Saturday, 3 October 2015

உலக சினிமா - நயாகரா- காமத்தின் அலை புரளும் வீழ்ச்சி




அழகான பெண் கூரிய கத்தியைப் போன்றவள். அவளுடைய அழகு ஆபத்தானது. அவளுக்கும் அவளை நேசிப்பவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது. உலக அழகிகளின் காதலர்கள் அல்லது கணவர்களின் நிலைமை பரிதாபகரமானது. எப்போது வேண்டுமானாலும் அவள் அவனை விட்டுச் செல்லக் கூடும். அவனை விட வசதியான அல்லது அழகான இன்னொருவனுடன் படுக்கையைப் பகிர்ந்துக் கொள்ளக் கூடும். அவனுடன் சேர்ந்து கணவரை கொல்லவும் திட்டமிடக்கூடும். பரிசுத்தமான அழகுடன் கம்பன் படைத்த சீதையைப் போன்ற பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அழகு எந்த நேரமும் அவர்களது புனிதத்தை கலைத்து விடக்கூடியது.

நிஜவாழ்வில் அழகான பெண்ணை மணந்தவனுக்கு காண்பவன் மீது எல்லாம் சந்தேகம் வருகிறது. என் மனைவியை ஏன் வெறித்துப் பார்க்கிறாய் என முறைப்பதை பார்த்திருக்கிறோம். தன்னுடைமையாக்கிக் கொண்ட பேரழகியை இன்னொருவன் பார்க்கக் கூடாது என்பது தான் அவன் எண்ணம். முஸ்லீம் பெண்கள் இன்னும் ஒரு படி மேல். முழுவதும் புர்காவால் உடலை மட்டுமின்றி கூந்தலையும் மூடிக் கொண்டார்கள். அழகு ஆண்களைப் பித்தாக்கும். தவறிழைக்கத் தூண்டும் என்பதே இதன் அர்த்தம்
கண்களை மறைத்து விட்டால் எண்ணம் மறைந்து விடுமா என்பது தனிப் பிரச்சினை
அழகின் வஞ்சகங்கள் குறித்து ஆயிரம் பேர் எழுதி விட்டார்கள். ஆயிரக்கணக்கான திரைப்படங்களும் வந்து விட்டன. அதில் ஒரு அற்புதமான திரில்லர் படம் தான் நயாகரா.
1953ம் ஆண்டு டெக்னி கலரில் இப்படம் வெளியானது. டெக்னி கலர் என்பது சினிமாஸ்கோப் வருவதற்கு முன்பாக வண்ணப்படங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம். ஈஸ்ட்மேன் கலரை விட கூடுதலாக பளிச்சென காட்சியளிக்கும் .இந்தியில் ஆன் என்ற படமும் தமிழில் வீரபாண்டிய கட்டபொம்மனும் டெக்னி கலரில் எடுக்கப்பட்டவை.

நயாகரா படத்தில் இரண்டு கதாநாயகிகள் .ஒருவர் உலகப் புகழ் பெற்றவரான பேரழகி மர்லின் மன்றோ. இன்னொருவர் மன்றோவைப் போல் அழகாக காட்சியளிக்க முயன்ற ஜீன் பீட்டர்ஸ்.இப்படத்தில் இரண்டு ஜோடிகள் கதாநாயகனாக நடித்தவர் மிகச்சிறந்த நடிகரான ஜோசப் காட்டன், ரோஸ் என்ற அவருடைய மனைவியாக நடித்தார் மர்லின் மன்றோ
மற்றொரு ஜோடி ஜீன் பீட்டர்ஸ் மற்றும் அவர் கணவராக நடித்த ஷோ வால்டர். மர்லினின் கள்ளக்காதலன் பாட்ரிக்காக நடித்தவர் ரிச்சர்ட் ஆலன்.

இப்படத்தின் இயக்குனர் ஹென்றி ஹாத்தவே. திரைக்கதை எழுதியவர்கள் சார்லஸ் பிரெக்கெட், ரிச்சர் பிரீன் மற்றும் வால்டர் ரெய்ஸ்ச் ஆகியோர். இசையமைத்தவர் சோல் காப்ளன். ஒளிப்பதிவாளர் ஜோ மெக் டோனால்ட்
மர்லின் மன்றோ முதல் சிலுக்கு ஸ்மிதா வரை பேரழகிகளின் வாழ்க்கை தடுமாற்றம் மிக்கது. அந்தரங்கமும் மர்மமும் நிறைந்தது. அவர்களின் அழகை ஆயிரமாயிரம் கண்கள் பருகி பசியைத் தூண்டிக் கொண்டிருப்பினும் ஓரிரு ஜோடிக் கண்கள் அவர்களை கொல்லவும் தற்கொலைக்குத் தூண்டவும் திட்டமிட்டு வந்தன.

மர்லின் மன்றோவின் மர்ம மரணத்தில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி வரை பலரின் பெயர் நாறியது.தூக்கமாத்திரை விழுங்கி அவரது வாழ்க்கை முடிந்து விட்டது. பல்லாயிரக்கணக்கானோரை தூங்க விடாமல் செய்த அந்தப் பேரழகு யாருக்கும் சொந்தமாகாமல் சிதறிப்போனது.

இப்படத்திலும் மர்லின் மன்றோ கொல்லப்படுகிறார். ஆனால் அதற்கு முன்னும் பின்னும் பின்னப்பட்ட திரைக்கதை நம்மை வசியம் செய்கிறது. ஒரு கிரைம் திரில்லருக்கான அடித்தளமாக காமமும் காமத்தின் கரை புரண்டோடும் உணர்ச்சி வெள்ளமும் சித்தரிக்கப்படுகிறது.

கனடா நாட்டின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான நயாகராவில் புரண்டோடி பாயும் பெருக்கை காட்டியபடி ஓடும் நீரில் மின்னும் வானவில்லின் ஏழு நிறங்களுடன் படத்தின் டைட்டில் கார்டுகள் ஓடும் போதே நாம் நிமிர்ந்து உட்கார்ந்து விடுகிறோம்.

தாமதமாகி விட்ட தேனிலவுக்காக நயாகரா வரும் ஜோடியான பாலியும் அவள் கணவர் ரேயும் அருவியை பார்க்கும் வகையில் ஓட்டல் அறையை முன்பதிவு செய்திருந்தார்கள். ஆனால் அன்று காலை அறையை காலி செய்ய வேண்டிய ரோசும் (மர்லின் மன்றோ) அவள் கணவரும் அறையை காலி செய்யவே இல்லை. தன் கணவர் மன நலம் சரியில்லாதவர் சிகிச்சை எடுத்து வருகிறார். அதிகாலை 3 அல்லது 4 மணிக்கு அருவிக்குப் போய் அலைந்து திரிந்து இப்போதுதான் வந்து படுத்து தூங்குகிறார் என்பார் மர்லின். முன்னதாக அவள் கணவர் அதிகாலை 5 மணி்க்கு அருவி அருகே நடந்து வந்து அறையில் நிர்வாணக் கோலத்தில் தூங்கும் தன் அழகான மனைவியைப் பார்த்து பெருமூச்சு விடுவார்.

இதனால் வேறு அறைக்கு கட்லர் தம்பதிகள் மாற்றப்படுகிறார்கள். அங்கேயிருந்தும் அருவி தெரியுமா எனக் கேட்கிறாள் பாலி, தெரியும் ஆனால் சூரிய வெளிச்சம் அறைக்குள் அதிகமாக இருக்கும் என்பார் ஓட்டல் சிப்பந்தி.

மர்லின் ஷாப்பிங் செல்வதாக புறப்பட தன் கணவரின் பார்வையை அவளிடமிருந்து திருப்பி அழைத்துச் செல்வார் பாலியாக நடித்த ஜீன்.

இந்த தம்பதிகள் அருவி அருகே படமெடுக்க செல்வார்கள். மனைவியை பின்னகர்ந்து போகச் சொல்லி படமெடுப்பார் கணவர் . பின்னகரும் போது தெரியும் மர்லின் இன்னொருவரை முத்தமிட்டுக் கொண்டிருப்பது. ஷாப்பிங் போன மர்லின் நிறைய பொருட்களுடன் வருவார் என நக்கலடிப்பார் ஜீன்.

ஓட்டலில் நடைபெறும் விருந்தில் தம்பதியின் அருகே மர்லின் வந்து அமர்வார். அவர் மார்பு பிளவுகள் தெரியும் லோகட் ஆடை அணிந்திருப்பார். முழங்கால்களும் தெரியும் வகையில் தொடை விளிம்பில் நிற்கும் அந்த ரோஸ் மிடியில் ஒரு தேவதை போல் வருவார் மர்லின் மன்றோ, வந்து அமருவதற்கு முன்பாக அங்கு ஓடிக் கொண்டிருக்கும் ரிகார்ட் பிளேயரில் கிஸ் ஆப் லைப் என்ற அழகான காம இச்சையைத் தூண்டிவிடும் பாடலை அவர் விரும்பிக் கேட்பார். அந்தப்பாடலின் வரிகளை முணுமுணுத்தபடி ஹம்மிங் செய்வார். இந்தப்பாட்டு உங்களுக்கு மிகவும் பிடிக்குமா என ஜீன் கேட்க பாட்டு என்றால் இதுதான் என்பார் மர்லின். இதை பார்க்கும் மர்லினின் கணவர் ஜோசப்புக்கு ஆத்திரம் வரும். தன் மனைவியின் ரகசியங்களில் ஒன்றாக விளங்கும் இந்தப்பாடலை அவர் வெறுக்கிறார். அவர் வேகமாக வந்து பாடிக்கொண்டிருக்கும் ரிக்கார்டை எடுத்து துண்டு துண்டாக உடைத்து எறிவார். அதை மர்லின் அதிர்ச்சியடையாமல் வழக்கமானது என்பது போல் ஒரு பார்வையை வீசுவார்
ரிகார்ட்டை உடைக்கும் போது ஜோசப்பின் கையை அது கீறி ரத்தம் வரும். முதலுதவி செய்ய ஜீன் ஜோசப்பின் அறைக்கு வருவார். இருவருக்கும் இடையே நட்பான ஒரு உரையாடல் தொடங்கும். தன் மீது அக்கறை கொண்ட ஒரு பெண்ணை மர்லினின் கணவர் நட்புடன் அணுகுவார். அப்போது அவர் நயாகராவை பல வண்ணங்களில் இரவு எட்டு முப்பது மணிக்கு வண்ணவிளக்குகள் ஒளிர ஜீனுக்கு காட்டுவார். அப்போது நடைபெறும் உரையாடலில் அவர் கூறுவார்

நயாகரா அழகானது மிகவும் அழகானதுதான். அருவிக்கு மேல் உள்ள நதியின் ஓட்டத்தைப் பார்த்திருக்கிறாயா....அது அமைதியானது. ஆரவாரம் செய்யாதது. ஒரு மரத்துண்டை தூக்கிப் போட்டால் அதுபாட்டுக்கு மிதந்து செல்லும். அலைகள் அதை தாலாட்டிக் கொண்டே அழைத்துச் செல்லும். ஆனால் வழியில் ஒரு பாறை மோதிவிட்டால் அது அலையின் ஓட்டத்தை விட்டு ஆர்ப்பரிக்கும் அலைகளின் மேற்பரப்பிலிருந்து உள்பரப்புக்குள் மூழ்கி, உள்ளே தடம் புரண்டு ஓடும் நீரின் ஓட்டத்தில் சிக்கிக் கொள்ளும் .நீ்ர் விழக்கூடிய பகுதியை நோக்கி போகும். அப்போது கடவுளே நினைத்தால் கூட அதன் வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியாது.

நயாகராவின் நீரோட்டமே நமக்கு மர்லினின் கதையை சொல்லி விடுகிறது. மர்லின் தனது காதலன் பாட்ரிக்குக்கு போன் செய்து அழைக்கிறாள். நாளை கதையை முடித்து விட வேண்டும்.இன்று ரிக்கார்டை உடைத்து எல்லோர் முன்னாலும் அசிங்கப்படுத்தி விட்டார் எனக் கூறுவார். நாளை அவரை ரெயின்போ குகைக்கு அழைத்து வா. அங்கே நான் கவனித்துக் கொள்கிறேன் என்பான் பாட்ரிக். சொல்லி போனை வைத்து அவன் படுக்கைக்கு போகும் போது கேமரா அவன் அணிந்துள்ள வெள்ளயும் கருப்பும் கலந்த ஷூக்களைக் காட்டுகிறது.

ரெயின்போ கோபுரம் என்றழைக்கப்படும் குகையும் அதன் மரப்படிகளுடனான கோபுரமும் 165 அடி உயரமானது.அதில் கரோலின் எனப்படும் இசைக்கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும்.அதற்கான கீ போர்டும் இருக்கும். விரும்பிய பாடலை அதில் ஒலிக்கச் செய்தால் நகரம் முழுவதும் அந்த இன்னிசை ஒலிக்கும்.55 மணிகள் மர பேட்டன்களுடன் ஒலிக்கும் வகையில் கீ போர்டு அமைக்கப்பட்டது.30 கால் பெடல்களும் உண்டு. மொத்தம் 43 டன் எடை கொண்ட இவை எழுப்பும் இசை நாதம் தேனானது.

மறுநாள் காதலனை சந்திக்கும் போதும் அவள் அந்த பாடலின் ஹம்மிங் மூலம் அவன் இருப்பதை அறிகிறாள். அந்த இசை அவளை மயக்குகிறது. மர்லினுக்கு அவன் ஒரு துண்டுச்சீட்டை தருகிறான். அதில் கதையை முடித்ததும் நமக்குப் பிடித்தமான கிஸ் ஆப் லவ் பாடலை ரெயின்போ குகைக்குள் ஒலிக்கும் மணிகளில் ஒலிக்க செய்கிறேன் . புரிந்துக் கொள் என்று அதில் எழுதியிருப்பான்.

ஆனால் கதை மாறுவது இங்கேதான். காதலனை கணவர் கொலை செய்து விடுகிறார். மனைவியை ஏமாற்ற அந்த மணியில் அவளுக்குப் பிடித்த பாட்டையும் ஒலிக்க செய்கிறார். இறந்தது தான்தான் என நம்ப வைக்க காதலனின் ஷீவை இவர் அணிந்து தனது ஷீவை அவனுக்கு அணிவிக்கிறார்.

மணியில் ஒலிக்கும் தனக்கு பிடித்த பாட்டை முணுமுணுக்கும் மர்லின் காரியம் காதலனால் கச்சிதமாக முடித்து விட்டதாக புன்னகை புரிவார். ஆனால் கணவரின் உடலை அடையாளம் காண அழைத்துச் செல்லப்படும் அவர் இறந்தது கணவரல்ல காதலன்தான் என அறிந்து அதிர்ச்சியில் மயங்கி விழுவார். அவர் நினைவுகளில் அந்த மணிகளும் அந்தப் பாடலும் ஒலித்துக் கொண்டே அவரை வாட்டி வதைக்கும்.

இதனிடையே ஜீன் மர்லினின் கணவரை பார்த்து ஓடுவார். அவரை மடக்கிப் பிடித்து தான் இறந்தவனாக இருக்க விரும்புவதாக கூறுவார் ஜோசப். போலீசில் காட்டிக் கொடுக்காதே என கெஞ்சுவார். ஆனால் ஜீன் போலீசுக்குத் தகவல் சொல்லி விடுகிறாள்.

சுயநினைவு திரும்பும் மர்லின் மன்றோ தனது கணவர் தன்னைப் பின்தொடர்வதை அறிந்து தப்பி ஓடும் போது மீண்டும் ரெயின்போ குகைக்குள் மாடிப் படிகளில் ஏறிச் செல்வார் .ஜோசப்பும் அவரைக் கொல்லும் வெறியுடன் பின்தொடர்வார். ரெயின்போவின் காவலாளி கதவைப் பூட்டிச் சென்று விடுவார். தனியாக சிக்கிக்கொள்ளும் மர்லினை அவள் கணவர் கழுத்தை நெறித்துக் கொல்கிறார்.அப்போது அந்த மணிகளில் எந்தப் பாடலும் ஒலிக்காமல் அவை மௌனமாக இருக்கும்.
மர்லினின் உடல் சாய வெளியே செல்ல முயற்சிக்கும் அவர் கதவு பூட்டப்பட்டிருப்பதால் மீண்டும் தன் அழகான மனைவியின் உடலருகே வந்து தான் அவளை அளவு கடந்து நேசித்ததை வெளிப்படுத்துவார். அப்போது அவள் லிப்ஸ்டிக் ஒன்று அவள் அழகின் விஷத்தன்மையை விவரிக்கும் வகையில் அவர் கையில் கிடைக்கும்.

காலையில் கதவு திறந்ததும் தப்பிச் செல்லும் ஜோசப் ஒரு படகைக் களவாடி நயாகராவில் பயணிக்க திட்டமிடும் போது தற்செயலாக அந்தப் படகில் ஜீன் வந்து அமர்கிறாள். தற்கொலை உணர்வுடன் படகை உடைத்து வெள்ளத்தில் அதை மூழ்கடிக்கத் திட்டமிடும் ஜோசப் கடைசி கட்டத்தில் ஜீனை ஒரு பாறையில் தள்ளிவிட்டு விடுவார். பாறையில் தொற்றிக் கொள்ளும் ஜீன் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட கடவுளால் கூட தடுத்து நிறுத்த முடியாத வெள்ளப்பெருக்கில் ஜோசப்பின் படகு தடம் புரண்டு அருவியில் விழுந்து காணாமல் போகும்.

நயாகராவும் மர்லின் மன்றோவும் இப்படத்தின் இருபெரும் அழகுச்சித்திரங்களாக நம் கண் முன்னே தவழுகின்றனர்.அழகும் ஆபத்தும் ஒருசேர இருக்கும் அஃறிணையாக நயாகரா நம் முன்னே கொட்டிக் கொண்டே இருக்கிறது. படம் முழுக்க பாத்திரங்களுடன் இதனைப் பொருத்தி பொருத்தி அவர்களின் உணர்ச்சி வெள்ளத்திற்கேற்ப இது தணிந்தும் ஆர்ப்பரித்தும் நமக்கு ஒரு குறியீடாக காட்சியளிக்கிறது.

இப்படத்தில் ஜீனுடன் மர்லினின் கணவர் பேசும் காட்சியில் தன் மனைவி ஆடை அணியும் விதத்தை அவர் குறை கூறுவார். அழகை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறாள் என்பார். அவர் அழகானவர்தானே வெளிப்படுத்தட்டுமே என்பார் ஜீன். முழங்கால் தெரியும் அந்த ஆடையை நீ அணிவாயா என்று கேட்பார் ஜோசப். நான் அந்தளவுக்கு அழகியும் இல்லை நாகரீகமானவளும் இல்லை என்று பதிலளிப்பார் ஜீன். அவள் ஒரு தறுதலை என ஆத்திரத்துடன் ஜோசப் கூற அதை ரசிக்காமல் ஜீன் அவனுடைய ஆணாதிக்க மனோபாவத்தை கோபத்துடன் காண்பாள்.

இந்த ஒரு காட்சிதான் படத்தை சாதாரண கிரைம் கதையிலிருந்து இலக்கியத்தரமான படமாக மாற்றுகிறது. ஹிட்ச்காக்கின் திகில் படங்களும் அகிரா குருசோவாவின் படங்களும் எப்படி சாதாரண மாத நாவல் தரத்திலான கிரைம் கதைகளாக கூறப்பட முடியாதவையோ எப்படி தாஸ்தேயவஸ்கியின் குற்றமும் தண்டனையும் போன்ற கதைகள் குற்றத்தின் தன்மையை அலசுகின்றனவோ அதைப் போல் இந்தப் படமும் கொலைக் குற்றம் புரியும் ஒரு அழகியின் கணவரது நிச்சயமற்ற தன்மை கொண்ட மனநிலையை பிரதிபலிக்கின்றன. ஒவ்வொரு குற்றத்தின் பின்னணியிலும் ஒரு புறக்கணிப்பு ஒரு காயம் ஒரு துன்பம் ஒரு வலி மறைந்திருக்கிறது. அழகிய பெண்களின் கணவன்மார்களுக்கு துரோகத்தின் வலியாகவும் இது இருக்கக் கூடும்.
குமுதம் தீராநதி அக்டோபர் 2015 ல் அச்சான கட்டுரை இது.


Thursday, 1 October 2015

சந்திப்பு 5 டி.ஆர்.சுதா




இருபதுவயதில் நான் இந்தியா சில்க் ஹவுஸ் என்ற ஜவுளிக்கடையில் பணி புரிந்த காலங்களில் என் வீட்டிலிருந்து அண்ணா சாலை செல்ல 28 சி என்ற பேருந்து வரும். அது திருவொற்றியூரிலிருந்து காயிதே மில்லத் வரை செல்லும் பேருந்து. காலை 9 மணி்க்கு நான் வேலைக்குப் போகும் நேரத்தில் அந்தப் பேருந்தில் கல்லூரி மாணவிகள் நிரம்பியிருப்பார்கள், கிட்டதட்ட புட்போர்டில் தொற்றிக் கொண்டே செல்வேன்.பெண்களுடன் பேசுவதில் இயல்பாகவே கூச்சம் இருந்தாலும் பார்க்க பரவசம் தரும் காட்சி அது. மரத்தடியில் மாணவிகள் அட வேர்களிலுமா பூக்கள் என்றொரு ஹைகூவை எனக்குள் படைத்தவை அந்த பேருந்து மற்றும் கன்னிமாரா நூலக மரத்தடி அனுபவங்களே.


ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பதை வழக்கமாக வைத்திருப்பேன். என் கடையில் புத்தகத்திற்கு அனுமதி கிடையாது. உழைக்க வேண்டிய நேரத்தில் ஊழியர் புத்தகம் படிப்பதை எந்த முதலாளிதான் ஏற்றுக் கொள்வான்?ஆனாலும் நான் முதலாளித்துவ எதிர்ப்பு சிந்தனைகளுடன் மார்க்சீயம் படித்துக் கொண்டிருந்தேன். அதனால் ஒரு எதிர்ப்புணர்வுடன் தினம் ஒரு புத்தகத்தை கடைக்கு கொண்டுசெல்வேன். அதனால் பலமுறை பல வாக்குவாதங்களையும் அவமானங்களும் நேர்ந்தன.

அன்று நான் கையில் ஜெயகாந்தனின் உண்மை சுடும் என்ற சிறுகதைத் தொகுப்பை வைத்திருந்தேன். கூட்டம் அதிகமாக இருந்ததால் என்னால் படிக்கட்டில் சமாளிக்க முடியவில்லை. பொதுவாக படியில் பயணிப்பதை தவிர்ப்பவன் நான். படியில் பயணம் நொடியில் மரணம் என்பதுமட்டுமல்ல, அப்போது பெரியமேடு, சிந்தாதிரிப்பேட்டை போன்ற இடங்களில் போலீஸ்காரர்கள் பிடித்து அபராதம் போடுவார்கள். அது கிட்டதட்ட என் பத்துநாள் சம்பளம்.

அன்று நான் உள்ளே போய்விட முயன்ற போது என் கையில் இருந்த புத்தகம் நழுவி ஒருமாணவியின் மடியில் விழுந்தது. பாவாடை தாவணியும் புன்னகை நிறைந்த முகமுமாய் இருந்த அந்தப் பெண் அதை எடுத்து படிக்க ஆரம்பித்து விட்டார். நான் இறங்க வேண்டிய நேரத்தில் புத்தகத்தை கேட்ட போது நாளைக்கும் இதே பஸ்ஸில் இதே டைமில் வருவேன் நாளைக்கு வாங்கிக்கங்க என்ற நட்புடன் கூறிய போது என்னால் மறுக்க முடியவில்லை


தொடர்ந்து பலநாட்கள் சுதாவும் நானும் பேருந்தில் சந்திப்பதும் சிறிய புன்னகை, புத்தகப் பரிமாற்றத்துடன் எங்கள் நட்பை வளர்த்தோம். ஒருநாள் கடைக்கு வந்தார். உடன் சில மாணவிகள்.

லீலாகுமாரி, சீதா என சில பெயர்கள் மட்டும் நினைவில் உள்ளன

பிறகு சுதா வீட்டிற்கு நானும் என் நண்பர்களுடன் செல்வதும் என் வீட்டுக்கு சுதா தன் நண்பர்களுடன் வருவதும் வாடிக்கையாகி விட்டது. அப்போது நான் கவிதைகள் எழுதி மு.மேத்தா, பழனிபாரதி அறிவுமணி, இன்குலாப் போன்ற கவிஞர்களுடன் பழகிக் கொண்டிருந்தேன். புலவர் புலமைப்பித்தனின் உதவியாளராக இருந்த புலவர் சங்கரலிங்கம் தலைவராகவும் நான் செயலாளராகவும் நரசிம்மமூர்த்தி பொருளாளராகவும் செந்தூரம் இலக்கிய வட்டம் என்ற அமைப்பை உருவாக்கி கவியரங்குகள், கருத்தரங்குகள் நடத்தினோம். முதலில் வீட்டிலும் பிறகு தேவநேய பாவாணர் நூலகத்தின் சிறிய அரங்கிலும் ரஷ்ய கலாச்சார மையத்திலும் எங்கள் கூட்டங்கள் நடைபெற்றன.


சுதாவின் குடும்பத்தினரும் என்னை மதித்தார்கள். அக்கா பிரபாவதி, அம்மா, அப்பா, அண்ணன் நாராயணன் போன்றோர் ஆண் பெண் நட்பை பாவமாக கருதவில்லை. இலக்கிய நட்பு என்பது ஒருவகை platonic relationship( பாலியல் உறவு கலக்காத அறிவார்ந்த நட்பு ) என்பதை அவர்கள் புரிந்துக் கொண்டவர்கள்.
இளம் வயது அழகான கல்லூரி மாணவி என்பதெல்லாம் பாலியல் உணர்வைத் தூண்டக்கூடிய விஷயங்கள் அல்ல என்று அந்த சிறிய வயதிலேயே நான் புரிந்துக் கொண்டேன். சுதா மீது மதிப்பும் மரியாதையும் கூடியது.
சுதா உலக ஒளியை மணம் முடித்தார். இதனால் வீட்டை விட்டு விலகினார். நாங்களும் அவரை சந்திக்க முயன்று அது மெதுவாக குறைந்தது. கிட்டதட்ட 25 வருடங்களுக்குப் பிறகு பேஸ் புக் மூலம் உலக ஒளி எனது இந்த இணைய வலை பக்கம் படித்து விட்டு என்னை கண்டு பிடித்தார்.
வசந்த் என்ற மகனை பறிகொடுத்த துயரம் நிரம்பிய புதிய சுதாவை நாங்கள் அண்மையில் சந்தித்தோம்.டெல்லியில் குடியேறிய அவர் இரண்டு முறை சென்னை வந்து என் வீட்டுக்கும் வந்திருந்தார். மகனின் துயரத்தை அழுதும் தீர்க்க முடியாத அவரால் அதே நட்புடன் பழக முடிந்தது சற்று ஆறுதலாக இருந்தது. தனது ஆங்கில நாவல் திருடப்பட்டது உலக சினிமா, சினிமாவுக்கு திரைக்கதை வசனம் எழுத ஆசைப்படுவது உள்பட பல விஷயங்களை இன்று வரை பேசிக் கொண்டிருக்கிறோம்.


சமீபத்தில் தொலைபேசியில் சுதா பேசும் போது, உங்களுக்கு மூச்சு வாங்குகிறது என்று கூறிய பிறகுதான் என்னுள் ஏதோ ஒரு நோய் உருவாகியிருப்பதை புரிந்துக் கொண்டேன். வீட்டருகில் இருந்த மருத்துவர் சொக்கலிங்கத்தை சந்தித்த போது இதய நோயாக இருக்கலாம் என எச்சரித்தார். உடனடியாக நீரிழவு, இதய பரிசோதனை செய்துக் கொள்ளும்படி அறிவுறுத்தினார்.
உடனடியாக அமைந்தரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சோதனைகள் செய்ததில் பல ஆயிரம் ரூபாய் போனது ஆனால் பேராபத்திலிருந்து தப்பி விட்டேன். தொடக்க நிலையிலேயே என் உடல் ஆரோக்கியம் குறித்த கவனம் எழுந்து சிகிச்சை பெறத் தொடங்கி விட்டேன்.













Tuesday, 29 September 2015

சந்திப்பு - 4 மு.ஹரிகிருஷ்ணன்





பேராசிரியரும் எழுத்தாளருமான திரு மு.ஹரிகிருஷ்ணன் பற்றி கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட அனுமன் வார்ப்பும் வனப்பும் என்ற நூல் மூலம் அறிந்தேன்.
பொதுவாக சிறுவயது முதலே விஷ்ணுவின் தசாவதாரங்கள் மீது ஒரு காவிய மயக்கம் கொண்டவன் நான். அதிலும் ராமன், கிருஷ்ணன் ஆகிய இரண்டு அவதாரங்களும் ராமாயணம், மகாபாரதம் ஆகிய இருபெரும் காப்பியங்களுடன் தொடர்பு கொண்டவை என்பதால் இந்த பாத்திரங்கள் மனதை விட்டு அகலாதவை. அதில் ராமாயணத்தில் ராமனுக்கு தோழனாக வரும் அனுமனின் பாத்திரமும் அலாதியானது. இதுவரை உலகில் படைக்கப்பட்ட கதாபாத்திரங்களில் அனுமனைப்  போல் ஒரு பாத்திரமில்லை என்று ஹரிகிருஷ்ணன் குறிப்பிடுகிறார். அவரது புத்தகம் வாசிக்க வாசிக்க ஆன்மீகத்தைத் தாண்டி கம்பனின் தமிழ்ச்சுவையுடன் எனக்கு அன்பு, அறிவு, பணிவு, அடக்கம், ஞானம்,சேவை,மனத்தூய்மை உள்ளிட்ட ஏராளமான பண்புகளைக் கற்றுத் தந்தது.ஹரிகிருஷ்ணனின் தீவிர தேடலும் ஆய்வும் கம்பராமாயணத்தில் திளைத்த அவரது மேதைமையும் என்னை புத்தக வாசிப்பின்போது பல இடங்களில் அழவைத்தன. அனுமனும் லட்சுமணனும் பேசும் இடம், அனுமனும் குகனும் சந்திக்கும் இடம், அனுமனும் ராமனும் சந்திக்கும் இடம், அனுமனும் பரதனும் சந்திக்கும் இடம் என கம்பராமாயண்த்தின் காட்சிகளை அவர் விவரித்தது போல் யாரும் விவரித்ததில்லை. அத்தனை உணர்வுப்பூர்வமாகவும் இலக்கியச் சுவையுடனும் டிகேசி கூட கூறியதில்லை.
இந்தப் புத்தகத்தைப் படித்த வேகத்தில் 2011ம் ஆண்டில் குங்குமம் பத்திரிகைக்கு ஹரிகிருஷ்ணன் அவர்களைப் பேட்டியெடுக்க அனுமதி பெற்றேன். என் சொந்த செலவிலேயே பெங்களூர் சென்று அவர் வீட்டை  தேடிப்பிடித்து ஒரு மழைக்கால மாலையில் ஆட்டோவில் போய்ச்சேர்ந்தேன். சுவையான காபியுடன் உபசரித்து அவர் பேசினார். புத்தகத்தில் இருந்த கனிவு அவரது பேச்சிலும் இருந்தது.
மிகப்பெரிய மேதைமை மிகவும் அடக்கமும் அமைதியும் கொண்டிருக்கும் என்பதை அனுமனிடமிருந்து மட்டுமல்ல திரு ஹரிகிருஷ்ணனிடமிருந்தும் நான் கற்றுக் கொண்ட தருணம் அது.
சில காரணங்களால் அந்தப் பேட்டி குங்குமம் இதழில் இடம் பெறவில்லை, கதாகாலட்சேபம் மாதிரியிருக்கு என நிராகரிக்கப்பட்டது. அதை இப்பகுதியில் இணைக்கிறேன். நீங்களே படித்து விட்டு முடிவு செய்யுங்கள்.




Friday, 18 September 2015

ஈழப் பெண் கவிஞர் ஔவை கவிதைகள்

ஔவை-யின்
எதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை - கவிதைகள்
வெளியீடு காலச்சுவடு




வழக்கமான ஈழக்கவிதைகள் என நினைத்துப் படிக்க ஆரம்பித்தால் வேறு ஒரு தளத்தில் ஔவையின் கவிதைகள் பயணிப்பது புரிகிறது. காதல், காமம், அன்பு, பிறந்தமண் மீதான பாசம், புலம் பெயர்தலின் போது ஏற்படும் குற்ற உணர்வு போன்ற நுட்பமான பதிவுகளாலும் எளிய வரிகளாலும் ஒரு இனிய ஸ்நேகிதியைப் போல் தன் உலகிற்குள் அழைத்துச் செல்கிறார்.
உண்மையாய் இரு அதுவே காதல் என்று ஓரிடத்தில் கூறும் இவர் இன்னொரு இடத்தில் அன்பால் நிரம்பியது என் இதயம். அன்பைத் தேடு பூவாய் மலர்வேன் என்கிறார்.
நூலிழை, சொல்லாமல் போகும் புதல்வர்கள், விஜிதரன் நினைவாக, இப்பொழுதே முத்தமிடு, ராஜினி உன்னிடம் என்ன குற்றம் கண்டனர்?,வீடு திரும்பிய என் மகன், கலியாணம், தாயின் குரல், என்னுடைய சிறிய மலர், மீள் வருகை 2 ,மீதமாக உள்ள வாழ்வு போன்ற கவிதைகள் ஆழமும் நுட்பமும் கொண்டவை. வாசக அனுபவத்தை மேன்மைப்படுத்துபவை.

தமிழ் இந்து நாளிதழ் 12-09-2015 இதழில் இப்போது படித்துக் கொண்டிருப்பது பகுதியில் அவ்வையின் கவிதை பற்றி எழுதிய குறிப்பையும் படிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்




Monday, 7 September 2015

துணிவே துணை – பால்ய கால நினைவுகளுடன் ஒரு திரைப்படம்







துணிவே துணை என்று கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன் குறிப்பிடுவதுண்டு. அவருடைய சங்கர்லால் துப்பறியும் நாவல்களைப் படித்து வளராத மேதைகள் அரிது.எனது பள்ளிப்பருவத்திலும் தமிழ்வாணனின் கதைகளும் துப்பறியும் திரைப்படங்களும் மனதுக்கு நெருக்கமாக இருந்துள்ளன.
வணிகரீதியான திரைப்படங்களைப் பற்றி சினிமா ரசனை மிக்க யாரும் பேசுவதும் எழுதுவதும் இல்லை. அது கௌரவக் குறைவு அல்லது தங்கள் அறிவுக்கு இழுக்கு போலவும் எண்ணுகின்றனர். இத்தாலிய ஜெர்மனிய படங்களைப் பற்றி பேசுவது ஒரு பேஷன் ஆகி விட்டது. எனது நண்பர் இயக்குனர் சூர்யராஜன் சத்யஜித்ரே, ட்ரூபோட், பெலினி போன்ற பெயர்கள் எல்லாம் கெட்ட வார்த்தைகள் என்று எண்பதுகளில் கூறுவார். அப்போதைய திரைப்பட உலகம் அப்படி இருந்தது. ஆனால் இன்று எல்லா உதவி இயக்குனர்களும் உலகப்படங்களைப் பார்ப்பவர்களாக இருக்கிறார்கள். பிரபல இயக்குனர்களும் அத்தகைய உதவி இயக்குனர்களையே விரும்புகிறார்கள்.
தமிழ் சினிமாவின் நீண்ட நெடிய வரலாற்றிலிருந்து அற்புதமான வணிகப்படங்களில் பத்து படங்களைப் பற்றி கூட ரசனையுடன் பேசத்தெரியாத பல இயக்குனர்கள் தாம் இன்று வணிக ரீதியான ஒரு தமிழ்த்திரைப்படத்தை எடுத்துவிடத் துடிக்கிறார்கள்.
துணிவே துணை என்ற வணிக ரீதியான படத்தை பற்றி எழுதும் போது இந்த எண்ணங்களுடன் எழுதுகிறேன்.
மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் இரட்டை வேடத்தில் நடித்த துப்பறியும் கதைதான் இது. தமிழ்வாணனின் தலைப்பை பெற்று தயாரானது. ஆனால் கதை தமிழ்வாணனுடையது அல்ல. பஞ்சு அருணாசலம் தான் கதை வசனம்,பாடல்கள் கண்ணதாசன், இசை மெல்லிசை மன்னர் எம்.எஸ் விஸ்வநாதன். ஜெய்சங்கர், தெலுங்கு நடிகை ஜெயப்பிரபா, அசோகன், விஜயகுமார், சுருளிராஜன், ராஜசுலோசனா, அபர்ணா ஆகியோர் நடித்தது. தயாரிப்பாளர் பி.வி.தொளசிராமன். இயக்குனர்.எஸ்.பி.முத்துராமன்
1976ல் இப்படம் வெளியானது. டிவிடியில் இப்போதும் பார்க்கலாம். இப்படம் வெளியான போது நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்.மாலையில் பள்ளி விட்டதும் நண்பன் சேகர் சினிமாவுக்கு அழைப்பான். அநேகமாக நாங்கள் பார்த்த படங்களையே மீண்டும் மீண்டும் ஆறு ஏழு தடவை பார்ப்போம். ரகசிய போலீஸ் 115, ஒரு தலைராகம், மன்மத லீலை, அன்னக்கிளி போன்ற அத்தகைய படங்களின் வரிசையில் துணிவே துணையும் இடம் பெற்றது. சென்னை புவனேசுவரி திரையரங்கில் ஒரு ரூபாய் அல்லது 2 ரூபாய் டிக்கட்டில் இந்தப் படத்தை நாங்கள் ஏழு தடவை பார்த்தோம். படத்தின் வசனங்கள் மனப்பாடமாகிவிட்டன. நான் ஒரு வசனம் பேச சேகர் ஒரு வசனம் பேச இருவரும் படத்தின் காட்சிகளுடன் ஒன்றி விடுவோம்.
கதை மாத நாவல் டிடெக்டிவ் கதைதான். படத்தின் ஆரம்ப காட்சியில் போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பொன்வயல் கிராமத்தில் கடந்த 12 ஆண்டுகளாக ஒரு குற்றமும் நடக்கலே. அந்த ஊர்மக்கள் காளியம்மனுக்கு பயந்து ஒழுக்கமா இருக்காங்க,
இதுபோன்ற கதைகள் ஒவ்வொரு கிராமத்திலேயும் இருக்கு
ஆனால் பொன்வயல் கிராமத்திலே சற்று அதிகமா இருக்குது. ஒண்ணுமில்லை, ஒண்ணுமில்லைன்னு ரெண்டு தடவை சொன்னா அதுல ஏதோ இருக்குன்னுதான் அர்த்தம்…..
ரகசிய போலீஸ் அதிகாரியான விஜயகுமார் அந்த கிராமத்தில் நடைபெறும் மர்மங்களை கண்டறிய செல்கிறார். ரயிலில் ஒருமொட்டை வில்லன் ஏறுகிறான். நாங்கள் மனப்பாடம் செய்த வசனங்கள் இதோ
என்னடா ஓடுற ரயிலில் ஏறுறான்னு பார்க்கறீயா....அது எனக்கு பொழுது போக்கு…..ஆமா நீங்க எங்கே போறீங்க
பொன்வயல் கிராமத்திற்கு போய் வரலாம்னு இருக்கேன்
நல்ல ஜோக். அங்கே போனவங்க யாரும் திரும்பி வந்ததாக சரித்திரமே இல்லை. அதனால்தான் சொல்றேன் அங்கே போகாதீங்க.
இரண்டு பேரும் சண்டை போடுவார்கள் .மொட்டை தப்பி, ரயிலில் இருந்து குதித்து விடுவான். இரவுநேரம், விஜயகுமார் அந்த ஊரில் இறங்குவார். ஸ்டேசன் மாஸ்டர் அறைக்கு வருவார்.தலை நரைத்த ஒரு வயதான ஸ்டேஷன் மாஸ்டர் இருப்பார். பழைய பேன் ஒன்று கிரீச்சிட்டு ஓடிக் கொண்டிருக்கும். காகிதங்கள் படபடக்கும். அவரிடம் ஊருக்கு போக வழி கேட்பார் விஜயகுமார். அப்போது படத்தில் மொட்டை படத்துக்கு மாலை போட்டிருப்பதை பார்த்து விஜயகுமார் அதிர்ச்சியடைவார். பெயர் வைத்தி, தோற்றம் மறைவு என எழுதப்பட்டிருக்கும். சார்….இவன்…..
இவன் என் மகன் .ஓடும் ரயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டான். அவனை ரயிலில் பார்த்ததாக பலர் சொல்வாங்க என்பார். அதிர்ச்சியுடன் விஜயகுமார் வெளியே வருவார்.இன்னொரு இளமையான ஸ்டேஷன் மாஸ்டர் வருவார். அப்போ அவரு....?
இல்லையே நான்தானே ஸ்டேஷன் மாஸ்டர் வாங்க பார்க்கலாம்….
மொட்டை வைத்தியின் படம் இல்லை. பேன் ஓடவில்லை, காகிதங்கள் படபடக்கவில்லை,
அவரா...?மகன் இறந்த சோகம் தாளாமல் இந்த பேன்லேதான் தூக்கு மாட்டி செத்துப் போனார். அவர் ஆவி நடமாடுவதா சொல்றாங்க என்பார் புதிய ஸ்டேஷன் மாஸ்டர்.
குழப்பத்துடன் வெளியே வந்து ஊருக்குள் போக மாட்டு வண்டியில் ஏறுவார். வழியில் அழகான இளம் பெண்( அபர்ணா ) ஆகாயத்தில் தொட்டில் கட்டும் மங்கை இங்கே வந்தாள் என பாடிக் கொண்டே வெள்ளைப்புடவையில் வண்டிக்கு முன்னே போவார். வாணி ஜெயராம் குரலில் அற்புதமான பாடல் இது....
அபர்ணாவை துரத்திக் கொண்டு விஜயகுமார் ஓடுவார். ஓடி ஓடி பிடிக்க முயன்றாலும் பிடிக்க முடியாது. மெல்லிசைமன்னரின் அதிர வைக்கும் பிஜிஎம், பாபுவின் பயமூட்டும் ஒளிப்பதிவு , ஆர் விட்டலின் திறமையான படத்தொகுப்பு என பாடலை கலக்கியிருப்பார் எஸ்.பி.முத்துராமன்.
திரும்பி வந்து பார்த்தால் வண்டிக்காரன் ரத்தம் கக்கி செத்துக் கிடப்பான். மாட்டு வண்டி அச்சு முறிந்து கவிழ்ந்து கிடக்கும். அதிர்ச்சியில் விஜயகுமாருக்கு மாரடைப்பு ஏற்படும் , அங்கேயே விழுந்து உயிரைவிட்டு விடுவார்.
அடுத்து விஜயகுமாரின் தம்பியான ஜெய்சங்கர், தனது அண்ணனின் மர்ம சாவுக்கு காரணம் அறிய அவரே கேட்டு வாங்கி அந்த கிராமத்துக்கு வருவார். அவரும் போலீஸ் இன்ஸ்பெக்டர்தான். இம்முறையும் ஓடும் ரயிலில் மொட்டை ஏறுவான்.
அவன் பேசும் முன்பு ஜெய் பேசுவார்…அடடா வாங்க சார்….ரொம்ப நேரமா பேச்சுத்துணைக்கு ஆள் கிடைக்காமல் தனியா தவிச்சுட்டிருந்தேன்.
எங்கே போறீங்க…
பொன்வயல் கிராமத்துக்கு
அங்கே…
அங்கே போகாதீங்க உயிருக்கு ஆபத்து அது இதுன்னு சொல்லப்போறீங்க இதை சொல்லுறதுக்காகவா ஓடுற ரயிலில் ரிஸ்க் எடுத்து ஏறி வந்தீங்க ,கீழே விழுந்தா மொட்டை மண்டை எகிறிடுமோன்னு பார்க்கிறேன்.அதை விடுங்க நீங்க எங்கே போறீங்க…
நான் எங்கேயும் போவேன் எங்கேயும் வருவேன்
ஓகோ வித்தவுட் டிக்கட்…டிடி வந்தா போவீங்க போனா வருவீங்க
விளையாடாதீங்க போனவாரம் என் பேச்சை கேட்காமல் ஒரு போலீஸ் ஆபிசர் போனார்…..என்ன ஆனார்…..
ஓ அப்ப அவர் சாவுல உங்களுக்கும் பங்கு இருக்கு,,,,,உண்மையை சொல்லு நீ யார்….
இதே போல் சண்டை, மொட்டை தப்பி ஓட்டம்
ஸ்டேசனிலும் அதே போன்ற காட்சிகள். ஆனால் ஜெய் அதிர்ச்சியடைய மாட்டார் அவர் பேச்சை கேட்டு ஸ்டேசன் மாஸ்டர்களும் வண்டிக்காரன் கறுப்பனும்தான் அதிர்ச்சியடைவார்கள்.
அதே அபர்ணா. அதே பாட்டு ஆனால் ஜெய்சங்கர் பயப்பட மாட்டார். துணிவே துணை.
ஊருக்குள் வரும் அவருக்கு யாரும் தண்ணீர் கூட தரமாட்டா்கள். அசோகன் அவரது உடலை அளவெடுப்பார் மாப்ளே உனக்கு ஒரு சவப்பெட்டி செய்யனும் இல்ல.....
சுருளிராஜனுக்கு மண்ணைப் பொன்னாக்கும் வித்தையை கற்றுத்தருவதாக கூறி சில உதவிகளைப் பெற்று விடுவார் ஜெய்சங்கர். கிராமத்தில் உள்ள அழகான இளம் பெண் ஜெயப்பிரபா ஜெய்சங்கரை காதலிப்பார். ஆனாலும் வில்லன் கோஷ்டிகள் ஜெய்சங்கரை இறந்துவிட்டதாக கருதி உயிருடன் புதைக்க சுருளிராஜன் காப்பாற்றுவார்.
மற்றொரு ஜெய் சவப்பெட்டியுடன் ஊருக்குள் வருவார். சற்றே வயதான தோற்றம் முரட்டுத்தனம். தனது ஜென்ம விரோதியான அந்த ஜெய்சங்கரை தேடி சவப்பெட்டியுடன் வந்ததாக கூறுவார். புதைத்த இடத்தில் பிணம் இல்லை என்பதால் ஜெய் உயிருடன் இருப்பதாக நம்புவார்கள் வில்லன் கோஷ்டியினர்
இரண்டு ஜெய்சங்கர்களும் நேருக்கு நேர் மோதும் காட்சி வரும்.
அந்த ரவுடி ஜெய்சங்கரும் ஹீரோ ஜெய்சங்கரும் பாட்டு பாடுவார்கள்
அச்சம் என்னை நெருங்காது, யாரைக்கண்டும் மயங்காது
 I WILL MEET YOUR CHALLENGE
இந்தப்பாடலை டி.எம்.எஸ் உடன் எஸ்.பி.பியும் பாடியிருப்பார். நாளை நமதே போன்ற சில படங்களில் டி.எம்.எஸ். உடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய அழகான பாடல்களில் இந்தப்பாடலும் ஒன்று, கண்ணதாசன் வரிகளும் பாடலை ரசிக்க வைக்கின்றன.
ஒருவழியாக ஹீரோ ஜெய் சுட்டுக் கொல்லப்பட்டு புதைக்கப்படுவார். புதைத்தால் மாயாஜாலம் தெரிந்த ஜெய் உயிருடன் வந்துவிடுவார் என சவப்பெட்டியுடன் எரித்துவிடுவார்கள். அதற்கு முன்பு வில்லன் ஜெய் சாமர்த்தியமாக சவப்பெட்டியை மாற்றிவிடுவார். பார்த்தால் வில்லன் ஜெய் ஒரு போலீஸ் அதிகாரி. ஜெய் போல் முக கவசம் அணிந்து வந்திருப்பார். அவர் விடைபெற அவர் வேடத்தில் எதிரிகளின் கோட்டையில் அடியெடுத்து வைப்பார் ஹீரோ ஜெய்
வில்லி ராஜசுலோசனா. கொள்ளைக் கூட்டத்தின் தலைவி.படையப்பா நீலாம்பரிக்கு அவர் தான் அக்கா. ஜெய்சங்கர் மீது ஆசைப்பட்டு மயங்குவார். ஜெய் அவரின் கள்ளக்கடத்தல்களையும் அதை மறைக்க பேய் பிசாசு, காளியம்மன் கோபம் என நாடகம் நடத்தப்படுவதையும் கண்டுபிடிப்பார்.
கிளைமாக்ஸ் காட்சியில் ஹெலிகாப்டர் சண்டை எல்லாம் உண்டு. இறுதிக்காட்சிகளில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பின்னணி இசையில் ஒரு காவியமே படைத்திருப்பார்.
சாதாரண வணிக ரீதியான படம்தான். ஆனால் பதின் பருவங்களில் இந்தப் படம் ஒரு அற்புதம். தமிழ்த்திரையுலகம் பார்த்தறியாத அழகான நாயகியர் ஜெயப்பிரபாவும் அபர்ணாவும்
ஜெயப்பிரபா ஜெகன்மோகினி படத்தில் ஜெயமாலினியால் ஆட்டிப்படைக்கப்படும் நரசிம்ம ராஜூவின் மனைவியாக நடித்தவர்.
தமிழில் பெண் ஜென்மம் போன்ற சில படங்களில் நடித்திருக்கிறார். முகத்தின் கீழ் ஒரு மச்சம் அழகோ அழகு.
முதலிரவு காட்சியில் முந்தானையை நழுவ விட்டு ஜெயப்பிரபா ஜெய்சங்கருடன் சரசம் ஆடும் காட்சி எங்கள் இரவுகளை அலைக்கழித்திருக்கிறது.
அதே போல் அபர்ணாவும் அபாரமான அழகி. எஸ்.பி.முத்துராமனின் ஆடு புலி ஆட்டம் போன்ற படங்களில் அபர்ணாவை ரசிகர்கள் பார்த்து மெய் மறந்திருக்கலாம். நான் வாழ வைப்பேன் படத்தில் ரஜினியுடன் ஆகாயம் மேலே பாதாளம் கீழே பாட்டுக்கு அரைகுறை ஆடைகளில் ஆட்டம் போட்டிருப்பார்.
அபர்ணாவுக்காகவும் இந்தப்படத்தை நாங்கள் விரும்பி பார்த்தோம்.ராஜசுலோசனா மாளிகையில் ஜெய்சங்கருக்கும் ஜெயபிரபாவுக்கும் கல்யாணம் நடக்கும்போது அபர்ணா ஒரு கேபரே ஆடுவார்.எல்,ஆர்.ஈஸ்வரி குரலில் கிக்கான பாட்டு
சினிமா பார்க்கும் அனுபம் என்பது இத்தகையது. ஒரு ரூபாய் டிக்கட், இரு அழகான நாயகியர். விரும்பி பார்க்க கூடிய நடிகர்கள், இசை நடனம் சண்டை பாடல்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் மனதை அலைக்கழிக்காத கதையமைப்பு என வணிக ரீதியான படங்களின் வெற்றிகளுக்கு காரணமாக உள்ள அம்சங்கள் இன்றைய திரைப்படங்களில் குறைந்து விட்டன.
எனவேதான் இந்தப் படமும் 39 ஆண்டுகளுக்கு முன்பு வணிகரீதியான படமாக இருந்து இன்று என்னைப் போன்ற, சேகரைப் போன்ற நடுத்தர வயதினருக்கு ஒரு பால்ய கால சகியைப் போல மறக்கமுடியாத பதிவாகி விட்டிருக்கிறது.
துணிவே துணையை கட்டாயம் ஒருமுறை பார்க்க பரிந்துரை செய்யலாம். இப்போதும் அதன் அழகான அம்சங்கள் அப்படியே இருக்கின்றன.
இந்தப் படத்திற்கு தீவிர சினிமா காதலர்களும் இலக்கியவாதிகளும் மட்டமான விமர்சனம் எழுதுவார்கள் அல்லது புறக்கணிப்பார்கள்.
தமிழ்வாணன், சுஜாதா, சாண்டில்யன், போன்ற எழுத்தாளர்கள் , துணிவே துணை போன்ற திரைப்படங்கள் எனக்கு உரமிட்டு அஸ்திவாரமிட்டு எனது வாசக அனுபவத்தையும் திரைப்பட அனுபவத்தையும் தொட்டிலிட்டு தாலாட்டியதை மறந்துவிட முடியாது.
நேற்று போல் இன்று இல்லை….அதற்காக நேற்று இல்லாமலும் இன்று இல்லைதானே

Tuesday, 1 September 2015

உலக சினிமா - கிளியோபாட்ரா - அழகின் அரசியல்


குமுதம் தீராநதி - செப்டம்பர் 2015 இதழில் பிரசுரமானது







ஒரு ஊர்ல ஒரு அழகி. அவள் அழகால் இரண்டு நாடுகள் போரிட்டன. பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அரசியலில் தனது அழகை வைத்து தலைவர்களை மயக்கி அவள் அதிகாரம் செலுத்தினாள்.இறுதியாக அவள்  பகைவர்களால் சிறையில் அடைக்கப்பட்டாள்.
இது  எகிப்து ராணியான கிளியோபாட்ராவின் கதை.கிளியோபாட்ரா 18 வயதில் எகிப்துக்கு ராணியாக முடிசூட்டப்பட்டாள். அந்தக்காலத்து எகிப்திய மரபின்படி தனது தம்பியை மணமுடித்து ஆட்சி செய்தாள். எகிப்தை எதிரிகளிடமிருந்து காக்க அவள் அண்டை நாடான கிரேக்க சக்கரவர்த்தி ஜூலியஸ் சீசரை காதல் வலையில் வீழ்த்தினாள். சீசர் கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டதும் உற்ற நண்பனான புரூட்டசே கோடாரியால் வெட்டி சாய்த்ததும் எகிப்து திரும்பிய கிளியோபாட்ரா மீண்டும் பதவியைக் கைப்பற்றிய சீசரின் ஆதரவாளர் மார்க் ஆன்டனியை காதலிக்க தொடங்கினாள். மார்க் ஆன்டனிக்கு எதிராக சீசரின் மகன் ஆகஸ்டஸ் சீசஸ் படையெடுத்து வர போரில் தோல்வி அடைந்த ஆன்டனி தன் காதல் தேவதையின் மடியில் தற்கொலை செய்து உயிர்த்துறக்கிறான். சிறைக்கைதியாக வாழ விரும்பாத எகிப்து ராணி கொடிய நாகப்பாம்பை கடிக்க வைத்து அதன் விஷம் பாரித்த நிலையில் உயிர்துறந்தாள்.
இது சரித்திரம் சொல்லும் கதை. இதை சினிமாவாக கற்பனை செய்துபாருங்கள். இத்தனை பிரம்மாண்டமான கேன்வாசில் கதையை திரையில் சொல்ல முடியும். முடிந்திருக்கிறது.1963 ஆம் ஆண்டில் வெளியான கிளியோபாட்ரா திரைப்படம் சிறிதும் சமரசமின்றி கண்முன்னே இருநாடுகளின் வரலாற்றையும் அழகின் அரசியலையும் அழகால் அழிந்த சக்கரவர்த்திகளையும் 70 எம்.எம். பெரிய திரையில் கண்முன்னே கொண்டு வந்துள்ளது. இப்படத்தின் இயக்குனர் ஜோசப் மான்க்ரிவைஸ். இப்படத்திற்காக பெரும் பொருட்செலவில் போடப்பட்ட பிரம்மாண்டமான செட்டுகளை மீண்டும் போட வேண்டிய நிலையில் இந்தப் படத்தி்ன் செலவை சமாளிக்க முடியாமல் புகழ்ப்பெற்ற படநிறுவனமான டிவென்டியத் செஞ்சுரி பாக்ஸ் நிறுவனம் கிட்டதட்ட திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இன்றைய கணக்கில் கூறுவதானால் 125 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் அந்தப் படம் தயாரிக்கப்பட்டது. படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பதுடன் விமர்சன ரீதியாகவும் புறக்கணிக்கப்பட்டது. ஆனால் பின்னர் இப்படத்தின் முக்கியத்துவத்தை உலகம் உணரத் தொடங்கி விட்டது. ஒரு திரைப்படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்பதை பாடமாக திரையுலக மாணவர்களுக்கு கூற வேண்டுமானால் இந்தப் படத்தை விட சிறந்த உதாரணம் வேறில்லை என்று படத்தின் இயக்குனர் ஜோ ஒரு முறை குறிப்பிட்டார்.
4 அகடமி விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளை இப்படம் தட்டிச் சென்றது.
இதில் கிளியோபாட்ராவாக நடித்தவர் உலகப் பேரழகியான பிரிட்டன் நடிகை எலிசபெத் டெய்லர். மார்க் ஆன்டனியாக நடித்த ரிச்சர்ட் பர்ட்டனையே அவர் படப்பிடிப்பின் போது காதலிக்கத் தொடங்கிவிட்டார். இதனால் பத்திரிகைகளுக்கு சரியான கிசுகிசுக்கள் கிடைத்தன. ரிச்சர் பர்ட்டன் உட்பட 7 பேரை மணமுடித்து விவாகரத்தும் செய்தார் எலிசபெத் என்பது தனிக்கதை.நிஜவாழ்விலும் அவர் ஒரு கிளியோபாட்ராதான்.
எலிசபெத்தின் கால்கள் குட்டையானவை உடலுக்குப் பொருந்தாதவை. அவள் தலையும் குண்டானது.ஆனால் அந்தக் கண்கள் ஒரு சிறைக்கைதியின் கனவுகளைத் தூண்டக் கூடியவை.ஒரு உதவியாளனின் சுய கற்பனையைப் போன்றது.உண்மையில்லாதது,அடைய முடியாதது.மிகுந்த வெட்கத்துடன் மனிதத்தின் துடிதுடிப்புடன் எப்போதும் யாரையும் ஒரு சந்தேகப் பார்வையுடன் பார்க்க கூடியது என்று எலிசபெத்தை அறிஞர்கள் புகழ்கிறார்கள்.
படத்தில் அரசர்களை காதலித்த அவர் நிஜவாழ்வில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரோனால்ட் ரீகனுடன் கிசுகிசுக்கப்பட்டார்.
சிறுவயதிலிருந்தே திரைப்படங்களை மெய்மறந்து ரசித்தவர் எலிசபெத் டெய்லர். இதைப்பற்றி அவரே நினைவு கூர்ந்துள்ளார்.சிறுவயதில் சுருண்ட முடியுடன் திரையில் தோன்றிய தன் அழகை தானே பலமுறை ரசித்துக் கொண்டிருந்தாராம்.
மீன்துண்டுகளை வாயில் போட்டு விழுங்குவதைப் போல் ஆண்களை மயக்கி தன்னுள் விழுங்கியவர் எலிசபெத் டெய்லர் என்று மற்றொரு ஆய்வாளர் கூறுகிறார்.காலையில் உண்ட உணவை பிற்பகலில் துப்பிவிடுவதைப் போல் தாம் வரித்துக் கொண்ட ஆண்களை நிராகரிப்பதிலும் தயக்கமே  இல்லாதவர் என்றும் கூறப்படுகிறது.எளிதில் காதல் வசப்படக்கூடியவராக இருப்பினும் அவர் ஏமாளியாக இல்லை. கிளியோபாட்ராவின் படப்பிடிப்பில் இரண்டு மிகப்பெரிய நடிகர்களும் எலிசபெத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவாத புகார் அளித்தனர். ஆனால் ரிச்சர்ட் பர்ட்டன் மெல்ல மெல்ல எலிசபெத்தின் வலையில் விழுந்தார். படப்பிடிப்பு நடைபெற்ற மூன்று மாதங்களுக்குள் அவர்களின் நெருக்கம் படுக்கை வரை சென்றது.
கிளியோபாட்ரா 11 மொழிகள் பேசுவார். கலைகளில் நாட்டமுடையவர். மிகப்பெரிய அறிவுக்கூர்மை கொண்ட பெண். துணிச்சல்காரி. தன்அழகை விடபெரிய அதிகாரம் உலகில் இருக்க முடியாது என்ற துணிபு கொண்டவள். இதே குணாதிசயத்துடன் இருந்த எலிசபெத் டெய்லர் இந்தப் பாத்திரத்திற்கு அபாரமாக பொருந்திப் போனார்.
கிளியோபாட்ராவாக 65 முறை படத்தில் ஆடை மாற்றிய அழகி எலிசபெத் டெய்லர். மார்பின் பிளவு தெரியும் லோகட் கவுன்களில் அவர் மார்க் ஆன்டனியாக நடித்த ரிச்சர்ட் பர்ட்டனுடனும் சீசராக நடித்த ரெக்ஸ் ஹாரிசன் ஆகியோருடன் முத்தக் காட்சிகளில் நெருங்கி நடித்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பூட்டினார்.
படத்தில் அவர் கிரேக்க தலைநகர் ரோமுக்கு வரும் காட்சி ஒன்று உள்ளது. சீசரை மயக்க ஒரு பாயில் சுருட்டி விடப்படும் எலிசபெத் டெய்லர், சீசரின் முன் உருண்டு புரண்டு அவரை மயக்கி நம்மையும் மயக்கி சீசரை மணமுடித்துவிடுவார். அதன்பின் சீசர் அவரை அதிகாரப்பூர்வ அரசியாக அறிவித்து ரோமுக்கு அழைத்து வருவார். எகிப்து ராணி தங்கள் அரசியாக வருவதை விரும்பாத ரோமானியர்கள் அரசியை வரவேற்க திரண்டுள்ள பிரம்மாண்டமான காட்சி படத்தின் முக்கியமான காட்சியாகும். கிளியோபாட்ராவை வி்ரும்பாத ரோமானிய மக்களும் அவள் பேரழகால் வசப்பட்டு உடனடியாக அவரை தங்கள் ராணியாக வரவேற்கும் காட்சி அழகு என்ற ஆயுதம் அரசியலில் எத்தகையது என்பதை உணர்த்துகிறது.
ஷேக்ஸ்பியரின் அந்தோணி கிளியோபாட்ரா நாடகத்தின் தன்மையுடன் சீசர் கொல்லப்படும் காட்சியும் இடம் பெறுகிறது. தமிழில் சிவாஜிகணேசன் சொர்க்கம் படத்தில் சீசராக நடித்து யூ டூ புரூட்டஸ் என வசனம் பேசி கைத்தட்டல் பெற்றார். ப்ரியா படத்தில் ரஜினிகாந்தும் சிவாஜியின் நடிப்பை பின்பற்றி சீசராக நடித்திருந்தார் .படத்தின் திரைக்கதைக்கு இந்தக் காட்சிகள் எந்தவகையிலும் பொருந்தவில்லை என்பதை இப்போதைக்கு விட்டு விடலாம்.
ஷேக்ஸ்பியரின் JULIUS CESAR ஒரு துன்பவியல் நாடகம். சீசருக்கு அரசு வட்டாரத்தில் எதிர்ப்பு வலுத்து அவரைக் கொல்ல அவரது படைத்தளபதிகள் திட்டமிடுவார்கள். சீசர் ஒரு அழகியின் காலடியில் மயங்கிக் கிடப்பதை சிறிதும் விரும்பாத அவர் மகன் அகஸ்டஸ் சீசர் தனது தந்தையைக் கொன்று அதிகாரத்தைக் கைப்பற்ற துடிக்கிறார். சீசரின் மிக நம்பிக்கைக்குரிய தளபதியும் நண்பனுமான புரூட்டஸ் இதற்கு பகடையாகப் பயன்படுத்தப்படுகிறான். சீசரை அனைவரும் வாளால் குத்தி சாய்க்கும் போது புரூட்டசிடம் காப்பாற்றுமாறு சீசர் கெஞ்சும் போது புரூட்டசும் மறைத்து வைத்திருந்த கோடாரியால் சீசரை வெட்டி சாய்க்கிறான்.
மிக நெருங்கிய நண்பன்தான் மிகப்பெரிய துரோகியாக மாறுவான் என்பது சரித்திரம் சொல்லும் சான்று
யூ டூ புரூட்டஸ் என்ற சீசரின் அந்த வசனம் காவிய அந்தஸ்து பெற்றது.
துரோகத்தின் வலிகளை உணரும் போதெல்லாம் நாமும் நம்முடன் பழகிய புரூட்டஸ்களை நினைத்துக் கொள்கிறோம்.
சீசரைக் கொன்றுவிட்ட நிலையில், மக்களிடம் அதைப்பற்றி உரை நிகழ்த்தும் புரூட்டஸ் சீசர் அழகியின் பிடியில் சிக்கி நாட்டை சீரழித்து விட்டதாகவும் அவரைக் கொன்றால்தான் நாட்டை காக்க முடியும் என்றும் கூறி மக்களின் மனங்களை மாற்றி விடுவார்.
அப்போது சீசரை கொன்றது துரோகிகள் என மக்களிடம் வாதாடுவார் மார்க் ஆன்டனி. துரோகிகளின் பேச்சை நம்பாதீர்கள் எனக்கூறி ஏழைகள் கண்ணீர் சிந்தும் போதெல்லாம் சீசரும் கண்ணீர் சிந்தியதை தாம் உடனிருந்து பார்த்ததை விளக்கி மக்களை நெகிழச் செய்வார் ஆன்டனி. சீசருக்காக கண்ணீர் சிந்துங்கள் என மக்களிடம் அவர் எழுச்சி உரையை நிகழ்த்துவார். மக்களும் ஆன்டனியின் பேச்சை ஏற்று புரூட்டசை நிராகரித்துவிடுவார்கள்.
ஷேக்ஸ்பியரின் இந்த வரலாற்று நாடகத்தை உணர்ச்சிப் பிரவாகமாக படத்தில் காட்டவில்லை என்றாலும் இப்படம் புரூட்டஸ் பற்றியோ ஆன்டனி பற்றியோ சீசரைப் பற்றியோ அல்ல, கிளியோபாட்ராவை பற்றியது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
அரசு ஆட்சியை கைப்பற்ற தன்னை மரபின்படி மணந்த தம்பியை கொன்றவள் கிளியோபாட்ரா, உடன்பிறந்த சகோதரியையும் தாயையும் கொன்றார். வாரிசுகள் யாருமில்லாத நிலையை உருவாக்கி தன்னை தனிப்பெரும் அரசியாக ஆக்கிக் கொண்டாள். சீசரை மயக்கி ரோமாபுரி ராணியானாள். பின்னர் ஆன்டனியை மணந்து அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டாள். ஆனால்  அழகின் அதிகாரம் நீண்ட ஆயுள் கொண்டதல்ல. மார்க் ஆன்டனி அவள் மீதுள்ள காதலால் தற்கொலை செய்துக் கொள்ள சிறையில் அடைக்கப்படும் கிளியோபாட்ராவும் நாகப்பாம்பின் விஷத்தால் உயிரிழக்கிறாள்.
அவள் நாகப்பாம்பு கடித்து சாகவில்லை. பாம்பு கடித்தால் உடலில் நீலம் பாரித்து உடல் உப்பி விடும் என்பதால் தன் அழகு குலைந்த நிலையில் சாக கிளியோபாட்ரா விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.
எகிப்தின் பாரம்பரிய தாவரங்கள் பற்றி அபார அறிவு பெற்றிருந்த கிளியோபாட்ரா மிகவும் கொடிய விஷச் செடிகளை வரவழைத்து அதை அரைத்து தன் அழகு குலையாமல் உயிர் இழந்தார் என்றும் சில ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடைசி வரை ராணியாகவே வாழ விரும்பி, உலகையே தனது அழகால் ஆட்டிப் படைக்க முயன்ற ஒரு பேரசி கைதியாக வாழ விரும்பாத கதைதான் கிளியோபாட்ராவின் கதையும்.அதையொட்டிய திரைப்படமும் வரலாற்று குறிப்புகளை மீறாமல் மிகுந்த நேர்த்தியாக எடுக்கப்பட்டது.இது என்றும் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் சினிமா ரசிகர்களுக்கும் பரவசமூட்டும் அனுபவம்தான்.

Tuesday, 25 August 2015

அரிதினும் அரிது கேள் 17 பித்தென்று சிரிப்பது உள்நினைவு......

ஒரு தலைராகம் படத்தை எத்தனையோ முறை பார்த்திருப்பேன்.எனது வயதில் உள்ள பலரும் அந்தப் படத்தை பலமுறை பார்த்திருப்பார்கள்.





புதுமுக நடிகர்கள், இயக்குனர்கள், பாடலாசிரியர்களுக்காக தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வரவே மாட்டார்கள். எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி , ஜெய்சங்கர்,முத்துராமன்,சிவகுமார் என யாராவது ஒருவரே நாயகனாக இருக்க வேண்டும். அல்லது மகேந்திரன், பாரதிராஜா, பாலசந்தர், ஸ்ரீதர் என மிகப்பெரிய டைரக்டர் படமாக இருக்க வேண்டும். அப்போதுதான் தியேட்டருக்கு செல்வார்கள் ரசிகர்கள். இப்போது கண்ட கழுதையும் நடிக்கலாம், கண்ட நாயும் டைரக்டராகிவிடலாம். திறமையான இளைஞர்களை நான் குறிப்பிடவில்லை. அவர்கள் எப்போதும் இருப்பார்கள். நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சாட்டை, எதிர்நீச்சல், தங்கமீன்கள், ஓநாயும் ஆட்டுக்குட்டியும்,  போன்ற நல்ல படங்களும் வரத்தான் செய்கின்றன.
ஒருதலை ராகம் படத்தில் அனைவரும் புதுமுகங்கள், ஹீரோ சங்கர் மலையாள நடிகர். நடிகை ரூபா கன்னட நடிகை.






கதைவசனம் பாடல்கள்,இசை என பல துறைகளை கைப்பற்றிய டி.ராஜேந்தர் யார் என்றே யாருக்கும் தெரியாது. இயக்குனர்கள் ராபர்ட் ராஜசேகரும் புதியவர்கள். தயாரிப்பாளர் இவர்களை நம்பி படம் எடுத்தது ஆச்சரியம்தான், அப்போது இளையராஜா கொடி கட்டி பறக்கத் தொடங்கிய காலம். எம்.எஸ்.வியும் தன் பங்குக்கு உச்சத்தில் இருந்தார். இதில் டி.,ராஜேந்தரின் இசை சக்கைப் போடு போட்டதுதான் இப்படத்திற்கு முதல் வெற்றிக்கான காரணமாகி விட்டது.

லீனா மீனா கீதா ராதே ரேகா என பெயர்களைப் பட்டியலிட்டு முதல் பாடல் ஒலித்த போதே தியேட்டரில் விசில் பறந்தது.
கூடையிலே கருவாடு என்ற பாடு அரவாணிகள் பாடுவதாக அமைந்தது. மலேசியா வாசுதேவன் அதை அற்புதமாக பாடியிருந்தார்.
வாசமில்லா மலரிது என்ற எஸ்.பி.பியின் பாடல் இடைவேளைக்கு முன் வந்த போது மக்கள் கொண்டாடத் தொடங்கிவிட்டார்கள்

அதற்குப் பின்னர் 4 பாடல்கள் இடம் பெற்றன. கடவுள் வாழும் கோவிலிலே பாடலை பாடிய ஜெயச்சந்திரன் பிரமாதமான அழுத்தம் தந்து ரசிகர்களை கசிந்துருக வைத்தார்.
இது குழந்தை பாடும் தாலாட்டு பாடிய எஸ்.பி.பி இனிய தாலாட்டுக் கவிதை ஒன்றை வாசித்தார். டி,ஆர் படித்த தமிழ் அவருக்கு கை கொடுத்தது




இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதியில்லாத ஓடம்

நடைமறந்த கால்கள்தன்னில் தடயத்தைப் பார்க்கிறேன்
வடம் இழந்த தேர் அது ஒன்றை நாள் தோறும் இழுக்கிறேன்.
விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனை பார்க்கிறேன்
விருப்பமில்லா பெண்ணைக் கண்டு உலகை நான் வெறுக்கிறேன்.


உளமறிந்த பின்தானோ அவளை நான் நினைத்தது
உறவுருவாள் எனதானோ மனதை நான் கொடுத்தது
உயிரிழந்த கருவைக் கொண்டு கவிதை நான் வடிப்பது
ஒருதலையாய் காதலிலே எத்தனை நாள் வாழ்வது

இதையடுத்து டி.எம்.எஸ். பாடிய இரண்டு பாடல்கள் இடம் பிடித்தன. நான் ஒரு ராசியில்லா ராஜா செம ஹிட்டான பாட்டு என்றாலும் இறுதிப்பாட்டான என் கதை முடியும் நேரமிது பாடல்தான் என் உள்ளத்தில்இடம் பிடித்த அற்புதமான பாடல்,

என் கதை முடியும் நேரமிது
என்பதை சொல்லும் ராகமிது
அன்பினில் வாழும் இல்லமிது
அணையே இல்லா வெள்ளமிது

இதயத்தில் ரகசியம் இருக்கின்றது-அது
இதழ்களில் பிறந்திட தவிக்கின்றது
உலகத்தை என் மனம் வெறுக்கின்றது அதில்
உறவென்று அவளை நினைக்கின்றது.

உறவுகள் வளர்ந்தது எனக்குள்ளே-அதில்
பிரிவுகள் என்பது இருக்காதே
ஒளியாய் தெரிவது வெறும் கனவு அதன்
உருவாய் எரிவது என் மனது


பேதமை நிறைந்தது என் வாழ்வு அதில்
பேதையும் வரைந்தாள் சில கோடு
பித்தென்று சிரிப்பது உள்நினைவு அதன்
வித்தொன்று போட்டது அவள் உறவு
ரயில் பயணத்தில் துணையாய் அவள் வந்தாள்
உயிர் பயணத்தின் முடிவாய் அவள் நின்றாள்
துயில் நினைவினை மறந்திடும் விழி தந்தாள்
துயர் கடலினை படைக்கும் நீர் தந்தாள்

இந்த படம் வந்த போது முதல்நாளி்ல் பார்த்து வந்தவன் என் பால்ய ஸ்நேகிதன் ரமேஷ். எனது உறவுக்கார பையன்தான். என் வயதுதான். இருவரும் நிறைய படங்கள் பார்ப்போம். இந்தப் படம் அவனுக்கு மிகவும் பிடித்துப் போக என்னையும் புரசைவாக்கம் ராக்சி தியேட்டருக்கு அழைத்துப் போனான்,( இப்போது அந்த இடத்தில்தான் சரவணா ஸ்டோர்ஸ் இருக்கிறது) பல முறை பித்துப்பிடித்தது போல் இந்தப் படத்தை நாங்கள் பார்த்தோம்,


சங்கர் பெல்பாட்டம் பேண்ட், ஏகப்பட்ட தலைமுடி என இருந்தாலும் அந்தப் பாத்திரத்திற்கு பாந்தமாக பொருந்திப் போனார்.






ரூபா ஒரு அற்புதம். உடல் முழுவதும் சேலையால் மூடிக் கொண்டு கண்களாலேயே தனது காதலையும் தவிப்பையும் வெளிப்படுத்தினார்.





சந்திரசேகர் ஒரு அற்புதமான கதாபாத்திரத்தில் நடித்து ஒரு ஜோடிப் புறாவின் கதை சொல்லி மாணவர்களை உருகி அழ வைத்தார்.தும்புவின் காமெடியையும் ரசித்தார்கள்.

இப்படத்தின் மூலம் டி,ராஜேந்தர் ஸ்டாராகி விட்டார். அவர் அடுத்து இயக்கிய வசந்த அழைப்புகள், ரயில் பயணங்கள், நெஞ்சில் ஒரு ராகம், ராகம் தேடும் பல்லவி, மைதிலி என்னைக் காதலி போன்ற படங்கள் தமிழ் சினிமாவுக்கும் திரையிசைக்கும் வரப்பிரசாதமாக அமைந்தன. ஆனால் உயிருள்ள வரை உஷாவுக்கு பிறகு அவர் மச்சி அவ துப்பினா எச்சி என தடம்புரண்டு விட்டார்.இன்று வரை அவரை டண்டணக்கா எனத்தான் கிண்டலடிக்கிறார்கள். ஆனால் எங்களுக்குத் தெரிந்த ராஜேந்தர் ஒளியாய் தெரிவது வெறும் கனவு அதன் உருவாய் எரிவது என் மனது என எழுதத் தெரிந்தவர். பித்தென்று சிரிப்பது உள்நினைவு அதன் வித்தொன்று போட்டது அவள் உறவு என மயக்க தெரிந்தவர்







பின்குறிப்பு
படங்கள் வர்த்தக நோக்கில் பயன்படுத்தப்படவில்லை. இணையத்தில் கிடைத்தவையே. அதற்குரியவர்களுக்கு நன்றி.


Sunday, 23 August 2015

சந்திப்பு 3 - சூர்யராஜன்

சூர்யராஜனுடன் எனதுநட்பு 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருவது.இது எனக்கே ஆச்சரியம். என்னுடன் ஒருவராவது இத்தனை காலம் தொடர்ந்து பிரியாமல், அதே பிரியத்துடன் இருக்கிறாரே என்று.





எண்பதுகளின் தொடக்கத்தில் நான் ஒரு பிரபல ஜவுளிக்கடையில் பணி புரிந்துக் கொண்டிருந்தேன். கதை, கவிதைகளில் ஆர்வம் இருந்தது .ஜெயகாந்தனையும் புதுமைப்பித்தனையும் தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்த காலம் அது. என்னுடைய சில கவிதைகள் தாய், சாவி, முத்தாரம், தினமலர் போன்ற சில இதழ்களில் பிரசுரமாகியிருந்தன. அப்போது வைரமுத்து திருத்தி எழுதிய தீர்ப்புகளும் வைகறை மேகங்களும் வெளியிட்டிருந்தார். மு.மேத்தாவின் கண்ணீர் பூக்களும் சிற்பியின் ஒளிச்சிற்பமும் இன்குலாப் கவிதைகளும் , நா.காமராசனின் கருப்பு மலர்களும் அப்துல்ரகுமானின் பால்வீதியும் மீராவின் கனவுகள், கற்பனைகள், காகிதங்களும் பிரபலமான கவிதைத் தொகுப்புகளாக விளங்கின. நான் ஏராளமான கவிதை நூல்களை வாங்கி்ப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் எஸ்,அறிவுமணியின் கவிதைகள் அப்போது மனதை கவர்ந்தன. அவர் புரசைவாக்கத்தில் இருந்ததால் மிகவும் நெருக்கமானவர் போல் தோன்றினார். எளிதாக பார்க்க முடியும் போல பட்டது. அப்போது நாங்கள் இருந்த வாடகை வீட்டின் கூடத்திலேயே அவ்வப்போது இலக்கியக்கூட்டங்கள் நடத்துவோம், ஏழெட்டு நண்பர்கள் வருவார்கள். புலவர் சங்கரலிங்கம்( அவர் மகன் பூங்குன்றன்தான் இப்போது முதலமைச்சர் ஜெயலலிதாவின் தனிச் செயலர்)
டி.ஆர்.சுதா, லீலாவதி, சீதா, நரசிம்ம மூர்த்தி, சேகர் என எனது நட்பு வட்டம் விரிவடைந்துக் கொண்டே இருந்தது.

அப்போது ஒரு கூட்டத்தை பெரிதாக ஏற்பாடு செய்யத் திட்டமிட்டோம். சென்னை அண்ணாசாலை தேவநேயப் பாவாணர் நூலகத்தின் சிறிய அறையை வாடகைக்குப் பிடித்தோம். கவிதை வாசிப்போர் பட்டியலும் தயார். அப்போது தலைமை ஏற்க யாரை அழைப்பது என யோசித்த போது உடனடியாக அறிவுமணியின் பெயர் நினைவில் எழுந்தது. அவர் வீட்டுக்கே போய் விட்டேன். ரத்தினசபாபதி தெருவில் சிறிய அறையில் இருந்த அறிவுமணி உடனடியாக கூட்டத்திற்கு வர ஒப்புக் கொண்டார்,அடுத்த சில நாட்களில் அவர் இனிமையான நண்பராகி விட்டார். அவர் மூலம் எனக்கு பல நண்பர்கள் வாய்த்தனர். அதில் முக்கியமானவர்கள் சூர்யராஜன், நந்தா, பேராசிரியர் பெரியார்தாசன்.

சூர்யாவும் நந்தாவும் இரட்டையர்கள் போல் எங்கும் ஒன்றாகவே காணப்பட்டனர். இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. அபாரமான திறமைசாலிகள்,பேச்சில் வல்லவர்கள், ஆழமான படி்பபாளிகள். அற்புதமான படைப்பாளர்கள்.

அப்போது திரைப்பட முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். எனக்கும் திரைப்பட ஆர்வம் இருந்தபடியால் அவர்களுடன் நெருங்கிப் பழகினேன், சில மாதங்களில் என் வாழ்வில் என்றும் நீங்காத இடத்தை இருவரும் பெற்று விட்டனர்

சூர்யாவுடன் என் நட்பு இறுக்கமானது. அடுத்தவரின் மூச்சுக்காற்றை அழுத்தாத அளவுக்கு இறுக்கமும் சுதந்திரமும் மிக்கது. பல மகிழ்ச்சியான மற்றும் துயரமான தருணங்களில் சூர்யாவுடன் தான் நான் இருந்திருக்கிறேன். இன்றும் அவர்தான் என் நண்பர்கள் வரிசையில முதலிடத்தில் இருக்கிறார்,

சூர்யாவுக்கும் எனக்கும் இன்னொரு நண்பர் உடன்பிறவா சகோதரனாக வந்து இணைந்தார். அவர்தான் எழுத்தாளர் பிரபஞ்சன். அப்படி இணைந்த இன்னொருவர் மறைந்த பாடலாசிரியர் எம்ஜி வல்லபன்

சூர்யாவுக்கு சினிமா, இலக்கியம் இரண்டிலும் நல்ல பரிச்சயம். பரிச்சயம் என்பதை விட அனுபவம் என்றும் அனுபவம் என்பதை விட ஆழமான அனுபூதி என்றும் கூறலாம், மூச்சாக சுவாசித்தார். அவரிடம் நான் பல அற்புதமான பழக்கங்களை கற்றுக்கொண்டேன். படிப்பது, படம் பார்ப்பது என்ற அம்சங்கள் இன்றுவரை என் வாழ்வில் பிரிக்கமுடியாமல் இருப்பதற்கு காரணம் சூர்யாதான்,

சூர்யாவின் தாய் எனக்கொரு தாய் போலத்தான் இருந்தார். சில சங்கடமான சூழல்களால் அவர் வீட்டிற்கு அதிகமாக செல்ல முடியாத போதும் பார்க்கும் போதெல்லாம் என்னை குற்ற உணர்வால் தவிக்க வைத்தார். தன் மகனை நல்ல ஆளாக்கி பார்க்க அவர் துடித்த துடிப்பு ஓரளவுக்கு என் மூலம் நிறைவேறியதால் அவர் முகம் முழுவதும் ஒளிவீசியது. எனக்கும் திருப்தியாக இருந்தது.ஆனால் அவர் மறைந்து விட்ட போது நான் சூர்யாவின் துயரத்தில் பங்கெடுத்துக் கொண்டேன்.

சூர்யாவின் குடும்பம் எனக்கு அந்நியமானதல்ல. அவர்கள் யாவரும் ஏதோ ஒரு இனம் புரியாத ரத்த உறவுகள் போல தான் இன்றும் தோன்றுகிறது. அத்தனை தூரம் நாங்கள் பழகியிருக்கிறோம் , சூர்யாவின் சில பழக்க வழக்கங்களில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் பல முறை கருத்தியல் ரீதியாக அவர் எனக்கு எதிராகப் பேசிய போதும் நான் ஒருபோதும் அவரை விலக்க நினைத்ததில்லை. விலகவும் நினைக்கவில்லை,

சூர்யா என்ற மனிதரைப் பற்றி பலவித மாறுபட்ட அபிப்ராயங்களை கேட்டிருக்கிறேன். யாரும் அவர் திறமையையும் நல்ல உள்ளத்தையும் மறுக்கவில்லை. அதைமட்டும்தான் அவரிடம் நான் எதிர்பார்த்து செல்கிறேன்,

சூர்யாவைப் பற்றி எழுத இந்த இடம் போதாது. ஒரு புத்தகமே எழுதலாம், ஆனால் நல்ல நட்புக்கு நூற்றுக்கணக்கான சொற்களால் ஆராதனை செய்வதை விட ஒரு துளி கண்ணீராலும் ஒரு சிறு புன்னகையாலும் ஆராதிப்பதில் நம்பிக்கை உடையவன் நான். இதுபோதும்.















Saturday, 22 August 2015

சந்திப்பு 2 பாலுமகேந்திரா

இயக்குனர் பாலுமகேந்திரா மீது அதிகமாக நல்ல அபிப்ராயம் இருந்ததில்லை. அவர் சிறந்த கேமராமேன், மூன்றாம் பிறை என்ற நல்லதொரு படத்தை இயக்கியிருந்தார். அவ்வளவுதான் அவர்மீது வைத்திருந்த மதிப்பு. ஆனால் முள்ளும்மலரும் மாதிரியான படங்களில் அவர் கேமராவின் அழகு சாதாரண ரசிகனான என்னை பிரமிக்க வைத்தது. நடிகர்-நடிகைகள் அத்தனை அழகாக இருந்தார்கள், கருப்பான ரஜினி கூட களையாக இருந்தார்.
பாலுமகேந்திரா மீதான மதிப்பு கூடாமல் போனது ஏன் என எண்ணினால் அவர் இயக்கிய அனேகமான படங்கள் சற்று மிகையாகப் பாராட்டப்பட்டு விட்ட மீடியம் படங்கள்தாம். இன்னொரு முக்கிய விஷயம் ஷோபாவின் தற்கொலை.






இந்த பிம்பங்களை உதறி பாலுமகேந்திராவையும் நல்லதொரு திரைக்கலைஞராக மனது ஏற்கப்பழகியிருந்தது. அழியாத கோலங்கள், வீடு, மறுபடியும் போன்ற படங்கள் மூலம் தன்னை தனித்துவம் வாய்ந்த ஒருவராக பாலுமகேந்திரா பதிவு செய்திருந்தார்.
அவரை முதல்முறை சந்தித்தது கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு, அப்போது தியாகராய நகரில் கோமல் ஸ்வாமிநாதனின் சுபமங்களா சார்பில் கூட்டம் ஒன்றுநடைபெற்றது.இதில் கலந்துக் கொள்ள என் வீட்டில் தங்கியிருந்த ஜெயமோகனுடன் சென்றேன். அப்போது கோவையில் லில்லி தேவசகாயம் பெயரில் விருதுகள் அளிக்கப்பட்டன. இன்குலாப்புக்கு விருது கொடுத்ததால் தாம் அந்த விருதை வாங்க மாட்டேன் என ஜெயமோகன் மறுத்திருந்தார். இதனால் அவர் பலரின் கோபத்திற்கு ஆளாகியிருந்தார்.
இக்கூட்டத்தில் ஜெயமோகன் பேசும் போது அறிவுமதி போன்ற சிலர் அவர் மீது பாய்ந்தனர். கடும் வாக்குவாதம் கைகலப்பாக முடியக் கூடிய சூழல். ஜெயமோகனை அழைத்து அல்லது இழுத்து நான் வெளியே வந்துவிட்டேன். அப்போது ஒரு கார் வந்து எங்களை ஏற்றிக் கொண்டது. அந்தக் கார் பாலு மகேந்திராவின் கார்தான். அறிவுமதி அவர் உதவியாளராக இருந்தார். அறிவுமதி பேசுவது தப்பு என பாலு மகேந்திரா கூறினார். யூ ஷூட் பி வெரி கேர்புல் என ஜெயமோகனுக்கு அறிவுரை கூறினார்.நாங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க எங்களை ஓரிடத்தில் இறக்கிவிட்டு சென்று விட்டார்.
பல ஆண்டுகளுக்குப் பின்னர் 2011 -ல் குங்குமம் வார இதழில் நான் பணியாற்ற நேர்ந்த போது, பாலுமகேந்திராவை பேட்டி எடுக்க விரும்பினேன். காரணம் அவர் தமிழ்த்திரைப்படங்களைப் பாதுகாக்க புனே திரைப்படப் பயிற்சி மையம் போல் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என ஒரு கருத்தை ஒரு கூட்டத்தில் கூறியதாக புதிய பார்வை இதழில் வெளியான ஒரு செய்திதான் அவரை சந்திக்கத் தூண்டியது. இதழின் பொறுப்பாசிரியர் திரு. முருகன் அவர்கள் அனுமதியளித்ததும் பாலு சாரின் வீட்டுக்குப் போனேன்.
சாலி கிராமத்தில் முதன்முதலாக அந்த வீட்டு வாசலில்மிதித்த போது வாசல் திறந்திருந்தது. நடிப்பு பயிற்சிக்காக அங்கு வந்த சிலர் வெளியே வந்தார்கள் .சார் இருக்காரா எனக் கேட்டேன், இருப்பதாக கூறினார்கள். காத்திருந்தேன். அவர் உதவியாளர் ஒருவர் வந்து விவரம் கேட்டார், பத்திரிகை பேட்டிக்காக வந்திருப்பதாக சொன்னேன். 5 நிமிடங்களில் வெளியே வாசல் அருகே வந்து நின்ற பாலுமகேந்திரா உங்களை யார் உள்ளே விட்டது பேட்டியெல்லாம்கிடையாது போய்ட்டு வாங்க என விரட்ட ஆரம்பித்தார். எனக்கு அவமதிப்பாகவும் மரியாதைக் குறைவாகவும் பட்டது. வாழ்க்கையில் ஆயிரமாயிரம் புறக்கணிப்புகளும் விரட்டுதல்களும் சந்தித்தவன் தான்நான். ஆனால் காரணமே இல்லாமல் நான் யார் எனக்கூட தெரியாமல் இப்படி பேசுகிறாரே என கோபம். சில சமயம் நான் பாலுமகேந்திராவை விட பெரிய கலைஞன் என எண்ணிக் கொள்வேன். அப்படித்தான் அன்றும் தோன்றியது.
சார் நான் எழுத்தாளன், சிற்றிதழாளன், என் நாவலுக்காக தேசிய விருது வாங்கியிருக்கேன், நீங்க நேசிக்கும் அதே சினிமாவை நானும் வெறித்தனமா நேசிச்சு அத்தனை உலகப் படங்களையும் பார்த்திருக்கிறேன். இயக்குனர் மகேந்திரனே என்னைப் பாராட்டி கடிதம் எழுதியிருக்கிறார் என என்னைப் பற்றி வார்த்தைகளை வீசியதும் சற்று கூர்மையாக என்னைப் பார்த்து அமைதியானார் பாலுமகேந்திரா, ஜெயமோகனுடன் காரில் ஏற்றிச் சென்ற சம்பவத்தையும் நினைவுகூர்ந்தேன். உள்ளே வாங்க என்று அழைத்துச் சென்று அமர வைத்து சாரி என்றார்.
ஒரு படைப்பாளிக்கு அவர் தரும் மரியாதை அவர் மீதான மதிப்பை உயர்த்தியது. பேட்டிக்காக வருபவர்கள் தம்மீது அவதூறுகளை இறைத்த சம்பவங்களை நினைவுகூர்ந்தார். ஏழு ஆண்டுகளாக பத்திரிகைக்கு பேட்டி தரவில்லை என்றும் கூறினார். எனக்காக குங்குமம் இதழில் பேட்டியளிக்க ஒப்புக் கொண்டார். கேள்விகளை தாளில் எழுதிக் கொடுத்தேன். தேநீர் வரவழைத்து உபசரித்து அனுப்பி வைத்தார். மீண்டும் சாரி என்றார்

மறுநாள் போன போது பதில்களை எழுதி வைத்திருந்தார். அப்போதும் அமர வைத்து பிச்சமூர்த்தி புதுமைப்பித்தன் பற்றி சிறிது நேரம் பேசினார். தமிழ் இலக்கியச் சூழல் பற்றி நான் கூறியவற்றை ஆர்வமாக கேட்டார்.

அந்த சிறப்பான பேட்டி குங்குமம் இதழில் பிரசுரமானது. அப்புறம் பாலு மகேந்திரா காலமாகிவிட்டார் என்று பத்திரிகையில் படித்த போது சாலி கிராமம் ஓடத்தான் கால்கள் துடித்தன. ஆயினும் வழக்கமாக மரண வேளைகளில் இறுதிச் சடங்குகளில் கலந்துக் கொள்வதை தவிர்த்து விடுவேன். இறந்த நபர் எனக்குள் வாழ்பவராக இருப்பதே இதன்முதன்மையான காரணம்


பாலுமகேந்திராவும் அழுத்தமாக என் மனதுக்குள் இடம் பிடித்துக் கொண்டார். அவருக்குள் இருந்த ஒரு மென்மையான மனிதன், உணர்ச்சிகரமான ஒரு கலைஞன், தவறாக மதிப்பீடு செய்யப்பட்ட ஒரு சாதனையாளன் இருந்ததை நான் புரிந்துக் கொண்டேன். கலை மீதான அவருடைய ஈடுபாடு ஒரு துளிக்கூட சந்தேகம் எழாத வகையில் நிஜமானது.

அவர் எனக்களித்த பேட்டி.........
காத்திருக்கவும் பதிவு செய்கிறேன்.




















Thursday, 20 August 2015

சந்திப்பு 1 சுந்தர ராமசாமி


எழுத்தாளர் சுந்தர ராமசாமியை எனக்கு அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்தவர் நண்பரும் விமர்சகருமான திரு வேதசகாயகுமார்.அப்போதே சுந்தரராமிசாமிக்கு சிற்றிதழ்களில் மட்டும் அதிகமாக எழுதிக் கொண்டிருந்த என் பெயர் தெரிந்திருந்தது என்பது எனக்கு ஆச்சரியம் .தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நான் எனது மாமாவின் நிறுவனத்திற்காக விற்பனை பிரதிநிதியாகப் பணியாற்றி சுடிதார். நைட்டி சாம்பிள்களுடன் ஊர் ஊராக அலைந்துக் கொண்டிருந்தேன்.அப்படி ஊர் ஊராகப் போகும் நாட்களில் ஓய்வு நேரத்தில் எழுத்தாளர்களையும் பழைய புத்தகக் கடைகளையும் திரையரங்குகளையும் நாடிச் செல்வது வழக்கமாக இருந்தது. மனதுக்கு அதில்தான் மகிழ்ச்சி கிடைத்தது.கோவிலுக்கு செல்லும் பழக்கம் இல்லை. திருப்பதிக்கே போனாலும் சாமி கும்பிடாமல்தான் திரும்பி வருவேன்.
நாகர்கோவிலில் வேதசகாயகுமாரைப் பார்க்கவும் போனேன். அவர் எனக்கு ஏற்கனவே சில நண்பர்கள் மூலம் பாலக்காட்டு சித்தூர் அரசுக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்த போது அறிமுகம் ஆகியிருந்தார். தமிழில் இலக்கிய விமர்சனம் என்ற அடர்த்தியான சிறிய புத்தகத்தை எழுதியிருந்தார்.அவர் மீது இயல்பாகவே மதிப்பு இருந்தது. அவர் வீட்டில் என்னை உபசரித்து காலை உணவருந்த வைத்து, அவர் தான் சுந்தர ராமசாமி வீட்டுக்கு அழைத்துப் போனார். அதுவரை சுந்தர ராமசாமி என்பவர் என் ஆதர்ச எழுத்தாளராக ஏதோ ஒரு கனவு தேசத்தில் வாழ்பவராகத்தான் தோன்றினார். ஜே.ஜே.சில குறிப்புகள் படித்து தமிழில் எழுதப்பட்ட ஆகச்சிறந்த நாவல் இதுதான் என்று கூவித்திரிந்துக் கொண்டிருந்தேன். பசுவய்யா கவிதைகள், சுந்தரராமசாமியின் பல சிறுகதைகள், கட்டுரைகள், அவர் ஆசிரியராக இருந்த காலச்சுவடு இதழ்கள் என நிறையப் படித்திருந்தேன். அப்போது அவர் தசராவின் கணையாழி இதழில் கேள்வி பதில் பகுதியை எழுதிக் கொண்டிருந்தார். இளையராஜா பாடல்கள் பற்றியும் அவர் அதில் எழுதியதாக நினைவு, நாசர் இயக்கிய அவதாரம் படத்தில் ஒரு டூயட் பாடலை சிலாகித்தும் குறிப்பிட்டிருந்தார்.  இத்தகைய சூழலில் அவரை நான் சந்திக்க சென்றேன். முதலில் கண்ணன் வரவேற்றார். அவரது அலுவலக அறைக்கு அழைத்துச் சென்று காட்டினார். அங்கேதான் முதன் முதலாக சு.ராவை பார்த்தேன். ஒரு வெள்ளை சட்டையோ ஜிப்பாவோ அணிந்து வேட்டி கட்டியிருந்தார். வெண்தாடி, கண்ணாடி, சிரிக்கும் முகம் ஆழ்ந்து நோக்கும் கண்கள், அன்பு கனிந்த பேச்சு வாங்க ஜெகதீஷ் என மலர்ந்து வரவேற்றது இன்னும் மனதில் பசுமையாக இருக்கிறது.

வேதசகாயகுமார் போன பிறகும் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக பேசினார். தமிழ் இலக்கியச்சூழல் பற்றியே அதிகமாக பேச்சு இருந்தது. கோவையிலிருந்து வந்ததால் கோவை ஞானி பற்றிவிசாரித்தார். சென்னை வாழ்க்கை எப்படி எனக் கேட்டார். ஜி.நாகராஜன் பற்றிய தமது அனுபவங்களை விவரித்தார். சிற்றிதழ்களில் புதிதாக எழுதுபவர்களில் யார் சிறப்பாக எழுதுகிறார்கள் எனக் கேட்டார். நானும் ஷாராஜ், வாமு கோமு போன்ற சில பெயர்களை அவரிடம் கூறினேன். தஞ்சை ப்ரகாஷ் பற்றியும் குறிப்பிட்டேன். ஜெயமோகன் பற்றியும் பேச்சு வந்தது. அப்போது ஜெயமோகன் தருமபுரியில் அல்லது திருப்பத்தூரில் இருந்தார்.

சுந்தர ராமசாமியுடன் கநாசு பற்றி பேசும்போது அவரது மொழிபெயர்ப்புகள் மிகவும் அவசரகதியில் மூலத்திலிருந்து விலகிச் செல்வதை சுட்டிக் காட்டினேன். இது அவரை ஆழமாக யோசிக்க வைத்தது. ஒப்புக் கொள்வது போலும் மறுப்பது போலவும் இருவிதமான பாவனைகளை அவர் வெளிப்படுத்தினார். நீங்க சொல்வது உண்மையாயிருக்கலாம். நீங்க நிறையப் படிக்கிறீங்க....ஆனாலும் ஜெகதீஷ், கநாசு மொழிபெயர்ப்பதற்காக தேர்வு செய்த படைப்புகள் யாவும் தமிழுக்கு கட்டாயம் வரவேண்டிய படைப்புகள்தானே. அவரைத் தவிர வேறு யாரும் அப்பணியைச் செய்யவில்லையே என தமது நண்பருக்காக சு.ரா வாதாடியதும் நான் மேற்கொண்டு விவாதிக்காமல் ஆமோதித்தேன்.
தமிழில் மூலப்பிரதியையும் மொழிபெயர்ப்பையும் ஒப்பிட்டு ஒரு கட்டுரை கூட வந்ததில்லையே எனக் குறிப்பிட்டார் சுந்தர ராமசாமி. கடைசியில் தமது கணையாழி பதில்கள் பற்றி கேட்டார். அய்யா அதை நிறுத்தி விடுங்கள் என்று நான் கேட்டுக் கொண்டேன். முன்னே இருந்த கணையாழிக்கு மதிப்பு இருந்தது. இப்ப இருக்கிற கணையாழிக்கு அந்த தராதரமே இல்லை. அதில் எழுதுவது உங்களுக்குத்தான் கௌரவக்குறைவு என்றேன். அப்படியா என சிரித்தார். அடுத்த மூன்று அல்லது நான்குமாதங்களில் சுந்தர ராமசாமி பதில்கள் பகுதி நிறுத்தப்பட்டது.

அன்றிரவு கண்ணன் தமது குடும்பத்தினருடன் ஒரு காரில் அழைத்துச் சென்று ஒரு மிகப்பெரிய உணவு விடுதியில் அற்புதமான விருந்து வைத்தார். கேட்டால் தமக்கு திருமண நாள் என்றார். வாழ்த்தி வந்து விட்டேன்

சுந்தர ராமசாமி கதைகள் தொகுப்பில் இல்லாத ஒரு கதை அப்போது என்னிடம் இருந்தது. அந்தக் கதையின் பெயர் ரயில் ஓடிக் கொண்டிருக்கிறது. அது கல்கி தீபாவளி மலரில் வந்தது. அதன் பிரதியை அனுப்பும்படி சுரா கேட்டுக் கொண்டார். அதை அனுப்பிய போது அக்கதை தன்னிடம் இல்லை எனக்கூறி எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அதை தமது அடுத்த தொகுப்பில் இணைத்துக் கொண்டார். ஆனால் கதையைத் தேடித்தந்ததாக அவர் வேறு ஒருவரின் பெயரை போட்டிருந்தார். என் பெயர் ஏன் விடுபட்டது என இன்று வரை எனக்குத் தெரியாது.

பின்னர் ஒருமுறை சென்னை எத்திராஜ் கல்லூரி அருகே உள்ள காஞ்சி ஓட்டலில் சுராவின் இல்ல திருமண விழாவுக்காக போயிருந்த போது அவரைப் பார்த்தேன் .ஆனால் பேச இயலவில்லை. தங்கர்பச்சான் உட்பட ஏராளமான நண்பர்களும் அங்கு இருந்தனர்.

பின்னர் சென்னையில் ஆதம்பாக்கத்தில தமது உறவினர் வீட்டிற்கு சு.ரா வந்திருந்த போதும் அவரை நேரில் பார்த்து சந்தித்துப் பேசியிருக்கிறேன். மூன்றாவது முறை நண்பர் ஜெயமோகனுக்காக சொல்புதிது இதழ் வெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்த போது, ஜெயகாந்தன் அவர்களையும் சுந்தர ராமசாமி அவர்களையும் ஒரே மேடையில் ஏற்ற வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்தேன். சு.ராவை அழைத்து வரும் பொறுப்பை ஜெயமோகன் ஏற்றுக் கொண்டார்.(அப்போது அவர் மாற்றலாகி தக்கலை சென்று விட்டார். )

ஜெயகாந்தனை நண்பர் அன்புவுடன் சந்தித்த போது உடனடியாக ஒப்புக் கொண்டார். ஒரு பைசா கூட பெறாமல் தனது காரில் நேரத்திற்கு நிகழ்ச்சிக்கும் வந்துவிட்டார். சு.ராவும் ரயில் பிடித்து ஆதம்பாக்கம் வந்து விட்டார். அங்கிருந்து ஆட்டோ வைத்து அவர் நிகழ்ச்சிக்கு வந்தார். நாங்கள் அழைக்கப் போயிருந்தோம். சில காரணங்களால் ஜெயமோகனால் வர இயலவில்லை
வஐசெ ஜெயபாலன், பிரபஞ்சன், சா.கந்தசாமி உள்பட ஏராளமானோர் அந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர். இறுதி உரை சுராவா ஜேகேயா என பல நண்பர்கள் பிரச்சினை எழுப்பி ஈகோவைக் கிளப்பிவிட முயன்றனர். ஆனால் சுராவிடம் இதை நாசூக்காக சொன்ன போது தயக்கமே இல்லாமல் ஜே.கே மகத்தான எழுத்தாளர் அவர்தான்இறுதியில் பேச வேண்டும் என்றார்.இதையே ஜேகேவிடம் காதைக் கடித்த போது அவரும் சொல்லி வைத்தாற் போல் சுராவே இறுதியாகப் பேச வேண்டும் என்றார். கற்றாரை கற்றாரே காமுறுவர் என்பது சரிதான்.
ஒருவழியாக ஜெயகாந்தன் இறுதியாகப் பேசுவது என முடிவானது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சுராவை சந்திக்க முடியாமல் போனது. தக்கலை போய் ஜெயமோகன் வீட்டில் தங்க நேர்ந்த போதும் அவர் பத்னாபபுரம் அரண்மனைக்கு அழைத்துச் சென்று காட்டிய போதும் சுராவை சந்திக்க முடியாமலே திரும்பி வந்துவிட்டேன்.

திடீரென சன் டிவியில் நான் இரவில் பணிபுரிந்த நாளில் சு.ரா இறந்துவிட்டார் என கண்ணன் அனுப்பிய குறுஞ்செய்தியை விடியற்காலையில் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.ஒரு ஸ்க்ரோல் போடவும் எனக்கு அனுமதி கிடைக்கவில்லை.  வேலையை ராஜினாமா செய்யும் மனநிலையுடன் விரக்தியுடன் வீடு திரும்பிவந்தேன்.
அப்போது சூர்யா மலையாள டிவியில் சுகுமாரன் பணிபுரிந்து வந்தார்.
அவர்கள் கேமராவை வைத்து சுராவீட்டில் லைவ்வாக அவர் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினார்கள். அன்றும் இரவுப் பணிக்கு பத்து மணிக்கு வரவேண்டிய நான் இரவு ஏழு மணிக்கே அழைக்கப்பட்டேன். அன்று காலையில் ஏழுமணி செய்திகளில் போட வேண்டிய சுரா மரணம் குறித்த செய்தியை இரவு எட்டு மணி செய்திகளுக்காக எழுதிக் கொடுத்தேன்.

சுரா மறைந்துவிட்டார் என்பதை ஏற்கவே மனது ஒப்பவில்லை. அந்தசிரித்த முகம் இன்றும் மனதுக்குள் நிற்கிறது. நான் வாசித்த தமிழ் எழுத்தாளர்களில் என் காலத்தில் நான் சந்தித்தவர்களில் எம்.வி.வெங்கட்ராம், சி.சு.செல்லப்பா, சிட்டி, கோவை ஞானி,அசோகமித்திரன், சுந்தரராமசாமி, ஜெயகாந்தன், லா.ச.ரா, பிரமிள். பிரபஞ்சன் உள்ளிட்டோர் மீது அளவுகடந்த மரியாதை என்றும் எனக்கு இருக்கும்.

எனக்குப் பிடித்த மௌனியும், நா.பாவும் புதுமைப்பித்தனும் பிச்சமூர்த்தியும் குபாராவும் இன்னும் பலரும் உயிருடன் இருந்த போது நான் அவர்களை சந்திக்க முடியாத காலத்தின் இடைவெளியும் தூரத்தின் இடைவெளியும் இருந்தது.
சுந்தர ராமசாமியின் மறைவுக்குப் பிறகு அவரைப் போல் ஒரு எழுத்தாளரையும் கண்டதில்லை அவரைப் போல் ஒரு புன்னகைக்கும் முகத்தையும் கண்டதில்லை. கண்ணனை சந்திக்கும் போதெல்லாம் எனக்குத் தவிர்க்க முடியாமல் சுராவின் நினைவு வந்துக் கொண்டே இருக்கும்.

எனக்குப் பிடித்த சு.ராவின் வரிகள்......











Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...