக்கு பல மனிதர்கள் நடந்துக் கொண்டிருக்கிறார்கள். குழந்தையை அடிக்கும் ஆசிரியர்கள், பெற்றோர். சாக்கடைகளையும் ஆழ்துளைகளையும் திறந்துப் போட்டு போகும் தொழிலாளிகள், , பணம் கறக்கவும் புத்தகம் வாங்கவும் சிடியை அபகரிக்கவும் சுற்றிவரும் நண்பர்கள் வட்டாரம் என யாரைப் பார்த்தாலும் வெறுப்பும் கோபமும் பொங்கிப் பொங்கி வருகிறது. முட்டாள்கள் அலுவலகத்தில் வெறுப்பேற்றுகிறார்கள் என்றால் சற்றும் குறையாத தோரணையுடன் இல்லாளும் இம்சையரசியாகிறாள்.
இப்படிப்பட்ட மனநிலையில் வந்து வாய்க்கும் உறவுகள் சில சமயம் நட்பின் பெயரால் வருகின்றன. 20 ஆண்டுகளாகப் பழகிய நண்பர்கள் கூட சில்லியான ஒரு காரணத்தால் சொல்லாமல் கொள்ளாமல் விலகிப் போகிறார்கள். ஜெயமோகன் போல ,,,,,,சிலர் பின்னால் போய் குழிப் பறிக்கிறார்கள். என்னுடன் பத்து நிமிடம் பேசித் தீர்க்க அவர்களுக்கு மனம் இல்லை.நேரம் இல்லை.
பத்தாண்டுகளாகப் பழகிய தோழி ஒருவர்- மிகவும் கண்ணியமான பெண்தான்- திடீரென தொலைபேசி உறவைத் துண்டித்து விட்டார். பேசாமல் பலமாதம் இருந்து பின்னர் தானாக வந்துப் பேசினார். அவர் பேசாமல் இருந்ததைவிட என்னைக் கூப்பிட்டு நீ நண்பனாயிருக்க லாயிக்கில்லாத ஆள் என நாலு அறை விட்டிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன். அப்படி எந்தத் தப்பும் நான் அவரிடம் செய்யவில்லை என்பது வேறு விஷயம்.
காதல் என்று வரும் உறவுகளும் காற்றில் கரையும் கற்பூரம் போல 2 நாட்கள் அல்லது 2 மாதங்களில் காணாமல் போய்விடுகின்றன. ஏழுஜென்ம பந்தங்களுக்காக யாரும் அழுவதாகத் தெரிவதில்லை. சிலருடன் அப்படி இப்படி பழகி அந்த வார்த்தையே கசந்துவிட்டது.
நான் மட்டும்தான் இப்படி என்று தெரிகிறது. சுற்றியுள்ள மனிதர்கள் சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள். நட்பு இருக்கு, காதல் இருக்கு உடலுறவு இருக்கு உறவுகள் இருக்கு பணம் சேருகிறது. பிள்ளைகள் நன்றாக வளர்கிறார்கள். பக்தி இருக்கிறது. கூட்டமாக சேர்ந்து தண்ணியடிக்கிறார்கள், சீட்டாடுகிறார்கள், கிரிக்கெட் விளையாடுகிறார்கள் அல்லது சேர்ந்து சிரியோ சிரி என்று சிரிக்கிறார்கள். சிக்கனும் ஆடும் தின்று தின்று எருமைக்கடா மாதிரி உடலை வளர்த்து வைத்திருக்கிறார்கள்.
மூளையே இல்லாமலும் உலகில் வாழும் கலையை கற்றுவைத்திருக்கிறார்கள்.
போதுமடா சாமி. வாழ்க்கையை இனிதே முடித்துக் கொள்ளலாம் என்றுதான் இக்கணத்திலும் தோன்றுகிறது. தோற்றுப் போன ஒரு வாழ்க்கையின் சடலத்தை அதன் நாற்றத்தை இன்னும் எத்தனை நாட்கள் சுமப்பது என்பதுதான் தெரியவில்லை. தூக்கிப் போடவாவது நாலு பேர் வேண்டுமே என்று தேடித்தேடி நாலு பேரை தக்கவைத்துக் கொண்டிருக்கிறேன்.
போதும் விடுங்கள் கொஞ்சம் அழுது முடிக்கிறேன்.
வாழ்க்கை அழைக்கும் வரை வாழத்தான் போகிறேன். அதன் அழைப்பு என்னை வேறு எதற்காகவோ வாழ வைத்துக் கொண்டே இருக்கிறது. அது எது...அதன் சொரூபத்தை திருப்பதி வெங்கடாசலபதியிலோ ஒரு குழந்தையின் புன்னகையிலோ எங்கேயோ நான் தரிசித்தபடியேதான் உயிரை விடுவேன்.இப்போதே அல்ல, எப்போதாவது.
இப்பதிவு என்வாழ்வுக்கான சாட்சியமாக இருக்கட்டும்.

Thursday, 28 June 2012

இலக்கியவாதியின் இலக்கிய அனுபவங்கள்

நான் முதன் முதலில் கவிதை எழுதிய போது அது ஒரு காதல் கவிதைதான். அப்போதே காதல் என்னை ஆட்கொள்ளத் தொடங்கிவிட்டது. யாராவது படித்தால் என்னைப் பத்தி தப்பாக நினைப்பாங்க என்ற கூச்சம் இருந்தது. அப்போது அரு.ராமநாதன் காதல் என்றொரு பத்திரிகை நடத்தி வந்தார். தி.ஜானகிராமன் மாதிரி ஜாம்பவான்கள் எல்லாம் எழுதினாங்க...ஆனால் கருப்பு வெள்ளையில் புடவை இல்லாத பெண்கள், பிரா தெரியும் மெல்லிய நைட்டி அணிந்த பெண்கள் என ஒன்றிரண்டு படங்கள் அட்டையிலும் உள்ளேயும் இருக்கும். கதைகள் பெரும்பாலும் காதல், செக்ஸ் சம்பந்தமாகவே இருக்கும். அதனால் அதை ஒரு செக்ஸ் புத்தகம் போல பயந்தபடியேதான் படிக்க முடிந்தது. அப்படிப்பட்ட நிலையில் நான் ஒரு காதல் கவிதை எழுதுவது கூச்சமான விஷயமாகவே இருந்தது. வேறு வழியில்லாமல் நோட்டுப் புத்தகத்தில் கண்ணதாசன், வாலி பாடல்களைப் போல கவிதைகளை எழுதி அவர்கள் பெயரைப் போட்டு வைப்பேன். என் உறவினர்கள் யாராவது கேட்டால் சினிமாப் பாட்டு என சமாளிக்கத்தான்
நண்பன் சேகர் இந்த கவிதையில் ஒன்றை அவன் வேலை பார்த்த அச்சகத்தில் கொடுத்து ஒரு சிறுபத்திரிகையில் வரவழைத்து விட்டான். அப்ப பிடிச்ச பிசாசுதான். அடுத்து தினமலர் வாரமலரில் - அப்ப பேப்பரிலேயே வாரமலர் வரும் - அரைப்பக்கம் எனது கவிதைகள் மட்டும் பிரசுரமாயின. விண்ணில் போன ராக்கெட்டே எங்க விலைவாசியைக் கண்டாயா என்ற கவிதை இப்போ அது கிளிஷேயாகி போன பழைய சங்கதி. ஆனால் முதலில் எழுதியது நான்தான். அப்புறம் இன்னொரு கவிதை விடியாத பொழுதுகள். அதுல திருமணத்திற்காக காத்திருக்கும் முதிர்கன்னியின் சோகம். விடியலுக்காக காத்திருக்கும் அவள் தலைமுடி வெளுத்துப் போய் விடிந்துவிட்டது என்பதாக கவிதை முடியும். அதெல்லாம் இப்ப கவிதை இல்லை என்று தூக்கி எறியமுடியும். ஆனால் அப்ப அது பெரிய உற்சாகம்.
அப்படியே எழுதப் பழகி, நண்பர் எஸ்.அறிவுமணி குறிஞ்சி இலக்கிய வட்டம் மேடையில் மு.மேத்தா தலைமையில் கவிதை வாசிக்க என்னை நிறுத்தி விட்டார். மு.மேத்தா கண்ணீர் பூக்களால் கொடிகட்டிப் பறந்த நேரம் அது. என்னுடன் கவிதை படித்தவர் பழனிபாரதி. புரட்சியாக எழுதக் கூடிய பழனிபாரதி அன்றைக்கு சோபிக்கவில்லை. நான் வாசித்தேன் செந்நிறக் கவிதையை. மேத்தா சொன்னார் பழனிபாரதி தீ்க்குச்சிதான் ஆனால் இப்ப எரியாத குச்சி. அந்தக் குறையை தீப்பந்தம் கொண்டு போக்கிவிட்டார் ஜெகதீஷ் என்றார்.

சிரிப்பாக இருக்கு இந்த கேலிக் கூத்துகளையெல்லாம் நினைச்சால். அப்புறம் கதை எழுத ஆரம்பிச்சேன். பாக்யா, புதிய பார்வை, ஆனந்த விகடன், கல்கி என்று பல பத்திரிகைகளில் எனது கதைகள் பிரசுரமாகின.

அதன் பிறகுதான் தீவிர இலக்கியத்தின் பக்கம் திரும்பினேன்.அன்றுமுதல் பல நூறு கட்டுரைகள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள் , ஒரு நாவல் எல்லாம் எழுதியபின்னரும் பலருக்குத் தெரியாத பெயரில் வாழ நேரும் அவலம் எனக்கு. இரண்டு படத்தில் நடித்த லூசுகள் கூட பாப்புலராகும் போது 25 வருசமாக எழுதும் என் போன்ற பலர் பாப்புலர் பிகர் இல்லை,

எழுத்து என்பது விதியின் பின்னால் புறப்பட்ட 300 பேரின் சுழற்சி என்பார் நண்பர் தஞ்சை பிரகாஷ். அப்படி ஏதோ ஒருவிதியை துரத்தித்தான் நானும் பயணித்து வந்திருக்கிறேன்.

எனது பயணத்தில் நான் சந்தித்த படைப்பாளிகள் பட்டியல் மிகப் பெரியது. பலரை வலிய வீடு தேடிப் போய் பார்த்திருக்கிறேன். சிலருடன் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பழகியிருக்கிறேன். ஆனால் இன்றைக்குத் திரும்பிப் பார்த்தால் ஒருவருடனும் எனக்கு ஒரு உறவும் இல்லை என்பதுபோலத்தான் தோன்றுகிறது.

சுஜாதா எனது கவிதை ஒன்றை ரசித்து கணையாழியில் பிரசுரித்தார். பெயர்களும் நினைவுகளும் என்பது அந்தக் கவிதை....பல நண்பர்களின் பெயரைப் பட்டியலிட்டிருப்பேன். கடைசியில் கவிதை இப்படி முடியும். எப்போதும் புதிதாக ஒரு பெயர் கிடைத்துவிடுகிறது. பழைய பெயர்களை காலம் அழித்துவிடுகிறது.

 உடுமலைப் பேட்டை ஜே.மஞ்சுளாதேவி எனக்கு முன்பு எழுதிய ஒரு கடிதத்தில் குறிப்பிட்டார் . காபி டம்ளரின் அடிப்பாகம் போல நட்பு முடியும் இடத்தில் கசப்பு உருவாகும் என்று. அந்த கசப்பை இன்று வரை உணர்கிறேன்.

என்னிடம் உள்ள பிழைகள் என்ன....நான் நண்பனாகும் தகுதியற்றவனா, என்னுடன் ஏன் யாரும் நட்பாக நீடிக்கவி்ல்லை. பல வருடம் பழகியபின்னும் பிரிய பலருக்கு சுலபமாக முடிவது எப்படி.....

சுந்தர ராமசாமி, சுஜாதா, ஜெயகாந்தன், பிரபஞ்சன், அசோகமித்திரன், எம்.வி,வெங்கட்ராமன், கோவை ஞானி, ஜெயமோகன், பெரியார்தாசன், வல்லிக்கண்ணன், திகசி, வண்ணதாசன், வண்ணநிலவன், சிற்பி ,மு,மேத்தா, வைரமுத்து, புவியரசு, நாஞ்சில் நாடன், சுப்ரபாரதி மணியன், தனுஷ்கோடி ராமசாமி, பொன்னீலன். தஞ்சை ப்ரகாஷ், சுந்தர சுகன், ஷாராஜ், வா.மு.கோமு, சிட்டி, திலீ்ப்குமார், சாருநிவேதிதா, மனுஷ்யபுத்திரன், இன்குலாப், ஞானக்கூத்தன், சி.சு.செல்லப்பா , புலவர் சங்கரலிங்கம் என எத்தனைப் படைப்பாளிகளை தேடித் தேடிப் போய் பார்த்துப் பேசியிருப்பேன்.இதில் சிலர் இறந்துவிட்டனர். மீதம் இருப்பவர்களில் திலீப்குமார் போன்ற சிலருடன் உறவு  இன்றும் நீடிக்கிறது. ஆனால் என்னுடன் அக்கறையுடன் பேசுகிற சிநேகம் ஏதும் மிச்சமிருக்கிறதா என்று தெரியவில்லை.

என்னுடன் பழகிய எந்த நட்பையும் தக்கவைத்துக் கொள்ள எனக்குத் தெரியவில்லை. பெண்களிடத்தில் பாலியலை கலக்காமல் தள்ளிப்போகும் கலையையும் நான் கற்கவில்லை. அல்லது காமத்தை கலந்த நட்பை அடையவும் தெரியவில்லை. தோழிகளின் நட்பு மலர்ந்த போதே மறைந்தும் போகிறது.


Tuesday, 26 June 2012

பஷீரின் மதிலுகள்

எத்தனை முறை படித்தாலும் மனதுக்குள் மணக்கும் கதைகள் பஷீருடையவை. பாத்திமாவின் ஆடு நேஷனல் புக் டிரஸ்ட்டில் வந்தப்போது படித்தது. இன்றும் பசுமையாக நினைவில் இருக்குது. அண்மையில் திருவல்லிக்கேணி பழைய புத்தகக் கடையில் நீல பத்மனாபன் மொழிபெயர்த்த மலையாள இலக்கியத் தொகுப்பு மதிலுகள் கிடைத்தது. பல கவிதைகளை மலையாள மொழியின் வாசத்துடன் மொழிபெயர்த்திருக்கிறார் நீல.பத்மனாபன். 2000 ஆண்டில் வந்த தொகுப்பு. அப்போதே மட்டமான தாளில் நிதியுதவி பெற்று 75 ரூபாய் விலையில் வெளியிட்ட காவ்யா சண்முகசுந்தரம் மீது கோபம்தான் வந்தது. வாங்காமல் விடுபட்டுப் போனதற்கு இதுவும் காரணம். எப்படியோ பழைய புத்தகக் கடையில் பத்து ரூபாய்க்குக் கிடைத்தது.
கவிதைகளையும் கட்டுரைகளையும் ஒரே மூச்சில் படித்துவிட்டேன். தகழியின் வாழ்க்கையில் கற்றுக் கொண்ட பாடம் ரசிக்க வைத்தது. ஆனாலும் நம்ம சாய்ஸ் பஷீர்தான். மீண்டும் வரிவரியாய் லயித்துப் போய் மதிலுகளைப் படித்ததும் மனதில் எண்ணங்களில் பாடலும் கண்ணீரும் வந்து கலந்தன. நாராயணீ இரவில் அழுவாளோ இல்லையோ பஷீர் நம்மை அழவைத்துவிடுவார். சிறையில் இரு மதில்களால் பிரிக்கப்பட்ட முகம் அறியாத காதலர்களின் பகிர்தல்களும் எதிர்காலமே இல்லாத அவர்களின் காதலும் அற்புதமான வாசிப்பனுபவம் தருகின்றன. இந்தக் கதையை நான் படிக்கும் போதே மதிலுகள் படமாகியிருப்பதும் நினைவில் வராமல் இல்லை. மம்முட்டி அந்தப் பாத்திரத்திற்கு பொருந்தியிருப்பாரா என்று பதறாமல் படிக்கவே முடியவில்லை. அந்தப் படத்தை எப்படியாவது பார்க்க வேண்டும். நாராயணீயாக யார் என்றே தெரியவில்லை. அதுவும் தெரியணும். அதுகிடக்கட்டும். அந்த வார்டனுடன் அடிக்கும் ஜோக்குகளும், பெண்களின் கழிவறையில் ஓட்டை போட்டு பார்க்கும் ஆடவர் வக்கிரமும் எத்தனை அற்புதமான இலக்கியமாகியிருக்கு பஷீர் சேட்டனிடம். எங்கள் மனதுக்குள் நுழைந்து பார்க்காதீர்கள், அறம் உபதேசம் எல்லாம் வெளியில் இருப்பவர்களிடம்தான் என்ற பஷீரின் தர்க்கம் அபாரம். படிக்காதவர்கள் கட்டாயம் படித்துப் பாருங்கள். மதிலுகள் ஒரு எழுத்துக் காவியம். அதே தொகுப்பில் ரோஸ்மேரி என்ற டீச்சரின் பேட்டியும் உள்ளது. அந்த ரோஸ் மேரி யிடம் பஷீர் காதல் கொண்டதாக மற்றொரு மலையாள எழுத்தாளர் பஷீரின் இரங்கலில் எழுதிவிட்டாராம். ரோஸ் மேரியோ அவர் எங்க பெரியப்பா மாதிரியான சொந்தம் என்கிறார். காதல் ஏதும் இல்லை என்கிறார். இன்னொரு தகவல் எதுவென்றால் ரோஸ்மேரியின் கணவர் கே.ஜி.தாமஸ். மற்றொரு மலையாள எழுத்தாளர். அவரைப் பற்றி சுந்தரராமசாமி எழுதியிருக்கிறார் என்று ஞாபகம். ஒருவேளை ஜே ஜே சில குறிப்புகளில் வருவாரா...பார்க்க வேண்டும். மறதி அதிகமாகிவிட்டது.


Monday, 18 June 2012

கிருஷ்ணன் நம்பி கதைகள்



                                     









அமரர் கிருஷ்ணன் நம்பி சராசரி மனிதர்களின் ஆசைகளையும் நிராசைகளையும்தான் பதிவு செய்திருக்கிறார். ஊசலாடும் மனித உறவுகளையும் இன்னும் மேலான வாழ்வுக்கு ஏங்கும் நடுத்தர மக்களின் கனவுகளையும் அவர் தனது கலை சிருஷ்டியாக செய்திருக்கிறார், மிகக் குறைவான கதைகள்தாம் எனினும் ஒரு தேர்ந்த படைப்பாளியின் முத்திரையை ஒவ்வொரு கதையும் பதிக்கிறது.
வாழ்க்கையின் இரண்டு மகத்தான சோகங்களில் ஒன்று, நாம் விரும்பியதை அடைய முடியாமல் போவது, இரண்டாவது நாம் விரும்பியதை அடைவது என்றார் பெர்ணாட் ஷா.கிருஷ்ணன் நம்பியின் கதைகள் இந்த முரண் நிலையை அடிப்படையாகக் கொண்டவை.மனிதன் ஒன்றை அடைய முடியாமல் போகின்ற நிலையையும் அடைந்தாலும் அதனால் ஏற்படக் கூடிய இழப்பையும் சரியாக கணித்த படைப்பாளிதான் கிருஷ்ணன் நம்பி.

எக்ஸன்ட்ரிக் - நடுத்தர ஆபீஸ் சிப்பந்தி ஒருவனின் கதை.எண்பது ஒரு ரூபாய் நோட்டுகள் சம்பளம் வாங்கிய கையோடு, ஆயிரம் பேருக்கு பதில் சொல்லக் கூடிய நிலையில் மனைவியும், ஒரு சிகரெட்டை இரண்டாக உடைத்துப் பயன்படுத்துகிற தனது பற்றாக்குறையையும் எண்ணிப் பார்க்கிறான் அவன். தெருவில் நிற்கும் ஒரு பணக்காரனின் கார் அவனது அடங்கிய ஆசைகளைக் கிளறிவிட, வாழ்க்கையை அனுபவித்து விடத் துடிக்கிறான் அவன்.
அந்த எண்பது ரூபாய் சம்பளப் பணம் அவன் ஆசைகளின் சிறகுகளானது. புதுமைப்பித்தனின் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ரயிலடி வரை திரும்பி வருவது போல் கிருஷ்ணன் நம்பியின் சிப்பந்தி திரும்பி வரவில்லை. அவன் ரயிலேறி ஓடிப் போகிறான்.ஓட்டலில் அவன் விரும்பிய ஸ்டிராங் காப்பி, சர்வருக்கு தாராளமான டிப்ஸ், ஏழைச் சிறுவனுக்கு எம்.ஜி.ஆர் படம் பார்க்க காசு, டாக்சியில் ஊர் சுற்றல், பாலக்காட்டு வேசியிடம் டாக்சி டிரைவருக்கும் ஓசியில் பெண் இன்பம், கடைசியில் மிச்சமான பத்துரூபாயை தொலைத்து விடுவதுமாக எண்பது ரூபாயை அவன் செலவழிக்கிறான். முறைக்காதீர்கள். அந்தக் காலத்தில் எண்பது ரூபாயில் இத்தனை காரியம் செய்யலாம்.
அவன் ஒரு நாளாவது தனது விருப்பப்படி வாழ்ந்து விட்டான். அடைய முடியாதவற்றை எண்ணி எண்ணி ஏங்கிக் கொண்டிருந்த நிராசைகள் நிறைவேறி விட்டன.என்றாலும் பிரச்சினைகள் தொடர்கதைதானே....பால்காரன், வாடகை,குழந்தைகளின் கல்வி, மளிகைக் கடை பாக்கி என்று நீண்ட பட்டியலுடனும் பற்றாக்குறையுடனும் காத்திருக்கும் அவன் மனைவிக்கு சம்பளம் நாளைக்கு என்ற பொய்யான பதில் தீர்வாகி விடாது. நாளை என்ற அந்தக் கொடூரமான பொழுது அவன் கழுத்தில் நுகத்தடியாக, முதுகில் சாட்டையாக விழப் போகிறது. அந்த ஒருநாள் இன்பத்திற்காக அவன் ஒருமாதம் துன்பத்தில் உழலப் போகின்றான்.

காணாமல் போன அந்தோணி கதையும் அதுபோலத்தான்.அந்தோணி ஒரு ஆடு. கொழு கொழுவென்று வளர்ந்த ஆடு. அதன் சொந்தக்கார கிழவி கிறிஸ்துமஸ் தினத்தன்று காலையில் சர்ச்சுக்குப் போகும் போது அவள் புருஷன்- கிழவன் முதல் ஆட்டம் சினிமா பார்த்து நள்ளிரவில் வீடு வந்து தூங்கிக் கொண்டிருக்கிறான். அவன் 40 வருடமாக ஒரே நிறுவனத்தில் குறைந்த ஊதியத்தில் வறுமை நிலையில்தான் கிழவியுடன் குடித்தனம் நடத்தி வருகிறான்.ஆனால் சம்பளம் முழுவதையும் அப்படியே கொண்டு வந்து கிழவியிடம் கொடுத்துவிடுவான். கிறிஸ்துமஸ் பண்டிகையை விமரிசையாக கொண்டாட கிழவிக்கு சில திட்டங்கள் இருந்தன.சர்ச்சிலிருந்து திரும்பும் போது அந்தோணியை காணவில்லை.ஆட்டைத் தேடி கசாப்புக் கடை முதல் வயல் வாய்க்கால் வரை தேடிப் பார்த்து சலித்துப் போகிறாள். கிறிஸ்துமஸ் என்ற சுபதினம் அவளுக்கு சோகதினமாக மாறுகிறது. ஆனால் மாலையில் கொத்து வேலையாள் ஜார்ஜ் மூலம் அந்தோணி திரும்பக் கிடைத்து விடுகிறது. ஆட்டை விலைக்கு கொடுத்ததும் கிழவியின் திட்டங்கள் நிறைவேறுகின்றன.ஆம் காணாமல் போன அந்தோணி நிரந்தரமாக தொலைந்துப் போய்விட்டது.
கிருஷ்ணன் நம்பி உயர்ந்த இலட்சியங்களையும் கற்பனை இலக்குகளையும் கொண்ட கதாபாத்திரங்களைப் படைக்கவில்லை. மிகவும் யதார்த்தமான சகல பலவீனங்களும் கொண்ட பாத்திரங்களே அவை.
சிங்கப்பூர் பணம் கதை இரு நண்பர்கள் பற்றியது. ஒருவன் ஏழை குமாஸ்தாவின் மகன். இன்னொருவன் சிங்கப்பூர் சீமானின் புதல்வன். இருவருக்கும் நட்பு முளைக்க பணக்காரப் பையன் நிறைய செலவு செய்கிறான். 120 ரூபாய் மதிப்புள்ள பைனாகுலரை பரிசாகவும் தருகிறான்.பதிலுக்கு இவனும் ஒரு தேர்ப்பொம்மையைப் பரிசளிக்க எண்ணி, கிடைத்த ஒற்றை ரூபாயுடன் வரும் போது அந்த ஒரு ரூபாயும் செல்லாத காசாகிப் போகிறது.
அந்த செல்லாக் காசாக இருப்பவர்களின் கதையைத் தான் கிருஷ்ணன் நம்பி மீண்டும் மீண்டும் எழுதுகிறார்.
நாணயம் என்ற கதையில் வரும் பிச்சாண்டி என்ற சங்கர நாராயணனுக்கு சினிமாவும் ஓட்டலும் பிடித்த விஷயங்கள். அதற்கான காசு அவனுக்கு அவன் மாமாவின் உண்டியலில் இருந்தே கிடைக்கிறது. நாணயமான குடும்பத்தைச் சேர்ந்த அவன் இந்த திருட்டைச் செய்கிறான். பின்னர் தன் களவுக்குப் பிராயச்சித்தமாக முதல் மாத சம்பளத்தை மாமாவின் உண்டியலில் போட முயலும் போது மாமியிடம் அகப்பட்டு திருடனாக பட்டம் பெறுகிறான்.

இருக்கிற வாழ்க்கையில் திருப்தியின்மையும் இன்னும் மேலான, சுகமான, சௌகரியமான, ஆசைகள் ஈடேற்றும் வாய்ப்புள்ள வாழ்நிலைக்கான துடிப்பும் கிருஷ்ணன் நம்பியின் ஒவ்வொரு பாத்திரப் படைப்பிலும் காணக் கிடைக்கிறது. அந்த மேலான நிலை பணத்தால் மட்டும் கிடைக்குமா.?
காலில் கட்டப்பட்ட சங்கிலி அறுபடுவதும் ஆனந்தமல்லவா....கால் சங்கிலியால் கட்டப்பட்ட மனநலம் சிதறிய பெண் ஒருத்தி ஊமைப் பையன் ஒருவனால் விடுதலை பெறுகிறாள்.ஆனால் அவன் அன்புச் சங்கிலியில் அவள் மீண்டும் விலங்கிடப்படுகிறாள். கதையின் பெயர் சங்கிலி.
உணர்ச்சிதான் அஸ்திவாரம். மேதைமை எனப்படுவது கூரைக்கு வெள்ளையடிக்கும் முயற்சி தான் என்பார் சீன அறிஞர் லீ-யு-டாங். கிருஷ்ணன் நம்பிக்கு இதை யாரோ சொல்லியிருக்கக் கூடும். அதனால்தான் மிகவும் அரிதான உணர்ச்சி இழைகளை பின்னலிட்டு தனது கதைகளை மேதைமையால் அலங்கரித்திருக்கிறார். மனித உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்ட மேதைமை வறட்டு வேதாந்தமாகவே முடியும் என்ற தெளிவு அவர் கதைகள் முழுவதும் விரவிக் கிடக்கிறது.

எல்லா இதயங்களிலும் ஆசைகள் இருக்கின்றன. எல்லா இதயங்களிலும் அந்தரங்கமாகப் போற்றும் கனவுகள் இருக்கின்றன. ஆனால் பொருளாதார வசதியற்ற பெரும்பான்மை சாமான்ய மக்களின் ஆசைகளும் கனவுகளும் ஆசைகளாகவும் கனவுகளாகவுமே தேங்கி விடுகின்றன. அவை ஒருபோதும் நிறைவேறுவதே இல்லை. நிறைவேறினால் அதற்கான விலையாக அவர்கள் தங்கள் வாழ்வையே தரவேண்டியிருக்கும்.
காலில் சங்கிலியுடன் விடுதலை வேட்கையில் உழலும் பைத்தியத்தின் கதைதான் மனித குலத்தின் கதை. நம்மைப் பற்றிய ஒரு புரிதலையும் நம் வாழ்வைப் பற்றிய ஒரு கேள்வியையும் கிருஷ்ணன் நம்பி தனது கதைகளின் மூலம் எழுப்புகிறார்.ஒரு நாள் சுகத்திற்காக மாதம் முழுவதும் துன்பப்படும் எஸன்ட்ரிக் போல நாமும் தற்காலிகமான லௌகீக சுகங்களுக்காக ஒரு நீண்ட கால வரலாற்றையே பறிகொடுத்து நிற்கிறோம். இன்றைய உலகைப் பற்றி, மதம், அரசியல், கலை , பண்பாடுகள் குறித்த நமது அலட்சியம் மாதச் சம்பளத்தை ஒரு நாளுக்காக இழக்கிற நிலையை விட எந்த வகையிலும் மேம்பட்டது அல்ல. இதுவும் அதைப் போல ஆபத்தானதும் கூட.

(கிருஷ்ணன் நம்பியின் கதைகளும் அவரைப் பற்றிய சுந்தர ராமசாமியின் நினைவோடையும் காலச்சுவடு பதிப்பகத்தில் கிடைக்கின்றன.)

Wednesday, 13 June 2012

நான்



ALL PRAYER, MEDITATION IS INDIVIDUAL, IS PRIVATE-  OSHO

MAN'S GREATEST CREATION IS HIMSELF,HIS GREATEST CREATION WILL BE HIS OWN SELF REALIZATION- OSHO

பல வருடங்களுக்கு முன் தி.நகர் ரங்கநாதன் தெருவில் முன்றில் புத்தகக் கடை இருந்தது. அங்கு பலமுறை போயிருக்கிறேன். அங்கேதான் கோபிகிருஷ்ணன், மா.அரங்கநாதன், அழகியசிங்கர் போன்ற பலரின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. விஷயம் அதுவல்ல, முன்றிலை நடத்திய எழுத்தாளர் மா.அரங்கநாதனுடன் பேசும் போது எனது கவிதைகள் பற்றிய விவாதம் வந்தது. எனது கவிதைகளில் நான் என்ற தன்மை அதிகமாக இருப்பதாக அவர் குறைபாடு தெரிவித்தார்.அதுவரை அப்படியொரு விஷயமே எனக்கு தெரியவே இல்லை. அந்த நான் யார்? ஆயினும் அதன் பின்னர் மிகுந்த பிரக்ஞையுடன் நான் என்ற த்வனியை விட்டுக் கொடுக்காமல் தீவிரமாக எழுதத் தொடங்கினேன்.
என்னைப் பற்றி எனக்கென்ன ஈடுபாடு?இது ஒருவகை மனோவியாதி என்று கூறுபவர்கள் உண்டு. ஆங்கிலத்தில் இதனை நார்சிசசம் என்பார்கள்.தன் மீதான அதீத ஈடுபாடு என்று அதை எளிமையாக தமிழ்ப்படுத்தலாம்.அசாதாரண சுய ஈடுபாடு என்றும் கூறலாம்.இது சரியா என்று எனக்கு நானே பல முறை கேட்டுப் பார்த்து விட்டேன். தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம், தன்னலம் மறந்தால் அது பேரின்பம் என்று கவியரசர் கண்ணதாசன் பாடலை சந்திரபாபு பாடியதும் நினைவில் வருகிறது.
என்னை முன்னிறுத்தி நான் எழுதக் கூடாது என்று நண்பர்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். அப்படி எழுதுவதானால் என்னால் எழுத முடியாமல் போய் விடுமோ என்று கவலைப் படுகிறேன்.என் நண்பர்கள் மீதும் வாசகர்களிடமும் எனக்கு பிரியமும் மதிப்பும் உண்டு. ஆனால் என்னைப் பற்றி நான் எழுதாமல் வேறு யார் எழுத முடியும்?
படைப்பாளிக்கு வாசகன் மூலம் கிடைக்கும் உறவுதான் சமூகத்துடனான அவனது உறவு. பிரதியை எழுதிவிட்டால் அது அவனுக்கு சொந்தமில்லை வாசகனுக்குரியது என்றும் போஸ்ட் மாடர்னிச ஜாம்பவான்கள் கூறுவார்கள்.ஒரு படைப்பாளி தன் படைப்புக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று கூற முடியுமா?அப்படி சொல்லும் போதே அந்தப் பிரதி செத்துப் போகாதா?ஒருவர் தன் ஆன்மாவின் அந்தரங்கமான துடிதுடிப்பிலிருந்து அந்தப் பிரதியை எழுதவில்லை என்று அர்த்தமாகாதா?எழுத்தாளன் தனது எழுத்தின் தொடர்பறுக்க முடியுமா என்ற கேள்வியால் நான் பல சிந்தனைகளில் மூழ்கி எழுந்திருக்கிறேன்.
சுயசரிதம், சுயபுராணம், சுய தம்பட்டம், சுயநலம் போன்ற வார்த்தைகள் எல்லாம் எனது படைப்புகளின் மீது விமர்சனமாக வீசப்படும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் நான் என்னுள் மூழ்கி தீவிரம் கொள்கிறேன். எந்தப் பரிந்துரையிலும் பட்டியலிலும் யாரும் என்னை சேர்க்காத போதும் கூட நான் மட்டுமே அறிந்த ஒரு சமூகத்துடனான எனது தீவிர உறவின் மையத்திலிருந்து எனது எழுத்து பிறக்கிறது என்று கோவை ஞானி அவர்கள் ஒருமுறை குறிப்பிட்டார். சமூக உணர்வு, மனித நேயம் என்ற சொற்களின் பொய்யான சித்திரங்களில் சிக்காமல் என்வழியாகவே அதை நான் காண்கிறேன்.நான் இல்லாமல் அந்த உணர்வுகள் இல்லை.அத்தகைய மேன்மையான இலக்குகள் இல்லாமலும் நான் இல்லை.

பொதுவாக தமிழ் இலக்கியத்தில் தன்னை மிகப் பெரிய ஆகிருதியாக முன்னிறுத்தி இலக்கியத்திற்கே தான்தான் பெரிய அத்தாரிட்டி போல சொந்தத் திராணியுடன் கருத்துகளை முன்வைக்கும் போக்கு பாரதியிடமும் இருந்தது. புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி உள்ளிட்ட பல படைப்பாளிகளிடமும் உள்ளதுதான். சுஜாதா கூட ஹைகூவுக்கே தான்தான் அத்தாரிட்டி போல பேசியவர்தான். அவருக்கு அதன் அரிச்சுவடி மட்டும்தான் தெரிந்திருந்தது.
எனில் என்னைப் பற்றி நான் பேசுவதில் என்ன தவறு? உலகைப் புரிந்துக் கொள்ள முதலில் உன்னைப் பற்றி நீ புரிந்துக் கொள் என்கிறது பௌத்தம். உலகைப் புரிந்துக் கொண்டால் அதில் உன் இருப்பைப் புரிந்துக் கொள்ள முடியும் என்கிறது மார்க்சியம். நீ- நான் என்ற உறவுதான் சமூக ரீதியிலான உறவாகவும் உள்ளது. அதனிடையே தான் நமது வாழ்க்கையும் இருக்கிறது. எழுத்து எனக்கா சமூகத்திற்காகவா என கேள்வி எழும்போது உனக்கான கவிதையை நீ எழுது என்ற சுந்தர ராமசாமியின் வரி நினைவில் வருகிறது.
நான் எழுதுவது எனக்கேதான் என்பதான தெளிவு வந்துவிட்டது. என் வாசகர்களுக்காக மட்டுமல்லாது, என் பொருட்டும் என்னால் என்னால் என் எழுத்தை மாற்ற முடியாது. அது எப்படி வர வேண்டுமோ அப்படித்தான் வந்துக் கொண்டிருக்கும். ஒரு இலை துளிர்க்கும் திசையை யார் தீர்மானிக்கிறார்களோ அவர்களே அதை தீர்மானிக்கட்டும். ஒரு பூ மலரும் போது எந்த திசை நோக்கி மலர்கிறதோ அதுவே அதன் திக்குதிசை எல்லாம். என் வாழ்வை மாற்றும் ஆற்றலும் எனக்கில்லை. அது போகும் போக்கில் போய்க் கொண்டிருக்கிறேன். அதில் என்னையே நீர்ச்சுழல் போல வட்டமிட்டு சுழலும் நாட்களும் உழலுகின்ற காலங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன.என்னை நானே புரிந்துக் கொள்வதன் மூலம் இவ்வுலகைப் புரிந்துக் கொள்ள நான் முயலுகிறேன். வாழ்க்கை எனக்கு இன்னும் சற்று ஆயாசமும் அவகாசமும் அளிக்குமானால் இந்தப் புரிதலில் இன்னும் முழுமை கிடைக்கும்.
என்னைப் பற்றி நான் எழுதுவதும் முழுக்க முழுக்க என்னைப் பற்றியதல்ல என்பதை ஒரு நுட்பமான வாசகனால் உணர முடியும். அதற்கான மௌனமான இடைவெளிகளை எனது படைப்புகள் கொண்டிருக்கும். என்னைப் பற்றி நானே பேசக் கூடாது என்று தடைகள் விதிப்பவர்களை நான் மதித்தாலும் கூட, நுண்ணறிவும் நேர்மையும் துணிவும் மிக்க ஒரு படைப்பாளியை அப்படியெல்லாம் தண்டிக்க வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். என் மேதைமையின் திமிரோடு இதனை ஒரு கட்டளையாகவும் என்னால் கூற முடியும்.

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...