Friday, 5 February 2016

சென்னை சர்வதேச திரைப்பட விழா 2016












குமுதம் தீராநதி பிப்ரவரி 2016 ல் வெளியான எனது கட்டுரை








சென்னை சர்வதேச திரைப்பட விழா 2016

செந்தூரம் ஜெகதீஷ்

சென்னை 13 வது சர்வதேச திரைப்பட விழாவில் இந்த ஆண்டு,57 நாடுகளைச் சேர்ந்த 184 திரைப்படங்கள் ஏழு திரையரங்குகளில் திரையிடப்பட்டன. இதில் பாலசந்தர், ஆச்சி மனோரமாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், ஊமைப்பட காமெடியன் பஸ்டன் கியூட்டன் சினிமாவின் 120 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையிலும் படங்கள் திரையிடப்பட்டன. இதுமட்டுமின்றி பாஸ்பைன்டரின் வோவரிக்கா உள்ளிட்ட 5 திரைப்படங்களும் ரசிகர்கள் பெரிய திரையில் கண்டு களிக்க திரைப்பட விழா வழி வகுத்தது. இந்தியன் பனோரமாவில் மசான், கோர்ட் போன்ற அண்மையில் வெளியான 12 முக்கி்யத் திரைப்படங்களும் தமிழ்ப்பட வரிசையில் தனி ஒருவன், தாக்க தாக்க போன்ற புதிய படங்களும் எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் தயாரித்த 11 குறும்படங்களும் திரையிடப்பட்டன.வழக்கமாக ரஜினி படமானாலும் சரி அஜித் விஜய் படமானாலும் சரி மூன்று நாட்களுக்குப்பிறகு திரையரங்கமே காலியாக இருக்கும். பத்து இருபது பேர் மட்டும் படம் பார்ப்பார்கள். ஆனால் திரைப்பட விழாவைக் காண வந்த ரசிகர்களால் திரையிட்ட ஏழு திரையரங்குகளும் நிரம்பி வழிந்தன. பல நேரங்களில் ரசிகர்கள் தரையில் அமர்ந்தும் நின்றும் படம் பார்த்தார்கள். நல்ல சினிமாவுக்கான ஏக்கமும் ஆர்வமும் ததும்பும் முகங்களில், சுகாசினி, நடிகர் ராஜேஷ், இயக்குனர் சந்தானபாரதி, எழுத்தாளர்கள், குறும்பட இயக்குனர்கள், மாணவர்கள் என பலதரப்பட்ட மனிதர்களை காண நேர்ந்தது.  பரத்பாலா, நடிகை லிசி, பத்திரிகையாளர் உதாவ் நாயக் ஆகியோர் நடுவர்களாக இருந்து சிறந்த தமிழ்ப்படங்களைத் தேர்வு செய்தனர்.முதலமைச்சர் ஜெயலலிதா இந்த திரைப்பட விழா சிற்ப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு்ம் 50 லட்சம் ரூபாய் நிதியுதவியும் அளித்தார்.

நான்  பார்த்த சில முக்கியப் படங்கள்

MOUNTAINS MAY DEPART சீனப்படம்

இது 1999ம் ஆண்டிலிருந்து 2025 வரை காலகட்டத்தை மையமாகக் கொண்ட கதையமைப்பு. ஆரம்பத்தில் முக்கோணக் காதல் கதையாக தொடங்குகிறது. தாவோ என்ற இளம் பெண்ணை இரண்டு பால்ய கால ஸ்நேகிதர்கள் காதலிக்கிறார்கள். இருவருக்கும் இடையே மோதல் வெடிக்கிறது. நிலக்கரி சுரங்கத்தை விலைக்கு வாங்கிய வசதியான நண்பனுக்காக ஏழை காதலனை நிராகரிக்கிறாள் கதாநாயகி. அவன் மனம் வெறுத்து இனி ஊருக்கே வரமாட்டேன் என்று சென்றுவிடுகிறான். அவள் தனது திருமணத்தை நடத்தினாலும் அவனுடன் மகிழ்ச்சியாக வாழாமல், விவாகரத்து செய்துவிடுகிறாள். ஒரு கேஸ் நிரப்பும் நிலையத்தை நடத்தி வசதியாக இருக்கிறாள். ஆனால் மகனை தந்தையிடம் வளர்க்க நீதிமன்றம் உத்தரவிட்டதால் புத்திர பாசத்தால் பரிதவிக்கிறாள். மகன் ஷாங்காய் சென்று விடுகிறான்.
இதனிடையே இவளது பழைய காதலன் லாங்சி திரும்பி வருகிறான். அவனுக்கும் கல்யாணமாகி விட்டது .ஒரு சிறிய குழந்தையும் உண்டு. ஆனால் மிகவும் நோய்வாய்ப்பட்ட நிலையில் பணத்துக்காக பரிதவிககும் அவனுக்கு தாவோ பண உதவி செய்கிறாள். அவன் வீட்டிலிருந்து வரும் போது அவன் வீட்டை விட்டு போகும் போது தூககிப்போட்ட அவளது திருமணப் பத்திரிகை அங்கு கிடப்பதைக் கண்டு எடுத்து வருகிறாள். அவள் தந்தை காலமானதும் இறுதிச்சடங்கின் போது மகன் தன் தாயைக் காண வருகிறான். மா என்று தன்னை அழைக்க அவள் கோருகிறாள். ஆஸ்திரேலியாவில் வளரும் அவனோ மேற்கத்திய கலாச்சாரத் தாக்கத்தால் மம்மி என்கிறான்.
தாத்தாவுக்கு அஞ்சலி செலுத்த மகனைக் கட்டாயப்படுத்தும் தாய் பாசம் என்பதும் பந்தம் என்பதும் தொலைந்து போன உறவுகளுக்கு இல்லை என்பதை நிதர்சனமாக புரிந்துக் கொள்கிறாள். அவனுக்காக அவள் ஒரு வீட்டையும் ஒதுக்கி அதன் சாவிகளை அவனுக்கு தருகிறாள். அவனை கொண்டு போய் விடுவதற்கு ரயிலில் போகும் போது இந்த ரயில் ஏன் மெதுவாக செல்கிறது. வேகமாக செல்லும் ரயிலிலோ விமானத்திலோ நாம் சென்றால் என்ன என்று மகன் கேட்கிறான். உன்னுடன் அதிக நேரம் இருக்கவே இந்த ரயிலில் டிக்கட் எடுத்தேன் என்கிறாள் தாய். திரையரங்கில் கைத்தட்டல்கள் பறக்கின்றன. பல ஆண்டுகள் கழித்து தமது பேராசிரியையுடன் நட்பு பாராட்டும் மகன் டாலர் தாயை நினைத்து உருகுகிறான். தாயின் முகம் கூட நினைவில் இல்லாத போதும் அவள் தந்த சாவிக்கொத்து அவன் கழுத்தில் ஊஞ்சலாடுகிறது. தாயை காண தமது வயது மூத்த பேராசிரியர் தோழியுடன் அவன் பெய்ஜிங் நோக்கி வருகிறான்.
இதனிடையே உறவுகளின் பிடியிலிருந்து ஏகாந்தமாக வாழப்பழகிக் கொண்ட தாய் தாவோ தனது தனிமையைக் கொண்டாடும் விதத்தில் நடனமாடுவதுடன் படம் முடிவடைகிறது. சீனாவில் முதலாளித்துவம் மெல்ல மீண்டும் ஊடுருவுவதையும் மேற்கத்திய கலாச்சாரம் தாக்குவதையும் வசதிகளுக்காக சீன மக்கள் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்தலும் உறவுகளின் நிலையற்ற தன்மைகளும் அந்நியமாதல் உணர்வுகளையும் இந்தப் படம் சித்தரிப்பதில் மென்மையான அதி்ர்வை ஏற்படுத்துகிறது.
கண்ணை விரிய வைக்கும் மலைப்பிரதேசங்கள், நிலக்கரி சுரங்கங்கள், சீனா மற்றும் ஆஸ்திரேலியாவின் நாகரீக விஸ்வரூபங்களை காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் அதற்குரிய துயரம் ததும்பும் இசையை இனிய ரீங்காரமாக தந்த இசையமைப்பாளரும் நமது
பாராட்டுக்குரியவர்கள்.

THE SUMMER OF SANGALI (  இயக்குனர் அலாண்டே கேவட்டே) லித்துவானியா படம்

இப்படம் இரண்டு இளம் பெண்களைப் பற்றியது. இருவருமே அழகானவர்கள். இருவரும் ஒருவர் மற்றவரால் கவரப்படுகிறார்கள். ஒரு நாள் இருவரும் உடல் உறவு கொள்கிறார்கள்.ஒரே பாலின உறவு சகஜமாகி விட்ட வெளிநாட்டவருக்கு இதற்கு பிரச்சினை இல்லை. நமக்குத்தான் இத்தனை ஆண்கள் ஏங்கிக்கிடக்கும் போது ஏன் இப்படி இரண்டு பெண்கள் தங்கள் யோனியை இன்னொரு பெண்ணை சுவைக்க விடுகிறார்கள் என்ற கேள்வி எழாமல் இருக்காது. திரைப்பட விழாவில் திரையிட்ட பல படங்களில் இத்தகைய சென்சார் செய்யப்படாத முழு நீள நிர்வாணக்காட்சிகளுக்கும் உடலுறவுக்காட்சிகளுக்கும் பஞ்சமே இல்லை.ஆனால் இது லெஸ்பியன் படம் அல்ல பாதிப்படம் இப்படியே போனாலும் பிற்பாதியில் படம் உயரத்திற்கு பறக்கிறது. உயரத்தை கண்டு அச்சமடையும் நாயகி சங்காலியா விமானம் ஓட்டுவதற்கு அச்சம் கொள்கிறாள். கோடையில் நடைபெறும் ஏரோநாட்டிகல் சாகச கண்காட்சி விழாவில் பங்கேற்க விரும்புகிறாள். அவளுடைய கனவு நனவாக அவளுடைய காதல் தோழி ஆஸ்டே உதவுகிறாள், அவளுடைய ஊக்கத்தால் அவள் அச்சம் தவிர்த்து உயரத்தில் பறப்பது கிளைமேக்ஸ், வாங்கிய ஊதியம் என்னவோ நாயகியாக நடித்த ஜூலிஜா அற்புதமான நடிப்பையும் சாகசத்தையும் வெளி்ப்படுத்துகிறார். நிர்வாணக் காட்சிகளில் தனது உடலை ஒரு துளிகூட மறைக்காமல் திறக்கும் அவர் பிற்பகுதியில் தனது அச்சத்தைப் போக்க உயரமான செல்போன் கோபுரங்களிலும் கட்டடங்களும் ஏறி மெய்சிலிர்க்க வைக்கிறார். இறுதியில் அவள் விமானத்தில் ஏறி பறக்கும் போது அவளுடைய கனவு நனவாகிறது.

HOW HE FALL IN LOVE ( US ) இயக்குனர் மார்க் மேயர்ஸ்

திருமணமான நடுத்தர வயதுப் பெண்ணுடன் கள்ளக்காதலில் விழும் இளைஞனின் கதை இது. ஆரம்பததில் சாதாரண உடல் இச்சைக்காக தொடங்கும் உறவு இருவரின் நெருக்கத்தால் ஆழமான காதலாகிறது. தன்னை விட இரண்டு மடங்கு வயதான கணவருடன் அவள் மனம் ஒட்டவில்லை. தன் வயதுக்கேற்ற காதலனையும் வாழ்க்கையையும் அவள் நாடுகிறாள். கணவன் ஒரு அற்புதமான மனிதர். வாள் வீச்சு கற்றுக்கொடுப்பவர். தன் மனைவி இன்னொரு இளைஞனை சந்திப்பதை அறிந்து மனம் துன்புற்று அவனுடன் பேசும் காட்சியில் உனக்கு திருமணமாகி உன் மனைவி இன்னொருவனுடன் போனால் என் வலி என்ன என்று எனக்குப் புரியும் என்கிறார். அவனுடன் கைக்குலுக்க கைநீட்டி திடீரென அவன் முகத்தில் குத்து விடும் காட்சி ஒரு கவிதை. இறுதியில் அந்த இளைஞனும் அவளும் தங்கள் உறவை நிறுத்திக் கொள்ளும் காட்சியும் கவித்துமாக முடிகிறது.

PHEONIX  ஜெர்மனி ( இயக்குனர் கிறிஸ்டியன் பெட்சோல்ட்)
திரைப்பட விழாவின் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற அற்புதமான படம் இது. அபாரமான கதையமைப்பும் திரைக்கதையும் அற்புதமான கிளைமேக்சும் இப்படத்தைப் பார்த்தவர்களுக்கு பரவச அனுபவத்தை தந்தன. முதலில் இப்படம் ஐநாக்ஸ் திரையரங்கில் ஞாயிற்றுக்கிழமை 7.15 மணிக்குத் திரையிடப்பட்டது. 5.30 மணி முதலே ரசிகர்கள் நீண்ட கியூ வரிசையில் ஐநாக்ஸ் வளாகத்தில் காத்திருந்தனர். 7.20 வரை உள்ளே அனுப்பாத ஐநாக்ஸ் நிர்வாகம் வர்த்தக ரீதியான படங்களுக்கு பார்வையாளர்களை உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தது. திரைப்பட விழாவுக்கு வந்தவர்கள் ஏதோ ஓசியில் படம் பார்க்க வந்த பிச்சைக்காரர்கள் போல நடத்தி கடைசியில் 50 பேரை கூட உள்ளே அனுப்பாமல் 170 இடங்கள் (மட்டுமே) கொண்ட அரங்கம் நிறைந்துவிட்டதாக கூறி 2 மணி நேரமாக காத்திருந்த 200 பேரை திருப்பி அனுப்பியது.ரசிகர்கள் வெளியே போக மறுத்து தர்ணா செய்தனர். கடைசியில் திரைப்பட விழா இயக்குனர் திரு.தங்கராஜ் மீண்டும் இப்படம் திரையிடப்படும் என்று உறுதியளித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர். இரண்டுநாட்களுக்குப் பிறகு மீண்டும் இத்திரைப்படம் உட்லண்ட்சில் திரையிடப்பட்டது. இப்படத்தின் கதாநாயகி ஒரு யூதக்குடும்பத்தைச் சேர்ந்தவள். 1944ம் ஆண்டு நாஜிப்படைகளால் கைது செய்யப்பட்ட அவள் கணவன் ஜானி தன்னைக் காப்பாற்றிக்கொள்ள தனதுமனைவியையும் அவள்குடும்பத்தினரையும் காட்டிக் கொடுக்கிறான். அவர்கள் இருந்த வீடு குண்டு வெடித்து தரைமட்டமாகி எல்லோரும் இறந்துவிட கதாநாயகி நெல்லி மட்டும் உயிர்தப்புகிறாள். ஆனால் அவள் முகம் சிதிலமடைகிறது. முகமாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு புதிய முகம் கொண்டு வரும் அவள் கணவருடன் பழகுகிறாள். அவளை மனைவி நெல்லி போல நடிக்கச் சொல்லுகிறான் அவன். அவள் சொத்தை தன்மனைவி உயிருடன் இருப்பதாகக் காட்டி அபகரிப்பது அவன் தி்ட்டம். தன்னைக்காட்டிக் கொடுக்கும் முன்பு அவன் தன்னை விவாகரத்தும் செய்துவிட்டதை அவள் அறிகிறாள். துரோகியான கணவனை சுட்டுக்கொல்ல அவள் துப்பாக்கியும் வைத்திருக்கிறாள் .ஆனால் அவன் மீதுள்ள தன் அன்பினாலும் காதலினாலும் அவள் அவனைக் கொல்லவில்லை. அதை விட பெரிய தண்டனையை தான் யார் என வெளிப்படுத்தி தருகிறாள். அந்த தருணம் சினிமாவின் பொற்காலங்களில் பொறிக்கப்பட வேண்டும். ஸ்பீக் லோ வென் யூ ஸ்பீக் லவ் என்ற அற்புதமான பாடலுடன் கணவர் அதிர்ந்து நிற்க திரைப்படம் முடிகிறது.


உலக சினி்மா -தனிமையில் ஆயிரம் மைல்கள் பயணம்







குமுதம் தீராநதி பிப்ரவரி 2016 இதழில் வெளியான எனது கட்டுரை இது....

உலக சினிமா
தனிமையில் ஆயிரம் மைல்கள் பயணம

செந்தூரம் ஜெகதீஷ


riding alone for thousand miles -china/japan
இயக்குனர் சியாங்-யிமோ ( XIANG YIMOU)

அன்பினால் தழைக்கும் இவ்வையகம். அன்பிலே முதன்மையானது தாய் அன்பு என்பார்கள்.ஆனால் சில குழந்தைகளுக்கு தாய் என்பவள் வெறும் பிறவி கொடுத்தவள் மட்டுமே. பாசத்துடன் தன் கண்ணில் வைத்து வளர்ப்பதென்னவோ தந்தைதான். இத்தகைய தந்தை உள்ளத்தை தாயுமானவன் என்பார்கள். ஆலயமணியில் சிவாஜி கணேசன் சரோஜாதேவியைப் பார்த்து பாடும் ஒரு பாடல் இது பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே ....இந்தப் பாட்டில் கவியரசு கண்ணதாசன் ஒரு வரி எழுதினார்.

தாய்மை எனக்கே தந்தவள் நீயே,,,தங்க கோபுரம் போல வந்தாயே என்பது அந்த வரி. ஒரு மனைவி கணவனுக்கு தாய்மை உணர்வைத் தருவது மகத்தான பரிமாற்றம். கணவனுக்கு மனைவியும் மனைவிக்கு கணவனும் முதல் பிள்ளை எனக்கூறுவதும் இதனால்தான்.

பாசத்துடன் பெற்ற உயிரை கண்ணும் கருத்துமாக வளர்ப்பதில் தந்தையி்ன் பங்கு எழுதப்படாதது. அறியப்படாதது. அனுபூதியாக அதன் ஆழம் புரிந்தவர்களுக்கு மட்டுமே தரிசனமாக ஒளி்ர்வது. இது தொடர்பான திரைப்படங்கள் அதிகமாக வந்ததில்லை. தமிழில் அபியும் நானும், தங்க மீன்கள், வெற்றித்திருமகள் போன்ற சில அண்மைக்காலப் படங்களில் தந்தையின் பாசம் பேசப்பட்டது.

குழந்தைகளையும் அவர்களின் உணர்வுகளையும் மையமாக வைத்து உலக அளவில் ஏராளமான திரைப்படங்கள் வந்துள்ளன. இதிலும் தந்தையின் பாசத்தை பிரதிபலிக்கும் படங்கள் அதிகமில்லை.

தனிமையில் ஆயிரம் மைல்கள் பயணம் என்ற இந்தப்படமும் குழந்தைகளின் உலகையும் அத்துடன் தந்தையின் பாசத்தையும் விவரிக்கிறது.

கதை இதுதான்.

தகாதா என்ற பெரியவர் தன் மகன் கென்ச்சிக்கு உடல்நலம் சரியில்லை என்ற மருமகளின் தொலைபேசி அழைப்பை அடுத்து, அவனைக்காண மருத்துவமனைக்கு செல்கிறார். ஆனால் மகன் தந்தையைப் பார்க்க விரும்பவில்லை. தன் தாயின் மரணத்திற்கு தனது தந்தைதான் காரணம் என்று மகன் தந்தையை வெறுக்கிறான். தன் மீது தவறு இல்லை என்ற தந்தையின் விளக்கத்தை அவன் ஏற்றுக்கொள்ள சிறிதும் தயார் இல்லை. இந்நிலையில் கென்ச்சிக்கு புற்றுநோய் என்றும் அதிக நாட்கள் வாழ மாட்டான் என்றும் மருத்துவர்கள் கூறிய தகவலை கூறி அழுகிறாள் மருமகள் ரியா. தனது கணவர் தொடர்பான ஒரு வீடியோ கேசட்டை அவள் மாமனாரிடம் தருகிறாள். உங்கள் மகனைப் பற்றி புரிந்துக் கொள்ள இது உதவும் என்று கூறும் அவள் தன் கணவர் தகாதாவை புறக்கணித்ததற்காக மன்னிப்பு கோருகிறாள். குடும்பத்துடன் நாம் அனைவரும் உணவருந்தும் நாளுக்காக தாம் காத்திருந்ததாகவும் அந்த நாள் இனி வரவே வராதோ என்றும் ரியா அழுகின்றாள்.

அந்த வீடியோ கேசட்டை போட்டுப் பார்க்கிறார் தகாதா.அது ஒரு கூத்துக் கலைஞனை தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக அவர் மகன் கென்ச்சி பேட்டி எடுத்த வீடியோ காட்சி. படிப்பை விட்டு சீன நாட்டுப்புறக் கலைகள் மீது நாட்டம் கொண்ட ஜப்பானிய இளைஞனான கென்ச்சி அந்த கூத்துக் கலைஞனின் தனிமையில் ஆயிரம் மைல்கள் நெடும்பயணம் என்ற கூத்துக்கலையை நிகழ்த்துவதற்கு கோருகிறான். அப்போது திருவிழா முடிந்து விட்டதால் அடுத்த ஆண்டு திருவிழாக்காலம் வந்தால் தாம் இந்த கூத்தை நிகழ்த்திக் காட்டுவதாக அந்தக் கலைஞன் கென் தகாகாரா கூறுகிறான்.

இந்த ஆண்டு திருவி|ழாக் காலம் என்பதை அறிந்த தகாதா தனதுமகனின் விருப்பத்தை நிறைவேற்ற அந்தக் நடனத்தைப் படம்பிடிக்க முடிவு செய்கிறார்.இதற்காக ஒரு டிராவல் ஏஜன்சி மூலம் மொழிபெயர்ப்பாளரையும் ரயில், வாடகைக்கார் போன்றவற்றையும் ஏற்பாடு செய்து சீனாவுக்கு செல்கிறார்.இதன் மூலம் தன் பாசத்தை தனது மகனுக்கு உணர்த்த முடியும் என்று அவர் நம்பியது வீண் போகவில்லை. தனது தந்தை தனக்காக சீனா சென்றதை அறிந்த மகன் நெகிழ்ச்சியடைகிறான்.இனி தனது தந்தை அதைப் படம் பிடிக்காமல் திரும்பி வந்தால்கூட அது முக்கியமில்லை என்றும் தனது தந்தையை தாம் மன்னித்துவிட்டதாகவும் கூறுகிறான். ஆனால் கென்ச்சிக்காக அந்த நடனத்தைப் படம்பிடித்து திரும்புவது என்று தகாதா முடிவு செய்கிறார்.

சீனாவில் அவர் தேடிச் செல்லும் நடனக் கலைஞன் கென் இப்போது சிறைக்கைதியாக மூன்றாண்டு தண்டனை பெற்று இருப்பதைஅவர் அறிகிறார். வெளிநாட்டவரான அவரை சிறைக்குள் அனுமதிப்பதும் கைதியை படம் பிடிக்க அனுமதிப்பதும் சாத்தியமே இல்லை என்று வெளியுறவு அதிகாரிகள் மறுக்கின்றனர். அப்போது தமது மகன் மரணப்படுக்கையில் இருப்பதைக் கூறி ஒரு கைதியின் நடனத்தை மட்டும் படமெடுக்க மனிதாபிமான அடிப்பைடையில் அனுமதிக்கும்படி மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் தகாதா விடுக்கும் உருக்கமான வேண்டுகோள் அதிகாரிகளின் மனதை மாற்றுகிறது. படம் எடுக்க அனுமதி கிடைக்கிறது.

ஆனால் நடனக்கலைஞனான கென் நடனத்திற்கான வேடம் அணிந்து வந்தும் அவனால் இசைக்கேற்ப ஆட முடியவில்லை. தனதுமகனை எண்ணி அவன் அழுகின்றான். உணர்ச்சி வசப்பட்டு அவன் அழுவதால் அவன் மகனை தேடி அழைத்து வர முடிவு செய்கிறார் தகாதா. மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் கென் இருப்பதால் இன்னொரு நாளில் நடனத்தைப் படம் பிடிக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

தகாதா அந்த கலைஞனின் எட்டு வயது மகனைத் தேடி ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள ஸ்டோன் வில்லேஜ் என்ற ஒருமலைக்கிராமத்திற்கு மொழிபெயர்ப்பாளனை அழைத்துக் கொண்டு பயணிக்கிறார்.

ஊர்ப்பெரியவர்களுடன் பேசி ஒரு வழியாக அந்த எட்டு வயது சிறுவனை தன்னுடன் அழைத்துச் செல்ல அனுமதி பெறுகிறார் தகாதா.மிகப்பெரிய விருந்தோம்பலுடன் அந்த கிராம மக்கள் சிறுவனை தகாதாவுடன் அனுப்பி வைக்கின்றனர்.

யாங் எட்டு வயதேயானாலும் சுறுசுறுப்பான சிறுவன். சோகமும் தனிமையும் குழந்தைப்பருவத்திலேயே கண்டவன். பாசம் அறியாத அவனது பால்ய காலத்தில் தந்தை என்பது அவனுக்கு ஒரு வெற்றுச்சொல்தான். அவரைப் பார்பபதில் அவனுக்கு ஒருவித அலுப்புதான் உண்டே தவிர ஆர்வமில்லை. வழியில் கார் பழுதாக இடைப்பட்டநேரத்தில் சிறுவன் தப்பி ஓடுகிறான். அவனைவிரட்டிச் செல்கிறார் தகாதா.அப்புறம் பார்த்தால் அவன் ஓரிடத்தில் மலம் கழிக்கிறான். அவனை அக்கோலத்திலும் இதர பல புன்னகைக் கோலங்களிலும் படம் பிடிக்கிறார் தகாதா. மலம் நாறுகிறது என்றுமொழி தெரியாமல் அவர் மூக்கைப் பிடித்துக்காட்ட சிறுவன் சிரிக்கிறான். பார்ககாதே போ என விரட்டுகிறான். இருவருக்கும் இடையில் இருந்த அந்நியத்தன்மை விலகி ஒரு வித அந்நியோன்னியம் உருவாகிறது இக்காட்சியில். ஆனால் வழி தவறி விட்டதை உணர்கிறார் தகாதா. இருவரும் ஒருவரை ஒருவர் பாசத்துடன் அணைத்த நிலையில் உறங்குகின்றனர். கென்ச்சியை இப்படி ஒரு நாளாவது மடியில் வைத்து உறங்கச்செய்தேனா என்று அவர் கண்கலங்குகிறார். சிறுவயதில் தூக்கி வளர்க்காமல் போன கென்ச்சியை இந்தக்குழந்தையின் ரூப்த்தில் காண்கிறார் தகாதா.விடிகிறது. அவருடன் வந்த கைடு ஊர் ஆட்களுடனும் போலீசாருடனும் வழிதவறிப்போன தகாதாவையும் தேடி வருகிறான், ஆள் நடமாட்டத்தை அறிந்த தகாதா தன்னிடம் மீனவர்கள் படகில் பயன்படுத்தும் விசில் இருந்ததை அறிந்து அதை எடுத்து ஊதுகிறார். நான் ஊதுகிறேன் என்று அந்தச்சிறுவன் வாங்கி பீப்பீ என விசிலை ஊதுகிறான், கைடு அவர்களைக்கண்டுபிடித்து மீண்டும் கிராமத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள்.

சிறுவன் தந்தையைப் பார்க்க விரும்பவில்லை என்பதால்தான் ஓடிப்போனான் என்று கைடு மூலமாக ஊர்மக்களுக்கு உணர்த்துகிறார் தகாதா...பயலுக இப்படித்தான் காரணமே இல்லாமே ஓடிக்கொண்டே இருப்பார்கள் என்று ஊரார் கூறுகின்றனர். ஆயினும் குழந்தையின் உணர்வுக்கு மதிப்பளித்து அவனை அழைத்துச் செல்லும் முடிவைக் கைவிடுகிறார் தகாதா.தந்தை தானாக வரும் போது வரட்டும் என்று சிறுவன் கூறியதை அடுத்து அவனை மீண்டும் ஊர்மக்களிடம் விட்டு விட்டு திரும்பிச் செல்லும் தகாதாவை புதிய பாச உணர்வுடன் பார்த்து அந்தச்சிறுவன் கண்கலங்குகிறான். மகனின் ரூபத்தில் அவனை அவர் பார்த்தது போலவே தந்தையின் ரூபத்தில் அவரைஅவன் உணர்கிறான். அவர் காரில் ஏறும் போது கையசைத்து இறங்கச் சொல்லும் சிறுவன் ஓடி வந்து அவரைக் கட்டிப்பிடித்து அழுகின்றான். அவரும் கண்கலங்குகிறார்.

ரத்த உறவோ எந்த விதமான பழக்கமோ இல்லாத குழந்தைக்கும் தமக்குமான பாச பந்தம் இது என்பதை உணர்கிறார் தகாதா. சிறுவன் யாங்கை மார்புடன் தழுவும் போது அவரது கண்களும் கலங்குகின்றன. பின்னர் பிரியா விடை கொடுத்து அவர் காரில் செல்ல விசிலை ஊதியபடியே அந்த சிறுவன் வெகுதூரத்திற்கு காரைத்துரத்தி ஓடி வருகிறான். தூரத்திலிருந்து கையசைத்து விடைகொடுக்கிறான்.

மருமகளிடமிருந்து அழைப்பு வருகிறது. கென்ச்சி இறந்துவிட்டதாக அவள் அழுதுக் கொண்டே கூறுகிறாள். இரவு கென்ச்சி தம்முடன் வெகு நேரம் பேசியதையும் தந்தையை எண்ணி உருகியதையும் அவள் விவரிக்கிறாள். இனி எதுவும் வேண்டாம் திரும்பி வாங்க அப்பா என்று கூறுகிறாள் மருமகள்.தனது தந்தைக்கு மகன் எழுதிய கடைசி கடிதத்தையும் அவள் போனில் வாசித்துக்காட்டுகிறாள்.

முகமூடி அணிந்து நடனமாடும் கூ்த்துக்கலையின் மூலம்தான் வாழ்க்கையில் நமது பாச உறவுகளுக்கு நாம் அணிவிக்கும் முகமூடிகள் குறிதது தாம் புரிந்துக் கொண்டதாக கென்ச்சி அந்தக் கடிதத்தில் குறிப்பிடுகிறான். தானும் ஒரு முகமூடியுடன் தந்தையை நெருங்க விடவில்லை என்று அவன் கூறுகிறான். முகமூடியைக் கழற்றி தனது உண்மையான முகத்துடனும் பாசத்துடனும் தனது தந்தையுடன் பேச வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் அவன் விருப்பம் பதிவாகியுள்ளது.

மகனுக்காக கண்ணீர் விடுகிறார் தகாதா என்ற அந்த தந்தை. மீண்டும் சிறைக்குச் சென்று கென் என்ற அந்தக் கூத்துக் கலைஞனை சந்திக்கிறார். மகன் கென்ச்சி இறந்துவிட்ட செய்தியை சொன்னால் கூத்துக்கலைஞன் உணர்சசி வசப்பட்டு மீண்டும் நடனமாடுவதை நிறுத்துவான் என்று கருதி அவர் கூறவில்லை. தமது மகனுக்காக படம் பிடிப்பதாக பொய் சொல்கிறார்.

மீண்டும் நடனமாடத் தயாராகிறான் கென். அவனிடம் சிறுவன் யாங்கின் மலம் கழிக்கும் படம் உள்ளிட்ட தாம் எடுத்த படங்களை காட்டுகிறார் தகாதா. யாங்கின் படங்கள் கென்னை மட்டுமல்ல, சிறையில் உள்ள அத்தனைக் கைதிகளையும் தங்கள் பிள்ளைக்குட்டிகளை எண்ணி கண்கலங்க வைக்கிறது. மிகுந்த நன்றியுடன் தகாதாவை வணங்குகிறான் கென்.

முகமூடி அணிந்து கென் ஆடும் அந்த நடனக்கூத்து நிகழ்ச்சியில் வாழ்க்கையில் உள்ள முகமூடிகளை கழற்றி அன்பில் நேர்மையாக இருங்கள் என்ற சீனப் பெருங்கடவுள் யுவானின் கொள்கையை நடனத்தில் விவரிக்கிறான் கூத்துக் கலைஞன்.

நடனத்தைப் படம் பிடித்த பின் எங்கே செல்வது என்று தெரியாமல் தனிமையில் அவர் நிற்கிறார். அவர் கண்களில் வழியும் கண்ணீருடன் படம் முடிவடைகிறது.

இந்த அற்புதமான தகாதா கதாபாத்திரத்திற்கு அபாரமான நடிப்பால் உயிரூட்டியுள்ளார் கௌச்சி என்ற ஜப்பானிய நடிகர். வாழ்நாள் முழுவதும் உறவுகளைப் பிரிந்து தனிமையில் கழித்துவிட்டு முதுமைக்காலத்தில் தனக்கு முன்பே தனது மகன் இறந்துவிட்ட துயருடன் குடும்ப பந்தத்தை அன்புக்கு அடைக்கும் தாழ்களாக உள்ள முகமூடிகளை நினைத்து அழுகிறார் தகாதா.ஈடு செய்ய முடியாத இந்த இழப்பும் தனிமையும் அவரை துயரத்தில் மூழ்கடிக்கச் செய்கிறது. பாசத்தையும் அன்பையும் வெளிப்படுத்த வேண்டியவர்களிடம் அதை செலுத்தாமல், முகமூடிகளுடன் வாழும் மனிதர்கள் காலம் கடந்து விட்டப்பிறகு அந்த அன்பைப் பகிர நினைப்பதால் என்ன பயன்? காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. மரணம் ஒருவரையும் விட்டு வைப்பதில்லை. யாரோ ஒரு அந்நியச்சிறுவனுடன் தந்தைப்பாசத்தை அறிந்த தமக்கு தமது சொந்தமகனுடன் ஏன் காலம் தோறும் பாசத்துடன் வாழ முடியவில்லை?

உலகிலேயே மிகவும் அற்புதமானது அன்புமட்டும்தான். ஒரு மனிதன் இன்னொரு மனிதன்மீது எந்த வித சுயநலமும் இன்றி செலுத்தும் அன்பு தெய்வீகமானது. அன்புதான் உலகைப் பிணைக்கிறது. சீனாவும் ஜப்பானும் பின்பற்றும் பௌத்த சமயமும் அன்பையே போதிக்கிறது. ஒரே நாளில் அந்த எட்டுவயது சிறுவனை ஆரத்தழுவி அழச்செய்தது அநத் அன்புதான்.

மகனுக்காக கென் என்ற அந்தக்கூத்துக் கலைஞனும் அவனைப் போன்ற இதர கைதிகளும் கண்ணீர் விடும் காட்சியும் அன்பினால் ஏற்படும் காயங்களையும் வலிகளையும் விவரிக்கிறது. அன்பினால் வளர்கின்றன உறவுகள், உறவுகளால் வளர்கிறது வாழ்க்கை. அன்பும் உறவும் கிடைக்காத மனிதனுக்கு தனிமையில் ஆயிரமாயிரம் மைல்கள் துயரமான பயணம்தான் வாய்க்கிறது,அவன் தேடிச்செல்வது அவனுக்குக்கிடைப்பதில்லை. அவன் எதையாவது தேடுகின்றானா என்பதும் தெரியவில்லை.

முகமூடிகளுக்குப் பின்னால் அழுகின்ற முகத்துடன் உள்ள ஆயிரமாயிரம் மனிதர்களை புரிந்துக் கொள்ளவும் அன்பைப் பகிரவும் நாம் தயாராக இல்லை. நாமும் முகமூடிகளுடன் அவர்களை அணுகி வாழ்கின்றோம்.

துயரமும் தனிமையும் நோயும் மரணமும் வாழ்க்கையை முடித்து விடும் முன்பாக அன்பை நாம் அடைந்துவிடமாட்டோமா என்ற ஏக்கத்தைப் பிரதிபலிக்கிறது இந்த அற்புதமான படம்.

அன்பினால் செழிக்கும் இவ்வையகம்.

Tuesday, 19 January 2016

அரிதினும் அரிது கேள் 24- ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒருதுளி வஞ்சமில்லை

தியாகம் படத்தில் நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு என்ற பாடல எனக்கு எப்போதும் பிடித்த மிக அழகான பாடல் . இளையராஜா இசையில் கவியரசு கண்ணதாசன் எழுதிய சில அர்த்தம் மிக்க சிவாஜி பாடல்களில் இதுவும் ஒன்று என்றாலும் இதைவிட சிறந்த பாடலை இக்கூட்டணி தரவி்ல்லை. வேண்டுமானால் கண்ணே கலைமானேவை அடுத்ததாக சேர்த்துக் கொள்ளலாம்.
தியாகம் திரைப்படம் சிவாஜியின் நடுத்தர வயதில் வந்த படம். எனக்கும் இப்போது கிட்டதட்ட அந்த வயது. சிவாஜியைப் போல என்னை அடையாளப்படுத்திக் கொள்ள எனக்கு இப்படமும் பாடலும் பலமுறை உதவியிருக்கிறது. அவரைப் போலவே சட்டையணிந்து தலையை வாரிக்கொண்டு அவர் மோட்டார் போட்டில் நின்று பாடும் அதே ஸ்டைலில் பலமுறை நானும் செய்து பார்த்திருக்கிறேன்- படகு இல்லாமலே
காதலியைப் பிரிந்த ஒருவர்- தவறாகப் புரிந்து பிரிந்து சென்ற காதலிக்கு தன்னிலை அளிக்கும் பாடல் இது.
இந்தியில் அமானுஷ் என்ற படம் உ்த்தம் குமார் என்ற அருமையான வங்காள நடிகரும் ஷர்மிளா தாகூரும் நடித்தது.இசை ஷியாம்லால் மித்ரா, இயக்கம் சக்தி சாமந்தா
 இதன் ரீமேக்தான் தமிழில் தியாகம், சிவாஜியும் லட்சுமியும் அத்தனை பொரு்த்தமாக பொருந்திப் போனார்கள்
இந்தியில் கிஷோர் குமார் பாடிய தில் அய்சா கிசி நே மேரா தோடா என்ற பாடலின் தமிழ் வடிவம் தான் நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் இரண்டு. ஆனால் கண்ணதாசனின் வரிகள் இந்தியைத் தழுவாமல் தமிழுக்கென உள்ள கவிச்சுவையையும் காவியச்சுவையையும் தந்துவிட்டது.இளையராஜா-கண்ணதாசன்-டிஎம்.எஸ்-சிவாஜி காம்பினேசனி்ல் வந்த அற்புதமான பாடல் இது

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா

நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா
நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா
பறவைகளே பதில் சொல்லுங்கள்
மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள்
மனதிற்கு மனது கொஞ்சம் தூது செல்லுங்கள்

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா

ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
மனிதனம்மா மயங்குகிறேன்
தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே
தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே

நல்லவர்க்கெல்லாம்...
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா 



இதே படத்தில்

உலகம் வெறும் இருட்டு நீ உருப்படியா ஏத்திக்கடா விளக்கு என்ற பாட்டும் டப்பாங்குத்து பாணியில் ஒரு தத்துவப்பாட்டு
ஆனால் எஸ்.ஜானகி பாடிய வசந்தகாலக் கோலங்கள் பாட்டும் ஒரு தாலாட்டும் கவிதை
வசந்தகாலக் கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்
அலையில் ஆடும் காகிதம் அதிலும் என்ன காவியம்
நிலையில்லாத மனிதர்கள் அவர்க்கும் என்ன உறவுகள்
உள்ளம் என்றும் ஒன்று அதி்ல் இரண்டும் உண்டல்லவா......

Wednesday, 13 January 2016

இந்திய சினிமா -Purab aur paschim









கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன

குமுதம் தீராநதி இதழில் ( ஜனவரி 2016) வெளியான எனது கட்டுரை

இந்திய சினிமா
கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன – PURAB AUR PASCHIM
செந்தூரம் ஜெதீஷ்
நமது சுதந்திர தினம் குடியரசு தினம் போன்றவற்றை நாம் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். நூற்றாண்டு காலம் வெள்ளையனுக்கு அடிமையாக இருந்த ரணங்களும் வலிகளும் நமது முன்னோர்கள் வழியே நமக்குத் தெரிய வந்துள்ளன.
நாட்டின் மூவர்ணக் கொடிக்கு தனி மரியாதை உண்டு . ஆனால் இந்தக் கொடியை ஏற்றுவதற்கு கனவு கண்ட மகாத்மா காந்தி முதல் மகாகவி பாரதி வரை பலரும் அந்தப் பொன்னாளுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர்.
சுதந்திர இந்தியாவில் நாம் நமது தியாகிகளை மறந்து விட்டோம். அவர்களை கேலியாக பார்க்கும் வகையில் குரூரமானவர்களாகவும் மாறிவிட்டோம். ஆனால் பாரத மாதாவின் பாதம் பணிந்து தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி வரும் படைப்பாளிகளையும் நாம் பெற்றுள்ளோம்.
அத்தகைய ஒரு படைப்பாளிதான் மனோஜ்குமார், நடிகர், பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், தயாரி்ப்பாளர், இயக்குனர் என்ற பன்முக ஆற்றல் கொண்டவரான மனோஜ்குமார் முதலில் நடிகராகத்தான் அறிமுகம் ஆனார்.
ஆலயமணி படத்தின் இந்திப் பதிப்பு ஆத்மி என தயாரிக்கப்பட்டது. அந்தப் படத்தில் மனோஜ்குமார் தமிழில் எஸ்.எஸ்.ஆர். ஏற்ற வேடத்தை எடுத்துக் கொண்டார். சிவாஜி வேடத்தில் நடித்தவர் திலீப் குமார். சரோஜாதேவி வேடத்திற்கு வகிதா ரஹ்மான்.
நீல்கமல் , வோ கோன் தீ( தமிழில் யார் நீ ) போன்ற பிரபலமான திரைப்படங்களில் நாயகனாக நடித்த மனோஜ்குமாருக்குள் ஆன்மீகச் சிந்தனையும் தேச பக்தியும் ஊறியிருந்தது. இதை அவர் இயக்கிய உப்கார் படம் மூலம் நாம் அறிந்தோம். அந்தப் படத்தில் விவசாயிகள் மற்றும் ராணுவ வீரர்களால் இந்த நாடு சுபிட்சமாக இருப்பதாக மனோஜ்குமார் தெரிவித்தார். கஸ்மே வாதே பியார் என்ற பாடலை மன்னாடே குரலில் பிரானை பாட வைத்தார். பிரான் அப்போது வில்லன் நடிகர். ஆனால் அவருக்கு குணச்சித்திரப் பாத்திரம் தந்து, பாடலையும் பாட வைத்து புதுமை செய்தார் மனோஜ்குமார். கல்யாண்ஜி ஆனந்த்ஜி இசையமைத்த இப்பாடல் தமிழில் இளையராஜா இசையில் பாலுமகேந்திராவின் நீங்கள் கேட்டவை படத்தில் ஜேசுதாஸ் குரலில் வைரமுத்துவின் வரிகளில் கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் மேகங்கள் என்று இடம் பெற்றது.
உப்கார் படத்தில் இடம் பெற்ற மற்றொரு பாடல் மேரி தேஷ் கி தர்த்தி இந்த பாடலுக்கு கோரஸ் உண்டு. இந்த கோரஸ்தான் பின்னர் மனோஜ்குமாரின் எல்லா தேசபக்தி படங்களுக்கும் தீம் மியூசிக்காக மாறியது. மனோஜ்குமாருக்கு முகமது ரபியும் முகேஷூம் பின்னணி பாடி வந்த நிலையில் புதிய பொருத்தமாக அவருக்கு மகேந்திர கபூரின் குரல் பொருந்தியது. பாரத் என்ற பெயரையும் தனது எல்லாப் படங்களிலும் தமக்கு அவர் சூட்டிக் கொண்டார்..
மனோஜ்குமார்-கல்யாண்ஜி ஆனந்த்ஜி-மகேந்திர கபூர் என்ற இந்தக் கூட்டணி அடுத்து வந்த பூரப் அவுர் பச்சிம் படத்தில் சக்கை போடு போட்டது.
இந்தப் படம் இந்தியாவை நேசிக்கிற ஒரு இளைஞனுடையது.படத்தின் தொடக்கம் கருப்பு வெள்ளையில் வெள்ளையர் ஆட்சியில் சில காட்சிகளை சித்தரிக்கிறது. சுதந்திரப் போராட்ட தியாகிகளை வேட்டையாடிய பிரிட்டிஷ் சிப்பாய்கள் மனோஜ்குமாரின் அப்பாவை தேடி வரும்போது சித்தப்பாவான பிரான் அண்ணனை காட்டிக் கொடுத்து தேச துரோகியாக மாறுகிறார். இதனால் அவருக்கு நிறைய பணம் கிடைக்க வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்கிறார். மனோஜின் தந்தை போலீசாரால் சுட்டுக் கொல்லப்படும் காட்சியுடன் ஒரு பக்தி பாடல் ஒலிக்கிறது. லதா மங்கேஷ்கர், மகேந்திர கபூரின் இனிய குரல்களில் ஒலிக்கும் இந்த பாடல் ஆரத்தி வகையை சேர்ந்தது. இன்றும் இந்தியாவில் உள்ள பல நூறு கோவில்களிலும் பல கோடி பக்தர்களின் இல்லங்களிலும் இந்த ஆரத்தியை இதன் இசையை பின்பற்றி திருப்பதி பாலாஜி முதல் சீரடி சாய்பாபா வரை பல ஆரத்தி பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
ஓம் ஜெய ஜெகதீஷ ஹரே சுவாமி ஓம் ஜெய ஜெகதீ் ஹரே
என்ற இந்த ஆரத்தி பாடலை இன்றும் ஏதேனும் ஒரு வடமாநில கோவிலில் ஒலிப்பதைக் கேட்க முடியும்.
இந்தப் பாடலுடன் சிறுவனாயிருந்த பாரத் பெரியவனாக மனோஜ்குமாராக காட்சியளிப்பான்.
இடைச்செருகலாக மற்றொரு காட்சி. பிரிட்டிஷ் கொடி கருப்பு வெள்ளையில் இறக்கப்பட்டு வண்ணத்தில் சுதந்திர இந்தியாவின் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டு ஆரத்தி தொடர்கிறது.
வெளிநாட்டில் அதாவது லண்டனில் படிக்கச் செல்லும் பாரத் அங்கு ஆங்கிலேய கதாபாத்திரத்தில் ஊறிய கதாநாயகி சாய்ரா பானுவை சந்திக்கிறான், சாய்ரா தொடை தெரிய குட்டை ஸ்கர்ட் அணிந்து நடனமாடுகிறார், பாய் பிரண்ட்சுடன் டேட்டிங் செல்கிறார். மது அருந்துகிறார். புகை பிடிக்கிறார். இந்தியாவை மனதார வெறுக்கிறார். இது அவரது தந்தையான மதன்புரிக்கு மிகவும் மனவேதனையளிக்கிறது. மகளை இந்தியப் பெண்ணாக பார்க்க அவர் ஆசைப்படுகிறார். அதற்கு பாரத் சரியான ஆளாக வந்து சேர்கிறான். அவன் லண்டன் தேம்ஸ் நதிமீதான பாலத்தின் அடியில் நின்று அங்குள்ள ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ஹிப்பிகளுக்கு ரகுபதி ராகவ ராஜாராம் பதித்த பாவன சீதாராம் என பாடல் சொல்லித் தருகிறார்.
பாரத்தின் இந்தியப் பற்றை அங்கு வாழும் தேச துரோகி பிரான் கிண்டலடிக்கிறார். இந்தியாவில் வறுமைதான் உள்ளது. வாழ்க்கை இல்லை என்கிறார் பிரான். இந்தியா இஸ் நத்திங் பட் சீரோ என்று பேச அதையே பாடலாக்குகிறார் பாரத்


இந்தியா உலகிற்கு சீரோவை தந்த பிறகுதான் உலகத்திற்கு எண்ணவே தெரிந்தது. ராக்கெட்டுகள் போகும் தூரத்தை கணிக்க முடிந்தது. என்று செல்லும் அப்பாடலில் இந்தியாவின் பெருமைகளைப் பட்டியலிடுகிறார் பாரத்
இன்றும் இந்தியாவில் ஆண்களில் ராமன் உண்டு பெண்களில் சீதை உண்டு என்று சொல்லும் போது மதன்புரி தமது மகளின் அலங்கோலத்தை கண்டு வெட்கி தலைகுனிவார்.
இந்தியாவில் அன்பு உண்டு .நாங்கள் நதிகளைக்கூட அம்மா என்றுதான் அழைக்கிறோம். கல்லைக் கூட பூஜை செய்து கடவுளாக்கி விடுகிறோம் என்று பாடும் அந்தப் பாடல் கதாநாயகியின் மனத்தையும் மாற்றுகிறது. அவர்  பாரத்தை காதலிக்க பாரத் அவரை திருமணம் செய்ய இந்தியா வர வேண்டும் என்று கோருகிறார். பாரத்தின் கோரிக்கையை ஒரு நிபந்தனையுடன் ஏற்கிறார் சாய்ரா. அதாவது ஒருமாதம் அவர் இந்தியாவில் இருப்பார் .இந்தியாவை பிடிக்காமல் போனால் பாரத் வீட்டோட மாப்பிள்ளையாக நிரந்தரமாக லண்டனுக்கு குடியேற வேண்டும். இந்தியா பிடித்துப் போனால் பாரத் சொன்னபடி அவருக்கு மனைவியாக இந்தியப் பெண்ணாக வாழ தயார் என்று கூறுகிறார். இந்த சவாலை பாரத் ஏற்கிறார். இந்தியாவை பிடிக்கவில்லை என்று யாருமே கூற முடியாது என்பது அவருடைய உறுதியான நம்பிக்கை
இந்தியா வரும் மீரா அங்கு பாரத்தை ஒருதலையாக காதலிக்கும் பாரதியை சந்திக்கிறார். பாரதி ஏழைப்பெண். ஆனால் மீராவைப் போல் தனது தூய்மையான காதலை வெளிநாட்டு பெண்ணுக்காக தியாகம் செய்கிறார்.
இந்தியாவில் குருநானக் ,அமிர்தசரஸ், காந்தி, நேரு, பகத்சிங், நேதாஜி, வாரணாசி, கங்கை நதி, இமய மலை போன்ற மகான்களையும் புனிதத் தலங்களையும் கண்டு சாய்ரா மனம் மாறுகிறார். டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார் பாடலில் மினி ஸ்கர்ட்டுடன் ஆடும் அவர் பின்னர் இந்தியப் பெண்ணாக வலம் வர புடவையுடன் தோன்றுகிறார்.

5
இறுதிக்காட்சியில் பிரானும் இந்தியா வர அவர்தான் அந்த தேசதுரோகி என தெரிய வர சினிமாத்தனமாக கிளைமாக்சுடன் ஆக்சன் காட்சிகளுடன் படம் முடிகிறது.
இப்படம் மனோஜ்குமாருக்கு மகத்தான வசூலையும் பாரத் என்ற பாத்திரத்திற்கு அபாரமான வரவேற்பையும் பெற்றுத் தந்தது. அடுத்தடுத்து அவர் இயக்கிய ரோட்டி கப்டா மக்கான் , கிராந்தி, ஷோர் போன்ற முக்கியமான அவருடைய படங்களிலும் பாரத் கதாபாத்திரம் பட்டிழைத்த பொன்னாக மின்னியது. ஆன்மீகத்திலும் நாட்டமுடைய மனோஜ்குமார் தமது படங்களில் ஓம் ஜெய் ஜெகதீஷ ஹரே ஆரத்தியை போல துர்க்கையம்மன் ஆரத்தி, விவேகானந்தரை சித்தரிக்கும் பாடல், இந்தியாவின் மகான்களை போற்றும் பாடல் என பலவகையான இனிய பாடல்களை திரையுலகிற்கு தந்தார். நேர்ததியான திரைக்கதையுடன் அவருடைய படங்கள் அபாரமான படைப்புகளாக வந்தன. பிற்காலத்தில் அவர் நடிகை மாதவியை வைத்து இயக்கிய கிளர்க் போன்ற சில படங்கள் தோல்வியைத் தழுவினாலும் பூரப் அவுர் பச்சிம், ரோட்டி கப்டா மக்கான், ஷோர் , கிராந்தி போன்ற படங்களுக்காக மனோஜ்குமாரின் பெயர் இந்திய சினிமாவின் சுதந்திரப் போராட்ட வரலாற்றுடன் சேர்ந்து பொன் எழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டும்.

பின்குறிப்பு இக்கட்டுரை தீராநதி இதழில் வெளியாகி இரண்டே மாதங்களில் மனோஜ் குமாருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருதை அறிவித்துள்ளது. 

Tuesday, 5 January 2016

மாலை நேரத்து மயக்கம் -போலியான கருதுகோள்களுக்கு பொய்யான ஆராதனைகள்

கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கிய மாலை நேரத்து மயக்கம் திரைப்படத்தைப் பார்க்கப் போனேன். தேவிபாரடைஸ் திரையரங்கின் இ  வரிசை வரை கூட்டம் இருந்தது ஆச்சரியமளித்தது. படம் பார்க்க வந்தவர்கள் பெரும்பாலோர் இளைஞர்கள், நடுத்தர வயதினர். ஓரிரு காதல் ஜோடிகளும் நடுத்தர வயது தம்பதிகளும் படத்தைப் பார்க்க வந்ததற்காக வெட்கப்பட்டு கூனி்க்கருகி மற்றவர்கள் பார்வையில் படாமல் தலைமறைவாக அமர்ந்திருந்தனர். படம் அடல்ட்ஸ் ஒன்லி என்பது மட்டுமல்ல, அடிக்கடி கக்கூஸ் வாந்தி ரத்தம் என குமட்ட வைக்கும் காட்சிகளும் வசனங்களும் நாறடித்தன.
என்ன சொல்ல நினைக்கிறார் கீதாஞ்சலி......திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது.
பெண் பாய்பிரண்ட்ஸ் வைத்திருப்பதும் டேட்டிங் போவதும் திருமணத்திற்கு முன்பே மூணாறு போய் ரூம் போட்டு ஒருவாரம் தங்கி வருவதும் தப்பு இல்லை.....
குட் போல்டான தீம் தான் ஆனால் கதாநாயகி மனோஜா கற்பிழக்காத சீதை போல் காட்டியிருப்பது ஏன்.....உன் பாய் பிரண்ட்சுடன் எந்த லெவலுக்குப் போவே,,,,,கிஸ், உரசல்...அல்லது எல்லாமே வா என பிரபு கேட்கும்போது கதாநாயகி பதிலளிக்காததே அவள் தப்பு செய்தவள் போல காட்டுகிறது.
பழக ஆரம்பித்த முதல் நாளே தொடாத ஆண் பெண் உறவு உண்டா என்ன?
கணவன் கிறுக்கன், சைக்கோ, லூசு, அழகற்ற மொக்கை பீசு என்றெல்லாம் கூறி அவன் பாலியல் பலாத்காரம் செய்யும் போது அவனை வெறுத்து ஒதுக்கி செல்லும் அவள் மீண்டும் அவனுடன் சேர்வதுதான் கதை

பாலசந்தர் பயன்படுத்திய அதே பாணி கதை....அந்த ஏழு நாட்களும் மௌன ராகமும் திருமண உறவின் புனிதத்தைப் பேசியதைத்தான் இந்தப் படம் பேசுகிறது. அன்பு காதலின் மென்மையையும் கூற முயற்சிக்கிறது. ஆனால் இதில் போலித்தனம் அதிகம். அந்த போலிமைக்கு பொய்யான ஆராதனையும் அதிகம் என்பதால் படம் சலிப்பை ஏற்படுத்துகிறது. புனிதங்களை கட்டிக் காக்க பாலசந்தருக்கு ஒரு நோக்கம் இருந்தது .செல்வராகவனுக்கும் கீதாஞ்சலிக்கும் அது அவசியம்தானா.....நடுத்தர மக்களின் பாலியல் பிறழ்வுகளையும் குடும்பங்களின் மரபுகளையும் அவற்றுக்கிடையான முரண்களையும் சொல்வதுதான் பாலசந்தரின் பாணி. கடைசியில் கணவரிடம் மனைவி திரும்பிவிடுவதும் மனைவியிடம் கணவர் திரும்பி வருவதும் அபூர்வ ராகங்கள் முதல் புதுப்புது அர்த்தங்கள் வரை அவர் பயன்படுத்திய உத்தி. இதே தான் கீதாஞ்சலியும் செல்வராகவனும் செய்திருக்கிறார்கள்.
பெண்கள் பொய்யானவர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். பேஸ்புக் காதலனுடன் மூணாறு வரும் பெண்ணும் காதலனுடன் ஆடி மது அருந்தும் காதலியும்தான் யதார்த்தம். இன்றைய பெண்களின் சீரழிவை சித்தரித்த வரையில் இப்படம் சரியான தடத்தில் செல்கிறது. ஆனால் பிரபுவின் சந்தேகத்தை தெளிவுபடுத்தி மனோஜா காதலனின் விரல் பட அனுமதிக்காதவள் என்பது போல் பாவலாக்கள் ஏன்?
படத்தின் அருமையான கண்டுபிடிப்பு நாயகி வாமிகா... அழகான பப்ளிமாஸ் நாயகி....பாக்யராஜின் வீட்ல விசேஷங்க பிரகதி, சின்னதம்பி குஷ்பூ வரிசையில் அழகான குண்டான தள தள தக்காளி போல் படம் முழுக்க வந்து மனதைக் கவர்கிறார். பாத்திரப்படைப்பில்தான் கோளாறு
இன்னொரு தளத்திற்கு ஆண்-பெண் உறவையும் திருமண உறவுகளின் போலித்தனத்தையும் கொண்டு செல்ல வாய்ப்பிருந்தும் சொல்லாமல் நழுவியதால் இப்படம் மனத்தை கவராமல் சிறிய சலனத்துடன் நின்று விடுகிறது.

Saturday, 2 January 2016

அரிதினும் அரிதுகேள் 23 நெல்லறுக்கும் சோலை ஒன்னு செல்லரிச்சுப் போனதடி.....


கிழக்கு வாசல் படம் ஆர்.வி.உதயகுமார் இயக்கியது. இதில் கார்த்திக்கை காதலித்து வேறொருவரை மணமுடிக்கும் குஷ்பூவை எண்ணி கார்த்திக் பாடுவதாக அமைந்த பாடல் பாடிப்பறந்த கிளி பாதை மறந்ததடி பூமானே.....இப்பாடலின் இடையே உணர்ச்சிகரமான காட்சிகள்....கார்த்திக்கின் தாயான ஆச்சி மனோரமாவை குஷ்பூவின் காதலை எதிர்க்கும் அவர் குடும்பத்தினர் அடித்து உதைத்து அவரை சாகடிக்க, கார்த்திக் சாவு சுமந்து செல்லும் சோகத்துடன் இழந்த காதலையும் கூறும் வேதனைப்பாடல் இது....இந்தப்பாட்டுக்கு ஆர்.வி. உதயகுமார் எழுதிய வரிகள் அபாரமானவை....அதே சமயம் பாடிய பாலசுப்ரமணியத்தின் குரல் ஒரு தேன் அமுதம். எல்லாவற்றுக்கும் மேலாக இசைஞானி இளையராஜாவின் இசையும் ஆர்க்கெஸ்ட்ராவும் பாடலை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டிக் கொண்டே இருக்கிறது. காதலின் சோகத்தை கிராமிய மொழியில் மயக்க வைக்கும் இசையில் தந்த அனைவரும் பாராட்டுக்குரியவர்கள. மறக்க முடியாத காதல் பாடல்களில் என் பிரியமான பாடலாக இது எப்போதும் நீடித்திருக்கிறது. 1990 ல் இந்தப் படம் வெளியான போது நானும் ஒரு காதலை, காதல் தோல்வியை எதிர்கொண்டதால் அந்தப் பாடல் என்மனதுக்குள் ஆழமான வடுவை ஏற்படுத்தியது.





பாடிப் பறந்த கிளி
பாதை மறந்ததடி பூமானே
ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே
கேட்காத மெட்டெடுத்து வாரேன் நானே

ஒத்தையடிப் பாதையில நித்தமொரு கானமடி
அந்த வழி போகையில காலு ரெண்டும் ஊனமடி
கண்ட கனவு அது கானாதாச்சு
கண்ணு முழிச்சா அது வாழாது
வட்ட நெலவு அது மேலே போச்சு
கட்டி இழுத்தா அது வாராது
வீணாசை தந்தவரு யாரு யாரு

சொல்லெடுத்து வந்த கிளி நெஞ்செடுத்துப் போனதடி
நெல்லறுக்கும் சோலையொன்னு செல்லரிச்சுப் போனதடி
கல்லில் அடிச்சா அது காயம் காயம்
சொல்லில் அடிச்சா அது ஆறாது
பஞ்சு வெடிச்சா அது நூலாப் போகும்
நெஞ்சு வெடிச்சா அது தாங்காது
சேதாரம் செஞ்சவரு யாரு யாரு












படம்: கிழக்கு வாசல்
இசை: இளையராஜா
பாடல்: ஆர்.வி.உதயகுமார்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

Friday, 1 January 2016

2016 புத்தாண்டு வாழ்த்துகள்

ஹாப்பி நியு இயர் என காலை முதலே வாழ்த்துகள் செல்போனில் பொழியத் தொடங்கிவிட்டன. குறுஞ்செய்திகளிலும் நண்பர்களின் அன்பு வழிந்துக் கொண்டிருந்தது. மகிழ்ச்சியும் நன்றியும்.
ஆனாலும் இந்த புத்தாண்டு இருக்கிறதே அது சுத்த ஹம்பக். ஜி.நாகராஜன் சொன்னது மாதிரி நாளை மற்றொரு நாளே.
வாழ்க்கையை இழந்து வாழவே தெரியாமல் நின்று வருமானமும் இன்றி வசதியும் இன்றி சுகங்களும் கூடிக்களித்தலும் இன்றி தனிமை, வறுமை, பொறுமை, ஆற்றாமை என வாழ்ந்துக் கொண்டிருக்கும் என் போன்ற சிலருக்கு இந்த புத்தாண்டு ஒரு அர்த்தமும் தருவதாக இல்லை. இந்த ஆண்டு கோவிலுக்கு போக ஜீன்ஸ் அணியக்கூடாது என தடைவிதிக்கப்பட்டதால் கோவிலுக்கும் போகவில்லை. நேற்று புத்தாண்டு தினத்தில் ஜீன்சும் புதுச்சட்டையும் அணிந்து சென்று அம்மா அப்பாவை வணங்கி வந்தேன். தாயிருக்கும் காரணத்தால் கோவிலுக்குப் போகவில்லை என்று சின்னத்தம்பி பிரபு போல பாடிக்கொண்டிருக்கிறேன்.
பேசாமல் கோவிலுக்குள் ஜீன்ஸ் , ஷார்ட்ஸ் அணிந்து செல்லும் போராட்டம் ஒன்றை தொடங்கலாமா என்று யோசனை எனக்கு.இதில் பெண்கள் மட்டும் ஷார்ட்ஸ் அணிய வேண்டும்.அல்லது டைட்டான லெகிங்சில் சில்லுன்னு வரவேண்டும்.

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...