Friday, 6 May 2016

உலக சினிமா -புத்தகங்களைத் திருடுபவள்

 

குமுதம் தீராநதியின் மே மாத இதழில் பிரசுரமான எனது கட்டுரை இது....

உலக சினிமா


புத்தகங்களைத் திருடுபவள்

செந்தூரம் ஜெகதீஷ்




THE BOOK THIEF
 
 
தியிலே சொல் இருந்ததாக கூறுகிறது பைபிள். சொல்லால் அமைந்தது உலகு. சொல்லால் அமைந்தது சிந்தனை. சொல்லால் அமைந்தது வாழ்வு. சொல்லின்றி எதுவுமில்லை. மௌனங்களுக்கும் சொற்கள் உண்டு.

பிறப்பின் போது கருவறையிலும் தாய் குழந்தையுடன் பேசிக் கொண்டிருக்கிறாள். கல்லறையில் புதையுண்டு போன உறவுகளுடனும் நாம் மானசீகமாகப் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். ஒவ்வொரு இலையும் ஒவ்வொரு பறவையும் ரகசியமான ஒரு சொல்லுடன் பேசுகிறது.

இப்படத்தின் ஆரம்பமும் சொற்கள் மூலம்தான். ஆனால் நம்முடன் தடித்த ஆண்குரலில் பேசுவது மரணம்.

மரணம் ஒரு கதைசொல்லியாக படத்தைத் தொடங்குகிறது.....

எல்லோரும் ஒருநாள் சாகத்தான் போகிறார்கள். யாரும் தப்ப முடியாது. நேரம் வரும் போது நான் அழைத்துச் செல்வேன். பதற்றம் கொள்ளாதே..எதுவும் உனக்கு உதவாது.

மார்க்குஸ் சூசாக்கின் நாவலைத் தழுவி திரைக்ககதை எழுதப்பட்டிருக்கிறது. திரைக்கதையை மைக்கேல் பெட்ரோனி எழுதியுள்ளார். படத்தை பிரெய்ன் பெய்சிவல் இயக்கியுள்ளார்.

இப்படம் நாஜிக்கள் படை உலகையே வெல்லத் துடிக்கும் காலகட்டமான 1936 முதல் ஹிட்லரின் காலம் முடிவுக்கு வந்த அடுத்த சில ஆண்டுகள் வரை படத்தின் கதை தொடர்கிறது.
பனிப்பிரதேசம் - வெள்ளைப் பனியை கிழித்துக் கொண்டு கரும்புகை கக்கியபடி வேகமாக செல்கிறது ரயில் ஒன்று. ரயிலில் 13 வயதுசிறுமி லெஸ்லீ ( சோஃபி நெலீஸ் ) தனது உறவுப் பெண்ணுடன் பயணிக்கிறாள். அருகில் உறங்கும் அவள் தம்பியின் மூக்கிலிருந்து திடீரென ரத்தம் வடிகிறது. லெஸ்லீ அலறுகிறாள். ரயில் நிற்கிறது. இறந்த தம்பியை பனியில் பள்ளம் தோண்டி புதைக்கிறார்கள். அப்போது அவன் சட்டைப்பையிலிருந்து ஒரு புத்தகம் கீழே விழுகிறது. அதனை லெஸ்லீ எடுத்து வைத்துக் கொள்கிறாள். லெஸ்லீயை அவள் உறவுப் பெண் ஒரு நடுத்தர வயது தம்பதியிடம் தத்துக் கொடுத்து சென்று விடுகிறாள். லெஸ்லீயின் தாய் ஒரு கம்யூனிஸ்ட் என்று அவளை ஹிட்லரின் ராணுவத்தினர் இழுத்துச் சென்று சூறையாடி விட்டதை கதையின் பிற்பகுதியில் அறிகிறோம். குழந்தைகளாவது நிம்மதியாக வாழட்டும் என்றுதான் தாய் அந்த குழந்தைகளை தத்து கொடுத்துவிடுகிறாள். ஆனால் தம்பி இறந்துவிட லெஸ்லீ மட்டும் புதிய பெற்றோரிடம் வருகிறாள்.

கம்யூனி்ஸ்ட்டுகள் என்றால் அழுக்கும் துர்வாடையுமாக இருப்பார்களா என்ற ஏச்சுடன் தனது மகளை அழைக்கிறாள் புதிய தாய் ரோசா ( எமிலி வாட்சன்) பதிலே பேசாத சிறுமியைப் பார்த்து ஊமையை கொடுத்து விட்டார்கள் என்று நொந்துக் கொள்கிறாள்.

இரவு வேளையில் புதிய தந்தையான ஹான்ஸ் ( ஜியோஃபரி ரஷ் ) லெஸ்லியுடன் சிநேகமாகிறார். அவர் வைத்துள்ள அக்கார்டியன் கருவியில் இசையை வாசிக்க ரசிக்கிறாள் லெஸ்லீ. பப்பா என்று அவரை அழைக்க அது ஒரு சோம்பேறி பன்றி. பரவாயில்லை அப்பா என்றே கூப்பிடு என்கிறாள்

லெஸ்லீயை பள்ளிக்கு அழைத்துப் போக வருகிறான் பக்கத்து வீட்டு பையன் ரூடி. அவனுக்கு வயது 12. என்னை ஓட்டப்பந்தயத்தில் ஒருவரும் ஜெயித்தது கிடையாது என்று பெருமை பேசுகிறான். பள்ளிக்கு ஓடலாம் என்கிறான். நான் ஜெயித்தால் எனக்கொரு முத்தம் கொடுப்பாயா என்று கேட்கிறான். தோற்றால் வாழ்நாள் முழுவதும் முத்தம் கேட்க மாட்டாயா என்று அவள் திருப்பிக் கேட்க அவனால் பதில் கூற முடியவில்லை. எப்படியோ ஏமாற்றி வி்ட்டு லெஸ்லீயே ஓடி வந்து ஜெயித்துக் காட்டுகிறாள். மோசடி என கூறுகிறான் ரூடி.

நீ எனக்கு நண்பனாக முயற்சிக்காதே என்கிறாள் லெஸ்லீ. நான் இங்கிருந்து ஓடி விடுவேன். என் புதிய அம்மாவைப் பிடிக்கவில்லை என்கிறாள். உண்மையான தாயை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதும் அவள் கவலை. கையில் இருக்கும் புத்தகத்தை ரூடி வாங்கிப் பார்க்கிறான். தம்பியின் கையில் இருந்த புத்தகம். பீட்டர் ஸ்ட்ராஸ் என்பவர் எழுதிய கல்லறை தோண்டுபவனின் குறிப்புகள் என்பது புத்தகத்தின் தலைப்பு.

அப்பா ஹான்சுடன் மகள் பேசுகிறாள். அவர் பெயின்டர் ஆனால் இப்போதெல்லாம் பெயின்ட் அடிக்க வாய்ப்புகள் வருவதில்லை. பெயின்ட்டை சுரண்டியெடுக்கும் வேவை கிடைக்கிறது. நீ ஒரு அக்கவுண்டன்ட் என்றுநினைத்தேன் என்கிறாள் லெஸ்லீ. அக்கவுண்ட்டன்டா....அவர் நம் வீட்டுப் பொருளாதாரத்திற்கு தேவையில்லாத ஒரு நபர் என்கிறார் ஹான்ஸ். நான் இறந்து விட்டால் என்னை சரியாக புதைப்பாயா என்று கேட்கிறார்.

இரவில் லெஸ்லீ புத்தகம் படிக்கும் பழக்கத்திற்கு ஆளாகிறாள். புத்தகம் அவளுக்கு தனிமையின் போது தோழனாகிறது.தாய்க்கு ஒரு கடிதம் எழுதி தன்னை அழைத்து வந்த பெண்ணிடம் கொடுக்கச் சொல்கிறாள். ஆனால் அந்த கடிதம் போய் தாயிடம் போய் சேரவே முடியாது என்று அறியும் போது அவள் முகம் வாடுகிறது.

புத்தகங்கள் சிந்தனைகளைத் தூண்டுபவை. ராணுவத்திற்கு சிந்தனை தேவையில்லை. செய் அல்லது செத்துமடி என்பது அவர்கள் சித்தாந்தம். சுய சிந்தனையுள்ளவர்கள் ராணுவத்தில் பணியாற்ற முடியாது. அதுவும் சர்வாதிகாரியான ஹிட்லரிடம் படையில் பணியாற்றுவோருக்கு புத்தகங்கள் மீது கடும் வெறுப்பு. ஆள்வோருக்கு அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை புத்தகங்கள் தான் ஆகாத பொருட்கள். புத்தகங்களைப் படிப்பவர்கள் புத்திசாலிகளாக மாறுவார்கள் என்பதால் அதனை எந்த அரசும் ஊக்குவிப்பதே இல்லை. நவீன காலங்களில் நூலகங்கள் கழிவறைகளாகின்றன. யாழ்ப்பாணத்தில் நூலகத்தில் லட்சம் புத்தகங்களை எரித்தார்கள். அதுபோலத்தான் அந்த ஊரிலும் நடுத்தெருவில் நூற்றுக்கணக்கான புத்தகங்களை குவியல் குவியலாக ஹிட்லரின் படையினர் எரிக்கின்றனர். ஒவ்வொரு நபரும் ஒரு புத்தகத்தை கொண்டு வந்து எரிக்க வேண்டும். எரிக்காதவர் யூதர் அல்லது கம்யூனிஸ்ட் அல்லது ஹிட்லருக்கு எதிரி.

எல்லோரும் புத்தகங்கள் எரியும் தீயில் ஆளுக்கொரு புத்தகத்தை எரிக்கிறார்கள். லெஸ்லீக்கோ புத்தகம் என்றால் உயிர். அவள் தயங்கி நிற்கிறாள். புத்தகம் எரிப்பதா என்ற கவலை அவளுக்கு. புத்தகத்தை எரிக்காமல் விடமாட்டார்கள் என்று ரூடி அவளிடம் தடித்த ஒரு புத்தகத்தைத் தருகிறான். அவளும் சட்டென அதைத் தீயில் எறிந்து விடுகிறாள்.

கூட்டம் கலைகிறது. எல்லோரும் போய்விட லெஸ்லீ மட்டும் எரிந்த புத்தகங்களைப் பார்த்தபடி நிற்கிறாள். யாருமில்லை என அவள் தாம் வீசிய புத்தகத்தைதீயில் இருந்து மீட்டு எடுக்கிறாள். வேசாக எரியும் படிதான் அவள் வீசியிருக்கிறாள். அந்த புத்தகம் ஹெச்.ஜி.வெல்சின் - தி இன்விசபிள் மேன் ( கண்ணுக்குத் தெரியாத மனிதன் ) அப்போது ஒரு கார் அவளைக் கடந்து செல்கிறது. அதில் மேயரும் அவள்மனைவியும் அவள் கையில் புத்தகத்துடன் நிற்பதைப் பார்க்கின்றனர்.

மறுநாள் ரூடியிடம் தாம் ஹிட்லரை வெறுப்பதாக கூறுகிறாள் லெஸ்லீ. தப்பித் தவறி அப்படி சொல்லி விடாதே என்று எச்சரிக்கிறான். ஆனால் இருவரும் யாரும் இல்லாத அத்துவான வயல் வெளியில் நின்று ஹேட் ஹிட்லர் என்று உரக்க கத்துகிறார்கள். சிரிக்கிறார்கள். புத்தகத் திருடி என்று ரூடி லெஸ்லீயை அழைக்கிறான்.

ஹான்சின் வீட்டுக்கு காயத்துடன் மேக்ஸ் என்றநபர் வருகிறான். அவன் ஒரு கம்யூனிஸ்ட். ஒரு யூதன். ஹான்சின் கையில் உள்ள அக்கார்டின் இசைக்கருவிக்கு சொந்தக்காரன் அவன்தான். அவனுடைய தந்தைக்குநன்றிக் கடன் பட்ட ஹான்ஸ் அவனை வீட்டின் அடிவாரப் பகுதியில் உள்ள ரகசிய அறையில் தங்க வைக்கிறார். யாருக்கும் இவன் இங்கிருப்பது பற்றி பேசக்கூடாது என்று மகளுக்கு எச்சரிக்கை செய்கிறார்.

மேக்சுக்கும் புத்தகம் படிப்பதில் ஆர்வம். இருவரும் தோழமை கொள்கிறார்கள். மேக்சுக்கு புத்தகம் வாசிப்பதும் படித்த விஷயங்களைப் பகிர்ந்துக் கொள்வதும் லெஸ்லீயின் இரவு நேரப்பணியாகிறது.

வருமானம் இல்லாததாலும் கூடுதலாக ஒருநபருக்கு உணவு தேவை என்பதாலும் லெஸ்லீயின் தாய் ரோசா துணிகளை இஸ்திரி செய்கிறாள். மேயர் வீட்டுத் துணிகளை லெஸ்லீயிடம் கொடுத்து காசு வாங்கி வர அனுப்புகிறாள். அப்போது மேயரின் மனைவி இல்சா ஹெர்மன் உனக்கு புத்தகம் படிப்பதில் ஆர்வம் இருப்பது எனக்குத் தெரியும் என்று கூறி தன் வீட்டு அலமாரி முழுவதும் நிரம்பியுள்ள புத்தகங்களைக் காட்டுகிறாள். இதை எப்போது வேண்டுமானாலும் இங்கு வந்து நீ படித்து விட்டுச் செல்லலாம் என்கிறாள் இல்சா.

மேக்ஸ் புத்தகம் படிப்பதுடன் எழுதும் படி லெஸ்லீயை தூண்டுகிறான். ஒரு எழுத்தாளராக உருவாக கற்பனை தேவை என்கிறான். அவன் வீட்டின் அடிவாரத்தில் இருட்டறையில் அடைந்து கிடப்பதால் வெளியுலக வானிலையை தமக்கு விவரிக்கும்படி லெஸ்லீயிடம் கூறுகிறான். சொற்களுடன் சினேகம் கொள்ளும்படி எதையும் சொல்லப் பழகும்படி அவளுக்கு ஊக்கம் அளிக்கிறான் மேக்ஸ். தினமும் அவனுக்கு தனது அழகழகான சொற்களால் வானிலையை அவள் விவரிக்கிறாள். சூரிய ஒளி வைரத்தை ஏந்திய ஒரு வெள்ளி நத்தையப் போல் இருப்பதாக அவள் சொல்ல சொல்ல அதை நான் பார்த்து விட்டேன் என்று அவன் மகிழ்கிறான்.

இந்நிலையில் லெஸ்லீ புத்தகம் படிப்பதை விரும்பாத மேயர் லாண்டரியை நிறுத்தி விடுகிறார். லெஸ்லீ இரவில் ரூடியின் உதவியுடன் போய் அந்த வீட்டில் புத்தகங்களைத் திருடுகிறாள்.

அப்போது இங்கிலாந்து ஜெர்மனி மீது போர் தொடுக்கிறது.வானத்தில் போர் விமானங்கள் குண்டுகளை வீசும் என்ற அச்சத்தால் அனைவரும் பயந்துக்கிடக்கின்றனர். சைரன் ஒலித்ததும் அனைவரும் வீட்டை விட்டு பதுங்குக் குழிகளில் பதுங்கிக் கிடக்கின்றனர். அப்போதும் அவர்களிடம் புத்தகம் வாசித்து பயத்தை போக்குகிறாள் லெஸ்லீ. மேக்சை பற்றி அவள் கவலைப்படுகிறாள், வீட்டை விட்டு வரமுடியாத போதும் தாம் அடிவாரத்தில் இருப்பதால் குண்டு வீ்ச்சிலிருந்து தப்பிவிட முடியும் என்று அவன் கூறுகிறான்.

கிறிஸ்துமஸ் வருகிறது. பனி மூடிக்கிடக்கிறது. இதை அவனுக்கு வானிலை அறிக்கையாக வாசிக்காமல் லெஸ்லீ ஒரு பனிமனிதனை செய்துக் காட்டுகிறாள். பனித்துகள்களை வைத்து அவள் வடிவமைத்த பனி பொம்மை மேக்சை மிகவும் கவர்கிறது.நீ ஆச்சரியங்கள் மிக்கவள் என்று லெஸ்லீயைப் பாராட்டுகிறான்.

மேக்ஸ் கையில் உள்ள புத்தகத்தில் பக்கங்கள் காலியாக இருக்கின்றன. அதை அவன் லெஸ்லீக்கு தருகிறான், சொற்கள் தாம் வாழ்க்கை. சொற்களை இதில் நிரப்பு, என்று மேக்ஸ் கூறுகிறான்.

பனியால் மேக்ஸ் உடல் நலம் பாதிக்கப்படுகிறான்.லெஸ்லீக்கு பள்ளியில் மனம் ஒட்டவே இல்லை. ஆனால் மேக்ஸ் குணமாகி விட்ட மகிழ்ச்சியான செய்தியுடன் பள்ளிக்கு வரும் ரோசா எல்லோர் எதிரிலும் லெஸ்லீயை எதற்கோ திட்டுவது போல் திட்டி மேக்ஸ் குணமாகிவிட்டதை கூறும் போது லெஸ்லீக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. மேக்ஸ் குணமானதும் தனது புதிய தாயும் தன் மீது காட்டிய பாசம் கண்டும் நெகிழ்கிறாள்.

ரூடி லெஸ்லீயின் கையில் உள்ள புத்தகத்தைப் பார்த்து விடுகிறான். அதில் மேக்ஸ் என்ற கையெழுத்து பொறாமைப்பட வைக்கிறது. மேக்ஸ் யார் உன் பாய்பிரண்டா என்றுலெஸ்லீயிடம் கேட்கிறான். மீண்டும் அவளிடம் முத்தம் கேட்கிறான். ஒரு வழியாக மேக்ஸ் என்பவரை லெஸ்லீயின் குடும்பத்தினர் வீட்டில் மறைத்து வைத்திருப்பதை ரூடி புரிந்துக் கொள்கிறான். ஆனால் லெஸ்லீ சொல்லவில்லை. அவன் கேள்விகளுக்கு மௌனம் மூலமே அவள் பேசுகிறாள். இந்நிலையில் ரூடியில் சக மாணவன் பிரான்ஸ் லெஸ்லீயின் கையில் உள்ள புத்தகத்தைப் பறிக்க முயலும் போது அவன் ரகசியத்தைத் தெரிந்துக் கொள்ளக்கூடாது என்று பதறும் லெஸ்லீ அதை டயரி என்று ஏமாற்ற பிரான்சுக்கும் ரூடிக்குமான சண்டையி்ல் பிரான்ஸ் புத்தகத்தை ஏரியில் வீசியெறிகிறான்.

பிரான்சை விரட்டிவிட்ட ரூடி ஓடோடிப் போய் புத்தகம் விழுந்த இடம் எனக்குத் தெரியும் என்று கூறி பனி மூடிய ஏரியில் குதிக்கிறான். புத்தகத்துடன் அவன் நீந்தி வந்தபின்னர்தான் லெஸ்லீ நிம்மதிப் பெருமூச்சு விடுகிறாள். உயிரைப்பணயம் வைத்து அவள் புத்தகத்தை மீட்ட ரூடி இப்போதாவது என்னை நம்பு என்கிறான்.

வீடு வீடாக ஹிட்லரின் ஆட்கள் சோதனை நடத்துவதால் தம்மால் ஹான்ஸ் குடும்பத்தினருக்கு தொல்லை நேரலாம் என்பதை அறிந்த மேக்ஸ் அங்கிருந்து இரவோடு இரவாக வெளியேறுகிறான். தன் புத்தக நண்பனுக்குப் பிரியாவிடை தருகிறாள் லெஸ்லீ.

சில காலம் நாஜிப்படைக்கு அழைத்துச் செல்லப்படும் ஹான்ஸ் குண்டு காயம் பட்டதால் திரும்பி வருகிறார். ஆனால் அந்த குடும்பத்தின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. சைரன் ஒலி கேட்காத ஒரு இரவில் குண்டுமழை பொழிய அந்த கிராமத்தில் பல உயிர்கள் பலியாகின்றன. ரகசிய அறையில் புத்தகம் படித்தபடி தூங்கிவிட்ட லெஸ்லீ இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்கப்படுகிறாள். தந்தை, தாய் சடலங்களுடன் ரூடியின் சடலத்தையும் கண்டு கதறுகிறாள் நீ கேட்ட முத்தத்தை தருகிறேன் எழுந்திரு என்று அழுகிறாள். அவன் உயிரற்ற உடலை ஆரத்தழுவி இறுக்கி முத்தமிடுகிறாள்.

மரணம் மீண்டும் குறுக்கிட்டு பேசுகிறது.

வாழ்க்கை எந்த உத்தரவாதமும் அற்றது. ஹான்சை தூக்கத்தில் கொண்டு செல்லும் போது அவர் தமது அக்கார்டினில் ஒரு ராகத்தை வாசிக்க கடைசியாக விரும்பியதை அவர் நினைவைப் படித்து தாம் தெரிந்துக் கொண்டதாக கூறுகிறது மரணம்.

ஹான்சின் மனைவி ரோசா மரணத்தைத் தேவடியா பையா என திட்டிக் கொண்டே இறந்ததாக மரணம் தெரிவிக்கிறது.

ரூடியைக் கொன்றதற்காக மரணமும் வேதனைப்படுகிறது. ஆனால் ரூடியின் ஆயுள் அவ்வளவுதான்.

2 ஆண்டுகள் கழித்து அமெரிக்கப் படைகள் ஜெர்மனியை முற்றுகையிட்டு ஹிட்லரின் பிடியில் இருந்து அங்குள் மக்களை விடுவிக்கின்றனர். இதனிடையே ஒருமுறை அவள் மேக்சை சில ராணுவ வீரர்கள் இழுத்துச் செல்வதைக் கண்டு அவர்களை விரட்டிச் செல்லும் போது தள்ளி விடப்படுகிறாள். அப்போது அவளை தடுத்தாட்கொள்கிறாள் மேயரின் மனைவி இல்சா

காலம் மாறிவிட்டது. ஒரு டெய்லரிங் கடையில் வேலை பார்க்கும் லெஸ்லீ மேக்சை சந்திக்கிறாள். இருவரும் இணைகிறார்கள். அதன் பிறகு லெஸ்லீயும் மேக்சும் காலம் முழுவதும் நண்பர்களாக இருந்தார்கள் என்று மரணம் விவரிக்கிறது. லெஸ்லீ 90 வயது வரை வாழ்ந்து பேரன் பேத்திகளுடன்இருந்ததாகவும் மிகப்பெரிய எழுத்தாளராக மாறியதாகவும் மரணம் தெரிவி்க்கிறது. அவள் யாரை மணந்துக் கொண்டாள் என்பது கதையின்முடிவில் தெரிவிக்கப்படவில்லை. மேக்ஸ்தான் அவள் கணவனா. அவன் சகோதர உறவா நண்பனா என்ற கேள்விகளுடன் நாம் விடப்படுகிறோம்.

மரணம் பேசுகிறது.

யாரும் நிரந்தரமாக வாழ்வதில்லை. லெஸ்லீ 90 வயது வரை வாழ்ந்தாள். அவள் சொற்கள் பல உள்ளங்களைத் தொட்டன. பலரது காயங்களை ஆற்றின. வாழ்க்கை என்றால் என்ன என்றும் வாழ்வது என்பது எது என்றும் என்னை வியக்க வைத்த மிகச்சிலரில் லெஸ்லீயும் ஒருத்தி என்கிறது மரணம். இறுதியில் சொற்களும் முடிந்துப் போகின்றன. ஒரு சொல்லும் இல்லாத அமைதி வருகிறது.

மரணம் எல்லோரையும் ஏதோ ஒரு காலத்தில் கொண்டு சென்று விடுகிறது. ஆனால் மனித வாழ்க்கை லெஸ்லீயைப் போல் சிலரால் தம்மை ஒரு பேய் போல் விரட்டுகிறது என்று மரணம் கூறுகிறது.

சொற்களால் வாழ்கிறவர்கள்,மரணத்தையும் வெல்கிறார்கள்.
 

Wednesday, 27 April 2016

பதிப்பாளர்கள் தேவை





 ஒரு வேண்டுகோள்


இணையத்தில் எழுதப்படும் பெரும்பாலான எழுத்துகள் பதிப்புக்கு வருவதேயில்லை. புத்தக வடிவில் நூலகங்களுக்கோ வாசகர்களுக்கோ அவை கிடைப்பதி்ல்லை. இணைய வடிவில் நானும் நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை விரிவாகவும் ஆழமாகவும் எழுதி வருகிறேன்.
1 பயணம்- எனது பயண அனுபவங்கள் தொடர்
2 அரிதினும் அரிது கேள்- சினிமா பாடல்கள் பற்றிய தொடர்
3. சந்திப்பு -நான் சந்தித்த அபூர்வ மனிதர்கள் தொடர்
4. சினிமா கட்டுரைகள்
5 இலக்கியக் கட்டுரைகள்
6.மொழிபெயர்ப்புகள்
7 புத்தக விமர்சனங்கள், திரைப்பட விமர்சனங்கள்
போன்றவற்றை ஓரிரு மணி நேரத்தில் நூல்வடிவில் தொகுப்பது எளிதானது. இவற்றை யாராவது பதிப்பாளர் நண்பர்கள் நூலாக்கம் செய்து எனக்கும் சில பிரதிகள் தந்தால் மகிழ்ச்சியடைவேன். ராயல்டியை விருப்பம் போல தரலாம். அல்லது இவற்றை நூல்களாக மாற்றுவதற்காக யாராவது பொருள் உதவி, ஆலோசனைகள் வழங்கினாலும் நன்றியுடன் ஏற்றுக்கொள்வேன்.
இணையத்தில் எப்போதும் பார்க்கலாம் என்றாலும் இணையமே தெரியாத வாசகர்களைக் குறித்தும் நான் கவலைப்பட வேண்டியிருக்கிறது. நண்பர்கள் தொலைபேசி எண்ணைத் தெரிவி்த்து ஆலோசனைகளையும் உதவிகளையும் அனுப்பி வைக்கலாம்
எனது இணைய பக்கத்தில் கருத்து பகுதியில் பதிவிடலாம் அல்லது தனிப்பட்ட முறையில் எனக்கு இமெயில் மூலம் அனுப்பலாம். உடனே பதில் வரும் என்று மட்டும் எதிர்பார்க்கவேண்டாம் .எனது வசதியைப் பொருத்து கட்டாயம் பேசுவேன்.பதிலளிப்பேன்.
இமெயில் முகவரி- jagdishshahri@gmail.com

Friday, 22 April 2016

தெறி -விஜய்


விக்கியுடன் ஆல்பர்ட் திரையரங்கில் தெறி படம் பார்த்தேன். அதன் 100 கோடி ரூபாய் வசூலில் எனது 140 ரூபாயும் சேர்ந்தது.

இயக்குனர் மகேந்திரன் பரிதாபம். பாவம். ஆக்சன் மசாலா படங்களுக்கு எதிராக திரைப்பட இயக்கத்தை பாரதிராஜா, பாலுமகேந்திரா, மணிரத்தினம், ருத்ரய்யா, ஜெயபாரதி போன்ற மேன்மை மிகக கலைஞர்களுடன் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய ஒரு ஜாம்பவான் அதே மசாலா படத்திற்கு வில்லனாக பலியாகியுள்ளார். சினிமா ரசிகர்கள் கண்ணீர் விட வேண்டும்.

மற்றபடி தெறி வழக்கமான விஜய் படம்தான்.  
easily predictable எளிதில் கணிக்க கூடிய காட்சியமைப்புகள், திருப்பங்கள். கிளைமேக்ஸ்.குத்து பாடல்கள்.  ஒரே ஒரு மெலடி பாடல் -உன்னாலே உன்னாலே அதுகூட ஜிவிபிரகாஷ்குமாரின் பழைய பாடல்களின் சாயலில். படத்தில் பிடித்தது ராஜேந்தர் என்ற விஜயின் அழைப்பும் ராஜேந்தராக நடித்த மொட்டை ராஜேந்திரனின் நடிப்பும்தான். சமந்தா அழகு. சிரித்துக் கொண்டே இருக்கிறார், விஜய் வழக்கம் போல தெறிதான். ஆக்சனும் ஆட்டமும் இருக்கும் வரை விஜய்க்கு என் செல்லக்குட்டி விக்கி போல ஏராளமான ரசிகர்கள் இருப்பார்கள்.

வீட்டில் லீவு நாட்களில் போர் அடிக்குது தினமும் பத்து ரூபாய் டிக்கட்டாவது வாங்கி என்னை தெறியில் கொண்டு போய் விட்டு விடு என்கிறான் விக்கி.. பத்து ரூபாய் டிக்கட் எல்லாம் தியேட்டரி்ல் கொடுப்பார்களா என்று தெரியவில்லை.
எனக்கு வீட்டுக்குப் போய் ரஜினியின் பாட்ஷா படத்தையோ  எம்ஜிஆரின் பழைய படத்தையோ பார்க்க வேண்டும் போல இருந்தது. விஜயின் உழைப்பும் ஹீரோயிசமும் பிடித்திருந்தாலும் நடிப்பில் இன்னும் அவர் கவரவே இல்லை. ரோமன்ஸ் காட்சிகள் போரடிக்கின்றன. ஆனாலும் அவர் ஒரு ஸ்டார். அவருக்கு விக்கி போன்ற பல லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள். எனது கருத்து முக்கியமல்ல. மகேந்திரனே செல்லாக்காசான பிறகு என் கருத்துக்கு என்ன மதிப்பு

பின்குறி்ப்பு
ஒருவழியாக விக்கியின் ஆசையை நிறைவேற்றினேன். பின்னி மில்லில் விஜயின் 60வது படத்தின் படப்பிடிப்புக்கு அழைத்துப் போனேன் .பாதுகாவலர் விடவில்லை. ஆனாலும் பேசியதில் அவர் நட்புடன் விக்கியை அனுப்ப ஒப்புக் கொண்டார். நான் வெளியே காத்திருக்க உள்ளே போய் விக்கி ஆட்டோக்கார தோழர்களுடன் படம் எடுத்த விஜய்யை கண்டு ரசித்திருக்கிறான். வெளியே நின்ற நான் விஜய்க்கு திரண்ட ரசிகர்களைப் பார்த்து வியந்து நின்றேன். ஒரு மனிதன் மீது இத்தனை மனிதர்கள் பிரியம் வைத்திருப்பது அந்த மனிதருக்கு கடவுள் கொடுத்த வரமா சாபமா என்று புரியவில்லை. வரம் இத்தனை பணமும் புகழும் கொட்டுவதால், சாபம் தனிப்பட்ட வாழ்க்கை என எதுவும் இல்லாமல் எல்லாமே பொதுவாழ்க்கையாக ஆகி விடுவதால்.நான் நிம்மதியாக ஒரு டீக்கடையில் தேநீர் அருந்தி வீட்டுக்குத் திரும்பினேன். யாருக்கும் என்னை அடையாளம் தெரியவில்லை .என்ன ஒரு நிம்மதி....அடடா .....


Wednesday, 20 April 2016

வாசிக்க வேண்டிய புத்தகங்கள்- டாப் டென் தமிழ்

நான் வாசித்த புத்தகங்களில் வாசகர்களுக்குப் பரிந்துரை செய்யத்தக்க பத்து மிகச்சிறந்த தமிழ் நூல்களை இங்கு பட்டியலிடுகிறேன். தவறாமல் இவற்றை படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். எல்லோருக்கும் தெரிந்த கம்பராமாயணம், திருவாசகம், நாலாயிரத்திவ்ய பிரபந்தம், திருவாசகம், தேவாரம், கந்தசஷ்டி கவசம், திருமந்திரம், திருக்குறள், சங்க இலக்கியம், பாரதியார் கவிதைகள் போன்றவற்றை இங்கு பட்டியலிடவில்லை. இவை படிக்காமல் எதுவும் இல்லை.
நவீன இலக்கியம் சார்ந்தே எனது பட்டியல்
தமிழில் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகங்கள் பல ஆயிரமாயிரம் உண்டு. பத்து மட்டுமே தேர்வு செய்ய சொன்னால் எனது தேர்வு இதுதான்.

சிறுகதைகள்
1  மௌனி கதைகள்
2. புதுமைப்பித்தன் கதைகள்
3 கு.ப.ரா. கதைகள்
4. அசோகமித்திரன் சிறுகதைகள்
5. லாசரா சிறுகதைகள்
6. ஆதவன் சிறுகதைகள்
7. ஜெயகாந்தன் சிறுகதைகள்
8. நா.பார்த்தசாரதி சிறுகதைகள்
9. சி.சு.செல்லப்பா சிறுகதைகள்
10. பிரபஞ்சன் சிறு கதைகள்

- இவை தவிர ந.பிச்சமூர்த்தி கதைகள், பி.எஸ்.ராமையா, கநாசு, ;சுந்தர ராமசாமி, தஞ்சை ப்ரகாஷ். சுப்ரமண்ய ராஜூ ,கிருஷ்ணன் நம்பி,.திலீப்குமார், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சூர்யராஜன், ஷாராஜ், அம்பை ,தமயந்தி , ஆகியோரின் சிறுகதைகளும் எனக்குப் பிடிக்கும்.


நாவல்கள் 
ஒரே எழுத்தாளரின் பல நாவல்கள் பிடித்தவையாக உள்ள போதும், தலா ஒன்று வீதம் மட்டுமே பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

1.ஜே.ஜே.சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி
2. இடைவெளி -சம்பத்
3. கரைந்த நிழல்கள் -அசோகமித்திரன்
4. பாற்கடல் - லா.ச.ராமாமிர்தம்
5. பாரீசுக்குப் போ - ஜெயகாந்தன்
6. நெற்றிக்கண் -நா.பார்த்தசாரதி
7. மண்ணில் தெரியுது வானம் -ந.சிதம்பர சுப்பிரமணியம்
8. மோக முள் - தி.ஜானகிராமன்
9. என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ- சுஜாதா
10. விஷ்ணுபுரம் -ஜெயமோகன்

இவை தவிர ஜி.நாகராஜன், கி.ராஜநாராயணன், ர.சு.நல்லபெருமாள், ப.சிங்காரம் , ந.சிதம்பரசுப்பிரமணியம். நாஞ்சில் நாடன், பூமணி, வண்ணநிலவன், இந்திரா பார்த்தசாரதி,  பாலகுமாரன்  நாவல்களும் முக்கியமானவையே.எனது கிடங்குத் தெருவை விரும்பினால் நீங்கள் இதில் இணைத்துக் கொள்ளலாம்.

கட்டுரைகள்
1.தமிழ்ச்சிறுகதை பிறக்கிறது - சி.சு.செல்லப்பா
2. விரிவும் ஆழமும் தேடி.. .சுந்தர ராமசாமி
3 அனுமன் -வார்ப்பும் வளர்ப்பும் -மு.ஹரிகிருஷ்ணன்
4. வெங்கட்சாமிநாதன் கட்டுரைகள் அனைத்தும்
5. எனது பர்மா வழி பயணம் - வெ.சாமிநாத சர்மா
6 எனது கலையுலக அனுபவங்கள் - ஜெயகாந்தன்
7  அசோகமித்திரனின் சினிமா கட்டுரைகள்
8. கோவை ஞானி கட்டுரைகள் அனைத்தும்
9. கநாசு கட்டுரைகள் அனைத்தும்
10 . மணிக்கொடி காலம் -பி.எஸ்.ராமையா

இவை தவிர எம்.ஏ.நுக்மான் கட்டுரைகள் , வல்லிக்கண்ணன் கட்டுரைகள், கலாநிதி நா.சுப்பிரமணியம் கட்டுரைகள், மயிலை சீனி வேங்கடசாமி கட்டுரைகள், எஸ்.ராமகிருஷ்ணன் கட்டுரைகள், சாரு நிவேதிதா கட்டுரைகள் , ஆல்பட், அ.மார்க்ஸ், எஸ்.வி.ராஜதுரை, வேதசகாயகுமார், பாலகுமாரன். பிரபஞ்சன், ஷோபா சக்தி , ஷாஜி, போன்ற பலரது கட்டுரை, விமர்சன நூல்களை விரும்பி வாசித்து ரசித்திருக்கிறேன்.

கவிதைகள்
1 ந.பி்ச்சமூர்த்தி கவிதைகள்
2.பிரமிள் கவிதைகள்
3.பசுவய்யா கவிதைகள்
4. அபி கவிதைகள்
5.நகுலன் கவிதைகள்
6.தேவதேவன் கவிதைகள்
7.வில்வரத்தினம் கவிதைகள்
8.கௌரிஷங்கர் கவிதைகள்
9 கல்யாண்ஜி கவிதைகள்
10 சுகந்தி சுப்பிரமணியம் கவிதைகள்


இவை தவிர பாரதிதாசன் கவிதைகள்,  இலங்கைப் பெண் கவிஞர்கள் , சேரன் கவிதைகள், வ.ஐ.செ.ஜெயபாலன் கவிதைகள், பிரம்மராஜன் கவிதைகள், இன்குலாப் கவிதைகள், விக்ரமாதித்யன் கவிதைகள், ஷங்கர் ராம சுப்பிரமணியம் கவிதைகள், வைரமுத்து. மீரா, மு.மேத்தா, நா.காமராசன்,  கவிதை நூல்கள், கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், வாலி, புலமைப்பித்தன், வைரமுத்து பாடல்கள் , என பட்டியல் நீளும்

தமிழில் வந்த மொழிபெயர்ப்புகள்

1. நிரபராதிகளின் காலம் -சிக்ப்ரீட் லென்ஸ்
2. வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல் சாங்கிருத்யாயன்
3. புதிய குழந்தை -ஓஷோ ( தமிழாக்கம் செந்தூரம் ஜெகதீஷ்)
4. காதல் தேவதை -மாசோக் ( தமிழாக்கம் -செந்தூரம் ஜெகதீஷ்)
5. செம்மீன் -தகழி சிவசங்கரன் பிள்ளை
6  அபாயம் -ஜோஷ் வாண்டலூ
7. அந்நியன் -ஆல்பர்ட் காம்யூ
8. கரம்சோவ் சகோதரர்கள் -தாஸ்தயவஸ்கி
9. புத்துயிர்ப்பு -லியோ டால்ஸ்டாய்
10. அந்தோன் செக்கவ் கதைகள்

இவை தவிர மாஸ்கோ பதிப்பகம் வெளியிட்ட ரஷ்ய நாவல்கள், விடியல் பதிப்பகம், கருப்புப்பிரதிகள் ,அலைகள் பதிப்பகம் , காலச்சுவடு. சாகித்ய அகாடமி, நேஷனல் புக் டிரஸ்ட் போன்றவை வெளியிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் போன்றவையும் தவறாமல் படிக்கப்பட வேண்டியவை

வாசிக்க வேண்டிய புத்தகங்கள்.....

வழக்கம் போல பழைய புத்தகக் கடைகளில் எனது மாதச்சம்பளத்தின் எனது பங்கில் பெரும்பகுதியை செலவழித்துக் கொண்டிருக்கிறேன். கண்ட கண்ட புத்தகங்கள் வாங்குவதும் படிப்பதும் படிக்காமல் வீசியெறிவதும் படித்ததை பாதுகாத்து வைப்பதும் எனது அன்றாட வாழ்வில் ஒரு பகுதியாக மாறி விட்டது. படிக்கிற ஆர்வத்தால்தான் எழுதுவதும் குறைவாக இருக்கிறது.நிறைய நிறைய எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாள நண்பர்கள் மிகக்குறைவாகப் படிப்பவர்கள் என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்தவன் நான்.
ஒரு கட்டத்தில் பழைய புத்தகக் கடைகளிலிருந்து ஏராளமான மாத நாவல்களை அள்ளி வந்தேன். பாலகுமாரன், சுஜாதா, தமிழ்வாணன், ராஜேஷ்குமார். இந்திரா சவுந்திரராஜன், தேவிபாலா, பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, ரமணி சந்திரன், அருணா நந்தினி, இரா.கீதாராணி, ஸ்ரீஜா வெங்கடேஷ்,   என சுமார் 300 நாவல்களை பல நாட்களாக பொறுமையாகப்படித்தேன். மூன்று அல்லது நான்கு மட்டும் மனம் கவர்ந்தன.தாஜ்மகாலை குண்டு வைக்கப் போகும் காதலன் ஒருவன் கதையை சுபா எழுதியுள்ளனர். இதேபோல் கற்பனையில் கிறங்க வைக்கும் பரத்-சுசிலா வை ரசிக்க முடிந்தது.சங்கர்லால் நாவல்கள் மீது சிறுவயதிலிருந்தே மயக்கம். பெண் எழுத்தாளர்களின் கதைகள் பெரும்பாலும் முறையற்ற குடும்ப உறவுகள் அல்லது குடும்பச்சிக்கல்களை மையமாகக் கொண்டிருந்தன. சுஜாதாவின் அப்சராவும் நைலான் கயிறும் மாத நாவலாக வந்ததால் புறக்கணிக்க முடியாதவை. ஜெயகாந்தன் கூட ராணி முத்துவில் வாழ்க்கை அழைக்கிறது எழுதியிருக்கிறார். கல்பனாவிலும் அவருடைய ஊருக்கு நூறு பேர் போன்ற சிறந்த படைப்புகள் வெளியாகியுள்ளன. குடும்ப நாவல் கல்கி, நா.பா. போன்றோரின் படைப்புகளை வெளியிட்டு ஆச்சரியப்படுத்துகிறது. விலை 30 ரூபாய் என்பது அதிகம்தான்.
இதே போல் ஆங்கிலப் புத்தகங்கள். பைபிள் முதல் சூபியிசம் வரை நான் தேடித்தேடிப் படித்த தேர்ந்த புத்தகங்கள் பட்டியல் மிகப்பெரியது. ஆனால் அதற்கு ஈடாக குப்பைகளையும் நிறையவே படிக்க நேர்ந்தது. மிகப்பெரிய குப்பை என்றால் ஆங்கிலத்தில் வெளியாகும் மில்ஸ் அண்ட் பூன்ஸ், மற்றும் சுய முன்னேற்ற நூல்கள்தான்.
நாவல்கள் அசத்துகின்றன. ஆங்கிலத்தில் பல நாவல்களை முடிக்க முடியாமல் பாதியிலேயே நிறுத்தியிருக்கிறேன். கண்களில் வழியும் நீரும்
( கண்கோளாறு ) மனச்சோர்வும் பணப்பற்றாக்குறையும் காரணம். ( பணம் தேவைப்படும் போது உடனடியாக கைகொடுத்து உதவி சில நூறு ரூபாய்களை தருவது ஆங்கில நாவல்கள்தாம் )

மருத்துவத்துறையை மையமாக வைத்த ராபின் குக்கின் கிரைம் கதைகள், ஹிட்லரின் காலத்திலும் ரஷ்யாவின் புரட்சி காலத்திலும் நிகழ்ந்த சம்பவங்களை எழுதிய டாம் கிளான்சியின் நாவல்கள், சுயசரிதையைப் போல் எழுதப்பட்ட சால்பெல்லோவின் ஹெர்சாக், ஹென்றிமில்லரின் டிராபிக் ஆப் கேன்சர், உளவாளிகளை வைத்து எழுதப்பட்ட ஜான் லீ கெரியின் நைட் மேனஜர் போன்ற நாவல்கள், வழக்கறிஞர் தொழிலை வைத்து நீதித்துறையின் குற்ற  வழக்குகளை ஆராய்ந்து எழுதப்பட்ட ஜான்கிரிசிமின் நாவல்கள் போல  ஏராளமான புத்தகங்கள் மனம் கவர்ந்தவையாக உள்ளன. டால்ஸ்டாய், தஸ்தயோவஸ்கி, காப்கா, சார்த்தர், ஆல்பர்ட் காம்யூ, ஹெமிங்வே, நபகோவ், என நீளும் இலக்கிய வாசிப்புகளையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த புத்தகங்களின் வரிசையில் தற்போது படித்துக் கொண்டிருப்பது  ஜான் கிரிசிமின் சேம்பர் என்ற நாவல் .

பெரும்பாலான ஆங்கில நாவல்கள் படமாகவும் எடுக்கப்படுகின்றன.ஜான் கிரிசிமின் 8 நாவல்கள் படமாகியுள்ளன. அத்தகைய படங்களையும் தேடிப்பிடித்து பார்த்து விடுகிறேன். டாம் கிளான்சியின் கிளியர் அண்ட் பிரசன்ட் டேஞ்சர், பேட்ரியட் கேம்ஸ் போன்ற நாவல்களை படமாகவும் பார்த்து ரசித்திருக்கிறேன்.

வாசி்ப்பது ஒரு வரம். ஒரு தவம். அதில் குப்பையும் வரலாம் மாணி்க்கப்பரல்களும் தெறிக்கலாம்,வைரங்களும் கிடைக்கலாம். யாராலும் கொள்ளையடிக்க முடியாத பெரும் செல்வம் இது.
விழித்திருந்து பெற்ற அறிவு கற்றலால் மேம்பட்ட ரசனை பயிற்சியால் பக்குவப்பட்ட எழுத்து என புதிய பயணத்தை நான் மேற்கொண்டிருக்கிறேன். மகிழ்ச்சியாக உள்ளது.

Monday, 11 April 2016

சந்திப்பு 10 - ஷாராஜ்

ஒரு மீள் பதிவு
தமிழுக்கு என் வணக்கம் 

கவிஞர் ஓவியர் - ஷாராஜ் Shahraj Strokes

எழுத்தாளர், கவிஞர், ஓவியர் என்று பன்முகத்தன்மை கொண்ட நண்பர் ஷாராஜை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சியளிக்கும் விஷயமாக உள்ளது. அதற்கு காரணம் எதைப்பற்றியும் மனம் விட்டு வயது வித்தியாசம் பாராமல் அவருடன் உரையாட முடியும். சம அளவில் மனத்தை அவருடன் பொருத்தி வைக்க முடியும். அவர் பேசுவதில் அர்த்தமும் அழகும் இருக்கும். ஆனால் சற்று விரக்தியும் கலந்திருப்பதை நிதர்சனமாக உணர்ந்திருக்கிறேன். முட்டாள்கள் கோலோச்சும் உலகில் நுட்பமான அறிவாளிகள் ஓரம் கட்டப்படுவதும் ஒதுக்கப்படுவதும் அடையாளமற்றுப் போவதும் குறித்த பிரக்ஞை கூட அவருக்கு இருக்குமா என்பதும் சந்தேகம்தான். ஆனால் விரக்திக்கு அதுதான் காரணமா என யோசித்திருக்கிறேன்.
கோவையில் 2016 ஏப்ரல் மாதம் 7ம் தேதி சந்தித்தேன். போன் செய்ததும் என்னை சந்திக்க கேரள எல்லையில் அமைந்துள்ள வேலந்தாவளம் தாண்டிய தனது சொந்த ஊரான ஒழலபதியிலிருந்து பஸ்பிடித்து கோயமுத்தூருக்கு வந்து சேர்ந்தார். டூவீலரில் உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து அவரை அழைத்துச் சென்று ரயில் நிலையம் எதிரே இருந்த கே.ஆர்.எஸ் பேக்கரியில் டீயும் கேக்கும் சாப்பிட்டபடி அவருடன் பேச ஆரம்பித்த போதே அந்த பழைய நட்பு அப்படியே அட்சரம் பிசகாமல் இருப்பதை உணர முடிந்தது. உருவத்தில் ஷாராஜ் மிகவும் இளைத்துப் போயிருந்தார் என்றாலும் எண்ணங்கள் வலிமை பெற்ற நபராக என் முன்னே அமர்ந்திருந்தார்.
தொண்ணூறுகளில் கோவை ஞானியின் நிகழ் இதழுக்கும் அவர் வ.உ.சி பூங்காவில் ஞாயிறுதோறும் நடத்திய களம் கூட்டத்திற்கும் ஒரு அதிதியைப் போல் அடிக்கடி கலந்துக் கொண்டிருக்கிறேன். அப்போது பலர் எனக்கு நட்பாகினர்.குறிப்பாக வை.கி.துறையன் என்ற பெரியவர் .திருக்குறள் அபிமானி. உள்ளத்தால் பொன்னானவர்.
இந்த களம் கூட்டத்தில் வந்த முக்கியமான சிலரில் ஷாராஜ் வித்தியாசமானவர். நிறைய விவாதிக்கக்கூடியவர். நன்றாக வாசிப்பவர். எளிதில் பழகக்கூடியவர் .
அப்போது அவர் பணியாற்றிக் கொண்டிருந்த வெரைட்டி ஹால் ரோட்டிற்கு அடிக்கடி போவேன். நிறைய டீ சாப்பிட்டபடி நிறைய பேசுவோம். காதல், காமம், இலக்கியம், ஆன்மீகம், சினிமா என எதைப்பற்றியும் ஷாராஜூடன் பேசுவது இயல்பாக இருக்கும். சந்திப்பை சாக்காக வைத்து பணம் பறிக்கும் நண்பர்களில் அவரை சேர்க்க முடியாது. ஒரு ரூபாய் கூட கேட்க கூச்சப்படுவார். என்னை மாதிரியேதான். சென்னையில் என்வீட்டிற்கும் ஷாராஜ் வந்திருக்கிறார்.சினிமாவில் எழுத வேண்டும் என்ற ஆசை அவருக்கும் இருந்திருக்கும். திடீரென வணிக ரீதியான எழுத்துக்களை எழுத முயற்சிப்பார். எல்லாமே ஒரு பரிசோதனைதான் அவருக்கு
இம்முறை சந்தித்த போது அவர் கவனம் முழுவதும் தாந்திரீகம், யோகா, ஆன்மீகம் மற்றும் அவை சார்ந்த ஓவியங்களின் பால் திரும்பி நிலைகொண்டிருப்பதை அறிந்தேன். சில மாதங்களுக்கு முன்பு சௌந்தர சுகன் இதழில் வெளியான அவர் பேட்டியிலும் ஓவியங்களைப் பற்றியே அதிகம் பேசியிருந்தார்.
வ.உ.சி பூங்கா மூடியிருந்த உச்சிவெயில் வேளையில் அருகில் இருந்த வனவிலங்குப் பூங்காவுக்குள் டிக்கட் வாங்கி நுழைந்தோம். வாடையை மறைக்க முகத்தில் கர்ச்சீப்பை கட்டிக் கொண்ட ஷாராஜ் அங்கு தனது சிறிய லேப் டாப்பில் பதித்த ஓவியங்களை எனக்குக் காட்டினார். ஓவியம் பற்றி அதிக ஞானமில்லாத நான் சில கோடுகளை மட்டும் புரிந்துக் கொள்ள முயற்சித்தேன்.
எனக்கு ரயிலுக்கு நேரமாகும் வரை பேசிக்கொண்டிருந்து விட்டு பிரிந்த ஷாராஜின் நினைவுகள் நாங்கள் சாப்பிட்ட காந்திபுரம் ஹரிபவனம் உணவின் ருசியைப் போல சென்னை வரை என்னுடன் வந்து சேர்ந்தது.
பின்னர் ஒரு பேருந்து விபத்தில் நண்பர் ஷாராஜ் படுகாயம் அடைந்து தனது காலை இழந்த துயரமான செய்தியை அறிந்து இன்றுவரை வேதனைப்படுகிறேன். கோவை அரசு மருத்துவமனையில் நானும் நண்பர் ஆர்.கே. ரவியும் சந்தித்து பேசினோம். அவரது குடும்பத்தினருக்கும் அன்பு சகோதரிக்கும் என்ன ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை. இருப்பினும் நான் பிரார்த்தனைகள் செய்தேன். ஷாராஜ் உயிருக்கு ஆபத்து நேராதிருக்க மருதமலை முருகனை வேண்டிக் கொண்டேன். அவருக்கு உதவ மனம் கோடி இருந்தாலும் பையில் சில நூறுகளே இருக்கின்றன. என்ன செய்ய.....

நான் நம்பியபடியே ஷாராஜ் மீண்டு வந்துவிட்டார் .மீண்டும் முகநூலில் அவர் பதிவுகளைக் கண்டு அளவற்ற மகிழ்ச்சியடையும் உள்ளங்களில் எனதும் ஒன்று. அவர் நீடுழி வாழவும் நலம் பெறவும் என்றும் வாழ்த்துவேன்.

Thursday, 7 April 2016

பயணம்-6 மருதமலை, கோவை




 
 மருதமலை மாமணியே முருகய்யா.....
தேவரின் குணம் காக்கும் வேலய்யா என்ற பாடல் தேவரின் தெய்வம் படத்தில் இடம்பெற்றது. மதுரை சோமு தாமே திரையில் தோன்றி பாடிய இப்பாடலை குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் எழுதியவர். கவியரசர் கண்ணதாசன்
35 வயது வரை கோவில்களுக்குச் செல்வதையே தவிர்த்து வந்த நாத்திகவாதியாகவும் மார்க்சீய ஈடுபாடு கொண்டவனாகவும் இருந்த என்னை மாற்றியதில் இந்தப் பாடலுக்கும் பங்கு உண்டு. ஓஷோவைப் படித்ததும், கம்பராமாயணத்தி்ல் திளைத்ததும் ஆன்மீக வாசலை எனக்குத் திறந்தன. மருதமலை மாமணியே முருகையா என்ற மதுரை சோமுவின் உருக்கம் என்னை தடுத்தாட்கொண்டது.மருதமலை கோவிலில் 90 களின் தொடக்கத்தில் சில நண்பர்களுடன் அதன் படிகளில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த நினைவுகள் தோன்றின. அப்போது எனது குடும்பத்தில் நிலவிய  துன்பம் தீர மருதமலை கோவிலில் வேண்டிக் கொண்ட ஒரு தோழியின் நினைவும் அலைக்கழித்தது. இம்முறை டூ வீலரில் மலைப்பாதையில் சென்றது தனி அனுபவம். சில்லிட்ட காற்றுடன் கண்ணுக்கு எட்டிய வரை திறந்த வெளியாக காட்சியளித்தது ஊர்.

 மதுரை சோமுவும் ஓஷோவும் இல்லாவிட்டால் நான் வறட்டு நாத்திகவாதியாகவே இருந்திருப்பேன் என்று நினைக்கையில் கண்ணீர் துளிர்க்கிறது. பக்தி என்பதை விட ஆன்மீக அனுபவம் என்றுதான் இதனைக் கூற விரும்புகிறேன்.

இத்திருத்தலம் பற்றிய குறி்ப்பு ஒன்றை காணலாம்.....

கோயமுத்தூரிலிருந்து 15 கிமீ தொலைவிலுள்ள மருதமலை மேல் அமைந்துள்ளது. அருணகிரிநாதரால் பாடப்பெற்ற தலமிது. இக்கோவிலின் முதன்மைக் கடவுளான முருகன் இங்கு சுப்பிரமணிய சுவாமி என்றும் தண்டாயுதபாணி என்றும் மருதாசலமூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார். மருதமலையின் அடிவாரத்தில் தான்தோன்றி விநாயகர் என்ற ஒரு சிறிய விநாயகர் கோயிலும் உள்ளது.
முருகப்பெருமானின் ஏழாவது படைவீடாகக் கருதப்படும் மருதமலை, முற்காலத்தில் கொங்கு வேட்டுவ மன்னர்களால் பராமரிக்கப்பட்டு வந்தது. மருதமலை முருகன் கோயில் தற்போது தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலமான திருமுருகன்பூண்டி கோயில் கல்வெட்டுகளில், மருதமலை கோயில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகத் தகவல்கள் உள்ளன.[1]
முருகன் கோயிலுக்கு அருகில் பாம்பாட்டி சித்தரின் குகைக்கோயில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க பதினெட்டு சித்தர்களுள் ஒருவரான பாம்பாட்டி சித்தர், இந்த குகையில் சில காலம் வசித்து வந்தார். பல மூலிகைகளின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்களைப் பற்றிய அவரது குறிப்புகள் மிகவும் சிறப்பானவையாகக் கருதப்படுகிறது.

 ( விக்கிப்பீடியா )

மருதமலை அருகிலேயே பாரதியார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
பாரதியாரில் படித்த பல மாணவ-மாணவிகள் ,துணைவேந்தராக இருந்த திரு.சிற்பி உள்ளிட்ட பலருடன் நட்பு இருந்தது. அவர்களை சந்திக்க அடிக்கடி முன்பு அங்கு செல்வதுண்டு. இதே பாரதியார் பல்கலைக்கழகத்தில் எத்தனையோ காதல் கதைகளையும் பார்த்திருக்கிறேன். இப்போதும் எதிரே உள்ள மகளிர் விடுதியிலும் சாலைகளின் நிசப்தங்களிலும் காதலர்களின் நடமாட்டத்தை காண முடிந்தது. அன்று வேறு காதலர்கள். இன்று வேறு காதலர்கள்.ஆனால் காதல் மட்டும் அப்படியே உள்ளது. கல்வி உள்ள இடமெல்லாம் காதலாக மாற்றிய மாணவர் செல்வங்களுக்கு ஒரு வார்த்தை என்னை மாதிரி கண்ணீர் சிந்தும் காதல்களை வளர்க்காதீர்கள் . தெளிவாகவும் திடமாகவும் காதலியுங்கள். வாழ்ந்தால் சாதகப்பறவைகளைப் போல் காலம் முழுவதும் இணைந்து வாழுங்கள். அல்லது நட்பின் கைக்குலுக்கல்களுடன் விலகி விடுங்கள். மன்மதன் அம்பு தைத்த இடங்களில் காயங்கள் ஆறுவதே இல்லை.

 எனனைப் போல அவளும் வந்ததுண்டா அந்த இடங்களுக்கு
அந்த கணங்களுக்கு ?


கோயமுத்தூர் முழுவதும் இரு சக்கர வாகனத்தில் சுற்றி சுற்றி வந்தேன். ரயில நிலையம், டவுண் ஹால், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட முக்கிய இடங்களுடன் எனது நினைவுகளில் தங்கிப் போன லாலி ரோட்டில் வடவள்ளி அருகே உள்ள தனபால் நூலகம், வேளாண் பல்கலைக்கழகம் அருகே உள்ள பயிரியல் பூங்கா, வ உசி பூங்கா, உ்க்கடம் பேருந்து நிலைய பழைய புத்தகக் கடைகள், கிராஸ்கட் ரோடு என இலக்கில்லாமல் எங்கெங்கோ திரிந்த போது கோவை அன்றைக்குப் பிடித்தது போலவே இன்றைக்கும் பிடிக்கிறது. கோவை மக்கள் அருமையானவர்கள். உணவோ ருசியிலும் ருசி. பேக்கரிகள் பிரமாதம். வெயில் மட்டும் தான் நினைவுகளைப் போலவும் சென்னையைப் போலவும் சுட்டது.

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...